சிங்கப்பூர் என்பது இருநூற்றைம்பது ஆண்டுகளில் உருவான நாடு. சிங்கப்பூர் எனும் சிறிய மீன்பிடிக் கிராமமாக, சுமார் ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் வசிப்பிடமாக இருந்த தீவு. இயற்கையாக அமைந்த நிலவியல் தன்மையால், துறைமுகம் ஆகும் வாய்ப்பினால் உலகின் கவனத்தைப் பெற்றது. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் சர் ஸ்டாம்போர்டு ராபின்ஸ் 29.01.1819ல் அங்கு காலடி வைத்தார். இன்றைய சிங்கப்பூர் எனும் கனவு நகரத்துக்கு அடித்தளமிட்டவர் அவரே. ஆங்கிலக் காலனியாக இருந்து, இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி(1942 - 45). பின் மலேசியாவிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு 1965ல் நவீன சிங்கப்பூர் உதயமானது.

சீனர்கள், மலேசியர்கள், இந்தியர்கள் (தமிழர்கள்) ஆகிய மூன்று இனமக்கள் இங்கு பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். பிரிட்டிஷ் காலனியக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள், தர்மக் கப்பல்களில் கூலிகளாக சென்றவர்கள் மலேசியா, சிங்கப்பூரிலும் கால்பதித்தனர்.

சிங்கப்பூரின் உருவாக்கத்தில், அடிப்படைக் கட்டமைப்புகளில் பணி செய்த தமிழர்களின் உழைப்பு கணிசமானது. இப்படிப் ‘பொருள்வயின் பிரிந்தத்’ தமிழர்கள் மலேசியா - சிங்கப்பூரிலேயே குடியமர்ந்தனர். குடியுரிமை, வாக்குரிமை, வாழ்வுரிமை பெற்றனர்.

தொடக்கத்தில் உழைப்பாளிகளாக, கல்வியறிவற்றவர்களாக இருந்தவர்கள் பின்னர் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு சமுதாய விழுமியங்களை உருவாக்கிக் கொண்டனர்.

மலேசியாவில் சிங்கை நேசன் எனும் இதழ் ஜுன் 27, 1887ல் தோன்றியது. 1929ல் பெரியார் ஈ.வே.ரா. அகில மலாயாத் தமிழ் மாநாட்டில் பங்கேற்க மலேசியா, சிங்கப்பூர் பயணம் மேற்கொள்கிறார். 1934 ல் தமிழவேள் கோ. சாரங்கபாணி ‘தமிழ்முரசு’ இதழைத் தொடங்குகிறார். 1952ல் எழுத்தாளர் கு. அழகிரிசாமி தமிழ் நேசன் ஆசிரியர் குழுவில் பங்கேற்று மலேசியா செல்கிறார். ஐந்தாண்டுகள் அங்கு வசிக்கிறார். 1959-ல் லீக்குவான்யூ சிங்கப்பூரின் அரசுப் பொறுப்பை ஏற்கிறார். இந்த வரலாற்றுப் பின் புலத்தில் சிங்கப்பூரின் மொழி, இலக்கிய வளர்ச்சியை மதிப்பிட வேண்டியிருக்கிறது.

malaiarasi seenivasanசிங்கப்பூரின் (1965குப் பின்) தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இதழ்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் மரபுக்கவிதை ஆதிக்கம் அதிகம் இருந்தது. பின்னர் புதுக்கவிதைக் களம் கண்டது. என்றாலும், ‘சிறுகதை’ எனும் வடிவமே பரவலான கவனிப்பைப் பெற்றது. தொடர்ந்து குறுநாவல், நாவல், நாடகம், கட்டுரை, திறனாய்வு, குழந்தை இலக்கியம் போன்றவை வளரத் தொடங்கின.

இன்றைய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டோர் பலர். சிங்கை மா. இளங்கண்ணன், நா. கோவிந்தசாமி, கண்ணபிரான், மு. தங்கராசன், பொன். சுந்தர்ராசு, மா. இராஜாக்கண்ணு, பி.கிருஷ்ணன் (புதுமைதாசன்), சிவகாமி, இராஜதுரை, மாணிக்கம், கா. சங்கையா, கோ.வே. சண்முகம், கமலாதேவி அரவிந்தன், மாதங்கி, ஸ்ரீலட்சுமி, ஜெயந்தி சங்கர், சித்ரா ரமேஷ், பிரேமா மகாலிங்கம், சூரியரத்னா, ரம்யா, அழகு நிலா, சீதாலட்சுமி, மலையரசி சீனிவாசன், ரமாசுரேஷ், இன்பா என்று பலரைச் சுட்ட இயலும்.

