சுப்ரபாரதி மணியன் திருப்பூரை பூர்விகமாகக் கொண்ட தமிழ்ப் படைப்பாளர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எனப் பல தளங்களிலும் கடந்த முப்பது ஆண்டுகளாகப் பயணித்து வருபவர். குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்ட கதா விருது, தமிழக அரசு வழங்கிய சிறந்த நாவலாசிரியருக்கான விருது எனப் பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றவர். மண்சார்ந்த மக்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைய தமது எழுத்துகளின் மூலமாகப் களப்போராளியாக நின்று போராடும் ஒரு சமூகப் படைப்பாளி. இயற்கையைப் பாதுகாத்து மீட்டெடுக்கும் முனைப்பு கொண்ட சூழலியல் பாதுகாப்பாளராகவும் இதழாசிரியராகவும் யாவராலும் அறியப்பட்டவர். அதற்குத் தக்க சான்றுகளாக இருப்பவை; அவரது படைப்புகளான புத்துமண், தறிநாடா, சாயத்திரை, யுத்தம், குப்பை உலகம், மேகவெடிப்பு, நீர்ப்பாலை போன்றவைகளாகும்.

puthumanஅண்மைக் காலமாகச் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வினை மக்களுக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டுள்ளது. அவ்விழிப்புணர்வு அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள் மூலமாகக் கொண்டு செல்லப்படுகின்றன. ஐம்பெரும் பூதங்களான இப்பிரபஞ்சம் இன்று பல நச்சுக் கலவைகள் கலந்து போனதால் விழிப்புணர்வு கொடுக்கவேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புத்துமண் நாவலின் படைப்பாளியான சுப்ரபாரதி மணியன் தமது படைப்பின்வழி கதை நெடுகிலும் சூழலியல் விழிப்புணர்வினைக் கொண்டு செல்கிறார்.

புத்துமண் சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட படைப்பு. மணியன் என்ற சமூக ஆர்வலர் தமது வாழ்வில் சமூக அக்கறையுடன் போராடும் போராட்டத்தையும்; தொழிலாளர் சுரண்டல், சுற்றுச்சூழல் பேரழிவு, சாதிய ஆதிக்க சக்திகளின் வெறியாட்டம், வறட்சியுற்ற மனிதாபிமானம் போன்ற பொருண்மைகளை மையமாகக் கொண்டு 29 தலைப்புகளில் படைப்பிற்கு உயிரோட்டம் தந்துள்ளார். நாவலை வாசிப்போருக்கு, படைப்பாளர் சுப்ரபாரதி மணியனின் நிஜவாழ்க்கையின் நிழலாக மணியன் என்ற கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது என்ற எண்ணம் துளிர்விடும்.

ஒரு சமூகப் போராளி என்பவன் உலக மக்கள் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள அனைவரும் எவ்வித இன்னல்கள் இல்லாமல் வாழவேண்டும் என்ற பரந்துபட்ட சமத்துவ உணர்வு, பகுத்தறிவுச் சிந்தனை போன்ற குணாதிசயங்களை இயல்பாகவே பெற்றிருப்பான். நாவலில் மணியன் கதாபாத்திரம் முற்றிலும் அதற்குப் பொருத்தமுற அமையப்பெற்றுள்ளது. கதையின் துணை மாந்தர்களான மணியனின் மனைவி சிவரஞ்சனி, மகள் தேனம்மை, ஆய்வு மாணவி ஜுலி முதலான கதாபாத்திரங்கள் பேசுவதுபோல கதை பின்னப்பட்டுள்ளமை கதைக்கு மேலும் வலு சேர்க்கிறது.

மலைப்பகுதிகளில் வாழும் பூர்வீகக் குடிகளால் வனப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. அதேசமயத்தில் சமூக விரோதிகளால் அழிக்கப்படுகிறது. வாழிடங்கள் அழிக்கப்படுவதை நாவலுள் பதிவிடப்பட்டுள்ளது. “அய்ந்து இட்லிக்கு விலை ஆறு ஏக்கர், இருளனிடம் கைப்பற்றிய நிலத்தில் செங்கல் சூளை அமைக்கிறார்கள் கரியன் செட்டிகள், மண்ணைப் பிரிய மனம் இல்லாத இருளன் அதே சூளையில் ரத்தம் சுண்ட மண் சுமக்கிறான்” விளைநிலமாக இருந்த இருளனின் நிலம் செங்கல் சூளையாக மாற்றப்படுகிறது.

