ஒரு அற்புதப் புதிர்போலத்தான் தோமஸ் ஜோஸப்பின் கதைகள். இது மிகையாகத் தோன்றலாம் என்றாலும் உண்மை; உண்மையின் அந்த ஒரு ஒளிவட்டத்தை இனங்காண்பவர்கள் அதிகம் இல்லையென்றாலும். கதையிலும் வாழ்க்கையிலும் தனித்துவ ஆளுமையை வெளிப்படுத்தியுள்ள எழுத்தாளர்கள் மலையாளத்தில் குறைவு. குறிப்பாக, நவீனர்களுக்குப் பிறகு வந்த கதையின் தலைமுறையில். அப்படிப்பட்டவர்கள் அமைதியற்ற ஒரு உலக வழக்கத்தைத்தான் எழுதி வெற்றி பெற முயன்றார்கள்.

thomas josephதோமஸ் ஜோஸப்பும், சுட்டுப் பொசுக்கும் அனுபவங்களின் கனல்கள் மீதுதான் வாசகரை நடத்திச் செல்ல முயல்கிறார். ஒன்று, இட காலமற்றதான கனவுகளைத் துணைக்கழைத்து, அதுவுமில்லையென்றால், யதார்த்தமற்றதாகத் தோன்றும் யதார்த்தங்களைத் துணைக்கழைத்து.

ஒரு தாவரத்தைப் போல கதை படர்த்திய உடலுடன் இவர் நம்மை எதிர்கொள்கிறார். அதற்கு ஏதாவது ஒரு அழகியல் கோட் பாட்டையோ, சித்தாந்தத்தையோ கடன் கொள்வதில்லை. வாழ்க்கையை இப்படியும் விவரிக்கலாம் என்ற ஒரே ஒரு பதிலில் கால் பதித்து ஒரு கிளர்ச்சியாளரைப்போலத்தான் தோமஸ் ஜோஸப் நிற்கிறார். இந்த ஒரு நிலைப்பாட்டுக்கான சாத்தியத்தை நிலை நிறுத்தியபடியே அந்தப் படைப்புகள் கருத்துப் பரிமாற்றத்தை நடத்துகின்றன. கதைகள் எல்லாம்- நாள்தோறும் குழப்பம் ஏற்படுத்துகிற, ஒரு விடுகதைபோல வியப்புக்கு ஆட்படுத்துகிற புதிய காலத்து அனுபவங்களோ சம்பவங்களோதான். சிறப்பான வாழ்க்கைத் தருணங்களையோ, கண்ணுக்கினிய காட்சிகளையோ, சுகந்தம் சுமந்த இளங்காற்று வீசும் பிரதான சாலைகளையோ எதிர்பார்ப்பவர்களை சற்று திகைக்கச் செய்தபடிதான் தோமஸ் ஜோஸப், நரகத்துக்குச் சமமான அனுபவக் காட்சிகளை நோக்கி வாசிப்பின் எரி சன்னல்களைத் திறந்துவிடுகிறார். இந்த சந்திப்பில் ஜோஸப், அடிப்படையான எழுத்தின் கொடுக்கல் வாங்கல்களை கொஞ்சமாவது பகிர்ந்தளிக்கிறார்.

வாழ்க்கைக்கும் கதைக்கும் இடையிலான பரஸ்பர தொடர்பைப் பற்றியும் ஆன்ம உறவைப் பற்றியும் சொல்லலாமா? கதைக்கு வந்த வழியைப் பற்றி?

கதைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான பரஸ்பர தொடர்பைப் பற்றி சித்தாந்தரீதியான அறிவேதும் எனக்கு இல்லை. ஒருக்கால், வாழ்க்கை தொடங்கிய இடத்திலிருந்தே, தன்னுணர்வற்ற நிலையிலேனும் என் கதையும் ஆரம்பித்திருக்கலாம்.

எரணாகுளம் மாவட்டம் ஏலூரில் பிறந்தேன். அப்பா, தொழிற்சாலையில் கீழ்நிலைப் பணியாளராயிருந்தார்.

