‘கவிஞர்கள் சொல்லால் உலகத்தை ஆளுகிறார்கள்’ என்றான் ஷெல்லி. எழுத்தாளர்களும் அப்படித்தான். அவர்கள் எழுத்தை ஆளுகிறார்கள்; இலக்கியத்தை ஆளுகிறார்கள்; இந்த உலகத்தையே ஆளுகிறார்கள்.
அவர்களால் படைக்கவும் முடியும்; துடைக்கவும் முடியும்; உடைக்கவும் முடியும்; இதையே ‘படைத்தல், காத்தல், அழித்தல்’ என்று இறைவன் மேல் ஏற்றிக் கூறுகின்றனர். இறைவனையே படைக்கும் மனித ஆற்றலுக்கு ஈடேது? இணை ஏது?
அதனால்தான் ஒளவை கூறினாள், ‘அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்று. கூன், குருடு, பேடு நீங்கிப் பிறத்தல் அதனினும் அரிது’ என்றார். குறையோடு பிறந்தவர்களும் கொண்டாடும்படி மாபெரும் சாதனைகளைப் படைத்த வரலாறுகள் இல்லையா?
‘உலகம் ஓர் ஏணி; இதைச் சிலர் மேலே ஏறுவதற்குப் பயன்படுத்துகின்றனர்; சிலர் கீழே இறங்குவதற்குப் பயன்படுத்துகின்றனர்’ என்பது
ஒரு இத்தாலிய பழமொழி. ஏறுவது எவ்வளவு முக்கியமோ, அதைப்போல இறங்குவதும் முக்கியமே! மனித சமுதாயம் முன்னேறுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கிறது.
இந்த உலகம் யாரால் நிலைபெற்றிருக்கிறது? இந்தக் கேள்விக்கு சங்க இலக்கியமான புறநானூறு பதில் கூறுகிறது:
‘தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர்
உண்மையானே’ (புறம் - 182)
தனக்கான மட்டும் தன்னலத்தோடு வாழாமல், தன்னைச்சுற்றியிருக்கும் மற்றவர்களுக்காக வாழ் பவர்கள் இருப்பதினால்தான் உலகம் நிலை பெற்றிருக்கிறது என்று புறம் கூறுகிறது. தமிழர்களின் உலகப் பார்வைக்குச் சங்க இலக்கியங்களே சான்றாகின்றன.
‘மனித இனம் எப்படி வாழவேண்டும்?’
என்ற கொள்கையை எழுத்தாளர்களே உருவாக்கிக் கொடுக்கிறார்கள். சமுதாய மாற்றம் அவர்களால்தான் ஏற்படுகிறது. சரியான ஆட்சி அவர்களால்தான் உருவாக்கப்படுகிறது. அவர்கள் மக்களால் தேர்ந் தெடுக்கப்படாத மக்கள் பிரதிநிதிகளாகச் செயல் படுகின்றனர்.
அவர்கள் காலம்தோறும் பிறக்கின்றனர்; உழைக் கின்றனர்; உபதேசம் செய்கின்றனர்; உயர்ந்த இலக்கியங்களைப் படைத்துவிட்டு உலகத்திலிருந்து மறைந்து விடுவதில்லை. அவர்கள் படைத்த படைப்பின் மூலம் காலம் கடந்தும் வாழ்கின்றனர்.
‘நான் நிரந்தரமானவன்: அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’
என்று கண்ணதாசன் பாடுவதற்குக் காரணம் இதுவே. ஒவ்வொரு எழுத்தாளனும் தனக்கு முன் வாழ்ந்து மறைந்த படைப்பாளனின் தோள் மீது நின்று கொண்டு உலகத்தைப் பார்க்கின்றான். அந்த உலகத்தின் உயர்வுக்காகவே சிந்திக்கிறான்; செயல்படுகிறான்.
“அரச வரலாறே நாட்டு வரலாறு என நம்புவதும் ஒரு மூட நம்பிக்கைதான். இலக்கியக் கர்த்தாக்களின் படைப்புகளையும் ஆராய்வது மூலமே நாட்டு வரலாற்றை அறிய முடியும்...” என்றார் டாக்டர் மு.வ.
வரலாற்றைப் படிப்பவர்கள் மக்கள்; ஆனால் வரலாற்றைப் படைப்பவர்கள் எழுத்தாளர்கள். ஆனால், இங்கு வரலாறு என்பது அரசர்களைப் பற்றியதாகவே இருக்கிறது; மக்களைப் பற்றிய தாகவே இல்லை.