மரங்கள் வெட்டப்படுவதால் மண்ணரிப்பு ஏற்படுகிறது. அடர்ந்திருந்த வனப்பகுதிகள் அழிக்கப்படுகின்றன. அணைகளின் கரையோரங்களில் இருந்த மரங்களின் அழிவினால் மண்ணரிப்பு உண்டாகி, பருவமழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கமாகிப் போகிறது. இக்காலக் கட்டங்களில் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் குடிசைகள் அடித்துச் செல்லப்படுகின்றன. அவ்வாறு ஒருமுறை ஜம்பனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது மணியனின் உறவினர்களை அடித்துச் செல்கிறது. சற்றே பெருத்த மழை பொங்கிவந்த வெள்ளம் கரையோர குடிசைகளையும் கால்நடைகளையும் அடித்துச் சென்று விட்டது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது மணியனுக்கு அழைப்பு வந்துவிடும். மணியனும் களத்திற்குச் சென்று ஆதரவுக் கரம் நீட்டுகிறார்.

ஒருமுறை மணியன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டி, காவல் துறைக்குக் கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தில், “பழங்குடி மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள நீர்நிலைகள், நீர்நிலைகளில் வாழும் உயிரினங்கள், பிற விலங்குகளைக் கொன்று குவிப்பது இல்லை. ஆனால் கீழிருந்து வருபவர்கள்தான் இத்தகைய பாதகச் செயலைச் செய்கின்றார்கள்.” எனக் குறிப்பிட்டு எழுதுகிறார். இவ்வாறு பழங்குடி மக்களுக்கு எது நடந்தாலும் அதை அகிம்சை வழியில் போராடிப் பெற்றுத் தரும் அகிம்சைவாதியாகவும் வாழ்ந்து வருகிறார் மணியன்.

நீர்நிலைகள் மாசுபடுதலையும் அதற்காகப் போராட்டங்கள் பலவும் நடத்துகின்றார் மணியன். அதில் குறிப்பாக நொய்யலாற்றில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலப்பதை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றார். போராட்டத்திற்கு வந்த இளைஞன் ஒருவன் “நீங்க ஜோல்னா போட்டுக்கொண்டு வெறுமனே திரிவதாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த ஜோல்னாவில் கொஞ்சம் நெருப்பையும் அள்ளிப் போட்டுக்கொண்டு திரிகிறீர்கள் என்பது தெரிகிறது” என்றான். மணியன் சூழலியல் பாதுகாப்பிற்காகப் பாடுபடுவதினால்தான் அந்த இளைஞனால் மணியன் பாராட்டப்படுகிறார்.

மலைப்பகுதியில் வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை எதையும் அரசாங்கம் செய்து தருவதில்லை. ஆனால் அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து, கீழே இருப்பவர்களுக்கு மின்சார வசதியை செய்து கொடுக்கிறார்கள். அவ்வாறு தங்களுக்கு அடிப்படை வசதி கிடைப்பதில்லை என்பதை, “மின்சாரம் தடைபட்டால் கேனையாடு போல கத்துகிறீர்கள். மின்சாரம் வேண்டுமென்று கேட்டால் காடும் மிருகங்களும் அழிந்துவிடும் என்கிறீர்கள். ஆனால் காட்டையும் மிருகங்களையும் அழித்துதான் பில்லூர் அணையை எங்கள் குடியிருப்புப் பகுதிகளில் கட்டிவிட்டு, எங்களுக்கு மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம்” எனும் பழங்குடி மக்களின் புலம்பலைப் படைப்பாளர் தமது படைப்பினுள் பதிவிட்டுள்ளார். மணியன் சூழலியல் விழிப்புணர்வாளராக மட்டும் இல்லாமல், சட்ட விழிப்புணர்வினையும் சமூக விழிப்புணர்வினையும் மக்களிடத்தில் கொண்டு செல்கிறார்.