ஏலூர் எனும் தொழிற்பேட்டை - அது ஒரு ராவணன் கோட்டையாக இருந்தது. விவரம் தெரிந்த நாள் முதல் தொழிற்சாலைச் சங்கொலி கேட்டுத்தான் துயிலெழுந்தேன். குழந்தைப் பருவத்தில் அது ஒரு அரக்கனின் அலறல்போன்றிருந்தது.

உலக சுற்றுச்சூழல் சீர்கேட்டின் வரைபடத்தில் ஏலூருக்கு இரண்டாம் இடம். எப்போதும் விஷப்புகைப் படலங்கள் உயர்ந்து வீசும் சூழ்நிலை. முட்டையின் அழுகிய நாற்றம், தொழிற்சாலைகளுக்கு வந்து சென்றுகொண்டிருக்கும் காக்கி உடையணிந்த கீழ்நிலை ஊழியர்கள், திரையரங்கங்கள், பெரிய அதிகாரிகளின் கேளிக்கை விடுதிகள், பாக்ட் பள்ளித் திடல்கள், பனிபோன்று பறக்கும் புகைப் படலங்களுக்கிடையிலும் பந்துக்குப் பின்னால் ஓடும் விளையாட்டுக்காரர்களின் போட்டி ஓட்டம் - எல்லாம் என்னுள்ளே துயரத்தின் ஒரு உலகை வரைந்து வைத்தன. அது ஒரு இருண்ட இடமாக இருந்தது. உலக இலக்கியத்தி லிருந்து வாசித்தறியக்கூடிய அப்படிப்பட்ட ஒரு உலகை என்னால் என் கைகளாலும், என் சுவாசப்பையாலும் தீண்டி அனுபவிக்க முடிந்தது. ஆரம்ப வகுப்புகளிலிருந்தே எனக்குக் கதையின் உயிர்மூச்சு கிடைத்தது. நடிகரும் நாடக எழுத்தாளருமான என் மாமா வி.டி.வர்க்கீஸ்தான் கதை எழுதும்படி என்னைத் தூண்டினார்.

என் மலையாள ஆசிரியராக இருந்த ராமகிருஷ்ண ஆசார்யா, கே. எஸ். நம்பூதிரி, தாழத்தேடம் ராகவன் நாயர், கே. யு. மேனோன் முதலானோர் எழுத்தில் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி வந்தார்கள்.

ஆரம்பக் கதைகளில் எப்போதும் யேசு இருந்தார். இப்போது, முதல் நாவலில், பரலோக வசிப்பிடங் களில், கடவுள் என்ற கதாபாத்திரத்தில் கூடுபாய்ந் திருப்பது கிறிஸ்து பிம்பம்தான். அதைப் பற்றி?

என் பால்யத்தில், ஒரு கடவுள் என்பதற்கு அப்பாற் பட்டு யேசுவின் மீது ஒரு நிரந்தர நெருக்கம் இருந்தது; என் பேரன்புக்குரிய ஒரு தோழனைப்போல. அப்படித் தான் யேசு என் கதைகளில் வந்தார். என் கதைகளில் ஒருபோதும் யேசு ஒரு கடவுளாகத் தோன்றுவதே இல்லை. தனியனும் ஆதரவற்றவனுமான வேலையற்ற ஒரு இளைஞனின் பிரதிநிதியாகத்தான் அவர் எப்போதும் என் கதைகளில் காட்சிப்படுகிறார்.

