பல்லவர் காலக் கல்வி:

பல்லவர் ஆட்சியின் தொடக்க காலத்திலேயே காஞ்சியில் வடமொழிக்கல்லுரி ஒன்று (கடிகை) தொடங்கப்பட்டிருந்தது. கடம்ப அரசன் மயூரசர்மன் அங்கு கல்வி கற்றான். வேதங்களில் உயர்நிலைக் கல்வியும் ஆராய்ச்சிக் கல்வியும் அங்கு அளிக்கப்பட்டன. அக்கல்லூரி பல்லவ அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. சமந்த பத்திரர், பூச்யநாதர் போன்ற சமண ஆசிரியர்களும் பெரும்புலவர்களும் இங்கு வந்து கல்வி தந்தனர் என்பதால் இது அனைவருக்குமான பொதுக்கடிகையாக இருந்தது எனலாம். பல நாட்டவரும் இங்கு வந்தனர். இங்கிருந்து சென்ற தருமபாலர் நாளந்தா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருந்தார். சோளிங்கர் மலையிலும் கடிகை இருந்தது. தென்னார்க்காடு கோட்டத்தின் பாகூரிலும் வடமொழிக்கல்லுரி இருந்தது. இக்கல்லூரிகளில் 14 கலைகளும், நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், மீமாம்சம், தர்மசாத்திரம், நியாயம், புராணம், மருத்துவம், வில்வித்தை, இசை, பொருள்நூல் ஆகிய 18 வகையான வித்தைகளும் கற்பிக்கப்பட்டன. இக்கல்லூரிகளில் படைக்கலப் பயிற்சியும் கற்பிக்கப்பட்டது (31).

பல்லவர் காலத்தில் அக்கிரகாரங்கள் எனப்படும் பார்ப்பனச் சேரிகள் இருந்தன. பல்லவர் காலத்தில்தான் பார்ப்பனர்கள் கோவில்களில் வழிபாடு செய்யும் புரோகிதர் உரிமை பெற்றனர். அவர்கள் இக்காலத்தில்தான் மக்களிடம் குருக்களுக்கான பணிகளைச் செய்யவும் தொடங்கினர். நகரங்களிலும், பேரூர்களிலும் மறையவர்கள் (வேதங்களில் சிறந்த பார்ப்பனர்கள்) தங்கியிருந்த இடங்கள் பிரம்மபுரிகள் எனப்பட்டன. இவர்களுக்கு பிரமதேயங்கள் இல்லை எனினும் கல்வி கற்பிப்பதற்காக நிலம் மானியமாக விடப்பட்டது. மறையில் சிறந்த தனிப்பட்ட பார்ப்பனர்களுக்கு பல்லவர் நிறைய இறையிலி நிலங்களை வழங்கினர். பல்லவர் காலத்தில் கோவில்கள் பல்கலைக்கழகங்களாக விளங்கின. கோவில்களில் சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம், சமயக்கல்வி, சாத்திரக்கல்வி போன்ற பல விடயங்கள் கற்பிக்கப்பட்டன. சமயநூல்கள், தேவாரப் பதிகங்கள் முதலியன கோவில்களில்தான் பாதுகாக்கப்பட்டன. கோவில்களில்தான் பத்திரப்பதிவும், பட்டயமும், கல்வெட்டும் இன்னபிறவும் தயாரிக்கப்பட்டன.

இவைபோக இக்காலத்தில் மடங்களும் இருந்தன. இம்மடங்கள் மாணவர்களுக்கு உணவும் விடுதியும் வழங்கி கல்வியும் தந்தன. துறவிகள், அறிவைத் தேடும் பெருமக்கள், ஏழைகள், திக்கற்றவர் ஆகியவர்களுக்கு இந்த மடங்கள் புகலிடமாகவும் இருந்தன. இவை சமய உயர்தரக் கல்வியைத் தந்து வந்தன. மடங்களில் சமயக் கல்வி, தர்க்கம், காவியம், இலக்கணம், நாடகம், பரத சாத்திரம் போன்றவைகள் கற்பிக்கப்பட்டன. மடங்கள் மதம் சார்ந்தவை. சைவ, வைணவ மடங்கள், பௌத்த சமண மடங்கள் காளமுகர் மடங்கள் என பலவகைப்பட்ட மடங்கள் இருந்தன. இவைபோக சமண, பௌத்த விகாரங்களும் பள்ளிகளும் இருந்தன. இங்கும் சமயக் கல்வியுடன் பல்வேறு கலைகளும் கல்வியும் கற்பிக்கப்பட்டன. தமிழ்ப்பள்ளிகளும் இருந்தன. ஆனால் கலை, அறிவியல் ஆகியவற்றில் உயர்கல்வி என்பது இன்று ஆங்கிலத்தில் வழங்கப்படுவதுபோல் அன்று சமற்கிருதத்தில் தான் வழங்கப்பட்டது. தமிழில் அடிப்படைக்கல்வியும் பின் தமிழ் மொழியின் இலக்கியம், இலக்கணம் போன்றவைகளும் அடிப்படைச் சமயக் கல்வியும் வழங்கப்பட்டன எனலாம். ஆனால் அதற்கு அரசு ஆதரவு இருந்ததற்கான சான்றுகள் இல்லை. தனிப்பட்டவர்களே அவற்றை வழங்கி வந்தனர் (32).

இலக்கியம்:

தமிழகத்தில் முதல்முறையாக பல்லவர் காலத்தில்தான் சமற்கிருதம் அரசு மொழியாக ஆனது. பல்லவரின் தொடக்க காலக் கல்வெட்டுகள் பிராகிருதத்திலும் இடைக்காலக் கல்வெட்டுகள் சமற்கிருதத்திலும் உள்ளன. பிற்காலப் பல்லவர்கள் காலத்திலும் கூட தனிப்பட்ட சமற்கிருதக் கல்வெட்டுகளும் தமிழோடு கூடிய சமற்கிருதக் கல்வெட்டுகளும்தான் வெட்டப்பட்டன. தனித்தத் தமிழ்க் கல்வெட்டுகள் என ஒன்றுகூட இருக்கவில்லை. பல்லவர்கள் தங்களை பாரத்வாச கோத்திர பார்ப்பனர்களாகக் கருதிக் கொண்டதால் சமற்கிருத மொழியின் வளர்ச்சிக்கு மிகுந்த ஆதரவை வழங்கினர். அனைத்துப் பல்லவ மன்னர்களும் சமற்கிருத மொழியை அறிந்தவர்களாகவும் பெரும்பாலான மன்னர்கள் அதில் புலமை பெற்றவர்களாகவும் இருந்தனர். இலோகவிபாகம், கிராதார்ச்சுனீயம், அவந்தி சுந்தரி கதை, மத்தவிலாசப் பிரகசனம், காவ்யாதர்சம் போன்ற புகழ்பெற்ற வடமொழி நூல்கள் பல்லவர் காலத்திய சமற்கிருத மொழியின் வளர்ச்சிக்குரிய சான்றுகள்.Mamallapuram Five Rathasபல்லவர் அவைக்களத்தில் சிறந்த வடமொழிப் புலவர்கள் பலர் இருந்து வந்தனர். பல்லவர் காலத்தில், பல்லவர் தந்த ஆதரவால் சமற்கிருதம் ஒரு செல்வாக்கு பெற்ற மொழியாக தமிழகத்தில் உருவாகியிருந்தது. அதன் காரணமாக வடமொழிக்கலப்பு என்பது சங்ககாலத் தமிழில் இல்லாத அளவு பல்லவர்காலத் தமிழில் உண்டாகி விட்டது. பல்லவர் காலத்திலும் அதன்பின்னர் சோழர் காலத்திலும் உருவான பல்வேறு தமிழ் நூல்கள் அதை உறுதி செய்கின்றன. சான்றாக யாப்பருங்காலக்காரிகை, வீரசோழியம் போன்ற இலக்கணநூல்களிலும் பெரியபுராணம், கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம், ஒட்டக்கூத்தர் பாடிய நூல்கள் போன்றனவற்றிலும் வடமொழிக்கலப்பு மிகுதியாக இருப்பதை உணர முடிகிறது.

பிற்கால பல்லவர் பட்டயங்கள் எல்லாம் சிறந்த வடமொழி நடையுடன் உள்ளன. முதலாம் பரமேசுவரனுடைய கூரம் பட்டயம் கூறும் போர்வர்ணனை சிறப்புமிக்கது. இரண்டாம் நந்திவர்மனுடைய காசக்குடி பட்டயம் பல்லவர் வரலாற்றைச் சிறந்த வகையில் கூறுகிறது. மூன்றாம் நந்திவர்மனுடைய வேலூர்ப்பாளையப் பட்டயத்தின் வடமொழி நடை மிக அழகாக உள்ளது. இராசசிம்மன் காலத்து கைலாசநாதர் கோவில் கல்வெட்டுகள் சுருக்கமும் தெளிவும் உடையன. புகழ்பெற்ற பாரவி, தண்டி போன்ற வடமொழிப்புலவர்கள் பலர் பல்லவர் அவையில் இருந்தனர். பல்லவர்கள் வட மொழியை, வடமொழிப் புலவர்களை ஆதரித்தனர். ஆனால் தமிழ்மொழியை தமிழ்ப் புலவர்களை அவர்கள் ஆதரிக்கவில்லை. தமிழ்மொழியைக் கண்டு கொள்ளவில்லை. பல்லவ வேந்தர்களில் ஒரு சிலர் மட்டுமே தமிழ் மொழியை அறிந்தவர்களாக இருந்தனர். ஆனால் அனைவரும் சமற்கிருத மொழியை அறிந்தவர்களாக இருந்தனர். அதுவே அவர்களின் தாய்மொழிபோல் இருந்தது.

