சங்க இலக்கியத்திலுள்ள அணல் எனும் சொல்லுக்குத் ‘தாடி’ என்று பொருள். மை அணல் என்றால் கருமையான, கருத்த தாடி என்பதாகும். அணல் என்பது சங்க காலத்தில் தாடியைக் குறித்தாலும் இன்றைக்கு இச்சொல் பயன்பாட்டில் இல்லை என்றே கருத முடிகிறது. ‘தாடி’ என்பதே வழக்கத்தில் இருக்கிறது. இன்று நாம் அழகின் அடையாளமாகவும் வருத்தத்தின், இழப்பின் குறியீடாகவும் தாடியைப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு தாடிக்கும் ஒரு கதை உண்டு.
தலையிலும் முகத்திலும் முடிவளர்த்துக் கொள்வதும் மழித்துக் கொள்வதும் வழக்கம் என்பது சங்க காலந்தொட்டே இருக்கிறது.
‘மழித்தலும் நீட்டலும்' எனத் திருவள்ளுவர் கூறுவதிலிருந்து அறியமுடிகிறது. மழித்தல் என்னும் வினையினால் தலைமயிர் என்னும் செயப்படுபொருள் உணரப்படும் என்கிறார் தேவநேயப் பாவாணர்.
மழித்தல் என்பதற்கு வழக்கில் சவரம் எனப்படுகிறது. (முகச் சவரம், தலைச் சவரம், சவரத் தொழிலாளி, சவரக் கத்தி) முகம் மழித்தல் என்பதும் வழக்கிலிருக்கிறது. பிளேடை பாவலரேறு பெருஞ்சித்திரனார் ‘மழிதகடு’ என்றே சொல்கிறார்.அணல் என்பதன் பொருள்:
அணல் என்பதற்கு கழுத்து, மேல்வாய்ப்புறம், கீழ்வாய்ப்புறம், மிடறு, தாடி, அலைதாடி எனப் பல பொருள் படுகிறது.
‘அணல்’ என்னும் சொல்லைக் குறிக்க மேல்வாய்ப்புறம், உண்மிடறு எனப் பிங்கல நிகண்டு குறிக்கிறது.
‘அலைதாடி’ என்பது மாட்டுக் கழுத்தின் கீழ்ப்புறம் தொங்கும் தோலைக் குறிக்கிறது. அதாவது தசையைக் குறிக்கிறது.
‘கீழ்வாய்ப்புறம்’ எனத் திவாகரம் நிகண்டு குறிக்கிறது.
‘அணல்’ என்பதற்கு ‘மிடறு’, ‘உண்மிடறு’ என்று சூடாமணி நிகண்டு, பிங்கல நிகண்டு, கயாதரம் நிகண்டு, நாமதீபம் பொருள் தருகிறது.
மை அணல்: இளமையும் அடையாளமும்:
சங்க இலக்கியம் தாடியை ‘அணல்’ என்று குறிப்பிடுகிறது. சங்கப் பாடல்களில் உடன்போக்கு சென்ற தலைவி, எப்படிப்பட்ட ஆண்மகனுடன் சென்றிருக்கிறாள் என்பதைக் குறிக்கும்போது அவள் வீரமுள்ள ஆண்மகனுடன்தான் சென்றாள் என்பதற்கு ‘மை அணல் காளை’ என்று தலைவனை அடையாளப்படுத்துகிறது. ஆண்மையின் அடையாளமாகத் தாடி விளங்குகிறது.
”எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி”
பாலை நிலத்தில் வழிப்பறி செய்வோரின் தாடி இரலை மானின் தாடியைப் போன்று இருந்ததைக் கலித்தொகை 15ஆவது பாடல் சுட்டுகிறது. இப்பாடலில் தாடி என்றே வந்துள்ளது.
"புலி போத்து அன்ன புல் அணல் காளை” (பெரும்பாண்.138) ஆண்புலியைப் போன்ற புல்லென்ற தாடியையுடைய தலைவன் என்பது பொருளாகும். இங்கே அணல் என்பது தாடியைச் சுட்டுகிறது.
