புத்த மதம் தமிழ்நாட்டில் மாமன்னன் அசோகரின் காலத்தில் பரப்பப்பட்டது. அன்று சேர’ சோழ, பாண்டிய பல்லவ நாடுகளாக தமிழகம் பிரிந்திருந்தது. அசோகரின் மகன் இலங்கைக்கு கி.மு.250 ஆம் ஆண்டில் புத்த சமயத்தைக் கொண்டு சென்ற வழி தமிழ்நாடு. மகிந்தருடன் அவருடைய உறவினர் “அரிட்டர்” என்பவரும் இலங்கையில் புத்த மதத்தைப் பரப்பினார். இந்த அரிட்டர் பெயரில் மதுரை அருகே “அரிட்ட பாடி” என்ற ஊர் இன்றும் உள்ளது. கி.பி ஏழாம் நூற்றாண்டில் மதுரையில் புத்த விகாரை இருந்ததாக சீனப்பயணி யுவான் சுவாங் பயணக்குறிப்பில் உள்ளது. மேலும் கி.பி 3 ஆம் நூற்றாண்டிலிருந்தே புத்தம் தமிழ் நாட்டில் உள்ளதாகவும், புத்தத்தை ” பேரறம்” என்றும் தெ.பொ.மீ சிறப்பித்துக் கூறுகிறார்.
இலங்கை புத்தத்திற்கும், தமிழ் புத்தத்திற்கும், மரபு வழித்தொடர்புகள் உள்ளன. தமிழ் நாட்டிலிருந்து இலங்கைச் சென்ற பல புத்தர்கள் எழுதிய நூல்கள் பற்றிக் கந்த வம்சம் வழியாகத் தெரிய வந்துள்ளது. (யாழ் – சைவ வேளாள மரபினர் இச்செய்தியை வெளிப்படுத்த தயங்கியதை எவரும் புரிந்துக் கொள்ளமுடியும்.)
தமிழ்ப் புத்தர்கள் இருந்ததற்கும் அவர்கள் சங்கப் பாடல்களை இயற்றியமைக்கும் ஆதாரம் உள்ளது. இளம் போதியார் என்ற புலவர் இருந்தது இதைத் தெளிவாக்கும். மேலும் ஞானசம்பந்தர் புத்தர்களைக் குறிப்பிட ”போதியார்” என்ற சொல்லைப் பயன்படுத்தியது இங்கு நினைவுகூறத்தக்கது. இளங்கோவடிகளும் மணிமேகலையை இயற்றிய கூலவாணிகன் சாத்தனாரும் பவுத்தர்களே! சாத்தனார் என்ற பெயரும் பவுத்தப் பெயரே, சபரிமலை ஐயப்பன் கோயிலை “சாஸ்த்தா” கோயில் எனக் குறிப்பிடுவதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
சோழநாட்டில் 11ஆம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த வீரராஜன் அவையில் அறங்கேற்றப்பட்ட “வீரசோழியம்” இலக்கண நூலை இயற்றிய “புத்தமித்திரர் என்பவர் “பொன்பற்றி” என்று கூறப்படும் தஞ்சைக்கு அருகில் இருந்த ஊரைச் சேர்ந்தவர்.
காஞ்சியில் இருந்த புத்தப் பல்கலைக் கழகத்தில், காஞ்சியிலேயே பிறந்த “திங்க நாகர்” என்ற தமிழர் அப்பல்கலைகழகத்தின் தலைவராக இருந்தார். அவருடைய மாணவர் தான் தர்மபாலர். கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் காஞ்சியிலிருந்து சீனாவுக்கு சென்ற போதி தர்மர் ஜென் – பவுத்தத்தை சீனா கொண்டு சென்றார். ஜென் என்பது தியானம் என்பதின் மரூஉ ஆகும், திருமூலரின் தியான முறையையே பின்பற்றியது – ஜென் பவுத்தம் எனலாம். ஜென் மதத்தை மேலும் சீனாவில் வளர வித்திட்டவரும் தமிழரே!
