மானிட வாழ்க்கை மகத்துவமானது.  மற்ற உயிர்களைக் காட்டிலும் பண்பட்ட பக்குவ நிலையை உடையது.  சூழலும், சூறாவளியும் சுற்றி வருவது போல மனித வாழ்க்கையும் மாறிக் கொண்டேயிருக்கிறது.  தரிசு நிலங்களைக் கொத்திப் பதப்படுத்தி மண்ணைப் பொன்னாக்கும் வளமான பூமியாக மாற்றுவது உழவனின் கடமையாகும்.

பண்பில்லாத மனித உள்ளத்திற்குத் தத்துவங்களையும் அறிவுரைகளையும் வழங்கி ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவது கவிஞர்களின் கடமையாகிறது.  ஏனெனில் ஒரு கவிஞன் பொதுநலவாதியாகத் தான் இருப்பான்.  பொதுநலத்திற்காக பாடுபடும் ஞானிகள், யோகிகள், கவிஞர்கள், அடியார்கள், சான்றோர்கள் மற்றும் மனித நேயம் கொண்ட மனிதர்கள் அனைவரும் சமூகச் சீர்திருத்தவாதி களாக இருக்கின்றனர்.

சிந்தனை, செயல், விழிப்புணர்வு, விடுதலை யுணர்வு, புரட்சி, மறுமலர்ச்சி மனமாற்றம் இவற்றிற்குக் காரணமாக விளங்கியவர்கள் பலர்.  அவர்களுள் அரிஸ்டாட்டில், ஆபிரகாம் லிங்கன், காரல் மார்க்ஸ், லெனின், பாரதியார், பாரதிதாசன், பெரியார் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.  அவர்களின் வழியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். 

பண்பாட்டின் புகழிடமாய் விளங்கும் செந் தமிழ் மண் ஈன்றெடுத்த பாவலர்களிலே, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் ஒருவராவார்.  இக்கவிஞரது பாடல்களில் பொது வுடைமைக் கருத்துக்களும் புரட்சிக் கருத்துக்களும் மிகுந்து காணப்படும்.  இதற்குக் காரணம், அவர் வாழ்ந்த அக்காலச் சமூகச் சூழ்நிலையே ஆகும்.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்திலடங்கிய ‘செங்கப்படுத்தான் காடு’ என்ற கிராமத்தில் 1930ஆம் ஆண்டு விவசாயக் குடும் பத்தில் திரு. அருணாச்சலக்கவிராயருக்கும், திருமதி.  விசாலாட்சி அம்மையாருக்கும் இளைய மகனாய்ப் பிறந்தார்.  கணபதிசுந்தரம், வேதம்பாள் ஆகிய இருவரும் கவிஞரோடு உடன்பிறந்தவர்கள்.  இவரின் துணைவியார் கௌரவாம்பாள் என் பவராவார்.  1959-ஆம் ஆண்டு மகன் குமரவேல் பிறந்தார்.  8.10.1959 ஆம் ஆண்டு மூக்கில் இரத்தக் கசிவு ஏற்பட்டு திடீரென்று சென்னை பொது மருத்துவமனையில் மறைந்தார்.

கல்யாண சுந்தரனார் சிறுவனாக இருக்கும் பொழுது அண்ணன் கணபதியுடன் ஓராண்டு உள்ளூர் சுந்தரம் பிள்ளை திண்ணைப்பள்ளியில் அரிச்சுவடி படித்திருக்கிறார்.  பிறகு தன் அண்ணனிடம் இரண்டாண்டு பாடம் கற்றுக்கொண்டார்.  சிறு வயதிலேயே பாடல்கள் பாடுவதிலும், நாடகம் திரைப்படம் பார்ப்பதில் அலாதியான ஆர்வம் கொண்டவர்.

கவிஞர் எட்டு வயதில்,

“நல்லதைச் சொல்பவன் நாத்திகனா?- உலகில்

இல்லாததை சொல்லி ஏமாற்றுவது தான் முறையா?”

என்ற பாடலை தன் அண்ணன் கணபதியிடம் எழுதிக் காட்டியிருக்கிறார்.  இதுவே கவிஞரின் முதல் பாடலாகும்.  ஆனால் இந்தப் பாடலின் முதல் வரியைத் தவிர, மற்ற வரிகள் இதுவரை கிடைக்கவில்லை.

