புதிய மகாராஜா பட்டத்திற்கு வந்தவுடன் திருவாங்கூர் சமஸ்தானக் குடிமக்களுக்கு இனியேனும் உண்மையான சுதந்தரம் உண்டாகும் என்று நம்பினோம். இதற்கு அறிகுறியாக கப்பற் பிரயாணம் செய்து அந்நிய நாடு சென்று வந்தவர்கள் உள்ளே போகக்கூடாது என்று தடுக்கப்பட்டிருந்த கோயில்களுக்குள் அவர்களும் போகலாம் என்று முன்னிருந்த தடை நீக்கப்பட்டது. இதைக்கொண்டு “இனி திருவாங்கூர் மக்கள் வைதீகக் கொடுமையிலிருந்தும் நீக்கப்படுவார்கள் போலும்” என்றும் சந்தோஷப் பட்டோம். ஆனால் இப்பொழுது சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்களை மேன்மை தங்கிய மகாராஜாவுக்கு அரசியல் ஆலோசனை கூறும் உத்தியோகஸ்தராக நியமிக்கப்பட்டதிலிருந்து கப்பலேறி அந்நிய நாடுகளுக்குச் சென்றுவந்த சர்.சி.பி. ரா. அய்யர் அவர்கள் கோயிலுக்குள் போவதற்குத் தடை இருக்கக் கூடாது என்பதற்காகவே முன்னிருந்த தடை நீக்கப்பட்டது என்றே நினைக்க வேண்டியதிருக்கிறது.

periyar 364அன்றியும் இப்பொழுதிருக்கும் மகாராஜா அவர்கள், ஒரு சமயம் சர்.சி.பி.ரா. அய்யர் அவர்களுடன் இங்கிலாந்து முதலிய தேசங்களுக்குப் பிரயாணம் செய்து வந்தால் அப்பொழுது மகாராஜா கோயிலுக்குள் போவதற்கு யாதொரு தடையும் இல்லாமல் இருப்பதற்கு முன்னேற்பாடாக இக்காரியம் செய்யப்பட்டிருக்க வேண்டுமென்றும் நினைக்க வேண்டி இருக்கிறது.

அன்றியும் இப்பொழுது பட்டத்திற்கு வந்திருக்கும் மகாராஜா அவர்கள் காலத்தில் முன்னிருந்ததைக் காட்டிலும் இன்னும் பார்ப்பன ஆதிக்கம் அதிகப்பட்டு உறுதிப்படும் என்றும் கருதி திருவாங்கூர் பிரஜைகளின் சார்பாக இரக்கப்படுகிறோம், இவ்வாறு நடக்கக்கூடும் என்பதற்கு அடையாளமாக மகாராஜா பட்டத்திற்கு வந்தவுடன், முன்பே திரு. சுப்பிரமணிய அய்யர் என்னும் பார்ப்பனர் திவானாயிருக்க, சர்.சி.பி.ராமசாமி அய்யரும் அரசியல் ஆலோசனை கூறும் அதிகாரியானார். ஆகவே இப்பொழுது திருவாங்கூர் ராஜ்ஜியம் இரண்டு பார்ப்பன அதிகாரிகளின் வசம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது.

திருவாங்கூர் சமஸ்தானம் பார்ப்பனர்களின் அதிகாரத்தில் அகப் பட்டு, அச்சமஸ்தான மக்கள் பார்ப்பனீயத்தால் நசுக்குண்டு கிடப்பது இன்று அல்லது நேற்று முதல் நடைபெறும் விஷயமல்ல; நூற்றுக்கணக்கான வருஷங்களாகவே இப்படியிருந்து வருகின்றது. இதைக் கீழ்வரும் விஷயத்தால் தெளிவாய்த் தெரிந்து கொள்ளலாம். 1817 ஆம் ஆண்டு முதல் 1931 ஆம் ஆண்டு வரையிலும் திருவாங்கூர் திவான் உத்தியோகத்தை 24 பேர் வகித்து வந்திருக்கின்றனர். இந்த 24 பேர்களில் திரு.நாணுப்பிள்ளை என்பவர் 1877 முதல் 1880 வரையில் 3 வருஷமும் இப்பொழுது சென்னை அரசாங்கத்தில் சட்ட மந்திரியாய் இருக்கும் திரு. கிருஷ்ணன் நாயர் 1914 முதல் 1920 வரை 6 வருஷமும், திரு வாட்ஸ் என்னும் ஐரோப்பியர் 1925 முதல் 1929 வரை 4 வருஷமும் திவானாக இருந்திருக்கின்றனர். இவர்கள் திவானாக இருந்த 13 வருஷங்கள் போக பாக்கி 101 வருஷங்களும் பார்ப்பனர்களே திவான்களாக இருந்து வந்திருக்கின்றனர். இந்தக் கணக்கைப் பார்த்தாலே திருவாங்கூர் ராஜ்ஜியம் எப்பொழுதும் பார்ப்பன மயம் என்பதில் ஏதேனும் தவறு உண்டா?

