needumaran 400தமிழ்நாட்டில் “இருள் கடிய எழுந்த ஞாயிறு” ஆகத் தோன்றியவர் வள்ளலார். பஞ்சமும், பசிப்பிணியும் பெருகிய காலத்தில் வாழ்ந்தவர். நிறுவனச் சமயப் பொய்மைகள் மக்கள் மனங்களில் ஆட்கொண்டத் தருணத்தில் ஆன்ம நேயத்தை முன்வைத்த அருளாளர் அவர். கடவுளும், சமயங்களும் மண்ணில் கால் பாவாமல் வீடுபேற்றை, மேலுலகைத் துணைக்கழைத்த போது கண்முன் உள்ள உலகியலை ஏற்றுத் தொழிற்பட்டவர் வள்ளலார்.

எல்லா நிலைகளிலும் மாற்றுப் பார்வையை, மானுட விழுமியங்களை முன்வைத்தவர் அவர். வள்ளலார் உலகு தழுவிய சிந்தனைகளின் மூல ஊற்று. ஆனால் அவரையும் கூட விக்கிரகமாக ஆக்கும் முயற்சிகள் நடந்தன. அனைத்துவிதச் சடங்காச்சாரங்களை மறுதலித்தவரை சமயச் சிமிழுக்குள் முடக்கும் முயற்சி களும் நடந்தேறின. தமிழின், தமிழரின் பேரடையாளமாக முன்னிலை பெறவேண்டியவரை குறுகிய எல்லைக்குள் தமிழ்ச் சமூகம் அமிழ்த்துவிட்டது என்பது பெருங்குறை.

தமிழ் எனும் மொழியும், தமிழர் எனும் இனமும், தமிழ்நாடு எனும் நிலமும் சிக்கலுக்குள்ளாகி வரும் நிலையில் தமிழிய வீரியமாகச் செயல்பட்டுவரும் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் வள்ளலாரின் பன்முக ஆளுமை வெளிப்பாட்டை நுட்பமாக “வள்ளலார் மூட்டிய புரட்சி” என்னும் நூலாகப் படைத்துள்ளார்கள். சிறிய நூலாயினும் அரிய கருத்துக்கள் அடங்கிய நூலாக மிளிர்கிறது. வள்ளலாரின் காலப் பின்புலமும், கருத்துப் பின்புலமும், சமூக நாட்டமும், தமிழ்ப்பற்றும், சமத்துவ எண்ணமும் அற்புதமாக நூலில் வெளிப்படுகின்றன. வள்ளலாரியத்தை வாழ்வியலாக வரித்துக் கொண்ட குடும்பத்தில் தோன்றியதுடன், இளமை முதலே வள்ளலார் கருத்துக்களில் ஈர்க்கப்பட்டவர் பழ.நெடுமாறன். இந்த அனுபவத்துடன் கூட வள்ளலார் குறித்து வெளி வந்துள்ள பெரும்பாலான நூல்களை வாசித்து, உள் வாங்கி அவற்றின் அறிவுச்சாற்றை இந்நூலில் தருகின்றார்.

“வள்ளலார் வாழ்ந்த காலம் சாதி, மத வெறி ஓங்கியிருந்த காலமாகும். மடாதிபதிகள் கூட சாதி அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள். இன்னமும் கூட மடங்களில் அந்தப் பழக்கம் தொடர்கிறது. ஆனால், அன்றைய காலகட்டத்தில் சாதியும், சமயமும் பொய்யே எனத் துணிவுடன் முழங்கியவர் வள்ளலாரே” (ப.21) என வள்ளலாரின் சீர்திருத்தப் போக்கைப் பல்வேறு சான்றுகளுடன் விளக்குகிறார்.

“வள்ளலார் வலியுறுத்தும் முதன்மையான சீவகாருண்யம், வறியோர்க்கு உதவி செய்தல், பசிப்பிணியால் வருந்தும் ஏழை மக்களின் பரம்பரையை மாற்றுதல், மக்களிடம் பேதம் பாராட்டாமல் எல்லோரும் ஒன்றெனக் கொள்ளல் இவைகளேயாகும்” (ப.29) என வள்ளலாரின் பசிப்பிணிப் போக்கும் கருணையினை, “பசியினால் இளைத்து வீடுதோறும் இரந்தும், பசி அறாதயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்” என்பன போன்ற பாடல்கள் வழி நிறுவுகிறார்.

