post book 350உலகமயமாதலின் தாக்கங்களில் ஒன்று, கல்வி நிறுவனங்கள் வியாபாரச் சந்தைகளாக மாறி, கல்வி ஒரு சரக்காகவும் ஆசிரியர்கள் விற்பவர்களாகவும், மாணவர்கள் நூகர்வோராகவும் மாறிப்போனது. இச்சூழலில் ஆசிரியர் - மாணவ உறவில் பெரும் திண்டாட்டமும் துண்டாட்டமும் ஏற்பட்டுள்ளது. ‘நான் காசு கொடுக்கிறேன்.

கற்பித்து விட்டு வெளியே செல்’ என்று மாணவர்கள் ஆசிரியர்களை அணுகுவதும், ‘பணம் வாங்குவதற்கேற்ப பாடம் சொல்லித் தருகிறேன்’ என்று ஆசிரியர்கள் வியாபார நோக்கில் வகுப்பறைகளில் செயல்படுவதும், ஆசிரியர் மாணவ உறவை நிலை குலையச் செய்துள்ளது.

ஆசிரியப்பணி என்ற நிலையி லிருந்து மாறி, ஆசிரியம் தொழிலாகிப் போன கல்விச் சூழலில் முனைவர் கி. பார்த்திபராஜாவின் ‘இப்படிக்குத் தங்கள் அன்புள்ள.....

"ஆசிரியர் மாணவர்களுக்கு இடையிலான கடிதங்களுடன் கூடிய  இந்நூல் ஆசிரியர் - மாணவ உறவின் ஆழத்தை, நெகிழ்ச்சியை, உறவுத் தேவையை மிக எதார்த்தமாகச் சுட்டிக்காட்டுகிறது. குறுஞ்செய்தியும், மின்னஞ்சல்களும் தொடர்பை உறுதி செய்யக்கூடிய இக்காலகட்டத்தில் சிகப்புத் தபால் பெட்டி அட்டைப்படத்துடன் வெளியாகியுள்ள இந்நூல் நமது கூடுதல் கவனத்தைப் பெறுகிறது. 

முனைவர் கி. பார்த்திபராஜா திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர். பதிமூன்று ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் கொண்டவர். நாடகக் கலைஞர். மாற்று நாடக இயக்கத்தினூடாக மாணவர் களிடையே  கற்றல்-கற்பித்தல் என்ற வெளிகளில் புதிய சோதனை முயற்சிகளை முன்னெடுப்பவர்.

இத்தகைய பின்னணியில் இவரிடம் மொழிப்பாடம் பயின்ற மாணவர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், நாடகப் பயிற்சிப் பட்டறையில் பங்கு கொண்ட மாணவர்களென இவர்களின் 21 கடிதங்களும், அக்கடிதங்களுக்கு ஆசிரியரின் பதில் கடிதங்கள் இருபதும், அவருடைய ஆசிரியச் செயல்பாட்டினை, புதிய அணுகுமுறைகளைப் பாராட்டி மற்றொரு ஆசிரியரின் கடிதம் என மொத்தம் 42 கடிதங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

முகநூல், சுட்டுரை, வாட்ஸ்அப் என்று சுற்றித் திரிகின்ற கல்லூரி மாணவர்கள் மனத்தில்தான் எத்தனை கேள்விகள், ஐயங்கள், குமுறல்கள், பயங்கள், வேதனைகள், கோபங்கள், சமூக அக்கறைகள், விசாரிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன என்பதை மாணவர்களின் கடிதங்களை வாசிக்கும் போது அறிய முடிகிறது.

மாணவர் தென்னரசன் கடிதத்தில் ‘ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் எப்படி இடைவெளி விழுகிறது? மாணவர்கள் பலரும் ஏன் தங்கள் ஆசிரியர்களை எதிரிகளாகவே நினைத்து விலகி இருக்கிறார்கள்? தமிழ் இணையதளத்திலும், அலைபேசியிலும் இடம் பிடித்தாலும் தமிழர்கள் நாவில் இடம்பிடிப்பது ஏன் கடினமாக இருக்கிறது?’ (பக்.18-19) என்று கேள்விகள் எழுப்புகிறார்.

