irataimalai srinivasanமனுவின் மொழியே சமூக அறமானது ஒரு நாள். அந்நாள் வரை ஒன்றே குலம் என சமத்துவ சமுதாயமாக வாழ்ந்த தமிழர் சமுதாயம், வந்தேறிகளின் சூழ்ச்சித் திறனால் பல்வேறு சாதியினராய் பிளவுபட்டு ஓர்மை உணர்வையிழந்து, மேல் - கீழ் எனப் பேசி, இந்நாள் வரை இடர்ப்படுகின்றனர்.

மேல் ஆதிக்கச் சாதியினரால் சமூகத்தில் ஒரு பகுதியினர் பஞ்சை பராரிகளாக, கொத் தடிமைகளாக, கல்வியறிவற்ற பேதைகளாக வாழத் தளைப்பட்டனர். அத்தகைய புறக்கணிக்கப்பட்டத் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவராகத் தோன்றினார் இரட்டைமலை சீனிவாசன்.

இரட்டைமலை சீனிவாசன், பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் என்ற சிற்றூரில்,1859 சூலை 7-ஆம் நாள், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் சீனிவாசன். இரட்டைமலை என்பது அவருடைய தந்தையின் பெயர்; தாயாரின் பெயர் ஆதியம்மை. தலைப்பெழுத்தாகத் தந்தையின் முழுப் பெயரும் இணைந்து இரட்டைமலை சீனிவாசன் ஆனார்.

கல்வி :

சனாதன தர்மம் நாட்டில் கோலோச்சிய காலத்தில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள், கல்வி கற்பதற்கான வாய்ப்பும் வசதியும் அற்றவராக வாழ்ந்து வந்தனர். அந் நாளில் திண்ணைப் பள்ளிக்கூடங்களே மிகுந்து காணப்பட்டன. அவை மேல்சாதி இந்துக்களின் கட்டுப் பாட்டில் இயங்கின.

அந்தப் பள்ளிகளில் ஆதித்திராவிடப் பிள்ளைகள் கல்வி பயில அனுமதி அளிப்பதில்லை; அனுமதித்தாலும், ஆசிரியர்களின் நேரடியான கண் காணிப்பு கிடையா; தக்கக் கல்விப் பயிற்சியும் கிடையா. இதுபோன்ற ஒரு திண்ணைப் பள்ளியில்தான் தொடக்கக் கல்வியை கோழியாளத்தில் இரட்டைமலை சீனிவாசன் பயின்றார். கொடிய வறுமையாலும், சாதியக் கொடுமை யாலும், அவரின் குடும்பத்தினர் கோழியாளத்திலிருந்து தஞ்சை நோக்கிக் குடிபெயர்ந்தனர். தஞ்சையில் தன் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார்.

தஞ்சையில் காணுமிடந்தோறும் விண்ணைத்தொடும் உயர்ந்த கோபுரங்கள்; உயர்ந்த சாதியினரின் உள்ளங்களோ தாழ்ந்த உள்ளங்கள். எங்கெல்லாம் ஆறு பாய்ந்தோடி வளம் பெருக்கியதோ அங்கெல்லாம் பூசுரர் கொடி விண்ணைத் தொட்டுப் பறந்தது; சனாதனதர்மமே தழைத்தோங்கியிருந்தது.

ஆகையால் தஞ்சையில் சாதிப் பெருமை பேசுவோர் ஏராளம். ஆனபடியால் தீண்டாமைக் கொடுமை வேறெங் கும் காணாத அளவிற்கு ஆழமாக வேரூன்றி உச்சத்தைத் தொட்டுத் தாண்டவமாடியது. எனவே, இரட்டைமலை தன் குடும்பத்தாருடன் கோவைக்குக் குடிபெயர்ந்தார்.

இரட்டைமலை சீனிவாசன், கோயம்புத்தூரில் ஒரு பள்ளியில் சேர்ந்தார். அந்தக் கல்விக்கூடத்தில் 400 பிள்ளைகள் பயின்றனர். அவர்களுள் 10 மாணவர்களைத் தவிர மற்ற அனைவரும் மேல்சாதியினராகவே இருந்தனர். அவர்கள் சாதியக் கோட்பாடுகளை மிகக் கடுமையாகக் கடைப்பிடித்தனர். சீனிவாசன், பள்ளியில் தன்னுடன் பயி லும் மற்ற மாணவர்களுடன் உரிமையுடன் பழகுவதில்லை; அவர்களுடன் சேர்ந்து விளையாடுவதுமில்லை.