சுதேச சமஸ்தானமாகவும், பார்ப்பன ஆதிக்க ராஜ்யமாகவும், ‘பத்ம நாபசுவாமி’ என்னும் ‘கடவுளின்’ ராஜ்யமாகவும் இருக்கும் அந்த சமஸ் தானம் எந்த நிலையிலிருக்கிறது? 40 லட்சம் ஜனத்தொகையுள்ள அந்த சமஸ்தானத்தில் சுமார் 20 லட்சம் பேர் முகமதியர், கிறிஸ்தவர் முதலிய அந்நிய மதத்தினராகவும், சுமார் 12 1/2 லட்சம் மக்கள் தீண்டக்கூடாதவர்களாயும், பார்க்கக்கூடாதவர்களாகவும், தெருவில் நடக்கக்கூடாதவர்களாகவும் இருக்கின்றார்கள். இவைபோக சுமார் 7 1/2 லட்சம் ‘இந்துக்கள்’ என்பவர்களே ‘பத்மநாபக் கடவுளின்’ அரசாங்கமாகிய இந்துராஜ்யத்தில் இருக்கின்றார்களென்றால் இதை என்ன ராஜ்யம் என்று சொல்வது? பார்ப் பனர்களின் அதிகாரத்தின் காரணமாக - பார்ப்பனீயமாகிய இந்துமதக் கொடுமை காரணமாக - இந்து மதத்திலிருந்து விலகியவர்கள்தான் இப் பொழுது அச்சமஸ்தானத்தில் இருக்கும் 20 லட்சம் வேறு மதக்காரர்களும் என்பதை யார் இல்லையென்று சொல்லமுடியும்? இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் தானே இன்று 12 1/2 லட்சம் பேர் தீண்டத் தகாதவர்களாகவும், பார்க்கக்கூடாதவர்களாகவும், தெருவில் நடக்கக் கூடாத வர்களாகவும், மிருகத்தினும் கேடாக மதிக்கப்பெற்று கொடுமை செய்யப் பட்டுக் கிடக்கிறார்கள்? இவர்களும் அந்நிய மதத்தினர்களாக ஆகி விட்டால் இவ்வளவு கொடுமைக்கு ஆளாவார்களா?

இந்த இழிவான நிலையில் உள்ள இச்சமஸ்தானம், எல்லா மக்களும் கண்விழித்துச் சுயமரியாதை உணர்ச்சி பெற்று வருகிற இந்நாளிலுமா பார்ப்பனர் வசமும் பார்ப்பனிய வசமும் சிக்கித் துன்பப் பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? என்ற உணர்ச்சியுடன் திருவாங்கூர்ப் பிரஜைகள் அனைவரும் சர்.சி. பி.ரா. அய்யரின் நியமனத்தைச் சரியான காரணங்களுடன் கண்டித்துத் தீர்மானங்கள் செய்வதை நாம் பாராட்டுகிறோம்.

இதோடு மற்றொரு வதந்தியும் உலாவுகிறதென்று அறிகிறோம். அதாவது, இப்பொழுதுள்ள திவான், திரு. சுப்பிரமணிய அய்யர் திவான் பதவியை விட்டு விலகியவுடன், அப்பதவிக்கு சென்னையில் உள்ள திரு.டி.ஆர். வெங்கட்டராம சாஸ்திரி அவர்களும், மற்றும் இரண்டு பெரிய இந்திய அரசாங்க உத்தியோகஸ்தர்களும் முயற்சி செய்கிறார்களாம். இவ்வாறு முயற்சி செய்துகொண்டிருக்கும் திரு. டி.ஆர் வெங்கட்டராம சாஸ்தியார் அவர்களோ, அல்லது வேறு ஒரு “சாஸ்திரியார்” அல்லது “அய்யர்” அல்லது “அய்யங்கார்” அல்லது “ஆச்சாரியா”ரோ திவானாக வந்தால் திருவாங்கூர் ராஜ்யம் இன்னும் மோசமான பார்ப்பன ராஜ்யமாக ஆகவேண்டியதைத் தவிர வேறு வழியில்லை என்பது உறுதியான விஷயமாகும். உதாரணமாக சர். சி .பி .ரா. அய்யர் அவர்களின் யோக்கியதையைப் பார்த்தாலே இது விளங்கும். முதலாவது, திரு.அய்யர், தன் அதிகாரத்தால் செய்யக்கூடிய எந்த உத்தியோகங்களையும், நன்மைகளையும், தன் இனத்தார்களாகிய பார்ப்பனர்களுக்கு மாத்திரம் செய்யக் கூடியவர் என்பது நாம் அறிந்த சங்கதி. இரண்டாவது, எல்லா மக்களும் சமசுதந்தரம் பெற்றுச் சகோதரர்களாய் வாழ வேண்டும் என்னும் சமதர்மக் கொள்கைக்கு எதிரான வருணாச்சிரம தரும வகுப்பினரைச் சேர்ந்தவர் என்பது யாவருக் கும் தெரிந்த செய்தி. மூன்றாவது,

அவர் எப்பொழுதும் பிரிட்டிஷ்காரருக்குச் செல்லப் பிள்ளையாக நடந்து தன் காரியங்களைச் சாதித்துக் கொள்ளக்கூடியவர் என்பது அவருடைய “அரசியல் நாடகம்” அறிந்தவர்களுக்கு நன்றாய்த் தெரியும். இதனால், பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து சுதேச சமஸ்தானத்திற்குப் போகும் எந்த பார்ப்பனரும், பெரும்பாலும் இந்த மாதிரியான யோக்கியதை உள்ளவராகத்தான் இருப்பார்கள். ஆகையால் திருவாங்கூர் பிரஜைகள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு இத்தகைய விஷயங்களை, இந்திய அரசாங்கத்தாருக்கும், மேன்மை தங்கிய மகாராஜாவுக்கும் எடுத்துக் காட்டிப் பரிகாரம் தேடிக் கொள்ளும்படி அவர்களுக்கு நினைப்பூட்டி, நாமும் இந்தச் சமஸ்தானம் பார்ப்பனருக்கும், பார்ப்பனீயத்திற்கும் அடிமைப்பட்டு வருவதைப் பலமாகக் கண்டிக்கிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.11.1931)

Pin It