வீட்டிற்கு அருகில் இருக்கும் காட்டை எவ்வாறேனும் பாதுகாக்க வேண்டும் என்ற தீராத ஆர்வமே, இன்று எழுபது வயதான சரஸ்வதி அம்மாள் உட்பட உள்ளவர்களின் அன்றைய இலட்சியமாக இருந்தது. 2002ல் இந்தக் கனவு நனவானது. 'வசந்த சேனை' அமைப்பினர் இன்று பெரியாறு புலிகள் சரணாலயத்தின் காவல்காரர்கள். ஆரம்ப காலத்தில் இதில் 101 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை 43 ஆகக் குறைந்து விட்டாலும், உறுப்பினர்களின் வீரியம் சிறிதும் குறையவில்லை.

ஆரம்பம்

புற்றுநோயாளியாக இருந்த போதிலும் சரஸ்வதி அம்மாள் அன்றுபோலவே இன்றும் செயல்படுகிறார். இந்த அமைப்பு 2002 அக்டோபர் 22 அன்று தோற்றுவிக்கப்பட்டது. அப்போது சரணாலயத்தின் சுற்றுப்புறங்களில் வாழ்ந்த மக்கள் காட்டையே தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு நம்பியிருந்தனர். 1996ல் உலக வங்கியின் உதவியுடன் மத்திய அரசு ஆதிவாசி சமூகங்கள், வன எல்லையின் 2 கிலோமீட்டர் தொலைவில் வாழ்பவர்களைச் சேர்த்து சுற்றுச்சூழல் வளர்ச்சிக் குழுக்களை (Eco Development Committee EDC) தோற்றுவித்தது.

வனப் பாதுகாப்பு பற்றிய வகுப்புகள் எடுக்கப்பட்டன. அன்று இதற்காக பணியாற்ற முன்வந்த தொழிலாளர்கள் வெகு சிலர் மட்டுமே. வாகன வசதிகள் குறைவாக இருந்தது. இரவு நேரங்களில் வனப் பாதுகாப்பிற்காக இக்குழுக்களில் இருந்த ஆண் தன்னார்வலர்களின் உதவி நாடப்பட்டது.Vasantha Senaaமனதை மாற்றிய வகுப்புகள்

அன்றாடம் தாங்கள் அழித்துக் கொண்டிருந்த காட்டின் முக்கியத்துவத்தை பெண்கள் வகுப்புகள் மூலம் புரிந்து கொண்டனர். பெரியாறு காலனி பெண்கள் பகல் நேர வனப் பாதுகாப்பை மனமுவந்து மேற்கொள்ள முன்வந்தனர்.

பகல் நேரத்திலேயே வனச்செல்வங்களை திருடுவதற்காக காட்டைச் சூறையாடுபவர்கள் குறி வைத்து பார்த்து திட்டமிட்டுச் செல்வது இவர்களின் வழக்கம். வனப்பகுதியின் மற்ற இடங்களில் வசிக்கும் பெண்களின் சம்மதம் கோரப்பட்டது. எட்டு வனச்சரகங்களில் இருந்து 101 பெண்கள் இதில் உறுப்பினர்களாக இணைந்தனர்.

மரணமடைந்தவர்கள், இடம் மாறிச் சென்றவர்கள் என உறுப்பினர் எண்ணிக்கை சுருங்கியது. எழுபது வயதைத் தாண்டியவர்களும் இன்று குழுவில் உறுப்பினர்களாக செயல்படுகின்றனர். வசந்த சேனை என்ற இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு இன்று இருபது ஆண்டுகள் கடந்து போய்விட்டது.

இயக்கச் செயல்பாடுகள்

பதிவேட்டில் கையெழுத்திடுவதுடன் காலை பத்து மணிக்கு உறுப்பினர்களின் கடமை தொடங்குகிறது. தொடர்ந்து எட்டு கிலோமீட்டர் பரப்பில் சந்தன மரங்கள் உள்ள பகுதியில் உறுப்பினர்கள் நடப்பர். அங்கு ஏதேனும் சட்டவிரோதச் செயல்கள் நடக்கிறதா என்று பரிசோதிப்பர். வன விலங்குகள் எவையேனும் காயம் பட்டிருக்கிறதா என்பது கண்காணிக்கப்படுகிறது.

மதியம் மூன்று மணிக்கு அன்று காட்டில் நடந்த சம்பவங்கள், பார்த்த வன விலங்குகள் பற்றிய அறிக்கையை உறுப்பினர்கள் தயாரித்து அளிப்பர். இவர்களே வனத்திற்குள் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும் சேகரிக்கின்றனர். பசுமை வழி போன்ற சிறப்பு நாட்களை கொண்டாடுகின்றனர். 925 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள சரணாலயத்தின் ஐந்து வனச்சரகங்களில் எட்டு கிலோமீட்டர் பரப்பிற்குள் இருக்கும் காட்டை வசந்த சேனை பாதுகாக்து வருகிறது.

காசு பணத்தோடு இல்லை, காட்டோடு மட்டுமே நேசம்

பொருளாதார ரீதியாக எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் வசந்த சேனை செயல்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வனத்துறையினர் வனப் பாதுகாப்பு புத்துணர்ச்சிக்காக வனச்சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்கின்றனர். ரோந்து செல்ல அவசியமான மழைக் கோட்டு, மதிய உணவிற்கான பாக்ஸ் போன்றவை வனத்துறையினரால் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் சொந்தக் காசை செலவழித்தே உறுப்பினர்கள் தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரம் காட்டிற்குச் செல்கின்றனர். வேலை வாய்ப்பு உறுதித்திட்டம், கூலி வேலை போன்றவற்றுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் இருந்தபோதும் இவர்கள் அதை கைவிட்டு விட்டே காட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முறை வைத்து ஒவ்வொருவரும் மாதத்திற்கு மூன்று முறை இந்தப் பணியில் ஈடுபடுகின்றனர்.

அன்று வனத்துறை அடிகாரியாக இருந்த பிரமோத் ஜி கிருஷ்ணன் என்பவரே ஆரம்ப காலத்தில் அமைப்பின் தலைமைப் பதவியில் செயல்பட்டார். துணை கள இயக்குனர் சிவதாஸ் என்பவர் வழங்கிய ஆதரவினால்தான் வசந்த சேனை இன்று உள்ள நிலையை அடைந்துள்ளது.

சவால்கள்

பெண்கள் காட்டைப் பாதுகாக்கும் வேலைக்குப் போவது நாட்டு நடப்பில்லை என்று சமூகத்தால் வலுவாக நம்பப்பட்ட காலத்தில்தான் இந்த அமைப்பு உருவானது. குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பெண்கள் இத்துறையில் ஈடுபட முடியாது. தொடக்க காலத்தில் காட்டிற்குள் நடந்த பல சட்டவிரோதச் செயல்களை இந்த அமைப்பே வெளியில் கொண்டு வந்தது. உயிரைக் கொடுத்தாவது காட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற பெண்களின் மன உறுதியே வசந்த சேனையின் வெற்றி இரகசியம்.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/special-pages/world-environment-day-2023/about-vasantha-sena-in-periyar-tiger-reserve-1.8614821

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It