சைவ பக்தி இலக்கிய வரலாற்றில்

தமிழகத்தில் சைவ சித்தாந்தத் துறையின் முதல் மாணவராகப் பயின்று அத்துறையில் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியரானவர் நல்லூர் சா.சரவணன். தற்போது இவர் சென்னைப் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழ் இலக்கியத்திலும் சைவ சித்தாந்தத்திலும் துறைபோகிய இவர் சமீபத்தில் தொல்லியலறிஞர் முனைவர் ஆ.பத்மாவதி அவர்களின் 'மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்' எனும் நூலை பதிப்பித்தமைக்காக காவி பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானார். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இவரைப் பதவி நீக்கம் செய்யப் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட போது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்ந்த மாணவர்கள் அதனை முறியடித்தனர். இன்று தமிழகத்தில் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் இந்து தீவிரவாத அரசியலுக்கு அடிகோல முனையும் நிலையில் இந்நேர்காணல் முக்கியத்துவம் பெறுகிறது.

நேர்காணல்: கணபதி இளங்கோ

manikavasakar book 3501) உங்களது கல்வி, இளமைப்பருவம், சமூக செயல் பாடுகள் குறித்து சுருக்கமாகக் கூறுங்கள்.

இடைக்கழி நாட்டு நல்லூர் சொந்த ஊர்; பிறந்தது சென்னை மருத்துவமனையில். படித்தது நல்லூர் பஞ்சாயத்து தொடக்கப்பள்ளி, அதன்பிறகு ஆறு முதல் 12 வரை கிருஷ்ணாரெட்டியார் மேல்நிலைப் பள்ளி. இது கடப்பாக்கம் கடற்கரை சாலையில் அமைந் துள்ளது. 6 முதல் 10 வரை படிக்கும்போதே வரலாற்று ஆசிரியருக்கு என்மீது பரிவு உண்டு. அந்த அம்மையார் திருமதி.பார்வதி அவர்கள் என்னை தனது மகனாக பாவித்து முன்வரிசையில் அமர்த்தி பாடம் நடத்துவார். அப்போதே என்னுடைய குரல் மென்மையாக இருந்ததால் என்னை ‘கவிஞன்’ என்று குருநாதன் ஆசிரியர் அழைப்பார். பத்தாம் வகுப்பிலேயே என்னை பட்டிமன்றங்களில் பங்கேற்கச் செய்தனர். அதன் பிறகு பள்ளிகளுக்கு இடையிலான பட்டிமன்றம் முதலான போட்டிகளில் கலந்து கொள்வேன். பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி யடைந்த பிறகு அடுத்தடுத்து பாடங்களை தேர்ந் தெடுத்து சேரத் தெரியவில்லை. அந்த நிலையில் எனக்கு பிடித்தமானது வேதியியலும், தாவரவியலும் தான். இருந்தாலும் அதை உரிய நேரத்தில் விண்ணப் பிக்காததால் கிடைக்கவில்லை.

இது 1982இல் நடந்தது. அப்போதுதான் இளங்கலை இலக்கியவியல் சேர்ந்தேன். மயிலம் கல்லூரியில் Walk in Interview நடந்தது. தமிழ் இலக்கியத்தைப் படிக்க அப்போதெல்லாம் பெண்களே பெரும் பாலும் சேரும் நிலையிருந்தது. பையன்கள் குறைவு. எனவே, என்னை அப்போதே விண்ணப்பம் கொடுத்து சேர்த்துக் கொண்டனர். இது 1982இல் நடந்தது கடுமையான மழை வெள்ளம். காலதாமதமாக சென்று கடைசி அரை மணி நேரத்தில் முதலாமாண்டில் தேர்வெழுத அனுமதித்தனர். இரண்டாமாண்டு மூன்றாமாண்டு சைவசித்தாந்தம் பாடமிருந்தது, அவற்றில் நல்ல மதிப்பெண் எடுப்பேன். முதல்வர் வகுப்பிலே கேள்வி கேட்பார். நான் ஆய்வுக் கட்டுரையே எழுதிவிடுவேன். காலையில் வகுப்பு தொடங்கும் முன்பே சிவலிங்கனார் உடன் என்னை உட்கார வைத்து அவரும் சேர்ந்து எனது கட்டுரைகள் குறித்து விவாதிக்கச் செய்வார்.

மூன்றாமாண்டில் பிள்ளைத்தமிழ், உலா எல்லாம் நான் எழுதியிருக் கிறேன். புதுக்கவிதையும், மரபுக்கவிதைகளும் கூட எழுதினேன். அந்தச் சூழலில்தான் பட்டப்படிப்பு முடித்தவுடன் அவர் என்னிடம் “நீ எல்லாரையும் போல தமிழ் இலக்கியம் படிக்க வேண்டாம். எனக்குத் தெரிந்த இரத்தினசபாபதி என்பவர்  இருக்கிறார். அவரிடம் முதுகலை சைவசித்தாந்தம் படி; என்று அனுப்பி வைத்தார். இங்கு நான் தமிழ் இலக்கியம், சைவ சித்தாந்தம் இரண்டும் விண்ணப் பித்தும் பொற்கோ தமிழ்இலக்கியம் படிக்க அழைத்தும், வை.இர என்னை விட விரும்பவில்லை.

சைவ சித்தாந்தத்தில் 4 பேர் சேர்ந்தோம். அதில் ஒருவர் பெண். மற்ற இருவர் வழக்கறிஞர்கள். ஆனால், அந்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது. வக்கீல்களும் இடையில் நின்று விட்டனர். நான் ஒருவன்தான் முடித்தேன். சைவ சித்தாந்தத் துறையின் முதல் மாணவன் நான்தான். பிறகு அங்கேயே முனைவர் பட்டத்திற்கும் ஆய்வு மேற்கொண்டேன். அதன் பிறகு நெறியாளரும் பணிமூப்பு அடைந்து விட்டார். சைவ சித்தாந்தத்துறையும் Endowment Department என்பதால் நிரந்தர வேலை தராது என்று உணர்ந்து மீண்டும் தமிழ் இலக்கியம் எம். ஏ. படித்து விட்டு வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் இருக்கையில் தமிழ்ப்பேராசிரியர் பணி. மீண்டும் மயிலாப்பூர் இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக தமிழ் நாட்டிற்கும் வந்து, இப்போது சைவ சித்தாந்தத் துறையின் முதல் மாணவன் என்ற அடிப்படையில் வழக்கில் வெற்றி பெற்று பேராசிரியராகவும் இருக்கிறேன். இதுதான் முன்கதைச் சுருக்கம்.