முற்காலப் பல்லவர்களும் இடைக்காலப் பல்லவர்களும் தமிழை அறிந்தவர்கள் அல்ல. பிற்காலப் பல்லவர்களில் ஒரு சிலர் தமிழை அறிந்தவர்களாக இருந்தனர். அதற்கு அவர்கள் சைவர்களாக ஆகியதும், மக்களிடத்தில் தமிழ்ப் பக்திப்பாடல்கள் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்ததும், அவர்கள் ஆட்சிப் பரப்பின் பெரும்பகுதி தமிழ் மக்களைக் கொண்டிருந்ததும் காரணம் எனலாம். இருந்தபோதிலும் பல்லவர் காலத்தில் தமிழ் மொழி அரசு ஆதரவைப் பெற்ற மொழியாக இருக்கவில்லை. ஆதலால் தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது அக்காலத்தில் பெரிய அளவில் இல்லை என்றே சொல்லலாம். யாப்பருங்கலக்காரிகை உரையால் பல்லவர் காலத்தில் சில தமிழ் யாப்பிலக்கண நூல்கள் வடமொழிவழித் தமிழாசிரியர்கள் சிலரால் செய்யப்பட்டன என அறிய முடிகிறது. அக்காலகட்டத்தில் சைவத் திருமுறைகள் பல உருவாகியிருந்தன. வைணவப் பாடல்களும் பல உருவாகியிருந்தன. பக்தி இலக்கியம் அக்காலகட்டத்தில் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருந்தது. அவை அரசு ஆதரவில் வளரவில்லை. மக்களின் ஆதரவால் அவை வளர்ச்சி பெற்று வந்தன. இக்காலகட்டத்தில் சிற்றிலக்கியங்கள் சிலவும் உருவாகியிருந்தன. பிற்காலப் பல்லவர் காலத்தின் இறுதியில் இருந்த மூன்றாம் நந்திவர்மன் தமிழில் புலமை பெற்றவனாக இருந்தான். அவன் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தான். அவன் காலத்தில்தான் அவன் குறித்து, நந்திக் கலம்பகம் என்ற தமிழ் நூல் உருவானது. பாரத வெண்பா என்ற தமிழ்நூலும் இவன் காலத்ததாகும். அதற்கு முந்தைய பல்லவ மன்னர்கள் யாரும் தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கவில்லை. (33).

சமயம்:

கி.பி. 500க்குப் பின் சமண பௌத்த மதங்கள் வீழ்ச்சியுற்றன. சமணத் துறவிகள் ஆடையின்றி நீராடாமல் அழுக்குடன் தனித்துத் திரிதலும், கடுமையான நோன்புகள் இருத்தலும், இசை, நடனம் போன்ற நாகரிகக் கலைகளை நிராகரித்தலும், பெண்களை, அவர்களின் தாய்மைப் பண்பை நிராகரித்தலும் போன்ற செயல்கள் தமிழர் மரபுக்கு ஏற்புடையதல்ல. அதே சமயம் சைவ வைணவ சமயங்கள், உலக வாழ்க்கை இன்பமானது; ஆண்-பெண் சேர்ந்து வாழ்வதே இயற்கை வாழ்வு; அதுவே இன்ப வாழ்க்கை; அதுவே இறைவன் ஆணை; உலக இன்பங்களை நுகர்ந்து கொண்டே இறைவன்மேல் பக்தி பூண்டு அவரவர் நிலைக்கு ஏற்ப திருப்பணிகளும் தூயவாழ்வும் வாழ்தலே போதும் என்றனர். கோவில்களில் ஆடல்பாடல்கள் தோன்றின; நாடகங்கள் நடிக்கப்பட்டன; இறைவன் மீது உள்ளத்தை உருக்கும் பதிகங்கள் இசைக்கருவியுடன் பாடப்பட்டன. ஆதலால் மக்கள் சைவ வைணவ மதங்களை நாடினர். சமண பௌத்த மதங்கள் செல்வாக்கு இழந்தன.

கி.மு. 1000க்கு முன்பிருந்து கி.பி. 250 வரை தமிழ் மொழி என்பது தமிழர்களின் அடையாளமாக இருந்து வந்தது. களப்பிரர் காலத்திலும், பல்லவர் காலத்திலும் பிராகிருத சமற்கிருத மொழிகள் செல்வாக்கு பெற்று தமிழ்மொழி கீழ்மக்களின் மொழியாக மாற்றப்பட்டிருந்தது. தமிழ் மக்கள் களப்பிரர் காலத்தில் நடந்த பேரழிவால் தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை இழந்திருந்த போதிலும் தமிழ்மொழி மீதான பற்று என்பது தமிழ் மக்களின் உள்ளத்தின் அடியாழத்தில் நிலைத்திருந்தது. சைவ வைணவப் பெரியார்கள் அதனைப் புரிந்து கொண்டு பக்திப் பாடல்களை இசையோடு தமிழில் பாடியது என்பது பொதுமக்களை ஈர்த்தது. சைவ வைணவச் சமயங்களின் வளர்ச்சி என்பது தமிழ் மக்களால் தமிழ் மொழியின் வளர்ச்சியாகவும் பார்க்கப்பட்டது. எனவே பக்தி இயக்கத்தை தமிழ் மொழியின் மீட்சியாகவே தமிழ் மக்கள் கருதினர். மேலும் பக்தி இயக்கம் என்பது சமூகத்தில் இருந்த பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக்களைந்து சமத்துவத்தை கொண்டுவருவது போல் தோன்றியது. அதனாலும் பக்தி இயக்கம் செல்வாக்கு பெற்றது. சமண பௌத்த மதங்களின் வீழ்ச்சிக்கு இவை போன்ற பல காரணங்கள் இருந்தன.

பல்லவர் காலத்தில் வைதீக பார்ப்பனர்கள் அதிக அளவில் குடியேற்றப்பட்டனர். அவர்களுக்கு நிறைய நிலதானங்கள் வழங்கப்பட்டன. பல்லவ அரசின் ஆதரவும் அவர்களுக்கு இருந்ததால் அவர்கள் செல்வாக்கு பெற்றவர்களாகவும் ஆனார்கள். ஆதலால் அவர்கள் பெருகப்பெருக வைதீக சமயம் சைவ சமயத்தோடு இரண்டறக் கலந்தது. அவர்தம் உருத்திர வணக்கம் சைவத்தின் சிவ வணக்கத்தோடு இணைக்கப்பட்டது. திருவாசகத்தில் அந்த சிவ உருத்திரக் கலப்பு பேசப்பட்டுள்ளது. வேள்வியே இல்லாத சிவன் வடவர் மதக் கலப்பால் வேள்விக்குரிய மகாதேவனாக மாறிப் போனான். தமிழ் முருகன் சுப்பிரமணியன் ஆனான். தமிழ்க் கொற்றவை துர்க்கை ஆனாள். பல கிளைச்சமயத்தினர் வழிபட்டு வந்த உள்ளூர் தெய்வங்கள் எல்லாம், ‘ஐயனார் சிவனது அம்சம், விநாயகர் சிவனது பிள்ளை, பெண் தெய்வங்கள் எல்லாம் பார்வதியின் அம்சம், பார்வதி சிவனின் மனைவி’ என ஆனார்கள்.

பாசுபதம், கபாலிகம், காளமுகம் போன்ற தமிழ்நாட்டின் வடக்கே தக்காணப்பகுதியில் இருந்த பல சிறு சமயங்கள் பல்லவர் களப்பிரர் காலத்தில் தமிழ்நாடு வந்தன. அவை சைவ சமயத்தின் கிளைகளாக மாறின. தமிழ் மரபுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் மாறுபட்டவை அவை. இச்சமயங்களின் கொள்கைகள் பல தேவார பதிகங்களில் புகுந்து விட்டன. பௌத்த சமண சமயங்களை அகற்றி வெளிவந்த சைவ சமயம் இறுதியில் வைதீக மதத்தோடும் இக்கிளைச் சமயங்களோடும் கலந்து போனது. சைவத்தைப் போன்றே வைணவமும் தமிழ் நாட்டிற்கே உரியது. மாலிய சமயமாக சங்க இலக்கியத்தில் அதனைக் காணலாம். சைவத்தைப் போன்றே வைணவத்திலும் பல கலப்புகள் நடந்தேறின. திருமாலின் பல அவதாரக்கதைகளும், புராணக் கதைகளும் தோன்றி வைணமும் வைதீகத்தோடு இரண்டறக் கலந்து போனது. பல்லவ அரசர்களில் பலர் வைணவப் பற்று உடையவராக இருந்தனர். ஆதலால் பல்லவர் நாட்டில் பல பெருமாள் கோவில்கள் தோன்றின. பல்லவர்கள் சைவம், வைணவம் ஆகிய இரண்டையும் வளர்த்தனர் (34).

காஞ்சியில் பௌத்தத் தருக்கவியல்:

கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழரான தின்னாகரே பௌத்த தருக்கவியலின் முதன்மையான ஆசிரியர். இவரைப்பற்றி பாரத்சிங் உபாத்யாயா, “பௌத்த தருக்கவியல் வரலாற்றில் முதன்மையான பெயர் தின்னாகர். இவர்தான் பௌத்த தருக்கவியலின் தந்தை.... இந்திய நாட்டின் தலைசிறந்த அளவைநூற் புலவர் இவர் என்பதில் ஐயமில்லை. இவரது பெயரைக் குறிப்பிடாத அளவைநூல் இவரது காலத்திற்கு பின் இல்லை” என்கிறார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட தருக்க நூல்களை எழுதியதாக திபெத்தியச் சான்றுகள் கூறுகின்றன. புகழ்பெற்ற சில நூல்கள் இன்றும் உள்ளன. தின்னாகருக்கு முன் அளவை நூல்கள் எதுவும் இல்லை (35).

தின்னாகரைப் பின்பற்றி அளவை இயலை வளர்த்தவர் தர்மகீர்த்தி. இவரும் தமிழரே. இவர் நாளந்தா சென்று அங்கு நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்த தமிழரான தருமபாலரிடம் பௌத்த அறிவியல் நூல்களைக் கற்றார். தின்னாகரின் மாணவரான ஈசுவர சேனரிடம் தருக்கவியலைக் கற்றார். தர்மகீர்த்தி அவர்களை, ‘இந்தியாவின் கான்ட் (Kant) என அழைக்கிறார் செர்பாட்சுகி என்கிற இரசிய அறிஞர். இவர் காலம் கி.பி. 6ஆம் நூற்றாண்டு. இந்த இருவர் போக, தருமபாலர் நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்து பௌத்த மத நூல்களை மாணவர்களுக்கு போதித்து வந்தவர். திக்நாகர், தருமபாலர், போதி தருமர் ஆகியோர் கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரை காஞ்சியில் வாழ்ந்து பின் நாளந்தாவில் அறம் போதித்தவர்கள் என்பதைக் குறிப்பிடுகிறார் தெ.பொ.மீ. ஆகவே அவர்களும் தமிழர்களே! ஆனால் தின்னாகர், தருமபாலர் போன்றோர் தமிழராக இருந்தும் அனைத்தையும் சமற்கிருதத்தில்தான் எழுதினர் (36). இத்தரவுகள் வட இந்தியாவிலும் தமிழகத்திலும் கி.பி. 5 முதல் 7ஆம் நூற்றாண்டு வரை பௌத்தமதம் வலிமையோடு இருந்ததைத் தெரிவிக்கிறது. ஆனால் சமண பௌத்த மதங்களின் பிராகிருதம், பாலி மொழிகள் வழக்கிழந்து அங்கு சமற்கிருதம் இடம் பெற்றது. பல்லவரின் காஞ்சி நகர் அனைத்துச் சமயங்களின் பொது இடமாக இருந்துள்ளது

இசை, நடனம், ஓவியம் சிற்பம்:

பல்லவர்கள் இசை, நடனம், ஓவியம் சிற்பம் ஆகியவற்றைப் போற்றி வளர்த்தனர். அவர்களது காலத்திய ஓவியம் சிற்பம் ஆகியவற்றின் சிறப்பை அவர்கள் கட்டிய குகைக்கோவில்களிலும், கைலாசநாதர் கோவில், வைகுந்தப் பெருமாள் கோவில் போன்றவற்றிலும் காணலாம். மகேந்திரவர்மன் இசையில் வல்லவனாக இருந்தான். அவன் தன்னை பல்லாவரம் குகைக்கல்வெட்டில் சங்கீரண சாதி என கூறிக் கொள்கிறான். தான் இயற்றிய மத்த விலாசம் என்ற நூலில் இசை, நடனம் குறித்த தன் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளான். அதில் தாளத்திற்கும் இசைக்கும் ஏற்ப நடிப்பவர் திறம்பட மெய்ப்பாடுகளை விளக்கி நடித்தல் இனிமையாக இருக்கிறது என அவன் கூறுகிறான். இராசசிம்மனும் இசையில் வல்லவனாக இருந்தான். அவன் ஒருசில இசை சார்ந்த பட்டப்பெயர்களைக் கொண்டிருந்தான்.

