அம்பையின் எழுத்துக்கள் மனித மனங்களில் மாற்றத்திற்கான தூண்டுதலாகவே இருப்பதை அவரது படைப்புகளான சிறுகதைகள் உணர்த்துகின்றன. சிறுகதை இலக்கியமானது இக்கால இலக்கிய வகைகளுள் தனக்கென தனி அடையாளத்தையும், தனித்துவத்தையும் உருவாக்கியுள்ளது. அம்பையின் சிறுகதைகள் கதையாக மட்டுமில்லாமல் படிப்போரின் வாழ்வியல் தடங்களை ஒருங்கிணைக்கும் நினைவுச் சின்னங்களாகவும் இருக்கின்றன. நம் சமூகத்தில் எந்த ஒரு இலக்கியம் படைக்கப்படும் போதும் அதன் படைப்பாளியும் அவ்விலக்கியத்தின் வழியே ஆராயப்படும் போது தான் அவ்விலக்கியத்தின் எதார்த்த நிலையை புரிந்து கொள்ள முடியும். இன்றைய சமுதாயத்தின் சிக்கல்கள் முதல் சவால்கள் வரை கதையின் மையப் பொருளாக்கப்பட்டு சிறுகதைகள் எழுதப்படுகின்றன. அவ்வாறு எழுதப்படும் சிறுகதைகளின் நோக்கம் நிறைவேறும் போது அந்தப் படைப்பானது வெற்றி பெறுகின்றது. தமிழ்ச் சிறுகதைகளில் அம்பையின் சிறுகதைகள் தனக்கென தனிப் பாதையை அமைத்துக் கொண்டு பயணித்திருக்கின்றன. அம்பையின் சிறுகதை உருவாக்கத்தில் கதைத் தலைப்பு, கதைத்திட்டம், கதாப்பாத்திரம் வழியே அவரது படைப்பாளுமையை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கதைத் தலைப்பு:

சிறுகதைகளின் தலைப்புகள் படிப்போர்க்கு ஆர்வத்தைத் தூண்டுவதிலும்,கதையின் மையப் பொருளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், கதையின் நோக்கத்தை வெற்றி பெறச் செய்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. "பல்வகைப் பொருளையும் தன்னுட் செறித்து காட்டும் சிறிய கண்ணாடி போலத் தலைப்புகள் அமைய வேண்டும்" (தா.எ.பியூலா மெர்சி-1974,பக்-18,19). ஒரு கதையின் தலைப்பே அந்த கதையைப் படிக்கும் எண்ணத்தை வாசகர் மனதில் விதைக்கின்றது. அம்பையின் சிறுகதைகளில் கதைத் தலைப்புகள் கதாப்பாத்திரத்தின் ஆளுமையோடு தொடர்பு கொண்டும்,கதாப்பாத்திரத்தின் வாழ்வியலை மையப்படுத்தியும் அமைந்துள்ளன.

ambai 346கதாப்பாத்திரத்தின் ஆளுமைத் தொடர்பான தலைப்பு:

சிறகுகள் முறியும் என்ற சிறுகதையில் கணவனால் மனதளவில் காயப்படுவது மட்டுமில்லாமல் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் சாயாவின் வாழ்க்கை ஓட்டமானது அவளுக்கே புரியாத புதிராக உருவெடுக்கிறது. திருமணத்திற்கு முன்பு தன் ஆசைகளையும் கனவுகளையும் நிறைவேற்ற எவ்விதத் தடையும் இல்லாமல் சிறகுகள் முளைத்த பறவையாய் பறந்த சாயா திருமணத்திற்குப் பிறகு தன் சுதந்திரத்தை இழந்து சிறகுகள் முறிந்த பறவையாய் ஒடுக்கப்படுகிறாள். சாயாவின் ஆளுமை சிதையும் தருணமே “சிறகுகள் முறியும்” என சிறுகதைக்கு தலைப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது எனலாம்.(அம்பை-1972,பக்.80-112).