கவிஞருக்கு ஒன்பது வயதிலேயே படிப்பு முடிந்துவிட்டது.  கவிஞர் வாழ்ந்த காலத்திற்குள் 17-வகையான தொழில்களைச் செய்தாராமென்று ப. ஜீவானந்தம் அவர்கள் குறிப்பிடுகிறார்.

கவிஞர் எந்தப் பாடலை எழுதத் தொடங் கினாலும் “வாழ்க பாரதிதாசன்” என்று எழுதி விட்டுத்தான், பாட்டின் பல்லவியை எழுதத் தொடங்குவார்.

திரைப்படத்திற்கு எழுதிய முதல் பாடல்.

“காப்பி ஒண்ணு எட்டணா கார்டு சைசு பத்தனா

காணவெகு ஜோராயிருக்கும் காமிராவைத் தட்டினா!

............................

பிரியம் போல காசுபணம் சலிசாகவும் கொடுக்கலாம்”

இந்தப் பாடல் ‘படித்த பெண்’ என்ற திரைப்படத்திற்கு எழுதிய பாடலாகும்.

கல்வி மனிதனுக்குத் தேவைதான் என்று கவிஞர் அழுத்திக் கூறுகிறார்.  ஆராய்ந்து அறிந்து கொள்ளும் உண்மை அறிவு கல்வியால்தான் வரும் என்பதோடு இந்த உலக இயக்கத்தைப் புரிந்து கொள்ளவும் கல்வியின் வழிபெறும் அறிவே தேவை என்கிறார்.  ஆனால் அதுமட்டும் அவன் வாழ்க்கையை மேம்படுத்திவிடாது என்று தொடர்ந்து கூறி நம்மை சிந்திக்கத் தூண்டுகிறார்.

“படிப்பு தேவை அதோடு

உழைப்பும் தேவை - முன்னேற

படிப்பு தேவை - அதோடு

உழைப்பு தேவை

உண்மை தெரியும், உலகம்

தெரியும் படிப்பாலே - நம்

உடலும் வளரும் தொழிலும்

வளரும் உழைப்பாலே”

ஏட்டுக்கல்வி ஒரு மனிதனின் மூளையைத் தான் கூர்மையாக்கும் என்று மு.வ அவர்கள் கூறு கின்றார்.  அறிவு வளர்ச்சி வேறு மூளை வளர்ச்சி வேறு.  ஒரு மனிதன் எட்டில் படித்ததோடு நின்று விட்டால் அவன் அறிவு வளர்ச்சி பெற்றவனாக ஆகிவிடமாட்டான் என்ற அற்புத வாழ்வியல் உண்மையைப் பட்டுக்கோட்டையார் மிக எளிமை யாகத் தமது பாடல்களில் கூறியுள்ளார்.

பெண்ணின் உரிமைக்குக் குரல் கொடுத்த வர்கள் மாயூரம் வேதநாயகம்பிள்ளை, பாரதியார், பாரதிதாசன் போன்றவர்கள் ஆவர்.  இவர்களுடைய வழிவந்தவர் நம் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள்.

சமுதாயம் முழு விடுதலைபெற்று உயர பெண்கள் முன்னேற்றம் மிக அவசியமானதொன் றாகும்.  இதனையுணர்ந்த கவிஞர் தம் பாடல்களில் பெண்களின் உயர்வினைப் பற்றியும், அவர்கள் படும் துயரம், அத்துன்பம் நீக்க, பல வழிகள் இவைகளை தம் பாடல்களில் பாடியுள்ளார்.

பெண்மையைப் புகழ்ந்து பாடிய பாரதியை பட்டுக்கோட்டையார் பாடுகையில்,

“பெண்மையைச் சக்தியை

உண்மையைப் புகழ்ந்தான்”

என்கிறார்.

சமூகத்தில் பெண்களின் தாழ்வுற்ற நிலை மையைத் தம் பாடல்களின் மூலம் வெளிக் கொணர்ந்து பெண்ணுரிமைக்குக் குரல் கொடுக் கிறார் பட்டுக்கோட்டையார்.