“உள் இறைக் குரீஇக் கார் அணல் சேவல்” (நற்றிணை.181)
இப்பாடலடியிலுள்ள ‘அணல்’ என்னும் சொல் கழுத்தைக் குறிப்பிடுகிறது.
“கறைஅணற் குறும்பூழ்” (பெரும்பாண்.205) இப்பாடலடியிலும் அணல் என்பது கழுத்தைக் குறிப்பிடுகிறது.
“மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன” (அகம்;187)
என்று கோழியின் தாழ் மயிரையும்
“வைவால் ஓதி மை அணல்” (அகம்;125)
என்று ஓந்தியின் தாடியையும் குறிப்பிடுவதை அறியமுடிகிறது.
“நிலம் தூங்கு அணல் வீங்கு முலைச் செருத்தல்” (குறுந்;344)
இப்பாடலடி ஆவினத்தின் கழுத்தில் தொங்கும் தோலை ‘அணல்’ எனும் சொல்லால் குறிப்பிடுகிறது. அதாவது அலை தாடியைக் குறிப்பிடுகிறது.
சங்கப் பாடல்கள் மனிதர்களின் தாடியை மட்டும் குறிப்பிடாமல் கோழி, சேவல், ஓந்தி, குரங்கு ஆகியவற்றின் தாழ் கழுத்து மயிரையும் ‘அணல்’ என்றே குறிப்பிடுகிறது.
“திருந்து இழைமுன்கை அணல் அசைத்து ஊன்றி
இருந்து அணை மீது பொருந்துழிக் கிடக்கை” (அகம்;351)
இங்கே அணல் என்பது தாவாயைச் சுட்டுகிறது.
“மதி உடம்பட்ட மை அணற்காளை
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து” (அகம்; 221)
இளந்தாடி கொண்ட தலைவன் என்பதைச் சுட்டுகிறது.
“அடிபுனை தொடுகழல் மை அணல் காளைக்கு என்
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே” (புறம்; 83)
கழல் அணிந்த கால்களையும் கருநிறத் தாடியையுமுடைய காளைபோன்ற நற்கிள்ளி மேல் நான்கொண்ட காதலால் என் கை வளைகள் கழல்கின்றன. ஆகவே நான் காதல்கொண்ட செய்தி என் தாய்க்குத் தெரிந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன் என்ற நக்கண்ணையார் பாடலில் கருநிறத் தாடி என்பது இளமையையும் ஆண்மையையும் புலப்படுத்துவதாக அமைகிறது.
முகத்தில் புல் போல தாடி இருக்கிறதே அதை மழிக்க வேண்டியதுதானே என்று இன்று சொல்கிறோமே, அதைப்போல புறநானூற்றுப் பாடலில் ஒரு வீரனுக்குப் புற்களைப்போல தாடி இருந்ததை
“புலம் புக்கனனே! புல் அணல் காளை” (புறம்; 28)
என்று இப்பாடலடி சுட்டுகிறது.
“மை அணற் காளையொடு பைய இயலி” (ஐங்; 389)
“மை அணற் காளை பொய் புகலா
அருஞ்சுரம் இறந்தனள் என்ப” (நற்.179)
“மை அணல் எருத்தின் முன்பின் தடக்கை
வல்வில் அம்பின் எய்யா வண்மகிழ்த்
தந்தை தண் ஊர் இதுவே” (நற்.198)
’அணல்’ என்றால் தாடி. மை அணல் என்றால் கருமையான தாடியைக் குறிக்கிறது. ‘மை அணல்’ என்று வரும் பாடலடிகள் எல்லாம் தலைவனின் இளமையையும் ஆண்மையையும் உணர்த்துகிறது. கருந்தாடி ஆண்மை, வீரம், வலிமை, பெருமிதம், மகிழ்ச்சி, கம்பீரம், துக்கம் ஆகியவற்றின் அடையாளமாக விளங்குகிறது.