மகேந்திரன் காலத்தில் இருந்த அப்பர் திருநாவுக்கரசர் பலவகைப் பண்களைக் கொண்ட தேனினும் இனிய தேவாரப் பதிகங்களை தலங்கள் தோறும் பாடி மக்களை மகிழ்வித்தார். அவர் காலத்துச் சம்பந்தரும் இசையில் வல்லவராக இருந்தார். இக்காலகட்டத்தில் தமிழ் இசையும், தமிழ்ப்பண்களும் சிறப்புடன் இருந்தன. அக்கால சைவரும் வைணவரும் பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தி தமிழ் அருட்பாக்களைப் பாடினர். சித்தன்ன வாசல் ஓவியங்களில் இருந்து அக்காலத்தில் நடனக்கலை மிகச்சிறப்பாக இருந்துள்ளதை அறிய முடிகிறது. தொல்காப்பியத்தில் விளக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான மெய்ப்பாடுகள் தோன்றும் வகையில் நடித்தலே நாட்டியத்தின் சிறப்பை வெளிப்படுத்தும். சித்தன்ன வாசல் நடன ஓவியங்களை வரைந்த ஓவியர்கள் சிறந்த நடிகராகவும் இருந்திருத்தல் வேண்டும். அவ்வளவு அற்புதமாக அவை தீட்டப்பட்டுள்ளன. பல்லவர் காலத்துக் கோவில்களில் இசையும் நடனமும் வளர்க்கப்பட்டன. நடனங்களில் இருபாலரும் இணைந்தே நடித்தனர். அன்று நடனமும் இசையும் சமயத்தின் கூறுகளாகப்பார்க்கப்பட்டன. சிவ பெருமான் கூத்துவகைகள் பல்லவர்க்கு முற்பட்டவை. சிறந்த சிவ பக்தனான இராசசிம்மன், தான் அமைத்த கைலாசநாதர் கோயிலில் சிவபெருமான் ஆடிய பலவகை நடனங்களை சிற்பவடிவில் அமைத்துள்ளான் (37).

சித்தன்னவாசல் ஓவியங்கள் பல்லவர் காலத்ததாகவும் சமண மதம் சார்ந்ததாகவும் கருதப்படுகிறது. ஆனால் அது ஆசிவக மதத்தைச் சார்ந்தது எனவும் பல்லவர் காலத்துக்கு முந்தைய சங்ககாலத்தைச்சார்ந்தது எனவும் முனைவர் க. நெடுஞ்செழியன் கருதுகிறார் (38). இங்கு நான்கு வகையான ஓவியங்கள் காணப்படுகின்றன. அவை 1. உருவச்சிலைகள் 2. நடன மாதர் ஓவியங்கள், 3. அரசன் அரசி ஓவியங்கள் 4. கூரையிலும் தூண்களிலும் உள்ள ஓவியங்கள் ஆகியன. இங்குள்ள இரண்டு மாடங்களிலும், உள் அறையின் நடுவிலும் உருவச்சிலைகள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன. நடனமாதர் ஓவியங்கள், மேலாடைகள், கூந்தல் ஒப்பனைகள், அணிகலன்கள், நடனக்கலை நுட்பங்களும் கொண்டனவாக உள்ளன. அரசன் அரசி ஓவியங்களில் அரசன் கழுத்தில் மணிமாலையும், காதுகளில் குண்டலங்களும், தலையில் மணிமகுடமும் காணப்படுகிறது. பெருந்தன்மையும் பெருந்தோற்றமும் கொண்ட முகமாக உள்ளது. கூரையில் இருப்பது தாமரை இலைகளும் தாமரை மலர்களும் கொண்ட தாமரைக் குளம். அதில் மீன்கள், அன்னங்கள், யானைகள், எருமைகள் காணப்படுகின்றன. கையில் தாமரை மலர்களைத் தாங்கிய இருவரும், மலர் பறிக்கும் ஒருவரும் காணப்படுகின்றனர். இந்த ஓவியம் மண்டபக் கூரை முழுவதையும் அணி செய்வதாகவும், அழகும் சிறப்பும் கொண்டதாகவும் அமைந்துள்ளது. உள்ளரையின் மேற்கூரையிலும் சுவசுதிகா, சூலம், சதுரம், தாமரை மலர் ஆகியன கொண்டு போடப்பட்ட கோலம் உள்ளது. கற்பாறைகள் மீது உள்ள இந்த ஓவியங்கள் நெடுங்காலம் அழியாது இருக்குமாறு தீட்டப்பட்டுள்ளன.

சிற்பங்களில் மாமல்லபுரம்தான் சிறந்த பல்லவர் சிற்பக்கூடம். அங்குள்ள அருச்சுனன் தவநிலை காட்டும் சிற்பமும், எருமைத்தலை அரசனும், காளியும் போரிடுவதைக் காட்டும் சிற்பமும் சிறந்தன எனலாம். கைலாசநாதர் கோயிலில் உள்ள சிவனின் பலவகை நடனங்களைக் காட்டும் சிற்பமும் குறிப்பிடத்தக்க ஒன்று. இவை போக வைகுந்தர்பெருமாள் கோவிலிலும், கைலாசநாதர் கோவிலிலும் உள்ள பிற சிற்பங்களும் சிறப்புமிக்கவை (39).

பண்டைய கோவில்களும் பல்லவர் கோவில்களும்:

பண்டைய கோவில்கள் செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் ஆகியவற்றால் கட்டப்பட்டவை. ஆகையால் இக்கோவில்கள் அழியத்தக்கவை. தரையும் சுவரும் செங்கற்களால் ஆனவை. மேற்கூரை மரத்தால் அமைக்கப்பட்டது. இணைப்புக்காக ஆணிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இத்தகைய கோவில்கள் இன்றும் கேரளாவில் உள்ளன. இத்தகைய கோவில்களையே மகேந்திர பல்லவன் கற்களில் செதுக்கி அமைத்தான். தொல்காப்பியர் காலத்திலேயே வீரர் வணக்கத்துக்குரிய நடுகல் கோவில்களும் முருகன், திருமாள் ஆகியவர்களுக்கான கோவில்களும் இருந்தன. தொகை நூல்களில் சொல்லப்படும் இன்னபிற சிவபெருமான், பலராமன் போன்றவர்களுக்கும் கோவில்கள் இருந்தன. முருகனுக்கு வேலும், சிவனுக்கு லிங்கமும் கொண்ட கோவில்கள் அன்று இருந்தன. சிலப்பதிகாரம் சிவன், முருகன், பலராமன், திருமாள் ஆகியவர்களுக்குக் கோவில்கள் இருந்தன எனக் கூறுகிறது. பண்டைய கோவில்களும் அரசர் மாளிகைகளும் சிற்ப வல்லுநரால் நாள் குறித்து நாழிகை பார்த்து, நேரறி கயிறிட்டுத் திசைகளையும், அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் நோக்கி வடிவமைக்கப்பட்டன என நெடுநல்வாடையும் (வரி: 75-78), சிலப்பதிகாரமும் (நடுகற்காதை, வரி: 222-225) தெரிவிக்கின்றன.

பண்டைய கோவில்கள் சுற்று மதிலை உடையன; உயர்ந்த வாயில்களை உடையன. வாயில்கள் மீது உயர்ந்த மண்ணீடுகள் எனப்படும் கோபுரங்கள் இருந்தன. அவ்வாயில்களில் துருப்பிடிக்காத செந்நிறம் பூசப்பட்ட இரும்புக் கதவங்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றை மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை போன்ற நூல்கள் தெரிவிக்கின்றன. சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவருக்கு இறைவன் நடனக் கோலத்தைக் காட்டி அருள் செய்தான் என்பது புராணச்செய்தி. அவரின் காலம் கி.மு. 150. ஆகவே சிதம்பரம் கோவில் கி.மு. 150க்கு மிக முந்தையது எனலாம். கி.பி. 200-250 காலகட்டத்தில் கோச்செங்கட் சோழன் 70 கோவில்களைக் கட்டினான் என திருமங்கை ஆழ்வார் கூறுகிறார். இவன் கட்டியவை மாடக்கோவில்கள். பண்டைய கோவில்கள் பெருங்கோவில், இளங்கோவில், மணிக்கோவில், கரக்கோவில், தூங்காணை மடம் என பலவகைப்படும். அப்பர் காலத்தில் 78 பெருங்கோவில்கள் இருந்தன என அவர் கூறியுள்ளார். சிறிய கோவில்கள்தான் இளங்கோவில்கள். தேவார காலத்தில் சில இளங்கோவில்கள் இருந்தன. தேவார காலத்தில் விமானம் கொண்ட கோவில்கள் இருந்தன. விமான அமைப்புடைய தேர்போன்ற கோவில்களே பண்டைய கோவில்கள். இத்தேர்க் கோவில்கள் முன்பு மரக் கோவில்களாக இருந்தன. இந்த மரக்கோவில்கள் பின்னர் செங்கற்கோவில்களாக ஆகின. அப்பர், சம்பந்தர் பாடிய பாடல்களில் 200க்கு மேற்பட்ட கோவில்கள் பாடப்பட்டுள்ளன (40).