2) புராணங்கள் குறிப்பிடும் மாணிக்கவாசகர் கட்டிய கோயில்தான், ஆவுடையார் கோயில் என்று மக்கள் வழிபட்டு வருகின்ற நிலையில் அதனை தொல்லிய லாளர் ஆ. பத்மாவதி ஆராய்ந்து இது மாணிக்க வாசகர் கட்டிய கோயிலல்ல, மாணிக்கவாசகரையே கடவுளாக வழிபடுகின்ற கோயில் என்று கூறி யுள்ளதும், அவர் காலத்தில் வரகுண பாண்டியனால் கட்டப்பட்ட கோயில் மாணிக்கவாசகரால் பாடப்பட்ட ஆதிகைலாசநாதர் கோயில் அவ்வூரின் இன்னொரு பகுதியில் இருக்கின்றது என்பதையும் அறிவியல் கண்ணோட்டத்தில் தொல்லியல், கட்டடக்கலை, சிற்பக்கலை வரலாற்று சான்றுகள் உதவியோடு விளக்கும் இந்நூலை அவர்கள் எந்தவிதத்தில் மறுக்கிறார்கள், சைவராக உங்களுக்கு ஏற்புடைய இது அவர்களுக்கு தகாததாக மாறுவது எப்படி?

நல்ல கேள்வி, இதை வகை பிரித்துச் சொல்ல வேண்டும்.  முதலாவதாக, ஆவுடையார் கோயிலை மாணிக்கவாசகர் கட்டினார் என்று புராணங்கள் குறிப்பிடவில்லை. மாணிக்கவாசகர், கோயிலை கட்டினார் என்று கூறுகின்றதே தவிர ஆவுடையார் கோயிலைக் கட்டினார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. புராணம் என்பதே இலக்கியம். இவர்கள் பார்க்கின்ற ஆவுடையார் கோயிலை மாணிக்கவாசகர் கட்டினார் என்று புராணம் கூறவில்லை. அந்த ஊர் பவித்ர மாணிக்க சதுர்வேதி மங்கலம் என்னும் ஊர். கோயில் ஆவுடையார் கோயில். இது எல்லாம் வரலாற்றில் தெளிவாக உள்ளது. இந்தக் கோயில் மூலமாக வரலாறு முன்னெடுக்கப்படுகிறது. புராணப் படி மாணிக்கவாசகர், மன்னன் கொடுத்த பணத்தில் கோயில் கட்டினார். அதற்காக மன்னனால் தண்டிக்கப் பட்டார் என்பதுதான் முக்கியமே தவிர மாணிக்க வாசகர் கோயில் புராணத்திற்கு முக்கியமல்ல. 

புராண வாதிகளுக்கு முக்கியமானது கோயில் வழிபாட்டை விடவும் ஒரு மனிதனுடைய வரலாற்றை வெகுஜன ஊடகத்தின் முன் எப்படி நகர்த்துகிறார்கள் என்பதே முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைக்கு தமிழகத்தில் எல்லாக் கோயில்களுக்கும் புராணங்கள் உண்டு. இப்புராணங்களில் ஒரே மாதிரியான வரலாறு வரும். இந்தக் கோயிலை அகத்தியரும், இந்தக் கோயிலை திருமாலும், இந்தக் கோயிலை பிரம்மாவும் இப்படி பலரும் வழிபட்டார்கள் என்று அவை அமையும். அது அந்தந்தத் தலங்களை மகிமைப்படுத்துவது. அந்தத் தல வரலாற்றோடு அந்த ஊர் சார்ந்த பெரிய மனிதர் களை, மன்னரை மகிமைப்படுத்தும் வரலாற்றையும் இணைப்பார்கள். இதற்கு உள்ளார சென்று வரலாற்றுச் செய்தி எதுவாக இருக்கும் என்று கண்டுபிடிப்பவர்கள் தான் சமூக அறிவியல் விஞ்ஞானிகள். அப்படிப் பட்ட சமூக விஞ்ஞானியாகத்தான் பத்மாவதியை நாம் நினைக்கின்றோம். அந்த அடிப்படையில்தான் அவர்களும் கிடைக்கும் சான்றுகளின்படி உண்மை களை நிறுவ முயற்சிக்கின்றார்கள். இதனில், மாணிக்கவாசகர் கோயில் கலையம்சம் பொருந்திய ஆர்வத்தைத் தூண்டும் கோயில்.

கல்லால் அமைந்த பரண், கொடுங்கை தாழ்வாரம், குதிரை வீரர்கள், வாள்கள் முதலியவற்றை எந்தெந்த நாட்டினுடைய குதிரை வீரர்கள் என்று கோயில் வழிகாட்டிகள் விளக்குவர். பஞ்சாட்சர மண்டபத்தைக் கடந்து கோபுர  வேலன் (முருகர்) இருப்பார். இடது பக்கம் மாணிக்கவாசகர், உற்சவர் மாணிக்கவாசகர், குருந்த மரம், யோகாம்பிகை, சண்டேசுவரர் எல்லாம் வலம் வந்து கடந்து உள்ளே வந்தால் ஆவுடையார் பீடம், ஆவுடையார் இருக்கும். இதில் சதுரமான பகுதி ஆவுடை, பாணம்தான் லிங்கம். அந்தக் கோயில் கல்பலகையால் ஆவுடையார் கோயில் என்பது பொது. ஆன்மாவை உடைமையாகக் கொண்டவர் என்பது மற்றொன்று. ஆவுடையார் என்பதை லிங்கத்தின் தத்துவமாகக் கூறுவர்.  லிங்கத்தை பிரம்ம பாகம், ருத்திரபாகம், மால்பாகம் என பிரிப்பது ஒருவகை. ஆவுடையார் ஆன்மா, அதிலிருந்து வெளிவரும் லிங்கம் கடவுளாகவும் கருதுவது ஒன்று. ஆவுடையார் என்பது பாலினக் குறியீடு என்றும் உண்டு.