கதாப்பாத்திரத்தின் வாழ்வியலை மையப்படுத்திய தலைப்பு:

காட்டில் ஒரு மான் என்ற சிறுகதையில் தன் பெயருக்கேற்ற குணம் கொண்ட தங்கம் அத்தை தான் கூறும் கதையின் மூலம் அவளது வாழ்க்கையை விளக்க முற்படுகிறாள். தண்ணீர் குடிக்கச் சென்ற மான் கூட்டத்தில் பாதை மாறி வேறு காட்டிற்குச் சென்ற ஒரு மானுக்கு ஏற்படும் வித்தியாசமான அனுபவமும், பயமும் ஒரு பௌர்ணமி நிலவொளியில் விலகிப் போவதும் அந்தப் புதிய காட்டிற்கு அந்த மான் பழகிப் போவதுமாக தன் வாழ்வோடு பொருத்தி தங்கம் அத்தை கதை கூறுகிறாள். காட்டில் தனியாக தவிக்கும் மான் குறிப்பிட்ட கட்டத்தில் வித்தியாசமான சூழலை ஏற்றுக் கொள்வதை தங்கம் அத்தையின் வாழ்வியலோடு ஒப்பிட்டு “காட்டில் ஒரு மான்” என சிறுகதைக்கு பெயரிடப்பட்டுள்ளது. (அம்பை-2000, பக்-76-82)

கதைத்திட்டம்:

கதை நிகழ்வுகளை கதை அமைப்புக்கு ஏற்றவாறு முறையாக வரிசைப்படுத்தி அமைப்பதே கதைத்திட்டமாகும். கதையின் கருவை மையப்படுத்தி கதைத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்."வாசகனின் உணர்வுகளைத் தூண்டி ஆழ்ந்த உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும் கதைகளே வெற்றிகரமாக அமையக்கூடியவை" (ரா.ராஜதுரை - 1970, ப-118). கதையின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் கதைத்திட்டமானது ஒரே சீராக பயணிக்க வேண்டும்.அம்பையின் சிறுகதைகளில் கதைத்திட்டமானது ஒரு பெண்ணின் கதையாகவும், கதைக்குள் கதையாகவும் அமைந்துள்ளது.

ஒரு பெண்ணின் கதை:

ஒரு பெண்ணுக்கு பொருளாதார சுதந்திரம் மறுக்கப்படும் போது ஏற்படும் மன உளைச்சல்களையெல்லாம் சிறகுகள் முறியும் சிறுகதை வெளிப்படுத்துகிறது. தன் கணவன் பாஸ்கரனின் கஞ்சத்தனத்தால் வாழ்வின் வெறுமையை உணரும் சாயாவின் மனநிலை, அவளது கடந்த கால நினைவுகள் மற்றும் எதிர்கால வாழ்க்கை பற்றிய கவலைகள் என அனைத்து தருணங்களையும் கதை பதிவு செய்கிறது. திருமணத்திற்குப் பிறகு இல்லறப் பொறுப்பை ஏற்று வழிநடத்தும் பெண்களின் உழைப்பை அந்தக் குடும்ப உறுப்பினர்களே உணர்வதில்லை தனக்கான கடமையை உணர்ந்து சரிவர ஆற்றினாலும் அவர்களின் உரிமை மறுக்கப்படும் உண்மையை இச்சிறுகதை உரக்கச் சொல்கிறது. திருமண வாழ்வில் சாயாவுக்கு ஏற்படும் சிக்கல்கள், அவளுக்கு பிறந்த வீட்டில் இருந்த சுதந்திரம் என்ற நோக்கில் கதை அமைக்கப்பட்டுள்ளது.(அம்பை-1972, பக்-80-112)

கதைக்குள் கதை:

சமூகத்தோடு சேர்ந்து கொண்டு பெண்ணுக்கென சில கட்டமைப்புகளை வகுத்திருக்கும் இயற்கையின் பிடியில் சிக்கிக் கொண்ட தங்கம் அத்தையின் வாழ்வியலை கதைக்குள் கதையாய் காட்டில் ஒரு மான் சிறுகதை பதிவு செய்கிறது. ஒரு பெண்ணுக்கு இயற்கையாக நடக்க வேண்டிய நிகழ்வுகள் தவறும்போது அந்தப் பெண் சமூகத்தின் பார்வையில் வித்தியாசமானவளாக உணரப்படுவதை கதையின் அடுத்தடுத்த நகர்வுகள் வெளிப்படுத்துகின்றன. பூக்காத உடம்பு என்ற பழியை ஏற்றிருக்கும் தங்கம் அத்தை அதிலிருந்து தப்பிப்பதற்காக சந்தித்த இன்னல்களையும் கதை பதிவு செய்துள்ளது. ஒரு கட்டத்தில் தனக்கான பாதை இது தான் என தேர்வு செய்து அதில் வாழப் பழகிக் கொள்ளும் தங்கம் அத்தையின் தங்கமான குணநலன்கள், அத்தையின் அரவணைப்பில் அழகான குடும்பம், குழந்தைகள் என கதை விரிவடைகிறது. (அம்பை-2000, பக்-76-82)

