முனைவர் சி.மகேசுவரன் அவர்கள் தமிழக ஆய்வுச் சூழலில் மொழியியல், மானிடவியல், சமூகவியல், நாட்டார் வழக்காற்றியல் சார்ந்து தொடர்ச்சியாக இயங்கக்கூடிய ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்க ஆய்வாளர் ஆவார். இவர் அருங்காட்சியகப் பணியாளராகத் தம் பணியைத் தொடங்கி, பழங்குடியினர் சார்ந்து மொழியியல் ஆய்வில் முனைவர்பட்டம் பெற்றவர். தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் ஆய்வு நடுவ மேனாள் இயக்குநராகப் பணியாற்றியவர். தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் வரலாற்றியல், சமூகவியல், மார்க்சியவியல், மானிடவியல் உள்ளிட்ட துறைசார் அணுகுமுறையோடு தனக்கே உரிய ஆய்வு முறையியலோடு கள ஆய்வின் அடிப்படையில் அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர். தற்போது பாரதியார் பல்கலைக்கழக மொழியியல் துறையில் முதுநிலை ஆய்வுத் தகைஞராகப் பணியாற்றி வருகிறார்.

c maheswaran 500தமிழ்ச் சமூகம் குறித்த அடையாளங்களை மீட்டெடுத்தலுக்கான முறையியலாக: யூகங்களை முன்வைத்த கற்பனாவாத கருத்தியலைத் தவிர்த்து மக்களின் வாழ்வியல் அடிப்படையில் யதார்த்தவாத பின்புலத்தோடு சிரத்தையான கள ஆய்வு அடிப்படையில் எந்த ஒரு பொருண்மையையும் அணுகுதல் என்பது முனைவர் சி. மகேசுவரன் அவர்களின் ஆய்வு அணுகுமுறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றிற்குச் சமீபத்தில் வெளிவந்து ஆய்வாளர்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்ற 'பண்பாட்டு ஆய்வுகள்'. என்ற நூல் தக்கதொரு சான்றாகும். இந்நூல் மட்டுமின்றி தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பல நூல்களைப் பழங்குடிக் குழுக்கள் சார்ந்து இயற்றியுள்ளது இந்நூலாசிரியருக்குரிய சிறப்பாகும்.

இன்றைய சமகாலத்தில் தொடர்ச்சியாக மானிடவியல், இனவரைவியல், நாட்டார் வழக்காற்றியல் எனும் துறைகளைச் சார்ந்த பொதுத்தன்மைகளிலும் பழங்குடிகள் சார்ந்தும் பரவலாகக் கட்டுரைகளும் நூல்களும் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இப்பெயர்களை ஒரு கவர்ச்சிக்குரிய ஆய்வுப் பெயர்களாக எடுத்துக்கொண்டு எழுதி வெளியிடும் போக்கும் உள்ளது. குறைந்தபட்சம் அந்தந்தத் துறைசார்ந்த அறிவோ அல்லது அடிப்படைகளோ இல்லாமல் அதாவது கள ஆய்வுப் பணிக்கும் கள ஆய்வுப் பார்வைக்கும் கூட வேறுபாடு அறியாமல் ஆய்வுகள் வெளிவருவதும் இன்றைய நிலையில் பெருகியுள்ளது.

இவ்வாறு வெளிவரும் நூல்களுக்கிடையே கள ஆய்வு அடிப்படையில் முறையான பங்கேற்றலும் உற்றுநோக்கலும் கொண்ட ஆய்வு நூல்களும் வருவதையும் மறுப்பதற்கில்லை. முழுமையான கள ஆய்வு மேற்கொண்டும், கள ஆய்வில் கிடைத்த தகவல்களை ஆய்வு முறையியலோடு சேகரித்தும், தொகுத்தும், ஆய்வுக்குட்படுத்தியும், ஆய்வுக்குட்படுத்திய பொருண்மை சார்ந்த சிக்கல்களைக் கண்டறிந்தும், அதற்குரிய தீர்வையும் கூறியுள்ள நூல்தான் முனைவர் சி.மகேசுவரன் அவர்களின் 'தமிழ்நாட்டுப் பழங்குடிக் குழுக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்' என்னும் இந்த நூல்.