‘பரலோக வசிப்பிடங்கள்’ என்ற என் முதல் நாவலில் கடவுள் ஒரு மனிதர்தான். எல்லாக் கால கட்டங்களிலும் மிகத் தனியனான, காதலுக்காகவும் தோழமைக்காகவும் உழன்று கொண்டிருக்கும் ஒரு நாயகனாகத்தான் கடவுள் நாவலின் பூமியில் பிரவேசிக் கிறார். சக்தி இழந்த கடவுளின் விதியை தான் சுமந்து கொண்டு அவர் பரலோகம் எனும் ஏழு ஆகாயங்களிலும் அலைந்து திரிகிறார். மூளையில் தனிமை ஒரு பைத்திய மாக மாறும்போது அவர் ஊதுகொம்பு வாசித்து நடன மாடுகிறார். எல்லா மனிதர்களாலும் எல்லா உயிரினங் களாலும் அவர் எப்போதும் நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார். கடைசியில் எழுத்தாளன் அவரை ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் பெட்டியன்றி லிருந்து ஒரு கால்பந்தைப்போல வெளியே உதைத் தெறிகிறான்.

என் கதைகளிலிருந்து வித்தியாசப்பட்டு என் நாவலில் கடவுள் என்ற கதாபாத்திரம் மனித வாழ்க்கை மற்றும் தனிமையின் ஒரு முழு அர்த்தத்தைத் தேடுகிறது.

பரலோக வசிப்பிடங்கள்’ என்ற நாவலினூடே நீங்கள் ஒரு புதிய உலகத்தை வெளிப்படுத்துகிறீர்கள். புனைவின் சாத்தியப்பாடுகள் மிகவும் முன்னேறிய ஒரு காலத்தில் நாவல் படைக்கும்போது ஏற்படும் நெருக்கடிகள் - ஒரு கதாசிரியர் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் என்னென்ன?

இந்த உலகத்தின் துடிப்புகளை வெளிப்படுத்தத் தான் ஒவ்வொரு எழுத்தாளனும் விதிக்கப்பட்டிருக் கிறான் என்று பொதுவாக நம்பப்படுகிறது. மிகவும் சிக்கலான ஒரு காலகட்டத்தின் ஊடாகத்தான் நாம் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம். மனிதனின் மனது செயல்படும் போக்கு மிகவும் பயங்கரமாக இருக்கிறது. அசாமில் ஜடிங்கா எனும் கிராமத்தில் கால்நடைகள் நீரோட்டத்தில் தாவி தற்கொலை செய்துகொள்வதான ஒரு செய்தியை, நான் என் ஒரு கதையில் குறிப்பிட்டிருக் கிறேன். அது ஒரு வியப்பாகவே நமக்கு அனுபவ மாகிறது என்றாலும் இப்போது மனிதர்கள் தாங்கள் செய்து குவிக்கும் கொடூரங்களில் நம்மை முற்றிலும் ஸ்தம்பிக்கச் செய்துவிடுகிறார்கள். வாழ்க்கை என்ற குழப்பத்தின் புகைப் படலங்களுக்கிடையே ஆட்பட்டு நாம் வழியறியாது உழல்கிறோம். சொந்த வீட்டின் அறையில் தீ மூட்டி அதில் விழுந்து இறக்கும் மூதாட்டி, பிஞ்சுக் குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு ஆட் படுத்துபவர்கள், குழந்தைகளை மருத்துவமனைக் கட்டடத்தின் உச்சியிலிருந்து கீழே வீசியெறியும் இளைஞர்கள் - இந்தச் செய்திகளையும் அனுபவங்களையு மெல்லாம் - பிரதி செய்வதற்கும் அப்பாற்பட்டு - கலையின் மந்திர விரல்கள் தீண்டி தண்ணீரை திராட்சை ரசமாக்குவதுபோல மகத்தான ஒரு மாற்றத்துக்கு ஆட்படுத்த எழுத்தாளனால் முடியுமா? என்னைப் பொறுத்தவரை இந்த வேதனைகளை வார்த்தைகளால் கட்டியெழுப்பி கலை மாடமாக மாற்றக்கூடிய அச்சத்தின் சிறையிலிருக்கிறேன்...