தாடி என்பது வருத்தத்தின் அடையாளமாகவும் குறிக்கப் பெறுகிறது. ஒருவரை அடையாளப்படுத்தும் விடயமாகவும் இருக்கிறது. ஆனால் இன்றைய காலத்தில் தாடியை விரும்பும் ஆண்பிள்ளைகளையும், தாடி வைத்த ஆண்மகனை விரும்பும் பெண்பிள்ளைகளையும் பார்க்கமுடிகிறது. தாடி என்பது இன்று தன் அழகுக்காக வைத்துக்கொள்கிறார்கள். தற்காலத்தில் விதவிதமான தாடிகளை வைத்துக்கொள்கின்றனர். தாடி வைக்க விரும்புவோர் அதிகம் வளரவிடாமல் நேர்த்தியாக அழகை மெருகூட்டிக் கொள்கின்றனர். அதை ‘tக்ஷீவீனீ’ பண்ணுவது என்கிறார்கள். இந்த வழக்கம் சங்க காலத்திலும் இருந்திருக்கிறது.
“குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய்
செவி இறந்த தாழ்தரும் கவுளன்” (புறம்; 257)
தலைவன் குறுந்தாடி வைத்திருந்ததையும் காதுகளை மறைக்கும் அளவு தலைமுடி வளர்ந்திருந்ததையும் இப்பாடலடி குறிப்பிடுகிறது.
“திரை அணல் கொடுங்கவுள் நிறைய முக்கி” (நற்;22)
என்பதில் ‘அணல்’ எனும் சொல் மோவாயைக் குறிக்கிறது.
ஆக சங்கப் பாடல்களில் ‘அணல்’ எனும் சொல் தாடி, அலைதாடி, கழுத்து என்னும் பல பொருளைக் குறிக்கும் சொற்களாக உள்ளன.
மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தால் ஆண்கள் தாடி வளர்ப்பது வழக்கம், மனைவியை இழந்தவர் தாடி வைப்பது, காதல் நிறைவேறவில்லை என்றால் எனப் பல வகைக் காரணங்களால் ஆண்கள் தாடி வளர்க்கிறார்கள் எனக் கி.ரா.வும் ’கோபல்ல கிராமத்தில்’ தாடி குறித்து பதிவு செய்திருக்கிறார்.
தொண்டு செய்து பழுத்த பழத்தின் தூய தாடி:
காரல் மார்க்ஸ் -அடர்த்தியான தாடி , இரவீந்தரநாத் தாகூர் - நீண்ட தாடி. இன்னும் பலருடைய தாடிகள் அவர்களை அடையாளப்படுத்தும் விதமாக உள்ளது.
தவக்கோலம் பூண்டவர்கள், சித்தர்கள், ஞானிகள், தத்துவவியலாளர்கள், சிந்தனைவாதிகள், கருத்தியலாளர்கள், அறிவியலாளர்கள் தாடி வைத்திருப்பர். ஆனால் இன்றோ தாடி வைத்துக் கொள்வதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
“தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக் குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்”
என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். பெரியார் என்றாலே நினைவுக்கு வருவது அவருடைய தாடியும், கைத்தடியும்தான். நமக்கு வேண்டியவர் யாராவது தாடி வைத்திருந்தால் அவர் எதற்கு வைத்திருக்கிறார் என்று கேட்கத் தோன்றும். அப்படித்தான் பெரியாரின் தாடி குறித்து பெரியாரின் நண்பர்களிடையே விவாதம் எழுந்துள்ளது.
“அய்யா தாடி வளர்ப்பது ஏன்? என்று அவருடைய நண்பர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டபொழுது ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமாக பெரியார் சொன்னதாகப் பேச்சு வருகிறது.
முக அழகுக்காக தாடி வளர்ப்பதாக என்னிடம் சொன்னார் என்றாராம் மாயவரம் நடராசன் அவர்கள்.
ரஷ்ய அறிஞர்கள் எல்லோரும் தாடி வைத்துள்ளனர். அவர்களைப் பார்த்தபின் வைத்தேன் என்று என்னிடம் கூறினாரே என்றாராம் எஸ்.வி.லிங்கம் அவர்கள்.
சவரச் செலவு தினமும் நாலணா மிச்சமாகிறது என்றாரே என்னிடம் என்றாராம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.
கொஞ்ச நேரம் என்றாலும் இன்னொருவரிடம் தலைகுனிந்து உட்காருவது தன்மானக் கேடாக உள்ளது என்றாரே என்னிடம். இது பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள்.
