old parpaanதமிழ்நாட்டு அரசியலில் ஏறக்குறைய 100 ஆண்டுகளாக ‘பார்ப்பனர்’ என்ற சொல் போராட்டக் குறியீடாக புழக்கத்தில் உள்ளது. தொடக்கத்தில் அயோத்திதாசப் பண்டிதரும், நீதிக் கட்சியினரும், சுயமரியாதை இயக்கமும் அரசியலில் எழுதியும் பேசியும் வந்த சொல் ‘பார்ப்பனர்’. இதனைப் பொதுவெளியில் பரவலாக்கியது பெரியார் தான். அரசியல், சமூகத்தில் மேலாதிக்கம் செய்து வந்தவர்கள் பார்ப்பனர்கள். அவர்கள் சமய, நிர்வாகத்திலும் மேலாதிக்கம் செய்து வந்ததுடன் நன்செய் நிலங்களில் நில உடமையாளர்களாகவும் இருந்தனர். சமயமும் கோவிலும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால் அவர்களின் மேலாண்மை இயல்பானதாக நீடித்து இருந்தது.

மேலே குறிப்பிட்ட ஆதிக்க நிலைமைகளைச் சுட்டிக்காட்டி, பார்ப்பனர் அல்லாத மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அரசியல் முன்னோடிகளுக்குக் கிடைத்த ஒரு நல்ல ‘குறிப்பான்’ பார்ப்பனர் என்ற சொல். சித்தர்களும் ஆரிய மூடப் பழக்கங்களைச் சாடும்போது, பார்ப்பனர் என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளனர். பாரதியுங்கூட பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே என்று பாடியுள்ளார். பார்ப்பனர்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்களைச் செய்ததாலேயே பாரதி இவ்வாறு பாடினார் என்பது விளங்கும்.

ஆனால், தமிழ்ச் சமூகத்தில் பார்ப்பனியச் சடங்குகள், மூட நம்பிக்கைகள், கடவுளின் பெயரால் நடத்தப்பட்ட சாதிய ஒடுக்குதல் ஆகியனவற்றைப் பற்றிய ஒரு முழுமையான உரையாடலை, படிக்காத மக்களிடையே உருவாக்கியவர் தந்தை பெரியார். அவர் மேடைகள் தோறும் பார்ப்பனர்கள் தங்களை சமூகத்தில் மேலே நிலை நிறுத்திக் கொள்வதற்கு மதத்தையும், வேதபுராணங்களையும் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதைப் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களுடன் உரையாடினார்.

அப்போதுதான் ஊர்ப்புறங்களிலும் நகரங்களிலும் பார்ப்பனர்களின் செயல்திட்டங்களால் ஒடுக்கப்பட்டு, தீண்டாமைக்குள் சிக்கிக் கிடந்த மக்களும் இடைநிலைச் சாதியினரும் பார்ப்பனரை எதிர்க்கும் துணிவு பெற்றனர். அவ்வேளையில்தான், பார்ப்பனர் என்ற சொல் ஓர் அரசியல் எதிர்ச் சொல்லாக மாற்றம் கண்டது. இந்திய சாதிய சமூகத்தில் மேட்டிமைச் சாதியைச் சுட்டுவதற்கு பார்ப்பனர் என்ற சொல் இன்றியமையாச் சொல்லாகவே உள்ளது.

ஆனால் அண்மைக் காலத்தில் பார்ப்பனர் என்ற இந்தச் சொல்லைப் பயன்படுத்தச் சிலர் தயக்கம் காட்டுகின்றனர். அவர்கள் பிராமணர் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். தூய்மைவாதத் தமிழ் தேசியர்களும் இடதுசாரிகளும் ‘பிராமணர்’ என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் பார்ப்பனர் என்ற சொல்லுக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது.

பார்ப்பான் என்ற சொல்லின் வேர் ‘பார்ப்பு’ என்பார்கள் தமிழறிஞர்கள். “பார்ப்பானுக்கு மூத்த பறையன் கேட்பாரின்றி கீழ்ச் சாதியானான்” என்ற பழமொழி இதை உணர்த்தும். தொல்தமிழ்க்குடிப் பறையருக்குப் பின், சடங்குகள், பூசைகள் செய்யவந்த இளைய/பின்னாளில் வந்தவர்கள் என்றும் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். பார்ப்பில் இருந்தே பார்ப்பார் என்ற சொல்வழக்கு வந்திருக்க வேண்டும்.

இனி, இலக்கிய நூல்களில் ‘பார்ப்பனர்’ என்ற சொல் பற்றிக் காண்போம்.

திருக்குறள்

134 ‘பார்ப்பான்’ என்று பதிவு செய்துள்ளது.

