karunakaran 350கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் குள முற்றம் என்ற சிற்றூரில், கு.மருதாச்சலம்-வேதக்கார் என்னும் பெற்றோருக்கு, கு.ம.முத்துசாமி, கு.ம.முத்தம் மாள், கு.ம.சுப்பிரமணியன், கு.ம.சண்முகம் என்ற நான்கு மக்கள்.

அந்நால்வருள், மூன்றாவதாக 26.01.1933இல் பிறந்தவர் கு.ம.சுப்பிரமணியன் ஆவார். அவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் 37 ஆண்டுகள் 1956 முதல் பணியாற்றித் தலைமைப் பொறியாளராக 1993இல் ஓய்வு பெற்றார்.

அவர்தம் பணிக்காலத்தில் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களைத் தான் பணியாற்றும் மின்வாரியத்தின் கீழ்நிலைப் பணிகளில் பணி அமர்த்துவதில் மிகவும் அக்கறை கொண்டு செயல்பட்டவர்.

ஒரே சமயத்தில் பலருக்கு பணிவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டிய பெரியார் அவர்களின் பரிந்துரையை நேரிடையாகப் பெற்றார். அந்த அளவுக்குப் பெரியாருடைய நம்பிக்கை யைப் பெற்றிருந்தார்.

மேலும் ஏழை, எளிய வேளாண் மக்களை மின்வாரியத்தில் பணி அமர்த்தினார். மற்றும் வணிக மக்களுக்கு மின்தொடர்பு உண்டாக்கித் தரு வதற்கு ஓயாமல் உழைத்தார். இவர் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது மின்துறை இலாபத்தில் இயங்கியது.

இவர் இளமையில் படிக்கும் காலத்திலேயே தந்தை பெரியாரை அறிந்திருந்தார். இவர் படித்த பள்ளியிலேயே இவரது தமையனார் பணிபுரிந்தார். இவர் தந்தை பெரியாரின் கொள்கையாளர். அதனால் “குடிஅரசு”, “விடுதலை” படிக்கும் வாய்ப்புப் பெற்றார். அதைப் படிக்கப், படிக்க மேலும் பெரியாரைப் பற்றி அறியும் ஆவல் அதிகமாயிற்று. அதனால் 1946-இல் பெரியாரைப் பற்றி அறியும் வாய்ப்புக் கிடைத்தது.

இவர் சிறுவனாக இருக்கும்போதே அவருக்கு இறை நம்பிக்கை கிடையாது. இறைப்பற்று மிக்க இவரது பெற்றோர் கோவிலுக்குப் போகச் சொல்லியும், அங்கு அவர் சென்ற போது அந்தக் கல் சிலைகளைக் காண் பதில் ஒருவித வெறுப்பு உண்டாகியது. பின்னாளில் அவர் நகரத்துக்குச் சென்று படித்ததால், விடுதலை, குடிஅரசு வாயிலாகப் பெரியாரைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டார்.

இவர் படித்து முடித்தவுடன் அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மணப்பாறை போன்ற பகுதிகளில் மின்சாரத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றினார். முன்பு கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, ஒருங்கிணைந்த மாவட்டமாகத் திருச்சியில் இருந்தன. இவர் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மின் சாரத் துறை அதிகாரியாக இருந்த போது எங்கள் வடக்கலூர், குன்ன ரெட்டியார் மகன் பொறியாளர்; வரதராசன் என்பவர் இவருடன் பணியாற்றினார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள என் சொந்த ஊர் வடக்கலூர் (எ) அரசமங்கலம். ஆனைமுத்துவின் தாய் பிறந்த ஊர். வடக்கலூர் (எ) அரசமங்கலம், அகரம்.

கு.ம.சுப்பிரமணியன் அவர்கள் அரியலூர் மின்சார வாரியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, தோழர் பெரியார் பெருந்தொண்டர் ஆ.செ. தங்கவேலு அறிமுகமானார். அவரின் மகள் தைரியம் - ஆசிரியர் கோவிந்தசாமி இவர்கள் கலப்புத் திருமணத்தில், 9-7-1961இல், அவரும் அவர் துணைவியார் பானுமதியும் கலந்து கொண்டு வாழ்த்தினர். அப்போதுதான் இவர் ஆனைமுத்துவை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்புப் பெற்றார்; பழக ஆரம்பித்தார்.