இந்நூலில் நூலாசிரியர் தமிழ்நாட்டுப் பழங்குடிக் குழுக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஒரு பொதுப்பார்வை, விளிம்புநிலைக்குத் தள்ளப்படும் தமிழகப் பழங்குடியினர், பழங்குடியினர் மேம்பாட்டில் எதிர்ப்படும் தடைக் கற்கள், வன உரிமைகள் சட்டம்: ஓர் அறிமுகம், பொருளாதாரத் தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கலில் பழங்குடி மக்களுக்கு நேரிடும் இன்னல்கள், சமுதாயச் சான்று பெறுவதில் பழங்குடியினர் எதிர்கொள்ளும் சிக்கல்கள், பட்டியல் பழங்குடி நிலை அறிந்தேற்பில் நிலவிடும் தமிழ்நாட்டின் நிலுவை முறையீடுகள், தமிழ்நாடு மாநில அட்டவணைப் பழங்குடியினர் பட்டியல்: ஒரு மீளாய்வுப் பார்வை, தமிழ்நாட்டுப் பழங்குடிக் குழுக்கள் எதிர்கொள்ளும் அடையாளச் சிக்கல்களும் பரிந்துரைக்கும் தீர்வுகளும் என்னும் ஒன்பது பகுதிகளில் தமிழ்நாட்டுப் பழங்குடிக் குழுக்கள் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து நுட்பமாகவும் எளிமையாகப் புரிந்துகொள்ளும் நிலையிலும் பதிவு செய்துள்ளார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பகுதிகுறித்தும் விரிவாக உரையாடுவதற்கான களத்தை நூலாசிரியர் தம்முடைய விரிவான களஆய்வுத் தரவுகளால் அளித்துள்ளார். ஆனாலும் ஒவ்வொரு பகுதிகுறித்த விளக்கங்களாகவும் விமர்சனங்களாகவும் இல்லாமல், தவிர்க்க இயலாத சில கூறுகள் குறித்து இந்நூல் திறனாய்வில் பகிர்ந்துகொள்ளலாம். இவற்றின்மூலம் இந்நூலின் இன்றியமையாமையை ஆய்வுலகம் அறிந்துகொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.

அடையாளச் சிக்கல்

“ஆதிவாசி, தொல்குடி, பழங்குடி, திணைக்குடி என்றெல்லாம் பட்டியல் பழங்குடியினரது தொன்மை, பழமை, திணைசார்பு பெரிதாகப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்களை வனத்திற்கு மட்டும் உரியோர் என்று பொருள்படும் அளவில் ‘வன ஜாதி’ என்பதும், மக்கள் வகைமையினர் எனப் பொருள்படப் பொத்தாம் பொதுவான ‘ஜன ஜாதி’ என்பதும் அதிர்ச்சி அளிக்கின்றன என்கிறார் இந்நூலாசிரியர். ‘வன ஜாதி’ ‘ஜன ஜாதி’ என்ற இரு சொற்கள் என்பவை வெறும் சொற்கள் அல்ல. இச்சொற்களுக்கான அரசியலால் பழக்குடிக் குழுக்களின் அடையாள இழப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அடையாள இழப்பைப் பற்றி விரிவாக நூலாசிரியர் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுத்தன்மையில் மக்கள் வகைமையினர் என்ற சொல் உருவாக்கம் என்பது அரசின் அடுத்தடுத்த செயல்பாடுகளுக்குக் கொண்டு செல்வதற்கான நுழைவு வாயிலாக அமைகின்றது. அதாவது, வனத்தில் வாழும் மக்களை சமவெளிக்குப் புலப்பெயர்ச்சி செய்தலின் மூலம் பழங்குடி குழுக்களுக்கே உரிய பண்பாட்டு அடையாளத்தையும் மொழி அடையாளத்தையும் அழித்தொழிக்கச் செய்யும் செயல்பாடுகளின் அணிவகுப்புகள் செயல்படத் தொடங்கி விடுகின்றன. அடையாள அழிப்பின் தன்மையை பழங்குடிக் குழுக்களுக்கு வழங்கப்படும் மறுகுடியேற்ற நிலையைக் குறித்து நூலாசிரியர் குறிப்பிடும்போது, ‘நீரில் வாழும் மீனினத்தை நிலத்தில் எறிவதற்கு ஒப்பாகும்’ என்கிறார். இந்த வரிகளுக்குள் நீளும் வலி என்பது சொல்லுதற்கரியது. காலம்காலமாகப் பழகிவந்த இடம் பறிக்கப்படுவதும் தங்களின் எல்லாவிதமான சூழல்களிலிருந்தும் வேரறுக்கப்படுவதும் ஒரு இனவழிப்பின் செயல்பாடாகும்.

