mathavan writerமுன்னுரை:

திருவனந்தபுரம் சமஸ்தான ஆட்சிக் காலத்தில், செங்கோட்டையோடு தொடர்புடைய பல்துறை ஆளுமைகள் தோன்றினர். அவ்வாறு தோன்றிய ஆளுமைகளில் குறிப்பிடத் தகுந்தவர் செங்கோட்டையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் இலக்கிய படைப்பாளியான ஆ. மாதவன் அவர்கள்.

ஆ. மாதவன் அவர்கள் திருவனந்தபுரத்தில் பிறந்திருந்தாலும், அவருடைய பூர்விகம் மற்றும் தமிழ் இலக்கியப் பங்களிப்பு போன்ற காரணங்களினால் இவர் தமிழ் இலக்கியவாதியாகவே அறியப்படுகின்றார்.

ஆ. மாதவன் அவர்களுடைய பெரும்பான்மையான இலக்கியப் படைப்புகள் ஒரு கடைத் தெருவையும் அங்கு நடைபெறும் சம்பவங்களையும் மையப்படுத்தியே அமைந்துள்ளதால், இவர் தமிழ் இலக்கிய வாசகர்களால் "கடைத்தெருவின் கலைஞன்" என்று அழைக்கப்படுகின்றார்.

ஆ. மாதவன் அவர்கள் தம்முடைய இலக்கியப் படைப்புக்களுக்காக மாநில மற்றும் மத்திய அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் இலக்கிய படைப்பாளியான ஆ. மாதவன் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வு மற்றும் சாதனைகளைக் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

பிறப்பு:

செங்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் கலால் ஒப்பந்தக்காராக திருவனந்தபுரத்தில் பணியாற்றினார். ஒப்பந்த தொழிலின் மூலம் அதிக வருமானம் ஈட்டியதன் காரணமாக தன்னுடைய குடும்பத்தை செங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு அழைத்து வந்தார்.

சோமசுந்தரம் பிள்ளைக்கு இரண்டு மனைவியர்கள், அவர்களில் முதல் மனைவிக்குப் பிறந்த மூத்த மகன் S. ஆவுடை நாயகம் பிள்ளை ஆவார்.

அடிப்படைக் கல்வியை முடித்திருந்த ஆவுடை நாயகம் பிள்ளையவர்கள் பாளையம் மற்றும் நாகர்கோயில் இடையே ஓடிக் கொண்டிருந்த பயோனிக் மோட்டார் – கம்பெனியைச் சார்ந்த பேருந்து ஒன்றில் நடத்துனராக பணியாற்றினார். பின்பு பகவதியம்மாள் எனும் பெண்ணை மணந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன, குழந்தைகள் பிறந்த சிறிது காலத்திற்குள் பகவதியம்மாள் மறைந்தார்.

அதன்பின்பு ஆவுடை நாயகம் பிள்ளையவர்கள் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மாதேவன் பிள்ளை மற்றும் பார்வதியம்மாள் தம்பதியரின் இரண்டாவது மகளான செல்லம்மாள் என்பவரை மணந்தார். தன்னுடைய மகனின் இரண்டாவது திருமணத்தில் சிறிதும் விருப்பமில்லாத காரணத்தினால் சோமசுந்தரம் பிள்ளைக்கும் ஆவுடை நாயகம் பிள்ளைக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டது.

ஆவுடை நாயகம் பிள்ளை - செல்லம்மாள் தம்பதியருக்கு ஆ. செல்வமணி, ஆ. ஆறுமுகம், ஆ. சண்முகம், ஆ. மாதவன், ஆ. சோமசுந்தரம் மற்றும் ஆ. சாந்தி ராமச்சந்திரன் என்று ஆறு குழந்தைகள் பிறந்தனர். இத்தம்பதியரின் நான்காவது மகனாக 1934-இல் ஆ. மாதவன் திருவனந்தபுரத்தில் பிறந்தார்.

அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள், போதிய வருமானமின்மை மற்றும் பூர்விகச் சொத்துக்கள் எதுவும் கிடைக்கப் பெறாத காரணங்களினால் ஆவுடை நாயகம் பிள்ளையவர்களின் குடும்பம் வறுமையில் உழன்றது.

