தமிழில் கோட்பாட்டு ஆய்வாளர்களில் முக்கியமானவர் தமிழவன். ‘அமைப்பியல்’ என்ற கோட்பாட்டைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். இவர் புனைகதைகளிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார். தனித்துவமான நாவல் பிரதிகளைத் தமிழுக்கு அளித்திருக்கிறார். ‘தமிழவன் கதைகள் (1992)’, ‘இரட்டைச் சொற்கள் (2011)’, ‘நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் (2015)’, ‘கருஞ்சிவப்பு ஈசல்கள் (2022)’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. தற்போதுவரை ஏழு நாவல்களும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் இவரது புனைவிலக்கியப் பங்களிப்புகள். ஆனாலும் தமிழவன் கோட்பாட்டு ஆய்வாளராகவும் அ-புனைவு எழுத்தாளராகவுமே கருதப்படுகிறார். அ-புனைவு சார்ந்த தமிழவனின் நூல்கள், இவரைப் புனைகதையாளர் என்ற மையத்திலிருந்து தகர்த்துக் கொண்டே இருக்கின்றன. சக விமர்சகர்களும் படைப்பாளிகளும்கூட இவரது அ-புனைவு எழுத்துகளுக்கே கூடுதல் கவனம் கொடுத்திருக்கின்றனர். எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்த ‘நூறு சிறந்த சிறுகதைகள்’ என்ற தொகுப்பில் தமிழவன் கதைகளுக்கு இடமளிக்கப்படவில்லை. ஆனால் வீ.அரசு தொகுத்துள்ள ‘இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு’ என்ற தொகுப்பில் ‘காரல் மார்க்சும் தாணு ஆசாரியும்’ என்ற இவரது சிறுகதை இடம் பெற்றுள்ளது. இரு தொகுப்பாளருக்குமுள்ள அரசியலைப் புரிந்து கொள்ள இயல்கிறது. இவரது புனைவுகளை விமர்சகர்கள் வாசித்த அளவுக்குக்கூட படைப்பாளிகள் வாசிக்கவில்லை என்று கருத இடமிருக்கிறது. இவரது கதைகளின் ஒட்டுமொத்தத் தன்மை குறித்தும் புரிந்து கொள்வதிலுள்ள சிக்கல்கள் குறித்தும் இக்கட்டுரை உரையாடுகிறது.

