காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காந்தி சமாதிக்கும், சிலைக்கும் போய் அஞ்சலி செலுத்துகிறது. திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் அண்ணா சமாதிக்கும், சிலைக்கும் சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள். ஆனால், உலகிலேயே முதன் முறையாகத் தேர்தல் மூலம் ஒருமாநில அரசின் பொறுப்பை ஏற்ற இஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்டுகள் எங்கே போய் அஞ்சலி செலுத்தினார்கள் தெரியுமா? புன்னப்புரா வயலார் தியாகிகளின் நினைவிடத்தில். அந்தத் தியாகிகள் வீழ்ந்து விதையாகிப் போன மாதம் அக்டோபர்.

இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன் மன்னர் கோலேச்சிய திருவாங்கூர் சமஸ்தானத்தில் “அமெரிக்க பாணி அரபிக் கடலிலே” என்ற முழக்கம் விண்ணைக் கிழித்து எழுந்தது. இந்தியா சுதந்திரமடைந்தாலும் திருவாங்கூர் சமஸ்தானம் தனியாகவே செயல்படும்; மன்னர் இருப்பார்; திவான் இருப்பார்; எதேச்சாதிகாரமும் கோலோச்சும் என்பதுதான் ‘அமெரிக்க’ பாணிக்குப் பொருள். இந்த சமஸ்தான திவானாக இருந்த சர் சி.பி.ராமசாமி ஐயர்தான். பெரியாரின் வைக்கம் போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதில் முனைப்பு காட்டியவர்.

மன்னரையும் மிஞ்சிய விசுவாசம் என்பதற்று இலக்கணமான இவர் கடைந்தெடுத்தக் கம்யூனிஸ்ட் விரோதியாக இருந்தார். தனது ‘அமெரிக்க பாணி’ திட்டத்தைக் கம்யூனிஸ்ட்கள் ஏற்கவில்லை என்று தெரிந்தவுடன் அவர்களுடனேயே பேச்சு வார்த்தை நடத்தி இணங்க வைத்துவிடலாம் என்று மனப்பால் குடித்தார். ஆனால் அது நடக்கவில்லை.

திருவாங்கூரில் மன்னராட்சி நீடிப்பு என்ற யோசனையைக் கம்யூனிஸ்ட்கள் கடுமையாக எதிர்த்தனர். மக்களாட்சி முறையின் கீழ் திருவாங்கூரும் வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இந்த உறுதியின் வெளிப்பாடு பொது வேலை நிறுத்த அறிவிப்பானது விவசாயிகளும், கயிறு தொழிலாளர்களும் நிறைந்திருந்த திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள புன்னப்புராவிலும், சேர்த்தலா மாவட்டத்தில் உள்ள வயலாரிலும் கம்யூனிஸ்ட் இயக்கம் மிகவும் பலமாக இருந்தது.

இந்திய விடுதலைப் போராட்டம் கொதி நிலையில் இருந்த 1946 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி வேலை நிறுத்த அறிவிப்பு வெளியானது. கூடவே சமஸ்தான திவானின் அடக்குமுறையும் கட்டவிழ்க்கப்பட்டது. ‘அமெரிக்க பாணி அரபிக் கடலிலே’ என் முழக்கமிட்டுக் களம் கண்டனர். மக்கள் அக்டோபர் 24ம் தேதி புன்னப்புராவில் மன்னரின் கூலிப் படையும் பிரிட்டிஷ் ராஜின் காவல் படையும் கைகோர்த்து அவர்கள் மீது காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் தொடுத்து அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். வழக்கம் போல் இந்தப் பிணந்தின்னிக் கழுகுகளுக்கு பெண்களே இலக்கானார்கள். ஆண்கள் மரங்களில் கட்டி வைக்கப்பட்டனர். அவர்களின் கண்ணெதிரிலேயே அவர்தம் தாய், மகள், மனைவி, தங்கை, தமக்கையரை அந்த மனித மிருகங்கள் ருசித்துக் குதறின. கொதித்தது உழைப்பவர் குருதி, பதைத்தன நெஞ்சங்கள். இனி பொறுப்பதில்லை என்று எழுந்தது பாட்டாளி வர்க்கப்படை.