பள்ளிப்படிப்பு:

குடும்பச் சூழலின் காரணமாக ஆ. மாதவன் அவர்களின் அண்ணன்கள் மூவருமே ஐந்து அல்லது ஆறாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டு சாலைத் தெருவிலுள்ள கடைகளுக்கு வேலைக்குச் சென்றனர். ஆ. மாதவன் அவர்கள் திருவனந்தபுரம் தைக்காட்டில் இயங்கிக் கொண்டிருந்த (ஐந்தாம் வகுப்பு வரை ஆண் குழந்தைகளை அனுமதிக்கும்) மகளிர் பள்ளியில், ஒன்றாவது வகுப்பு பயின்றார். பின்பு அங்கிருந்து விலகி சாலை எம்.எம். நடுநிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

மலையாளம் நடுநிலைப் பள்ளியில் ஏழெட்டு வருடகாலம் மட்டுமே கல்வி பயின்ற அவர் பள்ளிக்கட்டணம் செலுத்தமுடியாத காரணத்தினால் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். அதன் பின் 1949-ஆம் ஆண்டுவாக்கில் தன்னுடைய அண்ணன் செல்வமணி அவர்கள் தொடங்கிய கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

குடும்ப வாழ்க்கை:

ஆ. மாதவன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சார்ந்த சூரியகுமாரி எனும் சாந்தாவை 1966-ஆம் வருடம் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு கலைச்செல்வி, மலர்ச்செல்வி என்ற இரு மகள்களும், கோவிந்தராஜன் என்ற மகனும் பிறந்தனர். இவருடைய மனைவி சூரியகுமாரி 2002-இல் இறந்தார்.

இதன் பிறகு ஆ. மாதவன் அவர்களின் ஒரே மகனான கோவிந்தராஜனும் தன் முப்பத்தைந்தாம் வயதில் (2004-ல்) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

திருவனந்தபுரம் சாலைத் தெருவில் செல்வி ஸ்டோர் என்ற பாத்திரக் கடையை தன்னுடைய 75 வயது (2009) வரை நடத்திவந்த ஆ.மாதவன் அவர்கள் தற்சமயம் தன்னுடைய இரண்டாவது மகளான மலர்ச்செல்வியோடு திருவனந்தபுரம் வீட்டில் வசித்து வருகின்றார்.

எழுத்துப்பணியும் - திராவிட இயக்கமும்:

ஆ. மாதவனின் அண்ணனான செல்வமணி அவர்கள் வாங்கிவரும் ஆனந்தபோதினி – போன்ற தமிழ்ப் பத்திரிகைகளில் "படம்" பார்ப்பதன் மூலமே ஆ. மாதவனின் வாசிப்பு ஆர்வம் துளிர்க்கத் தொடங்கியது. மலையாள வழியில் கல்வி பயின்ற போதிலும் தானாகவே தமிழை எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார்.

இளம்வயதிலேயே கல்கியின் அலை ஓசை, தேவனின் துப்பறியும் சாம்பு, லட்சுமியின் மிதிலாவிலாஸ், வைக்கம் முகமது பஷீரின் பாத்துமாவின் ஆடு போன்ற புதினங்களையும், இமயம் மற்றும் பேரிகை போன்ற சிற்றிதழ்களை படித்ததன் வாயிலாக தன்னுடைய இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

இலக்கியத்தில் எவரையுமே குருவாக கருதாத ஆ. மாதவன் அவர்கள், மலையாள குங்குமம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த இளஞ்சேரன் எனும் புனைப்பெயரைக் கொண்ட ராமகிருஷ்ணன் அவர்களை குருவினுடைய இடத்தில் வைத்து மதித்தார்.

ஆ. மாதவன் அவர்களின் எழுத்துப்பணி என்பது திராவிட இயக்கம் சார்ந்த பத்திரிகைகள் மற்றும் எழுத்தாளர்களின் தத்துவமயக்க மொழிநடையினை அடிப்படையாகக் கொண்டே உத்வேகம் பெற்றது. இவருடைய ஆரம்பகால எழுத்துக்களில் திராவிட இயக்கக் கொள்கைகளின் தாக்கத்தை உணரலாம்.