நிறுவன சமயங்களுக்குள் பழங்குடிக் குழுக்களைக் கொண்டு வருதல்

ஒன்றிய அரசின் சமீபகால செயல்பாடுகளில் ஒன்று ஒற்றைப் பண்பாட்டுத் தன்மையை உருவாக்குதல். இந்தியா என்பது பன்மொழியும் பன்மியப் பண்பாட்டுத் தன்மையையும் உடைய நிலவியல் சூழல் உடையது. இத்தகைய அடிப்படையை மறந்து அல்லது மறைத்து நாடு முழுவதுமான ஒற்றைப் பண்பாட்டுத் தன்மையை உடையதாகக் கொள்ளும் செயல்பாடுகளும் அதிகரித்துக் கொண்டிருப்பதன் முந்தைய செயல்பாட்டின் வடிவம்தான், 2011ஆம் ஆண்டில் பழங்குடிக் குழுக்களைக் கணக்கிடும்போது ‘பிறர்’ என்கிற வகைமைக்கான இடத்தை நீக்கிய நிலையாகும். தற்போது இந்திய பழங்குடிக் குழுக்களில் பெரும்பான்மையினரை ‘இந்து’ என்கிற நிறுவனப் பெருஞ்சமயத்திற்குள் அடைக்கும் நிலையும் உருவாகியிருக்கிறது. இத்தன்மை பழங்குடிக் குழுக்கள் எதிர்கொள்ளும் முதன்மையான சிக்கல்களில் ஒன்றாக நூலாசிரியர் விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சித் திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்துதல்

பழங்குடிக் குழுவினர் தங்களுடைய மரபார்ந்த வாழிடங்களான மலைப்பகுதி, மலையடிவாரப் பகுதி, சமவெளிப் பகுதி, கழிமுகப் பகுதி, கடலோரப் பகுதி எனப் பல்வேறுபட்ட நிலவியல் பரப்புகளில் வாழ்ந்து வருகின்றனர். இப்பழங்குடிக் குழுக்களை வளர்ச்சித் திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்துகிறோம் என்ற பெயரில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லாத இடங்களில் மாற்றுக் குடிசைகளை அமைத்து இடம்பெறச் செய்கின்றனர். இச்சூழலால் வேட்டையாடுதல் உள்ளிட்ட தம்முடைய மரபார்ந்த அறிவைப் பயன்படுத்துதலுக்கான சூழல் இன்மையால் புதிய குடியிருப்புகள் அமைந்துள்ள இடம்சார்ந்து இருக்கும் வேளாண் நிலங்களிலும் தொழிற்சாலைகளிலும் வேளாண் கூலிகளாகவும், தினக்கூலிகளாகவும் இப்பழங்குடியினர் உருவாகி வருகின்றனர். இந்த மரபுசார் அறிவு இழப்பு என்பது அறிவு இழப்பாக மட்டுல்லாமல் பண்பாட்டு இழப்பாக உருமாறி பண்பாட்டு வறுமைக்கும் அடையாள இழப்பிற்கும் விளிம்பு நிலையாக்கத்திற்கும் பழங்குடி இனக்குழுக்கள் செல்லுவதற்கு ஒன்றிய, மாநில அரசின் வளர்ச்சித்திட்டப் பணிகள் என்ற போர்வையில் செயல்படுத்தப்படும் பணிகள் வாயில்களாக அமைகின்றன.