தமிழில் புனைவு, அ-புனைவு என இரு தளங்களிலுமே பல படைப்பாளர்கள் செயல்பட்டுள்ளனர். அந்த வரிசையில் தமிழவனையும் நிறுத்த வேண்டும். மரபான கதை புனையும் தன்மை­யிலிருந்து இவர் புனைவுகள் வேறுபடுகின்றன. அதனாலாவது இவரது புனைவுகள் தொடர்ந்து வாசிக்கப்பட வேண்டும்; விமர்சிக்கப்பட வேண்டும். நவீன இலக்கியத்தைப் படிப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு; அதில், இவரைப்போன்று கோட்பாடு, தத்துவம் சார்ந்த புனைவெழுத்தாளர்களது படைப்புகளை வாசிப்பவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். வெகுசன வாசிப்பில் தமிழவனின் கதைகளைப் புரிந்து கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளன. ஈரா­யிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்கச் செய்யுட்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பல சொற்கள் தற்போது அந்நியமாகி விட்டன. அதனைப் புரிந்துகொள்ள உரை தேவைப்படுகிறது. உரையின் உதவி இல்லாமல் சங்க கவிதைகளை வாசிப்பவர்களுக்குப் புகைமூட்டமான ஒரு பொருள் பிடிபடுவதை உணரலாம். அதனைப் போன்றதுதான் தமிழவன் கதைகளும்.tamizhavanதமிழவன் மரபை மீளுருவாக்கம் செய்து புனைவுகளை எழுதுகிறார்; கடந்த கால வரலாற்றின் துணுக்குகளைத் தம் நினைவுகளினூடாகப் கதைகளாக்க முயன்றிருக்கிறார். இந்தப் புரிதல் தமிழவனின் கதைகளை அணுக உதவும் என்று கருதுகிறேன். மேலும், தன்னிருப்பை ஒடுக்கிக்கொண்டு இலக்கியத்தின் புதிய முயற்சிகளுக்குத் தமிழ்ச் சூழலில் இடத்தை உருவாக்கிக் கொடுத்தவர் தமிழவன் எனலாம். அவரால் மிக எளிமையாகவும் வழமையான கதைசொல்லிகளைப் போலவும் எழுத முடியும். அதனூடாகத் தம் புனைவுகளுக்குத் தேவையான அங்கீகாரத்தைப் பெற்றிருக்க முடியும். ஆனால் தமிழவனால் அப்படிச் செய்ய முடியாது. அதனால்தான் தமிழ் இலக்கியத்தின் மாற்றுக் குரலாக இவரது படைப்புகள் அறிஞர்களால் மதிப்பிடப்படுகின்றன. தம் புனைவுகளின் வழியாக உலக இலக்கியத்தின் வாசலைத் திறந்துவிட நினைக்கிறார். இதன் காரணமாகவே‘உலகத் தரத்தில் தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற அறைகூவலை இவரால் விடமுடிகிறது. முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழவன் சிறுகதைகளை எழுதி வருகிறார். இவர் எழுதியது மிகக் குறைவுதான். தமிழவனின் நூற்பட்டியலைப் பார்க்கும்போது இவரே அ-புனைவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பது விளங்கும். இவர் புனைவில் செய்ததெல்லாம் சோதனை முயற்சிகள்தாம். இவரது புனைவுகளின் முக்கியத்துவம் தற்போது உணரப்படாமல் இருக்கலாம்; யதார்த்தவாதச் சிறுகதைகளின்மீது சலிப்புற்று மாய யதார்த்தப் புனைவுகளுக்குத் தமிழ்ச் சமூகம் திரும்பும்போது இவரது கதைகளின் செல்வாக்கு கூடும்; மீள் வாசிப்புக்கு உட்படுத்தப்படும்.

நவீன கோட்பாடுகளில் ஆர்வமும் மொழி மீதான கூர்ந்த அவதானிப்பும் இருப்பவர்களுக்குத் தமிழவன் கதைகள் முக்கியமானதாகப் படலாம். பிறர், இவர் கதைகளை வாசிக்காமலேயே இவரது கதைகள் குறித்துத் தமிழ்ச் சூழலில் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள கற்பிதங்களின் வழியாகக் கடந்து விடுகின்றனர். நவீன கவிதைகளைப் புரிந்துகொள்ளலுக்குக் கொடுக்கும் மெனக்கெடலை இவரது கதைகளுக்கும் கொடுக்க வேண்டும். தமிழவன் தம் கதைகளில் சில குறியீடுகளை உருவாக்கிக் கொள்கிறார். அந்தக் குறியீடுகள் குறித்துத் தம் நேர்காணல்களில் விரிவாகவே பேசியிருக்கிறார். இவரது கதைகள் அகவயத் தன்மை வாய்ந்தவை. தமிழவனின் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ச்சியாக அவதானிப்பவர்களுக்கு இவர் கதைகள் அணுக்கமாக இருக்கும். தமிழ்த் தேசியம், மார்க்சியம், இந்தி எதிர்ப்பு, காலனிய கால நினைவுகள், ஈழப்போர் ஆகியன பல புனைவுகளில் குறியீடுகளாகப் பதிவாகி­யிருக்கின்றன. ஈழப்போரின் உச்சம் இவரது கதைகளை வெகுவாக பாதித்திருக்கிறது எனலாம். வார்ஸா நிலப்பரப்பு குறித்து வெளிப்படையாகவும் நிலக்குறி­யீடாக்கியும் பல புனைவுகளை எழுதியிருக்கிறார். இத்தகைய குறிப்பான்கள் அனைத்தும் இவரது புனைவுகளைப் புரிந்துகொள்ள உதவும் ஊடிழைகள். இந்த நுட்பத்தை வாசகர்கள் கண்டடையும்போது ஒவ்வொரு கதையும் அவர்களது அரசியலுக்கேற்ப மனத்திரையில் புரளுவதை உணரலாம்.