இவை, மாணவப் பருவத்திற்கே உரிய சமூக பிரக்ஞையோடு எழுப்பப்பட்ட கேள்விகளாகும். முனைவர் பட்ட ஆய்வு மாணவர் வித்யா ஆய்வுத் தளத்தில் ஏற்படும் சிக்கல், குறைந்த சமயத்தில் பல நூல்கள் வாசிப்பது எப்படி, புதிய நூல்களின் அறிமுகங்கள் குறித்துக் கேள்விகள் எழுப்பியுள்ளார். தூய நெஞ்சக் கல்லூரியில் வேதியியல் துறை மாணவனாகப் பயின்ற அறிவழகன் முனைவர் கி. பார்த்திப ராஜா தொடங்கிய மாற்று நாடக இயக்கத்தில் பயிற்சி பெற்று, புதுதில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் பயில்வதற்குப் பொருளாதாரத் தடைகள் ஏற்பட்ட போது, பல உதவிகளைச் செய்த பேராசிரியரின் உயர் உள்ளத்தை நன்றிப் பெருக்கோடு நினைவு கூர்கிறார். ஆசிரியரோ ‘என்னையும் தாண்டி என் மாணவர்கள் முன்னேறிச் செல்ல வேண்டும்’ (பக்.38.) என்ற ஆசிரியப் பணிக்கே உரிய தனிப்பெருமையினைச் சுட்டுகின்றார்.

 வாழ்வதற்கு வழிவகை தெரியாத போது, ஆசிரியர் முன் சென்று எனக்கு ஏதாவது வழிகாட்டுங்கள் நான் நடக்கத் தயார் என்று உறுதியேற்று பாண்டிச்சேரி நாடகப் பள்ளியில் பயிலும் சே. பிரதாப்ராஜின்  ஆளுமையில் நாடகம் ஏற்படுத்திய தாக்கத்தை கடிதத்தில் பதிவு செய்திருப்பது நாடகம் குறித்த புதிய அணுகுமுறையைச் சுட்டுகிறது. கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளிக்கூடத்தில் நாடகப் பட்டறையில் பயின்ற ம.ச. ஹரிணி கலையின் மீது ஏற்பட்டுள்ள தீராத ஆர்வத்தை எடுத்துரைப்பதும் ‘சாதி, சமயம் கடந்து தன்னை அங்கீகரிப்பது எப்படி? (137) என்ற கேள்வியை எழுப்பியுள்ளதும் சமத்துவ சமூகத் திற்கான வித்தினை மாணவர்களிடையே பள்ளியில் விதைப்பதற்கான அவசியத்தை உணர்த்துகிறது.

12ஆம் வகுப்பு மாணவி நுஸ்கத் கானின் கடிதத்திலுள்ள சுய பரிசோதனையும் ‘நாடகம் என்பது நடிப்பு அல்ல அது ஒரு உணர்வு’ (160-161) என்ற நாடகம் பற்றிய புரிதலும் முனைவர் கி.பார்த்திபராஜாவின் ஆளுமை குறித்த பகிர்வும், கல்வி பயிலும் மாணவர்களிடையே ஆசிரியர் களின் வாழ்வியல் செயற்பாடுகள் ஆழமாக மனதில் பதிந்து விடுவதைக் கடிதங்கள் சுட்டுகின்றன.