சென்னை அருகே சங்ககால முருகனின் செங்கற்கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் கடவுள் உருவம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் முருகனின் வேல் இருக்கிறது. ஆகமம், குமரி நிலப்பரப்பில் சேயோன், மாயோன் ஆகியவர்களுக்குக் கோவில்கள் இருந்தன எனக் கூறுகிறது. ஐந்து பூதங்களுக்கும் மிகப்பண்டைய காலத்திலேயே கோவில்கள் இருந்தன. ‘தீ’ க்கு திருவண்ணாமலையிலும், வெளி எனும் விசும்புக்கு சிதம்பரத்திலும் கோவில்கள் இருந்தன. ஆகவே பல்லவர் காலத்துக்கு முன்பே சங்ககாலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் (கி.பி. 250வரை) சிவனிய மாலிய கோவில்களும் வேறுபல கோவில்களும் இருந்துள்ளன.

முற்கால, இடைக்காலப் பல்லவர் காலத்தில் கி.பி. 6ஆம் நூற்றாண்டுவரை பல புதிய கோவில்கள் கட்டப்பட்டன. அவை அனைத்தும் அழியும் பொருட்களால் ஆனவை. மகேந்திரன்தான் முதல் முதலாகக் கற்கோவிலைக் கட்டினான். ஆனால் பண்டைய கோவில் வடிவத்தில்தான் அவனது கற்கோவில்கள் இருந்தன. மகேந்திரன் அமைத்த குகைக்கோவில்கள் சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலம் என்னும் சபையையும், தில்லை கோவிந்தராசர் உள்ள இடத்தையும் அமைப்பில் ஒத்துள்ளன. அவனது மகன் நரசிம்மன் அமைத்த ஒற்றைக் கற்கோவில்கள் பழந்தமிழ்நாட்டில் இருந்த தேர்வடிவில் இருந்த கோவில்களைப் பார்த்து அமைத்தவை. இராசசிம்மன் கட்டிய கரையோரக் கோவிலும் தேர்போன்ற கோவில் அமைப்பை உடையதுதான். அதன் வளர்ச்சிதான் கைலாசநாதர் கோவில் விமானம். அதன் வளர்ச்சியே தஞ்சை பெரிய கோவில் விமானம். தமது காலத்தில் இருந்த பாடல்பெற்ற கோவில்களில் காணப்பட்ட ஓவியங்களையே பல்லவர்கள் சிற்பங்களாக வடித்தனர்.

முன்னோர் வணக்கத்திற்காக அமைக்கப்பட்ட கோவில்களும், பண்டைய சிவனிய மாலிய கோவில்களும் பிற்காலத்தில் முழுமுதற் கடவுளர்களின் கோவில்களாக ஆகின. மிகப்பழைய கோவில்களில் நீள் சதுர அறைதான் உண்டு. மேலிடம் தளமாக இருந்தது. அறைக்கு முன்புறம் ஒரு கூடம் உண்டு. தோதவரிடம் இருக்கும் கோபுரம் போன்ற கோவில்களும் பழைய கோவில்கள்தான். இந்த இருவகைப் பழைய கோவில்களும் பிற்காலத்தில் ஒன்றுபடுத்தப்பட்டன. இவற்றின் வளர்ச்சியே இன்றுள்ள கோவில்கள். இந்தப்பண்டைய கோவில்களைப் பார்த்தே பௌத்தரும், சமணரும் தம் கோவில்களை அமைத்தனர். அவற்றைப் பார்த்தே பல்லவர்கள் மாமல்லபுரம் போன்ற இடங்களில் கற்கோவில்களை அமைத்தனர். பண்டைய கோவில்களில் இருந்த மண்பதுமைகளையும், விமானங்களையும், தூபிகளையும் பிறவற்றையும் பார்த்தே கற்கோவில்களில் பதுமைகளும், விமானங்களும், தூபிகளும் பிறவும் அமைக்கப்பட்டன. தென்னாட்டுக்கட்டடக்கலை தமிழ்நாட்டுக்கே உரியது. இன்றுள்ள வானளாவிய கோபுரங்கள், விமானங்கள், அதில் காணப்படும் வேலைப்பாடுகள் ஆகிய அனைத்தும் பழந்தமிழ்நாட்டுக் கட்டடக்கலை, கோவில் கட்டுமானங்கள் போன்றவைகளில் இருந்து வளர்ச்சி அடைந்தவைதான் (41).

பல்லவர்கள் தமிழர்கள் அல்ல:

தொடக்கத்தில் பிராகிருத மொழிதான் பல்லவர்களின் ஆட்சி மொழியாக இருந்தது. அதன்பின் சமற்கிருத மொழியை ஆட்சிமொழியாக ஏற்றுக் கொண்டார்கள். முற்கால, இடைக்காலப் பல்லவர்கள் இருவருமே பிராகிருத, சமற்கிருத மொழிகளைத்தான் தங்கள் ஆட்சி மொழிகளாகக் கொண்டிருந்தனர். பிற்காலப் பல்லவர்கள் கி.பி. 7ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் சமற்கிருத மொழியோடு தமிழையும் தங்கள் தொடர்பு மொழியாகக் கொண்டிருந்தனர். அப்பொழுதும் அவர்களது ஆட்சி மொழியாக சமற்கிருத மொழிதான் இருந்தது. தமிழ் ஆட்சி மொழியாக இருக்கவில்லை. அது ஒரு தொடர்புமொழியாக மட்டுமே இருந்தது. பல்லவர் ஆட்சியில் மிக நீண்ட காலத்துக்கு தமிழ் ஒரு கீழ்மக்களின் மொழியாகவே இருந்து வந்தது. அதே சமயம் சமற்கிருதம் ஒரு செல்வாக்கு மிக்க மொழியாக, ஆதிக்கமிக்க மொழியாக இருந்து வந்தது.

கி.பி. 250வரை தமிழ்தான் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக, வழிபாட்டு மொழியாக, வணிக மொழியாக, கல்விமொழியாக, மக்கள் மொழியாக என அனைத்துமாகவும் இருந்து வந்தது. கி.பி. 250 வாக்கில் ஆட்சிக்கு வந்த பல்லவர்கள் தமிழர்களாக இருந்திருந்தால் அவர்கள் தமிழைத்தான் தொடர்ந்து அனைத்துக்குமான மொழியாக வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் தமிழர்கள் இல்லை என்பதால்தான் பிற மொழிகளை ஆட்சிமொழியாக வைத்திருந்தார்கள். சாதவாகனர் ஆட்சியில் கூட பிராகிருத மொழியோடு தமிழ் மொழியும் ஒரு ஆட்சி மொழியாக இருந்து வந்தது. அதனால்தான் சாதவாகனர்கள் தங்கள் நாணயங்களில் தமிழ் பிராகிருதம் ஆகிய இரு மொழிகளையும் பயன்படுத்தினார்கள் (42). இருந்த போதிலும் பல்லவர்கள் பிராகிருதத்தையும், சமற்கிருதத்தையும்தான் தங்கள் ஆட்சிமொழிகளாகக் கொண்டிருந்தனர். தமிழை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. ஆகவே அவர்கள் கண்டிப்பாகத் தமிழர்களாக இருக்க முடியாது.

களப்பிரர்கால பேரழிவுக்குப்பின் தாங்கள் தமிழர்கள் என்ற ஒரு அடையாளத்தை தமிழ்ப் பொதுமக்கள் இழந்த பின்னரும்கூட, தமிழ்நாட்டில் கி.பி. 550க்குப்பின்ஆட்சிக்கு வந்த எல்லாத் தமிழ் அரசர்களும் தமிழைத்தான் தங்கள் ஆட்சி மொழியாகக் கொண்டிருந்தனர். இன்று ஆங்கிலம் இருப்பதைப்போல அன்று சமற்கிருதம் உயர்கல்வி மொழியாக மாறி இருந்ததாலும், வேறுசில சமயக் காரணங்களுக்காகவும் மட்டுமே சமற்கிருதத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர். அன்றும் தமிழ் மன்னர்கள் கோவில்களின் வழிபாட்டு மொழியாகத் தமிழைத்தான் வைத்திருந்தனர். பல்லவ மன்னர்கள் தான் முதல் முதலாக தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்குக் கோவிலில் புரோகிதத்தொழில் செய்யவும், தமிழ் மக்களிடம் குருக்கள் வேலை செய்யவும் அனுமத்தித்தார்கள் (43). அதன் மூலம் தமிழ்நாட்டுக் கோவில்களில் இருந்த தமிழ்மொழியை நீக்கிவிட்டு சமற்கிருத மொழியை வழிபாட்டு மொழியாகக் கொண்டுவந்தவர்களும் பல்லவர்கள் தான். ஆகவே பல்லவர்கள் தமிழர்களாக இருக்க முடியாது. .

பல்லவர்கள் தங்களைத் துரோணர் வழிவந்த பரத்வாச கோத்திரத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் எனத் தாங்கள் வெளியிட்ட பட்டயங்களில் அறிவித்துக் கொண்டனர் (44). மேலும் தொடக்க காலத்திலேயே அவர்கள் அக்நிசுடோமம், வாஜ்பேயம், அசுவமேதம் போன்ற பெருவேள்விகளை, யாகங்களை செய்தவர்களாக இருந்துள்ளனர். மேலும் முதல்முதலாக பார்ப்பனர்களுக்கு தமிழ்நாட்டில் நிலங்களை தானமாக, அதாவது பிரமதேயங்களாக வழங்கியவர்களும் அவர்கள்தான். கி.பி. 250 வரை தமிழ் அரசர்கள் யாரும் பார்ப்பனர்களுக்கு நிலங்களை தானமாகவோ பிரமதேயங்களாகவோ வழங்கியதில்லை. தமிழ் அரசர்கள் யாருக்கும் கோத்திரம் என்பது இல்லை. அதனை அவர்கள் அறியாதவர்கள். எந்தத் தமிழ் அரசனும் தாங்கள் இந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என அறிவித்துக்கொண்டதாக வரலாறு இல்லை. ஆகவே கி.பி. 3ஆம் நூற்றாண்டிலேயே பரத்வாச கோத்திரத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் என அறிவித்துக்கொண்ட பல்லவர்கள் கண்டிப்பாகத் தமிழர்கள் அல்ல.