படிக்கும் காலத்தில் இருந்தே பெரியார் கொள்கை யில் மிகுந்த ஈடுபாடு கொண்ட காரணத்தினால் அவர் 1959-இல் சிங்காரப்பேட்டையில் தோழியர் பானுமதி என்ற பெண்ணை தந்தை பெரியார் தலைமையில் சாதி மறுப்பு திருமணம் 9-3-1959இல் செய்து கொண்டார்.

தான் பெற்ற இரண்டு மகன்களுக்கும் மிக எளிய முறையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தவர்.

மகன்கள் :   

புகழேந்தி - கலைமணி

டாண்டு - பியூலாஹீ

periyar anaimuthu 600மு.க.சு. படிக்கும் காலத்திலேயே தமிழில் கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர். இவரது முதல் கவிதை பாவேந்தர் பாரதிதாசன் நடத்திய “குயில்” இதழில் இடம்பெற்றது. இவருக்கு மரபுக்கவிதை எழுதும் ஆற்றல் இருந்தும் ஒரு நாளும் “கவிஞர்” என்று போட்டுக் கொள்ளாதவர். தமிழில் உள்ள தொன்மங்கள், காப்பி யங்கள், பெரிதும் மூடக் கருத்துக்களையே கொண் டுள்ளவை என்று பெரியார் கருதியதால் தமிழ்ப் புலவர்களைப் பொதுவாக “அழுக்கு மூட்டைகள்” என்றே சாடுவார். “தமிழைக் காட்டுமிராண்டி மொழி” என்று சொன்னதும் இந்த அடிப்படையில்தான். அவர் தமிழில் கவிதை எழுதுவது பெரியாருக்குத் தெரிந்த போது, மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் நோக்கில் கவிதை எழுதுங்கள் என்றார். இவர் ஆனைமுத்து அவர்களிடம் பேசிய போது அவரிடம் ஓர் தனித் தன்மை இருந்ததைக் கண்டு அவர் மேல் மிக ஈடுபாடு கொண்டு நெருங்கிப் பழகினார்.

திருச்சியில் வே.ஆனைமுத்து தந்தை பெரியாரிடம் ஒப்புதல் பெற்று, 7.3.1970-இல் திருச்சியில் சிந்தனை யாளர் கழகம் என்கிற அமைப்பு தொடங்கப்பட்டது. இது அரசியல் சார்பற்றது. அரசு அலுவலர்களையும், ஆசிரியர்களையும், வணிகர்களையும், உழவர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது. இக்கழகத்தின் முதலாவது தலைவராக வைக்கம் போராட்ட வீரர் சே.மு.அ. பாலசுப்ரமணியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 20.02.1971-இல் மறைந்த பிறகு, 1972-இல் திருச்சி கோட்ட மின்பொறியாளராக பணியாற்றிக் கொண்டி ருந்த போது இவர் சிந்தனையாளர் கழகத் தலை வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிந்தனையாளர் கழகத் தலைவராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின் ஆண்டு தோறும் பெரியாரின் பிறந்த நாள் விழா செப்டம்பர் அல்லது வேறு நாளில் சிந்தனையாளர் கழகத்தின் மூலம் பெரியாரை அழைத்துப் பல மாவட்டங்களில் திருச்சி நகரத்திலும், மாவட்டத்தில் உள்ள பல ஊர் களிலும் பெரியார் பிறந்த நாள் விழாவிலும் பேசவும் வைத்தார்.

தோழர் ஆனைமுத்து பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் தொகுத்து புத்தகமாக வெளியிட வேண்டும் என்றார். அந்தத் தொகுப்புப் பணிக்காக ஊன் உறக்கம் பாராமல் பெரியாரின் எழுத்துக்களையும், பேச்சுக்களையும், விடுதலை, குடியரசு இதழ்களில் வந்த அனைத்தையும் சேர்த்து தொகுத்து நூலாக்கு வதற்கு ஒரு இலட்சம் வேண்டும். இருப்பினும் ஆனைமுத்து தொகுப்பு பணியில் முழு மூச்சுடன் இறங்கியுள்ளார். இப்பணி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போது, பணம் வசூல் வேளையில் ஆனைமுத்து உடன் அவரும், நோபிள் கோவிந்தராசலு, சோமுவும் மும்முரமாக இயக்கினார்கள்.