கதாப்பாத்திரங்கள்:

ஒரு கதைக்கு உயிரோட்டத்தை அளித்து கதைக்கு தலைமை வகிப்பவர்கள் கதாப்பாத்திரங்களே ஆவர். "பாத்திரப்படைப்பு என்பது ஒரு பகுதியே என்றாலும் அது ஓர் இன்றியமையாத பகுதியாகும்.சிறப்பு வரிசையில் முதலிடம் பெறும் பகுதி" (கரு.முத்தையா-1980, ப.21). கதாப்பாத்திரங்களைக் கொண்டே கதை நிகழ்வுகள் கட்டமைக்கப்படுகின்றன. அம்பையின் சிறுகதைகளில் முதல் நிலை மற்றும் முதன்மை கதாப்பாத்திரங்கள், துணைநிலை கதாப்பாத்திரங்கள், சிறு கதாப்பாத்திரங்கள் மற்றும் பிற கதாப்பாத்திரங்கள் என பாத்திரப் படைப்பை வகைப்படுத்தலாம்.

சிறகுகள் முறியும் சிறுகதையின் கதாப்பாத்திரங்கள்:

முதல் நிலை கதாப்பாத்திரங்கள்:

திருமண வாழ்வில் ஒரு பெண் தன் கணவனின் செயல்பாடுகளினால் சந்திக்கும் சிக்கல்களால் வாழ்க்கையை வெறுப்பவளாக சாயா கதாபாத்திரமும், மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத கணவனின் பிரதிபலிப்பாக பாஸ்கரன் கதாபாத்திரமும் படைக்கப்பட்டிருக்கிறது. சாயாவின் பரிபூரண சம்மதத்துடன் பாஸ்கரன் - சாயா திருமணம் நடைபெற்றாலும் திருமணத்திற்குப் பிறகு தன் கணவனின் நிபந்தனைகளாலும், கஞ்சத்தனத்தாலும் அவள் அடையும் மன வேதனையை வெளிப்படுத்த முடியாமல் மனதுக்குள்ளே சட்டங்களை உருவாக்கிக் கொள்பவளாக அவளது கதாபாத்திரம் அமையப் பெற்றுள்ளது. திருமணம் நிச்சயம் ஆனவுடன் கடற்கரை, சினிமா என்று சாயா தோழிகளுக்கு செலவழித்ததையும், அவளது கற்பனைகளுக்கு மாறாக அமைந்திருக்கும் திருமண வாழ்வை வேறு வழியில்லாத காரணத்தினாலேயே தொடர்வதையும் கதையின் வழியே அறிய முடிகிறது. தன் மகன் சேகரின் தேவைகளை நிறைவேற்ற விரும்பும் பாசமிகு தாயாக சாயா இருப்பதையும் கதை உணர்த்துகிறது.

