“ஆணவக் கொலைதான் இந்நூலின் மையம் என்றாலும் இது மரணத்தின் புத்தகமல்ல. வாழ்வின் புத்தகமும்தான். ஓர் ஆணவக் கொலை எப்படி நிகழ்கிறது என்பதோடு முடிந்து விடாமல் ஏன் நிகழ்கிறது என்னும் கேள்வியையும் எழுப்பி வாழ்வின் அத்தனைப் பக்கங்களையும், சமூகத்தின் அத்தனைத் துறைகளையும் ஆராய்கிறது. நமக்கும் சக மனிதர்களுக்கும் இடையிலான முரணை, நம் லட்சியத்துக்கும் நடைமுறைக்கும் இடையிலான முரணை, நாம் ஒவ்வொருவரும் அணிந்து கொண்டிருக்கும் முகமூடிக்கும் அதன் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் நம் நிஜ முகத்துக்கும் இடையிலான முரணை இந்நூல் கவனப்படுத்துகிறது. சமூக நீதியின் நிலமாக முன்னிறுத்தப்படும் இதே தமிழ்நாட்டில்தான் சாதி எனும் அரக்கனும் உயிர்த்திருக்கிறது. வெறுமனே உயிர்த்திருந்தால் போதாதென்று காதலர்களைக் கொன்று புசித்துக் கொழித்துக் கொண்டும் இருக்கிறது. இந்தப் பெருமுரணை, அபாயத்தை இயன்றவரை அழுத்தமாக இந்நூலில் உணர்த்த விரும்புகிறேன். எங்கோ, யாருக்கோ நடைபெற்ற கொடூரமாக ஆணவக் கொலையை எடுத்துக்கொள்ளமுடியாது. கொலையுண்டவர்கள் நமக்கு அந்நியர்களாக இருந்தாலும் கொலையாளியான சாதியை நாம் அனைவரும் அறிவோம். இக்கட்டுரைகளை நான் எழுதிக்கொண்டிருந்தபோது ஒவ்வொரு முறையும் இந்தக் கொலையாளியை மிக அருகிலிருந்து கண்டு திடுக்கிட்டுப்போனேன். பெற்றோரே தங்கள் குழந்தைகளைக் கொல்லும் அளவுக்குச் சாதி வெறி ஒரு நோய் போல் மனிதர்களைப் பிடித்திருந்தது என் இதயத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. அந்த வடு இந்நூல் முழுக்கப் பரவியிருப்பதை வாசிப்பவர்கள் உணரலாம்.” (நூல்:ப.19-20)
இதழியலாளர் இளங்கோவன் ராஜசேகரன் அவர்களின் ‘சாதியின் பெயரால்’ எனும் நூலில் இடம் பெற்று இருக்கும் வரிகள் மேற்கண்டவை. இவர் வெறுமனே செய்திகளைச் சேகரித்து வெளியிடும் யாந்திரிகமான பத்திரிகையாளராக வாழவில்லை; மாறாக ஈடுபாடுள்ள சமூகச் செயல்பாட்டாளராக வாழ்வதற்குப் பத்திரிகைத் துறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்ற புரிதலை அவரது பதிவுகள் சொல்கின்றன. தமிழ்ச் சூழலில் சாதி எனும் அரக்கன், கலப்பு மணம் செய்து கொள்ளும் இளம் வயதினரைக் கொலை செய்யும் கொடுமையை சமூக வரலாற்றுப் பின்புலத்துடன் பதிவு செய்திருக்கும் ஆவணமாக இவரது நூல் உள்ளது. தமிழ்ச் சூழலில் சாதி, கலப்பு மணம் எனும் நடைமுறை செயல்பாட்டில் காட்டும் கோர முகத்தை ஏழு நிகழ்வுகளைக் கள ஆய்வு செய்து, அதன் பல்பரிமாணங்களையும் உணர்ச்சிகரமான மொழியில் பதிவு செய்து இருக்கிறார். இப்பதிவின் மூலம் தமிழ்ச் சூழலில் சாதிக்கும் கலப்பு மண நிகழ்விற்குமான தொடர்புகளைப் புரிந்து கொள்ள, இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு, உரையாடல் நிகழ்த்த முடியும்.