தமிழவன் சிறுகதைகள் எதற்கும் மையமும் இல்லை; கதையும் இல்லை. வெவ்வேறு உதிரி நிகழ்வுகளின் தொகுப்புகள்தாம் இவரது கதைகள். இதனை இவரது கதைகளின் பொதுத்தன்மையாகக் கூறலாம். கதைகளில் வரும் எந்தக் கதாபாத்திரத்தையும் அக்கதையின் மையமாகக் கருத முடியாது. அதேபோன்று கதையையும் வரையறுத்துக் கூற இயலாது. ‘சிறுகதை என்பது ஒரேயொரு பாத்திரத்தின் நடவடிக்கைகளைப் பற்றியோ, ஒரு தனிச்சம் பவத்தைப் பற்றியோ அல்லது ஒரு தனி உணர்ச்சிதரும் விளைவையோ எடுத்துக் கூறும் இலக்கியவடிவம்’ என்று திறனாய்வாளர் பிராண்டர் மாத்தியூஸ் கூறியுள்ளார். ஆனால் மையம் சார்ந்த வாசிப்பைப் பின்நவீனத்துவம் முழுமையாகப் புறக்கணிக்கிறது.தமிழவன் கதைகளையும் இந்தக் கோட்பாட்டின் அளவீடுகளுக்குள் வைத்துதான் மதிப்பிட வேண்டும். வாசகன் ஒரு கதாபாத்திரத்தை மையம் என்று கருதுவது அவனது வாசிப்பின் சுதந்திரத்துக்கு உட்பட்டது. வேறொரு வாசகர் அந்தக் கதையில் மையமே இல்லை என்று நிறுவுவதற்கும் பிரதி இடமளிக்கும். பிரதியின் மையத்தைச் சிதைத்தலை ஓர் உத்தியாகவே தமிழவன் செய்து பார்த்திருக்கிறார்.

படைப்பிற்கும் படைப்பாளிக்குமான உறவைத் துண்டித்தலில் அமைப்பியல் கோட்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இக்கோட்பாடு தனக்கு முன்பிருந்த மரபிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.இதனைத் தமிழவனின் கதைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஏற்கனவே சொற்களுக்கு இருக்கக்கூடிய அர்த்தத்தைத்தான் தமிழவன் தம் கதைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். அந்த அர்த்தத்தை நோக்கி வாசகன் நகர வேண்டும். ‘எதையும் தொடர்ச்சியாக யோசிப்பதுதான் இந்தச் சமூகத்தில் நடந்துள்ள விபரீதங்களுக்கான அடிப்படைக் காரணம்’ என்று (கருஞ்சிவப்பு ஈசல்கள்) ஒரு கதையில் கதைசொல்லி பேசுகிறார். இவரது கதைகளைப் புரிந்து கொள்ள தடையாக இருப்பதும் இதுதான். முழுமை என்கிற கருத்தோட்டத்துடன் தமிழவன் கதைகள் முரண்படுகின்றன. முழுமை என்பது ஒரு கற்பிதம். வெவ்வேறு சிதைவுகளின் ஒருங்கிணைவுதான் முழுமை. இதனைக் கதைகளினூடாக நிறுவுகிறார் தமிழவன்.