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் தொடக்கத்தில் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் எழுதினர். தற்போது, சிங்கப்பூரிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருபவர்கள் எழுதத் தொடங்கி உள்ளனர். மேலும் பணி நிமித்தம் குடியேறி வாழ்பவர்களும் இலக்கியத்தில் தடம் பதித்து வருகின்றனர். எனவே மலேசியத் தமிழ் இலக்கியத்தைவிட சிங்கப்பூரில் தமிழ் நவீனப்பட்டுள்ளது எனலாம். குறிப்பாகத் தொழில் நுட்பம் பயின்றோர், இணைய வெளியில் தொழில் புரிவோர் இலக்கியப் படைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய சிங்கப்பூர் வாழ்வை, மனித உறவுகளை, பல் இன, மொழிச்சூழலை பெருநகர நிலைமைகளை சந்தை நுகர்வை, இயந்திர, தொழில்நுட்பப்பரவலை, மரபு நேர்ச்சிகளை பதிவு செய்யும் முயற்சிகளே சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியமாக அமையும்.

மலையரசி சீனிவாசன், சிங்கப்பூரிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருபவர். பெரியார் பெருந்தொண்டர், பகுத்தறிவுச் செம்மல், சொற்கொண்டல் மீ.முருகு சீனிவாசனின் மகள். இவரது துணைவர் வீ. கலைச்செல்வன் அவர்களும் முற்போக்குச் சிந்தனையாளர். மலையரசி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்திலும் செயல்பட்டு வருகிறார். இளமை முதலே தமிழ் மொழி, இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். தமிழ் இலக்கிய வாசிப்பும், மொழிப்பயிற்சியும் இவரின் பலம். பிறமொழி கலப்பின்றிப் பேசும், எழுதும் திறன் படைத்தவர். தன் கதைகளுக்காகப் பரிசுகளையும் பெற்றவர்.

இவரின் பதின் மூன்று சிறுகதைகளின் தொகுப்பு ‘முகிழ்’. வழக்கமாக பாட்டிகள் அல்லது அம்மாக்கள் பிள்ளைகளுக்குக் கதை சொல்வார்கள். ஆனால் சிறுவயதில் மலையரசி நாள்தோறும் அம்மாவிடம் கதை சொல்கிறார். அம்மா குஞ்சம்மாள் அந்தக் கதைகளைக் கேட்கிறார். பாராட்டுகிறார். அந்த ஊக்கம்தான் தன்னை எழுதத்தூண்டியதாக என்னுரையில் சொல்கிறார்.

‘மாண்டரின் ஆரஞ்சு’ எனும் கதை இளம் பருவத்து தோழிகளின் அன்பை நினைவூட்டுகிறது. ‘சின் யன் ஹவ் ல’ என மாண்டரின் ஆரஞ்சுடன் வாழ்த்துவது சீனர்களின் பண்பாடு. அதிஷ்டம், இன்பம், ஆரோக்கியம், செல்வம் ஆகிய வளமைகளின் குறியீடு மாண்டரின் ஆரஞ்சின் நிறம் என்பது அவர்களின் நம்பிக்கை. அஞ்சலியும் அவளின் சீனத் தோழியும் தங்களின் படிப்பு சார்ந்த ‘ஒப்படைப்பு’ க்காக அஞ்சலியின் சித்தி குணசுந்தரியை ‘நேர்காணல்’ செய்கிறார்கள். பண்டிகை குறித்து தகவல்களைக் கோரிப் பதிவு செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் குணசுந்தரி முகம் வாடி சோர்வடைகிறார். காரணம் சீனப்புத்தாண்டும், மாண்டரின் ஆரஞ்சும் அவரின் இளம் பருத்துக்கு இட்டுச் செல்கின்றன. தன் எதிர் வீட்டில் இருந்த சீனச்சிறுமியுடன் சிநேகம் கொண்டு, எதிர்பாரமல் பிரிந்த துக்கம் சொல்கிறார். கடைசியில் தன் தோழி வந்திருந்தச் சிறுமியின் பெரியம்மா, உறவு எனத் தெரிந்து ஆனந்த அதிர்ச்சி அடைகிறார். பல்லாண்டுகள் கழித்து முதிர்பருவத்தில் ‘ரெட்டச்சட’, ‘முயல் குட்டி’ என்ற குழந்தைகளின் செல்லப் பெயர்களோடு இணைகிறார்கள். இளம் பருவத்து நினைவு மீட்பாகவும், உறவு மீட்பாகவும் அமைகிறது இக்கதை.