லிங்கத்திற்கு எத்தனை விளக்கமும் தரலாம். ஆனால், அடிப்படையில் அங்கு லிங்கம் இல்லை. ஆவுடையார் என்னும் வேலைப்பாடுடைய இடையுறுப்பும் அடிப்பகுதியும் இல்லை. அது ஒரு கல்பலகை. அது படையலுக்காக இருக்கிறது. (தளம் கிடைப்பகுதி, மேல் பகுதியும் இல்லை) படையலுக்காக இருக்கும் அது கடவுளின் அருவ வடிவம், என்று குறிப்பிடு கின்றார்கள். கடவுளுடைய அருவ வடிவம், மாணிக்க வாசகர் அதையேதான் வழிபட்டார் என்றும் இப்போது வழிபடுகிறவர்கள் கொண்டு வந்து நிறுத்து கிறார்கள். இதை மாணிக்கவாசகர் பாடலில் எங்கும் குறிப்பிடவில்லை. கடவுள், குதிரைசேவகனாக, சாத்தனாக, குருவாக வந்து ஆட்கொண்டான் என்னை எனப் பாடும் மாணிக்கவாசகர், அக்கடவுளை நான் இப்படி அடையாளப்படுத்திக் கட்டினேன் என்று குறிப்பிடவில்லை. திருப்பணி செய்திருப்பதாக வருகிறது. அமைச்சராக இருக்கிறவர் செய்திருப்பார் தான் இத்தனை திட்டமிட்டு குருவாக ஆட்கொண்ட வருக்கு கோயில் எழுப்பினார் என்றால் எத்தனையோ கோயிலை பாடியவர், கடவுளை இப்படி இதனையும் தனது பாடலில் பாடியிருப்பார். அவரது வாயால் பாடாமலிருந்திருக்க மாட்டார்.

என்னை ஆட் கொண்டவன் என்றுதான் பாடுகிறாரே தவிர, தான் எழுப்பிய கோயிலுடைய கடவுள் என்றும், ஆட் கொண்டவனை இவ்வாறு அடையாளப்படுத்தி யிருக்கிறேன் என்றும் கூறவில்லை. ஆட்கொண்டவன் என்று சொல்வது வேறு, அனுபவிக்கும் கடவுளைச் சொல்வது வேறு. இவர் தான் அனுபவிக்கும் கடவுளை இவ்வாறு கட்டியிருக்கிறேன், என்று சொல்வது வேறு. அப்படி எந்த அருளாளர்களும் பயணிக்கவில்லை. மன்னன் கோயில் கட்டினான் எனில் அதனைப் பற்றி கல்லில் பொறித்து வைப்பான். மாணிக்கவாசகர் இலக்கியம் பாடும் அளவிற்கு அறிவாளியான அவர் கோயிலைக் கட்டியிருந்தால் மொத்த திருவாசகத்தையும் கல்லில் வடித்திருப்பார். மாணிக்கவாசகர் கோயில் கட்டும் அளவிற்கு அறிவு படைத்தவரெனில் குறைந்த பட்சம் ஏதாவது

ஒரு விசயத்தையாவது கல்லில் வடித்திருப்பார். அதுமாதிரி எந்த முயற்சியும் இல்லை. அந்த மாதிரி பாடுபவர்களே எழுதாவிட்டாலும் சிற்பி 'சாமி உங்களைப்பற்றி எழுதுகிறேன் 'என்று கூறி எழுதி யிருப்பான் அல்லது அவருக்குத் தெரியாமலேயே அவன் எழுதியிருப்பான். இது சிற்ப மரபு மட்டு மல்ல, கோயில் கட்டுகிறவர்கள் அதன் வரலாற்றுக்குள் வந்து விடுகிறார்கள் என்பதே உண்மை. அந்த மன்னன் கட்டியிருந்தாலும் அதுபோன்ற விசயம் இந்த கோயிலில் எங்கும் இல்லை. அந்தக் கோயில் கட்டிய காசுக்காக மன்னன் தண்டித்த வரலாறு இருந்தால் அவனாவது கல்வெட்டு பொறித்திருப்பான். அவன் திருச்செந்தூரில் கல்வெட்டு போட்டிருக்கின்றான், தளவாய்புரத்தில் செப்பேடு போட்டிருக்கின்றான். இப்படி ஒரு பெரிய அதிசயம் நடந்திருந்தால் அவன் என்ன செய்திருப்பான். வரகுண பாண்டியன் வேப்பம் பழத்தையும் சிவலிங்கம் என நினைக்கும் பக்தன்.

வேப்பம் பழம் வெளிலிலே காயக் கூடாது என்று பந்தல் போடுகிறான் திருவிடைமருதூரில். அது மட்டுமல்ல, தவளை ‘பக பக’ என்று கத்தும். அதனை 'சிவ சிவ' என்று கத்துவதாகக் கருதி அவற்றுக்கு குளத்தில் இரத்தினத்தை வாறி இறைக் கின்றான் என்று பட்டினத்தார் எழுதுகிறார். அவன் திருவிடைமருதூரில் தளவாய்புரம் செப்பேடு குறிப்பிடும் போருக்குப் பிறகு கோயில் கட்டுகிறான். திருச்செந்தூருக்கும் தானம் செய்திருக்கின்றான். இப்படிப்பட்ட மன்னன் மாணிக்கவாசகர் வரலாற்றை நடந்திருந்தால் எழுதியிருப்பான். அவனுடைய தம்பி என் அண்ணன் கடவுளுக்கு மிகப் பெரிய தொண்டு செய்தவன் என்பதை கல்வெட்டில் பதிந்திருக்கின்றான். அவனும் இந்த மாணிக்கவாசகர் வரலாற்றுத் தொடர்பை குறிப்பிடவில்லை.

