ungal book paalilsarkaraiபல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ப.க.பொன்னுசாமி அவர்கள். கடந்த காலங்களையும் நிகழ்காலத்தையும் கடந்து வந்த சிந்தனைகளின் தொகுப்பு இந்நூல்.

நூலாசிரியர் முதல் கட்டுரையிலேயே நன்றிக்குரியவராகிறார். தான் பயின்ற பொள்ளாச்சி மகாலிங்கனார் கல்லூரியின் வளர்ச்சி பற்றியும் அதனை நிறுவிய பெரியவர் நல்லமுத்து அவர்களையும் நீள நெடுகப் பாராட்டி நன்றியுடன் நினைவு கூர்கிறார்.

அடுத்த கட்டுரை தன் மகனின் கொடிய மரணம் பற்றிய ஆற்றாமையை மிக மென்மையாக நினைவுபடுத்திக் கொள்வது கண்ணீர் கசிய வைக்கிறது. மருத்துவம் பயிலச் சென்ற மகன் நாவரசு கொலையுண்டதை நாடே அறியும்.

அடுத்தடுத்த கட்டுரை வீட்டு வளர்ப்புப் பிராணிகளான நாய், பூனை மீதுகொண்ட அவரது பரிவையும் மனித நேயத்தையும் உணர முடிகிறது. அங்கும் அத்தகைய மனிதர்க்கு நேர்ந்த மகனது இழப்பு வேறு எவர்க்கும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டுவது நம்மை நெகிழ வைக்கிறது.

துணைவேந்தர் கல்வியாளரும் நாடறிந்த நல் அறிஞருமான அவர் சிறு குழந்தைகட்கு நன்னெறிக் கதைகளை ஊட்டி வளர்க்க வேண்டுமென்கிறார். சிறுவயதில் எதை விதைக்கிறோமோ அதுதான் அக்குழந்தைகளின் பிற்கால வளர்ச்சி என்றும் பெற்றோர்கள் அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறார். ஏனெனில் நம் முன்னோர் பாட்டிக்கதை சொல்லி வளர்ந்தவர்கள் என்பதையும் நினைவுபடுத்துகிறார்.

‘அந்த 22 நாட்கள்’ என்னும் கட்டுரை சிறந்த மருத்துவ சேவை புரியும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மிகச்சிறந்த கட்டுரை. ‘கோவை மெடிக்கல் சென்டரின்’ தலைமை மருத்துவர் நல்ல. பழனிச்சாமியை வாழ்த்தும் செயல் அரிய செயல்.

பல ஆண்டுகளாக நண்பராகவும் குடும்ப மருத்துவராகவும், தனது துணைவியாரை அங்கு மருத்துவம் பார்க்கக் கொண்டு சென்ற போது மருத்துவர் காட்டிய அக்கறை பற்றியும் ஆசிரியர் தெரிவிக்கும் விதம் நாடறிய வேண்டிய நல்ல செய்தியாகும். குறிப்பாக மருத்துவர் சமூகத்துக்கு அவர் காட்டிய நன்றி பெருமை சேர்ப்பதாகும்.

‘தன்னலம் பார்ப்பது மருத்துவப் பணியில்லை என்று செயல்படும் எண்ணற்ற மருத்துவர்களையும், செவிலியர்களையும் துணைப் பணியாளர்களையும் நாம் கைகூப்பி வணங்குவோம்’ என்கிறார்.

பாவேந்தருக்குப் பாரதியின் சுதேச கீதங்கள் கிடைத்தபோது அவர் மகிழ்ந்ததைப் போல, கொடைக்கானலில் இளைப்பாறச் சென்ற நாணயவியல் பற்றிய நூலொன்று கிடைத்ததன் மூலம் தொல்லியல் பற்றியும் நாணயவியல் பற்றியும் ஆராயும் எண்ணம் பிறந்தது என்கிறார் தினமலர் நிறுவனர் (ஆர்.கி). ஆர்.கிருஷ்ணமூர்த்தி.

நாணயவியல் ஆய்வுகளை மெய் சிலிர்த்துப் போகும் வண்ணம் ஆசிரியர் விவரிக்கும் கட்டுரை வரலாற்றுச் சிறப்புமிக்கது.

‘துணைவேந்தர்களே வாருங்கள்’ எனும் கட்டுரை பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பதை தனது அனுபவங்களுடன் விவரிக்கிறார்.

அறிவியல் பற்றியும் நட்புக் கினியவர்கள் பற்றியும் நிறைவுக் கட்டுரைகள் சில விவரங்களைத் தெரிவிக்கின்றன. ஆசிரியர் இதுபோன்ற அனுபவங்களை நிறைய எழுதவேண்டும், வரலாறுகளுக்கு அவை துணைபுரியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

பாலில் சர்க்கரை பழுதாகலாமோ?
ப.க.பொன்னுசாமி  விலை: ரூபாய் 80/-
வெளியீடு: கனவு, திருப்பூர்

- நாமக்கல் நாதன்

Pin It