“எங்களைப் பிரிப்பது போல தரையில் விழுந்த ஸ்கிப்பிங் கயிறு நடுவில் ஒரு கோடாகிக்கிடந்தது” என இளம் பருவ நினைவைச் சுட்டுவதும், “கையில் இரண்டு மாண்டரின் ஆரஞ்சுடன் ‘ரெட்டச்சட’ என்று எதிரே நின்றாள் முயல்குட்டி” என எதிர்பாராச் சந்திப்பைப் பதிவு செய்வதும் அருமை.

மலையரசியின் கதைகளில் குழந்தைகள் முக்கியமாக இடம் பெறுகிறார்கள். அன்பு, நேர்மை, பாசம், நெகிழ்ச்சி ஆகியவற்றின் சேர்மானத்தில் குழந்தைமையை உயிர்ப்பூட்டுகிறார் இவர். ‘ண்ஞ்.ணா!’ சிறுகதை பெற்றோருக்குப் படிப்பினை தரும், கதை. சத்யன் - பத்மாவுக்கு இரு பிள்ளைகள். முதலில் நந்தன். அடுத்து நந்தினி. தனிக்காட்டு ராசாவாக பெற்றோரின் ஏக அன்பில் திளைக்கிறான் நந்தன். குட்டிப் பாப்பா நந்தினி பிறந்ததும் கவனம் அவன் மீது பெற்றோருக்குச் செல்கிறது. படுக்கை, உணவு, விளையாட்டுப் பொருள், நேரம் எல்லாம் பங்கு போடப்படுகிறது. நந்தன் அதிர்ச்சியாகிறான். தங்கை மீது பொறாமை, கோபம்.... நாளடைவில் வெறுப்பாகிறது. தங்கை சிறு விபத்தில் திக்குவாய் ஆகிறாள். அவளுக்கு பிறந்தநாள் வருகிறது. புத்தாடையும், விளையாட்டுப் பொம்மைகளும் கிடைக்கிறது. உடன் கடைக்குப் போன நந்தன் தனக்கு ‘சூப்பர் ஹீரோ ஸ்பைடர் மேன்’ பொம்மை கேட்டு அடம் பிடிக்கிறான். பெற்றோர் மறுக்கிறார்கள். உன் பிறந்தநாளுக்கு வாங்கலாம் என்கிறார்கள். முகம் சூம்பி கோபத்துடன் ஒதுங்கி விடுகிறான். கடையிலிருந்து திரும்பும் போது தங்கை நந்தினி சிலந்தி மனிதன் (ஸ்பைடர் மேன்) பொம்மையுடன் அண்ணனிடம் செல்கிறாள்.

ச்சீ... போ... எனக் கடுப்புடன் கத்துகிறான். அவள் அவனிடம் பொம்மையைத் திணிக்கிறாள்.

“நந்... தினி... வாய் திக்கியது.

‘அண்ணா! திக்காமல் நந்தினி.” எனக் கதை முடிகிறது. இப்படி இளம் சிறார் உள்ளத்தை உளவியலுடன் படைத்துக் காட்டுகிறார்.