சேர்ந்து விளையாடவும் பழகவும் நேர்ந்தால், தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்று மற்ற மாணவர்கள் அறிந்து கொள்வர்; தன்னை மிகவும் தாழ்வாக நடத்துவர் என்று அஞ்சினார். அதனால், முதல் மணியடித்தப் பின்னரே பள்ளிக்குள் செல்வார்; வகுப்பு முடியும்போது விரைந்து வீட்டிற்குச் சென்றுவிடுவார். பள்ளிப் பருவத்தில் பசுமை யான எண்ணங்கள் ஏதுமின்றிப் பள்ளி வாழ்க்கையை வெறுமையாகக் கழிப்பது என்பது கொடுமையல்லவா?

அவர் வயதையொத்த சிறார்களுக்கிருந்த வாய்ப்புகளும் வசதிகளும் வாழ்க்கையும் மறுக்கப்பட்டு, சமூக இழிவுகளுக்கு உள்ளாகித் துன்பப்பட்டபோதிலும், இரட்டைமலை சீனிவாசன் கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வங்கொண்டு பயின்று வந்தார். கோவை அரசு கலைக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தமிழகத்திலேயே - ஏன் இந்தியத் துணைக் கண்டத்திலேயே ஆதித்திராவிட வகுப்பினரிடையே பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்ற முதலாவது ஆதித் திராவிட இளைஞர் இரட்டை மலை சீனிவாசன் ஆவார். அதன் பின் வழக்கறிஞராகப் பயின்று மேன்மை பெற்றார்.

இல்லறம் :

1887-ஆம் ஆண்டில், அரங்கநாயகி என்பவரைத் திருமணம் செய்துகொண்டு இல்வாழ்க்கையை நல்லற வாழ்க்கையாக அமைத்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண்மக்களும், நான்கு ஆண் மக்களும் பிறந்தனர்.

1880-இல் கல்லூரிப் படிப்பை முடித்து, நீலகிரியில் ஓர் ஆங்கிலேய நிறுவனத்தில் கணக்கர் பணியில் சேர்ந்தார். அங்கு பத்து ஆண்டுகள் சுதந்தரமாகப் பணியாற்றினார் என்ற போதிலும், எப்போதும் ஆதித் திராவிட மக்களின் விடுதலைக்கான வழிமுறைகளைப் பற்றியே பெரிதும் சிந்தித்து வந்தார்.

நீலகிரியில் அவர் வாழ்ந்த காலத்தில், தியோசோபிகல் சொசைட்டியைச் சேர்ந்த அம்மையார் பிளாவட்ஸ்கி, கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் ஆகியோருடன் நட்புறவு ஏற்பட்டது. ஏற்கெனவே அங்கே வசித்து வந்த அவருடைய உறவினர் பண்டிதர் அயோத்தி தாசருடன் இணைந்தும், தனித்தும் செயல்பட்டு வந்தார்.

1884-இல் அடையாறு தியோசோபிகல் சொசைட்டியின் ஆண்டுவிழா நடைபெற்றது. அந்த விழாவில் இரட்டை மலை சீனிவாசன் கலந்துகொண்டார். ஆல்காட் பிரபு அவ் விழாவில் பேசும்போது, அரசியல் கட்சிகளின் தேவை குறித்துப் பேசினார். அவர் கருத்தில் இரட்டைமலை சீனிவாசனுக்கு உடன்பாடில்லை; ஆதித்திராவிட மக்களின் முன்னேற்றங் குறித்துப் பேசாத எந்த இயக்கமும் தேவை யில்லை என்ற கருத்தியலில் உறுதியுடனிருந்தார்.

இரட்டைமலை சீனிவாசன் எண்ணியதுபோல் 1885- இல் காங்கிரசுப் பேரியக்கம் தோன்றியது. அவ்வியக்கம் தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை. அந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் பெரும்பாலும் மேட்டுக் குடியினராகவே இருந்தனர்.

அவர்கள் கீழ்நிலை மக்களின் அவலங்களை அறியவில்லை; அறிந்திருந்தாலும் அவைகளைக் குறித்து அவர்கள் கவலை கொள்ளவில்லை.

அதன் காரணமாக இரட்டைமலை சீனிவாசன் 1893-இல் தொடங்கிய ‘பறையன்’ இதழில், “காங்கிரசிற்கு சந்தாவாக ஒரு பைசாக்கூடத் தராதீர்கள். காங்கிரசிற்கு உதவி செய்தால் அது பாம்பிற்குப் பால் வார்ப்பதாகும்” என்று எழுதினார்.