ஆ. மாதவன் அவர்கள் தன்னுடைய இருபத்திரெண்டு வயதிற்கு பிறகே இலக்கிய துறைக்குள் பிரவேசித்தார். இவருடைய ஆரம்பகால இலக்கியப்பணி என்பது மொழிபெயர்ப்பு சார்ந்ததாக மட்டுமே இருந்தது.

இலக்கியப் பங்களிப்புகள்:

ஆ.மாதவன் அவர்களின் பெரும்பாலான கதைகள் திருவனந்தபுரம் சாலைத் தெருவை மையப்படுத்தியே எழுதப்பட்டுள்ளன. இதன் காரணமாக இலக்கிய அன்பர்கள் இவரைக் கடைத் தெருவின் கதைசொல்லி / கலைஞன் என்று அழைப்பர்.

ஆ. மாதவன் கதைகளின் மூலமாகத்தான் தமிழிலக்கியத்தில் ஒரு கடைத் தெருவானது இலக்கியப்பதிவு பெறுகின்றது என்றால் அது மிகையில்லை. இவருடைய ஆரம்பகால படைப்புகள் “சிறுகதை”, “இமயம்” மற்றும் “பேரிகை” போன்ற இதழ்களில் வெளிவந்தன.

மொழிபெயர்ப்புகள்:

1. 1955 - இல் ‘விக்டர் ஹியுகோவின் ‘கழுமரம்’ என்ற குறுநாவலை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து பன்னிரெண்டு பகுதிகளாக "சிறுகதை" எனும் இதழில் பிரசுரித்தார்.
2. மாப்பசானின் “கொழுப்பு உருண்டை” எனும் குறுநாவலை “விலைமகள்” என்ற தலைப்பிட்டு மொழிபெயர்த்து பத்து பகுதிகளாக "சிறுகதை" எனும் இதழில் பிரசுரித்தார்.
3. டெகாமரண் கதைகளை மொழிபெயர்த்து அவற்றை "பகுத்தறிவு" எனும் மாத இதழில் பிரசுரித்தார்.
4. யேசு கிறிஸ்துவின் பிறப்பினை தவறாக சித்தரிக்கும் மலையாளக் கதையை தமிழில் மொழிபெயர்த்து "திராவிடன்" எனும் வார இதழில் பிரசுரித்தார்.
5. மலையாள எழுத்தாளர் மலையாற்றூர் ராமகிருஷ்ணனுடைய "யக்ஷி" எனும் நாவலை தமிழில் யட்சி என்ற தலைப்பிட்டு மொழிபெயர்த்தார்.
6. மலையாள எழுத்தாளர் பி.கெ.பாலகிருஷ்ணனின் "இனி ஞான் உறங்ஙட்டே" எனும் நாவலை தமிழில் இனி நான் உறங்கட்டும் என்ற தலைப்பிட்டு மொழிபெயர்த்தார்.

கட்டுரைகள்:

1. அப்டன் சிங்களையர், ஹெமிங்வே, எமிலி, ஜோலா, தாமஸ் மான் போன்ற எழுத்தாளர்களைப் பற்றிய பல கட்டுரைகளை எழுதினார்.
2. வைக்கம் முகமது பஷீரின், "பிரேம லேகனம்", "விசப்பு" மற்றும் "மதிலுகள்" போன்ற பிரபலமான நாவல்களைப் பற்றி எழுதிய விமர்சனக் கட்டுரைகள் திராவிடன் இதழில் வெளிவந்தன.
3. "உனக்கும் எனக்கும் உறவுகாட்டி" எனும் கட்டுரை வடிவ கதையானது கவிஞர் கண்ணதாசன் அவர்களின் தென்றல் இதழில் பிரசுரமானது.