இந்தத் தொகுப்பின் பெயர் தாங்கிய ‘முகிழ்’ கதையும் பிள்ளை நேசம் பற்றியதுதான். முகிழ் தன் ஐந்தாவது பிறந்தநாளுக்கு பெற்றோருடன் கடைத் தொகுதிக்குச் சென்று எண்பத்து ஒன்பது வெள்ளிக்கு ஒற்றைக்கொம்பு குதிரைப் பொம்மை வாங்கி வருகிறாள். அந்தப் பொம்மையை ‘கொம்பண்ணா’ எனக் கொண்டாடுகிறாள். அக்கம் பக்கத்துப் பிள்ளைகளெல்லாம் ‘அதிசயமாய்’ பார்த்து அவளைத் தோழி பிடித்துக் கொண்டாடுகிறார்கள். திடீரென ஒரு நாள் முகிழின் கையில் பொம்மை இல்லை. வாங்கும் போதே ‘அதிக விலை இது வேண்டாம்’ எனத் தடுத்த அம்மா நச்சரிக்கிறாள். முகிழ் பதில் ஏதும் சொல்லவில்லை. அவளின் எதிர் வீட்டில் அவள் வயதில் ‘கிம்லீ’ இருக்கிறாள். அவள் அப்பா வண்டி ஓட்டுநர். அம்மா இரவு விடுதி வேலையாள். அப்பாவும் வேறு கல்யாணம் செய்து சென்று விடுகிறார். ஏழ்மைமிக்க வாழ்க்கை. ‘கிம்லீ’ முகிழுக்கு இதமான தோழி ஆகிறாள். அப்பா வந்ததும் முகிழ் பொம்மையை தொலைத்ததை அம்மா சுட்டிக் காட்டுகிறாள். நிலைமையை யூகித்த அப்பா இரவு முகிழிடம் படுக்கையில் கேட்கிறார் “ஏம்பா... கொம்பண்ணாவை கொடுத்திட்டே இன்னிக்கு கிம்லீக்கு பொறந்தநாளுப்பா” மிக இயல்பாகச் சொல்லிச் செல்கிறாள்.

இதுதான் குழந்தைகள் உலகம். விலை உயர்ந்த பொம்மை; தனக்குப் பெருமை தந்த பொம்மை; தான் விரும்பியப் பொம்மை. ஒரு கணத்தில் பிறந்த நாளைக் கொண்டாட வழியற்ற தன் சீனத் தோழிக்கு அளித்து விடுகிறாள். முகிழ் ஓர் குறியீடு தான். இந்த மொட்டுக்கள் சமூகத்தின் விதைகளாகப் பரவ வேண்டும் தானே?

‘மெழுகுவர்த்தி எரிகின்றது’ சிறுகதையும் குழந்தைகள் உலகையே பேசுகின்றது. பெற்றோரில் ஒருவர் இல்லாத ஒரு பெற்றோர் குழந்தைகளின் மனநிலை விவரிக்க முடியாதது. கணவன், மனைவி ஆகிய ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு, வன்மம், விலக்கு நேர்கிறபோது மிகவும் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். அவர்களுக்கு அப்பாவும், அம்மாவும் முக்கியம். சமூகத்தில் இத்தகு ஒரு பெற்றோர் குழந்தைகளின் நிலையும் இரக்கத்துக்குரியதுதான் என்பதை இக்கதை மென்மையாகச் சுட்டுகிறது.

புலம்பெயர் வாழ்வில் பழைய வாழ்வு குறித்த ஏக்கம் கலை வெளிப்பாடாக அமைவது தவிர்க்க இயலாதது. ‘நினைவுச்சின்னம்’ அத்தகைய கதை. தஞ்சை அரண்மனையில் ஒரு காலத்தில் சமையல் செய்தவரின் பரம்பரையில் வந்த நடேசன் சிங்கப்பூருக்கு 1948 வாக்கில் வந்து, நடைபாதை கடை தொடங்கி, பெரிய ஹோட்டல் வரை உயர்கிறார். எட்டு வயதில் அப்பாவுடன் வந்த ‘பெரிய தம்பி ‘யின் பிள்ளைகள் இன்று வசதியாக வாழ்கிறார்கள். இவருக்கு தன் அப்பாவும், தானும் உழைத்து உருவாக்கிய கடையைப் பிரிய மனமில்லை. பூட்டிக்கிடக்கும் அதனை அவ்வப்போது நடந்து சென்று பார்த்து வருவதை வழக்கமாகக் கொள்கிறார். ஒருநாள் தாத்தாவுடன் பேரனும் செல்கிறான். கடைக்குள் எட்டிப் பார்க்கிறான். கண்ணாடிப் பேழைக்குள் ஓர் மர அகப்பை முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. அது என்ன எனக் கேட்கிறான். ‘உன் கொள்ளு தாத்தாவோட பொக்கிஷம்’ என்கிறார் தாத்தா. இவ்வளவுதான் கதை. மூன்று தலைமுறை வாழ்வை, வலியை, வளர்ச்சியை, மாற்றத்தை எளிமையாக விளக்கிவிடுகிறது. கிண்டாசாலை, சீராகூன்சாலை, ஜாலான் புஜார், ‘கருப்புக்கரை வேட்டி கட்டிய உயரமாக பாகவதர் போன்ற’ (கோ. சாரங்கபாணி) எல்லாம் மிக அருமையாக இக்கதையில் பதிவாகி வரலாற்றுத் துளிகளாகின்றன.