பல்லவர்காலத்தில் வடமொழி பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. பல்லவர்கள் பாரவி, தண்டி போன்ற வடமொழிப்புலவர்களை தொடக்கம் முதல் ஆதரித்து வந்தனர். அவர்கள் அவையில் தொடர்ந்து வடமொழிப்புலவர்கள் இருந்து வந்தனர். ஆனால் பல்லவர்கள் தமிழ்ப்புலவர்களை ஆதரிக்கவில்லை. அவர்கள் அவையில் தமிழ்ப் புலவர்களும் இருக்கவில்லை. அவர்கள் காலத்தில் தமிழ் மொழி பெரிய அளவில் வளர்ச்சி அடையவும் இல்லை. பக்தி இலக்கியம் பொது மக்களால் வளர்ச்சி அடைந்தது அதற்குக்காரணம் பல்லவ அரசர்கள் அல்ல. பல்லவ அரசர்களில் இறுதிக்கால அரசனான மூன்றாம் நந்திவர்மன் மட்டுமே தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் ஆதரித்தான். அவன் தமிழில் புலமை மிக்கவனாகவும் இருந்தான். ஆனால் தொடக்ககாலம் முதல் பெரும்பாலான பல்லவ அரசர்கள் தமிழைக் கண்டு கொள்ளவுமில்லை, அதனை ஆதரிக்கவும் இல்லை. தமிழ்ப் புலவர்களையும் ஆதரிக்கவில்லை ஆகவே பல்லவர்கள் தமிழர்கள் அல்ல.

பல்லவ அரசர்கள் அனைவரும் தங்களை பார்ப்பனர்களாகக் கருதியதால் சமற்கிருத மொழியைத் தங்கள் தாய்மொழிபோல் கற்று, அதில் புலமை மிக்கவர்களாக இருந்தனர். ஒருசிலர் அதில் நூல்களையும் எழுதினர். அதே சமயம் பெரும்பாலான பல்லவ மன்னர்கள் தமிழை அறிந்திருக்கவில்லை. அதிலும் தொடக்ககால பல்லவ மன்னர்களுக்கு தமிழ் தெரிந்திருக்கவில்லை. பல்லவர்கள் ஆட்சியின் இறுதிக் காலத்தில் இருந்த ஒரு சில பல்லவ மன்னர்கள் மட்டுமே தமிழை அறிந்தவர்களாக இருந்தனர். தமிழ்மொழியைக்கூட அறிந்திராத பல்லவர்கள் எப்படித் தமிழர்களாக இருந்திருக்க முடியும். ஆகவே பல்லவர்கள் தமிழர்கள் அல்ல.

தொடக்ககாலப் பல்லவர்கள் காலத்தில் அவர்களின் தலைநகராக இருந்த காஞ்சி நகரில் இருந்துதான் தமிழில் இருந்த தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் அனைத்தும் வட மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டன. தமிழின் மூல நூல்கள் அனைத்தும் கவனிப்பாரின்றி, பாதுகாக்கப்படாமல் அழிந்து போயின. கலை இலக்கிய நூல்கள் சில இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டு ஆகமங்களில் வடமொழி கிரந்த எழுத்தில் சேமித்து வைக்கப்பட்டன. அதன் தமிழ் மூல நூல்களும் அழிந்து போயின. சரக சம்கிதை, பரதநாட்டிய சாத்திரம் போன்ற சமற்கிருத நூல்கள் இக்காலத்தில் தான் தமிழில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டன. அதுபோன்றே ஆரியபட்டரின் ஆரிய பட்டியம் போன்ற அறிவியல் தமிழ்வழி நூல்களும் தமிழின் மூலநூல்களில் இருந்து உருவாகின. சமற்கிருத மொழி தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப மொழியாக எழுச்சி பெற்றதற்கும், தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப மொழியாக 1000 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவந்த தமிழ்மொழி தனது உயர் நிலையிலிருந்து கீழ்நிலைக்கு வீழ்ச்சியுற்றதற்கும் இவை காரணங்களாக ஆயின (45). இதற்கு அடித்தளமிட்டவர்கள் பல்லவர்களே ஆவர். களப்பிரர்களும் தமிழின் வீழ்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே கி.பி. 250 முதலே தமிழ்மொழியின் வீழ்ச்சிக்கும் சமற்கிருத மொழியின் உயர்வுக்கும் காரணமாக இருந்த பல்லவர்கள், களப்பிரர்கள் ஆகியோர் தமிழர்களாக இருக்க முடியாது.

வைதீக பார்ப்பனியமும் பல்லவர்களும்:

கி.மு. 187இல் மௌரிய ஆட்சியை ஒழித்துவிட்டு ஆட்சிக்கு வந்த பார்ப்பனனான புசுயமித்திரன் காலத்திலும் அதன்பின்னரும்தான் வட இந்தியாவில் வைதீக பார்ப்பனியம் உருவாவதற்கான அடித்தளம் இடப்பட்டது. இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் வைதீகமும், சாதியமும் உருவாக்கப்பட்டு கி.பி. முதல் நூற்றாண்டு வாக்கில் அவை வட இந்தியாவில் நிலைநிறுத்தப்பட்டன. அன்று மகத ஆட்சியை இழந்த நிலையிலும் பார்ப்பனர்கள் நிலபுலங்களும், பெருஞ்செல்வமும், பெருஞ்செல்வாக்கும் கொண்ட ஆளும் வர்க்கமாக இருந்தார்கள். பார்ப்பனர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள், மன்னனுக்கும் மேம்பட்டவர்கள் போன்ற மனு சுமிருதியின் கருத்துகள் பல நிலைநிறுத்தப்பட்டிருந்தன. கலிகாலத்தில் சத்திரியர்கள் யாரும் இல்லை எனவும் பார்ப்பனர்கள் தங்கள் யாகங்கள், சடங்குகள் மூலம் ஒரு சூத்திரனைக்கூட சத்திரியனாக, ஏன் பார்ப்பனனாகக் கூட மாற்ற முடியும் எனவும் பார்ப்பனர்களின் தயவின்றி யாரும் அரசனாக இருக்க முடியாது எனவும் போன்ற கருத்துகள் பல பரப்பப்பட்டிருந்தன. மீமாம்ச சூத்திரம் போன்ற நூல்களின் மூலம் வேதமும், வேதச்சடங்குகளும், யாகங்களும், சமற்கிருத மொழியும் கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதமிக்கவையாக மாற்றப்பட்டிருந்தன.

வட இந்தியாவில் அன்று பாரம்பரியமான, நிலையான அரசு எதுவும் இருக்கவில்லை. அந்நிய அரசுகளின் படையெடுப்பாலும், இனக்குழுக்களின் தாக்குதல்களாலும் வீழ்ச்சியுற்ற வட இந்தியா அந்நியர்களாலும், இனக்குழு அரசுகளாலும் ஆளப்பட்டு வந்தது. ‘கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையிலுமான இந்திய வரலாறு என்பது தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்ட இனக்குழுக்கள், மன்னர்கள், வீரமிக்க ஆக்கிரமிப்பாளர்கள் ஆகியோரைப் பற்றிய ஒரு குழப்பமான சித்திரத்தைத்தான் வழங்குகிறது’ எனக்கூறுகிறார் டி. என். ஜா எனும் வரலாற்றாசிரியர் (46). இந்த குழப்ப நிலையை அதுவரை ஆளும் வர்க்கமாக இருந்த பார்ப்பனக் குழுக்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டன. அதனால்தான் இந்த குழப்ப நிலைக்குப்பின் வந்த குப்தர் ஆட்சியும் முழுமையான வைதீக பார்ப்பனிய ஆட்சியாக இருந்தது. கி.மு. முதல் நூற்றாண்டுக்குப்பின் வந்த அந்நிய ஆட்சியாளர்களும், இனக்குழு அரசுகளும் இந்தியாவை ஆள்வதற்கும், தங்களின் மதிப்பு நிலையை உயர்த்துவதற்கும், பொதுச்சமூகத்தின் சட்ட ஏற்பிசைவிற்கும் பார்ப்பனர்களின் ஆதரவும் அவர்களின் வேதவழிச்சடங்குகளும் இன்னபிறவும் அவசியம் என்ற சூழ்நிலையை பார்ப்பனக் குழுக்கள் உருவாக்கி அதில் அவை வெற்றியும் பெற்றன. அதன் காரணமாகத்தான் அன்று அரசாள முயன்ற ஒவ்வொருவரும் தங்களை சத்திரியர்கள் அல்லது பார்ப்பனர்கள் எனக் கூறிக் கொள்ளவும் பார்ப்பனர்களின் தயவை நாடவும் வேண்டிய தேவை தோன்றியது. கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முன்வரை இந்த நிலை இருக்கவில்லை.

அதனால்தான் அந்நியர்களான மேற்கு சத்ரப் என்ற சாகர்களின் அரசன் உருத்ரதாமன் என்பவன் கி.பி. 150 வாக்கில் சமற்கிருதத்தில் முதல் கல்வெட்டை வெட்டி தனது வைதீக பார்ப்பனிய ஆதரவைத் தெரிவித்துக் கொண்டான் (47). இதன் காரணமாக இந்த காலகட்டத்தில் உருவான இந்தியர்களின் அனைத்து அரசுகளும் வட இந்தியா முதல் தென்னிந்தியா வரை வைதீக பார்ப்பனிய ஆதரவு நிலையை எடுத்தன. அதற்குக்காரணம் அவை அனைத்தும் பாரம்பரிய அரசுகளாக இருக்கவில்லை என்பதோடு கல்வியறிவும் சுய உணர்வும் இல்லாத சந்தர்ப்பவாத அரசுகளாக இருந்ததும் காரணமாகும். தக்காணத்தின் சாதவாகனர்களும் வைதீக பார்ப்பனிய ஆதரவு நிலையை எடுத்திருந்தனர். சாதவாகனர் ஆட்சி கி.பி. 220 வாக்கில் வீழ்ச்சியடைந்த பொழுது அதன் மாகாணத்தலைவர்களில் ஒருவராக இருந்து, ஆட்சிக்கு வந்த பல்லவர்கள் ஒருபடி மேலே சென்று தங்களை பரத்வாச கோத்திர பார்ப்பனர்களாக ஆக்கிக்கொண்டார்கள். இதே காலகட்டத்தில் கெடுவாய்ப்பாக கி.பி. 250 வாக்கில் தமிழ் நாட்டின் மூவேந்தர் பேரரசுகளும் களப்பிரர் படையெடுப்பால் வீழ்த்தப்பட்டு தமிழ்நாடு பேரழிவுக்கு உள்ளாகியிருந்தது.