சமூக மாற்றத்தால் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலைச் சமூக மக்கள் கல்வி பெறுதல், பொருளாதார வளர்ச்சி பெறுதல், தாழ்வு மனநிலையைத் தூக்கி எறிந்துவிட்டு சுயமரியாதையோடு வாழ முற்படுதல் ஆகியவை புதிய நிகழ்வுகள் ஆகும். இதனால் இதுவரை ஒடுக்கியவர்களின் உளவியலில் ஏற்படும் காழ்ப்புணர்ச்சி என்பது அதிகமாக வளர்ச்சி பெறுகிறது. இதனைக் கௌசல்யா - சங்கர் நிகழ்வில் இளங்கோவன் பின்வருமாறு பதிவுசெய்கிறார்.
“அவர்களைப் பொருத்தவரை (ஆதிக்க சாதியின்) கொலையல்ல அது. தண்டனை. மரண தண்டனை விதிக்கப்படும்போது எதற்காக தண்டனை என்பது குற்றவாளிக்குத் தெளிவாகச் சொல்லப் படுகிறது அல்லவா? அந்த வழக்கமே இங்கும் பின்பற்றப் பட்டிருக்கிறது. ‘உனக்கென்று ஓரிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில்தான் நீயும் உங்களைப் போன்றவர்களும் புழங்கிக்கொள்ளவேண்டும். அதன் எல்லையை நீ கடந்திருக்கிறாய். ‘எங்க ஜாதி’ எல்லைக்குள் நீ அத்துமீறி பிரவேசித்திருக்கிறாய். அதன்மூலம் எங்கள் மாண்பு கெட்டுப் போய்விட்டது. உன் காதலும் திருமணமும் எங்களை அசுத்தப் படுத்திவிட்டது. எனவே நீ இறக்கவேண்டும்’.” (நூல்:ப.29-30)
இதன்மூலம் சாதி மரபுகளை மீறுவது என்பது குற்றம். எழுதப்படாத சட்டம் இது. ஒடுக்கபட்ட தலித் சமூகத்தில் பொறியியல் படித்த இளைஞனை, ஆதிக்க சாதிப் பெண் எப்படித் திருமணம் செய்யலாம்? அது சமூகக் குற்றம் என்று சொல்லி மரணத்தைப் பரிசாக வழங்குகிறார்கள். மனித உயிர்க்கொலை என்பது சமூக அறங்களில் முற்றுமுழுதுமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. சமூகத்தின் கொடிய செயல் அது. எந்தச் சமூகமும் அதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், சாதி எனும் கொடிய நஞ்சு அதை மிக இயல்பாக எடுத்துக்கொள்கிறது. இந்த சாதிய மனநிலை, இயல்பாக உருவாவதில்லை; மாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மாற்றங்களை, ஆதிக்க சாதி மனநிலை ஏற்றுக்கொள்வதில்லை. அதன் வெளிப்பாடு, இளைய சமூகத்தினர் இயல்பாக மேற்கொள்ளும் காதல் உணர்வுகளைக் கொலைசெய்ய முற்படுகின்றனர். சாதி இந்தத் தருணத்தில் மனித சமூகத்திற்கு, வாழ்க்கை அறத்துக்கு முற்று முழுதாக எதிர்நிலை எடுக்கிறது. அது பாசிச வெறியாகக் கட்டமைக்கப்படுகிறது. இதனை ஒவ்வொரு ஆணவக் கொலையிலும் நாம் காணமுடிகிறது. கலப்பு மணம் செய்வோரை கொலைசெய்யும் உளவியல் இப்படித்தான் அமைந்திருக்கிறது. இதனால்தான் தான்பெற்ற குழந்தைகளையே கொலைசெய்யும் அரக்க மனநிலை உருப்பெறுகிறது. இந்த வகையில் சாதி எனும் அரக்கநிலையின் கொடுமை என்பது, வேறெந்த கொடுமைகளையும் விட மிக மோசமாக நடைமுறையில் செயல்படுகிறது. இதனைத் தமிழ்நாட்டில் நடந்த அனைத்து ஆணவக் கொலைகளிலும் பார்க்க முடிகிறது.
