படித்துப் பாருங்களேன்: S.Jeyaseela Stephen (2016) A Meeting of the Minds European and Tamil Encounters in Modern Sciences, 1507 - 1857

பள்ளி மாணவனாக இருந்த போது எங்கள் தமிழ் ஆசிரியர்கள் பலரும் அடிக்கடிக் கூறிய செய்தி ஒன்றுண்டு.

‘தமிழர்களின் மருத்துவச் சுவடிகளை அய்ரோப்பியர்கள் தம் நாட்டிற்குக் கொண்டு சென்று, அதைப் படித்து மருந்து தயாரித்து நமக்கு விற்கிறார்கள்’ என்பதே அவர்களது கூற்றின் சாரமாகும். இக்கூற்றை, ‘கதை’ என்று கூறி, நாங்கள் ஒதுக்கி விடுவது வழக்கமாய் இருந்தது.

jeyaseela stephenபள்ளிப் பருவம் முடிந்து பல ஆண்டுகள் கடந்த பின்னர், தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் கண்டங்கத்திரி, நெருஞ்சி முள் என்பன சிப்பங்களாகக் கட்டப் பட்டு ஏற்றுமதிக்காகக் காத்திருந்ததைக் காண நேரிட்டது. இக்காட்சியானது எப்போதோ எங்கள் தமிழ் ஆசிரியர்கள் கூறிய செய்திகளை நினைவூட்டியது.

டேனியல் ஜெயராஜ் (2005) எழுதிய சீகன்பால்க் குறித்த வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்தபோதும் இதே நினைவுதான் வந்தது.

தற்போது ஜெயசீல ஸ்டீபன் எழுதியுள்ள இந்நூலைப் படித்து முடித்த போது, தமிழர்களின் பாரம்பரிய மருத்துவம் குறித்தும், அதில் நிகழ்ந்த அய்ரோப்பியர் ஊடாட்டம் குறித்தும் பல நுணுக்கமான வரலாற்றுச் செய்திகளை அறிய நேரிட்டது.

சாட்விக் இணையரின் ‘இலக்கியத்தின் வளர்ச்சி’ என்ற ஆங்கில நூல் குறித்து, ‘உருவத்திலும் உள்ளடக்கத்திலும் பாரியாய நூல்’ என்று க.கைலாசபதி குறிப்பிடுவார். அவரது இக்கூற்று இந்நூலுக்கும் முற்றிலும் பொருந்தும்.

ஆயிரம் பக்கங்களைக் கடந்த இந்நூல் தமிழக அறிவியல் வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியது. 16 ஆவது நூற்றாண்டு தொடங்கி 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான காலச் செய்திகள் நூலில் இடம் பெற்றுள்ளன. வேறு வகையில் கூறினால் போர்ச்சுக்கீஸ்-டச்சு-டேனிசியர்-பிரெஞ்சுக்காரர்-ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியர் எனத் தமிழகத்தின் தொடக்க காலக் காலனியவாதிகளின் ஆட்சிக்காலத்தைக் களமாகக் கொண்டது.

ஆசிரியர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தொடக்க காலக் காலனியம் குறித்து அதிக அளவில் இதுவரை அக்கறை காட்டப்படவில்லை. கல்விப்புலம் சார்ந்த வரலாற்றுக் கல்வியிலும் சரி, பொதுவான வரலாற்று நூல் வரிசையிலும் சரி, தொடக்ககால காலனியவாதிகளான, போர்ச்சுக்கீசியர்-டச்சுக்காரர்-டேனிசியர் குறித்த பதிவுகள் சொல்லிக் கொள்ளும்படி இடம்பெறவில்லை.

