தொண்ணூற்று ஆறு ஆண்டுகள் பெருவாழ்வு வாழ்ந்த ஆனைமுத்து தன் இயக்கத்தை சமீபத்தில் நிறுத்திக் கொண் டார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் இயக்கப் பணிகளில் நெருங்கிப் பழகிய என்னைப் போன்றோருக்கு அது சொல்லொணா இழப்பு.
பெரம்பலூர் மாவட்டம், முருக்கன்குடி என்ற ஊரில் பிறந்தவர். ஊரில் ஒரு முறை ஆற்றில் குளித்துவிட்டு வருகையில் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் என்கிற திராவிட இயக்கத் தலைவர் விமான விபத்தில் இறந்த செய்தி கிடைத்து தன்னுடன் படித்த பிராமணத் தோழன் குதூகலித்ததைப் பார்த்து அதன் பின்னணியை ஆராயத் தொடங்கியதாகக் குறிப்பிடுவார். அதன் பின்னர் அவர் பெரியார் பக்கம் ஈர்க்கப்படுகிறார். அத்துடன் வன்னியர் சங்கப் பணிகளிலும் இளமையில் ஈடுபட்டார். இராமசாமி படையாச்சியாரின் உழைப்பாளர் கட்சியின் அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் படித்த போது முதல் ஆண்டில் கணிதத்தில் தேர்ச்சி பெற வில்லை. இதையடுத்து, “சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் வந்து சேர்ந்து கொள்ளலாம்” என ஆனைமுத்து நினைக்க, “ஆங்கிலத்தில் முதலாவதாக வந்த மாணவனாயிற்றே!” என பல்கலைக்கழகமே அவரை இரண்டாவது ஆண்டு படிக்க அனுமதித்தது. ஆனாலும் ஆனைமுத்துவின் ஆர்வம் சமூகத்தொண்டின்பால் திரும்பி விட்டது. 1952 முதல் 1956 வரை ‘தென்னாற்காடு மாவட்ட மணிலா மார்க்கெட் கமிட்டி’ என்கிற ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எழுத்தராகவும் கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்து பதவியைத் துறந்தார். 1956க்குப் பின்னாக முழுக்க திராவிடர் கழகத்தில் செயல்பட்டார்.
அறுபதுகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள் விழா வரும்போது மாட்டு வண்டி கட்டிக் கொண்டு அதில் ஒலிபெருக்கியுடன் ஒரு மாதம் முழுக்க ஊர் ஊராகச் செல்வார். எல்லா ஊரிலும் கூட்டம் உண்டு. அரிசி, பருப்பு போன்றவற்றை எடுத்துச் சென்று கூட்டம் போடும் ஊரில் இருக்கும் ஏழைத் தாய்மார் வீட்டில் கொடுத்து சமைத்துத் தரச் சொல்லி சாப்பிடுவார்கள்.
தந்தை பெரியாரை ஒரு கட்டத்தில் எல்லோரும் வழி பாட்டுக்குரிய தலைவராகக் காண ஆரம்பித்தக் காலக்கட்டத்தில் அவருடன் விவாதம் செய்து கொண்டிருந்தவர் ஆனைமுத்து மட்டுமே.
பெரியார் “இந்துக்கள் என்று நம்மை அழைத்துக் கொள்ளாமல் பகுத்தறிவாளர், நாத்திகர் என்று போட்டுக் கொள்ள வேண்டும்” எனக் கூறினார். ஆனால், அவரைச் சந்தித்த ஆனைமுத்து “அப்படி போட்டுக் கொள்வது என்பது சாத்தியமே இல்லை. நமது சட்டங்கள் அதை எப்போதும் அனுமதிக்காது!” என வாதிட்டார். பெரியார் இந்தக் கருத்தை பல வழக்கறிஞர்களிடம் கேட்டு உறுதிப்படுத்தி “ஆனைமுத்து சொல்வதே சரி!” என்று ஏற்றுக் கொண்டார்.
