இலக்கியம் கனம்கூடிய நெருக்கடிகளின் அழுத்தத்தி லிருந்து விட்டு விடுதலையாகத் துடிக்கும் மனித மனத்தின் வெளிப்பாடாக மட்டுமன்றி ஈரம் உலராத நேற்றைய, அதற்கும் முந்தைய நாட்களின் புனை வாகவும் அமைகிறது.

“அக, புறத் திணைகளில் உள்ள முரண்களும் சமூகத்தில் நான் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளுமே என் சிந்தனையைக் கூர்மையாக்கின. விளிம்புநிலை மக்களின் ஓலத்திலிருந்தும், நிலம் சார்ந்த சிந்தனையி லிருந்துமே என் எழுத்து கர்ப்பம் தரிக்கிறது’’ என்று கூறும் பூர்ணாவின் “வைக்கோல் கன்று பசுவானது” எனும் ஆறாவது கவிதைத் தொகுப்பு வெறுமை வெளியிலிருந்து தன்னை மீட்டெடுக்கும் ஓர் உயிரின் வேட்கையாகவும் தன்னைச் சுற்றியிருக்கும் சிறையை உடைத்து வெளிவரத் துடிக்கும் மௌனத்தின் வெடிப் பாகவும் அமைகிறது.

இயற்கையாய் மரணித்துவிட்ட அல்லது இயற்கை மரணம் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கும் கன்றின் தோல் உரித்து வைக்கோல் திணித்து வைக்கப் பட்ட வைக்கோல் கன்றினை கறவை மாட்டின் மடி சுரப்பிற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் அதீத அறிவாளிகள் போல அதிகார வர்க்கமும் தங்கள் தேவை களுக்கும் வசதிகளுக்கும் சோதனைக் களங்களுக்கும்  விரும்பியபடியெல்லாம் பயன்படுத்திக்கொள்ளும் வைக்கோல் கன்றுகளாகவே மக்களைக் கையாளுகின்றனர். உணர்வுகளும் உரிமைகளும் கனவுகளும் களவாடப் பட்டு நடைபிணங்களாக நடத்தப்படும் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய  நியாயங்கள் மறுக்கப்படும் சூழலில் தாய்மை உணர்வோடு எழுப்பும் எதிர்க்குரல் இத் தொகுப்பு முழுதும் ஒலிப்பதன் குறியீடாகத் தலைப்பு அமைந்துள்ளது.

வழக்கமானத் திட்டமிடல்கள், எதிர்பார்ப்புகளைத் தகர்த்தெறிந்து நடந்தேறுகிற நிகழ்வுகளால் அகத்திலும் புறத்திலுமாய் ஏற்படும் அதிர்வுகளை மிக நுட்பமாக சொற்கூட்டங்கள் வழியே வாசகர்களுக்குக் கடத்தி விடுகிறார். இயற்கையிலிருந்து பிரித்தறிய முடியாத சங்கக் கவிதை மரபினைத் தனது அடையாளமாகப் பெற்றிருக்கும் கவிஞர் பூர்ணா உடலில், உள்ளத்தில் படிந்துகிடக்கும் நிலத்தின் சாயலை கவிதைகளில் பிரதிபலிக்கிறார்.

ஆதிகாலம் தொட்டு தம் இனத்தின் வாழ்வாயிருந்த புழங்கு பொருள்கள் எல்லாமும் கண்காட்சியில் வரிசைப்படுத்தப்பட்டிருப்பது கண்டு கடந்து செல்ல மனமில்லாமல் திகைத்து நிற்பதும், எவருக்கும் தெரியாமல் கண்ணீரைத் துடைத்துக்கொள்வதுமாய் சுயம் தொலைத்து நிற்கும் விவசாயியைக் காட்டுகிறார். வெம்பாடுபட்டு உழைத்தபோதெல்லாம் விவசாயம் செழிப்பாகவே இருந்தது. விவசாயத்திற்கென உபகரணங்கள் எல்லாம் கண்டுபிடித்தபின் விவசாய  நிலமே இல்லாமல் போனது தான் முரண். “இனி ஒருபோதும்/ நாம் கொண்டாடப் போவதில்லை உழவர்களை / புலம்பெயர்ந்த நிலங்கள் / தொட்டிச்செடிகளில் வாழப்பழகிக்கொண்டன.’’