நூலாசிரியர்

இக்குறைபாட்டைப் போக்குவதில் ஈடுபாட்டுடன் உழைத்துவரும் ஒரு சில ஆய்வாளர்களில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குப் பணியாற்றி வருபவர் பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன். மேற்கு வங்கத்தின் சாந்திநிகே தனில் தாகூர் நிறுவிய விசுவபாரதி பல்கலைக்கழகத்தில் கடல்சார் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தற்போது புதுச்சேரியில் பிரெஞ்சு அரசின் துணையுடன் ‘இந்திய பிரெஞ்ச் ஆய்வு நிறுவனம்’ என்ற பெயரில் ஆய்வு நிறுவனம் ஒன்றை நிறுவி ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகிறார். போர்ச்சுக்கீஸ், டச்சு, பிரெஞ்சு, இலத்தீன் ஆகிய அய்ரோப்பிய மொழிகளில் பயிற்சி உடையவர் என்பதால் இம்மொழி அறிவின் துணையுடன் வரலாற்று நூல்களை எழுதி வருகிறார். இதன் பொருட்டு இம் மொழிகள் வழங்கும் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள அரசு, பல்கலைக்கழக, தனியார் ஆவணக் காப்பகங்களிலும், நூலகங்களிலும் தரவுகளைத் திரட்டும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். பல அரிய நாட்குறிப்புகளையும் நூல்களையும், கடிதங்களையும் பதிப்பித்து வெளியிடும் பணியையும் செய்து வருகிறார்.

நூலின் நோக்கம்

நவீனகாலத்தின் தொடக்கத்தில் இருந்த தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் நிலவிய அறிவியல் தொழில் நுட்பம் குறித்த வரலாறு இன்றுவரை விரிவாக ஆராயப்படவில்லை என்பது நூலாசிரியரின் கருத்தாக உள்ளது. இதற்கு மூன்று காரணங்களை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

·             அய்ரோப்பியர்களின் வாணிபச் செயல்பாடு களே முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்பட்டன. எனவே வணிகர்கள், வணிக நிறுவனங்கள் வாணிபம் என்பனவே ஆய்வுப் பொருளாக ஆயின.

·             பண்டகசாலைகளின் பாதுகாப்புக்குப் பயன் படுத்தி வந்த இராணுவத்தின் துணையால் வணிகர்கள் என்ற நிலையில் இருந்து ஆட்சி யாளர்களாக அய்ரோப்பியர் மாறினார். இவர் களது இராணுவ நடவடிக்கைகள், மேற் கொண்ட நிர்வாக மாறுதல்கள் என்பன

வற்றை மையமாகக் கொண்டு காலனியம், ஏகாதிபத்தியம் என்பனவற்றுடன் தொடர்பு படுத்திப் பார்க்கும் ஆய்வுகள் உருவாயின.

·             தீவுகள் போல் ஆங்காங்கே நிலை கொண் டிருந்த, பிற அய்ரோப்பிய நாடுகளின் செயல் பாடுகள் ஓரங் கட்டப்பட்டு, இந்தியாவில் ஆங்கிலக் கிழக் கிந்தியக் கம் பெனி நிலை கொண்டது மட்டுமே ஆய்வுப் பொருளாகியது.

நூலின் அமைப்பு

முன்னுரையையும், முடிவுரையையும் உட்படுத்தி மொத்தம் இருபத்தியிரண்டு இயல்களை இந்நூல் கொண்டுள்ளது.

தமிழர்களின் அறிவியல் வரலாறு என்ற தலைப்பில் தனி யாக ஒரு நூலே எழுது வதற்கான முன்னோட்ட மாக நூலின் முன்னுரை அமைந்துள்ளது. அறிவியல் அறிவு பரவலாவதற்கு வாணிபத் தொடர்புகள் எவ்வாறு துணைநின்றன என்பதையும் இம்முன்னுரையின் வாயிலாக அறிய முடிகிறது.

கிறித்துவிற்கு முந்தையகாலம் தொட்டு அய்ரோப்பியர் காலம்வரை, தமிழகத்தில் நிலவிய பாரம்பரிய அறிவியல் செய்திகளை இரண்டாம் இயல் விவரிக்கிறது.

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் செயல் பட்ட கிழக்கிந்தியக் கம்பெனியின் உறவால் தாவர வியல், வேளாண்மை போன்ற துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களை மூன்றாம் இயல் வெளிப்படுத்துகிறது.