பத்து ஆண்டுகள் நீலகிரியில் வாழ்ந்தார். ஆதித் திராவிட மக்கள், தங்கள் இழிநிலையை நீக்கிடவும், உரிமைகளைப் பெற்றிடவும், கல்வி வாய்ப்புகளைப் பெறவும், அரசியல் அதிகாரம் பெற்றிடவும் 1891-ஆம் ஆண்டில் ‘பறையர் மகாசன சபை’யைத் தொடங்கினார்.

பறையர் அமைப்பைச் சாதியமைப்பாகப் பலர் இழிவு படுத்திச் சித்தரித்தபோது, கவிஞர் சுப்பிரமணி பாரதியார், “பறையர்களை மிருகங்கள்போல் நடத்துவது குற்றமே யொழிய பறையர் என்று அழைப்பது குற்றமில்லை” என்று தனது ‘பஞ்சமர்’ என்ற கட்டுரையில் எழுதினார்.

இரட்டைமலை சீனிவாசன் பறையர் மகாசன சபை யைத் தோற்றுவித்த 1891-ஆம் ஆண்டிலேயே, அயோத்தி தாசப் பண்டிதர் நீலகிரியில் ‘திராவிட மகா சபை’யின் முதல் மாநாட்டை 01.12.1891-இல் நடத்தினார். அந்த மாநாட்டில் பண்டிதர் பத்து தீர்மானங்களை நிறைவேற்றி, ஆங்கில அரசிற்கும், காங்கிரசு பேரியக்கத் திற்கும் அனுப்பி வைத்தார்.

1892-இல் அயோத்திதாசர் ‘திராவிட மகாசன சபை’ என்ற பெயரை ‘ஆதிதிராவிட மகாசன சபை’ எனப் பெயர் மாற்றிப் பதிவும் செய்தார். அயோத்திதாசப் பண்டிதருடைய மனைவி இறந்த பின்னர், இரட்டைமலை சீனிவாசன் தன் தங்கை இலட்சுமியைப் பண்டிதருக்குத் திருமணம் செய்து வைத்தார்.

“அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?” என்று சொல்லப்பட்ட காலத்திலேயே இரட்டைமலை சீனிவாசன் தன் தங்கையை எட்டாம் வகுப்புவரை படிக்க வைத்திருந் தார் என்பதால், பெண் கல்விக்கு இரட்டைமலை சீனி வாசன் முக்கியத்துவம் தந்துள்ளார் என்பதை அறிகிறோம்.

நிர்வாக ஆட்சிப்பணித் துறைத் தேர்வு :

இரட்டைமலை சீனிவாசன் எண்ணியபடியே, காங்கிரசு இயக்கம் மேட்டுக்குடியினரின் நல் வாழ்வுக்காகவே ஏற்பட்ட இயக்கம் என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கை களில் ஈடுபட்டது.

நிர்வாக ஆட்சிப்பணித் துறைத் தேர்வு இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வந்தது. ஆதலினால் ஆங்கிலேயரே அந்தத் தேர்வில் வெற்றிபெற்று ஆட்சியராகப் பணியில் இருந்துவந்துள்ளனர். மேட்டுக்குடியினர் அந்த நிர்வாக ஆட்சிப் பணித் தேர்வு இந்தியாவில் நடத்தப்பட்டால்தான் இந்தியர்கள், தேர்வு எழுதி வெற்றிபெற்று இந்திய ஆட்சிப் பணியில் ஆட்சியராகப் பணியில் அமரமுடியும் என்று எண்ணியதால், காங்கிரசு இயக்கம், அவர்கள் விரும்பி யதற்கிணங்க ஒரு விண்ணப்பத்தைத் தயார் செய்து நூறு பேர்களிடம் கையெழுத்து வாங்கி இங்கிலாந்துப் பாராளு மன்றத்தில், அந்த மன்றத்தின் உறுப்பினராகயிருந்த காங்கிரசுத் தலைவர் தாதாபாய் நௌரோஜி மூலம் சமர்ப்பித்தனர்.