“சுமங்கலித் திட்டம் என்பது கொத்தடிமைத்தனம். ஸ்பின்னிங் மில்களில் இருந்த இத்திட்டம் இப்போது கார்மெண்ட்ஸ் செக்டார்களிலும் வந்துவிட்டது. பயிற்சிக் காலம் என்ற சட்ட ஓட்டையை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள். இது சட்ட விரோதமானது. கேம்ப் கூலித்திட்டம், கண்மணித்திட்டம் என்று வெவ்வேறு பெயர்கள் வந்து விட்டன. இதை ஒழித்தாக வேண்டும். இத்திட்டத்திற்கு வந்துசேரும் பெண்கள் கிராமப்புரத்தைச் சேர்ந்தவர்களாக, பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களாக இருகின்றார்கள். அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்”என்ற எண்ண ஓட்டம் மணியனின் மனதினில் தோன்றுவதைப் படைப்பாளர் சுட்டிக்காட்டுகிறார்.

மணியனை நலம் விசாரித்து, பசுமை இயக்கப் போராளி வெ.ஜீவானந்தம் கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தின் சாராம்சம் சூழலியல் பிரச்சினைகளும் அதை எதிர்கொள்ளும் முறைகளைப் பற்றியதாக அமைகிறது. “குளிர் நீரில் நீந்தும் மீனுக்கு சூரிய வெப்பத்தில் மெல்லச் சூடேறி இதம் தரும் தண்ணீர் நீடித்த வாழ்வு தரும். ஆனால் பற்றவைத்த அடுப்பின் மீது வைக்கப்பட்ட பாத்திரத்தில் நீந்தும் போது நீரின் துவக்க இதத்தில் மகிழும் மீனின் சுகம் நீடிக்குமா? எத்தனை காலம்? இந்தக் கேள்விதான் நம்முன்.

நாம் சூரிய ஒளியில் மெல்லச் சூடேறும் குளத்துநீரில் நீந்தும் மீனாகப் போகிறோமா? அல்லது அடுப்பின் மீது வைக்கப்பட்ட பாத்திரத்தில் நெருப்பில் சூடேறும் நீரில் நீந்தும் மீனாக அற்ப சுகத்தில் முடியப் போகிறோமா? நாம் எந்த மீனாக முடிவெடுக்கப் போகிறோம் என்பதுதான் மனித குலத்தின் முன் உள்ள மாபெரும் வளர்ச்சிப் போக்கு பற்றிய கேள்வி.

இந்தக் கேள்வியைத்தான் பிளாஸ்டிக் ரசாயனக் கழிவுகளும், பசுங்குடில் வாயுக்களும், பருவ நிலை மாற்றமும், பூமி சூடாதலும், நம்முன் வைக்கின்றன. காலம் தாழ்ந்துவிடவில்லை. முடிவு நம் கைகளில்தான். நாம் பாத்திரத்து மீனா? குளத்து மீனா? நிதானமான சூரிய ஒளியின் நீடித்த இதமான வெப்பமா? மீனுக்கு முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது.

சுனாமியும், விலையுள்ள அக்வாஃபினா மினரல் வாட்டரும், மானியத்தில் கிடைக்கும் அம்மா வாட்டரும், வறண்டுபோன பாலாறும், செத்துப்போன நொய்யலும், போஸ்கோ போராட்டமும், சிப்கோவும், வால்ஸ்ட்ரீட்டும், ஓசூர் சிப்பாட்டும், இடிந்தகரையும் நமது தண்ணீரின் சூடு தாக்குப்பிடிக்கும் நிலையைத் தாண்டிக் கொண்டுள்ளது என்பதை எச்சரிக்கின்றன. வளர்ச்சி நெருப்பை கட்டுப்படுத்தி வாழ்வோமா? வளர்ச்சியில் கொத்து கொத்தாய்ச் சாவோமா? முடிவு நம் கையில்…” மண்ணையும் மரத்தையும் அழித்து அதனால் விளையும் கேட்டை நாம் எதிர்கொள்ளப் போகிறோமா? அல்லது மரங்களை வளர்த்து மண்ணை வளப்படுத்தப் போகிறோமா? என்பதை ஜீவானந்தம் தம் கடிதத்தின் வாயிலாக தமது ஆதங்கத்தைத் தெளிவுபடுத்துகின்றார். இப்படிச் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜீவானந்தத்தின் கடிதமும் கதையை நகர்த்தி உயிரோட்டம் தருகிறது.