1000 ஆண்டுகளுக்கு மேலாக பொருள் முதல்வாத மெய்யியலை அடித்தளமாகக் கொண்டிருந்த பழந்தமிழகம் வீழ்ந்து பேரழிவுக்குள்ளானது என்பது வைதீக பார்ப்பனியர்களுக்கு நல்வாய்ப்பாக மாறியது. தமிழ் நாட்டில் இருந்த அனைத்து நகரங்களும் தீக்கிரையாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்ட போது காஞ்சி நகரம் மட்டும் அந்த அழிவில் இருந்து தப்பியது. தமிழ் அறிவர்களும், அறிஞர்களும், புலவர்களும் தங்களிடம் இருந்த தமிழ் மூல நூல்களை எடுத்துக் கொண்டு காஞ்சியில் தஞ்சம் புகுந்தனர். இவற்றின் காரணமாக தமிழ் மொழியில் இருந்த தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்களையும் கலை இலக்கிய நூல்களையும் சமற்கிருதம் தன்வயப்படுத்திக் கொண்டு ஒரு தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப மொழியாக, ஒரு கலை இலக்கிய மொழியாக மாறுவதற்கு அது ஒரு மிகப்பெரும் வாய்ப்பை வழங்கியது. தங்களை பார்ப்பனர்களாக ஆக்கிக்கொண்ட பல்லவர்கள் இந்த நல்வாய்ப்பை வைதீக பார்ப்பனியத்தின் மொழியான சமற்கிருதத்திற்கு வழங்குவதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொண்டனர். தங்கள் தலைநகரான காஞ்சியில் சமற்கிருதத்திற்கான கடிகைகள் எனப்படும் கல்லூரிகளையும் ஆய்வுக்கூடங்களையும் உருவாக்கி சமற்கிருத மொழி வளர்ச்சி பெறுவதற்கான அனைத்து வசதிகளையும் அவர்கள் செய்து தந்தார்கள்.

அதே சமயம் தமிழ் மொழியின் பெரும்பாலான மூல நூல்கள் அனைத்தும் கவனிப்பாரற்று அழிய விடப்பட்டன. பொருள்முதல்வாத நூல்களும் தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. ஏனெனில் அவை அனைத்தும் எண்ணிய மெய்யியலை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டிருந்தன. ஒருசில இலக்கிய நூல்கள் மட்டும் தப்பிப்பிழைத்தன. அவைதான் சங்க இலக்கியங்களும் பதினென் கீழ்க்கணக்கு நூல்களும் தொல்காப்பியமும் சிலப்பதிகாரமும் போன்ற நூல்கள். நாளடைவில் இவற்றில் பலதிருத்தங்களும் இடைச்செருகல்களும் செய்யப்பட்டன. ஆனால் பொருள்முதல்வாத நூல்களை அழிப்பதில் வைதீக பார்ப்பனியம் மட்டுமல்ல சமண பௌத்த மதங்களும் தீவிரமாகச் செயல்பட்டன. இதற்கெல்லாம் ஆதரவு தந்தவர்கள் பல்லவர்களும் களப்பிரர்களும் ஆவர். அதுவரை பிராகிருத மொழிக்கான அசோகன்பிராமி எழுத்தைக் கொண்டு எழுதப்பட்ட சமற்கிருத மொழிக்கு தமிழ் மொழியின் தமிழி எழுத்திலிருந்து பல்லவர்கள் சமற்கிருத மொழிக்கான கிரந்த எழுத்தை உருவாக்கித் தந்தார்கள். அதுபோன்றே தமிழ் நாட்டுக்கோவில்களில் புரோகிதப்பணியைச் செய்வதற்கு முதல் முதலாக பார்ப்பனர்களையும் சமற்கிருதத்தையும் புகுத்தி தமிழ்ப் புரோகிதர்களையும் தமிழ் மொழியையும் பல்லவர்கள் வெளியேற்றினார்கள்.

மேலும் பல்லவர்களும், களப்பிரர்களும் நிலதானத்தை பிரமதேயங்களை பெருமளவில் பார்ப்பனர்களுக்கு வழங்கினார்கள். பல்லவர் ஆட்சியில் தமிழ் நாட்டு பார்ப்பனர்கள் பெரு நிலக்கிழார்களாகவும் பெரும் செல்வந்தர்களாகவும் அரசியல் செல்வாக்கும் அதிகாரமும் கொண்டவர்களாகவும் உருவானார்கள் (48). சங்ககாலத்தில் நான்காம் வகுப்புக்குரியவர்களாக இருந்த பார்ப்பனர்கள் எனப்பட்ட பார்ப்பனர்கள் பல்லவர் காலத்தில் முதல்வகுப்புக்கு உரியவர்களாக ஆனார்கள். பிற்காலப் பல்லவர்கள் காலத்தில் தென்தமிழ்நாட்டை ஆண்ட பாண்டியர் ஆட்சிப் பகுதியில் இருந்த கோவில்கள் அனைத்திலும் சித்தர்வழி வந்த தமிழ்ப் பண்டாரங்கள்தான் கோவில் குருக்களாக இருந்து தமிழில் ஆகம முறையில் வழிபாடு செய்து வந்தார்கள். இந்த நிலை சோழர் ஆட்சிக் காலத்தில் அவர்கள் பகுதியில் இருந்த கோவில்களிலும் இருந்தது. 16ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான கோவில்களில் தமிழ்நாட்டுக் குருக்களைக் கொண்ட தமிழ் வழிபாடுதான் நடைபெற்று வந்தது. 17ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில்தான் தமிழ்ச் சித்தர்வழி வந்த பண்டாரங்கள் அகற்றப்பட்டு தெலுங்கு பார்ப்பனர்கள் புகுத்தப்பட்டு வழிபாட்டில் தமிழ் மொழிக்குப் பதில் சமற்கிருதம் கொண்டுவரப்பட்டது (49). ஆகவே பல்லவர், தெலுங்குநாயக்கர் ஆட்சிக் காலங்களில்தான் தமிழ்மொழியும், தமிழ் குருக்களும் நீக்கப்பட்டு வடமொழியும் பார்ப்பனர்களும் கொண்டுவரப்பட்டனர்.

தமிழ்ப்பெயர்களை சமற்கிருத மொழியில் மொழிமாற்றி எழுதுவது என்பது பல்லவர் காலத்தில்தான் தொடங்கியது. சான்றாக சேயாறு, வெஃகா, திரையன் ஏரி முதலிய தமிழ்ப்பெயர்கள் தூரசரித், வேகவதி, தீரலய தடாகம் என மாற்றப்பட்டது. யாழைப்பழித்த மொழியாள் என்ற தமிழ்ப்பெயரை, வீணாதூசணி எனவும், மறைக்காடு என்பதை வேதாரண்யம் எனவும் மாற்றினார்கள் (50). தமிழ்ப்பேரரையன் என்ற பெயர் திரமிலாதிராஜன் என மொழிபெயர்க்கப்பட்டது (51). தனிப்பட்டவரின் பெயர்களும் இப்படி அதிக அளவில் மாற்றம் செய்யப்பட்டன. பல்லவர் ஆட்சியில் இதுபோன்று தமிழ்ப்பெயர்களை மிக அதிக அளவில் வடமொழிப் பெயர்களாக மாற்றுவது என்பது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. கோவில்களில் பாரதம் வாசிப்பது என்பதும் பல்லவர் காலத்தில்தான் தொடங்கியது. பாரதம் வாசிப்பவனுக்கு பல்லவர்கள் நிலங்களைத் தானமாக வழங்கினர் (52). பல்லவர் காலத்தில்தான் வேதச்சடங்குகளும் வேத வேள்விகளும் தமிழ்நாட்டுக் கோவில்களில் புகுத்தப்பட்டன.

தமிழ் ஆகமங்கள் வடமொழி ஆகமங்களாக மாற்றப்பட்டன. அதில் பல இடைச்செருகல்களும் திருத்தங்களும் செய்யப்பட்டன. பல புதிய சமயம் சார்ந்த ஆகமங்களும் உருவாக்கப்பட்டன. ‘ஆகம நெறிகள் என்பன தமிழர் நெறிகளே அன்றி வடபுலத்துக்கு உரியன அல்ல. வேத வழிபாடும், வேள்வி வழிபாடும் ஆகுதி வழிபாடுதான். ஆகமங்களின் அடிப்படையிலான சிற்ப சாத்திர உருவ வழிபாடுகள் என்பன .தமிழர் நெறி சார்ந்தவை’ என மு. அருணாசலம் கூறுகிறார் (53). ஆகவே பல்லவர் காலத்தில்தான் முதல் முறையாக தமிழ்நாட்டுக் கோவில்களில் சமற்கிருத மொழியிலான வேத வேள்விச் சடங்குகள் புகுத்தப்பட்டதோடு, தமிழ் ஆகம வழிபாடு வடமொழி ஆகம வழிபாடாக ஆகியது. பல்லவர்காலக் கோவில்களில் இசை நடனம் ஆகியவற்றை வளர்த்தெடுக்க அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர் போன்ற பெயர்களால் குறிக்கப்பட்ட சிலவகைப் பெண்கள் இருந்தனர். முத்தீசுவரர் கோவிலில் மட்டும் 42 அடிகள்மார் பெண்கள் இருந்துள்ளனர் (54). ஆகவே தமிழ்நாட்டில் முதல்முதலாகக் கோவில்களில் பெண்களைக்கொண்டு வந்தவர்களும் பல்லவர்களே எனலாம்.

வைதீக பார்ப்பனியமும் சமற்கிருதமயமாக்கலும்:

வைதீக பார்ப்பனியத்தின் பரப்புரை காரணமாக, ‘பல்லவர் காலத்திலிருந்து தமிழ் நாட்டு மன்னர்கள் தம் மதிப்பு நிலைக்கும் தனிச்சலுகைகளுக்கும் சட்ட ஏற்பிசைவிற்கும் பார்ப்பனர்களின் துணையை எதிர்பார்த்திருந்தனர் எனவும், தமிழகத்தில் ஆறாம் நூற்றாண்டிலிருந்துதான் மரபுவழிக்கட்டுமானங்களும், மன்னர்களின் அதிகாரத்திற்கு (பார்ப்பனர்கள்) ஏற்பிசைவளிப்பதும் நடைமுறையில் இருந்ததாகவும் வெங்கடரகோத்தம் கூறுகிறார் எனவும், பல்லவர் காலந்தொட்டு பழங்குடி மன்னர்களாகிய பல்லவர்கள் கடம்பர்கள் ஆகியோர் பார்ப்பனிய வேதவழி உரிமைகளைக் கோரினர் எனவும் ந.சுப்ரமண்யன் கூறுகிறார் (55). கி.பி. 6ஆம் நூற்றாண்டில் தென்னகத்தில் இருந்த பழங்குடி அரசுகளும், இனக்குழு அரசுகளும் தங்கள் அரசியல் அதிகாரத்திற்கு பார்ப்பனர் ஏற்பிசைவை எதிர்பார்த்தார்கள் என்பதோடு வட இந்திய அரசுகள் போன்றே தாங்கள் சத்திரியர்கள் என உரிமை கொண்டாடவும் செய்தார்கள் என்பதை இத்தரவு உறுதி செய்கிறது.