தமிழவன் சிறுகதைகளின் தன்மைகளைப் புரிந்துகொள்ள ‘கருஞ்சிவப்பு ஈசல்கள்’ என்ற கதையை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இக்கதை, வெவ்வேறு நினைவுகளின் தொகுப்பாகவே எழுதப்பட்டிருக்கிறது. கதையின் கதாபாத்திரங்கள் எவற்றுக்கும் பெயர்களில்லை. அவன், அவள் என்ற படர்க்கை விளிகள்தாம். கதைக்குத் தொடக்கமும் முடிவுமில்லை. எந்த இடத்தில் தொடங்கியும் இக்கதையை வாசிக்கலாம். பிரதியில் அதற்கு இடமிருக்கிறது. இக்கதையின் ஆண் கதாபாத்திரமொன்று நினைத்துப் பார்க்கும் சம்பவங்கள் உதிரி உதிரியாக இடம்பெற்றுள்ளன. யதார்த்தமும் நினைவும் ஒன்றுக்கொன்று ஊடாடிக் கொள்கின்றன. கதையில் காட்டப்படும் நிலமும் குறிப்புகளாகவே உள்ளன. மொழி தெரியாத நகரம்; ட்ராம் வண்டி. இவைதான் நிலத்திற்கான குறிப்புகள். ஆங்காங்கே பிரதியில் வெளிப்படும் இத்தகைய குறிப்புகளைக் கொண்டே முழு கதையை வாசிப்பவர்கள் கற்பிதம் செய்துகொள்ள வேண்டும். காலம் சார்ந்தும் இக்கதையில் குறிப்புகள் உள்ளன. ‘பக்கத்துத் தீவில் தனது மொழிபேசும் மக்களுக்கு ஒரு தனித்தேசம் வேண்டுமென்று கேட்ட பிரபாகரனைக் கொன்றார்கள்’ என்றொரு இடம் வருகிறது. இது இக்கதைக்குத் தொடர்பில்லாதது. இந்தக் கதைக்கும் இந்த வரிக்கும் தொடர்பை ஏற்படுத்துவது ‘ஆல்பிரட் துரையப்பா’ என்ற பெயர். இவர் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர். இந்த வரலாறு தெரியவில்லையெனில் புனைவு வாசகருக்கு அந்நியப்பட்டு நிற்கும். தமிழவனின் புனைவுகள் கடந்த காலத்தின் வரலாற்றைக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பேசுகின்றன.

இந்தக் கதையில் இடம்பெற்றுள்ள ஆண் கதாபாத்திரம்பற்றி ஓரளவு குறிப்புகள் உள்ளன. அவன் நிலம் பெயர்ந்ததற்கான காரணம் சொல்லப்படுகிறது. ஆனால் அவனுடன் தங்கியிருக்கும் பெண் பற்றிய விவரங்களைப் புனைவு பகிர்ந்து கொள்ளவில்லை. அவன் அழைத்தவுடன் அவள் வந்துவிடுகிறாள். ‘திரும்ப இந்த ஊருக்கு வரக்கூடாது’ என்கிறாள். அவளைப் பற்றிப் புனைவு உருவாக்கியிருக்கும் மௌனம் அவனது வாழ்க்கையைவிடப் புதிர் நிரம்பியது. இருவருக்குள்ளும் பிடிப்பும் இல்லை; ஈர்ப்பும் இல்லை. ஆனால் இணைந்திருக்கிறார்கள். இதற்குரிய காரணத்தையெல்லாம் வாசிப்பவர்கள்தாம் அனுமானித்துக்கொள்ள வேண்டும். அதற்கான குறிப்புகள் பிரதியில் உண்டு. இக்கதையில் பல நிகழ்வுகளுக்குத் தொடர்ச்சி இல்லை. ‘தலைவர் ஜெயித்து விட்டார். இனி ஏழைகள் என்று இந்த நாட்டில் யாரும் இருக்க மாட்டார்கள்’ என்கிறான் ஒருவன். அவன் யார்; அவன் குறிப்பிடும் தலைவர் யார் என்பதெல்லாம் அனுமானங்கள். ‘கருஞ்சிவப்பு ஈசல்கள் அவளுடைய இதயப் பூவிலிருந்து பறந்தன’ என்ற படிமத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் தமிழவன். மரபு மற்றும் நவீனக் கவிதைகளுக்குரிய அத்தனை உத்திகளையும் தமிழவன் தம் புனைவுகளில் பயன்படுத்தியிருக்கிறார்.