இவர் பெயர் வச்சிரபோதி காலம் – 661-730-(கி.பி), இவரும் காஞ்சி பவுத்த மதத்தின் தலைவரே!
இந்த இடத்தில் காஞ்சிபுரத்தில் பார்ப்பனர்கள் ஏன் புதிய சைவ மடத்தை நிறுவினர் என்றும், காஞ்சிபுரத்தில் மட்டும் ஏன் பார்ப்பனர்களும் கோயில்களும் நிறைந்து காணப்படுகின்றனர் என்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.. மன்னர்களின் ஆசியுடன் “புத்த காஞ்சி” மீது பார்ப்பனியப் படையெடுப்பு ஒன்று நடத்தப்பெறாமல் இது நடந்தேறி இருக்க வாய்ப்பே இல்லை.
தமிழ்ச் சமூகத்தில் புத்த மதத்தை அணுகுவதில் இருவேறு போக்குகள் இருந்தன. ஒன்று “சைவ” வெள்ளாளச் சாதியினர் ‘ புத்தம்’ பற்றிய கருத்துக்களை முழுமனதுடன் ஆய்வுக்கு உட்படுத்தாமல் “சிவனிய” உயர்வு குறித்த தேடல்களில் ஈடுபட்டிருந்தார்கள். இதற்கு மாறாக பறையர் சமூகத்துப் படித்த ஆளுமைகள் புத்த மதக் கருத்துக்களுடன் தங்கள் அடையாளத்தைத் தேடத் தொடங்கினர். இதன் காரணமாக தமிழகத்தில் புத்தம் பற்றிய ஆதாரங்கள் நிறையக் கிடைத்தபோதும் தேடல்கள் இல்லாமல் போய்விட்டது. இதற்குக் காரணம் கற்றறிந்த தமிழ் அறிஞர்களிடம் நிலவிய ஒவ்வாமையா, அல்லது தீண்டாமையா?
காஞ்சி மட்டுமின்றி பொதிகை, உறையூர், வஞ்சி (கேரளம்), மதுரை, நாகை, காவிரிப்பூம்பட்டினம் ஆகிய நகரங்கள் பவுத்த நிலையங்களாக இருந்தன. கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் காவிரிப்பூம்பட்டினத்தில் “அச்சுதக் களப்பிரன்” என்று ஒரு தமிழ்ப் பவுத்தர் இருந்தார். இந்த “அச்சுத” என்ற பெயர் ஐயப்பனோடு தொடர்புடையதை உங்களால் எளிதில் உணர்ந்துக்கொள்ளமுடியும்.
அதேபோன்று நாகைப்பட்டினத்தில் சோழ அரசன் இராசேந்திரன் சீன அரசனுக்குப் புத்த விகாரை கட்ட அனுமதி அளித்திருந்தான். இந்த புத்த விகாரையைப் பற்றி தன்னுடைய பயணக் குறிப்பில் “ மார்க்கோபோலோ” குறிப்பிட்டுள்ளார். இந்த விகாரையைப் பற்றி குறிப்பு பர்மிய அரசன் கல்வெட்டில் 1477 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. 1725 ஆம் ஆண்டில் வாழ்ந்த வாலண்டைன் என்பவரும் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாகைப்பட்டினத்தில் புத்த விகாரையில் இருந்த “புத்தரின்” பொன்சிலையை எடுத்துச் சென்று தான் பொன்னை உருக்கி விற்று சீரங்கம் கோயிலைக் கட்டியதாக “ குருபரம்பரை பிரவாபம்” என்ற வைணவ நூலில் கூறப்பட்டுள்ளதாக தெ.பொ.மீ குறிப்பிட்டு உள்ளார்.