மேற்படிகதை முதல் தலைமுறையில் வந்து சிங்கப்பூரில் குடியமர்ந்துவிட்டவர்களைப் பதிவு செய்கிறது. ‘பால் பொங்கியது’ கதையோ, தற்போது வருவாய் ஈட்ட உழைப்பாளிகளாக சிங்கப்பூரில் பணி செய்பவர்கள் பற்றியதாக அமைகிறது. ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீட்டுக்கு வண்ணம் தீட்டும் தொழிலாளிகள்.... பொங்கல் தருணமது. ஒரு வீட்டில் உள்ள தமிழ்த் தாய்க்கு ஈரம். அவர்களிடம் பேச்சு கொடுக்கிறார். ‘மனைவி’ பிள்ளைகளோட பொங்கல் கொண்டாடி நாலு வருஷத்துக்கு மேலாகிறது’ என்கிறார்கள். அங்கு வேலை செய்பவர்கள் எல்லாருக்கும் பொங்கல் சூடாக சுவையாகத் தருகிறார். அதில் மியான்மர், சீனர்களும் அடக்கம். மறுநாள் காலை அந்தத் தொழிலாளிகள் பைகளுடன் வந்து ‘பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா’ என்கிறார்கள். இந்த அன்பு, பாசம், நெகிழ்ச்சி எனும் பேருணர்வைத் தானே கதை இலக்கியங்கள் கடத்த வேண்டும். அழகிய கதை,

‘மனமே... நில்’ பருமனான வளரிளம் பருவக் குழந்தையைப் பற்றிய எள்ளல் மிக்கப் பதிவு. ஒப்பிடுவது கூடாது. கல்வியானாலும் உடலானாலும் அவரவர் இயல்பில் விட வேண்டும். மன அழுத்தங்கள் தற்கொலைக்கே தூண்டும் எனும் கருத்துக்களை அழகாக எடுத்துச் சொல்கிறது.

‘மனதாளும் நினைவுகள்’ முதியோர் காதலை மிக நுட்பமாகச் சொல்கிறது. கள்ளங் கபடமற்ற உண்மை அன்புக்கு ஈடு இவ்வுலகில் ஏதும் இல்லை தானே?

‘நீரில் எரியும் தீக்குச்சிகள்’ சிறுகதை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுவனை முன்னிறுத்தி Good touch, Bad touch என்பதை இரு பாலருக்கும் சொல்லித்தர வேண்டும், பெண் பிள்ளைகள் போலவே ஆண் பிள்ளைகளும் ‘பிணம் தின்னும் கழுகுகள் மாதிரியான’ ஆண்களால் பாதிக்கப்படுவதை இரண்டு தலைமுறைகளின் சாட்சியமாகத் தருகிறது.

‘தாத்தா’ தலைமுறை இடைவெளிச் சிக்கல்களையும் முதியோரை மதிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டுகிறது. “மரண தண்டனை பெற்ற குற்றவாளிக்குக் கூட கருணைமனு இருக்கு. அதைப் போலத்தான் கேட்கிறோம்” என அப்பா, தன் பிள்ளையிடம் பேரப்பிள்ளைகளோடு ‘காலம் கழிக்கக்’ கோருவது நெகிழ்வின் உச்சம்.

‘பொம்மை’ சிறுகதையும் கூட பெற்றோர், பிள்ளை வளர்ப்பு, குறைபாடு உள்ள குழந்தை ஆகியவற்றை உணர்த்தும் விதத்திலேயே உள்ளது.

