"விடுதலை இயக்க வேர்களும் விழுதுகளும் 25
எந்த நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு பண்டிதர் அயோத்திதாசரவர்களால் ‘தமிழன்' தொடங்கப்பட்டதோ, அந்த லட்சியத்தை ‘தமிழன்' இதுபோதும் கைவிடாது பின்பற்றி வருவதுடன் அரசியலிலும் சமூக உரிமையிலும் தாழ்த்தப்பட்டோர், இப்போதைய நிலைமைகளுக்கேற்ப எவ்வெத் துறைகளில் கவனம் செலுத்த வேண்டுமோ, அவ்வத் துறைகளையும் ‘தமிழன்' இயன்ற வரை பின்பற்றித் தங் கடமையையாற்றி வந்திருக்கிறது.
விஞ்ஞான ஒளி பரந்துலவும் இவ்விருபதாம் நூற்றாண்டில் மனித சமூகம் தேசம், நிறம், ஜாதி, மதம் முதலிய வரம்புக்குள் கட்டுப்பட்டு விடாமல், எங்ஙனம் விசாலமான நோக்கத்தோடு உலகியலைப் பரந்து நோக்கி, அவ்விஞ்ஞான உலகத்தோடு ஒட்ட ஒழுகத்தன்னைத் தகுதிபடுத்திக் கொள்ள வேண்டுமோ, அவ்வியலை மக்கள் பின்பற்றிச் செல்லுமாறு எவ்வெவ் வழிகளைத் துணை பற்ற வேண்டுமென்பதைத் ‘தமிழன்' சிறிதும் கைசோரவிடவில்லை.
அதன் காரணமாக ஏற்பட்ட எதிர்ப்புகள் அளவு கடந்தனவாம். மைசூர் சமஸ்தான கவர்ன்மெண்டின் பத்திரிக்கை சட்டத்தினால் ‘தமிழன்' நிற்பாட்டப்பட்டும் மிகுந்த சிரத்தையோடு அதனை மீண்டும் வெளியாக்கி வந்தோம். இவ்வளவு இடையீடுகளையேற்றும் மிக்க சகிப்புத் தன்மையோடு பத்திரிக்கையை நடத்தி வந்ததின் காரணம், சமூக முன்னேற்றத்தின் மீது கொண்டிருந்த அளவு கடந்த ஆர்வத்தினாலன்றி வேறன்று.
தமிழனின் தன்னிலை விளக்கம்..."
கோலார் தங்கவயலில் புத்தரை முன்மொழிந்து, பவுத்தத்தை வழிமொழிந்து நடந்தவர்கள் கடவுள் மறுப்பு, அனைத்துமத எதிர்ப்பு, ஆண்டாண்டுகால மரபு பழக்க வழக்க எதிர்ப்பு, வேத புராண இதிகாச மறுப்பு, வேதியம் எடுத்துக் கொண்ட அதிகார மறுப்பு என ஒட்டுமொத்தத்தில் பார்ப்பனியச் சமூக அமைப்பின் ஒழுங்கியலை தடுப்போராகவும், வீண் குழப்பத்தை விளைவிப்போராகவும் சமூகத்திற்கு தீங்கானவர்களால் குற்றம் சாட்டப் பட்டார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சி கட்டவிழ்ந்தவுடன் அதைக் கைப்பற்றும் முனைப்புடன் புதிய வியூகமாகக் கட்டப்பட்ட, இந்தியத் தேசியம் எனும் வெளிப்பூச்சின் உள் அந்தரங்கமான இந்துத்துவ அரசியலை முன்னெடுத்த பார்ப்பனர்களின் - பணக்காரர்களின் இந்திய விடுதலைக்கு பவுத்தம் எதிராக நின்றது. சாதியக் கட்டை குலைக்க விரும்பாத பார்ப்பனியர்களின் நாட்டு விடுதலை முழக்கத்தில் - தலித் விடுதலை எனும் மானுட விடுதலை இல்லையென்றே அறிவித்தது.
கோலார் தங்க வயலுக்கு பவுத்த மார்க்க பரப்புநராக வந்த (1903 - 1907) எம். ராகவர் அதிகமான இன்னல்களை அனுபவித்தவராக பவுத்தப் பணியினை மேற்கொண்டார். கோலார் தங்கவயலின் மூலை முடுக்கெல்லாம் புத்தரை அறிமுகம் செய்து, அவரது லட்சியங்களைப் பதிய வைக்க, ராகவர் மிகக் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. இந்து விஷமிகள் அவரைப் பற்றி அவதூறினை கிளப்பிவிட்டார்கள். அவரது செயல் திட்டங்களில் குறுக்கீடு செய்தனர். ராகவர், மதங்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுபவராக பாவிக்கப்பட்டார். கோலார் தங்க வயலில் ராகவர் இருப்பது, இந்து மதத்திற்கும் கிறித்துவ மதத்திற்கும் தீங்கானது என்று தீர்மானிக்கப்பட்டது.