மேற்குறித்த சமூக உளவியல் எனும் சாதி அரக்கன், நடைமுறைச் சமூகத்தில் எவ்வாறெல்லாம் செயல்படுகிறது என்பதை இந்த நூலில் இளங்கோவன் அவர்கள் பதிவு செய்திருக்கும் நிகழ்வுகளின் மூலம் காணமுடிகிறது. அந்த நிகழ்வுகள், எவ்வகையான பரிமாணங்களில், அண்மைக் காலங்களில் வடிவம் பெற்றிருக்கிறது என்பதை நமக்குச் சொல்வதாகவே இந்த நூல் அமைந்திருக்கிறது. இவற்றை ஊடகங்கள் எனும் சமூக நிறுவனங்கள் எப்படி வெளிப்படுத்துகின்றன; கடந்த முப்பது ஆண்டுகளில் சமூக சக்தியாக வலுப்பெற்றிருக்கும் சாதிச் சங்கங்களுக்கும் ஆணவக் கொலைக்குமான உறவு எப்படிப்பட்டது; வாக்குச்சீட்டு எனும் துருப்புச் சீட்டு வழியாக ‘ஜனநாயகத்தை’ப் பேணும் அரசியல் கட்சிகள், இக்கொடுமையை எதிர்கொள்ளும் பாங்கு எத்தகையது; சமூக ஒழுங்கை கட்டிக்காப்பதற்கு என்று உருவாக்கப்பட்டுள்ள காவல்துறைக்கும் ஆணவக்கொலைகளுக்குமான செயல்பாடுகளை எப்படிப் புரிந்துகொள்வது ஆகிய பல்வேறு சமூக இயங்குதளங்களின் முகங்களை இளங்கோவன் தோலுரிக்கிறார்.
மேற்குறித்த சமூக நிறுவனங்களின் செயல்பாடுகளின் கோரமுகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள பதிவுகளுக்கு இணையாக ஆணாதிக்கம் எனும் சமூக உளவியலுக்கும் ஆணவக் கொலைகளுக்குமான சமூக உறவு எப்படி அமைந்திருக்கிறது; தலித் பெண், தலித் ஆண் என்னும் நிலைகளில் மேற்குறித்த தன்மை எப்படிச் செயல்படுகிறது, சாதியம் சார்ந்த சமூக உளவியலுக்குள் பாலின சமத்துவம் என்பது எந்த வகையில் இருக்கிறது என்பதையும் இந்நூல் பேசுகிறது.
சாதியப் படிநிலைச் சமூகத்தில், ஆதிக்க சாதி, ஒடுக்கப்பட்ட சாதி ஆகிய சமூக எதார்த்தங்கள், ஆணவக் கொலை எனும் நிகழ்வில் எவ்வாறு தொழிற்படுகிறது என்ற உரையாடலும் இந்நூலில் ஊடுபாவாக அமைந்திருக்கிறது. இதில் தலித் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக உளவியலின் பரிமாணங்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இவ்வகையில் நிறுவன அமைப்பாகவும் சமூக உளவியல் செயல்பாடுகளாகவும் கலப்பு மணம் சார்ந்த ஆணவக் கொலைகளைப் புரிந்துகொள்ளும் அரிய ஆவணமாக இந்நூலைச் சொல்ல முடிகிறது.