ரஞ்சிதமே..., விருந்தாளி ஆகிய இரு கதைகள் உயிர் நேயம் வலியுறுத்துகின்றன. பசுமாடும், வினோதப் பறவையும் மனிதர்களோடு இரண்டறக் கலந்து விடுகின்றன. தன்னை இழத்தல் உயிர்களிடத்தில் சாத்தியம் என்பதை உணரும் தருணமாக இக்கதை நிகழ்வுகள் அமைகின்றன.

இக்கதைகள் சிங்கப்பூரின் நிலவியலில் முகிழ்த்தவை. இன்றைய சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்வியலை எதிரொலிப்பவை. குழந்தைகள், பிள்ளை வளர்ப்பு, குடும்பம், முதுமை, ஒரு பெற்றோர் குழந்தைகள், புலப்பெயர் வாழ்வு, நினைவேக்கம், இளம் பிராய நினைவுகள், நோய்க்கூறு குறைபாடுகள், உடல் - உள்ள பலவீனங்கள், விலங்கு - பறவைகள் மீதான அக்கறை... என எல்லாக் கதைகளுமே கருத்துக்கோப்போடு அமைகின்றன.கதைகளின் கருவையொட்டியே தலைப்புகள் தரப்பட்டுள்ளன. எடுப்பு, தொடுப்பு, முடிப்பு எனும் சிறுகதை இலக்கண வரையறையோடே அமைந்துள்ளன.

பெரும்பகுதியும் பிறமொழிக் கலப்பில்லாமல், எழுத்து நடையில் கதைகள் அமைந்துள்ளது.

கடைத்தொகுதி, நகரும் படிக்கட்டு, மின்ஏணி, நெகிழி, பணிப்பெண், வீடமைப்பு, மருத்துவப் பரிசோதனை, கழிவறை, காடிபேட்டை.... எனச் சொற்களும் தொடர்களும் இனிய தமிழில் அமைவது சுட்டத்தக்கது.

அஞ்சலி, நந்தன், நந்தினி, குணசுந்தரி, நடேசன், பத்மா, சத்யன், முகிழ், அகிலன், ரஞ்சிதம், மரகதம், ஆதிரை, அழகேசன், நறுமலர், பனிமலர், ஆனந்தி.... இப்படி அமைந்த கதாமாந்தர்களின் பெயர்களையும் பாராட்டத்தான் வேண்டும்.

பல் இன, பன்மொழிச் சூழலில் எழுதப்படும் கதைகள் தம் மொழியின் இயல்பான அமைப்பில் அமைவது தவிர்க்க இயலாதது. புனைவுக்கு மொழி சிக்கலைத் தரும் என்றாலும், இவ்விலக்கியங்கள் இலக்கு நோக்கி எழுதப்படுவது கவனிக்கத்தக்கது.

மலையரசி சீனிவாசன் சமூக நோக்கும் மொழிப்பற்றும் மிக்கவர். “இலக்கியம் என்பது நாகரிகத்தைப் புகட்ட வேண்டும். மக்களிடம் உயரிய குணங்களைப் புகுத்துவதாக இருக்க வேண்டும்” என்ற தந்தை பெரியாரின் கருத்துக்களுக்குக் கலை வடிவம் தந்துள்ளார். சிங்கப்பூரின் இன்றைய தன்மைகளை கழிந்த ஐம்பதாண்டு வாழ்வனுபவத்தில் காட்சிச் சித்திரமாக்கி உள்ளார். இன்னும் இயல்பான படைப்புத் தளம் இவருக்குக் கைவரும் என்பதற்கு இத்தொகுப்பு கட்டியங் கூறுகிறது.

சிங்கப்பூர் தமிழ்த் இலக்கியத்தின் இன்றைய முகத்தை இத்தொகுப்பில் உள்ள கதைகள் வழி அறிய முடியும்.

