பெறுநர்         

மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள்

தலைமை செயலகம், சென்னை - 600 009.

பெரியாரியல் பேரறிஞர் தோழர் வே.ஆனைமுத்து உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் மறைவுக்கு தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் இயற்றிய தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி! நன்றி! நனி நன்றி!

திராவிடர் இயக்க ஆட்சியின் நீட்சியாக மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைந்துள்ள இன்றைய தமிழ்நாட்டு அரசு, இந்திய ஒன்றியத்தில் மொழி மாநிலங்களுக்கான உரிமைகளற்ற நிலையில், ஒரு மாநிலத்தின் தலைமை அமைச்சராக தன் வரம்புக்கு உட்பட்டு ஒரு மக்கள் நல அரசு தன்னால் என்ன செய்ய இயலுமோ அவற்றை எல்லாம் ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாள்களில் ஒவ்வொன்றாய் நிறைவேற்றி வருவது தமிழ்நாட்டு மக்களுக்கும், பெரியாரிய - திராவிடர் இயக்க உணர்வாளர்களுக்கும் நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, ஆட்சிப் பொறுப்பேற்ற 100ஆம் நாளில், தந்தை பெரியாரின் இறுதிக்காலப் போரான அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை நடைமுறைப் படுத்தியமையைப் போற்றி வரவேற்று மகிழ்கிறோம். அந்த வகையில் திமுக தலைமையிலான தமிழ்நாட்டு அமைச்சரவைக்கும், அதன் தோழமை அமைப்புகளுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் பாராட்டுகள்.

தந்தை பெரியாரின் திராவிடர் இயக்கக் கொள்கைகளை நிறைவேற்றுகிற நிலையில், மொழித் தேசங்களின் மாநில உரிமைகளுக்கு எதிரான பாசிச வெறிபிடித்த பாசக தலைமையிலான இன்றைய இந்திய ஒன்றிய அரசுக்கு எதிரான ஆரியர் திராவிடர்; ஆரியர் தமிழர் போரில் எப்போதும் தங்களுக்குத் தோள்கொடுப்போம் என்கிற உறுதிப்பாட்டையும் அளித்து மகிழ்கிறோம்.

அதேபோல், தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்களோடு, இம் மண்ணுக்கும் மக்களுக்கும் மொழிக்கும் பாடாற்றிய சான்றோர்களை நினைவுகூர்ந்து அவர்கள் மறைவுக்கும் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றி வரலாற்றில் பதியவைப்பது நெகிழ்ச்சியானது வரவேற்கத் தக்கது.அந்த வகையில், 6.4.2021 அன்று மறைந்த முதுபெரும் பெரியாரியல் அறிஞர், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் அய்யா வே. ஆனைமுத்து அவர்களுக்கும், மற்றும் மூதறிஞர் இளங்குமரனார், பழங்குடி உரிமை ஆர்வலர் தந்தை ஸ்டோன் சுவாமி, அறுவை மருத்துவ நிபுணர் காமேசுவரன், மதுரை ஆதீனம் உயர்திரு அருணகிரிநாதர் ஆகிய சான்றோர் பெருமக்களுக்கும் 16.8.2021 அன்று சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி புகழுரைத்தமையை வரவேற்று மகிழ்வதோடு, தமிழ்நாட்டு அரசுக்கும், முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவைத்தலைவர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் உரித்தாக்குகிறோம்.

மேலும், தந்தை பெரியாரின் கொள்கைகளை நிலைநாட்டிட தம் வாழ்நாளெல்லாம் பாடாற்றிய பெரியாரியல் பேரறிஞர் வே.ஆனைமுத்து அவர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்கிடவேண்டும்; நீதிக்கட்சி வரலாறு, அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், தோழர் வே.ஆனைமுத்து உள்ளிட்ட திராவிடர் இயக்க, தமிழிய இயக்கத் தலைவர்கள் போராளிகளின் சிந்தனைகளைத் தந்தை பெரியாரின் சிந்தனைகளோடு இணைத்துப் பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க ஏற்ற வழிகாண வேண்டும் என்று திமுக தலைவர் - தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை வேண்டி விரும்பி உரிமையோடு கோருகிறோம். ஆர்எஸ்எஸ் பார்ப்பனியமும் மதவாதச் சிந்தனைகளும் இன்றும் உயிர்ப்போடு இருப்பதன் பின்னணி அச்சித்தாந்தங்கள் கல்வியில் பயிற்றுவிக்கப்படுவதனால்தான் என்பதை நினைவுகூர்ந்து முள்ளை முள்ளால் எடுக்க வழிகாண வேண்டுகிறோம்.

- வாலாசா வல்லவன், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி

Pin It