thomas joseph novel‘பரலோக வசிப்பிடங்கள்’, நாவல் எனும் கலையிலுள்ள என் எளிய பயிற்சி மட்டும்தான், ஒரு புதிய உலகத்தை உருவாக்குவதற்கான என் எளிய முயற்சி. கண்முன்னாலுள்ள காட்சிகளிலிருந்து தனிப் பிரிந்த ஒரு போக்கு. ஏதேனும் வரலாற்று உண்மைகளி லிருந்து ஒரு நாவலைக் கட்டி எழுப்புவது என்பதை என் நோக்கமாக நான் நினைக்கவில்லை. இல்லை யென்றால் சமீப காலத்தில் நம்மைப் பிடித்துக் குலுக்கிய ஒரு சம்பவத்திலிருந்து ஒரு குமாஸ்தாவைப்போல ஒரு புத்தகத்தை எழுதி ஒப்பேற்றுவது என்ற கடமையும் எனக்கு வசமற்ற காரியம். ஆகாயம்தான் இந்த நாவலின் பின்னணி. ஆகாயத்தின் ஏழு நிறங்களுள்ள ஏழு வசிப்பிடங்கள் நாவலில் பரலோகமாகப் படர்ந்து கிடக்கின்றன... ஏழு நிறங்களின் ஊடே கடந்து செல்லும் கதாபாத்திரங்கள்... இறந்த மனிதர்கள்... அவர் களுடையதான ஒரு உலகம்.

என்றும் நீங்கள் படைப்பில் முற்றிலும் தனித்த தொரு வெளிப்பாட்டு ரீதியைத்தான் மேற்கொண்டு வருகிறீர்கள். யதார்த்த விவரணை என்ற ஒன்று இல்லாமல் அதீத யதார்த்தங்கள் கொண்டுள்ள ஒரு சொல்முறைதான் அதன் சிறப்பம்சம். இந்த சொல்முறை, நீங்கள் சொல்ல நினைக்கும் விஷயத்தை சரியாகச் சொல்வதற்கு உதவுகிறதா? அல்லது ஒரு சவாலாக இருக்கிறதா?

நான் பெரும்பாலும் என்னைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். கனவுகள் என் உடன்பிறப்புகளாக இருப்பதால் கதையை சரியாக நிறைவேற்ற இந்தச் சொல் முறை உதவுகிறது. நிச்சயமாக என்னைப் பொறுத்தவரை இது சுலபமான ஒரு எளிய செயல்தான். அப்புறம், கதையை மட்டும் தனியாக நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. யதார்த்தமும் அதீதமும் எல்லாம் அடங்கிய இந்த வாழ்க்கையை முழுதாக ஒரே கண்ணாடியின் மூலம் பார்த்தால் நாம் எதையும் அதிலிருந்து விலக்கிவைக்க வேண்டியிருக்காது. அப்படி விலக்கி வைக்க முடியாமல் சற்று வித்தியாசமாக எழுத முயலும் என்னைப்போன்ற எழுத்தாளர்களை விமர்சனப் பழமைவாதிகள், அபத்த இலக்கியவாதிகள் என்று அழைக்கிறார்கள்.

நவீனத்திற்குப் பிறகான தலைமுறையிலிருந்து நிறைய எழுத்தாளர்கள் வெளிப்பாட்டு முறையில் வித்தியாசமும் முக்கியத்துவமும் கொண்ட படைப்புகளால் மலையாளக் கதை உலகை வளப்படுத்தியிருக்கிறார்கள். எம். சுகுமாரன், சி.வி.பாலகிருஷ்ணன், என். பிரபாகரன், டி.வி.கொச்சுபாவா... அந்தத் தலைமுறையிலிருந்து ஏற்பட்ட உயிர்ப்பு, பிற்காலத் தலைமுறையினரின் கதையில் ஏற்படவில்லை என்ற விமர்சனக் கருத்தை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