புலம் பெயர்ந்த குடியமர்வு தளங்களில் மொழியை, இலக்கியத்தைப் பண்பாட்டைக் காத்திட இதழ்களும், அமைப்புகளும் பெரும்பங்காற்றுகின்றன. அந்த வகையில் சிங்கப்பூரில் கவிதை, சிறுகதை, மொழிப் பயிற்சி, பேச்சுக் கலை ஆகியவற்றுக்கு கலை இலக்கிய அமைப்புகள் சிறப்பாக பல முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றன. கவிதை, கவிதை ரசனை, திறனாய்வு, கவிதைப் போட்டி, கவிதை வெளியீடு ஆகியவற்றை மாதக் கூட்டங்களுடன் ‘கவிமாலை’ செய்து வருகிறது. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகம் ‘கதைக்களம்’ எனும் ஏற்பாட்டையும், எழுத்தாளர்கள் சந்திப்பு, திறனாய்வு, அறிமுகம், கதைத்தொகுப்பு, வெளியீடு ஆகியவற்றையும் சிறுகதைகள் சார்ந்து செய்து வருகின்றது.

04. 05. 2013 முதல் ‘கதைக்களம்’ நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு தொடக்கவரி கொடுக்கப்பட்டு கதைப் போட்டிகள் நிகழ்கின்றன. முதலில் 250 சொற்களுக்குள் இருந்த வரையறை, பின்னர் 500 சொற்களில் கதை எழுதும் கலையாக பரிணமித்து உள்ளது.

மலேசியத் தமிழ் நேசனில் எழுத்தாளர் கு. அழகிரிசாமி பணி செய்த போது சிறுகதைப் போட்டிகளும், கதைப் பயிற்சிகளும் நடைபெற்று உள்ளன. தொடர்ந்து மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் பல்வேறு நிலைகளில் கதைப் பயிற்சிக் களங்கள் நடைபெற்றன. இதன் வளர்ச்சி நிலையாகத்தான் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தில் ‘கதை’ எனும் வகைமை சிறப்பாக உயர்நிலைப் பெற்றது. மேலும் இதன் தொடர்ச்சியாக இன்று பல நாவல்கள் சிங்கப்பூரிலிருந்து படைக்கப்பட்டு வருகின்றன.

‘கதைக்களம்’ கண்ட கதைகளின் தொகுப்பாக மலையரசி சீனிவாசனின் ‘கலர் பென்சில்’ அமைகிறது. ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் அமைந்து உள்ளன. எல்லாமே ‘குறுங்கதைகள்.’ தமிழ்நாட்டில் ஒரு பக்கக் கதைகள், நிமிடக் கதைகள் என்பது போல கதைக்களத்தின் கதைகள் அமைகின்றன.

மலையரசி சிங்கப்பூரில் பிறந்து, வளர்ந்து, வாழ்பவர். அந்த வாழ்பனுபவங்களில் வழியாக கழிந்த ஐம்பது ஆண்டுகளில் சிங்கப்பூர் வாழ்வியலை இக்கதைகளில் பதிவு செய்கிறார். ஒவ்வொரு கதையும் ஏதேனும் ஒரு கருத்தை நுட்பமாக வெளிப்படுத்துகிறது.

குழந்தைகள், பறவைகள், விலங்குகள், பொம்மைகள் போன்ற உயிருள்ள உயிரற்றக் கருப்பொருட்கள் கதைகளின் மையமாகிறது. குடும்பம், திருமணம், கணவன், மனைவி உறவு, பெற்றோர் - பிள்ளை உறவு நிலை, நம்பிக்கைகள், முதுமை, நோய் நிலை, கல்வி நிலைமை, தொழிற்களம் போன்ற பலவும் கதைகளின் நுவல் பொருளாகின்றன.

எளிய, இனிய, தனித்துவ மொழிநடை இவருக்கு வாய்த்திருக்கிறது. படம் பிடிப்பது போல சிங்கப்பூர் சாலைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், பல்லங்காடிகள், காட்சி தருகின்றன. குழந்தைகளுக்கு வளரும் பருவத்தில் பெற்றோருடன் இருக்கும் சூழல் முக்கியம். வேறு எந்த வசதியும், ஏற்பாடும் பெற்றோர் தரும் பாசத்தை, பாதுகாப்பை, நெருக்கத்தைத் தர இயலாது. தமிழ்நாட்டில் இளம் பருவத்தினரை உண்டு உறைவிடப் பள்ளிகள் காவு கொள்கின்றன. அதுபோல சிங்கப்பூர் போன்ற இடங்களில் தாய் தந்தை இருவரும் பணிக்குச் செல்லும் சூழல், குழந்தைகள் பராமரிப்பு நிலையம் செயல்படும் நிலை. இச்சூழலில் ஏங்கித் தவிங்கும் பிள்ளைகளின் தகிப்பை ‘கிலுகிலுப்பை’ சுட்டுகிறது.

