சுயமரியாதைச் சுடரொளி திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு கூட்டத்தை நிமிர்வோம் வாசகர் வட்டம் கழக தலைமை அலுவலகத்தில் 9-5-25 அன்று நடத்தியது.

திருவாரூர் தங்கராசு இயக்கத்தின் பரப்புரையளராக பெரியார் கொள்கைகளை வாழ்நாள்‌ முழுவதும் கொண்டு சென்றார்.

thiruvaroor thangarasu 4071927-ல் பிறந்த அவர் 1947-லிருந்து 1973 வரை திராவிடர் கழகத்தில் முதன்மை இயக்கப் பேச்சாளராக இருந்தார். ஒவ்வொரு திராவிடர் கழகத்தின் குடும்பத்தினருடன் அவர் நெருக்கமாக இருந்தவர். 1957 நடந்த சட்ட எரிப்புப் போராட்டத்தின்‌ போது தமிழ்நாடு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்ட கழகத் தோழர்களை பெரியார் நேரில் சென்று சந்தித்தார். அப்போது திருவாரூர் தங்கராசு அவர்களை பெரியார் உடன் அழைத்து சென்றார். கலைஞர் எழுதி நடிகவேள்‌ எம்.ஆர்.ராதா‌ நடித்த தூக்கு மேடை நாடகத்தில் நடித்தவர் திருவாரூர் தங்கராசு.

நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்து நாட்டையே அதிரச் செய்த ராமாயணம் நாடகத்துக்கு கதை வசனம் எழுதியவர் இவர் தான்.

நடிகவேள்‌ நடிப்பில் இவர் எழுதிய ரத்தக் கண்ணீர் நாடகம் தான்‌‌ தமிழ்நாட்டில் இதுவரை அதிக எண்ணிக்கையில் அரங்கேற்றப்பட்ட நாடகம். நேஷனல் பிக்ஸ்சர்ஸ் அதிபர்‌ பெருமாள்‌ இதை திரைப்படமாக்கினார். இன்று வரை அந்த திரைப்படம் பலராலும்‌ விரும்பிப் பார்க்கப்படுகிறது.

பெரியார் மறைவுக்குப் பிறகு திராவிடர் கழகத்தில் இருந்து விலகி தனி அமைப்பு உருவாக்கி 2014 இறுதி மூச்சு அடங்கும் வரை பெரியார் கொள்கைகளையே பரப்பி வந்தார்.

பெரியார் திராவிடர் கழகம் சார்பாக 2008 ஜூன் 14 அன்று சென்னை எம்ஜிஆர் நகரில் அவரது 60 ஆண்டு இயக்கத் தொண்டை பாராட்டி விழா ஒன்று நடந்தது.

திருவாரூர் தங்கராசுக்கு பாராட்டு விழா

கழகத்தின் மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசுக்கு பாராட்டு விழாவும், நாத்திகர் விழாவும் எழுச்சியுடன் நடந்தது. ஆயிரக்கணக்கான கழகத் தோழர்களும், பொது மக்களும் விழாவில் பங்கேற்றனர். மாலை 6 மணியளவில் எம்.ஜி.ஆர். நகரில், கழக சார்பில் நடிகவேள் எம்.ஆர். ராதா நினைவாக நிறுவப்பட்ட நிழல் கொடையை நடிகவேள் எம்.ஆர். ராதா மகனும், தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளருமான ராதாரவி திறந்து வைத்தார். முன்னதாக கழகத் தோழர்களின் பறை முழக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தோழர்கள், பொது மக்கள் சூழ்ந்து நிற்க, ராதாரவி நிழற் குடையைத் திறந்து வைத்து பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சிகளைப் பாராட்டினார்.