இதனை அறிந்துகொண்ட இரட்டைமலை சீனிவாசன், காங்கிரசாரின் இந்த நடவடிக்கையை எதிர்த்திட மனங் கொண்டார். பறையர் மகாசன சபையினரின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

அவரின் முயற்சியில் 1892 டிசம்பர் 23-ஆம் நாள், தாழ்த்தப்பட்ட மக்களின் கூட்டம் சென்னை இராயப் பேட்டையில் உள்ள வெஸ்லி மிஷன் பள்ளியில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் இரட்டைமலை சீனிவாசன், “இந்திய ஆட்சிப் பணித் தேர்வினை இந்தியாவில் நடத்தினால் இந்தியர்கள் என்ற போர்வையில் ஆதிக்கச் சாதியினர் மட்டுமே இத் தேர்வில் வெற்றிபெற முடியும்.

தாழ்த்தப்பட்ட மக்களை அவர்கள் மேலும் இழிவுசெய்து கொடுமைப்படுத்துவார்கள்” என்று கூறி அத் தேர்வினை இந்தியாவில் நடத்தக்கூடாது என்று ஒரு விண்ணப்பத் தைத் தயார் செய்து, 3412 பேர் கையெழுத்துகளை வாங்கி சர். ஜார்ஜ் செஸ்னி என்ற நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் அனுப்பி வைத்தார். அதன்மூலம் அப்போது வரவிருந்த பெருங்கேடு தடுத்து நிறுத்தப்பட்டது.

பறையன்’ இதழ்

‘பறையன்’ எனத் தன் சாதியின் பெயரைச் சொல்லித் தன்னை இழிவுபடுத்திய ஆதிக்கச் சாதியினரை நோக்கி, அதே சாதிய அடையாளத்துடன் பறையர் இன மக்களைத் தட்டியெழுப்ப உறுதிகொண்டு, ‘பறையன்’ இதழை 1893 அக்டோபர் திங்களில் தொடங்கினார்.

தொடக்கத்தில் திங்கள் இதழாக வந்த ‘பறையன்’ இதழ் மூன்று திங்கள்கள் கடந்த பின்னர் வார இதழாக வரத் தொடங்கியது. இதழ் ஒன்றின் விலை இரண்டணா. ‘பறையன்’ இதழுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகள், இதர சமூகத்தினரின் தீண்டாமைக் கொடுமைகள், சனாதன மக்களுக்கு ஆதரவாயிருந்த காங்கிரசுக்குக் கண்டனம், கல்வி உரிமை, நிலமீட்புப் போராட்டம், அரசுக்கு விண்ணப்பங்கள் ஆகியவை குறித்த செய்திகள் அந்த இதழில் தொடர்ந்து வெளியிடப்பட்டன.

தாழ்த்தப்பட்டோரிடையே அரசியல் உணர்வினை ஊட்டியதிலும், தாழ்த்தப்பட்டோரின் தேவைகளை அரசுக்குத் தெரியப்படுத்தியதிலும் ‘பறையன்’ இதழின் பங்கு மகத்தானது.

மதிப்புரைக்காக ‘சுதேசமித்திரன்’ இதழுக்கு ‘பறையன்’ இதழ் ஒரு படி அனுப்பிவைக்கப்பட்டது. சுதேசமித்திரன் ஆசிரியர் சி.ஆர்.நரசிம்மன், மேசையின்மேல் பறையன் இதழ் இருந்தது. அதை அவர் கையில் எடுத்துப் பார்க் காமல், பேனாவின் பின்பகுதியால் பறையன் இதழைப் புரட்டிப் பார்த்தார். பறையன் இதழைத் தொட்டால் தீட்டு ஒட்டிக்கொள்ளும் என்ற சனாதன எண்ணமே அதற்குரிய காரணமாகும். 1893 முதல் 1900 வரை பறையன் இதழ் தொடர்ந்து வந்தது.

நிலம் வேண்டிப் போராட்டம் :

நிலம் வேண்டி 1894ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 28ஆம் நாள் இரட்டைமலை சீனிவாசன் தலைமையில் அன்றைய கிருஷ்ணா மாவட்டத்தில் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த ஆங்கில அரசு, ஆதித்திராவிட மக்கள் உழவுத் தொழிலில் ஈடுபட நஞ்சை நிலம் வழங்கியது; அவ்விதம் வழங்கிய நிலங்கள் பஞ்சமி நிலங்கள் என அழைக்கப்பட்டன.

விக்டோரியா மண்டபத்தில் ... :

சென்னை விக்டோரியா மண்டபத்தில் 07.10.1895 அன்று ஆதித்திராவிட மக்களின் மாநாடு நடை பெற்றது. அரசுப் பணிகளிலும் கல்விச் சாலைகளிலும் ஆதித்திராவிட மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றும், சட்ட மன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், இரட்டைமலை சீனிவாசன் பேசினார்.