அதேபோல பிள்ளைகள் வளரும் பருவத்தில் நற்பண்புகள் பேணி வளர்க்கப்பட வேண்டும். தங்கை தொலைந்த பத்து வெள்ளி, அது தெரியாமல் அண்ணன் கீழே கண்டெடுத்ததாகக் கருதி, பாசமிகு தங்கைக்கு சதுரங்க நோட்டு வாங்கி விடுகிறான். தங்கை அம்மா பொருள் வாங்க கொடுத்த பத்து வெள்ளி தொலைந்ததைச் சொல்லி அழுகிறாள். அண்ணன் மெல்லாமல் விழுங்காமல் தன் தவறுக்கு வெட்கி தலை குனிகிறான். ‘அண்ணன் இருக்கிறேன்’, கதை இந்த உணர்வை வெளிப்படுத்துகிறது.

வலைப்பூ தொடங்கி சமையல் குறிப்புகளை அரங்கேற்றும் ‘அப்பத்தா’, வழக்கறிஞர்களான வீட்டில் சமைக்க மனைவி மறுக்க, கணவன் ஈடுபட, மகளோ பீட்சாவுக்கு மாறிவிடுவதைச் சொல்லும் ‘அப்பா சுட்ட தோசை’, ஈமச் சடங்கில் உதவிக்குச் செல்லும் பெண் பற்றிய பதிவைச் சொல்லும் கதை, அதிர்ஷ்ட சீட்டு ஏமாற்றம், முடித்திருத்தம் செய்யும் 5 வெள்ளி, தன் ஆசை மனைவியின் ‘கல்யாணச் சேலையை’ ஒளித்துப் பாதுகாத்தும் கணவர், மன்னிப்பதா? மன்னிப்பு கேட்பதா - குறுந்தொகை, நாய்ப்பழக்கும் வேலைக்கு சென்று தோழிக்கு உதவும் ‘நடைபழகு’ என்று பல தளங்களில் வாழ்க்கையை அதன் சிறு சிறு துளிகளை இக்கதைகள் பந்தி வைக்கின்றன.

அழகாகக் கோலமிடும் பாட்டி முதுமையில் மறதி நோய்க்கு ஆளான நிலையில் அவருக்கு கலர் பென்சில்களால் வண்ணம் தீட்ட கையைப் பிடித்து உதவுவதும், அதில் அவரைப் பரவசப்படுத்தும் ‘கலர் பென்சிலாக’ மலர்ந்துள்ளது.

இடது கைப்பழக்கம் உள்ள மருமகளைத் திட்டி, துன்புறுத்தும் மாமனாருக்கு விபத்தில் சிக்கி வலது கை முறிந்து போகிறது. அப்போது வரும் தன் கூட்டாளி­யிடம் ‘இப்ப எல்லாத்துக்கும் இந்தக்கைதான்’ என இடது கையைக் காட்டுகிறார். மூடப்பழக்கத்தை மிக நளினமாக உணர வைக்கிறது ‘இது புதுசு.’ இப்படி எல்லா கதைகளுமே சமூகம் சார்ந்து, மனித உறவுகளை, மனித உணர்வுகளை எடுத்துரைக்கின்றன.

மலையரசி சீனிவாசன் சிறுகதைகள் குறுங்கதைகள் இன்றைய சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய நோக்கையும் போக்கையும் புரிந்து கொள்ள உதவுகின்றன.

பயன்பட்ட நூல்கள் :

1. திண்ணப்பன்.சுப, ஆண்டியப்பன்.நா, அருணாசலம்.சுப.,சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு: ஓர் அறிமுகம், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் 2011. சிங்கப்பூர்.

2. பரமசிவானந்தம்.அ.மு., தமிழன் கண்ட மலேயா, தமிழ்க்கலைப் பதிப்பகம்,சென்னை - 10.

3. மலையரசி சீனிவாசன், முகிழ், ஆம்பல் பதிப்பகம், சென்னை.2023.

4. மலையரசி சீனிவாசன், கலர் பென்சில், ஆம்பல் பதிப்பகம், சென்னை. 2023.

- இரா.காமராசு, பேராசிரியர், தலைவர், நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.