ஆங்கிலத் தாவரவியல் ஆர்வலர்கள் தமிழ்நாட்டில் மேற்கொண்ட ஆய்வுகளையும் இதனால் தாவரவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியையும் நான்காவது இயல் ஆய்வு செய்கிறது.

இந்நூல் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கால கட்டத்தில் பல்வேறு தாவரவியல் பூங்காக்கள் தமிழ் நாட்டில் உருவானதை அய்ந்தாவது இயல் விவரிக்கிறது.

அய்ரோப்பியர்களால் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட பல்வேறு தாவரங்கள் குறித்த செய்தி களை ஆறாவது இயல் வாயிலாக அறியமுடிகிறது.

ஏழாவது இயல் தமிழக வேதியியல் துறையில் ஏற்பட்ட மாற்றங்களை நாம் அறியச் செய்கிறது.

அய்ரோப்பியரின் இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களுக்கு ஏற்பட்ட நோய் களையும், அதற்கான சிகிச்சை களையும் எட்டாவது இயல் விவரிக்கிறது.

தமிழ் மருத்துவ முறை களையும், அய்ரோப்பிய மருத்துவ முறைக்கும், தமிழ் மருத்துவ முறைக்கும் இடையே உருவான தொடர்புகளையும் ஒன்பதாவது இயல் ஆராய்கிறது.

இங்கு வாழ்ந்த அய்ரோப்பியரைத் தாக்கிய நோய்கள் குறித்தும், அவற்றை அவர்கள் எதிர்கொண்டமை குறித்தும் பத்தாவது இயல் குறிப்பிடுகிறது.

இதன் தொடர்ச்சியாக அய்ரோப்பிய முறையிலான மருத்துவமனைகள் இங்கு உருவானமையை பதினொன்றாம் இயல் வாயிலாக அறிய முடிகிறது.

இவ்வாறு உருவான மருத்துவமனைகளில், அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அய்ரோப்பிய மருத்துவ முறையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதை பன்னிரண்டாவது இயல் விவரிக்கிறது.

அய்ரோப்பிய ஆட்சியாளர்களுக்கும், தமிழக ஆட்சியாளர்களுக்கும் இடையே, இம்மருத்துவ முறைகளால் ஏற்பட்ட உறவுகளை பதின்மூன்றாவது இயல் வாயிலாக அறியமுடிகிறது.

தமிழ்மருத்துவ நூல்கள் சேகரிப்பிலும், ஆய்விலும் அய்ரோப்பிய அறிஞர்கள் மேற்கொண்ட முயற்சி களையும், இது தொடர்பான அவர்களது பதிவுகளையும் பதினான்காவது இயல் விளக்குகிறது.

தமிழகத்தில் அய்ரோப்பியர்கள் மேற்கொண்ட புவிஇயல் அளவீடுகளையும், நில வரைபடம் தயாரித்தலும் புவிஇயலும் கல்விக்குரிய பாடங்களாக வளர்ச்சி பெற்றமையையும் பதினைந்தாவது இயல் ஆராய்கிறது. அத்துடன், புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்களும், டேனிசியரின் தரங்கம்பாடியில் செயல்பட்ட ஜெர் மானிய மறைப்பணியாளர்களும், தமிழ்நாட்டில் பரவலாக நிலைபெற்றிருந்த ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி ஊழியர்களும் மேற்கொண்ட நிலஅளவைப் பணிகள் வரைபடத் தயாரிப்புகள் குறித்த செய்திகளும் இவ்வியலில் இடம்பெற்றுள்ளன. 1828-1830க்கு இடைப்பட்ட காலத்தில் மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் போக்கு வரத்தில் நிகழ்ந்த முன்னேற்றமும் காற்றின் துணையால் இயங்கிய கடற் போக்குவரத்துக் கலன்கள் நீராவி எஞ்சின்களைக் கொண்டமையாக 1840 இல் மாறிய செய்தியும் இவ்வியலில் இடம் பெற்றுள்ளன.

