Bharathi 400தமிழில் இலக்கிய மானிடவியலை விளக்கும் முதன் நூலாக முனைவர் பக்தவத்சல பாரதியின்  இலக்கிய மானிடவியல் : தமிழ்ச் சமூகத்தின் செல்நெறிகளின் மீதான பண்பாட்டியல் பார்வை எனும் புதிய நூல் வரவாகியுள்ளது. தமிழில் மானிடவியல் சொல்லாடல்களின் எல்லைகளை விரிவாக்கிய பாரதியின் ஏனைய நூல்களைப் போலவே தமிழர் பண்பாட்டு வரலாற்றினை கட்டமைக்கும் புலமைத் துணையாகும் இந்நூலும் எம் கவனத்திற்குரியதாகின்றது.

இலக்கியத்திற்கும் மானிடவியலுக்கும் இடை யிலான இடையறாத ஊடாட்டத்தின் விளைவாக வடிவம் பெற்றது இலக்கிய மானிடவியல். மானிட வியலின் மரபார்ந்த அணுகுமுறைகளில் ஏற்பட்ட இலக்கியத் திருப்பமாக 1970 களின் பிற்கூறில் கிளிபட் கீட்ஸ் (Clifford  Geertz), மாக்கூஸ் (Marcus) போன்ற புலமையாளர்களினால் இப்புலம் வசமானது.

இந்த வகையில் கிளிபட் கீட்ஸின் (The  Interpretation  of Culture (1973), Local Knowledge (1983)  ஆகிய நூல்களும் கிளிபட் கீட்ஸ§ம், மாக்கூசும் இணைந்து எழுதிய Writ-ing  Culture  :  Poetics  and  Politics  of  Ethnography  (1986) ஆகிய நூல்களும் முக்கியமானவை. இவர்களைத் தொடர்ந்து இலக்கிய மானிடவியலின் காப்பாளராகப் பேசப்படும் வுல்ப்காங் ஐசர் (Wolfgang Iser, 1993) இன் எழுத்துக்களும் வழிப்படுத்தல்களும் எம் கவனத்திற் குரியன.

மக்கள் பண்பாட்டினை முழுதளாவிய பனுவலாகக் காணும் இலக்கிய மானிடவியல் அணுகுமுறையானது இலக்கிய பனுவல்களில் நிறைந்துள்ள பண்பாட்டினைத் தேடும் ஆய்வு முறையிலாக விரிவு பெற்றது.

‘மனிதன் சம்பந்தமான எதுவுமே இலக்கியத்திற்குப் புறம்பானதன்று’ என்பார் மாக்சிம் கோர்க்கி. இலக்கிய மில்லாத சமூகம் இல்லை எனலாம். இந்த வகையிலேயே மனித- சமூக சூழமைவின் முழுதளாவிய கற்கை நெறியான மானிடவியல், மனித உணர்வு நிலையின் சொல்லாடல்கள், சமூக வாழ்வின் ஆக்கங்கள் என்பவற்றினை தன் ஆய்வு மூலங்களாகக் கொண்டது. மானிடவியல் எண்ணக்கருக்கள், கோட்பாடுகள், அணுகுமுறைகள் யாவும் இலக்கியத்தை அணுகத் துணையாகின. மானிடவியலின் முறையியலுக்குட்பட்ட இனவரைவியல், இலக்கியவியலுக்கு மிகவும் நெருக்க மானதாய் அமைந்து இந்த ஊடாட்டத்திற்கு உரம் சேர்த்தது.

இனவரைவியல் என்பது சமகாலத்து நாம் ஒரு சமூகப் புலத்தில் களப்பணியின் வழி எழுதும் அப் பண்பாட்டின் வாழ்வியல் என்பது போலவே, முன்னைய இலக்கியங்களும் அவை எழுதப்பட்ட ‘சமகாலத்தின்’ பனுவல்களாகக் கருதப்படத்தக்கன. பனுவல்களில் இடம்பெறும் கூற்றுக்கள் அவற்றிடையே கேட்கும் படைப்பாளிகளின் குரல் என்பன யாவும் தரவுகளாகி பண்பாட்டினைக் கட்டமைக்கும் ஆய்வுப் பயணத்தில் பெரும் துணையாகின. இங்கு ‘பனுவல்கள் தகவலாளி களாகும்’ ஆய்வு அனுபவம் எமக்கானது.