புறநானூற்றுப் பாடல்கள்:

பாடல் 09 இல், “ஆவும் ஆணியல் பார்ப்பன மக்களும்”

பாடல் 46 இல், “பார்ப்பனர் நோவன செய்யலர்; மற்று இது”

சிலப்பதிகாரம்:

மதுரைக் காண்டம் வஞ்சின மாலை வரி 56

“பார்ப்பனர் அறவோர், பசு பத்தினி….

மதுரைக் காண்டம் கட்டுரைக் காதை வரி 61

“வலவைப் பார்ப்பான் பராசரன் என்போன்”

மணிமேகலை

மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை வரி 35

“பார்ப்பன முதுமகன் படிம உண்டியன்”

சக்கரவாகக் கோட்டம் உரைத்த காதை வரி 132

“பார்ப்பான் தன்னொரு கண்ணிழந்திருந்த”

தமிழ்நாட்டில் பார்ப்பனர் என்ற சொல் ஓர் அரசியல் சொல்லாக மாறியதற்குக் காரணம் வரலாற்று வழிவந்த பார்ப்பனர்களின் மனுவாத, ஆரிய-வேத, மத மற்றும் சாதிய ஒடுக்குமுறைகள் தானேயன்றி, பார்ப்பனிய சனாதனத்தை எதிர்ப்பவர்கள் அல்ல.

மற்றொரு புறம், சங்க காலம் முதலே தமிழ்நாட்டில் பார்ப்பனர் இருந்திருக்கின்றனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சங்க காலத்தில் பார்ப்பனர்கள் வளையல் செய்ததாகவும், யானைப் பாகனாக இருந்ததாகவும் இலக்கியங்கள் கூறுகின்றன. வேள்வி செய்த தீ ஓம்பிய அந்தணர்களும் காணப்படுகின்றனர்.

மேலும் போரில் கொல்லப்படக் கூடாதவர்களின் பட்டியலில், பார்ப்பார், பசு, பத்தினிப் பெண்டிர், குழந்தைகள் எனச் சுட்டப்படுவது அவர்கள் சங்க காலத்தில் ஆட்சியாளரிடம் செல்வாக்குப் பெற்றிருந்த நிலைமையைத் தெளிவுபடுத்தும். புறநானூற்றுப் பாடல் 122 இல் திருமுடிக்காரி என்ற மன்னன் தன் நாட்டை அந்தணர்க்குக் கொடுத்தான் என்கிறது.

பேரரசுகள் காலத்தில் பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களால் அழைத்து வரப்பட்டவர்கள் ஆரிய வேதநெறிப் பார்ப்பனர்கள், இவர்களை மன்னர்கள் கங்கைக் கரையிலிருந்து அழைத்து வந்தனர். இவர்கள் ஏற்கெனவே புத்த மதத்தை எதிர்த்து, அழித்து, வெற்றி பெற்றிருந்தனர். தமிழ் மன்னர்கள் இந்தக் காரணத்துக்காகவும் கூட பார்ப்பனர்களை கங்கைக் கரையிலிருந்து அழைத்து வந்திருக்கலாம்.

சங்க காலத்திற்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த பார்ப்பனர்களும் பிற்காலத்தில் பக்தி இயக்கக் காலத்தில் அலையலையாக தமிழ்நாட்டுக்குள் வந்து சேர்ந்த ஆரிய வேதநெறிப் பார்ப்பனர்களும் ஒன்று கலந்துவிட்டனர் என்பது மட்டுமே இப்போது நம் கண்களால் காணும் உண்மை. வரலாற்றில் இப்படி நேர்வது புதிதல்ல. கீழ்நிலைப் பண்பாடு கொண்டவர்களை மேட்டிமைப் பண்பாடு உள்வாங்கிச் செரித்துவிடும்.

“பார்ப்பனர்கள்” என்ற சொல் தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமான அரசியல் சொல்லாடலாகும். நாட்டில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை எப்படிப் பணக்காரன் - ஏழை என்ற பாகுபாடு இருக்குமோ அதுபோல பார்ப்பனரும் - அடிநிலைச் சாதிகளும் இருக்கும் வரை அரசியல், சமூகப் பயன்பாட்டில் பார்ப்பனர் என்ற சொல் நீடித்து இருக்கும்.

பார்ப்பனர் என்ற இந்தச் சொல்லை, பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள் பார்ப்பனர்களுக்கு எதிராகப் பயன்படுத்திய போதிலும், இந்தப் பார்ப்பனர் என்ற சொல்லே தமிழ்நாட்டில் ‘பார்ப்பன மரபு’ நீண்ட காலமாக இருந்து வருவதற்கும் ஆதார சாட்சியாக இருக்கிறது. இச்சொல்தான் சாட்சியாகவும் இருக்கிறது. எனவே, பார்ப்பனர்கள் ‘பார்ப்பனர்’ என்று அழைக்கப்படுவதற்கு கோபங்கொள்ளாமல் இருப்பதே சரி!

- ஆ.கிருட்டிணன்

Pin It