மேலும், எங்கள் இன மக்கள், மற்ற இன மக்களுடன் சமத்துவத்துடனும், சமாதானத்துடனும், சுயமரியாதை யுடனும் வாழவே விரும்புகின்றனர். எங்கள் முன்னேற்றத் தைத் தடுக்க முற்பட்டால் எதிர்வினையாற்றுவோம். எவ் வகைக் கொடுமைகளையும் ஏற்கமாட்டோம். சென்னை மைலாப்பூரில் வசிக்கும் நீதிபதி வீட்டிற்கு அருகில் பிராமணர் தெரு, பறையர் உள்ளே வரக்கூடாது என்று இருந்த அறிவிப்புப் பலகையை உடனே அகற்ற வேண்டு மென்று கடுமையாகக் கூறினார்.

இரட்டைமலை சீனிவாசனின் மாநாட்டு உரை நாடெங் கும் பரபரப்பாகப் பேசப்பட்டது. எம்.வீரராகவாச்சாரியார், ஜி.சுப்பிரமணி ஐயர் போன்ற காங்கிரசுத் தலைவர்கள், வெள்ளையரின் தூண்டுதலால் பறையர்கள் கலகம் செய்ய ஆரம்பித்துவிட்டனர் என்றும், இரட்டைமலை சீனிவாசன் துரோகியாகிவிட்டார் என்றும் பேசத் தலைப்பட்டனர்.

இவர்களின் மிரட்டலுக்கு அஞ்சாது சீனிவாசன் 23.10.1895-இல் சென்னை டவுன் ஹாலில் கூட்டத்தைக் கூட்டி, கடுமையாக ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் “தடி எடுத்தால் ஒரே நாளில் சமாதானத்திற்கு வழி ஏற்பட்டுவிடும். ஆனால் அதை நாங்கள் விரும்ப வில்லை” என்றிருந்தது. ஆதிக்க சாதியினருக்கு இந்த எச்சரிக்கை பேரிடியாக அமைந்தது.    

தென் ஆப்பிரிக்காவில் ... :

ஆதித்திராவிடமக்கள் மீது ஆதிக்கச் சாதியினர் கட்டவிழ்த்துவிடும் வன் சாதியக் கொடுமைகளை, ஆங்கிலேயரிடம் எடுத்துக்கூறி அவர்களின் அன்பையும் ஆதரவையும் ஆதித்திராவிட மக்களின்பால் ஈர்ப்பதற் காக, 1900-ஆம் ஆண்டு இலண்டன் செல்வதற்காக பம்பாய் சென்றார். அங்கிருந்து கப்பலில் பயணித்தார்; அந்தக் கப்பல் அவரை ஆப்பிரிக்காவின் ஜான்ஸிபார் தீவிற்குக் கொண்டு சென்றது.

இரண்டு ஆண்டுகள் அந்தத் தீவில் வாழ்ந்த பின்னர் தென் ஆப்பிரிக்காவிற்குச் சென்றார். 1904-இல் நெட்டால் சென்றார். அங்கு அந்தோணி பீட்டர் என்பவரின் உதவியால் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியில் அமர்ந்தார். வழக் கறிஞராக இருந்த காந்தியாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார்.

காந்தியாரும் லியோ டால்ஸ் டாயும் நல்ல நண்பர்கள். “டால்ஸ்டாய் எழுதிய கடிதத்தில், தீமை செய்தவர் நாணும் வகையில் மன்னித்தலே மாண்புடையசெயல் என்று எழுதியுள்ள வரிகள் தம் உள்ளத்தைக் கவர்ந்தன” என்று காந்தியார் எழுதினார். அதற்குப் பதிலளித்த டால்ஸ்டாய், “இந்தப் பெருமை யெல்லாம் உங்கள் நாட்டின் முதுமொழியான தமிழ் மொழியிலுள்ள திருக்குறளையே சாரும்” எனக் கூறி அந்தத் திருக்குறளையும் எழுதியிருந்தார்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்               (குறள் 314)

அதன்பின்னர் காந்தியார் தமிழ் கற்க விரும்பினார். 1921-இல் தாயகம் திரும்பினார் இரட்டைமலை சீனிவாசன்.