1971 முதல் முயன்று 1973இல் தொகுப்பு பணி முடிந்தது. “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” தொகுப்பினை சிந்தனையாளர் கழகம் வெளியிட அப்பொறுப்பை திருச்சி சிந்தனையாளர் கழகத் தலை வரான கு.ம.சுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. சிந்தனையாளர் கழகத் தலைவர் கு.ம. சுப்ரமணியன், செயலாளரும், தொகுப்பாசிரியருமான வே. ஆனைமுத்து, நோபிள் கோவிந்தராசு ஆகியோர் உடனிருந்து பெரியாரிடம் திருச்சியில் 6.9.1972இல் நூலுக்குரிய கையெழுத்து பிரதியை பெரியார் பார்வையிட்டு, பெரியார் ஈ.வெ.ரா. கையொப்பமிட்டார்.

பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் வெளியீட்டுக்குப் பணம் தேவைப்பட்டது. அன்பில் தருமலிங்கம், பரிந் துரையில் சிலர் கடன் அளித்து உதவினர். கு.ம. சுப்ரமணியன் அவர்கள் தான் பணியாற்றும் மின்சாரத் துறையில் நேர்மையாகப் பணியாற்றியவர். அதனால் அடாவழியில் பணம் கேட்க அவரால் முடியவில்லை. இருப்பினும் அவருடன் பணியாற்றிய பொறியாளர் களும், பணியாளர்களும் பெருமளவுக்கு உதவினர். எப்படியாயினும் எடுத்தப் பணியை முடிப்பது என்ற நோக்கத்தில், கு.ம.சு., வே.ஆனைமுத்து நோபுள் கோவிந்த ராசுலு மூவரும் ஒருவரிடம் கடன் பத்திரத்தில் கையெழுத்து போட்டு ரூபாய் அறுபது ஆயிரம் 2ரூ வட்டிக்கு கடனாகப் பெற்றார்.

இந்நிலையில் 24.12.1973-இல் பெரியார் இறந்துவிட்டார். பெரியார் மறைவுக்குப் பின் ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ நூல் அச்சிடப்பட்டன. மொத்தச் செலவு ரூ.1,70,000 ஆனது. 3000 படிகள் அச்சிட்டார் கள். திருச்சியில் பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழா 1.7.1974-இல் திருச்சி தேவர் மன்றத்தில் நடைபெற்றது. அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் வெளியிடப்பட்டது. இவ்விழாவில், கி. வீரமணியும், திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா. மணியம்மையாரும் கலந்து கெண்டனர். ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ மறுபதிப்பாக, பெரியார்-நாகம்மை ஆராய்ச்சி அறக்கட்டளையின் மூலமாக 2010-இல் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் மீண்டும் வெளியிடப்பட்டது.

பெரியார் வாழ்ந்த காலத்தில் 17.9.1972-இல் திருச்சியில் சிந்தனையாளர் கழகத்தின் மூலமாக “அனைத்திந்திய நாத்திகர் மாநாடு” நடைபெற்றது. அம்மாநாட்டில் தலைசிறந்த பகுத்தறிவு அறிஞர் டாக்டர் கோவூர், ஆந்திர நாத்திக அறிஞர் கோரா, நெ.து.சுந்தரவடிவேலு போன்றோர் கலந்து கொண்டனர். மாநாடு திருச்சியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாடு பற்றி உளவுத் துறையினர் அரசு அதிகாரியான இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரைத்தனர். அன்றைய முதலமைச் சராயிருந்த - கலைஞர் கருணாநிதியின் பார்வைக்கு அது வந்தது. அவருக்கு இது புதிய செய்தியாக இருந்தது. “உடனே அய்.ஏ.எஸ். அதிகாரிகளும், அய்கோர்ட் நீதிபதிகளும் கோயிலுக்குப் போய்க் கடவுளை கும்பிடுவதற்கு உரிமையுண்டு என்றால்-நாத்திகரான இவருக்கும் கடவுள் இல்லை என்று பரப்புரை செய்ய உரிமையுண்டு.” ஆகையால் இவர்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை; அப்படி எடுக்கவும் சட்டத்தில் இடமில்லை என்று கோப்பில் எழுதிக் கையெழுத்து இட்டு முடித்துவிட்டார். இவர் மின்சார வாரியப் பணியில் - தொடர்ந்து பணியாற்றினார்.