“உலகிற்கு ஒளி அளிப்பது ஆதவன்

வாழ்விற்கு ஒளி அளிப்பது பெண்மை”

என்று பாடுகின்றார்.

ஒரு நாட்டின் செல்வத்தை, மேன்மையை, அந்நாட்டுப் பெண்களின் மூலம் கணக்கிட முடியும் என்பதே கவிஞரின் கருத்தாகும்.

“ஆணுக்குப் பெண்கள் அடிமையென்று

யாரோ எழுதி வச்சாங்க”

என்ற பாடலின் ஒவ்வொரு வரியிலும், மக்கள் கவிஞரிடம் பெண்களின் விடுதலைக்குப் பாடு படும் உணர்வு மேலோங்கிக் காணப்படுகிறது.

மேலும் அப்பாடலிலேயே,

“கற்பின் பலமென்றும் கண்ணகி குலமென்றும்

கச்சிதமா திட்டுவாங்க”

என்று கூறுவதிலிருந்து பெண்களின் கற்பைக் களவாடும் ஆண் சமூகத்தினைச் சாடுவது புலப் படுகிறது.

மக்கள் அனைவருக்கும் தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றினையும் உருவாக்கு வோர் தொழிலாளர்களே.  தொழிலாளர்கள் உலகை நடத்திச் செல்லும் ஒளி விளக்குகள் என்றால் மிகையாகாது.  உலகை வாழ வைக்கும் பாட்டாளி மக்கள் நலமுடன் வாழ்ந்தால்தான் மக்களினம் சிறப்புற்று வாழ முடியும்.  தொழிலாளர்கள் வாழ்விலே, பஞ்சம் புகுந்தால் அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாகும்.  எனவே தொழிலாளர்கள் பூரண நலத்துடன் வாழ வேண்டும்.

“செய்யும் தொழிலே தெய்வம்

அந்தத் திறமைதான் நமது செல்வம்

கையும் காலுந்தான் உதவி

கொண்ட கடமைதான் நமது பதவி

பயிரை வளர்த்தால் பலனாகும்

அது உயிரைக் காக்கும் உணவாகும்

வெயிலே நமக்குத் துணையாகும்”

என்று தொழிலாளர்களின் தன்னம்பிக்கையையும், செய்யும் தொழிலையும் திறமையாகச் செய்ய வேண்டும் என்ற பொதுவுடைமைக் கோட்பாட்டை உருவாக்கினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.

கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன்

காரணங்கள் இவை எனும் அறிவுமிலார்

என்று பாரதி கேட்டதையே,

அவன் தேடிய செல்வங்கள் சீமான் வீட்டினிலே

சேர்ந்ததினால் வந்த தொல்லையடி

என்று கூறுகிறார்.

உழைக்காததால் அல்ல, உற்பத்திப் பெருக்கம் இல்லாததால் அல்ல, உற்பத்தி சேர வேண்டிய இடத்தில் சேராமல் முதலாளிகளிடம் சேர்ந்து விட்டால் தான் வருகிறதுதொல்லை என்று சுட்டுகிறது.

“வளர்ந்து வரும் உலகத்துக்கே

நீ வலது கையடா”

என்று ஆற்றல், அறிவு, பண்பு ஆகியவற்றை உடைய தொழிலாளர் உலகின் வலதுகை என்கிறார்.

“பழந்துணி அணிந்தாலும்

பசியாலே இறந்தாலும்

பாதை தவறாத

பண்பு உள்ளம்

இருந்த நிலை மறந்து

இழுக்கான குற்றம் தன்னைப்

புரிந்திடலாமென்று

துணியுதடா - நேர்மை

பொல்லாத சூழ்நிலையால்

வளையுதடா”

என்று பாடுவதில் தவறுகள் இழைக்கப்படுவதற்கே சூழ்நிலை தான் காரணம் என்ற கருத்தை வெளி யிடுகிறார்.

“காலுக்குச் செருப்பும் இல்லை

கால் வயிற்றுக் கூழும் இல்லை”

என்று ஜீவா கூறிய கருத்தை அமைத்து,

“கையில் ஒரு காசுமில்லை

கடன் கொடுப்பார் யாருமில்லை

கஞ்சிக்கொரு வழியுமில்லை

கொல் வறுமை தாழவில்லை

ஏங்கி இரந்துண்ணவோ எங்கள் மனம்

கூசுதடா”

என்கிறார்.

