துரைக்கு அருகே உள்ள மறவப்பட்டி என்னும் ஊரைச் சேர்ந்தவர் மாணவர் சரவணகுமார். தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவரான மாணவர் சரவணகுமார் சகமாணவரால் ஜாதியின் பெயரால் தாக்கப்பட்டுள்ளார். சரவணகுமாரின் முதுகை மகாஈஸ்வரன் என்னும் மாணவர் பிளேடால் கிழித்துள்ளார். சமத்துவம் கற்றுத் தரப்பட வேண்டிய பள்ளிக்கூடங்களிலேயே ஜாதியப் பாகுபாடு நிலவுகிறது. அண்மைக் காலங்களில் இது போன்ற பல நிகழ்வுகள் பள்ளிகளில் நடக்கின்றன.

student caste 450கண்ணுக்குத் தெரியாத கிருமி போல் பரவிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் ஜாதிய அமைப்பைத் தக்க வைக்கும் பொருட்டு ஜாதிச் சங்கங்களோடு கைகோத்துக் கொண்டு மாணவர்கள் கையில் ஜாதிக் கயிறைக் கட்டிவிடுகின்றனர். இந்த ஜாதிக்கயிறை அறுத்து எறிய அரசு ஆணையிட்டால் அவர்கள் அரசையே மிரட்டுகிறார்கள். மிரண்டுபோகும் ஆட்சியாளர்கள் இருந்தால் இந்த நாடு இருண்டுதான் போகும்.

இது போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் கிராமப் பகுதிகளிலேயே நடக்கின்றன. ஜாதிகளின் தொகுப்புகளாகவே நம்முடைய கிராமங்கள் இருந்து வருகின்றன. ஜாதி ஒழிய வேண்டும். நாகரீக வளர்ச்சி ஏற்பட வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களில் இருப்பதைப் போன்று யார் ஒருவரையும் ஜாதியால் அடையாளம் காணமுடியாத நிலை ஏற்பட வேண்டும்.

“எனது கிராமச் சீர்திருத்தத் திட்டம் என்பது என்னவென்றால் நாட்டில் கிராமங்களே எங்கும் இல்லாதபடி அவற்றை ஒழித்து விடுவதேயாகும்” என்று 31.10.1944 இல் ஈரோட்டில் நடைபெற்ற கிராம அதிகாரிகளின் பயிற்சிப்பள்ளி ஆண்டு விழாவில் தந்தை பெரியார் குறிப்பிட்டார். 2019 இலும் நாம் இதே இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது.

தந்தை பெரியாரின் கருத்துக்களை மாணவர்களிடம் அரசு கொண்டு செல்ல வேண்டும். மாணவர்களுக்குக் கொண்டு செல்லும் முன் ஆசிரியர்களிடம் பெரியாரின் கருத்துக்களையும் அம்பேத்கரின் கருத்துக்களையும் கொண்டு செல்ல வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பில் பாகுபாடு காட்டாமலா மாணவர்கள் பாகுபாடு காட்டுகிறார்கள்? பல கிராமப்புறப் பள்ளிகளில் ஆசிரியர்களே தாழ்த்தப்பட்ட மாணவர்களைத் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்துவதைப் பார்க்கிறோம்.

இவ்வளவு பாகுபாடுகளுக்கிடையில் அந்த மாணவர்கள் எப்படிப் படிக்க முடியும்?

இந்த மோசமான நிலையை மாற்ற அரசு முயற்சி எடுக்க வேண்டிய காலகட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. நாம் எப்போதுமே புதுமையை விரும்புகிறவர்கள்தான். ஆனால் இந்த புதிய கல்விக் கொள்கை என்பது பழமையிலும் பழமையானது. குருகுலக் கல்வியை நவீன முறையில் அறிமுகப்படுத்துவது. இந்தக் கல்விக் கொள்கையில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்களன்று. உள்ளூர் சமூகத்தினரே ஆவர்.

பள்ளிக் கூடங்கள் உள்ளூர் சமூகத்தினரின் பிடியில் தான் இருக்கும். பள்ளிக்கூடங்கள் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே இவ்வளவு வன்முறைகள் நடக்கும் போது, உள்ளூர் சமூகத்தினரின் பிடியில் பள்ளிகள் இருந்தால் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நாம் என்ணிப்பார்க்க வேண்டும். பாடத்திட்டங்களில் “இந்திய”ப் பாரம்பரிய முறைகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

“இந்திய”ப் பாரம்பரிய முறைகளில் ஜாதிய வேறுபாடுகளைத் தவிர வேறு என்ன இருக்கிறது. இப்படிப்பட்ட கொடிய நோய் நம்முடைய குழந்தைகளைத் தாக்க இருக்கிறது. இந்த நோயைத் தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் எல்லோரும் இருக்கிறோம்.

அதனால்தான் ஜாதியின் பெயரால் இழிவுபடுத்தப்பட்டு முதுகு கிழிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு நாம் ஆத்திரப்படுகிறோம், அவர்கள் தங்கள் செயல் திட்டம் சரியாக நிறைவேறுவதை எண்ணி ஆனந்தப்படுகிறார்கள். இன்று ஒரு மாணவருக்கு முதுகு கிழிக்கப்பட்டிருக்கிறது. இப்போதே நாம் விழித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இனி வரும் காலங்களில் மாணவர்களே கிழிக்கப்படுவார்கள்.