சட்டமன்றத்தில் ... :

இரட்டைமலை சீனிவாசன் தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்தபோதே 1916-இல் ‘தென்னிந்தியர் நலச்சங்கம்’ (நீதிக்கட்சி) தோன்றிவிட்டது. அக்கட்சித் தலைவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்துள்ளார்; அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அரசியலில் தொடர்ந்து செயல்பட முற்பட்டார். அதேபோன்று, இறுதிவரை பெரியாருடனும், அம்பேத்கருடனும், திராவிட இயக்கத்துடனும் இணைந்தே செயல்பட்டு வந்தார் - பெரியாரும் அம்பேத்கரும் அவரினும் வயதில் இளையோர் என்ற போதிலும்!

மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின்படி 1920-இல், முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று ஐந்து தாழ்த்தப்பட்ட உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அடுத்து 19.11.1923-இல் நடைபெற்ற தேர்தலுக்குப்பின் இரட்டைமலை சீனிவாசன், எல்.சி.குருசாமி உள்ளிட்ட பத்து தாழ்த்தப் பட்டவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இரட்டைமலை சீனிவாசன், 1923 நவம்பர் முதல் 1937-இல் சட்டசபை கலைக்கப்படும் வரை உறுப்பினராக இருந் தார். அப்போது ஆதித்திராவிட மக்களின் வாழ்வியல் உரிமைகளுக்காகப் பாடுபட்டார்.

22.08.1924-இல் சட்டமன்றத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுவீதிகளில் நடக்கவும்; பொதுக்கிணறு, குளங்களில் நீர் எடுக்கவும்; அரசு அலுவலங்களிலும் பொது இடங் களிலும் ஆதிக்கச் சாதியினர் பெற்றிருக்கின்ற உரிமைகள் அனைத்தும் தீண்டப்படாத மக்களும் பெறுதற்கும் அரசு ஆணை வேண்டி கடந்தகாலத்தில் இம்மன்றத்தில் பித்தாபுரம் மகாராஜா, எம்.சி.இராஜா, சௌந்திர பாண்டியன் ஆகியோர் பேசியதை நினைவூட்டி அரசாணை வெளி யிடக் கோரி தீர்மானம் கொண்டுவந்தார். அதை ஏற்றுக் கொண்ட அரசு, 24.2.1925-இல் அரசாணையை அரசிதழில் வெளியிட்டது.

எம்.சி.இராஜா 20.1.1922-இல் சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு ‘ஆதித்திராவிடர்’ என்ற பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 25.3.1922-இல் அரசாணை எண் 817 வழங்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பள்ளன் என்றே பதிவு செய்யப்பட்டது. இதனை அரசு உடனே தடுத்துநிறுத்தவேண்டும் என இரட்டைமலை சீனிவாசன் 25.8.1924-இல் சட்டசபையில் முறையிட்டார். முதல்வர் பனகல் அரசர் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பரம்பரை மணியக்காரர் முறையை நீக்கி, அனைத்து சாதியினரும் மணியக்காரராக வழிவகை செய்யவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். இவருடைய கோரிக்கை 60 ஆண்டுகளுக்குப்பின் நிறைவேறியது.

“தெலுங்கு மொழி பேசும் தாழ்த்தப்பட்டோர் ‘மாலா’ ‘மாதிகா’ ஆகியோரை ‘ஆதிஆந்திரர்’ என்று அழைப் பதைப் போல், ‘புலையர்’, ‘தீயர்’களை ‘மலையாளத் திராவிடர்’ என அழைத்திடல் வேண்டும்” என்று 6.2.1925 அன்று சட்டமன்றத்தில் கோரினார்.

அதேநாளில் நிதி நிலை அறிவிக்கையின்போது ஆதித்திராவிட மக்களுக்கு, இருப்பிட வசதியும், சுகாதாரம் பேணுதற்கும், கல்வி வாய்ப்பினைப் பெற்றிடவும் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று உரையாற்றினார்.

24.9.1929 அன்று மதுவினால் ஏழை மக்கள் செல்வத் தையும் உடல் நலத்தையும் இழந்து வாடுகின்றனர். எனவே மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். அரசு, வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறித் தீர்மானத்தை ஏற்க மறுத்தது. அதன் பின் இரட்டைமலை சீனிவாசன், விடுமுறை நாட்களி லாவது மதுக்கடைகளை மூடிடவேண்டும் என்று வலி யுறுத்தினார். அரசு, அதனை ஏற்றுக்கொண்டது.