அது ஒரு சரியான தீர்மானம் என்று நான் நினைக்க வில்லை. என் கருத்துப்படி, மலையாளக் கதையின் வசந்த காலம் நவீனர்களின் காலம்தான். ஸக்கரியா, வி.பி.சிவக்குமார், மேதில் ராதாகிருஷ்ணன், டி. ஆர்... இந்த எழுத்தாளர்கள் கதையின் உருவ, உணர்ச்சிகளில் ஏற்படுத்திய புரட்சிக்கு அப்பால் மலையாளக் கதையால் வளர முடிந்ததா என்பது சந்தேகம்தான். இது என் தனிப்பட்ட ஒரு கருத்து மட்டுமே. இதற்கு எதிர் கருத்து இருக்கலாம் என்றாலும் பின்நவீனத்துவத்தின் இந்தக் காலத்தில் மிகத் துடிப்பான இலக்கிய வடிவம் என்ற நிலையில் கதைதான், விமர்சகர்களைக் குழப்பியிருக்கிற மிகப் பெரிய பதப் பிரச்சினை.

ஒரு கதாசிரியர் என்ற நிலையில், மலையாளக் கதையின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று மதிப்பிடுகிறீர்கள்?

எதிர்காலத்தில் பெரும்பாலும், கலை இலக்கியத்தைக் குறித்தான முன்தீர்மானங்கள் பொருத்தமற்றுப்போகும் என்று நினைக்கிறேன்.

சமீப கால மலையாளக் கவிதையில், மரபை மீறிய வாறான ஒரு வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. என் கருத்தில் இந்த மாற்றம் வரவேற்கக்கூடியது. ஆனால், நம் கதையில் இப்படிப்பட்ட ஒரு மாற்றம் இன்று நடக்க வில்லை. புதிய காலத்தின் துடிப்புகளோடு கதையை நெருக்கி நிறுத்த புதிய எழுத்தாளர்களால் முடிகிறது என்றாலும் புதிய கதை முழுமையான ஒரு மாற்றத்துக்கு ஆட்படுத்தப்படவில்லை. தனிப்பட்ட எழுத்தாளர்கள் வெகு சிலர் கதையை நவீனப் பாதைகளுக்குக் கொண்டு செல்ல முயல்கிறார்கள் என்றாலும், அந்தப் பாய்ச்சல் களை பெரும்பாலும் யாரும் காணாதுபோகிறார்கள். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. வரலாற்றில் எங்கும் இல்லாத விதமாக மலையாள இலக்கியம் யதார்த்த எழுத்து ரீதிகளை தழுவிக்கொள்கிற, சற்று விசித்திரமும் வித்தியாசமுமாக எழுதுபவர்களை தனிமைப்படுத்துகிற ஒரு போக்கு, அறிந்தோ அறியா மலோ இங்கே வேரூன்றியிருக்கிறது. இங்கே இலக்கியத்தின் அதிகாரிகள், சற்று விலகி நின்று எழுதுகின்றவர்களின் படைப்புகளை அபத்த இலக்கியம் என்று தீட்டு சொல்லி விலக்கி வைக்கிறார்கள். அதுமட்டுமல்ல, கவிதையோடு ஒப்பிடும்போது கதை இலக்கியத்தில் அதிகாரப்பூர்வமான ஒரு ஒளிவட்டம் இன்று மிக முக்கியம். தொலைக்காட்சிகளிலும் மற்ற ஊடகங் களிலும் வேலை செய்யும் எழுத்தாளர்கள் மீது ஊடகங்களின் பாசம் முடிந்தவரை பொழியும்போது, கதையை வழக்கமான பாணிகளிலிருந்து விடுவிக்கப் பாடுபடும் எழுத்தாளன் இலக்கியத்தின் பூந்தோட்டத்துக்கு வெளியே ஆகிறான். அவனுக்கு அங்கீகாரங்களின் இனிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் பிறகு கதையின் எதிர்காலம் எங்கே சென்று நிற்கும் என்று சொல்ல முடியாத நிலை வருகிறது. ஒருக்கால், இன்று கொண்டாடப்படும் கதாசிரியனை காலம் பின்தள்ளுமென்றும், இன்றைய கதை இலக்கியத்தின் பறையர்கள் நாளையக் கதையின் ராஜாக்களாக மாறுவார்கள் என்றும் நம்பலாம்.

நன்றி: ‘தோர்ச்ச’ மாத இதழ், நவம்பர் 2013

Pin It