மணல் கொள்ளையால் இன்று தமிழகத்தின் அனைத்து ஆறுகளும் வறண்டு கிடக்கின்றன. அதனால் நதிகளில் நீருமில்லை, மணலும் இல்லை. கதையில் மணல் கொள்ளை நடக்கும் சம்பவம் ஒன்றும் அறங்கேற்றப்பட்டுள்ளது. மணல் கொள்ளையைத் தடுத்த சிறுவன் கொடுரமான நிலையில் கொல்லப்பட்டான் என்ற செய்தியறிந்த மணியன் களத்திற்கே செல்கிறார். அங்கு “வீரண்ணன் மணலை அள்ளுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தான். இன்னும் பெரிய அமைப்பு எதையும் உருவாக்கவில்லை. ஆற்று மணலை அள்ளிக்கொண்டிருந்த லாரி முன் கைகளை விரித்துக் கொண்டு நிற்கிறான். லாரி ஓட்டுனரும் கூட இருந்த இருவரும் மிரட்டி அவனைத் தூரத் தள்ளிப்போகச் சொல்லி தள்ளியிருக்கிறார்கள். மணலில் விழுந்தவன் எழுந்து மறுபடியும் லாரி போகாதபடி கைகளை விரித்துக் கொண்டு நிற்கிறான். லாரி அவனை அடித்து வீழ்த்திக்கொண்டு போய்விட்டது.

“தாசில்தார், கலெக்டர், போலிசுன்னு தட்டிக் கேட்ட பல பேரை இப்படித்தான் கொன்னிருக்காங்க பையனுக்கு விவரம் பத்தாது. வீணா உசிரக் கொடுத்திட்டான்.” மணற் கொள்ளையைத் தடுக்கச் சென்ற சிறுவனின் பரிதாப நிலையும் சமூக அக்கறை உடையோருக்கு மரணம்தான் பரிசு என்ற அவல நிலையையும் படைப்பாளர் படம்பிடித்துக் காட்டுகிறார். இப்படி இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப் படுவதால் சுற்றுச்சூழல் மாசடைந்து, அதனால் மனித சமூகம் இன்னலுறுவதைக் கதைக்களம் விவரிக்கிறது.

பிரபஞ்சத்தின் உயிர்க்கோளமான பூமிப்பந்தைப் பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமை என்பதை நாவல் நினைவூட்டுகிறது. தொழிற்சாலைக் கழிவு நீர்நிலைகளில் கலத்தல், விளை நிலங்களில் எரிவாயுக் குழாய்ப் பதித்தல், மணல் கொள்ளை, வனப்பகுதி அழிவு, வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச் சூழலை நாசமாக்குவது போன்ற சுற்றுச்சூழலின் அழிவும் அவற்றை எப்படி மீட்டெடுப்பது, அதற்காகத் தனியொரு மனிதனாகப் போராடும் மணியன் போராட்ட குணம் போன்றவை கதையினுள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. புத்துமண் போன்ற படைப்புகள் தற்கால இளைய சமுகத்திற்கும் ஒட்டுமொத்த மானுட சமூகத்திற்கும் சென்றடைய வேண்டும். அதுமட்டுமல்லாது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அனைவரின் கடமை என்பதை நினைவூட்டுகிறது புத்துமண்.

- முனைவர் ச.கண்ணதாசன், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவலகண்ணன் செட்டி இந்துக் கல்லூரி, பட்டாபிராம், சென்னை.