நிலத்தியல் அறிவுத் துறை வளர்ச்சியடைந்தமையையும், அய்ரோப்பியர்களின் சுரங்கத் தொழில் நடவடிக்கைகளும் பதினாறாவது இயலில் இடம் பெற்றுள்ளன. 1620க்கும் 1660க்கும் இடைப் பட்ட காலத்தில் போர்ச்சுக் கீசியர்களாலும், டச்சுக்காரர் களாலும் தமிழ்நாட்டில் இருந்து பொட்டாசியம் நைட்ரேட் ஏற்றுமதி செய்யப் பட்டதையும் இவ்வியல் வாயிலாக அறியமுடிகிறது. அய்ரோப்பியர்கள் அறிந்திராத உலோகங்களும் தாதுக்களும் தமிழகத்தில் இருந்ததையும், அரியலூரில் இரும்புச் சுரங்கம் செயல்பட்டதையும் இவ்வியல் வெளிப்படுத்துகிறது. இவை தவிர இவ்வியல் வெளிப்படுத்தும் பிற செய்திகள் வருமாறு:

·             இரும்பு உருக்கு உற்பத்திக்கான வாய்ப்பு உள்ளதை 1836இல் ஜோசி மார்ஷெல் ஹீத் என்ற ஆங்கிலேயர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

·             1840 இல் சேலத்தில் குரோமேட் இரும்புச் சுரங்கங்கள் செயல்பட்டுள்ளன.

·             ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழியர்கள் திருச்சியிலும் சேலத்திலும் மக்னீசிய சுரங்கங்களைக் கண்டுபிடித்து உள்ளார்கள்.

·             பரங்கிப்பேட்டையில் இரும்பு உருக்காலை ஒன்று கிழக்கிந்தியக் கம்பெனியால் நிறுவப் பட்டது.

·             தமிழர்களின் கிரானைட் மணற்குவாரி குறித்தும், மெருகூட்டும் தொழில் நுட்பம் குறித்தும் அய்ரோப்பியர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

வானிலை ஆய்வு, வானிலை இயல் தொடர் பான அய்ரோப்பியத் தொழில்நுட்பம் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அறிமுகமானதை, பதினேழாவது இயல் வாயிலாக அறியமுடிகிறது. சென்னையிலும் நாகூரிலும் இது தொடர்பான ஆய்வுகள் நிகழ்ந்ததை இவ்வியல் சுட்டுகிறது.

1778 மார்ச் தொடங்கி 1778 மே முடிய சென்னையின் காற்று, பருவமழை தொடர்பான ஆய்வுகளை ஜேம்ஸ் காப்பர் என்பவர் மேற்கொண்டு உள்ளார். 1789-1791 கால சென்னை நகரின் பருவநிலை குறித்த பதிவை சீர்திருத்தக் கிறித்தவ மறைத்தளத்தினர் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் நிகழ்ந்த பஞ்சங்கள், வறட்சி, மழையளவு, சூறாவளி, புயல்வீச்சு என்பன குறித்தும் அய்ரோப்பியர்கள் பதிவு செய்துள்ளனர்.

வானியல் ஆய்வுக்கான அறிவியல் கருவிகளை அய்ரோப்பியர்கள் இங்கு இறக்குமதி செய்தமை குறித்தும் கடல்சார் வானியல், கணித வானியல், நாட் காட்டி வானியல் ஆகியன இங்கு வளர்ச்சி பெற்றமையும் பதினெட்டாவது இயலில் குறிப்பிடுகிறது.

வானிலை ஆய்வு மையம் ஒன்று டேனிசியர்களால் 1788இல் தரங்கம்பாடியில் அமைக்கப்பட்டதையும் இவ்வியல் வாயிலாக அறியமுடிகிறது. வானியலும், இயற்பியலும் அய்ரோப்பியர்களாலும் நம்மவர்களாலும் கற்றுக்கொடுக்கப்பட்டதை பத்தொன்பதாவது இயல் குறிப்பிடுகிறது.

வானியல் ஆய்வுக்கான சோதனைக் கூடமாக தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதியை அய்ரோப்பியர் பயன்படுத்தியமையும் இதன் பொருட்டு பல்வேறு கருவிகளை அய்ரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்ததையும் இருபதாவது இயல் அறிமுகம் செய்கிறது.