ஆனால் அவர்கள் நிராயுதபாணிகள் தானே! கண் மூடித்தனமான கம்யூச எதிர்ப்பாளரான திவான் ராமசாமி ஐயர் ராணுவத்தையும் துணைக்கழைத்தார். கட்டைத் துப்பாக்கிகள் போதாதென்று எந்திரத் துப்பாக்கிகளும் சுட்டன. அக்டோபர் 27ம் தேதி, இரவு நேரத்தில் வயலாருக்குள் புகுந்தன காக்கிச் சட்டை மிருகங்கள். இன்னொரு ஜாலியன் வாலாபாகானது வயலார். சுமார் 500 தொழிலாளர்கள் விவசாயிகள் என வியர்வை மனிதர்கள் மண்ணில் சாய்ந்தனர். வயலாரில் ரத்த ஆறு ஓடியது.

திருவாங்கூர் சமஸ்தான திவானின் அதிகார வெறிக்குப் பல நூறு மக்கள் பலியிடப்பட்டனர். புன்னப்புராவும் வயலாரும் சுடுகாடுகள் போலாயின. கணவனை இழந்த பெண்கள்; தந்தையை இழந்த பிள்ளைகள்; பிள்ளைகளைப் பறிகொடுத்த வயது முதிர்ந்த பெற்றோர்கள் என புன்னப்புராவும் வயலாரும் சோகம் போர்த்திக் கிடந்தன.

நாட்டுக்கு விடுதலையை நாங்கள் வாங்கிக் கொடுத்தோம் என்று சொல்லும் காங்கிரஸ்காரர்கள் சமஸ்தானத்துக்கு விடுதலை என்பது துரும்பையும் அசைக்கவில்லை; ஆனால், அதற்கு சேர்த்துத் தான் விடுதலை என்று வீரஞ்செறிந்த போராட்டத்தில் ஈடுபட்டு கம்யூனிஸ்ட்களும் ஜனநாயக விரும்பிகளும் பொதுமக்களும் களமிறங்கியபோது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை வேடிக்கைப் பார்த்தனர். அது மட்டுமல்ல அப்போது சென்னை ராஜதானியின் முதலமைச்சராக இருந்த காங்கிரஸ்காரரான எம் எஸ் பிரகாசம் மன்னருக்குப் படைகளை அனுப்பி உதவி செய்தார்.

உரிமை வேட்கையை உழக்குக்குள் அமுக்கிவைத்துவிடலாம் என்று மன்னரும் திவானும் கண்ட கனவு நனவாகிவிட்டது போல் தோற்றம் காட்டியது என்றாலும் அடிபட்ட தொழிலாளி வர்க்கம் ஓய்ந்துவிடவில்லை. மீண்டும் அணிசேர்த்து. அடுத்த ஆண்டே திவான் ராமசாமி ஐயர் அங்கிருந்து விரட்டப்பட்டார்.

‘‘சுதந்திர திருவாங்கூர்’’ ‘‘அமெரிக்க பாணி நிர்வாகம்’’ என்ற திட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. மகாராஜாவின் ஆலோசர் ஒருவரின் கீழ் புதிய தற்காலிக நிர்வாகம் அமைக்கப்பட்டது. மன்னராட்சி முடிவுக்கு வந்தது. 1948ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது “வயலார் ரத்தம் எங்கள் ரத்தம்” என்பது மக்களின் முழக்கமாக மாறியது. திருவாங்கூரின் மூலைமுடுக்கெல்லாம் அது எதிரொலித்தது. உழைப்பாளி மக்கள் சிந்திய ரத்தம் வீண்போகவில்லை. அது விடுதலைக்கு உத்வேகத்தை அளித்தது. வெற்றியை விளைவித்தது. இதனால்தான் புன்னப் புரா வயலாரில் ரத்தம் சிந்திய பத்தாண்டுகளுக்குப் பின் கம்யூனிஸ்ட் கட்சித்தலைமையில் கேரளாவில் முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசின் பொறுப்பை ஏற்ற போது ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கு முன்பாக வயலாரில் உள்ள தியாகிகள் கல்லறை முன் புனிதப் பிரமாணம் ஏற்கப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகளுக்குத் தியாகிகள் தானே வழிகாட்டுகிறார்கள்!

(நன்றி: DYFI இளைஞர் முழக்கம்)

Pin It