31.1.1933 அன்று, சட்டமன்ற உறுப்பினர் ப. சுப்பராயன் ஆதித்திராவிடர்கள் ஆலயங்களில் நுழைய அனுமதிக்கச் சட்டமியற்ற வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். இரட்டைமலை சீனிவாசனும் அதனை ஆதரித்துப் பேசி னார். அத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 56 வாக்குகள் ஆதரவாகவும், 19 வாக்குகள் நடுநிலையாகவும் கிடைத்தன; எதிர்ப்பின்றி தீர்மானம் நிறைவேறியது. ஆனால், சனாதன இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிரானது என்பதால் தலைமை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆகவே அதற்கு சட்டஏற்பு கிட்டவில்லை.

ஆதித் திராவிடர்களின் முதல் மாநில மாநாடு :

ஆதித்திராவிடர் முதல் மாநில மாநாடு 29.01.1928-இல் பச்சையப்பன் கல்லூரியில் இரட்டைமலை சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இம் மாநாட்டின் முக்கிய நோக்கம், வரவிருக்கின்ற சைமன் குழுவிற்கு அறிக்கை அளிப்பதற்கான குழுவினை அமைப்பதும், ஆதித் திராவிடர்களின் தேவைகளை வலியுறுத்துவதும் ஆகும்.

ஆதித் திராவிடர்களுக்குத் தனித் தொகுதி வேண்டும் என்றும், 21 வயது அடைந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்படவேண்டும் என்றும், கல்வி, வேலை வாய்ப்பு களில் உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்றும், தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி உள்பட அனைத்துக் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1927 வரை பச்சையப்பன் கல்லூரியில் ஆதித் திராவிட மாணவர்களை சேர்ப்பதில்லை. 1928-இல் தான் முதன் முறையாகப் பச்சையப்பன் கல்லூரியில் ஆதித் திராவிட மாணவர்கள் கல்வி பயில அனுமதிக்கப்பட்டார்கள். அதற்காக, மதுரை பிள்ளை தன் வரவேற்புரையில் பச்சையப்பன் கல்லூரியினருக்கு நன்றி கூறினார்.

வட்டமேசை மாநாடு :

1930ஆம் ஆண்டு, நவம்பர் 12ஆம் நாள் இங்கிலாந்து நாட்டின் இலண்டன் மாநகரில் வட்டமேசை மாநாடு நடைபெற்றது. இந்தியாவிலிருந்து டாக்டர் அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், ஜெயகர் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம், சர்.ஏ.இராமசாமி முதலியார், சர்.ஏ.பி.பாத்ரோ, ஆகாகான், க்யூபர்ட்கார், முகமதலி ஜின்னா, பிக்கானீர் மகாராஜா, சீனிவாச சாஸ்திரி, மற்றும் சில இந்தியப் பிரதிநிதிகள் அம்மாநாட்டில் பங்கேற்றனர். இந்த முதல் மாநாட்டில் காங்கிரசார் யாரும் கலந்துகொள்ளவில்லை.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு இங்கி லாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், வின்சர் கேசல் மாளிகை யில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். மாநாட்டிற்கு வந்திருந்த ஒவ்வொருவரும் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு மன்னருடன் கைக்குலுக்கினர். இரட்டைமலை சீனிவாசன் மட்டும் கைக்குலுக்காமல் தன் கையை இழுத்துக்கொண்டார்.

“ஏன் கைக்குலுக்க மறுக்கிறீர்கள்?” என்று மன்னர் வினவினார். அப்போது அவர், “எங்கள் நாட்டில் நான் தீணடத்தகாதவன் - சாதியில் பறையன், என்னை நீங்கள் தொடக்கூடாது, தொட்டால் தீட்டாகி விடும்” என்று கூறினார். அவர் அணிந்திருந்த சட்டையில் “நான் பறையன்; என்னை எவரும் தீண்டாதீர்!” என்று எழுதிய அறிமுக அட்டை இருப்பதை அப்போதுதான் மன்னர் கண்ணுற்றார்.

ஆனால் மன்னர், தீண்டாமையைப் பற்றி சிறிதும் எண்ணாமல் இரட்டைமலை சீனிவாசனை அருகில் அழைத்துக் கைக்குலுக்கிவிட்டு, அனைவரையும் நோக்கி, “இந்தியாவில் தீண்டப்படாதவர், விபத்தில் கிழே விழுந்து விட்டால் அவர்களைத் தொட்டுத் தூக்கிவிடாமல், விழுந்தவன் விழுந்து கிடக்கட்டும் என்று சென்று விடுவீர்களா?” என்று கேட்டு வருந்தினார்.