மேடைஏறி பலரைத் தாக்கித் திட்டும்போது, போனால் போகிறான் கிழவன், வயதானவன் என்று விட்டுவிடுவார்கள் என்று சொன்னாரே என்னிடம். இது பூவாளூர் பொன்னம்பலனார்.
ஆளுக்கு ஒன்றாக பெரியாரின் தாடியைப் பற்றி விவாதிக்கும்பொழுது முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் தூங்குங்கள் நாளை உங்களுக்கு உண்மையான காரணத்தை பெரியாரிடமே கேட்டுச் சொல்கிறேன் என்றாராம்.
உள்ளபடியே தந்தை பெரியார், தினமும் பத்து நிமிடம் வீதம் மாதம் 300 நிமிடங்கள் வீணாகிறதே. பல நல்ல காரியங்களை இந்த நேரத்தில் செய்யலாமே என்று நினைத்து விட்டேன். வேறெதும் காரணமில்லை என்று கூறியதாக அனைவரிடமும் கூறினாராம். அதைக்கேட்டு அனைவரும் சிரித்திருக்கிறார்கள். ஒருமுறை ரயில் நிலையத்திலிருந்து வந்தபோது எதிரில் வந்த ஒருவர் பெரியாரைப் பார்த்து நீங்கள் ஏன் தாடி வைத்துள்ளீர்கள் என்று கேட்டபோது, ‘எனக்கு பிளேடு செலவு மிச்சம், உனக்கு என்ன நஷ்டம்’ என்று கூறினாராம். இது தந்தை பெரியாரின் தாடி குறித்த நிலைப்பாடு.
நாவிதர்களின் அடையாளங்களும் வழக்காறுகளும்
நடைமுறையில் முடிவெட்டவும், சவரம் செய்தலையும் செய்யும் நாவிதர்கள் 16 ஆம் நூற்றாண்டில் பல்கலைக் கழகத்தில் அறுவை மருத்துவர்களாகவும், அறுவை மருத்துவர்களுக்கு முன்னோடிகளாகவும் இருந்தனர் எனும்போது வியப்பே மிஞ்சுகிறது. காலங்காலமாகச் சிற்றூர்களில் காடு கரைகளில் வேலை செய்யும் உழைப்பாளிகள் என யாராக இருந்தாலும் காலில் முள் குத்திவிட்டால் அதை எடுக்க முடியாத நிலையில் நாவிதரை நாடுவது வழக்கம். அவர் எளிதாக எடுத்துவிடுவார். இது நாவிதர்கள் அறுவை மருத்துவத்தின் முன்னோடிகள் என்பதைக் காட்டுகிறது.
தமிழர்களின் வாழ்வியலோடு கூடிய சடங்கு முறைகளில் முக்கிய பங்கும் அங்கமும் வகிப்பவர்கள் அருந்ததியர், வண்ணார், நாவிதர் சமூகத்தினர் ஆவர். தமிழில் அம்பட்டையர், அம்பட்டர், நாவிதர், நாசுவர், பண்டிதர், பண்டுவர், மருத்துவர், பரியாரி, குடிமகன், சவரக்காரர், முடி ஒப்பனையாளர், கிராமணி, ஏனாதி எனப் பல பெயர்கள் உண்டு. தெலுங்கு பேசும் நாவிதர்கள் மங்களா என்றும் மலையாளத்தில் வேலக்கட்டல நாயர் என்றும் அழைக்கப்படுகின்றனர். இதையே பார்பர் என அழைக்கும் வழக்கும் உள்ளது. ஆனால், சமூகம் இவர்களைப் பார்வையிலிருந்துகூட தள்ளியே வைத்திருப்பது சமூக அவலம். நகரமயமாதல், நாகரீகமயமாதல், உலகமயமாதல் சூழலில் நாவிதர்கள் தங்களின் அடையாளங்களை இழந்து வருகின்றனர். இன்றைய சூழலில் நகர்ப்புறங்களில் முடிதிருத்தகம்(சலூன் கடை), சிகை அலங்கார நிலையம்(பார்பர் ஷாப்) வைத்திருப்போர் நாவிதர்களின் அடையாளங்களாக இருக்கின்றனர். இது சாதிய பிம்பத்தை உடைத்துவிடுகிறது. குலத்தொழில் மாறி எத்தொழிலையும் செய்யும் நிலை உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது.
