kodupavi eripu“...எதிர்ப்பைத் தெரிவிக்க கொடும்பாவி கொளுத்தினார்கள். போலீசார் விரைந்து சென்று கொடும்பாவியைக் கைப்பற்றினர். எரித்தவர்களைக் கைது செய்தனர்.” இப்படியான செய்திகளைப் பத்திரிகைகளில் அடிக்கடி பார்த்திருப்பீர்கள்.

இந்தக் கொடும்பாவி யார்? அரசியல் தலைவர், சினிமா நடிகர், பொதுத் தொண்டு செய்தவர், தனிப்பட்டவர் இப்படி யாராகவும் இருக்கலாம். ஒரு குழுவிற்கு, கட்சிக்கு, அமைப்பிற்கு எதிரான கருத்துக்களை சொன்னதால் மட்டுமே இவர்கள் கொடும்பாவி ஆகிவிடுவார்கள்.

வாழ்க்கை முழுக்க தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் எதோ ஒருவகையில் பங்களித்தவர்கள் தமிழ்மொழி பிராகிருத்திற்கும் சமஸ்கிருத்திற்கும் கடன்பட்டது என்று சொல்லிவிட்டால் போதும்; அவருக்குக் கொடும்பாவி கொளுத்தி விடுவார்கள். இப்படியாக ஒருவருக்குக் கொடும்பாவி கொளுத்தப்படும் போது அவரின் மொத்த வாழ்க்கையின் பங்களிப்புகள் சமூகத்தியாகங்கள் கணக்கில் எடுக்கப்படுவதில்லை.

இன்று கொடும்பாவி கொளுத்துபவர்கள் இதன் தாத்பரியம் என்ன? முந்தைய காலங்களில் யாருக்காக எதற்காகக் கொடும்பாவி கொளுத்தினார்கள் என்பதை எல்லாம் அறியார்கள். ஒருவரை அவமானப்படுத்துவதற்கு அவரது கருத்தை / பேச்சை புறக்கணிப்பதற்கு அடையாளமாகக் கொளுத்தப்படுவது என்ற அளவில்தான் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் உழவுத்தொழில் சார்ந்த நாட்டார் நம்பிக்கைகளில் கொடும்பாவி கொளுத்துதல் முக்கியமானது. இதை உழவர் மட்டுமல்ல, பிற பொதுமக்களும் செய்தனர். நாட்டார் வழக்காற்றுச் செய்திகளைச் சேகரித்தவர்கள் மழைக்காக மட்டுமே கொடும்பாவி கொளுத்தினர் என்கிறார்கள்.

தொடர்ந்து மழை பெய்யாததால் துன்பப்பட்ட காலத்தில் மழைவேண்டி நேர்ச்சை செய்யும் வழக்கம் பழமையானது. இது பெரும்பாலும் விவசாயம் சார்பான சடங்குகளில் அடங்கும். தமிழகத்தில் இந்த நேர்ச்சை ஒரே மாதிரியாக நடத்தப்படவில்லை. இதுபோன்ற வழக்காறுகள் கேரளத்தில் இல்லை என்கின்றனர்.

மழைக்காகச் செம்பெடுத்தல், மழைக்கஞ்சி காய்ச்சுதல், இரண்டு கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்தல், ஒப்பாரி பாடுதல் எனப் பலவகையான பழக்கங்கள் நடைமுறையில் உள்ளன.

சில இடங்களில் ஆதரவில்லாத சிறுவனை கழுதையில் இருக்க வைத்து அவன் உடம்பெல்லாம் கறுப்பு வெள்ளைப் புள்ளிகள் குத்தி, எருக்கலை பூமாலை போட்டு, தாரை தப்பட்டை முழங்க ஊர் முழுக்க ஊர்வலமாகக் கொண்டு செல்லுவது என்ற வழக்கம் இருந்தது. பூமணியின் ‘பிறகு’ நாவலில் மட்டுமே இச்செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

பூப்பெய்தாத மூன்று சிறுமிகள் பித்தளைக் குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து சடங்கு செய்வது திருநெல்வேலி மாவட்டப் பகுதியில் உள்ள கிராமங்களில் வழக்கம். நகரத்தார் சமூகத்தில் மழைக்கஞ்சி காய்ச்சுதல் இப்போதும் வழக்கத்தில் உண்டு.
தென்மாவட்டங்களில் மழைக்காகக் கொடும்பாவி கொளுத்துதல் என்ற வழக்கம் இருந்தது.

மழை வேண்டிச் செய்யப்படும் இச்சடங்கு முன்கூட்டித் தீர்மானிக்கப்பட்டுத் திட்டமிடப்பட்டு பலரால் செய்யப்படுகிறது. வைக்கோல், பழைய துணிகள், மூங்கில் கம்பு போன்றவற்றால் ஒரு பொம்மை செய்வர். இது 4 முதல் 5 அடி நீளம் இருக்கும். இதைக் கொண்டுசெல்ல வண்டி தயாரிப்பர். அல்லது குப்பை வண்டியைப் பயன்படுத்துவர்.