பசியிலும், தன்மான உணர்வைப் பலியிடத் தயங்கி ஏங்கும் உழைப்பாளர் குமுறலை வெளி யிட்டார்.  அதே தொனி இப்பாட்டிலும் ஒலிக்கிறது.

ஒன்பது செண்பகப்பூ கவிதைத் தொகுதியில் (ஆசிரியர் - துறைவன்) கவிஞர்கள் ஏரோட்டும் உழவனை, பார்போற்றும் புலவனாக்கி மகிழ் கின்றனர்.  அதுவும் புலவர்கள் தங்கள் இலக்கண மரபை மாற்றி உழவன் படைத்த இலக்கியத்தைப் போற்றுகின்றனர்.  கிழவர்கள் தனது பழைய மரபு களைப் பறைசாற்றுவதைத் துறந்து, மாறிவரும் உலகிற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு இளைஞர் களிடம் உள்ள புதிய மரபை ஏற்றுக் கொள் கின்றனர்.  இதனை, பட்டுக்கோட்டையார்

“உழவர் புதியதாய் தமிழ் செய்வார் - அதை

உவந்து புலவர் போற்றிடுவோர்

கிழவர் கூடி இளைஞரிடம் - நிதம்

கேட்டு மகிழ்வார் புதுமறைகள்”

என்று கூறுகிறார்.

உயிரினங்களின் உன்னத உணர்வு காதல், அன்பு, நேசம், பிரியம், பாசம், பற்று, நட்பு, பக்தி எனப் பல சொற்களின் ஒரே பொருள் காதல்.  கங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை தனது மையப் பொருண்மையாய் தேர்ந்தெடுத்தது காதலையே.  காதலின்றி கவி படைத்தவரை காண லாகாது.  உலக இயக்கமானது காதல் என்ற மையப் புள்ளியைப் பற்றிக் கொண்டே படருகிறது.  இவ்வகையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் படைத்துள்ள காதலின் பன்முகப் பரிமாணங் களைக் காணலாம்.

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்”

பட்டுக்கோட்டையார் காதலைப் பற்றிப் பாடும் போது,

“மின்னும் இயற்கையெல்லாம்

உன்னழகைக் காட்டுதடி

எண்ணமெனும் தேன் கூட்டில்

இன்பக் கனல் மூட்டுதடி”

என்று காதலியின் உயர்வைப் பாடுகிறார்.  மேலும் பெண்களின் அன்பையும், பாசத்தையும், நல்ல கணவன் உறவையும்,

“மங்கை இதயம் நல்ல துணைவன்

வரவு கண்டே மகிழ்ந்திடும்

உறவு கொண்டால் இணைந்திடும் - அதில்

உண்மை இன்பம் விளைந்திடும்”

என்று எடுத்துரைக்கின்றார். காதலுக்குப் பொருள் கூறுகையில்

“ தடுத்தவர்கள் வென்றதில்லை

சரித்திரமே சொல்லும் - காதல்

அடுத்தவர்கள் அறியாமல்

ரகசியமாய்ச் செல்லும்”

என்று கூறிக் காதலின் வல்லமையைப் புலப்படுத்துகிறார்.

யார் வாழ்ந்தாலென்ன, யார் ஆண்டா லென்ன? தான் வாழ்ந்தால் போதும் எனத் தற் சார்போடு இயங்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தில் கவிஞர் விடிவெள்ளியாகத் திகழ்ந்தார் என்பது அவரின் கவிதைகளால் வெளிப்படுகிறது.  கவிஞரின் சமுதாய சிந்தனைகள் கவிதைகளாக மட்டும் உருவாகவில்லை.  கால வரலாறாகவும் காணப் படுகிறது.  அவரின் சிந்தனைகள் சமுதாயத்தில் பிரதிபலிக்கப்படுமானால் தமிழ்ச் சமுதாயம் உலக அரங்கில் தலை நிமிர்ந்து இருக்கும்.

Pin It