1567 தொடங்கி 1857 வரையிலான காலத்தில் ஒரு பாடமாக அறிவியலைப் பள்ளிகளில் அறிமுகம் செய்துள்ளதை இருபத்தியன்றாவது இயல் குறிப் பிடுகிறது. இப்பணியில் கிழக்கிந்தியக் கம்பெனியும், கிறித்தவ மறைத்தளங்களும் மேற்கொண்டன.

இறுதி இயலான இருபத்தியிரண்டாவது இயல், நூலின் முடிவுரையாக அமைகிறது.

இந்நூலில் இடம்பெற்றுள்ள மேற்கூறிய செய்திகள் அனைத்தையும் அறிமுகம் செய்வது இயலாத ஒன்று. இந்நூலின் எட்டாவது இயல் தொடங்கி பதினான்காவது இயல் முடிய ஏழு இயல்கள் மருத்துவம் குறித்த செய்தி களைக் குறிப்பிடுகின்றன. இயல்வாரியாக இவற்றைத் தொகுத்துரைக்காமல் சில தலைப்புகளின் கீழ் இச் செய்திகள் மட்டும் அறிமுகம் ஆகின்றன.

அறிவுப்பறிமாற்றம்

இந்நூலின் ஒன்பது, பதிமூன்று, பதினான்காவது இயல்களில் இத்தலைப்புக்குரிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் கால்கொண்ட முதல் காலனியவாதிகளான போர்ச்சுக்கீசியர்கள் தமிழகத் தாவரங்களின் மருத்துவ குணங்களை அறிந்ததுடன் அவற்றைப் போர்ச்சுக்கீசிய மொழியில் பதிவு செய் துள்ளனர். எடுத்துக்காட்டாகச் சில செய்திகள் வருமாறு:

சுக்கு:

இதை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் ஒற்றைத் தலைவலி நீங்கும். வாதநோய் தீர்க்கும் ஆற்றலும் சுக்கிற்குண்டு. கருப்புக்கட்டியுடன் சுக்கைக் கலந்து தின்றால் சளியில் இருந்து பாதுகாக்கும்.

குறுக்கஞ்செடி, குடியோத்தி பூண்டு

இவை பாம்புக்கடிக்கு மருந்தாகும். இவற்றின் விதைகளைப் பொடி செய்து தயாரிக்கும் மாவு, பால்வினை நோய்களால் விளையும் ஊறலைப்போக்கும். இவற்றின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சிரங்கு தொழுநோய் ஆகியனவற்றைப் போக்கும்.

தாமரை:

இதன் தண்டுகளில் இருந்து எடுக்கப்படும் சாறு, புத்துணர்ச்சி தரும் தன்மையது. அத்துடன், தலைமயிர் தொடர்பான குறைபாடுகளைப் போக்கும் தன்மையது. இதன் வேர்கள் மூலநோய்க்கான மருந்தாகப் பயன் படுத்தப்படுகின்றன.

புளி:

இது பெரும்பாலும் சமையலுக்குப் பயன்படுகிறது. வயிற்றில் அமிலத்தன்மையை மட்டுப்படுத்தவும் காய்ச்சலுக்கும், தாகம் போக்கவும் இது பயன்படுகிறது. பசியைத் தூண்டும் தன்மையது.

இதுபோன்ற பதிவுகள் போர்ச்சுக்கீசிய மொழியில் எழுதப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வளரும் இருபத்தி யாறு தாவரங்கள் குறித்தும் அவற்றின் மருத்துவ குணம் குறித்தும் போர்ச்சுக்கீசியர்கள் கண்டறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதிப் பாதுகாத்துள்ளார்கள்.

···

சென்னை ஜார்ஜ் கோட்டையில் ஆங்கிலேயர் களுக்காகச் செயல்பட்டு வந்த ஆங்கில மருத்துவ மனையில் சாமுவேல் பிரவுண் என்பவர் அறுவை மருத்து வராகப் பணியாற்றி வந்தார். இம்மருத்துவமனைக்கு இலண்டனில் இருந்து மருந்துகள் வந்தன. உள்நாட்டு மருந்துகளின் பயன்பாடு குறித்து அறிந்து கொள்ள பிரவுண் ஆர்வம் கொண்டார்.