கு.ம.சு. அவர்கள் 1964-65 ஆண்டுகளில் புதுக் கோட்டை மின்வாரியத்தில் பணியாற்றிக் கொண்டிருந் தார். அப்போது தந்தை பெரியார் அவர்களின் சுற்றுப் பயண ஏற்பாடு புதுக்கோட்டையிலும் இருந்தது. இதை அறிந்த அவர் பெரியாரிடம் அனுமதி பெற்று புதுக்கோட்டை வரும் நாளில் அவர் வீட்டில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்து இருந்தார். அய்யா பெரியாருக்கு மான் கறியுடன் மதிய உணவு வழங்கப்பட்டது. அய்யா அவர்கள் நன்கு விரும்பிச் சாப்பிட்டார். அந்தச் சுற்றுப்பயணத்தில் ஆனைமுத்துவும் கலந்துகொண்டு அவரும் அவர்கள் வீட்டில் சாப்பிட்டார் என்று கூறியுள்ளார்.

மணப்பாறை, புதுக்கோட்டை போன்ற இடங்களில் பணிபுரிந்த போது மணப்பாறை பகுதியில் உள்ள செம்பரை என்ற ஊரில் மின்சார தெருவிளக்கை தொடங்கி வைக்க அந்த ஊர் ஊராட்சி மன்றத் தலைவர் பெரியாரை அழைத்து தெரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும் என்றார். நானும் ஊராட்சி மன்றத் தலை வரும் பெரியாரிடம் அனுமதி வாங்கினோம். அய்யா அவர்களும் அந்த ஊருக்கு வந்து 7.30 மணிக்கெல் லாம் தெருவிளக்கை தொடங்கி வைத்தார். இது தந்தை பெரியாருக்குப் புதிய அனுபவம்.

அரசு அலுவலகங்களில் சாமிப் படங்களை மாட்டி வைத்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நாட்களில் கடவுள், கடவுளச்சி படங்களுக்கும் அந்த பொம்மைகளுக்கும் பூ, பொட்டு வைத்து பூசை செய்தும் கொண்டாடி வந்தனர். நாம் பார்ப்பனர்களுக்கு அடிமைகள் இல்லை என்றும், அடிமைகள் என்பது காட்டிக் கொள்வதில், பெருமைப் படுகின்ற கொடுமை தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அவர் 1956 முதல் மின்சாரத் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றிய காலத்திலேயே இதற்கு எதிராக மாற்றம் கொண்டு வந்தார்.

தூத்துக்குடியில் மின்வாரியத் தலைமைப் பொறியாளர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின், 473 நெடுஞ்செழியன் சாலை, கருணாநிதி நகரில் திருச்சியில் அவர் சொந்த மாகக் குடியிருந்த வீட்டை மேல் மாடியில் பார்த்து, பார்த்து திறம்பட மாடி வீட்டைக் கட்டினார். ஓர் அழகான எடுப்பான அற்புதமான வீடு. என்ன காரணத்தினாலோ அந்த வீட்டை விற்றுவிட்டார். பின்பு எண்.35, ஸ்டேட் பேங்க் காலனி, இராப்பட்டி, எடமலைப்பட்டிப்புதூர் என்ற இல்லத்தில் குடியேறி தன் வாழ்நாளின் இறுதி நாள் வரை வாழ்ந்தார்.

கு.ம.சு. அய்யா அவர்களுக்கு அவ்வப்போது உடல் நலிவு வரும் அதை எல்லாம் சமாளித்தார். தலைவர் கு.ம.சு. 86-ஆவது பிறந்த நாளை சிறப்புடன் துணைவி யருடன் குடும்பத்துடன் எளிமையாக மகிழ்ச்சியுடன் கொண்டாடி விட்டு, இரவு 27.1.2020இல் நம்மை எல்லாம் விட்டு மறைந்துவிட்டார். நான் 2012-இல் இதய அறுவை சிகிச்சை செய்துக் கொண்டு வீட்டிற்கு வந்த என்னை பார்த்து நலம் விசாரித்தார், என் மகள் ‘தமிழ்க் குயில்’ திருமணம் 2013இல் நடைபெற்ற போது திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். என் உடல் நிலையில் சோர்வு வந்து பார்க்க முடியாத நிலையில் இருந்தும் வாடகைக் கார் மூலம் வீட்டிற்குச் சென்று உறையூர் இரா.கலியபெருமாள், என் மகன் விடுதலைத் தமிழனுடன் நான் இறுதி மரியாதை செலுத்தினேன். தோழர் தமிழேந்தி அடிக்கடி கேட்பார், கு.ம.சு. அவர்களைப் பார்த்தாயா? பார்த்தாயா? என்று. உயிர் மூச்சு சென்ற பிறகுதான் என்னால் பார்க்க முடிந்தது. ஓய்வுக்குப் பின்னர் திருச்சி சிந்தனையாளர் கழகத்தைத் திறம்பட நடத்தினார்.