எனவே, மதவெறி மூர்க்கர்களால் முறைவைத்து தொடர்ந்து தாக்கப்பட்டார். ராகவரின் வீடு "தீ'க்கு தின்னக் கொடுக்கப்பட்டது. நெருக்கடிகளையும் துன்பங்களையும் எதிர்த்து, அவற்றை வசப்படுத்தும் மனமே பவுத்தமனம். மலினங்களின் ஆட்டங்களை அலட்சியப்படுத்தி பவுத்தம் எனும் மெய்மையை எந்தச் சூழலிலும் ஸ்பரிசிக்க வல்ல ஆற்றலான ராகவர், இடர்களைக் கடந்து பவுத்த நீட்டிப்பிற்கே தன்னை ஈந்தார்.
ராகவர் போன்ற தொடக்க கால பவுத்த முன்னோடிகளின் உண்மையான ஈடுபாடும், அழுத்தமான அர்ப்பணிப்பும் குறிதவறாத நோக்கத்தை நோக்கிய முன்னெடுப்பும் விரைவிலேயே கோலார் தங்கவயலில் பவுத்தம் காலூன்ற ஏதுவாகியது. பவுத்த மார்க்க காலவோட்டத்தில் 1907 ம் ண்டு ஒரு குறிப்பிடத்தக்க எல்லைக் கல்லை நட்டு வைத்தது.
அயோத்திதாசரால் சூன் 9 அன்று தொடங்கப்பட்ட "ஒரு பைசா தமிழன்' என்ற வார ஏடு, தன் தோற்றம் குறித்து "உயர் நிலையையும் இடைநிலையையும் கடைநிலையையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு, நீதி, சரியான பாதை மற்றும் நேர்மையை கற்பிப்பதற்காக சில தத்துவவாதிகளும், இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாரும், இலக்கியவாதிகளும், ஒன்றுகூடி ‘ஒரு பைசா தமிழனை' வெளிக்கொண்டு வந்தார்கள்'' என்று குறிப்பிட்டது.
‘ஒரு பைசா தமிழன்' உண்மையாகவே ஒரு பவுத்த வார இதழ்தான். சாக்கிய பவுத்த சங்கத்தின் அனைத்து புதிய கிளைகளையும் தொடர்புபடுத்தும் செய்திமடலாக அது செயல்பட்டது. புதியவர்களுக்கு தமிழ் பவுத்தத்தின் நெறிமுறைகள் கோட்பாடுகள் மற்றும் நடைறைகளைக் கற்பித்தது. பவுத்த உலகில் நடந்த புதிய முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களையும் அறிக்கைகளையும் தந்தது. பொதுவாக துணைக் கண்டத்தின் வரலாற்றையும் குறிப்பாக தமிழகத்தின் வரலாற்றையும் பவுத்த நிலைப் பாட்டில் இருந்து பெயர்த்துரைக்க முயன்றது. ஆனால், இவற்றை யெல்லாம் விடவும் கூடுதலானதாகவும் இருந்தது அது:
"தமிழர்களின் சமகால சமுதாய அரசியல் வாழ்வில் தலையிடும் தெளிவான நோக்கமுள்ள வானிலை அறிக்கைகள் - பண்டங்களின் விலைகள் - கண்டுபிடிப்புகள் - மக்களை பாதிக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் அரசின் கொள்கைகள் தொடர்பான செய்திகளை வெளியிடுகிற, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடைபெறும் நடப்பு சமுதாய, அரசியல் நிகழ்வுகளை முரணின்றி திறனாய்கிற வாழ்வின் எல்லாத் துறைகளிலும் விளிம்புநிலைக் குழுக்கள் அதிகாரம் பெறுவதற்கு ஓய்வின்றிப் பாடுபடுகிற, வெகுசனத் தலைமைக்குரிய ஏடாக விளங்கவே அது வல் கொண்டது. இவை எல்லாவற்றுக்குள்ளும் இவை எல்லாவற்றின் வழியாகவும் காலனிய ஆட்சியின் கீழ் ஏற்றம் பெற்றுவிட்ட பார்ப்பனியத்தின் எல்லா வடிவங்களுக்கும் எதிராக ஒரு மாற்று தேசிய அடி சொல்லாடலை நிறுவுவதை அது தன் உறுதியான நோக்கமாகக் கொண்டது'' (ஞான. அலாய்சியஸ்).