சிறுகதைகள்:

1.“மேல் நாட்டுச் சிறுகதைகள்" என்ற தலைப்பில் எழுதப்பட்ட பல சிறுகதைகள், "சிறுகதை" என்ற இதழில் தொடர்ச்சியாக வெளியாகியது.
2. "அர்ச்சனை" எனும் சிறுகதையை அரு.ராமநாதனின் “காதல்” எனும் மாத இதழ் பிரசுரித்தது.

புதினங்கள் (நாவல்கள்):

1. "காளை" என்ற குறுநாவலை வாசகர் வட்டம் வெளியிட்டது.
2. "எட்டாவது நாள்" எனும் குறுநாவல் தாமரை இதழில் வெளியானது.
3. புனலும் மணலும் (1974)
4. கிருஷ்ணப்பருந்து (1982)
5. தூவானம் (1990)

கதைகள்:

1. "நான்காவது காதல்" என்றொரு கதை இமயத்தில் வெளிவந்தது.
2. புத்தக வடிவில் வெளிவந்த இவருடைய முதல் கதையான “மோகபல்லவி” 1974-இல் சென்னை கலைஞன் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.
3. சாலைத்தெருவை பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட 16 கதைகளை தொகுத்து "கடைத் தெருக்கதைகள்" எனும் தலைப்பில் 1974-இல் வெளியிடப்பட்டது.
4.“காமினிமூலம்” எனும் கதையானது 1975-இல் சென்னை கலைஞன் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.
5. நா. பார்த்தசாரதியால் துவங்கப்பெற்ற தீபம் இலக்கிய மாத இதழில் "பாச்சி" கதை வெளியானது.
6. தோழர் ப. ஜீவானந்தம் அவர்களின் தாமரை மாத இதழில் "பதினாலு முறி" என்ற கதை வெளியானது.
7. கணையாழியின் வருடமலரில் இவருடைய "தண்ணீர்" கதை வெளியானது.
8. மாதவன் கதைகள் (1984)
9. ஆனைச்சந்தம் (1990)
10. அரேபியக்குதிரை (1995)
11.“ஆ.மாதவன் கதைகள்”, முழுத்தொகுப்பு 2002, தமிழினி பதிப்பகம் வெளியீடு.

திறனாய்வு கட்டுரைத்தொகுப்பு:

1. இலக்கியச்சுவடுகள் (2013)

பொறுப்புக்கள்:

1. 1963-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாக (1978-இல்) வருகின்ற “கேரளத்தமிழ்” எனும் மாத இதழின் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
2. 1981-ஆம் ஆண்டில் தீபம் இதழின் ஆசிரியர் குழுவில் அங்கத்தினராக இணைந்தார்.
3. 2002 முதல் 2006-ஆம் ஆண்டு வரையிலும் மத்திய சாகித்ய அகடாமியின் தமிழ்மொழி தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்:

ஆ. மாதவன் அவர்கள் மாநில மற்றும் மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளார். இதுதவிர தனியார் இலக்கிய இதழ்கள், கட்சிப்பத்திரிக்கை, திருப்பூர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் மற்றும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஆகிய அமைப்புகளின் விருதினையும் கவுரவத்தையும் பெற்றுள்ளார்.

1. ஜெயபேரிகை என்ற கட்சிப்பத்திரிகை, 1958-இல் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசாக ரூ 100/-ஐ வென்றார்.
2. புலவர் அறிவுடை நம்பி அவர்கள் நடத்திவந்த "செண்பகம்" இதழினுடைய பொங்கல் மலரில் ஆ.மாதவனின் கதையொன்றை வெளியிட்டு, அவருக்கு “சிறுகதைச் செல்வர்” என்று பட்டம் வழங்கினார்.
3. ஆ. மாதவனின் “அரேபிய குதிரை”, எனும் சிறுகதைத் தொகுப்பிற்கு, 1994-ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு திருப்பூர் தமிழ்ச் சங்கத்தால் வழங்கப்பட்டது. (இதுவே ஆ. மாதவன் பெற்ற முதல் இலக்கிய விருதாகும்).
4. 2002 ஆண்டிற்கான பெருங்கவி உள்ளூர் S. பரமேஸ்வர அய்யர் நினைவுப் பரிசை திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் ஆ. மாதவனுக்கு வழங்கியது.
5. 2009-ஆம் ஆண்டு தமிழக அரசின் இயல் துறைக்கான கலைமாமணி விருது ஆ. மாதவனுக்கு வழங்கப்பட்டது.
6. விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு வழங்கும் விஷ்ணுபுரம் விருது 2010-ஆம் ஆண்டு ஆ. மாதவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
7. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஆ. மாதவன் அவர்களை வாசகர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் பொருட்டு “கடைத் தெருவின் கலைஞன்” என்னும் நூலினை எழுதி 19-12-2010-இல் கோவையில் நடைபெற்ற விஷ்ணுபுரம் இலக்கிய விருது நிகழ்வில் வெளியிட்டார்.
8. 2015-ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அகாதமி விருதானது, அவருடைய இலக்கியச்சுவடுகள் (2013) எனும் திறனாய்வு கட்டுரைத்தொகுப்பிற்காக வழங்கப்பட்டது.