மகேந்திரவர்மன், திருநாவுக்கரசர் சைவத்திற்கு வந்ததை எழுத வில்லை. தான் சைவத்திற்கு மாறியதை எழுதுகிறான். மன்னர்கள் விசயமாக நடந்தது. அதே போல மாணிக்கவாசகர் வரலாற்றில் நடக்கிறதா? இங்கு மாணிக்கவாசகரே கோயில் கட்டுகிறார். அப்பர் போல பாடிவிட்டுப் போனவரல்ல. கோயில் கட்டுகிறார் என்றால் அந்தக் கல்வெட்டுக் கலை தெரிந்தவர் அவர் வரலாறு எழுதாவிட்டாலும் திருவாசகம் எழுதாவிட்டாலும் அந்தக் கோயிலுக்கு பாடிவிட்டு போயிருப்பார். அப்படி எந்த விசயமும் அந்தக் கோயிலுக்கு நடக்கவில்லை. மாணிக்கவாசகரின் வரலாற்றைப் பொறுத்தவரை இலக்கிய வரலாறு ஒரு வேறுபட்ட போக்குடையது. திருக்கோயிலுக்கு சென்று வழிபட்டு, வாழ்க்கைப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதை திருஞானசம்பந்தர் திருநாவுக் கரசர் பாடியிருக்கிறார்கள். ஆனால், மாணிக்கவாசகர் திருக்கோயில் வழிபாட்டை சொல்லவில்லை. உன் பிரச்சினையும் நீ சுத்தமாயிருப்பதும், யாருடன் சேர்ந்திருக்கிறாய் என்பதும் மனித அனுபவத்துக்கும் கடவுள் தன்மைக்குமான விசயமாக மடைமாற்றம் நடக்கின்றது. பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும், குடும்பம், பெண்கள் சார்ந்த விசயமுமாக புதியதளம் உருவாகின்றது.

இது திருக்கோயில் வரலாறுடன் தொடர்புபடவில்லை. இங்கு இடைக் கால வரலாற்றில் புரிந்து கொள்ள முடியாத இருட்டடிப்பு நடைபெற்றிருக்கிறது. அந்த இருட்டடிப்பு வேலைக்கான மிகப் பெரிய காரண மாக மாணிக்கவாசகர் இருந்திருக்கிறார். மாணிக்க வாசகர் கடவுளும் தானுமான வரலாற்றைப் பதிவு செய்யாத நபரல்ல. குருவாய் வந்து ஆட்கொண்டான் என்பவர் ஆட்கொண்ட பிறகு கோயில் கட்டினேன் என்று எழுதவில்லை. கடவுளும் ஏம்பா அந்தக் கோயில் கட்டியதை எழுது என்று சொல்லவில்லை. ஆக, அகச் சான்றுகளில் கோயில் கட்டியது காணப் படவில்லை.

மாணிக்கவாசகர் கோயில் கட்டியது தான் பெருமையா? என்று பார்க்க வேண்டியதில்லை. அவர் கோயில் வழிபாட்டின் முரணிலிருந்து விடுபட்டிருக்கின்றார் அல்லது சமூகம் அவரை விடுபடுத்தி எழுதியிருக்கிறது. மாணிக்கவாசகர் ஒரு 'க்ளு' தருகிறார். 'சமுதாயத்தில் இன்று ஒரு புயல் காற்று அடித்தது' என்கிறார். Ôமாயா வாதம்Õ என்னும் சண்டமாருதம் என்கிறார். சுழல் காற்று வீசியது என்கிறார். லோகாயதத்தைக் கூட பாம்பு என்று தன்மையாகக் கூறுகிறார். ஆனால், இதனை புயல் காற்று என்கிறார். சமகாலத்து சமூகப்பிரச்சினையான சங்கரரை எதிர்கொண்ட நபராக மாணிக்கவாசகர் இருக்கிறார். தமிழ்ச் சமூகத்துக்குள்ளே பிராமணிய  எதிர்ப்பின் தலைமை மாணிக்கவாசகர் ஆவார். சங்க காலத்தில் பிராமணிய எதிர்ப்பாளராக நக்கீரர் இருக்கிறார். மாணிக்கவாசகருக்குப் பிறகு அருணகிரி நாதர். அவர் சிவன் கோயிலுக்கு சென்று முருகனை பாடுபவராவார்.

அவரை தொழுநோயாளியாக வரலாற்றில் இருட்டிப்பு செய்துள்ளனர். நான்காவதாக இராமலிங்க வள்ளலார் வருகிறார். சைவ பக்தி இலக்கிய வரலாற்றில் பிராமணிய எதிர்ப்பின் தலைமை, மாணிக்கவாசகர் ஆவார். ஒரு சமுதாயத்தில் பிராமணியத்தினை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் மழுங்கடிக்கப்படுகிறார்கள். எனவே, மாணிக்கவாசகர் வரலாற்றைத் திரித்து எழுதுவது அவர்களது வேலை. அதே சமயத்தில் மாணிக்கவாசகர் பற்றி அந்தணர் களை வைத்து எழுதவைக்கிறார்கள். அவர்கள் வட மொழி நூல்களில் இருந்து மன்னனிடம் சம்பளமும் பெற்றுக் கொண்டு தமக்கு எதிராக வரலாறு போய் விடாமலும் எழுதுகிறார்கள். ஆகவே பாண்டியர் களுக்கு திருப்தி ஏற்படும்படி மாணிக்கவாசகர் பாண்டிய மன்னர்களால் ஆதரிக்கப் பெற்றவர் என்றும், தண்டிக்கப்பட்டவராகவும் எழுதும் போது பாண்டியருக்கு மகிமை செய்தும், பிராமணியத்துக்கு எதிராக சங்கரருக்கு எதிராக திருக்கோயில் வழிபாட்டிற்கு எதிரானவர் என்பதை மறைத்தும் 'தண்டிக்கப்பட்டவர்' என எழுதுகிறார்கள். எனவே, மாணிக்கவாசகர் வரலாறு இதன் மூலம் நிறை வடைகிறது. பிராமணர்களுக்கு மூடி மறைக்கப்படு கின்றது.