கடந்த முப்பது ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில், மின் ஊடக வளர்ச்சியால் ஊடகச் செயல்பாடுகள் வளர்ந்துள்ளன. காட்சி ஊடகமாக, வீடுகளின் வரவேற்பறையை ஆக்கிரமிப்புச் செய்துள்ள தொலைக்காட்சி, ஆணவக் கொலைகளை விறுவிறுப்பான உணர்ச்சிச் செய்திகளாக வெளிப்படுத்துகிறது. கொலைகளைக் காட்சிப்படுத்துவதன் மூலம், தங்களது பணி முடிந்துவிட்டதாகக் கருதுகிறார்கள். அந்நிகழ்வு குறித்த எந்தவிதமான எதிர் உரையாடல்களையும் நிகழ்த்துவதில்லை. வெறும் நுகர்வாக, ஆணவக் கொலைகள், தொலைக்காட்சி மற்றும் வெகுசன அச்சு ஊடகங்களில் பதிவாகிப் போகிறது. இவை எவ்விதமான சமூகச் செயல்பாட்டிற்கும் உதவுவதில்லை; மாறாக இளங்கோவன் ‘ப்ரண்ட் லைன்’ மற்றும் இந்து எனும் அச்சு ஊடகத்தில், மிக விரிவான உரையாடல்களை நிகழ்த்தினார். இளங்கோவனுக்கு இது வெறும் நுகர்வு சார்ந்த விறுவிறுப்புச் செய்தியாக இல்லை; மாறாக இவ்விதமான கொலைகள் அரங்கேற்றப்படுவதன் பல பரிமாணங்களை தமது துணிச்சலான கள ஆய்வு மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார். அரசியல் கட்சிகள், ஆட்சி செய்யும் அரசு, காவல்துறை, சாதிச் சங்கங்கள் ஆகியவை சாதியைக் காப்பாற்றச் செய்யும் கேவலமான நடவடிக்கைகளை அமபலப்படுத்தியுள்ளார். அச்சு ஊடகவழி இவ்வகையான செயல்பாடுகளைச் சாத்தியப்படுத்த முடியும் என்பதை இளங்கோவன் நிரூபித்துள்ளார். இவரது பதிவின் மூலம் வெவ்வேறு அமைப்புகள், சாதியைக் காப்பாற்றச் செய்யும் தில்லுமுல்லுகளை அறிய முடிகிறது. சமூகக் கொடுமைக்கு எதிரான போராட்ட வடிவமாகச் செயல்பட வேண்டும் என்பது ஊடக அறம். ஆனால், இவை வெறும் பொழுது போக்கு, விளம்பரம் என்னும் வணிகக் கருவிகளாகவே உள்ளன. இதில் சமூகப் போராட்டம் குறித்தும் எழுத முடியும் என்ற பதிவாக, இளங்கோவன் அவர்களுடைய கட்டுரைகள் அடங்கிய இந்நூல் அமைந்துள்ளது.
தவிர்க்க முடியாத சமூக மாற்றம் என்பது, சமூகத்தில் நிகழத்தான் செய்யும். வளர்ச்சி அடைந்த தொடர்பு சார்ந்த மின் ஊடகங்கள் மனிதத் தொடர்பை மிக எளிதாகவும் வலுவானதாகவும் ஆக்கியுள்ளன. ஆண்-பெண் தொடர்புகள் எல்லாம், நிலவுடைமைப் பண்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டுச் செயல்படுவதற்கு தொடர்புக் கருவிகள் வழி வகுக்கின்றன. இதனால் சாதி போன்ற நிலவுடைமைக் கழிவுகள் ஆதிக்கம் செலுத்த முடியாது போகின்றது. அனைத்து மனித சமூகமும் தங்களுக்குள் தொடர்புகொள்ள முடிகிறது. இதற்குள் சாதிய முரண்கள் செயல்பட இயலாது போகிறது. சாதியை மீறி ஆண்- பெண் என்ற உறவு நிலைகளே நடைமுறைச் செயல்பாடாக வடிவம் பெறுகிறது. இதற்குள் சாதி இல்லை. பொதுவெளிகளில் நடமாடும் அனைத்து இளம் உள்ளங்களும் தமது விழைவை வெளிப்படுத்தி காதல்வயப்படும் சமூக நிலை இயல்பாக சாத்தியமாகிறது. ஆனால், நிலவுடைமைப் பண்பாட்டின் எச்சமாக இருக்கும் சாதி எனும் சமூகச் செயல், மேற்குறித்த தன்மைகளை ஏற்றுக் கொள்வதில்லை. சமூக வளர்ச்சி குறித்தப் புரிதல் இல்லை. இதனால் கலப்பு மணம் செய்துகொள்ளும் இளம் உயிர்களைக் கொலை செய்கிறார்கள். இந்தப் பின்புலத்தில்தான் சாதிச் சங்கங்கள், அரசு நிறுவனங்கள், பல்வேறு பொது நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றை ஆதாரப் பூர்வமாகப் புரிந்துகொள்ள இளங்கோவன் நூல் உதவுகிறது.