இதழின் தொடக்க காலங்களில் தொடர்ந்து எழுதி வந்தவர்கள் சி.எம்.சி. மூர்த்தி, சொப்பனேசுவரி அம்மாள், டி.சி. நாராயண பிள்ளை, ஏ.பி. பெரியசாமிப் புலவர் முதலியோர் ஆவர். ‘தமிழன்' தனக்கெனத் தனித்த ஒரு மார்க்க பண்பாட்டு கருத்தியலும், சமுதாய செயல்பாட்டுக்கான கொள்கைத் திட்டம் கொண்ட மய்யமாகவும் நிறுவனமாகவும் மாற்றப்பட்டது. எல்லா மதங்களிலும் குறுக்கீடு செய்து அவற்றை விடுவித்துக் கொண்டுதான் மனித வாழ்வியலுக்கான குறியீட்டு நெறியாகவும், ஒரு சமூக விடுதலை இயக்கமாகவும் தமிழ்ப் பரப்பில் பவுத்தம் இடம் பிடித்தது. இந்தப் புதிய கட்டுமானத்தோடு மிகுந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் மிக்க எம்.ஒய். முருகேசம், சி. குருசாமி, எம். ராகவர், ஏ.பி. பெரியசாமி ஆகியோர் மாரிக்குப்பம் கோலார் தங்கவயல் பவுத்த சங்கத்தின் மய்யக் குழுவாக இருந்த வேளையில், அதன் நற்பேறாக இணைந்தவரே அப்பாதுரையார்.
பவுத்தர்கள் மட்டுமே மானுட சாராம்சத்திற்கான கருத்திற்கும் காரியத்திற்கும் தகுதியானவர்கள் என்ற அப்பாதுரையாரின் முடிந்த முடிவால், கோலார் தங்கவயலிலும், வடாற்காட்டிலும், சென்னை மாநகரிலும் பவுத்தம் ஒரு ஜீவத்துடிப்பைப் பெற்றது; அவரது நல் வரவால் அது மிகவும் வலுப்பட்டது. 1911 இல் பிக்கு இந்தி வன்சலின் மூலம் சீலம் பெற்றுக் கொண்ட அப்பாதுரையார், அதிலிருந்து பவுத்த சங்கத்தின் மதிப்பிற்குரிய புதிய உத்வேக சேர்க்கையாக தம்மை அவர் மெய்ப்பித்ததோடு, பவுத்த உலகத்தை சாத்தியப்படுத்துவதில் செயலாளர் நாயகமானார்.
பவுத்த கட்டுமானத்தில் அயோத்திதாசரின் தன்மையான படைத் தலைவர்களில் முன்னணியான ஆளுமையாக இடம் பிடித்தார். அப்பாதுரையார், பிற்போக்கானதாகவும், கொடுமையானதாகவும் அநீதியாகவும் ஆன பார்ப்பனியத்திற்கு எதிராகவும், பவுத்தம் பரவுவதற்குமான கூட்டுப் போராட்டத்தில் ‘தமிழனுடன்' பங்களிப்பதில் அயோத்திதாசருடன் தோழமை கொண்டார். சரளமாகவும் சாரத்தோடும் எழுதக் கூடிய அப்பாதுரையார், ‘தமிழனில்' தவறாமல் எழுதி வந்தார். அவரின் எழுத்து, தமிழனின் வீரியத்திற்கு கிரியா ஊக்கியாகத் திகழ்ந்தது. மயிலை பி.எம். சுவாமி என்பவர், புத்தரை கிறித்துவுடனும், முகம்மதுவுடனும் ஒப்பிட்டு எழுதியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 1914 இல் அப்பா துரை ஒரு திறனாய்வை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொய்யறிவைப் பற்றி எச்சரிக்கையாயிருக்கவும், அறியாமையைவிட அது அதிக பத்தானது என்று அறிவிக்கவும், கடவுள் என்பது ஒரு நீண்ட கால வதந்தி! வதந்திகளை நம்பாதீர்! வதந்திகளைப் பரப்பாதீர்! என்றே புத்தர் கேட்டுக் கொண்டார். புரிபடல் என்பது அர்த்தமுள்ளதாய் இருக்க வேண்டுமெனில், நாம் நிற்கும் தளம் தர்க்க நியாயத்தினால் கட்டப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் புரிதலும் இல்லை, அர்த்தமும் இல்லை.