17 – ஆம் நூற்றாண்டு வரை புத்தம் வளர்ந்திருந்ததை நாம் அறிய முடிகிறது. பார்ப்பனிய சூழ்ச்சிகளினால் புத்தம் திட்டமிட்டு அழிக்கப்பட்டதை அம்பேத்கர் தெளிவாக விளக்கியுள்ளார். எனினும் தமிழ்மொழி, இலக்கியங்களிலும் தமழினப் பண்பாட்டு வேர்களிலும் பவுத்தம் பிணைந்தே உள்ளது! அவ்வப்போது தலையில்லாத புத்தர்சிலைகள், அல்லது சிதைக்கப்பட்ட புத்தர்சிலைகள் வயல்களில் கிடைத்துக் கொண்டேதான் உள்ளன. புத்தரின் உருவங்களை அழித்த ஆரிய – பார்ப்பனியம், சில இடங்களில் திருமாலின் வடிவமாகப் புத்தர் உருவங்களைச் சித்தரித்து விட்டனர். சாத்தனார் – ஐயனார் ஆகவும், தர்மதாசர், போதிதாசர் என்றும் வழிபடுவதும் உண்மையில் புத்த வழிப்பாட்டின் தொடர்ச்சிதான்.
அரசமர வழிபாடும், சிங்கப் பெருமாள் கோயிலில் காணப்படும் “திருவடி” புத்தரின் பாதங்கள் வழிப்பாட்டின் தொடர்ச்சியாகத் தானே இருக்க முடியும். இலங்கை மலையகப்பகுதியில் புத்தரின் காலடிகள் இருக்கும் மலைக்கு “ஸ்ரீபாத” மலை என்று பெயர். சயணக் கோலத்தில் காட்சி தரும் திருமால் உருவங்கள் புத்தரையே நினைவூட்டும், அண்மைக்கால அத்தி வரதர் அது தானே கண்கண்ட காட்சி!. ஆரிய – பார்ப்பனிய மரபில் மூலவர் சிலையை மரத்தில் செய்வதில்லை. அதற்கு மாறாகப் புத்தர் சிலை களிமண்ணால் கூட செய்யப்படும். மரத்தில் வெட்டி உருவாக்கும் புத்தர் சிலை மரபு ஆசியா எங்கும் உண்டு!.
பார்ப்பனிய வேத குருகுல வாழ்க்கை முறைக்கும், புத்த மடாலய வாழ்க்கைக்கும் பெரும் வேறுபாடு உண்டு!. பார்ப்பனக் குருகுலமும் மதபீடமும் பிராமணர்க்கு மட்டுமே உரியது. புத்தமதத்தைப் பின்பற்றித்தான் ஆதிசங்கரர் மடங்களை நிறுவினார். ஆனால் புத்த மடலாயங்கள் அனைவருக்குமானது. அதனால் தான் அதனை “அம்பலம்” என்று அழைத்தனர் அம்பலங்களில் அரச மரமும் விருட்சமாக வளர்க்கப்பட்டு அதன் நிழலில் எல்லோரும் கூடினர். வழிபாடும் போதைனைகளும் அரச மரத்தடியில் தான் நடைபெற்றன.
இந்தியாவிலும் தெற்காசிய நாடுகளிலும் காணப்படும் இந்த அரச மரத்தைத் “தமிழர்கள்” ஏன் அரச மரம் என அழைக்கின்றோம் என்ற கேள்வியை எழுப்பினோமா? இந்தியில் “பீப்பால்” என்றும் சமசுகிருதத்தில் “ அஸ்வத்தா” எனவும் அரசமரம் குறிப்பிடப்படுகிறது. வட இந்தியாவில் புத்த கயாவில் கூட “அரச மரம் (இராஜவிருட்சம்)” என அழைக்கப்படுவதில்லை. தமிழர்களாகிய நாம் ஏன் அரச மரத்தைச் சிறப்பிக்கின்றோம்?
கவுதம புத்தர் கயாவில் அரச மரத்தின் கீழே அமர்ந்து “பரி நிர்வாணம்” எய்தினார். அந்த அரச மரத்தின் கிளை ஒன்றை இலங்கை கொண்டு சென்று மகிந்தன் அனுராத புரத்தில் நட்டு வைத்தார், அது இன்றும் பாதுகாக்கப்படுகிறது .(விக்கிபிடியாவில் கி.மு.228 என்று சுட்டப்படுகிறது.)