முடிவுரை:

1974 தொடங்கி ஏகதேசமாக 1985 வரையிலான காலவெளியை ஆ. மாதவன் அவர்களின் இலக்கிய வாழ்வின் பொற்காலமாகக் கருதலாம். ஏனெனில் இக்கால இடைவெளியில் தான் ஆ. மாதவனின் பல படைப்புகள் வெளியாகியுள்ளன.

திருவனந்தபுரம் சாலைத் தெருவில் சஞ்சரிக்கும் பல்வேறுதரப்பட்ட மக்களின் வாழ்வியலை நுட்பமாக பதிவுசெய்ததன் மூலம் ஆகச் சிறந்த இலக்கிய ஆளுமையாக ஆ. மாதவன் பரிணமிக்கிறார்.

ஆ. மாதவன் அவர்கள் மலையாள வழியில் கல்விக்கற்ற போதும் தன்னுடைய உன்னத இலக்கியப் படைப்பின் வழியாக தமிழ் இலக்கியவாதியாகவே தன்னை முன்னிறுத்துகிறார். இதுதவிர அனைத்து ஊடகங்களும் இவரை கேரளாவில் வசிக்கும் தமிழ் இலக்கியவாதியாகவே அடையாளப்படுத்துகின்றன.

ஆ. மாதவன் அவர்களை தமிழ் இலக்கியவாதியாக அடையாளப்படுத்துவது, அவருக்கு தமிழ் மொழியோடு இருக்கும் தொடர்பு மட்டுமே காரணம் இல்லை. மாறாக அவருக்கு தமிழ் நிலத்தோடும் இருக்கும் தொடர்பும் தான், இத்தகைய நிலம் சார்ந்த தொடர்பு என்பது அவருடைய மூதாதையர் வாழ்ந்த பகுதியை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றது. இத்தகைய காரணங்களினால், இவரை செங்கோட்டையின் இலக்கிய ஆளுமையாக அடையாளப்படுத்துவதில் எவ்வித முரணும் இல்லையென்றே கருதலாம்.

குறிப்புகள்:

1. S. ராமகிருஷ்ணன் (2009). அழியாச் சுடர்கள்: சாலைத் தெரு - ஆ.மாதவன் (கட்டுரை-16-12-2009). https://azhiyasudargal.wordpress.com /2009/12/16/
2. B. ஜெயமோகன் (2010). காந்தளூர்ச்சாலையின் கலைஞன் (கட்டுரை-09-11-2010). https://www.jeyamohan.in/9174/
3. திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி (27-11-2010). https://www.jeyamohan.in/9383/
4. திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2 (28-11-2010). https://www.jeyamohan.in/9385/
5. திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 3 (29-11-2010). https://www.jeyamohan.in/9389/
6. B. ஜெயமோகன் (2010). கடைத் தெருவின் கலைஞன், முன்னுரை (கட்டுரை-19-12-2010). https://www.jeyamohan.in/9395/
7. B. ஜெயமோகன் (2018). கடைத்தெருவை கதையாக்குதல்…(கட்டுரை-29-10-2018). https://www.jeyamohan.in/9185/

- முனைவர் ரமேஷ் தங்கமணி

Pin It