தோழர் கரு. அண்ணாமலை வரவேற்க, தோழர் அன்பு. தனசேகர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். வழக்கறிஞர் அமர்நாத், தோழர் கேசவன், வழக்கறிஞர் இளங்கோ, தோழியர் பாரதி, பொதுச் செயலாளர்கள் விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருட்டிணன், திருவரங்கம் பெரியார் சிலை அமைப்புக் குழுத் தலைவர் டாக்டர் முத்து, மூத்த பெரியார் தொண்டர் திருச்சி வீ.அ. பழனி, விழாவின் தலைவர், கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து, மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசு ஏற்புரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் திருவாரூர் தங்கராசு நெருக்கமான தோழரும் அவர் பேசிய கூட்டங்களுக்கு உடன் சென்றுவரும் சுயமரியாதைச் சுடரொளியுமான திருச்சி வி.ஆர்.பழனி பல வரலாற்றுச் செய்திகளை பதிவு செய்தார். அவரது உரை:

" பெரியாரை எதிர்த்த பார்ப்பனர்களுக்கு சரியான பதிலடியை தந்தது. “ஈ.வெ.ரா. இறப்பதென்றோ” எனும் தலைப்பில் திருவாரூர் தங்கராசு அவர்கள், ஒரு வெளியீட்டைக் கொண்டு வந்தபோது திராவிடர் கழகத் தோழர்களே அத் தலைப்பைக் கண்டு முதலில் ஆத்திரமடைந்து, பிறகு தெளிவு பெற்றனர்.

1947 ஆம் ஆண்டு முதல் நான் அவருடன் இணைந்து செயல்பட்டுள்ளேன். அவரது கொள்கை உறுதி எத்தகையது என்பது எனக்குத் தெரியும் அவர் ‘நவீன லீலா’ என்ற நாடகத்தை எழுதி நடித்தார். நானும் அந்த நாடகத்தில் நடித்தேன். கழகத் தோழர் லால்குடி முத்துச் செழியன் போன்றவர்கள் எல்லாம் அதில் நடித்தார்கள். மறைந்த டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் அவர்கள் நடத்தி வந்த ‘தோழன்’ பத்திரிகைக்கு நிதி திரட்டுவதற்காக தஞ்சை நகரில் அந்த நாடகத்தை நடத்தினோம். சின்னாளப்பட்டியில், நாகர்கோயிலில், நன்னிலத்தில் கழக வளர்ச்சிக்கு நிதி திரட்ட திருவாரூர் தங்கராசு அவர்கள் இந்த நாடகத்தை நடத்தினார்.

கிருஷ்ணகிரியில் திருவாரூர் தங்கராசு அவர்கள் பேசும்போது கூட்டத்தில் பெரும் கலவரத்தை உருவாக்கி தாக்கினார்கள். சலசலப்புக்கு அஞ்சாமல், திருவாரூர் தங்கராசு துணிவுடன் எதிர்கொண்டார். அப்போது அரசு வழக்கு தொடர்ந்தது. வழக்கு நடத்துவதற்காக, அய்யா பணம் தர முன் வந்தபோது, அதை திருவாரூர் தங்கராசு வாங்க மறுத்துவிட்டார். வழக்கறிஞர் இல்லாமல், தானே நீதிமன்றத்தில் வாதாடி, வழக்கில் வெற்றி பெற்றார். நடிகவேள் நடத்திய தூக்குமேடை நாடகத்தில், திருவாரூர் தங்கராசு அவர்களே வேடமேற்று நடித்தார்.

கி.ஆ.பெ.விசுவநாதன் தலைமையில் ரத்தக் கண்ணீர் நாடகம் அரங்கேற்றமானது. ஆரம்பத்தில், ரத்தக் கண்ணீர் நாடகத்திலேயே அதை எழுதிய திருவாரூர் தங்கராசு, நடிகவேள் ராதாவுடன் நடித்து வந்தார். 1970 ஆம் ஆண்டில் மயிலாடுதுறையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் இராமாயணம் நாடகம் நடந்தது. அதில் திருவாரூர் தங்கராசு இராவணன் வேடமிட்டு நடித்தார். நான் ராமன் வேடமிட்டு நடித்தேன். எனது மகன் இந்திரஜித் வேடத்தில் நடித்தார். நாடகத்தை பெரியார் இரவு வெகுநேரம் விழித்திருந்து பார்த்தார். நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது பாதியிலேயே நேரமாகிவிட்டது புறப்படலாம் என்று அவருடனிருந்த “சிலர்” கூறியபோது பெரியார், போக மறுத்து இறுதி வரை நாடகத்தைப் பார்த்து, நாடகம் முடிந்தவுடன், நாடகத்தைப் பாராட்டி உரையாற்றினார்.