பிறந்த வீட்டில் அம்மாவை அலைக்கழித்ததற்குத்தான் இத்தகைய தண்டனையை அனுபவிப்பதாக நினைக்கும் சாயாவின் எண்ண ஓட்டங்கள் கதையில் எதார்த்தமாக வெளிப்பட்டுள்ளது. தையல் கலையில் ஆர்வம் கொண்டு அதன் மூலம் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும் சாயாவின் கடின உழைப்பையும் கதை வெளிக்கொணர்ந்துள்ளது. தன் தங்கை பூமாவின் பெண் பார்க்கும் சடங்கிற்கு அனுப்ப மறுக்கும் பாஸ்கரன், மீது சாயாவுக்கு ஏற்படும் வருத்தமானது அவனை விட்டு சென்று விட வேண்டும் என அவள் நினைப்பதாக சாயாவின் கதாபாத்திரம் அழுத்தமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. சிக்கனம் என்ற பெயரில் தேவையான செலவுகளுக்குக் கூட கணக்கு பார்க்கும் கஞ்சத்தனம் நிறைந்தவனாகவும், சாயாவின் சமையலை சாப்பிடுவதை ஹோட்டலில் சாப்பிடுவதை விட இலாபமாக பார்க்கும் மனைவியின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளாதவனாகவும் பாஸ்கரன் கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. சாயாவின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கும், அவள் தைப்பதற்காக வாங்கும் ஊசி நூல்களுக்குக் கூட கணக்குப் பார்ப்பவனாகவும் பாஸ்கரன் இருப்பதையும் கதை உணர்த்துகிறது. நண்பன் மகன் பூணூலுக்கு பரிசு அளிப்பதற்குக் கூட மனைவியிடம் வாக்குவாதம் செய்யும் கணவனாகவும், மனைவிக்கு வரும் கடிதங்களை பரிசீலனை செய்பவனாகவும் பாஸ்கரன் இருப்பதை கதையின் வழியே அறிய முடிகிறது. பாஸ்கரனின் இத்தகைய குணாதிசயங்களுக்கு சின்ன வயதில் அவன் அனுபவித்த கஷ்டங்களே காரணமாகிப் போவதையும் கதை வெளிக்கொணர்ந்துள்ளது.(அம்பை-1976, பக்.80-112)

துணைநிலை கதாப்பாத்திரங்கள்:

சாயா - பாஸ்கரனின் மகனாக இடம்பெறும் சேகர் மூலம் தந்தை- மகன் உறவை விட தாய் - மகன் உறவானது வலுவாக கட்டமைக்கப் பட்டிருப்பதை கதையில் காண முடிகிறது. சேகருக்கு தந்தையிடத்தில் உள்ள பயமும், தாய் மீது இருக்கும் அன்பும், அக்கறையும் கதையில் தத்ரூபமாக வெளிப்பட்டுள்ளது. தன் மகளின் உள்ளார்ந்த உணர்வுகளை புரிந்து கொண்ட பெண்ணாக சாயாவின் தாய் கதாபாத்திரம் வெளிப்பட்டுள்ளது. பெண்ணுக்கென்றே தகுதிகளை நிர்ணயிக்கும் ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடாக சாயாவின் தந்தை கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. தங்கையாக தன் அக்கா சாயாவின் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள முடியாத பெண்ணாக பூமா கதாப்பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. (அம்பை-1972,பக்.80-112)

சிறு கதாப்பாத்திரங்கள்:

சாயாவின் நாத்தனார் சரோஜா, எதிர்வீட்டு ரஞ்சிதம், அடுத்த தெரு மாலதி போன்றோர் அவளிடம் துணி தைக்கக் கொடுப்பவர்களாக இடம் பெற்றுள்ளனர். மேலும் கதைக்கு அழுத்தம் தராத கதாப்பாத்திரங்களாக சாயாவின் சித்தி, பூமாவை மணக்க இருக்கும் ஈஸ்வரன் போன்ற சிறு கதாப்பாத்திரங்களும் படைக்கப்பட்டுள்ளனர். (அம்பை-1972, பக்.80-112)

காட்டில் ஒரு மான் சிறுகதையின் கதாப்பாத்திரங்கள்:

தங்கம் அத்தை அழகுக் கறுப்பு நிறமுடையவளாகவும், நீவி விட்டாற் போல் ஒரு சுருக்கமும் இல்லாத முகம் கொண்டவளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளாள். தங்கம் அத்தையிடம் ஆர்வத்துடன் கதை கேட்கும் குழந்தைகளுக்கு அவளைச் சுற்றியிருந்த மர்ம ஓட்டை புரிந்து கொள்ள முடியவில்லை. தங்கம் அத்தை பூக்காத உடம்பை பெற்றவள் என்ற காரணத்தினால் அந்தக் குறையைச் சரி செய்ய அவள் உடம்பில் ஏற்றாத மருந்தில்லை மருந்துகள், பூசைகள் மற்றும் பிற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது அதை ஏற்றுக் கொண்டு தன்னை வருத்திக் கொண்டவளாக தங்கம் அத்தை இருப்பதையும் கதையில் அறிய முடிகிறது. தங்கம் அத்தையின் கைப்பட்டால் தான் மாட்டுக்குப் பால் சுரக்கும், அவள் நட்ட விதைகள் முளை வரும் என தங்கம் அத்தையின் மேன்மையையும் கதை சுட்டிக்காட்டியுள்ளது. மற்றவர்களின் அனுதாபங்களை ஏற்றுக் கொள்ளாதவளாய் இருக்கும் தங்கம் அத்தை தனக்கும் அனைவரையும் போல் பசி, வலி எல்லாம் சமம்தான் என அவளையே சமாதானப்படுத்திக் கொள்ளக் கூடியவளாக படைக்கப்பட்டிருப்பதையும் கதை உணர்த்துகிறது. தங்கம் அத்தையின் கணவர் ஏகாம்பரத்திற்கு வேறு பெண் பார்த்த போது அதை ஏற்றுக்கொள்ள முடியாதவளாக தற்கொலை முயற்சி மேற்கொண்டாலும் பின்னர் அவளே செங்கமலம் என்ற பெண்ணை தன் கணவருக்கு திருமணம் செய்து வைப்பவளாக தங்கம் அத்தையின் கதாப்பாத்திரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. தன் கணவனின் இளைய மனைவியின் ஏழு குழந்தைகளையும் தன் குழந்தைகளாகப் பாவிக்கும் தங்கம் அத்தையின் உயர்ந்த குணத்தையும் கதை பதிவு செய்துள்ளது. (அம்பை-2000, பக்-76-82)