தமிழில் வெகுசன இதழ்களின் ஆதிக்கம் இன்றுவரை தொடர்கிறது. இவ்விதழ்கள் பெண்களை முன்னிறுத்தியே தங்களுக்கான உள்ளடக்கங்களை அமைத்துக்கொண்டன. அவர்களை அந்த அளவிலேயே வைத்துக்கொள்ள இதழ்களும் விரும்பின. இதனால் காத்திரமான வாசிப்பு மரபு தமிழில் காலதாமதமாகவே உருவானது. சிறுபத்திரிகைகள்தாம் இந்தப் போக்கை மாற்ற முயன்றன. ஆனாலும் இம்முயற்சி முழுவெற்றியில் முடிந்ததாகக் கூற முடியவில்லை. மரபிலிருந்தும் மரபான வாசிப்பிலிருந்தும் தமிழ் வாசகர்களை விடுவிப்பது சவாலாகவே இருக்கிறது. வெகுசன வாசிப்புக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தவர்களுக்குத் தமிழவன் போன்றவர்களின் கதைகள் பெரிய தொந்தரவாக இருந்ததாகவும் கருதலாம். நவீன இலக்கியப் புரிதல் இருப்பவர்களுக்குக்கூட தமிழவன் கதைகளை வாசிப்பதிலும் விமர்சிப்பதிலும் ஒரு தயக்கம் இருப்பதாகவே நினைக்கிறேன்.

கதைசொல்லியின் கூற்றுமுறையிலேயே தமிழவன் கதைகளை எழுதியுள்ளார். தொடக்கம், வளர்ச்சி, திருப்பம், வீழ்ச்சி, முடிவு போன்ற வழமையான சிறுகதைகளுக்குரிய தன்மைகள் இவர் கதைகளில் இல்லை. அனுமானிக்க முடியாத அளவுக்கு இவரது புனைவுகள் உள்மடிப்புகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு உரையாடலுக்குப் பின்னும் பெரிய மௌனத்தைப் பிரதி ஏற்படுத்துகிறது. ‘எந்த நாணயமும் வாங்காமல் குமார் எழுந்து புறப்பட்டான்’ என்றொரு கதை (பழைய நாணய விற்பனை) முடிகிறது. அவன் ஏன் எழுந்துபோனான் என்பதற்கான விவரணைகள் பிரதிக்குள் இல்லை. ஆனால் சில குறிப்பான்கள் உள்ளன. இந்தக் குறிப்பான்களைக் கொண்டுதான் வாசகர்கள் பிரதியின் வெளியை நிரப்பிக்கொள்ள வேண்டும். இவரது கதைகள் ஒவ்வொரு வாசிப்பிலும் தன்னைப் புதுப்பித்துக் கொள்வது இத்தகைய குறிப்பான்கள் மூலம்தான். ஏனெனில், காலம் குறிப்பான்களுக்கு ஒரே அர்த்தத்தைத் தருவதில்லை. ஒவ்வொரு சிறுகதையும் ஒரு கதையைக் கூறுவதைப் போன்ற பாவனையை உண்டாக்கினாலும் அது உண்மையிலேயே கதையல்ல; அதுவொரு ஒழுங்கற்ற வரைபடம்; அல்லது நவீன ஓவியத்தின் வண்ணத் தெறிப்புகள். நவீன ஓவியங்களில் அதனைப் புரிந்து கொள்வதற்கான கூறுகள் ஆங்காங்கே தென்படும். அந்தக் கூறுகளில் இருந்து பார்வையாளர்கள் முழுமையை தருவித்துக் கொள்கின்றனர். அந்த முழுமைக்கும் படைப்பாளனுக்கும் தொடர்பில்லை. இப்படித்தான் தமிழவனின் சிறுகதைகளைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் வாசகன் பங்கேற்பதற்கான வெளியைத் தமிழவன் உருவாக்கி வைத்திருக்கிறார். ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு வெவ்வேறு அர்த்தங்களைத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கும் என்று பின் அமைப்பியல் கூறுகிறது. இவரது கதைகள் இதற்குத் தகுதியானவையாகவே உள்ளன. தமிழவனின் சிறுகதைகளை வாசிக்க விரும்புபவர்கள் அவரது ‘நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்’ என்ற குறுங்கதைகள் அடங்கிய தொகுப்பிலிருந்து தொடங்கலாம் என்பது என் பரிந்துரை. வெகுசன இதழ்களில் வாசகக் கிளர்ச்சிக்காக எழுதப்பட்ட குறுங்கதைகளைக் காத்திரமான வடிவமாக மாற்றியதில் தமிழவனுக்கும் பங்கிருக்கிறது. இவரது சிறுகதைகள் வாசிப்பில் ஏற்படுத்தும் விகசிப்பைக் குறுங்கதைகளும் ஏற்படுத்துகின்றன. நவீன கவிதைகளுக்குரிய அத்தனை உள்ளாழங்களும் இக்கதைகளும் கொண்டிருக்கின்றன. சமயம், தத்துவம், கோட்பாடு, வரலாறு என ஒவ்வொரு கதையும் உரையாடுவதற்கான வெவ்வேறு உருவங்களைக் கொண்டவை.

