‘"எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே"‘ என்கிறது தொல்காப்பியம். ஒரு சொல் தமிழ்ச் சொல்லாக இருந்தால், மட்டுமே இந் நூற்பா பொருந்தும். சில சொற்கள் மொழிக் கலப்பால், தமிழில் வந்து கலந்து வேற்றுமையறியாது நாம் பயன்படுத்துகிறோம்.

எடுத்துக்காட்டாக ‘பத்திரிக்கை’ என்பது தமிழ்ச் சொல்லன்று. இவ்விடத்தில் இந் நூற்பா பொருந்தாது. அதுபோன்றே, இந் நூற்பா, மேற்படி காட்டப்பட்டுள்ள, ‘விஞ்ஞானம்’ என்ற சொல்லுக்குப் பொருந்துமா? என்றால் பொருந்தாது.

ஏனெனில் இது தமிழ்ச் சொல்லன்று. ‘விஞ்ஞானம்’ என்ற இந்தச் சொல்லைப் பற்றி குறிப்பிடும் அறிஞர் வெங்காலூர் குணா, இது ‘‘விண்ணைக்’ குறிக்கும் சொல் என்கிறார்.

விண் + ஞானம் = ‘விண்ஞானம்’

என்ற இச்சொல், பின்னர் ‘விஞ்ஞானம்’ என மருவிற்று என்கிறார். முதன் முதலில் விண்ணைப் பற்றி ஆராய ‘தமிழர்தாம்’ முற்பட்டனர்.

விண்ணைத் தவிர்த்த மற்ற நான்கு பூதங்களான ‘நீர்’, 'நிலம்’, ‘காற்று’, 'நெருப்பு’ ஆகியவற்றை ஓரளவிற்கு எளிதான வகையில் உணர முடிந்தது அதன் காரணமாக யாவர்க்கும் இவற்றைப் பற்றிய அறிதல் எளிதாக அமைந்தது.

ஆனால், விண்ணைப் பற்றி அறிதல் எளிதாக எல்லோருக்கும் அமையவில்லை. தமிழர்தாம் அதில் முதன் முதலாக முனைப்புக் காட்டினர். அவர்களை ‘வள்ளுவர்’ என்னும் சொற்கொண்டு அடையாளாப்படுத்தி தனியொரு சமூகமாக வரையறைப் படுத்தியது தமிழ்ச் சமூக அமைப்பு.

விண்ணைப் பற்றிய ஆய்வு என்பது முழுதும் ‘கணக்கியல்’ அடிப்படையிலானது. இதன் காரணமாக அவர்களை ‘கணியர்’ என்றும் அழைத்தனர். சில விடங்களில் வள்ளுவ கணக்கர் என்றே அழைக்கின்றனர்.

இன்றளவும் சில ஊர்களில் இம்மரபினர் தாம் சில நிறுவனங்களுக்கும், சில பெரும் பணக்காரர்களின் இல்லம் சென்று சித்திரை மாதம் 1ஆம் தேதி கணக்கு எழுதும் வழக்கம் உள்ளது

‘"யாதும் ஊரே யாவரும் கேளிர்"‘ என்று உலக ஒன்றுமையை வலியுறுத்திய ‘கணியன் பூங்குன்றனார்’ இம்மரபைச் சேர்ந்தவர் என்பதை சான்று நிறுவுகின்றனர் பாவாணர்,

அறிஞர் வெங்காலூர் குணா, பேராசிரியர் நெடுஞ்செழியன் போன்றோர். ‘விஞ்ஞானம்’ என்ற இந்த சொல்,எந்த மொழியென அறிய முற்படும்போது, ‘லத்தீன்’ என்கின்றனர்.

லத்தீன் மொழியில் ‘Science’ எனும் சொல்லைத்தான் குறிப்பிடுகின்றனர். விஞ்ஞானம் ‘வடமொழி’ என்ற கருத்தும் உள்ளது. அறிஞர் குணா இதை சங்கத (சமற்கிருதம்) மொழிச் சொல் என்றே குறிப்பிடுகிறார்.

‘ஞானம்’ என்ற தமிழ் பின்னொட்டுடன் ‘விஞ்’ என்ற வடமொழி முன்னொட்டு சேர்ந்து ‘விஞ்ஞானம்’ என்ற சொல் உருவாகியுள்ளது. Science எனும் ‘லத்தீன்’ மொழிச்சொல், ஆங்கிலத்தில் அப்படியே எடுத்தாளப்படுகிறது.

‘Science’ என்றால் ‘விஞ்ஞானம்’ என பொருள்கொளல் பிழையானது. இதை ‘அறிவு’ எனக்கொளல் சரியானது. இதில் உள்ள ‘ஞானம்’ என்னும் பின்னொட்டு தமிழ் . ‘விண்’ என்னும் தமிழ் முன்னொட்டு ‘விஞ்’ எனத் திரிந்துள்ளது.

திருவாசகத்தில் ‘திருப்படையெழுச்சி’ என்னும் பதிகத்தில் ‘"ஞானவாள் ஏந்தும்ஐயர்...."‘ எனக் குறிப்பிடுகிறார் மாணிக்கவாசகர். இங்கு ‘ஞானம்’ என்பது அறிவை குறிக்கும்.

‘இசைப்பேறிஞர் ந. மம்மது’ அவர்கள், இதை,

"விண் ஞானம் = விஞ்ஞானம்.

ஞா= நான். நான் என்றால் தன்னையே அறிதல் (ஞான்>) ஞானம். இருப்பினும் அறிவியல் என்ற சொல் சிறப்பானது" எனக் கூறுகிறார்.

மேற்கண்ட விளக்கங்கள் யாவும், விண் + ஞானம் = ‘விண்ஞானம்’ என்பது ‘விஞ்ஞானம்’ என மருவியுள்ளதை உணர்த்தும்.

- ப.தியாகராசன்

Pin It