பெருவெள்ளமாய்ப் பாய்ந்து போகும் அரசியலில் அடித்துச் செல்லப்பட்டு நீர் வடிந்தபின் காய்ந்து கிடக்கும் பாழ்நிலமென சாமானியர்களின் வாழ்க்கை ஓய்ந்து கிடப்பது “மீன்களைச் சுவைக்க / மீன் குழம்பு வைக்க / எங்களுக்குத் தெரியும் / மீன் அரசியல் சமைக்க / அவர்களுக்குத்தான் தெரியும்” எனும்போதும் “கூலின்னு சொல்லுங்கடா என்று / தடித்தச் சொல்லொன்று / விழுந்தது / முதலாளியைத்தான் / அவர்களால் ஒன்றும் செய்ய முடியாதே’’ எனும் வரிகளிலும் நெடியடிக்கிறது.

உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்நாட்களை உபரியாய் வாழ்ந்து கொள்ளும் முதலாளி வர்க்கத்தைப் பற்றி சிந்திக்காமல் இளம் சமுதாயம் கட்டற்று அலைந்து தடமிழந்து போவதைச் சுட்டும்போது Òஅடுப்பு எரிக்க வக்கற்றவன் / பேருந்தை எரிக்கிறானாம் / தீக்குளிப் பானாம் / அவனிடம் சொல் / பலமுறை இல்லையென்று / திருப்பி அனுப்பியவனிடம் / கால்கடுக்க வயதான தாய் / வாங்கிய மண்ணெண்ணெய்Ó என்று வார்த்தைகள் தீப்பிடித்து எரிகின்றன.

இப்படி வெறுமை, வறுமை, அடிமை என வெவ்வேறு வடிவிலான சிறைக்கம்பிகள் தகர்க்கும் சொல்லமர்க்களத்தைத் தாண்டி நேயம் பேசும்போது கவிதைகள் சில்லிடுகின்றன. சொல்தானியங்களை சுமந்தலையும் இந்தப் பயணி கதகதப்பாக தேநீர் அருந்தும் போதும் இதயத்தைத் தாண்டி பசித்த கன்றுக்குட்டியின் கதறலைக் கேட்டு உறைகிறார். பிற உயிர்களின் தேவையறிந்து நல்கும் ஈகையே இறைவனுக்கு அளிக்கும் காணிக்கையாகிறது. கோயிலுக்குள் இருப்பது உண்டியல் அல்ல பிச்சைப் பாத்திரம். கோயிலுக்கு வெளியில் தோல் போர்த்திய எலும்பு கையில் இருப்பது பிச்சைப்பாத்திரம் அல்ல உண்டியல் என்று பக்தியை, காணிக்கையைப் புரிதலுக்கு உட்படுத்துகிறார்.

மழைபிடித்து விளையாடிய பால்ய நினைவுகளும், வீடுமுழுதும் முளைவிட்டிருக்கும் குழந்தையின் சொற்களை இனம் கண்டுகொள்வதும், பண்டிகை முடிந்த மறுநாள் வெடிக்காத வெடிகளைத் தேடும் துப்புரவாளனுக்காக இரங்குவதும், மனம்பிறழ்ந்து திரிபவர்களிடம் தெய்வச்சாயலைத் தரிசிப்பதும், ஆகாயத்தோட்டி காக்கையின் மரணத்திற்கு மௌன அஞ்சலி செலுத்த வேண்டுவதும், கூண்டுக்குள் தான் இட்டிருந்த முட்டையை வெறித்துப் பார்க்கும் பறவையின் ஒலிக்குறிப்புகளை ஒப்பாரியாய் மொழி பெயர்த்துக்கொள்வதும், காற்று தீண்டும்போதெல்லாம் அசையும் நாணல் மீன்கொத்தியை அழைப்பதாய் புனைந்து கொள்வதும், மிட்டாய் தின்னும் குழந்தையின் வாயில் ஒழுகும் எச்சிலில் துயரங்களைச் சலவைசெய்து கொள்வதும், உப்பில் உறைந்திருக்கும் கடலைச் சிறிது கிள்ளித் தூவுவதுமாய்த் தொகுப்பின் பக்கங்கள் எங்கும் அழகும் அன்பும் ததும்பும் சொற்கள் உலவுகின்றன.