‘உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?’ என்ற குறுங்கதை ஏற்படுத்தும் திறப்பு முக்கியமானது. இக்கதை தொன்மம் குறித்த கதையாடலை மறுபரிசீலனை செய்திருக்கிறது. தமிழரின் தொன்மம் என்பது யாருடைய தொன்மம்; மூன்று தலைமுறைக்குமேல் வரலாற்றுப் பிரக்ஞையில்லாத நாம்தான் ஈரா­யிரம் ஆண்டுகால தொன்மத்துக்கு உரியவர்கள் என்று உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியுடன் இக்கதை முடிகிறது.‘நீ புரிந்து கொள்வாய் இறுதியாக’ என்ற கதையும் இருநாட்டுக் கலாச்சாரத்தின் இடைவெளிகள்மீது ஒரு வாசிப்பை நிகழ்த்தியிருக்கிறது. இக்கதையின் ராஜாவுக்கும் அன்னாவுக்கும் இடையில் இரு நிலத்தின் பண்பாட்டு வேர்கள் இடையீடு செய்கின்றன. இருவருக்குமிடையே என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை வாசிப்பவர்கள்தாம் அனுமானித்துக்கொள்ள வேண்டும். அதாவது அந்தப் பிரதியைத் தங்கள் பிரதியாக வாசித்துக் கொள்ள வேண்டும். ‘மூவரும் மௌனமானார்கள்’ என்ற கதையின் அர்த்தத்தையும் வாசகர்கள்தாம் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். இப்புனைவிற்குள் செயல்படும் ஒழுங்கின்மை அர்த்தத்தைத் தள்ளிப் போடுகிறது. கணவன் - மனைவி, குழந்தை, நண்பர் என்ற நான்கு கதாபாத்திரங்களின் அசைவுகளும் வெவ்வேறு புரிதலுக்கு அழைத்துச் செல்கின்றன. மெய்யப்பனும் செல்வராஜும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். மெய்யப்பன் மனைவி ஸ்நேகா. இவளும் அதே அலுவலகத்தில் பணிபுரிய வாய்ப்பிருக்கிறது; செல்வராஜுக்கும் இவளுக்கும் இடையில் தொடர்பிருக்கலாம் போன்ற அனுமானங்களைப் பிரதி ஏற்படுத்துகிறது. பிரதி - வாசகன் - வாசிப்பு என்ற மூன்றுமே பின் அமைப்பியலுக்கு முக்கியமானவை. தமிழவனின் பல சிறுகதைகள் இப்படித்தான் இருக்கின்றன.