எழுபதுகள் வரையில் பெரியாரின் பேச்சுகள், எழுத்துகள் சிறுசிறு நூல்களாக மட்டுமே இருந்தன. பெரியாரை அறிந்து கொள்வதற்கு தொகுப்பு நூல் எதுவும் அதுவரை இல்லை. பல்வேறு இதழ்களில் இருந்த அவரது எழுத்துகள் தேடி எடுக்க வேண்டிய நிலையில் இருந்தன. இந்நிலையில் பெரியாரின் எழுத்தையும் பேச்சையும் நூலாக்க ஆனைமுத்து விரும்பினார். எனவே, அவரது அனுமதியுடன் அவற்றைத் தொகுக்க முனைந்தார். ‘குடியரசு’, ‘விடுதலை’ என பல இதழ்களில் இருந்தவற்றைத் தலைப்பு வாரியாகப் பிரித்து திருச்சியில் இருந்த பெரியார் அவர்களிடம் வாசித்துக் காட்டி ஒப்புதல் பெற்றார். பெரியாரின் முதல் துணைவியார் நாகம்மை மரணம் அடைந்த போது அவர் விடுத்த இரங்கல் செய்தி எவ்வளவு உருக்கமானது என்பதை அனைவரும் அறிவர். அந்தச் செய்திக் கட்டுரையைப் பெரியாரிடம் ஆனைமுத்து வாசித்துக் காட்டிய போது இரண்டு வரிகளைக் கேட்டபின் முழுக் கட்டுரையையும் அப்படியே பெரியார் கலங்கிய கண்களுடன் ஒப்பித்திருக்கிறார்!
ஆனைமுத்துவுக்கு ஏழு மகவுகள். அறுவர் உயிர் வாழ்கின்றனர். பெற்ற பிள்ளைகளுக்குப் பெயர்கூட ஆனைமுத்து வைத்தது இல்லை! எல்லாம் அவரது துணைவியாரே பார்த்துக் கொள்ள விட்டுவிட்டு, ஆனைமுத்து மாநிலம் முழுக்க பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப ஓயாமல் நடையாய் நடந்தார். எந்தப் பகுதியாக இருந்தாலும் பேருந்திலேயே போய்விடுவார். கையில் இரண்டு பெரிய புத்தகப் பைகளை வைத்திருப்பார். யார் கேட்டாலும் தராமல் அவரே சுமந்து வருவார்.
பணம் இல்லையே என்பதற்காக எந்தச் செயலையும் செய்வதில் சுணங்க மாட்டார். எதையும் முடிக்க வேண்டும் என்று நினைத்தால் எப்பாடு பட்டாவது நிறைவேற்றியே விடுவார். எவ்வளவு பெரிய முரடனாக இருந்தாலும் எதிர்த்து நிற்க அவர் தயங்க மாட்டார். பொதுவாழ்வில் அவர் தாக்குதல்களை எதிர்த்தாக்குதல்களால் முறியடித்த காலகட்டமும், கத்தியைப் பாதுகாப்புக்கு வைத்திருந்த காலமும் உண்டு.
(பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் வெளியிட பதிப்புரிமைக்கு பெரியார் ஒப்பம் இடுகிறார்)
பெரியாரின் எழுத்துகளைத் தொகுத்ததன் மூலம் பெரியாரியலில் மேலும் செழுமை பெற்றார். ஏற்கெனவே அவர் தமிழ் இலக்கியங்களை ஆழக் கற்றவர் தொல்காப்பயித்தை எழுத்தெண்ணிப் படித்தவர். இந்திய அரசியல் சட்டத்தை நாளெல்லாம் துப்பறியும் நாவலைப் படிப்பதைப் போல் ஆர்வமுடன் படிப்பார். உலக நாடுகளின் அரசியல் சட்டங்களையும் படித்திருந்தார். அரசியல் சாசன அவையில் அம்பேத்கர் தலைமையிலான குழு நமது அரசியல் சாச னத்தை உருவாக்கிச் சமர்ப்பிக்கும் முன்பாக நாடாளுமன்றச் செயலராக இருந்த பி.என். ராவ் என்ற அதிகாரி, மாதிரி அரசியல் சாசனம் ஒன்றைத் தயாரித்திருந்தார். இதை யொட்டித்தான் இந்திய அரசியல் சட்டமே தயாரிக்கப்பட்டது.
புதுடெல்லியில் தேசிய ஆவணக் காப்பகத்திலிருந்து பி.என். ராவ் எழுதிய சட்டத்தை நகலெடுத்து வைத்து இருந்தார். அதுமட்டுமல்லாமல் சென்னை மாகாணத்தை ஆண்ட நீதிக்கட்சியினர் டெல்லி ஆங்கில அரசிடம் சென்னை மாகாணத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு பெறுவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய ஆவணங்களையெல்லாம் அங்கிருந்து நகலெடுத்து வைத் திருந்தார். ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி தேசிய ஆவணக் காப்பகத்தில் பல ஆவணங்களைத் தேடி எடுத்தவர். அவரிடம் பேசுகையில், “நான் எந்த ஆவணங்களைத் தேடி எடுத்தாலும் எனக்கு முன்பாக அவற்றைப் படித்தவர்கள் பட்டியலில் ஆனைமுத்துவின் பெயரையும் பார்த்திருக் கிறேன்” என்று வியந்து கூறினார்.
பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகுத்தது ஆனைமுத்துவின் ஒரு முதன்மையான பங்களிப்பு என்றால் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்காகத் தனி ஒருவராகப் போராடியது இன்னொரு முக்கிய பங்களிப்பு.
காகா கலேல்கர் தலைமையில், நேரு முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தார். 1955-இல் அதன் அறிக்கை அவரிடம் அளிக்கப்பட்டது. அதை அவர் அமல்படுத்தவில்லை. இது இந்தியா முழுக்க இருக்கும் பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான வாய்ப்பு இருந்தும் மத்திய அரசு செய்யாதிருக்கிறது என்பதை உணர்ந்த ஆனைமுத்து, 1978இல் எந்தப் பின்புலமும் இல்லாத சாதாரணமாக மூன்று தோழர்களை மட்டும் கூட்டிக்கொண்டு டெல்லிக்குச் சென்றார். அங்கே குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலரை இதற்காகச் சந்தித்தார். பீகார் மக்களவை உறுப்பினர் இராம் அவதேஷ் சிங்கின் நட்பு கிடைக்க, அவருடன் இணைந்து வடஇந்தியாவில் இதற்காக ஓர் அமைப்பை உருவாக்கிப் பாடுபட்டார்.
அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய். 1977-இல் ஜனதா கட்சித் தேர்தல் அறிக்கையில் “காகா கலேல்கர் அறிக்கையை அமல்படுத்துவோம்” எனக் குறிப்பிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மொரார்ஜி தேசாயை நேரில் சந்தித்த ஆனைமுத்து, சேலம் சித்தையன், இராம் அவதேஷ் சிங் ஆகியோர் இந்த ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரினர்.
மொரார்ஜி தேசாயோ “ஓர் ஆணையத்துக்குப் பத்து ஆண்டுகள்தான் காலம் உண்டு” என்று புறம்தள்ள முயன்றார். “1955-இல் கொடுக்கப்பட்ட பரிந்துரைகள் 1978-இல் காலாவதி ஆகிவிட்டன” என்று அவர் சொல்ல, “அப்படியெனில், ஏன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டீர்கள்?” என வாதிட்டனர்.
இதைத் தொடர்ந்து பி.பி. மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 1979-இல் உருவாக்கப்பட்டது! இந்த ஆணையம் உருவாக்கப்படு வதற்கு முன்பே மண்டலை ஆனைமுத்து சந்தித்து, பிற்படுத் தப்பட்டோர் இடஒதுக்கீடு குறித்து வலியுறுத்தி இருந்தார்!
1980-இல் இந்த ஆணையம் அறிக்கை கொடுத்தாலும், பின்வந்த காங்கிரஸ் அரசுகள் அதைக் கிடப்பில் போட்டன. 1990-இல் பிரதமர் வி.பி. சிங் மண்டல் ஆணையப் பரிந்துரைகளின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுப் பணிகளில் 27 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்த ஆணை பிறப்பித்தார். இதற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் ஆனைமுத்து தன் நேரத்தை வடஇந்தியாவில் இதற்கான அழுத்தம் கொடுக்கும் பணிகளிலேயே செலவிட்டுக் கொண்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியத் தகவல்! தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடு இருந்த இடஒதுக்கீடு 50 விழுக்காடாக எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் உயர்த்தப்படுவதற்கும் முக்கியக் காரண மாக இருந்தவர் ஆனைமுத்து!
கட்சிப்பணி மற்றும் ‘சிந்தனையாளன்’ இதழுக்காக பல இரவுகள் அவருடன் அலுவலகத்தில் தங்கிப் பணிபுரிந்துள்ளேன். விடியற்காலை இரண்டு மணிமுதல் காலை ஏழு மணிவரை கட்டுரைகள் எழுதுவார். பிறகு அவற்றை உரக்கப் படிப்பார்! “காதும் கேட்க வேண்டும் தோழர், அப்போதுதான் அதில் தவறுகள் இருந்தால் தெரியும்!” என்பார்.
திட்டமிட்டு இயக்க மாநாடுகள் பல நாட்கள் நடத்துவார்! மாநாடு முடிந்ததும் சில நாட்கள் ஓய்வெடுக்கலாம் என நினைக்கமாட்டார். மறுநாள் காலையே வேறு பணியைத் திட்டமிட்டு வைத்திருப்பார்! கிளம்பிப் போய்விடுவார்! சமூகத் தொண்டையே முழுநேரப் பணியாக வைத்திருந்த அவருக்கு இயற்கையால் மட்டுமே ஓய்வைத் தர முடிந்துள்ளது!
- க.முகிலன்
(கட்டுரை : பெரியாரியப் பேரறிஞர் தோழர் வே. ஆனைமுத்து நினைவலைகள், மே 2021)