இங்கு  ஆ. பத்மாவதி அவர்கள் பாண்டிக்குலோதயம் என்ற நூலைப் படித்தவுடன் (தினமலர் ஏற்கெனவே அது மாணிக்கவாசகர் கட்டிய கோயில் அல்ல என்று கட்டுரை வெளியிட்ட நிலையில்) மாணிக்கவாசகர் வரலாற்றில் தண்டிக்கப்படவில்லை என்பதை வெளிக் கொண்டுவரச் செய்த முயற்சிதான் இந்நூல். இங்குத் தமிழ் புராணங்களில் மாணிக்கவாசகர் மன்னனால் தண்டிக்கப்பட்டதாகவே கூறப்படுகின்ற நிலையில் வடநூல் மாறான வரலாற்றுச் செய்திகளை தருகின்றது. இதை மேலும் தொல்லியல் கல்வெட்டியல் சான்றுகளோடு அம்மையாரின் நூல் முன்னெடுக்கிறது. இங்கு மாணிக்கவாசகர் மன்னனுக்கு உதவினாரா? இல்லையா? என்பதை மன்னனின் குண இயல்பு சார்ந்து பொருத்திப் பார்க்க வேண்டும். திருவிடை மருதூரில் போர் செய்தவன், அம்பாசமுத்திரம் எரிச்சாவுடையார் கோயிலுக்கும் சோழ நாட்டின் திருநெய்த்தானம், திருக்கோடிக்காவல், திருக்காட்டுப் பள்ளி, கும்பகோணம், ஆடுதுறை, திருவிசைநல்லூர் கோயில்களில் இம்மன்னன் கொடையளித்தது பற்றிய கல்வெட்டுகள் உள்ளன. திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கும் கொடையளித்துள்ளான். இம்மன்னனுடைய தம்பி பராந்தக வீரநாராயணன் வெளியிட்ட தளவாய்புரம் செப்பேட்டில் “எங்கோ வரகுணன் பிள்ளை பிறைச் சடைக்கணிந்த பினாக பாணி எம்பெருமானை உள்ளத்தில் இனிதிருத்தி உலகம் காக்கின்ற நாளில்” என்று குறிக்கின்றான்.

ஆக, வரகுணன் மிகச் சிறந்த சிவபக்தன் என்பது புலனாகின்றது. திருக்கோவையாரில் மாணிக்க வாசகரே ‘வரகுணன் என்னும் தென்னன் ஏத்தும் சிற்றம்பலம்', ‘சிற்றம்பலம் புகழும் மயல் ஓங்கு இருங்களி யானை வரகுணன்' என்றெல்லாம் பாடி யிருக்கின்றார். இத்தகைய சிவபக்தனாகிய வரகுணன் சிவன் கோயிலுக்காக மாணிக்கவாசகர் செலவளித்து விட்டதற்கு தண்டித்திருப்பானா? திருவிளையாடற் புராணத்தில் பாண்டியன் மாணிக்கவாசகரை தண்டித்து இறைவன் மன்னனை பிரம்படித்தான் என்ற மன்னன் வரலாறு உண்மையென்றால், கல்வெட்டில் சான்றில்லாமல் போகுமா? ஆனால், வரகுணனின் மாற்றாந்தாய் அல்லது தந்தையின்

மற்ற மனைவியரின் பிள்ளைகளோடு சண்டை நடந்ததை இலங்கை, மகா வம்சம் கூறுவதும், பாண்டிக்குலோதயம் நூலோடும் கல்வெட்டு செய்தி களோடும் பொருந்துகிறது. இதை பாண்டிக் குலோதயம் சொல்லும் போது அதன் மீது நம்பகத் தன்மை அதிகரிக்கின்றது. அது மாணிக்கவாசகருக்கு திருமணம் ஆனது என்பது இங்கு முக்கியமில்லை. ஆனால், இங்குப் பாண்டியர் எழுத வைத்தார்களா? மண்டலக்கவி அவராகவே எழுதினாரா என்பது தெரியவில்லை. வடநாட்டு ஆட்சியாளரோடு ஒப்பிடும்படி ஒருவர் தென்னாட்டில் இருக்கிறாரே என்று வரகுண பாண்டியனைப் பற்றி எழுதியிருக்கலாம்.

ஆனால், தமிழ் புராணம் எழுதுபவர்களுக்கு மாணிக்கவாசகர் என்னும் ஆளுமையை திருக் கோயிலுக்கு எதிராக, பிராமணர்களுக்கு எதிராக விளங்கிய ஆளுமையை குலைத்து திரித்து எழுதுகிற நோக்கம் இருக்கிறது.  திருக்கோயில் என்பது 'மக்கள் உடைமை.' அதை 'மனு உடைமை' யாக மாற்றியவர் சங்கரர். இங்கு மாணிக்கவாசகர்,'கோயிலுக்கு சென்று மெனக்கெட வேண்டாம்' என 'வீட்டிற்கே இறைவன் வருவான்' என வழிபாட்டு நெறியைத் தந்தவர். இவரை மன்னன் தண்டித்தான் என திரித்து எழுதியவர்கள் சோழிய பிராமணர்கள். இந்த வரலாறு பேசப்படுகிறது.  அதை விளக்கும் வகையில் எழுதும் போது சிவன் கோயிலல்ல, மாணிக்கவாசகர் கோயில் என்று சொன்னதற்காக எதிர்ப்பு வருகிறது. அதுவும் மக்களுக்கு சிவபெரு மானையும், மாணிக்கவாசகரையும் இழிவுபடுத்துகிற நூல் என்று சொல்லிதான் தூண்டுகிறார்கள். மக்களுக்கு மாணிக்கவாசகர் என்பதில் பிரச்சினை ஒன்றும் இல்லை.