இந்த வண்டியில் அந்தப் பொம்மையை வானம் பார்க்க படுக்க வைப்பர். ஊர்க் காவலர், விவசாய நிலக்காவல, ஊர் துப்புரவுத் தொழிலாளர், புரதவண்ணார் என்பவர்களில் சிலர் இச்சடங்கில் கலந்து கொள்ளுவர். ஒருவர் வண்டியை இழுத்துச் செல்லுவார்.

இந்தப் பொம்மை ஊர்வலத்தில் தப்பு அடிப்பதற்கும் ஒப்பாரி பாடுவதற்கும் கூலிக்காக ஆட்களை அமர்த்தி இருப்பர். ஊர்ச் சிறுவர்கள் ஆரவாரம் செய்தபடி வருவர். கொடும்பாவி பொம்மை நிறைய நிலம் உடைய செல்வந்தர்களின் வீட்டு வாசலில் நிற்கும். குழுவின் தலைவர் போன்றவர் ஊர்வலத்தை முறைப்படுத்துவார்.

குழுவில் ஒருவர் கொள்ளிக்குடம் உடைப்பதற்குரிய மண்பானையை வைத்திருப்பார். கொடும்பாவி ஒவ்வொரு வீட்டின் நடையில் நிற்கும்போதும் மண்குடம் வைத்திருப்பவர்‘கொடும்பாவிக்கு காசு போடுங்க’ என்பார். ஆண்களே அந்தக் குடத்தில் அவரவர் வசதிக்குத் தக்க பணம் போடுவர்.

இப்படியாக ஊரின் பெரிய தெருக்களிலும் சந்து பொந்துகளிலும் செல்லும் இந்தக் கொடும்பாவி வண்டி இறுதியில் சுடுகாட்டை அடையும். அங்கே ஒரு இடத்தில் குழி தோண்டி கொடும்பாவியை அதில் போடுவர். அப்படிப் போடும்போது கொடும்பாவியைத் தூக்கி எச்சில் உமிழ்ந்து அவமானப்படுத்தி எறிவர்.

இதன் பிறகு கூலிக்கு மாரடிப்பவரும் தப்படிப்பவரும் குழியைச் சுற்றி வந்து ஒப்பாரி வைத்துப் பாடுவர். ஒருவர் கொடும்பாவிக்கு கொள்ளி வைத்து வாய்க்கரிசி போடுவார். பின்னர் கொடும்பாவியைத் திட்டிக் கொண்டே நெருப்பு வைப்பர். எரிந்து முடிந்ததும் எல்லோரும் விவசாயக் குளத்தில் குளித்துவிட்டு வீடுகளுக்குச் செல்லுவர்.

கொடும்பாவி வீதிவழிச் செல்லும்போது பாடப்படும் பாடலை புரதவண்ணான் சமூகத்தார் ஒருவரிடம் சேகரிக்கப்போனேன். அவருக்கு முழுதும் நினைவில்லை என்று முதலில் சொன்னார். அவருடன் பேச ஆரம்பித்தபோது அவரே நாலுவரி பாடினார். கொஞ்ச நேரத்தில் உற்சாகத்துடன் மேலும் பாடினார்.

கொடும்பாவி சாகாளோ
கோடிமழை பெய்யாதோ
கொடும்பாவி சண்டாளி
கொள்ளை நோய் வாராதோ
கொடும்பாவி சாகாளோ
கொஞ்ச மழை பெய்யாதோ
நாசகாரி சாகாளோ
நல்லமழை பெய்யாதோ
மூதேவி சண்டாளி
மூளி அலங்காரி
மூதேவி சண்டாளி
கொடும்பாவி கொளுத்துங்கோ
நல்லமழை பெய்ய வேண்டும்
நாடு செழிக்க வேண்டும்
ஊரு செழிக்க வேண்டும்
ஊருணி பெருக வேண்டும்
ஏரி நிறைய வேண்டும்
ஏக்கம் தீர வேண்டும்
மாரி பொழிய வேண்டும்
மறுகால் உடைக்க வேண்டும்

என்று இப்படியாக பாடல் நீண்டு கொண்டே இருக்கும். இந்தப் பாடலில் கொடும்பாவிக்குரிய பெயரடை இழிவானதாகவும். மழைக்குரிய பெயரடை நல்ல, கோடியளவு உயர்வுடையாகவும் இருக்கும். சமூகத்தில் கொடிய பாவிகள் இருப்பதால் மழை பொழியவில்லை.

அவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டும் என்னும் செய்திகள் பாடலில் இழையோடும். அதனால் பாடும்போது விளக்குமாற்றால் கொடும்பாவியை ஒருவர் அடித்துக் கொண்டே இருப்பார்.

பொதுவாகக் கொடும்பாவி பற்றிய தொன்மங்களிலும். பாடல்களிலும், வாய்மொழிச் செய்திகளிலும் கொடும்பாவி பெண்ணாகவே உருவகிக்கப் படுகிறாள். பாடல்களில் பெண்ணை முன்நிறுத்திப் பாடுவதாக உள்ளவையும் உண்டு.