வள்ளலாரின் சமயப் புரட்சிக் கருவிகள் என 1.சமரச சுத்த சன்மார்க்க சங்கம், 2.சத்ய தருமச் சாலை, 3.சத்ய ஞான சபை, 4.சித்திவளாகம் ஆகியவற்றைச் சுட்டும் ஆசிரியர், வள்ளலாரின் எண்ணத்தை மிக நுட்பமாகப் பதிவு செய்கிறார்.

“உயிர்கள் யாவும் சமம் என்று உணர்ந்து அவற்றின் இன்ப துன்பத்தில் பங்கு கொண்டு ஒன்றாக உணர்கின்ற உணர்ச்சியைத்தான் சீவகாருண்யம் அல்லது ஆன்ம நேயம் என்றார் வள்ளலார். ஊண் உணவை நீக்கிக் காய்கறி உணவு கொள்வது மட்டுமே சீவகாருண்யம் என்று கருதுகின்றனர். ஆனால், அடிகளார் கண்ட சீவகாருண்யம் இதைவிட விரிந்து பரந்ததாகும். அதனால் தான் வள்ளலார் சீவகாருண்யம் என்று சொல்வதோடு விட்டுவிடாமல் சீவகாருண்ய ஒழுக்கம் என்றே அழைத்தார்.” (ப.32) என்று விளக்குகிறார்.

“கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக

அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள் நயந்த

நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்து

எல்லோரும் வாழ்க இசைந்து”

எனும் வள்ளலாரின் புகழ்மிக்க பாடலுக்கு விளக்கமாக, “இது ஒரு கனவு. எளியவர் துயரம் கண்டு உருகிய தலை சிறந்த கவிஞர்களெல்லோரும் இத்தகைய கனவு கண்டனர். அக்கனவுகள் கவிதை வடிவம் பெற்றன. அக்கவிதைகள் துயரப்படும் எளிய மக்களுக்குப் போராடும் உற்சாகத்தையளித்தன. ஆயினும் அவர்கள் நினைத்தது எல்லாம் பெற நன்மார்க்கர் ஆட்சி தோன்ற வேண்டும் என்றும், அவ்வாட்சியில் மக்கள் இசைந்து எல்லோரும் இன்புற்று வாழ்வார்கள் என்றும் இராமலிங்கர் நம்பினார்” (ப.34)என வள்ளலாரின் ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிரான மனோபாவத்தை ஆசிரியர் வெளிப்படுத்துவது சிறப்பு.

அதே போல வள்ளலாரின் தனித்தன்மையினையும் பழ.நெடுமாறன் தன் நூலில் பின் வருமாறு எடுத்துக் காட்டுகிறார். “தமிழகத்தில் வள்ளலாருக்கு முன்பிருந்த சமய ஞானிகள் மடங்களையே நிறுவினார்கள். ஆனால், காவியாடை தரிக்காமல் வெண்மை நிற ஆடை தரித்த வள்ளலார் மடம் நிறுவாமல் சங்கம் நிறுவினார். மடம் என்பது துறவிகளுக்கு மட்டுமே உரியது. அதிலும் ஆண்களுக்கு மட்டுமே அங்கு இடமுண்டு.

ஆனால், சங்கம் என்பது ஆடவருக்கும் பெண்டிருக்கும் உரியது. பக்குவம் பெற்றவர்கள், பெறாதவர்கள் ஆகிய அனை வருக்கும் சங்கம் உரியது. அனைவருக்கும் இடம் தந்து அவர்களைத் திருத்த வேண்டும் என்பதற்காகத்தான் மடம் என்று பெயரிடாமல் சங்கம் என்று வள்ளலார் பெயரிட்டார்.” (ப.42) அதேபோல வள்ளலாரைப் “பெண்ணுரிமைக் காவலராக”வும் ஆசிரியர் பார்க்கிறார். 1. பெண் கல்வி, 2. ஆண் - பெண்  சமத்துவம் ஆகிய இரு நிலைகளில் வள்ளலாரின் கருத்துக்களைத் தரும் பழ.நெடுமாறன், “கைமையைத் தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே!” எனக் கூறி, கணவன் இறந்தபின் பெண்கள் தாலி நீக்கக் கூடாது என்றது மாபெரும் புரட்சி என்பதைச் சுட்டுகிறார்.