2

தமிழில் இலக்கிய ஆய்வுகள் ரசனை வழிப்பட்ட இலக்கிய மதிப்பீடுகளாகவே பெரிதும் அமைந்திருந்த ஒரு காலகட்டத்தில், தமிழ் இலக்கிய ஆய்வுகளை சமூகவியல் ஆய்வுகளாகப் பரிணாமம் பெறவைத்த புலமையாளர்களாக பேராசிரியர்களான நா.வானமாமலை, கா.சுப்பிரமணியம், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, எஸ்.தோதாத்திரி போன்றவர்களின் ஆய்வுகள் தமிழுக்கு புதிய தரிசனங்களைத் தந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பண்பாட்டு வரலாற்றினைக் கட்டமைக்கும் இன்றைய சமூகவியல், மானிடவியல் ஆய்வுத் தேடல் களில் இவ் அறிஞர்களின் எழுத்துக்கள் முன்னோடி யானவை. இவர்களைத் தொடர்ந்து இன்றைய தமிழ் நாவல்களின் இனவரைவியல் பண்புகளையும், தன்மை களையும் தனி நூலாக வெளிப்படுத்திய ஆ.சிவசுப்பிர மணியம் அவர்களின் இனவரைவியலும் தமிழ் நாவலும் (2009), பெ.மாதையனின் தமிழ்ச் செவ்வியல் படைப்புக்கள்: கவிதையியல், சமுதாயவியல் நோக்கு (2009) ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கன.

இத்தகையதொரு பின்னணியிலே வெளிவந்துள்ள பக்தவத்சல பாரதியின் இலக்கிய மானிடவியல் நூலானது தமிழில் இலக்கிய மானிடவியலை அறிமுகம் செய்தல் எனும் பொது நோக்குடன் தமிழர் சமூக பண்பாட்டு வரலாற்றினை கட்டமைத்தலினை சிறப்பான இலக்காகவும் கொண்டுள்ளது.

இன்றைய சூழலில் ‘சங்க இலக்கிய மீள்விளக்கம்’ செய்யும் நிலையில்தான் நாம் உள்ளோம். இவ்விலக்கியத்தின் சமூகப் பின்புலத்தையும், பண்பாட்டுப் பின்புலத்தையும் ஊடறுத்து அதனை ஒரு கருத்துக் கட்டமைப்பாக நாம் புரிந்து கொள்ள வேண்டியதை இலக்கிய மானிடவியல் வலியுறுத்துகின்றது. தமிழ்ச் சூழலில் குறிப்பாக சங்க இலக்கியம் பற்றிய ஆய்வில் இலக்கிய மானிடவியலின் முதன்மையான இலக்கானது, அதன் தொன்மையையும் தொடர்ச்சியையும் விளக்குவதாகும்.

என தம் நூலின் இலக்கினைத் தெளிவாக அடிக் கோடிடுவார் பாரதி.

தமிழ் பண்பாட்டு வாழ்வானது சங்ககாலம் முதல் இன்றுவரையான ஓர் இடையறாத் தொடர்ச்சியினையும், மாற்றங்களையும் கொண்டதாக நிலை பெற்றுள்ளது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் குறிப்பிடுவதைப் போல தமிழ்ப் பண்பாட்டின் ஆழமான வேர்கள் சங்க இலக்கியங்களினுள் புதைந்துள்ளன. பண்பாட்டின் மொழியாக அமையப் பெற்ற சங்க இலக்கியமானது தனியே தமிழர் சமூகத்தின் பண்பாட்டு வரலாற்றினை மட்டுமன்றி, மனித சமூகம் இதுவரை கடந்துவந்துள்ள அனைத்து படிநிலைகளையும் தன்னகத்தே கொண்டு உள்ளது. இந்நிலையில் சங்ககாலம் பற்றிய இலக்கிய மானிடவியல் பார்வை என்பது தமிழ்ச் சமூகத்தின் செல் நெறிகளின் மீதான பார்வையாகவும், மனித சமூக வரலாற்றின் பார்வையாகவும் விரிந்த எல்லைகளை எமதாக்கும்.