பொதுவாகக் கொடும்பாவி பற்றிய தொன்மங்களிலும் பாடல்களிலும் கொடும்பாவி பெண்ணாகவே குறிக்கப்படுகிறார். பாடல்களில் பெண்ணை முன்நிறுத்துவதாக வரும் பகுதிகள் வெளிப்படையாக உள்ளன. இதற்கு தொன்மக்கதை உண்டு.

அயோத்தி மக்களைத் திருப்திப்படுத்த சீதையை காட்டுக்கு அனுப்பி விடுகிறான் இராமன். அப்போது அவள் கர்ப்பிணி. வான்மீகி அவளுக்கு ஆதரவு கொடுக்கிறார். அவள் ஆசிரமத்தில் குழந்தை பெறுகிறாள். இரட்டைக் குழந்தைகள். குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் அளவுக்கு சீதைக்குத் திராணி இல்லை. என்ன செய்வதென்று சீதைக்குத் தெரியவில்லை.

ஆசிரமத்திலிருந்து முதிய பெண் ஒருத்தி “இந்தக் காட்டில் மாயாவதி என்ற பெண் இருக்கிறாள். அவள் சுக்கிரனின் வைப்பாட்டி. அவளும் குழந்தை பெற்றிருக்கிறாள், அவள் திடகாத்திரமானவள். அவளிடம் இரட்டைக் குழந்தைகளுக்குப் பால் கேட்கலாம்’ என்கிறாள். வான்மீகி ‘அப்படியே செய்யுங்கள்’ என்றார், சீதையின் தோழிகளும் சீடன் ஒருவனும் சுக்கிரனின் வைப்பாட்டி வீட்டிற்குச் சென்றனர்.

சுக்கிரனின் வைப்பாட்டி, தன்னிடம் இராமனின் புத்திரர்களுக்கு பால் கேட்டு வந்த சீதையின் தோழிகளை அவமதிக்கிறாள். ‘வான்மீகி கேட்டால் நான் கொடுக்க வேண்டுமா?’ என்கிறாள். மாயாவின் இந்தத் திமிரான பேச்சை வான்மீகி அறிந்தார். ‘என்னை வந்து பால் கேட்கச் சொல்லுகிறாளா? சீதையின் குழந்தைகளுக்குப் பால் இல்லை என்றாளா?’ என்றார்.

வான்மீகியின் கண்கள் சிவந்தன. உதடு துடித்தது. ‘மாயாவதியே நீ கொடும்பாவி. உன்னை எல்லோரும் பழிப்பார்கள். மழை இல்லை என்றால் கூட உன்னைக் காட்டி மக்கள் பழிக்கட்டும். உன் உருவத்தை எரிக்கட்டும்’ என்றார். இப்படி ஒரு கதை உண்டு.

நான் ஒரு வருஷம் முன்பு தற்செயலாக சந்தித்த புரதவண்ணார் சமூகத்து ஆள் ஒருவர். தன் அம்மா பாடிய ஒரு பாடலைச் சொல்லுகிறேன் கேளுங்கள் என்றார். அந்தப் பாடல்,

மூதேவி சண்டாளி
மூளி அலங்காரி
சுக்கிரனின் பொண்டாட்டி
கொடும்பாவி வாறாளே
காறிக் காறித் துப்புங்கடி
கண்டாற ஓளியை ஏசுங்கடி

இந்தப் பாடலில் கொடும்பாவியை மூதேவி, சுக்கிரனின் வைப்பாட்டி என்று கூறுவதைப் பாருங்கள். இந்த மூதேவி பெயரில் ஒரு பெண் தெய்வம் உண்டு. இவள் பாற்கடலில் பிறந்தவள். காளாஞ்சன நிறம். பாம்பு ஆபரணம். இவளை மட்டில் பெரியம்மை என அவ்வையார் பேரில் உள்ள தனிப்பாடல் கூறும். இங்கு இவளது வாகனமாக கழுதை கூறப்படும்.

இந்த மூதேவி செல்வத்தைச் சீரழிப்பவள். பஞ்சத்தை உண்டாக்குபவள் என்பதால் இவள் கொடும்பாவி ஆனாள் என்பது ஒரு கதை. இவளது கொடியில் விளக்குமாறு இருக்கும். அதனால் விளக்குமாற்றால் கொடும்பாவியை அடிப்பது மரபு.

இன்றைய நடைமுறையில் உள்ள கொடும்பாவியைக் கொளுத்தும் வழக்கம் பழைய தொன்மத்திலிருந்து உருவானதுதான். திருஷ்டிப் பொம்மை இதிலிருந்து வேறுபட்டது. இப்போது ஊடகங்கள் உருவ பொம்மை என்று எழுதுகின்றன. பெயர் மாறினால் தொன்மம் அழிந்துவிடுமா?

- அ.கா.பெருமாள்

Pin It