“ஆம். மாட்சிமை மிக்க மன்னரின் ஆட்சியில் மிகக் கேவலமாகத்தான் தீண்டப்படாத மக்கள் நடத்தப்படு கிறார்கள்” என்று இரட்டைமலை சீனவாசன் சாதியக் கொடுமைகளை விரிவாகத் துணிந்து எடுத்துரைத்தார்.

ஆதித்திராவிட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், ஆதிதிராவிட மக்களின் விகிதாசார அளவுக்கு ஏற்பக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அம்பேத்கரும் மிக விரிவாக இந்த மாநாட்டில் பேசினார்.

வட்டமேசை மாநாட்டிற்குப் பின்னர், பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்ட் 1932-ஆம் ஆண்டு ஆகத்து 17ஆம் நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க வகுப்பு வாரித் தீர்ப்பை வழங்கினார்.

அம்பேத்கரும், இரட்டைமலை சீனிவாசனும் விரும்பியவண்ணம், தீண்டப்படாத மக்களுக்கு இரட்டை வாக்குரிமையும், தனித்தொகுதியும் வழங்கப்பட்டன. இந்தத் தீர்ப்பு சிறுபான்மைக் குழுவில் இருந்த முசுலீம் களுக்கும், கிறித்தவர்களுக்கும், ஆங்கிலோ-இந்தியர் களுக்கும் சேர்த்தே வழங்கப்பட்டுள்ளது.

பூனா ஒப்பந்தம் :

எரவடா சிறையிலிருந்த காந்தியார், “தீண்டப்படாதவர் களுக்கு வழங்கப்பட்ட தனித் தொகுதி முறையை நீக்கா விடில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்” என்று உண்ணா நோன்பினைத் தொடங்கினார். காந்தியாரின் நியாயமற்ற எதிர்ப்பினால் கிடைத்த உரிமையை இழக்க நேர்ந்தது. பூனா ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் அம்பேதகர், இரட்டைமலை சீனிவாசன், என்.சிவராஜ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

1935-இல் அம்பேத்கர் மதம் மாற விரும்பியபோது, இரட்டைமலை சீனிவாசன், “நாம்தான் இந்து மதத்தில் இல்லையே, அவர்ணஸ்தர் (வர்ணம் அற்றவர்கள்) ஆயிற்றே. நாம் இந்துவாக இருந்தால்தானே மதம் மாறவேண்டும்” என்று தந்தி மூலமாகத் தன் கருத்தை அம்பேத்கருக்குத் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் அரசு, இரட்டைமலை சீனிவாசனின் சமூகப் பணிகளைப் பாராட்டி, 1926 சனவரி முதல் நாள் அன்று ‘இராவ் சாகிப்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. அதன் பின் 1930 சூன் மூன்றாம் நாள், ‘இராவ் பகதூர்’ பட்டமும், 1936 சனவரி முதல் நாள் ‘திவான் பகதூர்’ பட்டமும் அளித்துப் பெருமைப்படுத்தியது.

1939-இல் திரு.வி.க தலைமையில், எம்.சி.இராஜா, இராஜாஜி, பாசுதேவ் ஆகியோர் பங்கேற்ற பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவில், ‘திராவிடமணி’ என்ற பட்டத்தை இரட்டைமலை சீனிவாசனுக்குத் திரு.வி.க வழங்கினார். அவ் விழாவில் சீனிவாசன், “50 ஆண்டுகள் தொண்டு புரிந்தும் எமக்கு அயர்வைத் தரவில்லை. ஒதுக்கப்பட்ட மக்கள் தங்களின் உரிமைகளைச் சிறிது காலத்தில் பெற்றுவிடுவர். அவர்களின் கீழான நிலைக்கு அவர்களிடம் உள்ள அமைதியும் அன்புக் குணமுமே காரணமாகும்” என்று பேசினார்.

அன்பு வழியிலும் அறவழியிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்காகப் பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசன் 18.9.1945 அன்று இயற்கை எய்தினார்.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள், நடுவண் அரசு வெளியிட்ட இரட்டைமலை சீனிவாசனின் அஞ்சல் தலையை 15.8.2000-இல் வெளியிட்டுச் சிறப்பு செய்தார்.

ஆதித்திராவிட மக்களின் எழுச்சி நாயகன் இரட்டைமலை சீனிவாசன் பேரும் புகழும் ஓங்குக!

- மருத்துவர் சோமாஸ் கந்தன்

Pin It