வள்ளலார் பற்றற்றவர். ஆனால் தமிழ் மீது தீராதப் பற்றுடையவராக விளங்கினார். தமிழ்க் கல்விக்குத் துணை நின்றார்; முதியோர் கல்விக்கு வழிவகுத்தவர்; திருக்குறள் வகுப்புக்கள் எடுத்தார்; அருட்பா எனும் அற்புத இலக்கியங்கள் அருளினார்; நவீனத் தமிழ் உரைநடை வளர்ச்சி மூலவர்களில் ஒருவராக தமிழ் வளர்த்தார். வடமொழியிலும் வல்ல வள்ளலார் தமிழின் தொன்மையை, மேன்மையை உயர்த்திப் பிடித்தார்.

சங்கராச்சாரியாரைச் சந்தித்த போது, “சமஸ்கிருதம் மாத்ரு பாஷா” என அவர் குறிப்பிட, வள்ளலார் “அவ்வாறாயின் தமிழ் பித்ரு பாஷா” என்றார். அதாவது தந்தை மொழி என்று ஆணித்தரமாகப் பதிலளித்தார். சமஸ்கிருதம் என்னும் தாய்மொழியிலிருந்து தான் மற்ற மொழிகள் பிறந்தன என்ற கூற்றை மறுக்கும் வகையில், அப்படியாயின், தமிழ் தந்தை மொழி என வள்ளலார் கூறியதற்குப் பொருளே “தந்தையில்லாமல் தாய் பிள்ளை பெற முடியாது என்பது தான்” என்றெல்லாம் கூறி வள்ளலாரின் மொழிக்கோட்பாடு தமிழ்த் தேசியம் சார்ந்தது, “தமிழ்த் தேசியத்தைச் சைவத்தேசியமாக உருவெடுக்காமல் தடுத்தவர் வள்ளலார்” என்றும் மிகச் சரியாக ஆசிரியர் மதிப்பிடுகிறார்.

வள்ளுவரின் வழித்தோன்றலாகவும், பாரதிக்கு முன்னோடியாகவும் வள்ளலார் திகழ்வதைத் தக்கச் சான்றுகளுடன் விளக்குகிறார்.

அருட்பா X மருட்பா சார்ந்த விவாதங்கள், வழக்குகள் இதில் தமிழ்ச் சமூகமும், தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்களும் எடுத்த நிலை, இதில் வள்ளலார் எவ்வித நிலையும் இல்லாமல் தன்னிலை காத்தது முதலிய செய்திகள் வரலாற்றுப் போக்கில் கவனமாகச் சொல்லப்பட்டுள்ளன. வைதீக இந்து சமயம் மற்றும் சைவ மட நிறுவனங்களுக்கு எதிராகத் தனித்துவமும் தற்சார்பு மிக்கதொரு புதுமை மரபை வள்ளலார் உருவாக்கியது ஆசிரியரால் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்து சமய அடையாளங்களுக்குள் வள்ளலாரை அடக்குவதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பளித்த நீதிநாயகம் சந்துரு அவர்களின் நுட்பமான கருத்தாடல்களும் உரியவிதத்தில் நூலில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.

சன்மார்க்க நெறி குறித்த விளக்கங்கள் அய்யா பழ.நெடுமாறனின் சன்மார்க்க ஈடுபாட்டைக் காட்டுகிறது.

ஆக, வள்ளலார் “வட தமிழ்நாட்டின் சாமி” என்கிற பாமரத் தமிழனின் எண்ணத்தைக் கட்டுடைத்து அவர் காலத்தில் வெள்ளாடை உடுத்திய புரட்சிக்காரர் என்பதை மிக அழுத்தமாக நூல் எடுத்துரைக்கின்றது. மொழி, வர்க்கம், பால், சமயம் ஆகிய நிலைகளில் வள்ளலாரின் சீர்திருத்தக் கருத்துக்கள் துலக்கம் கொள்கின்றன. உலகம், மானுடம் என்கிற பொதுமை களில் “வள்ளலாரியம்” மையம் கொள்ளும் பெருஞ் செய்தியை இச்சிறு நூல் தமிழுலகிற்கு அளிக்கிறது.

 வள்ளலார் மூட்டிய புரட்சி

பழ.நெடுமாறன்

வெளியீடு:ஐந்திணை வெளியீட்டகம்

விழுப்புரம்

விலை:ரூ.150/-