திரைமொழியை அரசியலில் தோய்த்தெழுதிய இணைதிரை முயற்சிகளின் (parallel cinema) முன்னோடி மிருணாள் சென்

வங்கத் திரையுலகின் மிக முக்கிய ஆளுமைகளாக விளங்குகிற சத்யஜித் ரே (1921 மே 2), ரித்விக் கடக் (1925 நவம்பர் 4) ஆகியோரின் சமகாலத்திரை ஆளுமையாய் விளங்கியவர் மிருணாள் சென் (1923 மே 14). திரைமேதைகளான சத்யஜித் ரே 71 வயதிலும், ரித்விக் கடக் 51 வயதிலும் 21 ஆம் நூற்றாண்டைக் காணாமலேயே காற்றுடன் கரைந்து போக, தொன்னூற்றி அஞ்சரை வயது வரையிலும் வாழ்ந்து, டிசம்பர் 30, 2018 இல் மறைந்திருக்கிறார் மிருணாள் சென்! இன்று பங்களாதேஷ் என்று அழைக்கப்படும் கிழக்கு வங்காளத்தில் பரித்பூரில் (Faridpur) பிறந்தவர் அவர்!

Actor minral sen 600தொடக்கத்தில் மார்க்ஸிய இலக்கியங்களின் வழி மார்க்ஸிய வாழ்க்கை நெறிக்கும் மார்க்ஸிய அரசியலுக்கும் மிக நெருக்கமாகத் தன்னை ஆளாக்கிக் கொண்டவர். கல்கத்தா பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு சிலகாலம் இடதுசாரி இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர். மனிதத்திற்கும் சமூகத்திற்குமான உறவை, அதற்குள் மறைந்திருக்கும் அரசியலைப் பல நிலைகளில் நேர் முகமாய்க் கேள்விக்குட்படுத்தியவர். கலை உபாசகர் களுக்கு அது கொஞ்சம் நெருடலாகக் கூட அன்றைக்கு இருந்தது. கல்கத்தாவின் அய்ம்பது தொடங்கிய என்பது களின் போராட்ட வாழ்க்கை அவருக்கு அதைத்தான் கற்றுக் கொடுத்திருந்தது.

எதைப்பற்றியும் கொஞ்சமும் சஞ்சலப்படாமல், தான் அறிந்த, தனக்கு நெருக்கமான வாழ்க்கை யதார்த்தத்தின் பின்னிருக்கிற அரசியலைத் தன் உள்ளளியாய் நிறைந்திருக்கிற மார்க்ஸியப் பெரு வெளியில் அதைத் திரையில் கொண்டுவந்து நிறுத்தி, மக்களை, அவரறிந்த யதார்த்த அரசியலைப் புரிந்து கொள்ள அழைத்தவர் மிருணாள் சென்.

இந்தியத் திரையுலகிற்கு அவர் அளித்திருக்கிற மிக முக்கிய மான கொடை, அவர் படங்களில் அவர் பேசியிருந்த அரசியல்தான்! அது ஒளிவுமறை வற்றிருந்தது. மண்டையில் ஓங்கி அறைந்து உறைப்ப தாயிருந்தது. திரைக்கலை யானது, யதார்த்த நிலைப் பட்ட அழுத்தமான அரசி யலைப் பேசியது. சமூக மாற்றங்களைத் திரைப்படம் எனும் ஊடகம் மூலம் அழுத்த மாகக் கூறமுடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மிருணாள் சென் ;ராத் போர்’ (Raat Bhore) எனும் படம் மூலம் 1955 இல் திரைத்துறையில் நெறியாளுநராய்த் தன் பயணத்தை மேற்கொண்டார்.

'பதேர் பாஞ்சாலி’ திரைப் படம் மூலம் திரையுலகம் சத்யஜித்ரேவைத் திரும்பிப் பார்க்க வைத்திருந்த நேரமும் அது! இவரை மிக முக்கிய இயக்குநராக அடையாளங் காட்டிய திரைப்படம் 1969 இல் வெளியான ‘புவன் ஷோம்’ (Bhuvan Shome) ஆகும். இது திதிசி எனப்படும் திரைப்பட நிதி உதவி நிறுவனத்தில் ஒன்றரை லட்ச ரூபாய் நிதி உதவி பெற்று தயாரிக்கப் பெற்றதாகும். ஒருநாள் கூட திரையரங்குகளில் ஓடாது எனும் நம்பிக்கையில் தயாரிக்கப் பெற்ற அந்தப் படத்தின் வெற்றி தான் இணைத் திரை முயற்சிகளில் மற்றவர்களை இறங்க வைக்கும் உத்வேகத்தைக் கொடுத்திருந்தது. இதுவே, இந்தியத் திரைப்பட உலகின் இணை திரை முயற்சிகளின் தொடக்கப் புள்ளி எனலாம்.

சத்யஜித் ரே, ரித்விக் கடக்கிற்குப் பிறகு யதார்த்தம், தீவிரமான காட்சிமொழி ஆகிய இரண்டுடன் கூர்மை யான அரசியலையும் பேசியவை இவரது படங்கள்! திரையுலகிற்கு இந்திய அரசு வழங்கி வரும் மிக முக்கிய, உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை 2005இல் பெற்றவர் மிருணாள் சென்! திரைத்துறையில் 18 தேசிய விருதுகளையும், 12 சர்வதேச விருதுகளையும் பெற்றவர். 1981 இல் பத்மபூஷன் விருது பெற்ற இவர், 2000 இல் சோவியத் நட்புறவு வரிசை விருதையும் பெற்றவர். வங்காளம், இந்தி மொழி போக, ஒரிய மொழியில் 1966 இல் ‘மாதிர மனு ஷா’ (Matira Manu sha) என்ற படத்தையும், 1977 இல் 'ஒக ஊரி கதா’ (Oka Oori Katha) என்ற தெலுங்குப் படத்தையும் வழங்கியவர். இவரின் மிக முக்கியமான திரைப்படங்கள்: ‘இண்டர் வியூ’ (Interview-1971), ‘கல்கத்தா1971’  (Calcutta 1971-1972),  ‘மிருகயா’ (Mrugaya-1976), 'கந்தார்’(Kandhar-1988), 'ஏக் தின் அசானக்’ (Ek din Achanak-1989),'அகலெர் சந்தனே’ (Akaler Sandane-1980), ‘ஏக் தின் பிராடிதின்’ (Ek din Pratidin-1979), ‘ஜெனிசிஸ்’ (Genesis-1986), 'அந்தாரீன்’ (Antareen-1993) என்பதாய் 28 முழு நீளப் படங்களும் நான்கு ஆவணப் படங்களும் நெரியாளுகை செய்திருக்கிறார். மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழா, பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா, கான்ஸ் திரைப்பட விழா என உலகின் சிறந்த திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட பெருமைக் குரியவர். விழாக்கள் அனைத்திலும் கலந்து கொண்டு விருதுகள் பல பெற்றவர்.

Pin It