தனியார் உடைமையாகவும் வணிகப் பொருளாகவும் மாறுதல்

பழங்குடிகளுக்கான சிக்கல் உருவாக்கலாக புதிய அவதாரம் எடுத்திருப்பது, பழங்குடிக் குழுக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் இடங்கள் தனியாருக்குரிய உடைமைகளாகவும், வணிகப் பொருளாகவும் மாற்றம் பெற்றுவருவது. காடு, மலைசார் இடங்களில் சுற்றுலா விடுதிகள் அமைத்தல், ஆன்மிகத் தலங்களை உருவாக்குதல் என்னும் நிலைகளில் தனியாருக்குக் காடுசார், மலைசார் இடங்கள் அளிக்கப்படுகிறது. பழங்குடியினரின் இத்தகைய காடுசார், மலைசார் உரிமையைப் பறிக்கும் தன்மைகளையும் இந்நூலில் நூலாசிரியர் எடுத்துக்காட்டியிருப்பது பழங்குடிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களின் பன்முகங்களை அறிந்துகொள்ளச் செய்வதோடு, பழங்குடிக் குழுக்கள் எதிர்கொள்ளும் வலிகளின் பரிமாணங்களைப் பறைசாற்றுவதாகவும் உள்ளது.

பழங்குடிக் குழுக்களை அந்நியமாக்குதல்

இந்தியா போன்ற பல நாடுகளில் சமகாலத்தில் அரசுகளின் சட்டங்கள் யாருக்கான சட்டமாக உள்ளது என்பது மிக முக்கியமான வினாவாக உள்ளது. மக்களுக்கான நலத் திட்டங்கள், அறிவியல் பரப்புதல், தொழில்நுட்ப வளர்ச்சி, நகரமயமாக்கல், அந்நிய நாடுகளின் பொருளாதார முதலீடுகளிலான நடவடிக்கைகள், உலகமயமாக்கச் சூழல் முதலானவற்றின் செயல்பாடுகளைக் குறித்தும், அவற்றின் எதிர்கால இயக்கங்கள் குறித்தும் பொறுப்புடன் சிந்திக்க வேண்டிய கடமையும் உள்ளது.

இத்தகைய செயல்பாடுகள் ஒரு குறிப்பிட்ட பகுதிசார் எல்லையில் கிடைக்கப்பெறும் பொருள்களைக் கொண்டு தன்னிறைவான வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் பழங்குடிக் குழுக்கள் தன் மரபார்ந்த வாழ்வியலுக்கு எதிரான ஒவ்வாதவற்றோடு ஒத்துப்போகாமல் அவற்றிலிருந்து அந்நியமாகும் சூழல் இயல்பாக உருவாகின்றது. இத்தகைய அந்நியமாக்கல் தன்மையை நூலாசிரியர் குறிப்பிடும்போது, ‘நீலகிரி மாவட்டப் பணியன் பழங்குடியினர் நிலத்தில் முதல் விதைப்பைத் தொடங்குதல், நாற்று வயலின் சேற்று நிலத்தில் நடவின்போது ஆடுதல், விளைந்த நிலத்தின் சிறு பரப்பில் புத்தரிசிச் சடங்கை மேற்கொள்ளல் என்றெல்லாம் தொடர்ந்து ஆற்றிடும் பண்பாட்டு நடவடிக்கைகள் இப்பழங்குடி மக்களே இந்நிலத்தின் மரபார்ந்த உரிமைப் பழங்குடியினர் என்பதை பறைசாற்றிடும்’ எனப் பதிவு செய்கிறார். இவ்வாறு ஒரு நிலத்தோடு நேரிடையாக உறவு கொள்ளும் மக்கள் அந்த நிலத்திலிருந்து அந்நியப்படுத்தும்போது அம்மக்களின் நிலத்தின் மீதான உரிமை, நிலம் சார்ந்த நம்பிக்கைகள், நம்பிக்கைகளின் நிகழ்த்துதலான சடங்குகள், சடங்குநிலையிலான பண்பாட்டுத்தன்மை என அனைத்தும் அந்நியப்படுத்துதலாகவும், சில காலங்களுக்குப் பிறகு மறந்தும் மறைந்தும் போகக்கூடிய நிலை உருவாகிறது. இவை தம் மரபான நிலத்திலிருந்து அந்நியமாக்கப்பட்ட மக்களின் தொடர் இன்னல்களாகும். கோத்தர், தொதவர், இருளர் உள்ளிட்ட பல பழங்குடிக் குழுக்களுக்கு ஏற்பட்ட நிலைகளை தக்கச் சான்றுகளாக எடுத்துக்காட்டி விளக்கியிருப்பது பழங்குடிக் குழுக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களின் உச்சத்தை உணர்த்துவதாக உள்ளது.