தமிழ்ச் சூழலின் சமூக இயங்குதளத்தில், ஓட்டு வங்கி சார்ந்து தேர்தல் களம் செயல்படுகிறது. அது செயல்படும் முறை வெளிப்படையாக இல்லாமல் இலைமறை காயாக 1950கள் தொடங்கி 1990கள் வரை இருந்தது. இக்காலங்களில் திராவிடக் கட்சிகள் என்பவை, சுயமரியாதை எனும் சமூக நீதி மரபில் உருவானவை என்பதால் சாதியை வெளிப்படையான பேசுபொருளாகக் கொள்வதில்லை. நான்கு சுவர்களுக்குள் நிகழும் உரையாடலாக இருந்தது. அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பின் தலித் இயக்கம்; குறிப்பாக தொல்.திருமா அவர்களின் இயக்கம் எழுச்சியாக உருவாகி வருகிறது. இதன் எதிர்நிலையாக, பாட்டாளி மக்கள் கட்சி எனும் பெயரில் இருக்கும் வன்னிய சாதிக் கட்சி, சாதி என்பதை ஓட்டு வங்கியாக கட்டமைக்கிறது. சாதிய ஒன்று திரட்டல் என்பதை மறுகட்டமைப்பு செய்கிறது. இவ்வாறு உருவான சாதியச் சங்கங்கள் நடத்திய கொலைதான் திவ்யா - இளவரசன் கொலை என்பதைக் கள ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
தருமபுரி மாவட்டம் 1970 கள் தொடங்கி மாவோயிச இயக்கங்கள் உருப்பெற்ற இடம். இதில் இளவரசன், திவ்யா சாதிய ரீதியாக வேறாக இருந்தாலும், அரசியல் சார்ந்து கலப்பு மணங்களுக்கு எதிரானவர்களாக இல்லை. திவ்யாவின் தந்தை மாவோயிச இயக்கச் சார்பில் இருந்தவர். ஆனால், புதிதாக உருவான வன்னியர் சாதிச் சங்கம்; இளவரசன் - திவ்யா கலப்பு மணத்தை, ஓட்டு வங்கியாக மாற்றும் வேலையைச் செய்யத் தொடங்குகிறது. திவ்யாவின் தந்தையை மனரீதியாகக் கொலைசெய்து, பின்னர் தற்கொலை செய்து கொண்டதாகப் பொய்யான தகவல்களைப் பரப்பி, ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் வாழும் மூன்று கிராமங்களைத் தீ வைத்துக் கொளுத்துகிறது வன்னிய சாதி வெறிச் சங்கம். தொடர்புடைய குடும்பங்கள், தங்களது பிரச்சினையாக கலப்பு மணத்தைக் கொள்ளாத சூழலில், வன்னியர் சங்கமே பிரச்சினைக்குள்ளாக்கி, திவ்யா தந்தை இறப்புக்கும் இளவரசன் கொலைக்கும் காரணம் ஆகின்றனர். இருவரையும் கொலைசெய்து விட்டு, அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கின்றனர். இதனை அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையங்களும் காவல்துறையும் ஏற்கின்றன. இதன் மூலம் சாதி மறுப்புத் திருமணம் என்பதில் சாதிச் சங்கங்கள் கொண்டுள்ள இடத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
திவ்யா - இளவரசன் என்பதில் வன்னியர் சாதிச் சங்கம் நிகழ்த்திய கொலை என்றால், சுவாதி-கோகுல்ராஜ் நிகழ்வில் கொங்கு வட்டார வேளாளக் கவுண்டர் சங்கம் நிகழ்த்திய கொலை கோகுல்ராஜ் கொலை. அங்கு வழக்கு குறித்த செயலில் ஈடுபட்டவர் காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த, பட்டியல் இனத்தைச் சேர்ந்த விஷ்ணு பிரியா. சாதிச் சங்கங்கள் மேற்குறித்த இளவரசன் கொலையைத் தற்கொலை என்று பொய்யாகக் கட்டமைத்ததைப்போல் சுவாதி-கோகுல்ராஜ் நிகழ்வில், கோகுல்ராஜ் மற்றும் விஷ்ணுப் பிரியா கொலைகளைத் தற்கொலை என்றே கட்டமைத்துள்ளார்கள். ஆனால், கோகுல்ராஜைக் கொலைசெய்த கொங்கு வேளாளக் கவுண்டர் சாதித் தலைவன் யுவராஜ், கோகுல்ராஜை கொன்றதை இடதுசாரி மரபு சார்ந்த வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் மற்றும் பல தோழர்களின் தொடர்ச்சியான கூட்டுச் செயல்பாட்டில் ஆயுள் தண்டனைக் குற்றவாளியாக இப்போது சிறையில் இருக்கிறான்.
