1917 ஆகஸ்ட் 20 இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள். அன்று தான் இந்தியாவுக்கான வெள்ளைக்கார மந்திரியாக இருந்த Edwin Montague இந்தியாவின் வருங்காலம் பற்றி பிரசித்தி பெற்ற அறிவிப்பை லண்டன் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

justice party leaders"The policy of His majesty government with which the government of India or complete Accord, is that of the increasing association of Indians in every branch of administration the general development of self government institutions with the view of progressive realisation of responsible government in India was an integral part of British empire."

அதாவது, இந்தியாவின் பொறுப்பாட்சி படிப்படியாக உருவாக்கும் நோக்கத்துடன் நிர்வாகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் இந்தியர்களை அதிகமாகப் பங்கெடுத்துக் கொள்ளச் செய்வதும் சுயாட்சி அமைப்புகளை வளர்ச்சி பெறச் செய்வதும் தான் பிரிட்டிஷ் அரசின் கொள்கை என்று அந்த அறிவிப்பு விளக்கியது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய அரசியல் களம் சூடுபிடித்தது. இன்றைய திராவிடக் கட்சிகளின் முன்னோடியான 'நீதிக் கட்சியின்' முதல் மாநாடும் அதே நாளில் (ஆகஸ்ட் 20, 1917) கோவையில் நடைபெற்றது.

சென்னை மாகாண அரசியலில் பார்ப்பனர்களின் ஆதிக்கமும், பார்ப்பனரல்லாதோர்க்கான குறைந்தபட்ச உரிமை மறுப்பும் நீதிக் கட்சியினரைக் கோபம் கொள்ள வைத்தது. 1909 மிண்டோ-மார்லி சட்டப்படி முஸ்லீம்களுக்குத் தனி தொகுதி முறை அளிக்கப்பட்டது போல, பார்ப்பனரல்லாதோருக்கும் தனிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையை நீதிக்கட்சி முன் வைத்தது.

தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இந்த கோரிக்கையைப் பிரித்தானிய அரசிடம் முன்வைத்து நீதிக்கட்சியினர் கடுமையாகப் போராடினர். 1918 ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரபுக்கள் சபை உறுப்பினர்கள் முன்பு நீதிக்கட்சியின் தலைவர் டாக்டர் நாயர் பேசிய பேச்சு வெள்ளையர்களின் கவனத்தை ஈர்த்தது.

சென்னை மாகாணத்தில் பார்ப்பனரல்லாதாருக்கு தனித் தொகுதி முறை வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சட்டசபை பார்ப்பனர் மயமாகி விடும் என்றும் அவர் கூறினார்.

பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண Lord Meston'னை நடுவராக (Arbitrator) வெள்ளையர் அரசு நியமித்தது.

1920 மார்ச் மாதம் Lord Meston முறையீடுகளைக் கேட்கத் துவங்கினார். இரு தரப்பாரும் தங்கள் வாதங்களைக் கடுமையாக முன்வைத்தனர். வாதங்களை முழுமையாகக் கேட்ட Lord Meston பார்ப்பனரல்லாதோருக்கு சென்னை மாகாணத்தில் உள்ள 63 தொகுதிகளில் 28 தொகுதிகளை ஒதுக்குவதாகத் தீர்ப்பு வழங்கினார்.

நீதிக் கட்சி பார்ப்பனரல்லாதோருக்கு 75% அதாவது 63 தொகுதிகளில் 40 தொகுதிகள் கேட்டிருந்த நிலையில் 28 தொகுதிகள் என்று தீர்ப்பானது நீதிக் கட்சியினருக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

'இது ஒரு சோகம்! இதனால் பார்ப்பனரல்லாதோருக்குப் பாதுகாப்பே கிடைக்காது‌‌. ஆனாலும், ஏதோ தனிப் பாதுகாப்பு பெற்றுவிட்டதாக ஒரு மாசு மட்டும் நம் மீது இருக்கும்.' என ஜஸ்டிஸ் ஏடு கருத்து தெரிவித்தது.

இந்த 28 தொகுதிகளுக்கு Non Brahman Reserved Seats (பார்ப்பனரல்லாதோர் தனித் தொகுதி) என்ற பெயரைத்தான் Lord Meston பயன்படுத்தினார். ஆனால், இந்தப் பெயரை சி.பி.ராமசாமி ஐயர் போன்ற பார்ப்பனர்கள் எதிர்த்தனர். நேப் என்ற வெள்ளைக்கார அதிகாரியின் துணையோடு Non Brahman Reserved Seats என்ற பெயரை Non Muhammedan Constituent (முகமதியர் அல்லாதார் தொகுதி) என மாற்றினர்.

முஸ்லீம்களுக்கும், பார்ப்பனரல்லாதோருக்கும் எந்த முரண்பாடுகளும் இல்லாத நிலையில், பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதோர் பிரச்சினையைக் கூட எப்படி இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக வரலாற்றில் திருப்ப முயன்றிருக்கிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு மிகப் பெரும் சான்றாகும்.

- சே.ச.அனீஃப் முஸ்லிமின்

Pin It