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளை இவர் பார்வையிட்டு மருத்துவக் குணம் கொண்ட தாவரங் களைச் சேகரித்து அவற்றின் மருத்துவ குணங்களைப் பதிவு செய்துள்ளார். இப்பதிவில் இத்தாவரங்களின் தமிழ்ப்பெயர்களையே குறிப்பிட்டுள்ளார். இயன்ற போது அவற்றின் தெலுங்குப் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இத்தாவரங்களில் இருந்து மருந்து தயாரித்தலையும் பதிவு செய்துள்ளார்.

‘மருத்துவத் தாவரவியலில்’ ஆழமான ஆய்வு மேற்கொண்ட அவர், தாவரங்களின் பல்வேறு உறுப்புகள் தமிழர்களால் எவ்வாறு பயன்படுத்தப் படுகிறது என்பது தொடர்பான அரிய செய்திகளைப் பதிவு செய்துள்ளார். நோய்களின் பெயர்களும், அதற்கான மருந்துகளைத் தயாரித்தலும் அவரது பதிவில் விரிவாக இடம்பெற்றுள்ளன. ஆயினும் இவை சித்த மருத்துவம் சார்ந்ததா அல்லது ஆயுர்வேதம் சார்ந்ததா என்பதில் தெளிவில்லை.

பல்வேறு வகையான காய்ச்சலுக்கான மூலிகை மருத்துவம் குறித்து தனி அறிக்கை ஒன்றையும் அவர் தயாரித்துள்ளார். இவ் அறிக்கையில் காய்ச்சல் வகைகளும் அவற்றுக்கான தாவரம் சார்ந்த மருத்துவமும் இடம்பெற்றுள்ளன.

இவை தவிர, வயிறு தொடர்பான நோய்கள், இரத்த வாந்தி, இரத்தத்துடன் கூடிய மலப்போக்கு, நஞ்சினால் ஏற்படும் பாதிப்பு, இருமல், தடுமம்பிடித்தல், ஆஸ்துமா, உடல்வலி, வாதம், உடலில் தோன்றும் கட்டிகள், மூட்டுவலி, கிருமி நீக்கல், வாய்வுத் தொல்லை, இரத்தத்தை தூய்மைப் படுத்தல், கண், பல் வலி என ஒரு பெரிய பட்டியலை பிரவுண் தயாரித்துள்ளதுடன் அவற்றுக்கான தமிழரின் தாவரம் சார்ந்த மருந்து களையும் குறிப்பிட்டுள்ளார். என்றாலும் சில தாவரங் களின் பெயரை மட்டும் குறிப்பிட்டுவிட்டு அவற்றின் மருத்துவ குணங்களைக் குறிப்பிடாதும் விட்டுள்ளார். இவை அனைத்தையும் பிரவுணின் அறிக்கையில் இருந்து இந்நூலாசிரியர் திரட்டித் தந்துள்ளமை பாராட்டுதலுக் குரிய செயலாகும். இச்செய்திகள் 17 ஆம் நூற்றாண்டு காலத் தமிழகத்தின் மருத்துவ அறிவியல் தொடர்பான ஆய்வுகளுக்குத் துணைபுரியும்.

···

தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகளில் பல்வேறு வகையான எண்ணெய் வித்துக்கள் பயிராகி உள்ளன. இவற்றுள் ஆமணக்கு, எள், கடுகு என்பன முக்கிய மானவை. தென்னை, இலுப்பை ஆகிய மரங்களும் எண்ணெய் தயாரிப்பில் உதவியுள்ளன. இவற்றில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், மருந்து தயாரிப்பில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வந்த எண்ணெய் ஆமணக்கு எண்ணெய் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் மருத்துவரான கில்பர்ட் பாஸ்லே என்பவர் ஆமணக்கு எண்ணெயின் பயன்பாட்டைப் புகழ்ந்து கூறியுள்ளார்.