இதே காலகட்டத்தில் பார்ப்பன குழுக்கள் இந்தியா முழுவதும் சமற்கிருதமயமாக்கல் என்பதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்கள். அந்த நோக்கில் 1000 வருடங்களுக்கும் மேலான நகர நாகரிக வளர்ச்சியில் தமிழில் உருவாகி இருந்த அனைத்துக் கலை, இலக்கியம், அறிவியல், தத்துவம் போன்ற பல்வேறு துறை சார்ந்த அனைத்து நூல்களும் சமற்கிருதத்துக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டன. பாலி, பிராகிருத நூல்களும் இவ்வாறு சமற்கிருதத்துக்கு மாற்றப்பட்டன. அதன்பின் சமற்கிருதம்தான் அறிவியல் மொழி, அதுதான் புனிதமொழி போன்ற வைதீக பார்ப்பனியப் பரப்புரைகள் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டன. அதுவரை இருந்த தமிழ், பாலி, பிராகிருதம் போன்ற மொழிகள் புறக்கணிப்புக்கு ஆளாகின. சமற்கிருதமயமாக்களோடு, வேதகாலம் பொற்காலம் என்ற புனைவுக் கருத்துகளும் உருவாக்கப்பட்டுப் பரப்பப்பட்டன.

தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட அனைத்தும் வேதகாலத்தில் வட இந்தியாவில் உருவானதாகப் பார்ப்பனியம் பரப்புரை செய்தது. தமிழகம் தவிர இந்தியாவின் பெரும்பகுதி கி.பி. 6ஆம் 7ஆம் நூற்றாண்டுக்குள் பார்ப்பனியமாக்கப்பட்டது. பல்லவர்கள் தொடக்கத்தில் ஒரு சிறிய அரசாகவும், முதலில் பாலி, பிராகிருத மொழிகளை ஆதரித்தவர்களாகவும் இருந்தனர். பின்னர் வைதீக பார்ப்பனியத்தால் உள்வாங்கப்பட்ட அவர்கள் முழுமையான பார்ப்பனிய ஆதரவாளர்களாக ஆகி, வைதீக பார்ப்பனியர்களின் ஏற்பிசைவை எதிர்பார்ப்பவர்களாகவும் வேதவழி உரிமைகளைக் கோருபவர்களாகவும், ஆகி விடுகின்றனர். தமிழகத்தில் சங்கம் மருவிய காலம் வரை பிரமதேயங்கள், பார்ப்பனர்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் அவ்வாறு வழங்கப்பட்டது போன்ற தோற்றம் பொய்யாக உருவாக்கப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்துப் பதிகத்தில் செய்யப்பட்ட நிலதான இடைச்செருகல்களும், பொய்யான வேள்விக்குடி செப்பேடும் அது போன்ற தோற்றத்தை உருவாக்கவே பார்ப்பனர்களால் செய்யப்பட்டன. ஆனால் தமிழகத்தில் பல்லவர்களும், களப்பிரர்களும்தான் முதல்முறையாக பார்ப்பனர்களுக்கு பிரமதேயம் எனப்படும் நிலக்கொடைகளை வழங்கியவர்கள்.

பல்லவர் காலத்திய சாதியம்:

குப்தரின் சமற்கிருதப்பண்பாட்டின் பிரதிநிதிகளாகவே பல்லவர் இருந்தனர் என செயசுவால் குறிப்பிடுகிறார் என கே.இராசய்யன் கூறுகிறார். சிவனின் வாகனமான எருது அரசின் சின்னமாக இருந்தது. தலைநகர் காஞ்சியில் பார்ப்பனியத்தின் செல்வாக்கால் எண்ணற்ற ஆலயங்கள் உருவாகி இருந்தன (56). பல்லவர்கள் நீதி நூல்களைப் பின்பற்றி சாதி அடிப்படையிலான நீதிமுறையைப் பின்பற்றினர். இதனால் நலிவுற்ற மக்களை அடக்கி ஒடுக்கி வைக்கும் கருவியாக நீதிமன்றங்கள் இருந்தன. குடியானவர்களிடமிருந்து நிலங்களை அபகரித்து இறையிலியாக பிரம்மதேயம், தேவதானக் கிராமங்கள் என பார்ப்பனர்களுக்கு அளித்ததால் குடியானவர்கள் மேல் வரிச்சுமை விழுந்தது. பார்ப்பனியப் பண்பாட்டின் பிரதிநிதிகளாக இருந்த பல்லவர்கள், (தமிழ்) நிலத்திற்கு அந்நியராகவே இருந்தனர் எனக் கூறுகிறார். கே. இராசய்யன் (57). பார்ப்பனர் கூறியபடி பல்லவர்கள் வர்ணாசிரம தர்மத்தை நடைமுறைப்படுத்தினர். சாதி அடிப்படையிலான சமூக அமைப்பை அங்கீகரித்தனர். நான்கு சாதிப்பிரிவின்படி பார்ப்பனர்களுக்கு உயர் நிலையும் செல்வாக்கும் தரப்பட்டிருந்தது. சாதி அடிப்படையிலான சமூகப் பிரிவினைகள், தடுப்புகள் பற்றி காசக்குடி செப்பேடுகளும், கூரம் செப்பேடுகளும் பேசுகின்றன என இராசய்யன் கூறுகிறார் (58).

சமூக அமைப்பின் மிக உயரிய இடத்தில் பார்ப்பனர்கள் இருந்தனர். ஆளும் வர்க்கத்தினராக இருந்த பார்ப்பனர்கள் அமைச்சர்களாகவும் அரசின் உயர் அதிகாரிகளாகவும் பணியாற்றினர். நிலங்கள் அவர்களுக்கு இறையிலியாகவும், கொடைகளும் மானியங்களும் மிக அதிக அளவிலும் வழங்கப்பட்டன. உரிமைமிக்க சமூகத்தினர் என்ற வகையில் வாழ்வின் அனைத்து வசதிகளையும் அனுபவித்தனர். அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் மரியாதையும் உயர்வும் குவிந்தன (59). இவற்றின் காரணமாக பார்ப்பனர்கள் மதவியல் அரசியல் பிரபுத்துவத்தை உருவாக்கிக் கொண்டனர். ஆனால் விவசாயம், நெசவு, தச்சுத்தொழில், உலோகவார்ப்பு, மண்பானை வளைதல் போன்ற உழைப்புத் தொழில்களில் ஈடுபட்டவர்கள் தாழ்வாகப் பார்க்கப்பட்டனர் என்பதோடு அவர்கள் அரசுக்குக் கடுமையான வரிகளும் செலுத்தினர். எனினும் சூத்திரர்கள் என்போர் தமிழ் நாட்டில் தாழ்நிலையில் இருந்தாலும் பாரிய செல்வாக்குப் பெற்றிருந்தனர் (60).

தமிழகத்தில் வைதீக பார்ப்பனியத்தின் சாதிய அமைப்புக்கு முதலில் ஆதரவாக இருந்தவர்கள் பல்லவர்கள். ஆனால் சமண, பௌத்தச் செல்வாக்கும், பக்தி இயக்கச் சூழ்நிலையும், தமிழ் மரபுச் சிந்தனையும் சமூகத்தில் அதற்கு ஆதரவான சூழ்நிலையை வழங்கவில்லை. சான்றாக அப்பர் வேளாளர்; சம்பந்தர் பார்ப்பனர்; வேளாளர், பார்ப்பனர் ஆகிய இருவருக்குமிடையே பக்தி இயக்கத்தின் போதே வகுப்பு வேறுபாடுகளும், மோதல்களும் இருந்தன. அப்பர் பல இடங்களில் அந்தணர்களை, பார்ப்பனர்களை, வேதம் ஓதுபவர்களை தாக்குகிறார். வேதம் ஓதி என்ன பயன்? சாத்திரம் எதற்கு? தண்டமும், பூணூலும் அணிவது எதற்கு? எனக் கேட்கிறார். இறுதியாக ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?’ எனக் கேலி செய்கிறார். அதன் மூலம் சாதி அமைப்பைக் கோருகிற கோத்திரமும், குலமும் வேண்டாம் எனக்கூறுகிறார். இவர் போன்று தொண்டரடிப் பொடியாழ்வார் சாதி அந்தணர்களாக இருந்தாலும் திருமாலின் தொண்டர்களைப் பழித்தால் அவர்கள் புலையர்களே எனச் சாடுகிறார். ஆகவே அன்று வைதீக பார்ப்பனியத்தின் சாதியச் சிந்தனைக்குப் பக்தி இயக்கங்கள் எதிராகக் குரல் கொடுத்தன. கடுமையாக எதிர்க்கவும் செய்தன (61). ஆனால் பல்லவர் காலத்தில் வடதமிழ்நாட்டுப் பகுதியில் பார்ப்பனர்கள் பல்லவ அரசால் அங்கீகாரமும் அரசியல் செல்வாக்கும் பெற்ற, செல்வமும் நிலபுலன்களும் உடைய ஒரு மேல்நிலை வகுப்பாக ஆகியிருந்தனர். இருந்த போதிலும் சமண, பௌத்தச் செல்வாக்கும், பக்தி இயக்கச் சூழ்நிலையும், தமிழ் மரபுச் சிந்தனையும் பார்ப்பனியத்தின் சாதியத்திணிப்பை ஏற்றுக்கொள்ள இடம்தரவில்லை.

பல்லவர் காலத்தில் வலங்கை இடங்கைச் சாதிகள்:

பல்லவர் காலத்தில் கி.பி. 7ஆம் 8ஆம் நூற்றாண்டுகளில் வேளாளர்கள் மிகக்கடுமையாக வைதீக பார்ப்பனியத்தையும் அதன் சாதியத்தையும் எதிர்த்து வந்தனர். வேளாளர்களின் ஆதரவு இன்றி சாதியத்தை நிலை நிறுத்த முடியாது என்பதை உணர்ந்த பார்ப்பனர்கள் வேளாளர்களுக்குத் தங்களுக்கு அடுத்த நிலையை வழங்கியதோடு தங்களுக்குரிய அனைத்துச் சலுகைகளையும் அவர்களுக்கும் வழங்கினர். அதன் மூலம் பார்ப்பனர்கள் அவர்களது ஆதரவைப்பெற்றனர். ஆனால் கம்மாளர்களும் அவர்களைப் பின்பற்றிய மற்றவர்களும் பார்ப்பனர்களை, அவர்களது சாதியத்தை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் பார்ப்பனியத்தை அதன் சாதியத்தை ஆதரிப்பவர், எதிர்ப்பவர் என்ற இரு பிரிவுகள் உருவாகின. அவைதான் வலங்கை-இடங்கைச் சாதிப்பிரிவுகள்.