Nallur Saravanan 6003) உலகம் - உயிர் - கடவுள் ஆகிய இவை தனித் தனியானவையாகக் கருதி அவற்றிற்கு இடையிலான தொடர்புகளை இயக்கத்தினை பேசுவது 'புலன்கடந்த பொருளியல்' எனப்படுகிறது. உலக இயக்கம், தோற்றம், முடிவு குறித்து ஆராயும்போது அவற்றுக் குள்ளேயே விடை காண்பது 'அறிவாராய்ச்சி' எனப் படுகிறது. பொருள்கள் எப்படி இயங்குகின்றன என்று அறிந்து கொள்ளும்போதே ஏன் எதற்கு என்பதற்குரிய விடையும் தெளிவுபடுத்தப்பட்டுவிடுகின்றன. இங்குக் கடவுள் கருத்தியல் மதிப்பிழந்து விடுகின்றது என்பதையும் சைவவாதியாக நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்.

அறிவாராய்ச்சி கொள்கையின்படி உலகம் எப்படி இயங்குகின்றன என்று ஆராயும் போதே ஏன் எதற்கு என்பதற்கான விடை கிடைத்துவிடுகின்றது எனில், ஏன், எதற்கு எனும் போது நீங்கள் கடவுளுக்கு மதிப்பளித்தால் கடவுள் இருக்கிறார், ஏன் எதற்கு என்பதில் கடவுளுக்கு நீங்கள் மதிப்பளிக்கவில்லை என்றால் கடவுள் இல்லைதான்.

4) நரியை பரியாக்கிய கதை எவ்வாறு பிராமணியத்திற்கு பாதுகாப்பு வழங்குகிறது. பாண்டிக்குலோதயம் அதனை அம்பலப்படுத்துவது எவ்வாறு என்பதை விளக்குங்கள்.

பாண்டிக்குலோதயத்திலும் மன்னன் தண்டித்தான் என்றுதான் வருகின்றது. திருவிளையாடல் புராணம் 'நரியை பரியாக்கிய கதை கோயில் கட்டினான்' என்று சொல்கிறது. வடநூல் சிவதர்மத்திற்கு செலவழித்து விட்டதால் மன்னன் தண்டித்தான் என்று கூறு வதையும் மறுத்து தண்டித்திருக்க வாய்ப்பில்லை என்று ஆய்வு செய்வதே பத்மாவதியின் சிறப்பு. மாணிக்கவாசகர் சிவதர்மத்திற்கு செலவழித்து விட்டதால் மன்னன் தண்டித்தான். சிவபெருமான் காட்டில் உள்ள நரிகளை பரிகளாக்கி அனுப்பினார். அரசன் மகிழ்ந்து வாதபுரநாயகருக்கு பரிசுகள் அளித்தான். பின்னர் அக்குதிரைகள் நரிகளாகி ஓடுகின்றன. அங்குள்ள குதிரைகளையும் கடித்து விட்டு ஓடுகின்றன என்றே பாண்டிக்குலோதயம் கூறுகிறது. அது கோயில் கட்டியதாகக் கூறவில்லையே தவிர, சிவதர்மத்துக்கு செலவழித்தாகக் கூறுகின்றது. நரியை பரியாக்கிய கதை அகச் சான்றுகளிலும் வருகின்றது. இங்குதான் “நரிகளெல்லாம் பெருங் குதிரையாக்கியவாறு அன்றேயுன் பேரருளே” “பரிமேற் கொண்ட சேங்கனார்” என்று திருப்பாண்டி பதிகத்திலும், திருவேசறுபதிகத்திலும் பாடியுள்ளார்.

“நரியை குதிரைப் பரியாக்கி

ஞாலமெல்லாம் நிகழ்வித்தும்

பெரிய தென்னன் மதுரையெல்லாம்

நரியை குதிரை ஆக்கிய நன்மையும்”

என்றும் பாடுகிறான்.

குதிரைச் சேவகன், தேவதேவன் மேயச் சேவகன், தென் பெருந்துறை நாயகன் என்றெல்லாம் இறைவனை சேவகன் நாயகன், குதிரைப் படைத் தலைவன் எனும் பொருள் அமைத்துப் பாடியுள்ளார். இவ்வாறு அகச் சான்றுகளை எடுத்துக்காட்டி தத்துவ அடையாள மாக்கி விளக்குகிறார்கள். வடமொழியில் வந்த கதோபநிசத்து முதலியவற்றில் இருந்தும், திருமூலரி லிருந்து எடுத்து தத்துவமாக்குகிறார்கள். ஐந்து இந்திரியங்களை ஒருமுகப்படுத்தி நேர்வழிசெல்லும் குதிரையாக மாற்றுவது என்றும் கதோபநிசத்துவை வைத்து நரி-பரி கதையை அம்மையார் விளக்குகிறார். நரியை குதிரையாக்குவது என்பது யோக மரபில் இடகலை-வடகலை என்று கூறுவர். இடகலை நரி - வடகலை பரி - இன்னொன்று பன்றிச் சத்தம் கூட கூறுவர். இங்கு மாணிக்கவாசகர் பொதுவில் தான் இறைவன் தன்னை ஆட்கொண்டான் என்று கூறுகிறார். குதிரை அடையாளம் வரையில்தான் மாணிக்கவாசகர் வருகிறார். கடவுள் குதிரைச் சேவகனாக வருகிறார். குதிரை வரவில்லை. இந்த இடங்கலை, வடகலை, யோக மரபு எல்லாம் சிறப்பு வழிதான். அடுத்தவருக்கு அடுத்த உயிர்களுக்கு கருணையில்தான் காணமுடியும்.

இங்குதான் வள்ளலார் எல்லாம் பிற்காலத்தில் பொது மரபில் தொடர்கிறார்கள். ஆக, மாணிக்கவாசகர் மரபு முக்கியமான மரபு. உடம்பை இன்பத்துக்கான குதிரையாக்குவது மட்டும் பேசாமல் அதனை அடையாளமாக மட்டும் கூறிவிட்டு அதற்கு மேல் பலவும் பேசுகிறார்கள். நரியை குதிரையாக்கியது தான் வருகிறதே தவிர கடவுள் தண்டித்தான் என்றோ மன்னன் விசயமோ வரவில்லை. இது தத்துவ மரபு யோக மரபு பற்றியது. ஒன்று இன்னொன்றாக மாறுவது பற்றி மாணிக்கவாசகர் பாடியுள்ளாரே தவிர இதில் தண்டனைக்கு இடமில்லை. இங்குக் குறியீடாக வரும் தத்துவ மரபை கதையாக்கி மாணிக்கவாசகருக்கு தண்டனை வழங்குவது என்பது பிராமணியத்திற்கு பாதுகாப்பு வழங்குகிறது. இங்கு பாண்டிக்குலோதயமும் தண்டித்தாகவே கூறுகிறது. பிராமணியத்தை அம்பலப் படுத்தவில்லை. நரியை பரியாக்கிய கதையும் அவ்வாறே அமைந்துள்ளது. அவற்றை அம்பலப் படுத்துவது ஆ. பத்மாவதி அம்மையார்தான்.