மேற்கண்ட விரிந்ததொரு தரிசனத்துடன் இலக்கியம், சமூகம், சமயம், வாழ்வியல் எனும் நான்கு பெரும் பிரிவுகளில் 20 இயல்களில் இந்நூலினைக் கட்டமைத்துள்ளார் பாரதி. முதல் பகுதியானது இலக்கிய மானிடவியல் என்ற புதிய புலத்தின் இலக்கு, வரலாறு, பயன்பாடு என்பவற்றினை தமிழ் இலக்கியச் சூழமைவில் விளக்குகின்றது. இரண்டாவது பகுதியான சமூகமானது சங்ககாலத் தாய்வழிச் சமூகம், இனக்குழுமச் சமூகம், காட்டெரிப்பு வேளாண் சமூகம், ஆயர் சமூகம், நெய்தல் சமூகம், பாணர் சமூகம் என்றவாறு அமை கின்றது. சமயம் எனும் மூன்றாவது பகுதியானது தமிழரின் தொல் சமயம், தொன்மங்கள் பற்றிய ஆழமான தரிசனங்களுடன் நுண்நிலையில் சாலினி வழக்குரைத்தல், குன்றக்குரவை, மணிமேகலையில் தேவகணம், பௌத்த மரபில் பத்தினித் தெய்யோ, இரணிய வேளை, சைவ-வைஷ்ணவக் குறியீடுகள் பற்றிய  ஆய்வு எழுத்துக்களைக் கொண்டுள்ளது. நான்காவது பகுதியான வாழ்வியல் சங்ககாலத் தழையாடை, குடும்பம் பற்றிய ஆய்வுப் பதிவுகளாகும்.

3

பக்தவத்சல பாரதியின் மேற்கண்ட எழுத்துக்கள் யாவும் தமிழில் இலக்கிய மானிடவியல் சார்ந்த எதிர்கால ஆய்வுகளுக்கான எண்ணற்ற சாத்தியங்களை இனங் காட்டி நிற்கின்றன.

சங்ககாலத்திய இனக்குழுச் சமூகத்திற்குரிய கூறுகள், முடியாட்சி அமைப்பிலும் அசை வியக்கம் பெற்று இன்றுவரை தொடர்ந்து வந்துள்ளன. தொல் தமிழ் பண்பாடு அறுபடாத தொடர்ச்சியைக் கொண்டிருப்பதால் ஒரு கட்டத்தின் முதன்மைக் கூறு அடுத்த கட்டங் களில் எச்சக் கூறுகளாகத் தொடர்வதனைக் காணலாம்.

எனும் பாரதியின் இத் தரிசனமானது இக்கட்டுரைகள் யாவிலும் ஆதார சுருதியாக வெளிப்படக் காணலாம்.

அறிவியல் சார்ந்த முடிவுகளை மானிடவியலும் அதற்கு நெருக்கமான சமூகவியல், தொல்லியல், மொழியியல், பண்பாட்டியல் போன்ற அறிவியல்களும் எய்துவதில் இக்கருத்தாக்கம் பெரிதும் வழிகாட்டி நிற்கக் காணலாம். எடுத்துக்காட்டாக பண்டைத் தமிழர் சமயம் பற்றிய தம் ஆய்விடை பாரதி குறிப்பிடுவதைப் போல சங்க இலக்கியத் தரவுகள் தொல் எச்சங்களைக் காட்டுவதால், பண்டைத் தமிழர் சமயவரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கு அவை பெரிதும் துணை யாகின்றன. ‘பொருள் வடிவம் சார்ந்த’ கல்வெட்டுகள், பானையோடுகள், தாழிகள் மற்றும் பொருட்களில் காணப்படும் குறியீடுகள் யாவும் பொருள் வடிவங்கள் (Social  artifacts) ஆகும். இப்பொருள் வடிவங்களின்

வழி அறியவொணா உண்மைகளை இலக்கிய மன வடிவத்தின் (mentifacts) துணைகொண்டு அறிந்து கொள்ள முடிகின்றது. இந்த வகையில் புதிய கற்கால கால்நடைப் பண்பாட்டினை தொல்லியல் நிலை நின்றும், முல்லை நிலப் பாடல்களின் வழிநின்றும் நோக்கிய ரேமன்ட் அல்ச்சின் (Ramond Allchin), பிறிட்ச் அல்ச்சின் (Bridget Allchin) ஆகியோரின் Neolithic Cattle Keepers  of  South  India (1963) என்ற ஆய்வு மற்றும் இன்றைய கா.ராஜன் போன்றோரின் ஆய்வுகளும் குறிப்பிடத்தக்கன.