வரலாறுகள் மட்டும்தானா? இலக்கியங்களும், புராணங்களும், இதிகாசங்களும் அப்படித்தான். இறைவனையும், இறைவனுக்கு அடுத்தபடியாக மதிக்கப்பட்ட அரசனையும் பேசுகின்றன. இதனால் தான் அக்காலப் பெரும்புலவர்கள் ‘மனிதனைப் பாட மாட்டேன’ என்ற கொள்கையைக் கொண்டு வாழ்ந்தனர்.
இந்த மூடநம்பிக்கையை உடைத்தெறிந்தார். துறவி இளங்கோவடிகள்; அதுவே சிலப்பதிகாரம். கதைத் தலைவர்களாக கோவலனும், கண்ணகியும் படைக்கப்பட்டனர்; இதனால்தான் இது ‘குடிமக்கள் காப்பியம்’ என்று கொண்டாடப்பட்டது.
உலகம் தோன்றியதிலிருந்து அடிமைத்தளைகளை அறுத்தெறிவதே எழுத்தாளர்களின் வேலையாக இருந்து வருகிறது. இதனால் ஏற்படும் எல்லாத் துன்பங் களையும் இன்முகத்தோடு ஏற்றுக் கொள்ளுகிறார்கள். இந்த மாபெரும் வேள்வியில் தங்களையே ஆகுதியாக ஆக்கிக் கொள்கிறார்கள். தங்களையே முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளுகிறார்கள்.
சிந்தனையாளன் சாக்ரடீஸ் முதல் தேசிய கவி பாரதி வரை இதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தனர். புதிய நாடுகளும், புதிய நாகரிகங்களும் முளைத் தெழுந்ததற்கு அவர்களே காரணம். அவர்கள் கலகக் காரர்களாகவும், புரட்சியாளர்களாகவும் வாழ்ந்தனர்.
‘கலகத்தில் பிறப்பது நீதி’ என்பதே பழமொழி. ‘கலகம் பிறக்காமல் நீதி கிடைக்காது’ என்பது இப் போதும் நாட்டுப்புற மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் சின்னமாக அவர்கள் வாழ்ந்தனர். வாழ்வது என்பதே சிந்திப்பதும், செயல்படுவதும் தானே!
“ஓர் எழுத்தாளன் மிகுந்த ஆற்றலுடையவன். மக்களுடன் சேர்ந்து போராடும் தோழன். அவனே அவர்களின் தலைவனும், அவனே போர் வீரனாகவும், படைத்தளபதியாகவும் இருக்கிறான். ஆகவே அவன் தன்னை எப்போதும் சாதாரண மனிதனோடு ஒருங்கிணைந்த வனாகவே கருத வேண்டும்...” என்றார் மாமேதை ராகுல்ஜி.
அப்படி மக்களோடு வாழாமல் ஒதுங்கி நின்று விட்ட பல பண்டித, மகாவித்துவான்களை உலகம் மறந்துவிட்டது. அவர்கள் இயற்றிய தல புராணங்களை கறையான்கள் தின்று தீர்த்து விட்டன. அச்சுக்கு வராமல் ஓலைச்சுவடிகளிலேயே உறங்கி விட்டன;
உலக நாகரிகங்களுக்கெல்லாம் அடையாளங் களாக இருப்பவை எழுத்தாளர்களால் படைக்கப்பட்ட இலக்கியங்களே! சிந்துவெளி நாகரிகமான திராவிட நாகரிகங்களுக்கும், பொற்காலமாகப் போற்றப்படும் சங்ககாலத்துக்கும் சாகாவரம் பெற்ற சங்க இலக்கியங்களே சான்றாகத் திகழ்கின்றன.
வரலாற்றுப் புகழ்பெற்ற சுமேரிய - கால்டிய நாகரிகத்தின் பெருமைக்குக் காரணம் முதல் இலக்கியம் கண்டமையே. அதன் பின் கி.மு. 4000-ஆம் ஆண்டு எகிப்திய நாகரிகத்தின் உச்சநிலை ‘மரித்தவர்’ நூல் என்னும் இலக்கியம் படைத்ததால் அன்றோ?
கிரேக்க நாகரிகத்தின் அடையாளமாக இன்னும் இருப்பவை சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் போன்ற சிந்தனையாளர்களின் வியத்தகு படைப்பு களாகும். கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரம் அழிந்த பிறகு டாலமி மன்னர்களால் நிறுவப்பட்ட அலெக் சாந்திரியா நகரத்துக்குச் சிறப்பு சேர்ந்தவை 7 இலட்சம் நூல்களுடன் ஒரு மாபெரும் நூலகம் விளங்கியதாகும்.