5) அரிமர்த்தன பாண்டியன் யார்? வரகுண பாண்டியன் யார்?

வரகுணபாண்டியன் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் மகன், கி.பி. 811-860 வரை ஆட்சி செய்தவன். அவனது காலத்துக்குப் பிறகு அவனுடைய காமக் கிழத்தியர் மக்கள் ஆட்சிக்கு முடிவுகட்டி ஆட்சிக்கு வந்தவன் தான் இரண்டாம் வரகுண பாண்டியன், திரும்புறம்பியம் போர் செய்தவன். பாண்டிய மன்னனை அரிமர்த்தன பாண்டியன் என பரஞ்சோதி முனிவர் கூறுகின்றார். பகைவர்களை அழித்தவன் என்ற சிறப்புடன் ‘அரிமர்த்தனன்Õ எனக் கூறப்பட்டது என்று வெள்ளை வாரணனார் கூறுகிறார். இப்படிப்பட்ட மன்னன் வரலாற்றில் இல்லை புராணங்கள் கூறுவது தவிர.

6) குறும்பர்-குறும்ப வேளாளர்-காராளர் ஆனபூர்வ குடியானது பாண்டியனால் பிராமணர்களுக்காக விரட்டப்பட்டது பற்றி ஆவுடையார் வழக்குரைத்த அம்மானை என்ற நூலை ஆராய வேண்டும் என்றும், அந்தணர்களுக்கு எதிராக குறும்பர்களுக்கு உதவியவர் மாணிக்கவாசகர் என்னும் உண்மை இதனால் புலப்படும் என்றும் கூறியுள்ளீர்களே அதனை விளக்கவும்.

இராதாகிருஷ்ணன் ஐயர், தமது கட்டுரையில் இவ் வுண்மையை ஆராய்கிறார். திருப்பெருந்துறை இருக்கும் இடம் கான நாடு. அது குறும்பர் நாடாக இருந்தது. வடக்கே இருந்து வரவழைக்கப்பட்ட அந்தணர்களுக்கு குறும்பர்களை அப்புறப்படுத்தி நிலமளித்தான். குறும்பர்கள் மீண்டும் நிலத்தை அடைய வழக்குரைத்தனர்.

வழக்கில் குறும்பர்கள் 'தமது' என்று சொல்லி நிலத்தை பன்னிரண்டு ஆள் பரிசம் வெட்டினாலும் நீர் ஊராது என்றும் அந்தணர்கள் பக்கம் வழக்குரைத்து வெட்டியவுடன் தடையறவே நீருற்று தங்காமல் வந்துவிடும் என்றும் சாதித்துக் கொண்டதாக ஆவுடையார் வழக்குரைத்த அம்மானை கூறுகிறது.

'கல்வெட்டி நாட்டினார் காராளர் எல்லையிலே வேதியர்கள் எல்லை விதவிதமாய்க் கல்நாட்டி அந்தணர்க்குக் காணி உறுதியிட்டார் வந்த மன்னர்; குறும்பர் அனைவரும் கூடி விசாரமிட்டு அந்தணர்க்கு காணி உறுதியிட்டோம் என்று சொல்லி ஊர்குடியும் விட்டு ஒதுங்கினார் தென்திசையில்' என்று அந்நூல் தெளிவாகக் கூறுகிறது.

மேலும் சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையில் காடுகாண் காதையில் ஆதியில் சோழ நாட்டைச் சேர்ந்திருந்து பிறகு பாண்டியநாட்டின் பாகமாக முத்தூர் கூற்றம் ஆயிற்று என்று கூறப் பெறுவதும், புறநானூறு 21ஆம் பாட்டில் முத்தூற்ற கூற்றம் என்பதும் கானக்கூற்றம் எனப்படுவதும் இதுவே ஆகும்.

7) வரகுணபாண்டியனுடைய மாற்றாந்தாய் பிள்ளைகள் பிராமணர்களுடைய உதவியோடு சூழ்ச்சி செய்து ஆட்சியை மணகைப்பற்றவும், பிராமண எதிர்ப்பு கொண்டவரான மாணிக்கவாசகரை சிவபக்தனான வரகுணபாண்டியன் சந்தித்து உதவிகேட்கவும் அவர் அரசியல் தந்திரங்களைக் கையாண்டு வரகுண பாண்டியனை ஆட்சியில் அமர்த்தினார் எனக் கொள்ளலாமா? இங்குப் பிராமண எதிர்ப்பு கொண்ட இவரை சாணக்கியரோடு ஒப்பிட முடியாதல்லவா?

பாண்டிக்குலோதயம் நூல்தான் மாணிக்கவாசகரை சாணக்கியனோடு ஒப்பிட்டுக் கூறுகின்றது. நாம் சாணக்கியனோடு ஒப்பிடுவதை ஏற்க முடியாது. வரகுணபாண்டியனின் மாற்றாந்தாய் பிள்ளைகளுக்கு உதவியவர்கள் பிராமணர்கள் அல்ல. மாயா பாண்டியன், உக்கிர பாண்டியன், வீர பாண்டியன்தான் மாற்றாந்தாய் பிள்ளைகள். இவர்களுக்கு இலங்கை மன்னன் முதலாம் சேனன், முதலியவர்களின் உதவி யோடு தாக்குதல் தொடுத்திருக்கின்றார்கள். அவர் களுக்கு பிராமணர்கள் துணையிருந்தார்கள் என்று சான்றுகள் இல்லை.