திணை மரபின் சமூக பொருளாதார முக்கியத்துவம் பற்றிய தம் ஆய்வின் சாரமாக ஒலித்த பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின், 

சங்ககாலம் என்பது இலக்கிய ஆவணங்களைக் கொண்டதாக அல்லாது, இலக்கிய வழி வருகின்ற தரவுகளை நிறுவுவனவாகவும் விவரிப்பனவாகவும் எதிர்காலத்தில் அமைய வேண்டும் (2006) 

என்ற குரலுக்கு வலுவூட்டுவதாக பக்தவத்சல பாரதி அவர்களின் இலக்கிய மானிடவியல் வசப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் பக்தவத்சல பாரதி அவர்களே குறித்தவாறு இலக்கியவியல் ஆய்வுகளைப் பக்குவமாக மேற்கொள்ள வேண்டியதன் இன்றியமையும் உணரப் படவேண்டும். தமது எழுத்துக்களிடையே பாரதி இனங்காட்டிய இடைவெளிகள், மட்டுப்பாடுகள் எம் கவனத்திற்குரியன. எடுத்துக்காட்டாக சங்ககால எட்டுத்தொகை இலக்கியங்களில் யதார்த்தமாகப் பேசப்படும்.

விடயங்கள் பத்துப்பாட்டில் சற்று புனைவியல் தன்மை கொண்டு அமைதல் பற்றிய அவரது அவதானத்தைக் குறிப்பிடலாம். அவ்வாறே ஆயர் நாடோடியம் பற்றி ஆழ ஆய்ந்துள்ள பாரதி, சமகால இனவரைவியல் தரவு களுக்கும், சங்க இலக்கியத் தரவுகளுக்கும் இடையில் இனங்காட்டும் இடைவெளிகளும் ஈண்டு நம் கவனத்திற் குரியன.

அறிவியல் தளத்திலிருந்து பண்பாட்டு மானிடவியல் அணுகுமுறைகளின் வழி தரவுகளின் நம்பகம் (reliability), தகுதி (Validity) என்பவற்றினைக் கருத்திற் கொண்டே இலக்கிய மானிடவியலின் உண்மைகள் எய்தப்பட வேண்டும்.

*           பண்டைய கால நிகழ்வுகளுக்கு சமகாலக் கண்ணோட்டத்துடன் விளக்கம் கொடுத்தல்.

*           சமகால நிகழ்ச்சிகளை பழைய கால கருத் தோட்டங்களின் அடிப்படையில் நோக்குதல்

*           கடந்த காலமே பொற்காலம் எனக்கருதி நிகழ்காலத்தை நிராகரித்து இறந்த காலத்தை இலட்சியப்படுத்தல்

எனும் இம்மூன்று அணுகுமுறைகளையும் பண்பாட்டு மானிடவியலின் அறிவியல் தன்மையான அணுகு முறையின் வழி மதிப்பிடாவிடின் பண்பாட்டினை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சி வழிதவறியதாகிவிடும். (பாரதி, 2014)

இந்த வகையில் முறையியல் வழிப்பட்ட இலக்கிய மானிடவியல் என்ற கருத்தியல் தெளிவுடனான இந்நூலானது, அண்மைக்காலத்து ‘பின்னை-நவீனத்துவ திருப்பம்’ என்ற முனைப்பில் இலக்கிய மானிடவியலை அதன் அறிவியல் தளத்திலிருந்து பிரித்திடும் செயற்பாடு களிலிருந்து தமிழ்ச் சூழலைக் காத்திடும் காலத்தினாலான புலமைப் பங்களிப்பாக அமையப்பெற்றுள்ளது என்றால் மிகையில்லை

இலக்கிய மானிடவியல்

முனைவர் பக்தவத்சல பாரதி

வெளியீடு:அடையாளம்

விலை:ரூ.300/-

Pin It