ஏசுவும், முகம்மது நபியும் இறைத்தூதர்கள். இக்கருத்தை ஏற்பவர்கள்தான் - கிறித்துவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் இருக்க முடியும். இவ்வாறாக ஏசுவும், நபியும் தங்களுக்கான இருத்தலை உறுதி செய்து கொண்டனர். இதுபோன்ற எந்தவித நிபந்தனைகளையும் புத்தர் ஏற்படுத்தவில்லை. தன்னை சுத்தோதனருக்கும் மகாமாயாவிற்கும் பிறந்த மனிதர் என்றே புத்தர் அறிவித்துக் கொண்டார்.
அவர் தன்னுடைய தம்மத்தில் தன் இருந்தலுக்கான எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. எல்லா மதங்களும் மோட்சத்தை இறுதியாகக் கொண்டுள்ளன. ‘ஆத்மா'வின் வீடு பேற்றை அடைவதே மனித வாழ்க்கையின் நோக்கங்கள் என மதங்கள் வலியுறுத்துகின்றன. பல காலகட்டங்களில் எல்லா மதங்களிலும் இறைதூதுவர்கள், அவதாரப் புருசர்கள், மகான்கள், மகாத்மாக்கள் தோன்றி தங்கள் தங்கள் மதக் கருத்துகளை முன்னெடுத்துச் சென்றிருக்கின்றனர்.
மாறாக, புத்தர் மோட்சம் ஏதும் இல்லையென்றும், தன்னை ஒரு வழிகாட்டி என்றும் அறிவித்தார். தம்மத்தை மனிதர், மனிதர்களுக்காக கண்டுபிடித்த தத்துவம் மட்டுமே என்றார். இத்தத்துவம், உண்மைக்கும் எல்லாவித ஆய்வுக்கும் உட்பட்டது. அதில் எவ்வித இறை தன்மையையும் புகுத்தக்கூடாது என்றார். இதுவே புத்தரால் மக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படையான செய்திகளாகும்.
இச்செய்திகளை அப்பாதுரையார் தன் திறனாய்வில் உள்ளடக்கி, மதங்களுக்கும் பவுத்தத்திற்கும் உள்ள வேறுபாட்டினைத் தெளிவுபடுத்தினார். பார்ப்பனியத்தின் வெற்றியினால் அடிமையாக்கப்பட்ட, வரலாற்றால் மறைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு அயோத்திதாசர் நிறுவிய பவுத்த சங்கம், ‘தமிழன்' இதழுமே புகலிடமாக நடைபோட்டது.
இம்மண்ணின் முதற்குடிகளை பூர்வ பவுத்தர்கள் என்பதை உணர வைத்து "நாம் இந்துக்கள் அல்லர்'' என்ற முடிவுக்கு உந்தித் தள்ளியது. ‘சங்கமும்', "தமிழனும்' இந்து, கிறித்துவ மதங்களின் கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. சங்கரன், திருஞான சம்பந்தர் தோன்றி, திபவுத்தமாகிய நாத்திகத்தை அழித்து விட்டதுபோல, புதியதாக வந்த பவுத்தத்தையும் அழித்துப்போட, கடவுளின் அடியோர்கள் எவரும் வரமாட்டாரா? என்று இந்து வெறியர்கள் ஏக்கம் கொண்டார்கள். இருப்பினும் ‘சங்கமும்', ‘தமிழனும்' திடமாக நடத்தப்பட்டு வந்தது.
1914 ம் ஆண்டு மே 5 ம் நாள் அயோத்திதாசர் உடலால் பிரிந்து நினைவில் வாழ்பவர் ஆனார். அயோத்திதாசருக்குப் பிறகு ‘தமிழனை' சிறிதுகாலம் அவரது குமாரர் பட்டாபிராமன் நடத்தி வந்தார். அதன் பிறகு ‘தமிழனை'ப் பொறுப்பேற்று நடத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்த அப்பாதுரையார், எம்.ஒய். முருகேசம் பின்பலத்துடன் ‘தமிழனை'க் கொண்டு வந்தார். அப்பாதுரையாரை ஆசிரியராகவும் வி.பி.எஸ். மணியரை பதிப்பாளராகவும் கொண்ட ‘தமிழன்' 1921 முதல் இரண்டு ஆண்டுகள் வெளிவந்தது. பவுத்த சங்கத்திற்கும் தமிழனுக்கும் தன்னிகரில்லா துணைவராகத் திகழ்ந்த எம்.ஒய். முருகேசம் காலமாகவே ‘தமிழன்' வெளிவருவது தடைப்பட்டது.