பெரியார் நாடகத்துக்கு தலைமை ஏற்று நிகழ்த்திய அந்த உரை முதலில் ‘விடுதலை’ நாளேட்டில் வெளியிடப்படவில்லை. ஏன் அதை வெளியிடவில்லை என்று பெரியாரே கேட்ட பிறகுதான், அது வெளியிடப்பட்டது. கீழப்பாவூர், உள்ளிக்கோட்டை, மன்னார்குடியில் நடந்த ராமாயணம் நாடகங்களில் திருவாரூர் தங்கராசு, ராவணன் வேடமிட்டு நடித்துள்ளார். எனவே, சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக மட்டுமின்றி, நாடக நடிகராகவும் இருந்து பெரியார் கொள்கைகளைப் பரப்பியவர் திருவாரூர் தங்கராசு. இந்த விழாவில் நான் பங்கேற்றதற்காக பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டார்".

“பெரியாரியல் பேரொளி!”

திருவாரூர் தங்கராசு அவர்களின் 60 ஆண்டுகாலத்துக்கும் மேலான பெரியார் லட்சியத் தொண்டை பெருமையுடன் நினைவு கூர்ந்து பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ‘பெரியாரியல் பேரொளி’ என்ற விருதை வழங்கி, விழாவில் சிறப்பிக்கப்பட்டது. விருதுக்கான நினைவுப் பரிசை மேடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், கழகத்தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் பலத்த கரவொலிகளுக்கிடையே வழங்கினர். புதுவை மாநில பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தலைவர் லோகு. அய்யப்பன் நினைவுப் பரிசினை வழங்கினார். கோவை மாவட்டக் கழகம் சார்பில் பொதுச்செயலாளர் கோவை இராமகிருடடிணன், சென்னை மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் தபசி குமரன், செயலாளர் உமாபதி ஆடைகளைப் போர்த்தினர்.

"பெரியாருக்கே சேரும்!”

திருவாரூர் தங்கராசு தனது ஏற்பரையில் - “எனக்கு அளிக்கப்பட்ட பெருமை, சிறப்பு அனைத்தும் பெரியார் ஒருவருக்குத்தான் சேரும். பெரியாரின் கருத்துகளைத்தான் நான் அவரது எளிய தொண்டன் என்ற முறையில், என்னால் இயன்ற அளவில் பரப்பி வந்திருக்கிறேன். எனது பணியைப் பாராட்டி விழா எடுக்கும்போது, அரசு அலுவலர்கள், பணி ஓய்வு பெறும்போது விழா எடுப்பதுபோல், ஒரு வேளை, உனது பணி போதும் என்று கூறி விழா எடுக்கிறார்களோ என்றுகூட தோன்றுகிறது” என்று குறிப்பிட்டபோது, அருகில் இருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘அப்படி நாங்கள் கருதவில்லை’ என்று கூறவே, ‘மகிழ்ச்சி எனது பணி தொடர வேண்டும் என்றே விரும்புகிறார்கள்’ என்று திருவாரூர் தங்கராசு கூறினார். அதை ஆதரிக்கும் வகையில் கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பினர்.

இறுதியில் திருவாரூர் தங்கராசு 45 நிமிடம் ஏற்புரை நிகழ்த்தினார். இறுதி வரை கூட்டம் கலையாது, அவரது உரைக்கு செவிமடுத்தது. மாவட்ட செயலாளர் உமாபதி நன்றி கூற இரவு 10.45 மணியளவில் நிகழ்ச்சி முடிவடைந்தது. விழாவுக்கு திருவாரூர் தங்கராசு அவர்களின் துணைவியார், மகள்கள், மருமகன், பேரன் மற்றும் மூத்த பெரியார் தொண்டர்கள் பலரும் வந்திருந்து சிறப்பித்தனர்.

- விடுதலை இராசேந்திரன்