இந்நூல் ஒரு கைவிளக்கு

பழங்குடிக் குழுக்கள் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் பழங்குடி மக்களின் புற நிகழ்வுகளான நம்பிக்கைகளையும் சடங்குகளையும் வழிபாட்டு முறைமைகளையும் குறித்து தகவல்களைச் சேகரித்து ஆய்வுக்குட்படுத்தும் நிலையிலேயே உள்ளனர். ஆனால், இந்நூலாசிரியர் ஒரு பட்டத்திற்கான ஆய்வுக்காக இந்த ஆய்வையும் பதிவையும் செய்யவில்லை. பழங்குடிக் குழுக்களின் வாழ்வியலை, உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற தீராத அவாவினால் இந்நூலை உருவாக்கியிருக்கிறார். பழங்குடிக் குழுக்கள் ஒரு சமுதாயச் சான்று பெறுவதற்குப் படுகின்ற பாடுகள் பலவற்றை வரிசைப்படுத்துகிறார். தகுதியானவர்கள் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகிறார்கள், அவ்வாறு புறக்கணிப்பதற்கு அரசுசார் அதிகாரிகளின் பழங்குடிக் குழுக்கள் குறித்த பெயர், இடம், எல்லை முதலானவற்றைச் சார்ந்த புரிதல் இல்லாத காரணங்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதையெல்லாம் நுட்பமான ஆய்வுகளின் மூலம் விளக்கியிருக்கிறார். இந்நூலில் நூலாசிரியர் தம்முடைய நீண்டகால ஆய்வின் மூலம் பழங்குடிக் குழுக்கள் குறித்துப் பெறப்பட்ட ஆழமான அறிவின் மூலம் இப்பழங்குடிக் குழுக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை மட்டும் குறிப்பிடாமல், அச்சிக்கல்களைப் போக்குவதற்கான தீர்வுகளையும் விரிவாகப் பதிவு செய்துள்ளார். இப்பதிவுகள் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்நியா முழுவதில் உள்ள பழங்குடிக் குழுக்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் ஒரு கை விளக்காக அமையும்.

இந்நூலாசிரியர் செறிவான கள ஆய்வு நெறிமுறைகளோடு நல்நோக்கம் கொண்டு உருவாக்கப்பட்ட இந்நூல் மானிடவியலாளர், சமூகவியலாளர், சமூகப் பணியியலாளர் உள்ளிட்ட அறிவர் குழுவினரிடமும் பழங்குடிச் செயற்பாட்டாளர்களிடமும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் உள்ளிட்ட சமூகச் செயற்பாட்டாளர்களிடமும் நிருவாகப் பணியாளர்களிடமும் ஆட்சிப் பணித் திட்டமிடும் ஆட்சியதிகாரிகளிடமும் கிடைக்கப் பெற்றும் வாசிக்கப்பட்டும் புரிந்து கொள்ளும்போது பழங்குடிக் குழுக்களின் சிக்கல்கள் அடையாளம் இல்லாமல் போகும்.

இந்நூல் அறிவர், ஆய்வர், ஆட்சியாளர் எனும் பல்வேறு தரப்பினரின் கையில் கிடைப்பதற்கும் வாசிப்பதற்கும் பழங்குடிக் குழுக்கள் குறித்துப் புரிந்துகொள்ள முயற்சிப்பதற்கும். இந்நூல் குறித்த இந்த அறிமுகம் பயன்படும்.

தமிழ்நாட்டுப் பழங்குடிக் குழுக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் | முனைவர் சி.மகேசுவரன் | வெளியீடு: என்.சி.பி.எச்., சென்னை | விலை ரூ.95

முனைவர் மு. ஏழுமலை, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர், உதவிப் பேராசிரியர், துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி, அரும்பாக்கம் சென்னை.