இந்தப் பிரிவுகள் பல்லவர் காலத்தில் காஞ்சியில்தான் முதலில் தோன்றின. இப்பிரிவுகளை நாம் அவர்களின் தொழில் அடிப்படையில் வேளாண் பிரிவு, தொழில்பிரிவு என இரண்டாகப் பிரிக்கலாம். வேளாண்பிரிவு வலங்கைச் சாதிகளாகவும், தொழில்பிரிவு இடங்கைச் சாதிகளாகவும் உருவானது. காஞ்சிபுரம் கி.பி. 250 முதல், 500 வருடங்களுக்கு மேலாக பார்ப்பனியத்தின் கோட்டையாக அதன் அடித்தளமாக இருந்து வந்துள்ளது. அங்கு தொடக்கத்தில் சமண பௌத்த மதங்களும் வலிமையாக இருந்து வந்துள்ளன. ஆனால் ஏழாம் நூற்றாண்டு வாக்கில் அவை வலிமையிழந்தன. 8ஆம் நூற்றாண்டிலும் அதன் பின்னரும் வைதீக பார்ப்பனியம் வலிமை மிக்கதாக ஆகியது. வைதீக பார்ப்பனியம் பல்லவர்களின் இறுதிக்காலத்தில் வேளாளர்களின் ஆதரவை தன் பக்கம் ஈர்த்து சாதியத்தை பல்லவ அரசின் ஆதரவோடு தமிழ் சமூகத்தின் மீது திணிக்க முயற்சித்தது. அப்பொழுதுதான் கம்மாளர் தலைமையில் இருந்த தொழில் பிரிவு மக்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். வேளாளர்கள் வேளாண் பிரிவு மக்களை ஒன்றிணைத்து அரசுக்கும் பார்ப்பனர்களுக்கும் ஆதரவு நிலையை எடுத்துள்ளனர்.

நாளடைவில் இந்த இரண்டு பிரிவுகளுக்கும் இடையே ஏற்பட்ட சாதியத்திணிப்பு குறித்த வேறுபாடுகள்தான் வலங்கை இடங்கைச் சாதிகளாக ஆகின. ஆகவே இவ்வேறுபாடுகளும் அதன் விளைவாக ஏற்பட்ட வலங்கை – இடங்கைச் சாதிப் பிரிவுகளும் பல்லவர்காலத்தில் காஞ்சிபுரத்தில் தான் முதலில் தோன்றின. ஆனால் பல்லவர் காலத்தில் பக்தி இயக்கம் போன்ற பல காரணங்களால் பார்ப்பனியத்துக்கும் சாதியத்துக்கும் கடுமையான எதிர்ப்புகள் இருந்ததால், சாதியத்தைத் திணிப்பதை பார்ப்பனியம் கைவிட்டது. ஆதலால் வலங்கை – இடங்கைச் சாதிப் பிரிவுகள் இடையே இருந்த வேறுபாடுகள் பெரிய அளவில் வெளிவரவில்லை. ஆனால் வலங்கை – இடங்கைப் பிரிவுகள் கருத்தளவில் பல்லவர் காலத்தில்தான் முதலில் உருவாகின. நாளடைவில் அவை உருவான காரணத்தை அதன் அடிப்படையை அவை மறந்து போயின.

பல்லவர் காலம் என்பது ஒருவகையில் வைதீக பார்ப்பனர்களுக்கு குப்தர் காலம் போன்றே ஒரு பொற்காலமாக இருந்தது. ஆனால் சாதாரணப் பொதுமக்களின் வாழ்நிலை குப்தர் காலத்தைப்போன்றே கீழ்நிலையில் இருந்ததோடு, அடிக்கடி ஏற்பட்ட வறுமையும் பஞ்சமும் அவர்களுக்கு சகிக்க முடியாத துன்பத்தை வழங்கி வந்தது. பல்லவர்கள் தங்களது ஆட்சியில் வைதீக பார்ப்பனியத்தை நடைமுறைப்படுத்த முயன்றதும், பார்ப்பனர்களைப் பாதுகாத்து அவர்களுக்குப் பேரளவான சலுகைகளை வழங்கி வந்ததும்தான் பொதுமக்களின் நிலை மிகவும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணம். பல்லவர் வளர்த்த இயல், இசை, நடனம், சிற்பம், ஓவியம் போன்ற கலைகள் அனைத்தும் தமிழ் மரபிலிருந்தே எடுக்கப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் வைதீக பார்ப்பனியத்தையும், சமற்கிருதத்தையும் வளர்த்தெடுப்பதாகவும் தமிழ் மொழியையும் தமிழ் மரபையும் புறக்கணிப்பதுமாகவுமே இருந்து வந்தது.

பல்லவர்கள் வைதீக பார்ப்பனியத்தின் பிரதிநிதிகளாகச் செயல்பட்டு, 1000 வருடங்களுக்கு மேலாக உயர்நிலையில் இருந்துவந்த தமிழர் நாகரிகத்தையும் தமிழ் மொழியையும் இல்லாது செய்து, அவ்விடத்தில் வைதீக பார்ப்பனியத்தையும், சமற்கிருதத்தையும் பாதுகாத்து வளர்த்தெடுத்து வந்தனர். ஆனால் அவர்களின் முயற்சி முழுமையாக வெற்றிபெறவில்லை எனினும் வைதீக பார்ப்பனியமும், சமற்கிருத மொழியும், சாதியமும் இன்னபிற வடமொழிச் சிந்தனைகளும் தங்களுக்கான அடித்தளத்தையும் உயர்நிலையையும் தமிழ்நாட்டில் நிறுவிக் கொண்டன. ஆகவே பிற்காலச்சோழப்பேரரசு உருவாவதற்கு முன்பே அதாவது கி.பி. 850க்கு முன்பே சோழர்பகுதி முழுவதும் பார்ப்பனர்கள் பெருஞ்செல்வமும், நிலபுலன்களும் சமூகச்செல்வாக்கும் அரசியல் அதிகாரமும் கொண்ட மேல்வகுப்பாக இருந்ததோடு, வைதீக பார்ப்பனியமும், சமற்கிருதமும் ஒரு வலுவான நிலையில் இருந்தது. ஆதலால் பல்லவர் விட்டுச்சென்றவை வளமானதாகவும், பல்வேறானதாகவும் இருந்த போதிலும் அவை பார்ப்பனியம் சார்ந்தவையாகவும், சமூகத்தின் கீழ் மக்களைச் சுரண்டும் தன்மை கொண்டதாகவும் இருந்தது எனக் கூறுகிறார் பேரா. கே. இராசய்யன். (62)

பார்வை:

31, 32. மா. இராசமாணிக்கனார், பல்லவர் வரலாறு, பாரதி பதிப்பகம், சனவரி-2022, பக்: 286-289, 289-302.

33. பக்: 350-367.

34. பக்: 304-315.

35, 36. நா.வானமாமலை, தமிழர் பண்பாடும், தத்துவமும், அலைகள் வெளியீட்டகம், சூலை 2008, பக்: 96, 126 - 130.

37. மா. இராசமாணிக்கனார், பல்லவர் வரலாறு, பாரதி பதிப்பகம், சனவரி-2022, பக்: 317-326.

38. முனைவர். க. நெடுஞ்செழியன், ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியம், மனிதம் பதிப்பகம், 2002, பக்: 154-173.

39. மா. இராசமாணிக்கனார், பல்லவர் வரலாறு, பாரதி பதிப்பகம், சனவரி-2022, பக்: 328-333.

40, 41. பக்: 335-348.

42. இந்து ஆங்கில நாளிதழ், ஐராவதம் மகாதேவன், “An epigraphic perspective on the antiquity of Tamil”, நாள்: 24/6/2010.

43. மா. இராசமாணிக்கனார், பல்லவர் வரலாறு, பாரதி பதிப்பகம், சனவரி-2022, பக்: 293.

44. ச. கிருசுணமூர்த்தி, தமிழ்நாட்டுச் செப்பேடுகள் தொகுதி-1, மெய்யப்பன் பதிப்பகம், டிசம்பர்-2002, பக்: 184.

45. 15ஐப் பார்க்க.

46. பண்டைக்கால இந்தியா, டி. என். ஜா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர் 2011, பக்: 150.

47. இந்திய வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி, ‘பண்டைய இந்தியா’ தமிழில் ஆர்.எசு. நாராயணன், NCBH, செப்டம்பர் -2006, பக்.350.

48. ச. கிருசுணமூர்த்தி, தமிழ்நாட்டுச் செப்பேடுகள் தொகுதி-1, மெய்யப்பன் பதிப்பகம், டிசம்பர்-2002, பக்: 167.

49. ச. கிருசுணமூர்த்தி, தமிழ்நாட்டுச் செப்பேடுகள் தொகுதி-2, மெய்யப்பன் பதிப்பகம், டிசம்பர்-2002, பக்: 81.

50. ச. கிருசுணமூர்த்தி, தமிழ்நாட்டுச் செப்பேடுகள் தொகுதி-1, மெய்யப்பன் பதிப்பகம், டிசம்பர்-2002, பக்: 170, 171.

51. பக்: 210.

52. பக்: 173.

53. கணியன் பாலன், பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், NCBH, சனவரி-2023, புத்தகம் – 2, பக்: 436, 437.

54. மா. இராசமாணிக்கனார், பல்லவர் வரலாறு, பாரதி பதிப்பகம், சனவரி-2022, பக்: 323.

55. தமிழகத்தில் பார்ப்பனர்கள், ந. சுப்ரமண்யன், தமிழாக்கம் - மு.வி. சோமசுந்தரம், பெரியார் சிந்தனை உயராய்வு மையம், 2018, பக்:17.

56. தமிழ்நாட்டு வரலாறு, கே.இராசய்யன், தமிழில் சா.தேவதாசு, எதிர்வெளியீடு, 2015, பக்: 120

57. பக்: 121, 122.

58, 59. பக்: 123

60. பக்: 124.

61. தமிழகத்தில் வைதீக சமயம், தி.சு.நடராசன், NCBH, 2008, பக்: 195-199.

62. தமிழ்நாட்டு வரலாறு, கே.இராசய்யன், தமிழில் சா.தேவதாசு, எதிர்வெளியீடு, 2015, பக்: 128.

- கணியன் பாலன்