மாணவர்கள் பலர் முனைவர் கி. பார்த்திபராஜாவை தந்தையாக, அண்ணனாக, குருவாக, ஆசானாக, வழி காட்டியாக, தாயாக, மார்க்சிய சிந்தனையாளராக, பேராசிரியராக, விமர்சகராக, நாடகக் கலைஞராக, முன் மாதிரியாக, மனித நேயமுள்ளவராக வரித்துக் கொண்டுள்ளனர் என்பதை கடிதங்களில் பல இடங்களில் சுட்டியுள்ளனர். அவரை மட்டுமல்ல அவருடைய இணையர் ம.ஆ.சினேகாவையும் அவ்வாறே கருதித் தங்கள் மன உணர்வுகளைப் பதிவு செய்துள்ளனர்.

மாணவர்களின் அத்தனைக் கடிதங்களுக்கும் ஆசிரியர் மிகுந்த சிரத்தையுடன், நேர்மையுடன், அக் கறையுடன் பதில் எழுதியுள்ளார். மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தக்க விடையளித்து ஐயங்களுக்கு விளக்கம் தருகின்றார். கொள்கைப் பிடிப்பிற்கு இணையர் ம.ஆ.சினேகாவின் பங்களிப்பைப் பாராட்டுகின்றார். மாணவர்களின் புகழ்ச்சிக்கும் பெருமைக்கும் தம் பேராசிரியர்களே மிகப் பெரிய முன்னுதாரணமாக இருந்ததை ஆணித்தரமாகச் சுட்டிக் காட்டுகின்றார்.

சான்றாக டாக்டர் பீ.மு. அபிபுல்லாவின் இலக்கிய ஆர்வம், பக்தி இலக்கியத்தைக் கற்பித்த டாக்டர் மீனாள் மேடம், ஐயந்திரிபறக் கற்பித்த டாக்டர் ம.கார்மேகம், புத்தகங்களின் அருமை பெருமைகளை உணர்த்தி பாசத் தோடு மாணவர்களை நடத்திய கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி, விடுதியில் இடம் கிடைக்காமல் அலைந்து விபத்தில் தவித்த போதும் வீட்டில் உணவளித்து தங்க உதவிய பேராசிரியர் வீ. அரசு, தோழமையோடு தோள் கொடுத்த பேரா.ய.மணிகண்டன், நூல்களைப் பெரு முயற்சியுடன் சேகரித்த அறிஞர் தே.லூர்து, பேராசிரியர் போத்திரெட்டி இத்தகைய பேராசிரியர்களே இவருடைய வாழ்க்கையில் படிந்து விட்டதைக் குறிப் பிட்டு சில நிகழ்வுகளையும் உறவுத் தொடர்பினையும் பதில் கடிதங்களில் முன்னுதாரணமாகச் சுட்டியுள்ளார். வகுப்பில் மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; பாடம் கற்பித் தாலும் அந்த ஆசிரியருக்குள்தான் எத்தனை ஆசிரியர்கள் மறைந்து மாயவித்தைகள் செய்கிறார்கள் என்பதை இவருடைய கடிதங்கள் வழிகண்டறிய முடிகிறது.

பேராசிரியரிடம் பயிலும் ஒவ்வொரு மாணவனின் தனித்திறன்கள் தேவைகளை ஆளுமைப்பண்புகளை கூர்ந்து அவதானித்து அவர்களுடைய பங்களிப்பைப் பாராட்டியும், தவறுகளைச் சுட்டிக்காட்டும் பதில் கடிதமானது ஆசிரியர் மாணவப் புரிதலை வளப்படுத்து வனவாக உள்ளன.

தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் ‘அறிவுலகின் குருதேவர்’ ம.ரா.போ.குருசாமியின் ஒரு ஆசிரியன் எப்படி இருக்க வேண்டும்?’ சிங்கிஸ் ஐத்மாத்தவின் முதல் ஆசிரியர், எ.எஸ். மகரெங்கோவின் Ôவாழ்க்கை பாதை’ பேராசிரியர் ச.மாடசாமியின் ‘எனக்குரிய இடம் எங்கே?’ பவா. செல்லதுரையின் ‘சிறகசைத்த காலம்’ க.துளசிதாசனின் ‘கனவு ஆசிரியர்’ ஆகிய நூல்கள் இவருடைய ஆசிரியப் பணி குறித்த புதிய தேடலை ஊக்குவித்துள்ளது என்பதை அறிந்துகொள்கையில், ஒரு ஆழ்ந்த பெரும் வாசகனால்தான் நல்ல வாத்தியனாகவும் வாழ முடியும் என்பதையும் உணர முடிகிறது.