  1. திருச்சி சிந்தனையாளர் கழகம்.
  2. சேதுக் கால்வாய் மக்கள் எழுச்சி இயக்கம்.
  3. தமிழ், தமிழர் ஒருங்கிணைப்பாளர்.
  4. தலைவர், ஊழல் எதிர்ப்பியக்கம், திருச்சிராப்பள்ளி.
  5. அமைப்பாளர், தொழில்நுட்ப வல்லுநர் குழுமம்.
  6. நெறியாளர், பைந்தமிழ் இயக்கம்

இப்படிப் பல்வேறு பணிகளுக்குப் பொருளுதவியும் இயக்கக் கூட்டங்களுக்கும் சென்று வந்தார்.

இவர் இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள் ளார். 2008-இல் “சங்கராயணம்” என்ற கவிதை நூலையும் (சங்கராச்சாரியாரை பற்றியது), 2009-இல் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற கவிதை நூலை யும், வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு நூலுக்கும் மறைந்த அறிஞர் “சங்கமித்ரா” அணிந்துரை வழங்கி யுள்ளார்.

திருச்சி சிந்தனையாளர் கழகத்தின் சார்பாக 26.10.2014 பெரியாரின் 136-ஆவது பிறந்த நாள் விழாவும் பொறிஞர் கு.ம.சுப்ரமணியன் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் திருச்சி, கைத்தறி நெசவாளர் திருமண மண்டபத்தில் தோழர் வே.ஆனைமுத்து தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பெரியார் பெருந் தொண்டர்கள் தோழர் முத்துசெழியன், டாக்டர் எஸ்.எஸ். முத்து, கவிஞர் தமிழேந்தி, வீ.ந.சோ. நோபிள் பார்த்த சாரதி போன்ற அறிஞர் பெருமக்கள் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள். தமிழ் இன உணர்வாளர்கள், பெரியார் இயக்கத் தொண்டர்கள் அனைவரும் இவரது தமிழ் உணர்வைப் பாராட்டிப் பேசினர்.

திருச்சிராப்பள்ளியில் 3.1.2009 அன்று “சிந்தனை யாளன் பொங்கல் சிறப்பு மலர்” வெளியிடப்பட்டது. அவ்வெளியீட்டு விழாவிற்கு இடத்தின் வாடகையும் ஏற்றுக்கொண்டு விழாவிற்கு உரிய செலவையும் ஏற்றுக்கொண்ட பண்பாளர் அய்யா கு.ம.சு.

9.10.1994-இல் வேலூர் மாவட்டம் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய தந்தை பெரியார் 111-ஆவது பிறந்த நாள் விழா மாநாட்டிலும், வேலூர் மாவட்ட விகிதாச்சார இடஒதுக்கீடு மாநாட்டிலும் கலந்துக் கொண்டு பேசிய பெருமகனார்.

இவர் வாழ்ந்த காலத்தில் பெரியாரைத் தவிர வேறு எவரையும் தலைவராக ஏற்றுக்கொண்டதில்லை. இறுதி வரை பெரியார் கெள்கையோடு வாழ்ந்து மறைந்தவர். இறுதியாக, “நான் உங்களை எல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டுச் சாகமாட்டேன்” என்று தந்தை பெரியார் கூறினார். நீங்கள் ஆனைமுத்துவோடு சேர்ந்து நீங்க ளெல்லாம் பெரியார் கண்ட கனவு - பாதியில் விட்டுச் சென்றவற்றை செய்து முடியுங்கள் என்றார்.

கு.ம.சுப்ரமணியன் அவர்களின் இழப்பு, மா.பெ.பொ.க. தோழர்களுக்கும் திருச்சி சிந்தனையாளர் கழகத்துக்கும் புரட்சிக் கவிஞர் கலை, இலக்கிய மன்றத் தோழர்களுக்கும்-அனைத்து பெரியார் இயக்க தோழர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும்.

வாழ்க “கு.ம.சு. என்கிற பொறியாளர் கு.ம. சுப்ரமணியன் (எ) மருதநாடன் புகழ்!”

Pin It