சூரியனே அஸ்தமிக்காத மாபெரும் சாம்ராஜ் யத்தைக் கட்டியாண்ட பிரிட்டன் கூறியது: “நாங்கள் எங்கள் குடியேற்ற நாடுகளை வேண்டுமானால் இழப்போம். ஆனால், சேக்ஸ்பியர் இலக்கியங்களை ஒருபோதும் இழக்க மாட்டோம்....” என்று இதனால் ஒரு நாட்டின் பெருமையைத் தீர்மானிப்பவை இலக்கிய்ஙகளே என்பது தெரியவில்லையா?
செல்வங்கள் எல்லாம் அழியக்கூடியவை. ஆனால் அழியாத செல்வமான கல்வியின் அடை யாளங்கள் இவை. எடுக்க எடுக்க எப்போதும் குறையாத கருவூலங்கள்; கொடுக்கக் கொடுக்க வளர்ந்து கொண்டிருக்கும் கருவூலங்கள். ஓர் இனத்தை இல்லாமல் செய்ய வேண்டுமானால் அவர்களின் அறிவுக் கருவூலமான இலக்கியங்களை அழித்து விடுவது. இலங்கையில் சிங்கள ஆட்சி யாளர்களால் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதும் இதற்காகத்தான்!
இலக்கியமும், சமூகக் கொடுமையும் மோதும் போது நாம் இலக்கியத்தின் பக்கம் நிற்போம்; இலக்கியமும், மனிதனும் மோதும்போது நாம் மனிதனின் பக்கம் நிற்போம்; ஏனென்றால் எல்லா இலக்கியங்களும் மனிதர்களுக்காகவே எழுத்தாளர் களால் படைக்கப்பட்டவை.
ஒரு நூலை இலக்கியம் என்று எப்படித் தெரிந்து கொள்வது? இது பற்றி புதுமைப்பித்தன் இப்படிக் கூறுகிறார்: “ஒரு நூல் இலக்கியமா? அல்லவா? என்பது அதன் அமைப்பைப் பொருத்துத்தான் இருக்கிறது. ‘தட்சிணத்து சரித்திர வீரர்’ என்று மகாதேவையா ஒரு சரித்திர நூல் எழுதினார். ஸ்ரீனிவாசய்யங்காரும் ‘பல்லழு சரித்திரம்’ எழுதி யுள்ளார். இரண்டும் சரித்திரம்தான். முன்னது இலக்கியம். பின்னது சரித்திரம் அல்ல, வெறும் பஞ்சாங்கம். சரித்திரத்தை இலக்கியத்தின் வாயிலாகத் தான் அறிய முடியும்...”
கருத்து வேறுபாடு கலை இலக்கியங்களில்தான் ஏற்பட முடியும். கணக்கியலில் முடியாது. அதனால் தான் ‘கலை கலைக்காகவே’ என்றும், ‘கலை மக்களுக்காகவே’ என்றும் வாதாட முடிகிறது. வானத்துக்குக் கீழே படைக்கப்பட்டவையெல்லாம் மக்களுக்காகவே என்னும்போது கலையும், இலக்கியமும் அந்தரத்தில் நின்று ஆடமுடியுமா?
வானத்தில் வல்லூறு எவ்வளவு நேரம்தான் வட்டமிட்டு ஆடினாலும் பூமிக்கு வந்துதான் ஆக வேண்டும். பொய்யான உமியை உரலில் இட்டு குத்திப் பொங்கலிட முடியுமா? காற்றைத் தின்று கடும்தவம் செய்வது யாருக்காக என்பதில்தான் கருத்து வேறுபாடுகளே தோன்றுகின்றன. ‘கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே’ என்று ஊருக்கு உபதேசம் செய்கின்றனர்.
மக்கள் எழுத்தாளர்கள் இவர்களின் முகமூடிகளைக் கிழித்து எறிகின்றனர். முகமூடி கிழிக்கப் பட்டு அம்பலமாகிப்போன அவர்கள் அரசியல் பேசுவதாக அங்கலாய்க்கின்றனர். ‘உங்களுக்கு அரசியல் இல்லையா?’ என்று அவர்களைப் பார்த்துத் திருப்பிக் கேட்கின்றனர்!