வாசிப்பு தான் மாணவர்கள் வாழ்வை வளப்படுத்தும் என்பதையும் அவர் வாசித்த புத்தகங்களின் குறிப்புக்களையும் தக்க இடத்தில் சுட்டுவதன் மூலமாக மாணவர்களின் வாசிப்புத் திறனை வளர்த்துக்கொள்ள ஊக்குவிப்பதாக கடிதங்கள் உள்ளன. 

ஆசிரியப்பணி என்பது வகுப்பறையோடு முடிந்து விடுவது அல்ல. அதையும் தாண்டி முனைவர் கி. பார்த்திப ராஜா ஒரு நாடகக் கலைஞராக, மாணவர்களோடு கொண்டுள்ள உறவு, நாடகப் பயிற்சிப்பட்டறைகள், பகிர்வுகள் இவை குறித்த பதிவுகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளது கடிதங்களுக்கு மேலும் வலு சேர்த்து அதன் தனித்தன்மையை உறவின்வெளியை உறுதிப் படுத்துகின்றன.

ஆய்வு மாணவர்கள், ஆய்வு நெறியாளர்களின் அடிமைகளும் அடிவருடிகளும் அல்லர். புதிய கருத்தியலை, தேடலை நோக்கிப் பயணிக்கக் கூடிய சக மாணவர்கள், சமமானவர்கள் என்ற உண்மையை உணர்த்தும் விதத்தில் இவர் ஆய்வு மாணவர்களுக்கு எழுதிய கடிதங்கள், ஆய்வுதளத்தில் புதிய வீச்சை நோக்கி பயணிக்க வேண்டியதன் அவசியத்தை  உணர்த்துகிறது.

இந்நூலில் இடம்பெற்றுள்ள ஆசிரிய மாணவ உறவு, மாணவர்களின் கலை ஆர்வம், மாற்று நாடக இயக்கம் குறித்த பதிவுகள்,  நாடகக் கலைஞர்களின்  வாழ்க்கை, மாணவர்களின் பொருளாதாரச் சிக்கல்கள், மன உளைச்சல்கள், இளைஞர்களின் வாழ்க்கைத் தேடல், முன்னுதாரணங்களின் தேவை இவை பற்றிய பல செய்திகள் அனுபவ வழி விவரணைகளாக விரிவடை கிறது.

மொழி, இலக்கியம், கலை இவற்றிற்கு வரலாறுகள் எழுதப்படுவது போல் வகுப்பறை - ஆசிரியப்பணி, ஆசிரிய - மாணவ உறவு குறித்த வரலாறுகள், பதிவுகள், பகிர்வுகள், புதிய சோதனை முயற்சிகள் நமக்கு

இன்றைய கல்வி சூழலில் அவசரத் தேவையாக உள்ளது. அத்தகையத் தேவையை இந்நூல் நிறைவு செய்வதோடு அது குறித்த விவாதத்தை முன்னெடுத்துள்ளது. ஆசிரியர்கள், நெறியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் படித்துப் பயன் பெறுவதோடு மட்டுமல்லாமல் நம் மனஉணர்வுகளை எழுதிப் பதிவு செய்வதற்குமான ஒரு தூண்டுதலாக துலக்கமாக ‘இப்படிக்குத் தங்கள் அன்புள்ள’ இந்நூல் அமைந்துள்ளது.

இப்படிக்குத் தங்கள் அன்புள்ள...
ஆசிரியர் : கி.பார்த்திபராஜா
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600 018
விலை: ரூ. 130/

Pin It