தமிழவன் தம் புனைவுகளில் பழைய தொன்மங்கள், நவீனக் கோட்பாடுகள், தத்துவங்கள், வரலாறுகளைத் தொடர்ந்து காலனிய ஆட்சியில் நிகழ்ந்ததாகச் சில கதைகளை எழுதியிருக்கிறார். ‘மணிக்கூண்டுகளுக்கிடையில் நடந்த ஒரு வழக்கு’, ‘கைகள் வெட்டப்பட்ட அனார்க்கிஸ்ட்’, ‘தூத்துக்குடியில் ஒரு கொலை’ உள்ளிட்ட கதைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஈழப்போரின் துயரத்தையும் வெவ்வேறு பிரதிகளாக எழுதிப் பார்த்திருக்கிறார். உதிரி உதிரியான உரையாடல்களினூடாக அப்போரின் முழுமையைக் கட்டமைக்க முயன்றிருக்கிறார். ‘தலைவன்’ என்ற சிறுகதை வெளிப்படையாகவே பிரபாகரனைச் சுட்டுகிறது. தமிழ்த் தேசியம் என்ற கற்பிதம் ஈழப்போரின்போது துண்டு துண்டாக உடைந்து போனதை நுண்ணுணர்வுடன் எழுதியிருக்கிறார். பிரபாகரன், நவீன காலத்தில் வாழ்ந்து தன் நிலத்திற்காக உயிர்விட்ட தலைவன்; அவனே தொல்குடிச் சமூகத்தின் நீட்சி. அவனையும் அவன் நிலத்தையும் நாம் முற்றாகக் கைவிட்டதன் மூலமாகத் தமிழ்த் தேசியம் என்ற அடையாளத்தைத் துண்டித்துக் கொண்டோம்; அல்லது அரசியல் தேவைகளுக்காக அதனைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். மொழி நம் சிந்தனையையும் ஒன்றிணைக்கவில்லை; நிலத்தையும் ஒன்றிணைக்கவில்லை என்ற கேள்வியைத் தமிழவன் தம் புனைவுகளின் வழியாக முன்வைக்கிறார்.

எந்தக் கதையும் நேரடியான கதைசொல்லல் உத்தியில் எழுதப்படவில்லை. இரண்டு முரணான கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களுக்கிடை­யிலான உரையாடலாகவே கதையை வளர்த்துச் சென்றிருக்கிறார். ‘காந்தி லிபி’ என்ற புனைவும் காந்தி பற்றிய மேலதிக தகவல்களை வாசகர்களிடம் பகிரும் கதையாக உருப்பெற்றிருக்கிறது. இது புனைவு என்பதைக் கடந்து காந்தியின் தன்வரலாற்றுடன் நெருக்கமான உரையாடலை நிகழ்த்துகிறது.பிரபாகரன், காந்தி ஆகிய இருவருக்கிடையிலான இறப்பின் மர்மங்கள் குறித்த தகவல்களை அகவயத் தன்மையுடன் இரு புனைவுகளிலும் எழுதியுள்ளார் தமிழவன். அடுத்து, கிறித்தவ மதத்தின் போதாமைகளையும் கிறித்தவ மிஷனரிகளின் செயல்பாடுகளையும் இவர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். ஆங்கிலேயர் ஆட்சியே பரவாயில்லை என்ற குரலும் இவரது புனைவுகளில் ஆங்காங்கே ஒலிக்கின்றன.

தமிழவன் தம் புனைவுகளுக்குள் பல குரல்களைப் பேச விட்டிருக்கிறார். இதனால்தான் பிரதி ஒன்றிலிருந்து பலவாகப் பெருகியிருக்கிறது. தம் கதைகளைத் தாமே விமர்சனம் செய்து கொள்ளும் தன்மையையும் பிரதிகளில் காண முடிகிறது. கனவும் யதார்த்தமும் ஒன்றுடன் ஒன்று மயங்கிக் கிடக்கின்றன. கதையின் முழுமையைத் திட்டமிட்டுச் சிதைக்கிறது இவரது மொழி. முழுமைக்கிடையில் பல்வேறு குறுக்கீடுகளை ஏற்படுத்திச் சிந்தனையைத் திசை திருப்பி விடுகிறார். சிந்தனையை அறுத்தலை இவரது புனைவுகள் ஒரு கலகச் செயல்பாடாகவே செய்கின்றன. புனைவின் அடுத்தடுத்த நகர்வை வாசகன் அனுமானிக்கும்போது, கதைசொல்லி புனைவை அந்த இடத்திலேயே நிறுத்தி விடுகிறார்.