இலங்கையில் 19 – ஆம் நூற்றாண்டுக்குப் பின்தான் சிங்களர் – தமிழர் முரண்பாடு வெளிவருகிறது அதற்கு முன்பாக சிங்கள நாட்டின் புத்த மதத்துடன் தமிழர்கள் எவ்வாறு இனங்காணப்பட்டார்கள் என்பதும் ஆய்வுக்குறியது.
இனவெறுப்புக் காரணமாகப் புத்தத்திற்கு தமிழர்கள் ஆற்றிய பங்கு சிங்கள மதவெறியர்களால் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். இதேபோன்றதொரு பிழையை “சைவத் தமிழர்களும்” தமிழ் ஈழ நாட்டில் செய்திருக்க வேண்டும், ஏனென்றால் பழங்காலப் புத்த மத அடையாளங்களைச் சிங்கள – இன வாதிகளும் அரசும் “தமிழ் தொன்மை ஊர்களை” சிங்களப் பகுதியுடன் இணைக்கப் பயன்படுத்திக் கொண்டனர்.
மேலே கண்ட செய்திகள் மூலமும் நாம் அறிவது அக்காலத் தமிழர்கள் புத்தருடனும், புத்த மதத்துடனும் உறவு கொண்டிருந்தனர். புத்த மதம் தமிழ் நாட்டில் ஆழமாகப் பரவியிருந்தது. இங்கிருந்த தமிழர்கள் புத்தத்தை ஆதரித்தனர். புத்த மத நிறுவனம் அரசின் அங்கமாக இருந்திருக்கிறது. ஏதோ ஒரு வகையில் புத்த நிறுவனங்கள் குடிமக்களுக்கும் மன்னனுக்கும் பாலமாக இருந்திருக்கின்றன அதனால் அரசால் ஊக்குவிக்கப்பட்ட நிறுவனங்களில் விருட்சமாக வளர்த்து எடுக்கப்பட்ட மரம் ”அரச மரம்” என்று சிறப்புடன் அழைக்கப்பட்டு உள்ளது!.
தமிழில் அரச மரத்தின் தாவரப் பெயரை நம்மால் அறிந்துக் கொள்ள முடியவில்லை!
பிற்காலத்தில் “புத்தம்” பார்ப்பனர்கள், புத்த மடங்களை அழித்துப் புத்தர் சிலையை அழித்துவிட்டு அரச மரத்தடியில் புத்தர் சிலைக்குப் பதிலாக விநாயகர் சிலையை நிறுவி விட்டனர். அரச மரமும் – வேம்பும் ஒரே இடத்தில் காணப்பட்டால் அதற்கு இடையில் விநாயகரை வைத்து வழிபடும் முறை தற்போது நம் சமூகத்தில் காணப்படுகிறது. இந்த வழக்கம் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டு இருக்கலாம், மேலும், புத்தரை வழிபட்ட மக்களையும், நிறுவனப்படுத்தப்படாமல் இருந்த குலதெய்வ வழிப்பாட்டு முறையையும் இணைக்கும் நோக்கில் அரச மரம் + வேப்பமரத்தை வைத்து அவைகளை ஒன்றாக்கிப் பின் விநாயகர் வழிபாட்டு முறைக்கு மாறி வந்திருக்க வேண்டும். மேலும் சில பகுதிகளில் காணப்படும் அரச மரம் + வேப்பமரம் திருமணம் செய்யும் வழக்கங்களும் கூட புத்த மத அடையாளத்தை மக்கள் மத்தில் இருந்து நீக்கம் செய்யத் தொடங்கப்பட்ட ஒரு சடங்காகவே தோன்றுகிறது. எப்படி இருந்த போதிலும் அரச மரம் என்பது புத்த மதம் தொடர்பானது என்பது மட்டும் தெளிவானது.
துணை நூல்: உலக நாகரிகத்தில் தமிழரின் பங்கு. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.
- கிரிஷ் மருது