தங்கம் அத்தையிடம் கதை கேட்பவர்களில் ஒருவராக கதை சொல்லியின் கதாப்பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. தங்கம் அத்தையைச் சுற்றியிருந்த மர்ம ஓட்டை விளக்குபவளாக தாவணி போட்ட பெண்ணாக வள்ளிமுத்து மாமாவின் மகளாக கட்டமைக்கப்பட்டிருக்கிறாள். இது தவிர பெயரளவு கதாபாத்திரங்களாக தங்கம் அத்தையின் கணவர் ஏகாம்பரம், அவரது இளைய மனைவி செங்கமலம், அவர்களது ஏழு குழந்தைகள், கதை சொல்லியின் அம்மா போன்றோர் படைக்கப்பட்டுள்ளனர். (அம்பை-2000, பக்-76-82)

தொகுப்புரை:

* அம்பையின் சிறுகதைப் படைப்பில் கதைத் தலைப்பைப் பொறுத்த வரையில் கதாப்பாத்திரத்தை மையப்படுத்தியே தலைப்பிடப்பட்டுள்ளது.

*             கதைத் தலைப்புகள் கதாப்பாத்திரங்களோடு தொடர்புகொண்டு இருப்பது மட்டுமில்லாமல், கதையின் கருவையும் வெளிப்படுத்து பவையாகவும் அமைந்துள்ளன.

*             கதைத் திட்டமானது கதை பயணிக்கும் இடத்திற்கு தகுந்தாற் போல் நிகழ்காலம், கடந்த காலம் என கட்டமைக்கப்பட்டுள்ளது.

*             கதையின் மூலம் நேரடியாக கருப்பொருளை வலியுறுத்துவது, கதைக்குள் கதையாய் கதைக் கருவை காட்சிப்படுத்துவதுமாகவும் கதைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

* கதையின் நோக்கத்தை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு முதல் நிலை மற்றும் முதன்மை கதாப்பாத்திரங்களாக படைக்கப்பட்டுள்ளனர்.

*             முதல்நிலை கதாப்பாத்திரங்களுக்கு வலுச்சேர்க்கும் குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்த சூழலின் மனித உறவுகளாக துணை கதாப்பாத்திரங்கள் சிறு கதாப்பாத்திரங்கள் மற்றும் பிற கதாப்பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர்.

பார்வை நூல்கள்:

1.           அம்பை -  சிறகுகள் முறியும், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்,.

2.           அம்பை -  காட்டில் ஒரு மான், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்,.

3.           பியூலா மெர்சி, தா.எ - இருபதில் சிறுகதைகள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,

4.           முத்தையா.கரு - ஜெயகாந்தன் நாவல்களில் பாத்திரப் படைப்பு,முத்து மீனாள் பதிப்பகம்.

5.           ராஜதுரை.ரா - சிறுகதையின் கூறுகள், வளரும் தமிழ் இலக்கியம், கிறித்துவ இலக்கியச் சங்கமம்.

- வெ.சந்தியா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, திருவள்ளுவர் பல்கலைக்கழம், சேர்க்காடு, வேலூர் - 632115