தமிழவன் கதைகள், தமிழ்ப் புனைகதை வரலாற்றில் உணர்ச்சிக்கான இடத்தை மறுத்து அதனை அறிவுக்கான இடமாக மாற்றிக் கொண்டது. மனிதப் பிரக்ஞையின் நுண்ணடுக்குகளை புனைவுகளில் சோதித்துப் பார்க்கும் இத்தன்மை தமிழுக்குப் புதிது. நம்மொழி ஒரே காலகட்டத்தில் வெவ்வேறு தன்மைகளுடன் அறிஞர்களால் கையாளப்பட்டிருக்கிறது. சங்கச் செய்யுட்களில் பதிற்றுப்பத்தும் குறுந்தொகையும் ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவை என்கின்றனர். ஆனால் மொழி அமைப்பில் இரண்டும் வெவ்வேறு தன்மையில் அமைந்திருப்பதைக் காணலாம். குறுந்தொகையிலுள்ள கபிலரின் பாடல்கள் வாசிப்பதற்கு எளிமையாக உள்ளன. ஆனால் அவரது பதிற்றுப்பத்துப் பாடல்களைப் புரிந்துகொள்ள கடும் முயற்சி செய்ய வேண்டி­யிருக்கிறது. இதனைப் பரணரின் பாடல்களுடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இத்தகைய வேறுபாட்டைப் புரிந்துகொண்டவர்களுக்குத் தமிழவனின் கதைகளைப் புரிந்து கொள்வதில் தடையிருக்காது எனக் கருதலாம்.

வாசகருக்குத் தமிழவன் கதைகள் கொஞ்சம் உழைப்பைக் கோருகின்றன. புனைவாசிரியனின் பிரக்ஞையைத் தொட பிரதியுடன் வாசகன் ஊடுருவ வேண்டும். ஆற்றங்கரையில் நின்று நீரை வேடிக்கை பார்ப்பவருக்குத் தமிழவன் சிறுகதைகள் எந்த ஆச்சரியத்தையும் அளிக்காது. வேடிக்கைப் பார்ப்பவர்களால் ஆற்றின் முழுமையை உணர முடியாது. இவரது புனைவுகள் சொல்வதைவிட சொல்லாமல் கடந்து செல்வதே அதிகம். பிரதியின் மௌனம் வாசிப்பவரின் அரசியலுடன் தன்னை இணைத்துக்கொள்கிறது. தமிழவன் சிறுகதைகள், Non-linear writing என்று சொல்லப்படும் நேரற்ற விவரணையால் ஆனது. அதனால் தொடர்ச்சி இருக்காது. ‘அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழில் போதிய அளவு பின் நவீனக் கதையாடல்கள் எழுதப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். அதற்குக் காரணம் தமிழில் பின் நவீனத்துவம் உரிய வரவேற்பைப் பெறவில்லை என்பதாக இருக்கலாம். தவிரவும், பின் நவீனத்துவம் தமிழில் சரியானபடி புரிந்து கொள்ளப்படாமையே என்று சொல்லத் தோன்றுகிறது’ (பின் நவீனத்துவச் சிறுகதைகள்) என்று எம்.ஜி.சுரேஷ் குறிப்பிடுகிறார். அந்நிலை இன்றும் மாறிவிட்டதாகக் கருதவில்லை.

தமிழவன் கதைகளை வாசிக்கும்போது மனம் அடையும் கிளர்ச்சி முக்கியமானது. இவர், பிரதியிலிருந்து அர்த்தத்தை வெளியேற்றியிருக்கிறார்; அதாவது பிரதியை ஒற்றைத் தன்மையிலிருந்து பன்முகத் தன்மைக்கு நகர்த்தி விட்டிருக்கிறார். இதனால் பிரதி வாசிப்பவருக்குப் பல்வேறு யூகங்களை உருவாக்குகிறது. வாசகருக்குத் தமிழவனின் புனைவுகள் அளிக்கும் சுதந்திரம் முக்கியமானது.சங்கச் செய்யுளைப் போன்றும் நவீனக் கவிதையைப் போன்றும் இவரது கதைகளை எந்தவித எதிர்பார்ப்புமின்றி வாசிக்க வேண்டும்.அப்போதுதான் தமிழ் இலக்கிய வரலாற்றின் தொன்மொழியை இவரது கதைகளில் கேட்க முடியும்.

- சுப்பிரமணி இரமேஷ், எழுத்தாளர் சென்னை பட்டாபிராம் டி.ஆர்.பி.சி.சி.சி. இந்துக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்

Pin It