சிரிக்கும் தொட்டிப் பூச்செடி, குறுநகையுடன் தூங்கும் மழலை, தாய் முதுகிலமர்ந்திருக்கும் கோழிக் குஞ்சு, ஆட்டின் வயிற்றில் தலைசாய்ந்திருக்கும் குட்டி ஆகியவை பாசாங்கற்ற பாசத்தின் குறியீடுகளாகும்.

காவல் தெய்வங்களும் காப்பாற்றும் தெய்வங்களும் எங்கெங்கும் இருந்தபோதும் கொலை, கொள்ளைகள் நடப்பதாக விசனப்படும் கவிஞர் “அது ஒன்றும் செய்யாது / பொய்க்குதிரை / தொட்டுப்பார் என்று / பலவகையில் மெய்ப்பித்த தந்தை / அய்யனாரும் ஒன்றும் செய்யாது / என்பதையும் சொல்லியிருக்கலாம்’’ என்று கட்டுடைக்கிறார்.

இரத்தம் வழிந்தோட கடித்துக்கொண்ட நாய்கள் பின்னொரு நாளில் குப்பைத்தொட்டியில் உணவைத் தேடிக்கொண்டிருப்பதைக் காணும் கவிஞர் “விளையாடப் போய் காலில் இரத்தம் சொட்ட / வீடு வந்த மகன் / ஏப்பா பெரியய்யா /பாதை மேல முள்ளை போட்டு வச்சுருக்கு / என்றான்.’’

எனும்போது மிருகத்திடம் தோற்றுவிட்ட நாணய மற்ற மனிதத்தின் இறுமாப்பினை நொறுக்குகிறார்.

உடலில் ஏற்படுத்திய ஐந்து காயங்களினும் குற்றவாளி என்று நாவால் வீசப்பட்ட ஆறாவது காயம்தான் இயேசுவின் உயிரைக் குடித்தது. அதுபோல நிரூபணமற்ற குற்றச்சாட்டுகளில் மரித்துப்போகும் உயிரின் ஆறாத ரணங்களில் கசியும்  குருதியின் பிசுபிசுப்பினைக் காட்சிப்படுத்தும்போதும், நசிந்து கொண்டிருக்கும் சூழலியலைக் கவனப்படுத்தும்போதும் மனம் பதைக்கிறது.

வாழ்க்கைப் பரப்பில் விழுந்து கிடக்கும் முடிச்சு களின் இறுக்கமறிந்து தளர்த்தும் கணங்கள் பூர்ணா என்ற ஜோ.ஏசுதாஸ் எழுதுகோலில் கவிதை களாக மலர்வது இயல்பாக நிகழ்கிறது.  கழிவிரக்கமாய்ச் சுருங்கிவிடாக் கவிதைகளில் கலகக்குரல் ஓங்கி ஒலிக்கின்றது. இசங்களுக்குள் பொருத்திவைக்க முயலாத கவிதைகள் ஆதலால் இசங்களாய் நீள்கின்றன.

வைக்கோல் கன்று பசுவானது

பூர்ணா

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41- பி, சிட்கோ இண்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட்

அம்பத்தூர், சென்னை - 600 098.

தொலைபேசி எண்: 044 - 26359906

` 65.00