சாதிச் சங்கங்களுக்கும் ஆணவக் கொலைகளுக்குமான தொடர்பை இளங்கோவன் பதிவு செய்ததின் மூலம், சாதி என்ற நிலவுடைமைப் பண்பாட்டிற்கும் சாதிச் சங்கங்கள், ஓட்டு வங்கி சார்ந்த அரசியல் கட்சிகளாக வடிவம் பெற்றுச் செயல்படுவதற்குமான தமிழகச் சூழலைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆணவக் கொலைகள் வெறுமனே கலப்புமணப் பிரச்சினை மட்டுமல்ல; அது அரசியல் பின்புலம் சார்ந்த சாதிச் சங்கங்களின் அண்மைக்கால வெளிப்பாடு என்பதையும் அறிய முடிகிறது. இவ்வகையான நிகழ்வுக்கு, நிர்வாகம் சார்ந்த அனைத்து நிறுவனங்களும் உதவி செய்துள்ளன. குறிப்பாகக் காவல்துறை, அரசு உருவாக்கும் ஆணையங்கள், உள்ளூர்க் கட்டைப் பஞ்சாயத்துகள் ஆகிய அனைத்தும் ஆணவக் கொலைகளை மறைத்து, இயல்பான சமூக நிகழ்வு என்பது போல கட்டமைப்பதைக் காண்கிறோம்.
நிறுவனங்கள் ஆணவக்கொலைகளை எதிர்கொள்ளும் போக்கைப் புரிந்துகொள்ளும் அதே வேளையில் சாதிப் படிநிலை சார்ந்த ஒடுக்குமுறையும் பெண் ஒடுக்குமுறைக்குக் காரணமான ஆணாதிக்க மரபும் ஆணவக் கொலைகளில் தொழிற்படும் முறைமை குறித்தும் இளங்கோவன் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். இந்நூலில் பேசப்படும் ஏழு ஆணவக் கொலை தொடர்பான நிகழ்வுகளில் அதிகமாக கொலைசெய்யப்பட்டவர்கள் பெண்களே. ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் நடைபெறும் கொலைகளில், பெண்களைக் கொலை செய்வதின் மூலம் சாதித் தூய்மையைக் காப்பாற்ற பெண்களைக் கொலைசெய்து ஆணாதிக்கத்திற்கு வலு சேர்க்கின்றனர். சமூக உளவியலில் பெண் ஒடுக்குமுறை ஆணவக் கொலைகளிலும் செல்வாக்குச் செலுத்துவதைக் காண்கிறோம். இது தொடர்பான விரிவான விவரங்களை இளங்கோவன் பதிவு செய்திருக்கின்றார்.
ஆணவக் கொலைகளில் அதிகபட்சமாகக் கொலை செய்யப்பட்டவர்கள் தலித்துகள் எனும் பட்டியல் இன மக்களே என்பதையும் இந்த நூல் பேசுகிறது. படிநிலைச் சாதியச் சமூக அமைப்பில், அடியில் இருக்கும் சாதிகளே ஒடுக்குமுறைக்குப் பெரிதும் ஆளாகும் கொடுமை நிகழ்கிறது. ஆணவக் கொலையிலும் அதுவே எதார்த்தமாகிறது. ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குள்ளும் உள்ள படிநிலை சார்ந்து ஆணவக்கொலைகள் ஆங்காங்கு நடப்பதையும் இந்நூல் பதிவுசெய்துள்ளது.