மாணிக்கவாசகர் குருந்த மரத்தடியில் வாதவூரடிகள் ஆட்கொண்ட பிறகு திருவாசகம் பாடுகின்றார். அவர் போர் வீரராகவும், சிவபக்தராகவும் விளங்கியவர். மன்னனாகிய சிவபக்தனுக்கு சிவபக்தர் உதவுவது என்ற அடிப்படையில்தான் இது நிகழ்ந்திருக்கலாம்.

8) புராணங்களில் ஒன்றாகவும், வரலாற்றியல் ஆய்வு முறையில் வெளிப்படும் உண்மை ஒன்றாகவும் ஆவுடையார் கோயில் அமைந்துவிட்டதைப் போல, அறுபத்து மூன்று நாயன்மார்களில் வேறு  நாயன் மார்களின் வரலாறுகளுடன் தொடர்புள்ள கோயில்கள் உள்ளனவா?

பூசலார் நாயனார் வழிபட்ட திருநின்றவூர் ஹிருதயாலேசுவரர் கோயில் மயிலை வாயிலார் நாயனார் கோயில் முதலியவை இத்தகைய ஆய்வுக்கு உரியவைதான். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலை தான் ராஜசிம்மன் கட்டுகின்றான். அப்போது மனதிலே கோயில் கட்டியவர் பூசலார் நாயனார். அதனால் ஹிருதயாலேசுவரர் கோயில் எழுந்தது. இங்கு நோக்கத்தக்க ஒன்று உண்டு. அது கைலாச நாதர், கைலாச நாதர் என்றே பல கோயில்களுக்கு பெயர் வைக்கிறார்கள். அது நமது எல்லை இமய மலை வரைக்கும் வகுத்துக் காட்டுவதும் ஆகலாம். இன்னொன்று வடவரின், வடமொழியின் தாக்கம் என்றும் கருதலாம்.

10) இந்த மாணவர்களின் போராட்டத்திற்குப் பிறகு காவி ஆர். எஸ். எஸ். கும்பல் தனது வாலை சுருட்டிக் கொண்டதாக கருதிய நிலையில் சைவ வரலாற்றில் தாங்கள் மேற்கொள்ளும் முன்னெடுப்புகளை தடுக்க ஆ.பத்மாவதி அம்மையாரின், நூலை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றே கருதினோம். ஆனால், அவர்கள் மீண்டும் ஆ. பத்மாவதியின் முந்தைய நூல்களை எடுத்து பிரச்சினையை தொடுக்கிறார்கள். புலவர் செ. ராசு நூல்களை எல்லாம் எடுத்து தாக்குதல் தொடுக்கிறார்கள். இதை எப்படி எடுத்துக் கொள்வது?

பரப்பப்பட்டிருக்கிற கதைப் போக்குத் தன்மையில் அறிவுபூர்வமான விசயம் தலையெடுக்கக் கூடாது. அறிவியல்பூர்வமான அணுகுமுறையை முளை யிலேயே கிள்ளி எறிவதுதான் அவர்கள் நோக்கம். அவர்கள் நம்ப வைத்திருக்கின்ற விசயத்துக்குள் சிந்திக்க வைக்கும் அறிவியல் அணுகுமுறையை தடுப்பதன் மூலம் அவர்களைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள்.

11) கவர்னரிடமிருந்து விளக்கம் கேட்டு பல்கலைக் கழகத்திற்கு கடிதம் வந்ததைப் போல சி.எம். செல்லிலிருந்து வந்ததாகவும் அறிந்தேன். தமிழக அரசு இவ்விசயத்தில் என்ன செய்தது?

தமிழக அரசு அதாவது தலைமைச் செயலகத்தி லிருந்து இந்து அறநிலைத் துறைக்கு அனுப்பி யுள்ளார்கள். அதற்கு முன்பாக நானே ஆவுடையார் கோயிலை மாணிக்கவாசகர் கட்டிய கோயில் அல்ல என்று முறையாக ஆய்வு செய்து அறிவிக்கும் படி நீதிமன்றம் மூலம் மனு அனுப்பியுள்ளேன். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் சன் தொலைக்காட்சியில் இந்நூலை தடைசெய்யும்படி அறிவிக்கக் கோரினார்கள். அவர்கள் செய்யவில்லை. மக்கள் அதாவது ஆய்வாளர்கள் “கோயிலை ஆய்வு செய்து எழுதி யிருப்பார்கள் அதை மதிப்பதில்லை. அரசாங்க ஐயர் சொல்வதே எடுபடுகிறது. தொல்லியல் ஆய்வில் காணும் முடிவுகள் பாடத் திட்டத்தில் மாற்றப்படு வதில்லை. கோயில்களில் ஐயர் சொல்லும் விசயத்தி லிருந்து விலகி மாற்றிக் கொள்ளத் தயாராக

இல்லை. அதனுடைய விளைவுதான் இப்பிரச்சினை வளர்ந்ததற்கு அடிப்படை. இந்தியாவின் அறிவு விழிப்புணர்ச்சியை நிர்வாகம் சார்ந்த ஆங்கிலமும், மதம் சார்ந்த சமஸ்கிருதமும்தான் மழுங்கடித்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ஆங்கிலம் என்பது நிர்வாகம். மக்களுக்கு நிர்வாகம் எனும்போது ஆங்கிலம் மாயை. எனது அகம் என வரும்போது வடமொழி மாயை. அறிவு எனும் போது ஆங்கிலத்தி லிருந்து விடுபடவும், கடவுள் எனும்போது வட மொழியை மறுக்கவும் யாரும் தயாராக இல்லை. ஆர்.எஸ்.எஸ். கிறித்துவர்களை எதிர்க்கிறார்களே? ஆங்கிலத்தை எதிர்ப்பார்களா? சுதந்திரப் போராட்டத்தில் தொடங்கிய இரண்டு விசயம் இந்தியாவை நிர்ணயிக்கின்றது. ஆங்கிலம், மதம் சார்ந்த சமஸ்கிருதம் இரண்டும் அறிவார்ந்த விழிப்புணர்ச்சிக்கு என்றும் உதவாது உதவாது உதவாது. 

Pin It