இவ் எண்ணெயானது மலமிளக்கியாக மட்டுமின்றி கல்லீரல் வீக்கத்திற்கான மருத்துவத்திற்கு உதவும் தன்மைகொண்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். (கல்லீரல் வீக்கம் தமிழகக் கடலோரப் பகுதியில் பரவலாக இருந்துள்ளது).

கி.பி.1771 இல் இலண்டன் மருத்துவர் ஒருவரிடம், கல்லீரல் வீக்கத்திற்கான சிகிச்சையில் விளக்கெண்ணையைப் பயன்படுத்துமாறு கிழக்கிந்தியக் கம்பெனி இயக்குநர் களிடம் கூறும்படி இவர் பரிந்துரைத்துள்ளார்.

இது தொடர்பாகக் கம்பெனியிடமிருந்து அவரிடம் விளக்கம் கேட்டனர். ஒரு மருந்தின் சிறப்புக் கூறுகள் குறித்து, அனுபவ அறிவின்றி நான் கூறமாட்டேன் என்று அவர் விடையளித்தார். 3 நவம்பர் 1800 இல் டேவிட் கார்னெடையர் எழுதிய கடிதத்தில், பப்பாளிப் பாலுடன் கலந்து ஆமணக்கெண்ணையைப் பருகினால், நோயாளியின் குடலில் தங்கியுள்ள இறந்த புழுக்கள் வெளியேறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உடலில் மேற்பூச்சாகப் பயன்படுத்தும் தைலங்கள் குறித்து, கிறித்தவ மறைப்பணியாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர். தரங்கம்பாடியில் இருந்த கிறிஸ்டோப் சாம்வெல் என்பவர், தமிழ் மருத்துவத்தில் நல்லெண்ணெய் பரவலாகப் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பேறுகாலத்தின்போது பெண்மருத்துவ உதவியாளர்கள் எண்ணெய் பயன்படுத்துவதாக ஃபோலி என்ற டேனிசிய அறுவை மருத்துவர் 1798 இல் குறிப்பிட்டு உள்ளார்.

இலுப்பை எண்ணெயின், பயன்பாடுகளை, ஜான் என்ற ஆங்கில மருத்துவர் விரிவாக ஆய்வு செய்துள்ளார். எண்ணெய்களின் துணைகொண்டே காயங்களை தமிழ் மருத்துவர்கள் ஆற்றியுள்ளனர். ஒரு வகையான எண்ணெயைத் தடவி, நாற்பத்தி எட்டு மணிநேரத்தில் காயங்களை ஆறச் செய்துள்ளனர்.

ஆயினும் இந்த எண்ணெயானது எதிர்மறையான பக்க விளைவுகளைத் தருவதாக அய்ரோப்பியர்கள் கருதினர். ஆறிய காயத்தின் மேற்பகுதித் தோல் உலர்ந்து போனாலும் அதன் உட்பகுதி குணமடை வதில்லை. காயத்தின் நோய்த்தொற்று வேறு இடத்தில் வெளிப்பட்டு சில சிக்கல்களை உருவாக்கியது.

உடலில் தோன்றும் கட்டிகளை, இலைகள் வேர்களின் துணைகொண்டு தமிழ் மருத்துவர்கள் போக்க முனைவர். இவற்றால் பயன் இல்லையெனில் தானாகப் பழுத்து உடையும்படி விட்டுவிடுவர். மிக அரிதாகவே கட்டிகளைக் கீறுவர். தமிழ்நாட்டில் தாம் கண்ட பாம்பினங்களையும் அவை கடித்தால் மேற்கொள்ளும் சிகிச்சை முறைகளையும் அய்ரோப்பியர்கள் பதிவு செய்துள்ளனர்.

இத்தகைய பதிவுகளுடன் நின்றுவிடாமல் தமிழ் மருந்துகளைப் பயன்படுத்துவதிலும் தயாரிப்பதிலும் அய்ரோப்பியர்கள் மேற்கொண்ட செயல்பாடுகளை அடுத்த இதழில் காண்போம்.

- அடுத்த இதழிலும் தொடரும்

Pin It