இருப்பினும், அப்பாதுரையாரின் விடாமுயற்சியால் ‘தமிழன்' மீண்டும் 1926 ம் ஆண்டு சூலை முதல் வாரத்திலிருந்து வெளிவரத் தொடங்கியது. வழிகாட்டி அயோத்திதாசர், புரவலர் எம்.ஒய். முருகேசம் ஆகியோருக்குப் பிந்திய காலகட்டத்தில், கொள்கைக்குன்றாய் அப்பாதுரையாரின் பணி மேலும் தீவிரமடைந்தது.
"உளறும் பத்திரிகைகளை தடை செய்க''
‘தமிழன்' இதழில் 19.11.1930 அன்று வெளிவந்த "நான் மந்திரியானால்...'' என்ற தலைப்பில் ‘கிறுக்கன்' எனும் புனைப்பெயரில் அப்பாதுரையார், 14 அம்ச திட்டத்தினை வெளியிட்டார். இன்றும் நீளும் சாதி- வர்க்க - ஆணாதிக்க சூழ்நிலைமையில், முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே அதிகபட்ச சாத்தியங்களை அகப்படுத்தி, பகுத்தறிவு சமதர்ம வழியில் புதுவிசையையும் வீச்சையும் உருவாக்கியவர். சவால்கள் மிகுந்த எதிர்மறை பிராந்தியங்களை, எவ்விதத் தயக்கமுமின்றி அசாத்தியமாக எதிர்கொண்ட அப்பாதுரையார், தன் 14 அம்ச பகுத்தறிவு சமதர்மத் திட்டத்தினை இந்தியாவின் கவர்னர் ஜெனரல், மைசூர் சமஸ்தான மன்னர், சென்னை மாகாண அமைச்சர்கள் பி.டி. ராசன், குமாரசாமிராசா ஆகியோர் பார்வைக்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1. இந்தியாவிலுள்ள கோயில்களையெல்லாம் பள்ளிக் கூடங்களாகவும், சிறு கைத் தொழில் கூடமாகவும் மாற்றுவேன்.
2. கடவுள் பேரால் நடக்கும் நிகழ்ச்சிகளை தடை செய்வேன்.
3. இந்தியா முழுமையும் ஒரே சம்பளம் என்று முறை வகுப்பேன். அதிகாரிகள் 1000 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறாத வகையில் சட்டம் கொண்டு வருவேன்.
4. தன் பெயர்களுக்குப் பக்கத்தில் ஜாதிப் பெயர் குறிப்பிடுவதை தடை செய்து அபராதம் விதிப்பேன். சந்நியாசிகள், சாமியார்கள், மதகுருக்கள் அனைவரையும் எங்குமில்லாமல் செய்து மதங்கள் என்பதை அழித்து விடுவேன்.
5. மாணவ மாணவியர்களுக்குரிய பாடப்புத்தகங்களிலுள்ள புராண, மதக் கருத்துகளடங்கிய பாடப்புத்தகங்களை அகற்றிவிடுவேன்.
6. தேசியம், புராணம், இதிகாசம், மதம், கடவுள் என்று உளறிக் கொண்டிருக்கிற பத்திரிகைகளை தடை செய்வேன்.
7. அய்ந்தாயிரம் ரூபாய்க்கு மேல் எவரும் பணம் வைத்திருக்கக்கூடாது என்றும், சாதி மறுப்பு கலப்புத் திருமணம், விதவைத் திருமணம் செல்லுபடியாகும் என்றும் சட்டம் செய்வேன்.
8. பெண்கள் 18 வயதுக்கு மேல்பட்டுத்தான் திருமணம் செய்ய வேண்டுமென்று சட்டம் ஆக்குவேன்.
9. மந்திரவாதிகளையும் சோதிடம் பார்ப்பவர்களையும் ஒழிப்பேன்.
10. பிச்சை எடுப்பவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் வேலை செய்து பிழைக்கும் வகையில் தொழிற்சாலைகளுக்கு அனுப்ப வழி செய்வேன்.
11. எல்லா ஊர்களிலும் மக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்க, அரசாங்கக் கடைகளைத் திறப்பேன்.
12. இந்தியா எங்கும் ஒரே மொழி வழங்க ஏற்பாடு செய்வேன்.
13. தூக்குத் தண்டனையை எடுத்து விடுவேன்.
14. கோயில் பேராலும் கடவுளின் பேராலும் இருக்கிற சொத்துகளைப் பறிமுதல் செய்வேன்.
தொடரும்