yaman darkஇஃது உயிரினங்களின் இறப்போடு தொடர்புடைய சொல்.

இடைவெளி விட்டு துக்கம் விசாரிக்கச் செல்லும் போது, தங்களின் உள்ளம் அடைந்த துன்பத்தின் வெளிப்பாடாக, லேசா காய்ச்சலிருந்தது, மருந்து கொடுத்தோம், தேறிவந்தான். ஆனால் இந்த ‘யமனுக்கு’ பொறுக்கவில்லை. வந்து கொண்டு போய்விட்டான் என்று புலம்புவதை அறிவோம்.

தீயவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, நல்லவன் உயிரைப் பறிக்கும் இந்த ‘யமன்’ இன்னும் இவனை விட்டு வைத்துள்ளானே, இவனுக்கு எப்போது கணக்கெழுதப் போகுதோ இந்த யமன் என்ற புலம்பல்களும் அறிவோம். யாவருக்கும் ‘யமன்தான்’ இறுதி முடிவை காண்பவன் என்ற கருத்தியல் பதிந்துள்ளது.

‘யமன்’ எனும் இச்சொல் எவ்வாறு அமைந்தது? அதன் அடிப்படை யாது? சிந்தனைக்குறிய இச்சொல் அமைய காரணமாக அமைந்தது, ‘கருமை’ எனும் கருதுகோளே.

அதன் காரணமாகத்தான் ஒருவர் இறந்த நாளில் ‘கருப்பு வண்ணம்’ முதன்மையான இடம் பெறுகிறது. கருமை என்னும் கருத்துவேரைக் கொண்ட ‘யா’ என்னும் தூய தமிழ்ச் சொல்லே

யா>யாஅம்>யாம்>
யாம்+அம்>யாமம்;
யா+அன்>யாமன்>யமன்

என்றெல்லாம் திரிந்துள்ளதை, மொழியல் அறிஞர் ‘அருளியார்’ தன் சொல்லாய்வில் எடுத்துக் காட்டியுள்ளார். ‘யா’ என்பது பொழுதை அடிப்படையாகக் கொண்டு தோன்றியுள்ளது.

இது ‘கரிய இருள்’ நேரத்தைக் குறிக்கும். கரிய இருள் நேரமாகிய யாமப் பொழுதில் வந்து உயிரைக் கவர்ந்து செல்பவன் என்பதே ‘யமன்’ என்னும் பெயருக்கான பொருள்.

கிடைப் பிணமாகக் கிடந்த முதியோர்கள், வெப்பம் தணிந்த இரவு நேரத்திலேயே உயிர் மூச்சடங்கி இறப்பு எய்தியமையாலும், 'யாமம்' என்னும் நடு இரவின் இருள்வேளை இராப் பொழுதிலேயே இருந்ததாலும், 'யாமன்' என்னும் கற்பனை ஆற்றல் யாமத்தில் வந்து உயிர்களை வவ்விச் செல்லும் என்னும் கருத்து துளிர்த்துள்ளது.

முன்னர் நடு யாமத்தில் இறப்புகள் நிகழ்ந்து, அந்த நேரத்தில் அழுகுரல்கள் ஒலித்துள்ளதை நினைவில் நிறுத்துவோம். இந்த நடு யாமம்தான் பின்னர் ‘நடு சாமம்’ என மருவியுள்ளது.

‘யாமன்’ என்னும் ‘செப்பச் சொல்’ வடிவமே, பேச்சு வழக்கில் திரிந்துள்ளது என அருளியார் விளக்குகிறார். இந்த ‘யமனக்கு’ வாகனமாக சொல்லப்படுவது ‘எருமை’ என்ற விலங்கு. இதுவும் ‘கருமை’ எனும் கருத்தியியலில் அமைந்துள்ளது. 

காரிருளில் வந்து யமன் உயிரை வவ்விச் செல்வதென்னும் கற்பனையை வைத்து, காரிருளை உருவகப்படுத்தும் ‘எருமையே’ யமனின் வாகனமாக்கப் பட்டுள்ளது. ‘யமன்’ என்னும் பெயர் ‘"ஞமன்"‘ எனத் திரிந்துள்ளது.

இதற்கு சான்றாக ‘"திருந்துகோல் ஞமன்"‘ என்ற பரிபாடல் வரியை சான்று காட்டுகிறார் அருளியார். அப்பர் "நாமார்க்கும் குடியல்லோம் ‘நமனை’ அஞ்சோம்" என்பார். சில நூலோர் இதை ‘ஞமனை’ என்றும் குறிப்பிடுவர். மாணிக்கவாசகரோ "யாமார்க்கும் குடியல்லோம் ‘யாதும்’ அஞ்சோம்" என்பார்.

‘யாதும்’ என்ற சொல்லில் அனைத்தையும் அடக்கிவிட்டார் மணிவாசகர். 'காலன், கூற்றுவன், நடுவன், அரி, கணிச்சி, மடங்கல்' என, யமனைக் குறிக்கும் சொற்களும் உள்ளன. இவைகள் பெரும்பாலும் இலக்கிய வழக்கில் வரும் சொற்கள்.

"பாதிமதி நதி எனத்தொடங்கும்" என்ற ‘திருப்புகழ்’ பாடலில் "காலன் எனை அணுகாமல்...." என அருணகியார் பாடுவார்.

தேவாரத்தில் சிவபெருமானை குறிக்கும் ‘கூற்றுவன்’ என்ற சொல் விரவியுள்ளது. ஆறறிவு கொண்ட மாந்த இனத்தின் உயிரை வவ்விச் செல்வதும் ‘யமன். அப்போது அவன் ‘அருவுருவாகி’ வருகிறான்.

ஆனால், ஒரறிவு முதல் ஐந்தறிவு வரையுள்ள உயிரினங்களின் உயிரைப் பறிக்க மனிதனே யமனாகிறான். அப்போது மனிதன் ‘உருவாகவே’ இருக்கிறான்.

ஆகையால், மாந்த இனமே ‘யமன்’ என்பதை, அவன்

"யம பாதகன், 
யம கிறாதகன்,
யமனாய் வந்தான்"

போன்ற சொல்லாடல்கள் மூலம் உணரலாம்.

- ப.தியாகராசன் 

Pin It