முடி வெட்டப் போகிறேன், சவரம் செய்யப் போகிறேன், சேவிங் பண்ணப் போகிறேன் என்றவர்கள் இன்று ‘ஹேர் டிரஸ்சிங்’ செய்யப் போகிறேன்’ என்று சொல்வதுதான் நாகரிக மொழி என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
மனிதன் உயிரோடு இருக்கும்வரைதான் இந்தச் சாதியப் பாகுபாடு. எவ்வளவு பெரிய ஆண்ட பரம்பரையாக இருந்தாலும் இறந்தபின் சாம்பாலாகும் வரை உடனிருப்பது உறவுகளைவிட இவர்கள்தான். கத்தி, கத்தரிக்கோல், சீப்பு, சிறு கிண்ணம் இவற்றை மூலதனமாகவும், கம்மாக்கரை மேட்டுப்பகுதி, ஆல மரத்தடி, புளிய மரத்தடி இவற்றை முகவரியாகவும், காதில் கத்தி, அல்லது சீப்பையும் கையில் ஒரு பையையும் வைத்திருப்பதை அடையாளமாகவும் கொண்ட நாவிதர்கள் இன்னும் நகரமயமாதலைக் காணாத கிராமங்களில் தங்களைத் தக்க வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்றாலும் வாழ்வாதாரம் தேடி வேறு வேலைக்கும் செல்கின்றனர்.
”திருப்பதி அம்பட்டன் சிரைத்த மாதிரி”
“செரைக்கிற வேலைக்குப் போறவன் கத்திய மறந்திட்டுப் போன கதையா”
என்று நாவிதர்களைத் தொடர்புபடுத்தி பேச்சு வழக்கில் ஒருசில வழக்காறுகளை அறியமுடிகிறது.
வீட்டைவிட்டு வெளியே போகும்போது நாவிதர்கள் வந்தால் கெட்ட சகுனமாகப் பார்க்கும் சமூகத்தை என்ன சொல்லி திருத்துவது. எப்போதும் அக்கம் பக்கத்தாரிடம் சண்டை சச்சரவோடு நல்ல உறவுநிலை இல்லாத சூழலுக்கு “எதுத்த வீடு ஏகாலி (வண்ணார்) வீடு, அடுத்த வீடு அம்பட்டையன் (நாவிதர்) வீடு" என்று சொல்லுவார்கள். இவர்களை மனிதர்களாகப் பார்க்க விரும்பாத சமூகம். நம்மைப் பார்த்து நாமே முகம் சுழிக்கும் மனநிலையிலும்கூட எந்தவொரு முகச் சலனமும் காட்டாமல் நம்மை அழகாக்கிக் காட்டுவதோடு மட்டுமில்லாமல் நம் வாழ்வியலோடு பிணைந்த இம்மக்களின் வரலாற்றை அறியாத சமூகம்தான் தீண்டத்தகாத கீழ்ச்சமூகமாகும்.
எழுத்தாளர் முத்துநாகுவின் ‘சுளுந்தீ’ நாவல் நாவிதர்களின் சமூக நிலையைப் பிரதிபலிக்கிறது. ‘ஆதி மருத்துவர் சவரத் தொழிலாளராக்கப்பட்ட வரலாறு’, க.வீரபாண்டியனின் ‘சலூன்’ நாவல், தேவி பாரதியின் ‘நீர்வழிப்படூஉம்’ நாவல், நாவிதர்கள் குறித்த கட்டுரைகள் விளிம்புநிலை மக்களின் பாடுகள், அவர்களின் சமூக நிலைப்பாடு, அவர்களின் வாழ்வியல், வாழ்வியல் சிக்கல்களைத் தீர்க்கும் வழிகள் என அனைத்தையும் பொதிந்த படைப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தமிழ் படைப்புச் சூழலில் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. மனித வாழ்வியலை அழகாக்கும் நாவிதர்கள் குறித்து ஆராய்வதற்கு வரலாற்றில் நிறைய களங்கள் உண்டு என்பது தெளிவாகிறது.
- முனைவர் நா.சுலோசனா, உதவிப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113.