இளங்கோவன் அவர்களுடைய நூல் குறித்து அறிவதற்கு, அவர் பதிவு செய்திருக்கும் அவரது மனநிலை குறித்த செய்திகள் கவனத்துக்குரியவை. அவர் சொல்கிறார்....
“ரயில்வே தண்டவாளத்துக்கு அருகில் இளவரசனின் உடல் கண்டறியப்பட்டுள்ள செய்தி என்னை வந்தடைந்தபோது பெரிய பாறாங்கல் என்மீது வந்து விழுந்ததுபோல் இருந்தது. இது உண்மைதானா என்று மீண்டும், மீண்டும் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. இது உண்மையாக இருக்கக்கூடாது என்று என் மனம் அரற்றிக்கொண்டே இருந்தது. அதற்கு முந்தைய தினம்தான் இளவரசனைச் சந்தித்திருந்தேன். பேசியிருந்தேன். அவருடைய முகம் என் நினைவுகளை நிறைக்க ஆரம்பித்தது. அவருடைய புன்னகை வளர்ந்து, வளர்ந்து என்னைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தது.
“பல இரவுகள் உறக்கமின்றித் தவித்தேன். எதையோ பறிகொடுத்தது போல் வெறுமையாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் நான் நானாகவே இல்லை. என்னுடைய இயல்பு நிலை பறிபோய் விட்டது போல், இன்னது என்று சுட்டிக்காட்ட முடியாத ஏதோவொன்று என்னிடமிருந்து பறிக்கப்பட்டதுபோல் உணர்ந்தேன். என் தவிப்பு முழுமையாக அடங்குவதற்கும் இதிலிருந்து நான் மீண்டுவருவதற்கும் எனக்கு மேலும் அதிகக் காலம் பிடித்தது.” (நூல்:ப-51)
பத்திரிகையாளன் சமூக ஈடுபாடுள்ள மனித நேயமிக்கவராகவும் இருப்பது அவசியம் என்பதை இப்பதிவு சொல்கிறது. “சாதியின் பெயரால்” எனும் இந்நூல் வெறுமனே ஆணவக் கொலைகளின் பதிவு மட்டுமல்ல. மாறாக, தமிழ்ச் சமூகத்தின் கடந்த நாற்பது ஆண்டுகளின் வரலாறு; இச்சமூகத்தில் ஜனநாயக மரபு என்பதாக தேர்தல் நடைபெறும் முறைகளும், அதில் வாக்கு வங்கியாக சாதியக் கூடுகை நிகழ்கிறது. அதனைச் சாதியச் சங்கமாக கட்டமைத்து வரலாற்றைப் பின்னோக்கி இழுப்பது குறித்த நிகழ்வுகளை ஆவணமாக்கியுள்ளார் இளங்கோவன். சமூக வரலாற்று மாணவர்களுக்கான தரவு நூலாக இந்நூல் அமைகிறது. பாலின ஒடுக்குமுறை, சாதிய படிநிலை சார்ந்த ஒடுக்குமுறை எனும் சமூகவியல் சார்ந்த சமூக நிகழ்வுகளை அறிய உதவும் அரிய ஆவணமாக இந்நூல் அமைகிறது. சமூகச் செயல்பாட்டாளர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது. இதனை உருவாக்கிய இளங்கோவன் ராஜசேகரன் அவர்களுக்கு எனது நன்றியும் வணக்கங்களும் பாராட்டுக்களும்.
இந்நூலின் இறுதியில் தலித் சமூகம் சார்ந்து நடைபெறும் கலப்பு மணத் தம்பதியர் தொடர்பான ஆங்கிலக் கட்டுரை மொழியாக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சாதி என்பதன் சமூகப் படிநிலையாக்கம், தலித் சமூகங்களுக்குள் தொழிற்படுவதைப் புரிந்துகொள்ள அக்கட்டுரை உதவுகிறது. இந்நூலை வாசிக்கும்போது மொழியாக்கம் செய்யப்பட்டது என்ற உணர்வு எந்த இடத்திலும் இல்லை. தமிழில் எழுதியதைப்போல் மொழியாக்கம் செய்துள்ள மருதன் மற்றும் நிவேதிதா லூயிஸ் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். வெளியிட்ட பதிப்பகத்திற்கும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
- வீ.அரசு