ஒப்பிலக்கிய ஆய்வாளராகவும் பாரதி ஆய்வாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் புலம்பெயர்வு சார்ந்த ஆய்வாளராகவும் பன்மொழிப் புலமையாளராகவும் திகழும் பேராசிரியர் பா.ஆனந்தகுமார் தமது ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்குத் தமிழ் மலையாள நாட்டுப்புறக் கதைப்பாடல் தலைவர்களையும் முனைவர் ஆய்விற்குப் பாரதியார், குமாரன் ஆசான், குரஜாட அப்பாராவு கவிதைகளில் புனைவியலையும் ஆராய்ந்தார். தற்பொழுது திண்டுக்கல், காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பாரதியார் ஆய்வகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். மேலும், நாவாவின் ஆராய்ச்சி, இந்திய ஒப்பிலக்கியம், சான்லக்ஸ், உங்கள் நூலகம் ஆகிய இதழ்களில் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளராகவும் பணியாற்றி வருபவர். இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்று தமிழ் மணத்தைப் பரப்பியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ரஷ்ய ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். ஒப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, திறனாய்வு ஆகிய துறைகள் தொடர்பாக நூல்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டவர். இத்தகு சிறப்பிற்குரிய பேராசிரியரின் ஒப்பிலக்கியப் பயணத்தை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

pa anandkumarஉங்கள் நூலகம் இதழில் பேராசிரியரின் கட்டுரை வெளியீடுகள்

உங்கள் நூலகம் இதழ் பேராசிரியர் பா.ஆனந்தகுமாரின் ஆய்வுப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்தது என்றால் மிகையன்று. இவ்விதழில் இலக்கியப் பரண் : மறையும் நூல்கள் வரிசை என்ற தலைப்பில் காத்த பெருமாள் பிள்ளை இயற்றிய திருவெண்காடரென்னும் பட்டினத்தார் அம்மானை (2006), சாந்தலிங்க சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய வைராக்கிய சதகம் மூலமும் சிதம்பர சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய உரையும் ஆகிய தலைப்புகளில் நூல் பற்றிய சிறு குறிப்புகளைத் தருகின்றார். மேலும், இவ்விதழில் பேராசிரியர் செ.போத்திரெட்டியுடன் ஒரு நேர்காணல் (2011), மு.வ.வின் இலக்கியத் திறனாய்வு நூல்கள் -
ஒரு மதிப்பீடு (2012), இந்தியாவில் முற்போக்குப் பண்பாட்டு இயக்கம் - ஒரு விமர்சன மதிப்பீடு - கே.என்.பணிக்கர் (2012), மதுரையில் வரலாற்று ஆய்வு அரங்கம் (2013), டி.செல்வராஜின் தோல் நாவல் - வரலாறும் எதார்த்தமும் (2013), இரு நகரங்களின் கதை சொல்லி - சுப்ரபாரதிமணியன் (2014), பக்தினும் தொல்காப்பியரும் (2014), அண்மைக் காலத் தமிழ் நாவல்களின் போக்குகள் - சில மதிப்பீடுகள் (2015), தற்கால மலையாளக் கவிதையில் கண்ணகி தொன்மம் (2015), புதிய தாராளமயமும் இந்துத்துவாவும் (2015), உலகத் தாய்மொழி நாள் (2016), புலம்பெயர்ந்தோர் சிறுகதைகள் (2016), சங்கக் கவிதைகள் - காளிதாசன் காவியங்கள் - ஊடிழை இலக்கியத் தன்மை (2017), கூட்டாட்சித் தத்துவத்தின் மதிப்பறியாத மோடி அரசாங்கம் (2017), மார்க்சியத் திறனாய்வும் தமிழ் இலக்கியமும் (2018), மணிமேகலையில் அளவையியல் (2019), டி.செல்வராஜ் - சோஷலிஸ எதார்த்தவாதத்தின் வெற்றி முகம் (2020), மார்க்சிய அறிவுச் சுடர் அணைந்தது (2021), இந்திய விடுதலைப் போராட்ட இயக்கமும் ப. ஜீவானந்தமும் (2023), தமிழில், தேசிய இலக்கியங்கள் - ஒரு புதிய வரைசட்டகத்தை நோக்கி (2023), தமிழ் இலக்கியமும் மலையாள இலக்கிய உருவாக்கமும் (2024), மணிமேகலை காப்பியத்தின் எடுத்துரைப்பின் அரசியல் (2024) முதலிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இக்கட்டுரைகள் பலதரப்பட்டன. இவற்றுள் பக்தினும் தொல்காப்பியரும் (2014), சங்கக் கவிதைகள் - காளிதாசன் காவியங்கள் - ஊடிழை இலக்கியத் தன்மை (2017), மார்க்சியத் திறனாய்வும் தமிழ் இலக்கியமும் (2018), மணிமேகலையில் அளவைவியல் (2019), தமிழ் இலக்கியமும் மலையாள இலக்கிய உருவாக்கமும் (2024), மணிமேகலை காப்பியத்தின் எடுத்துரைப்பின் அரசியல் (2024) உள்ளிட்ட ஆய்வுக் கட்டுரைகள் ஒப்பிலக்கியத்தோடு தொடர்புடையனவாகும். இக்கட்டுரைகளின் உள்ளடக்கக் கருத்தியல்கள் வழி அவரது ஒப்பிலக்கியச் சிந்தனைகளைக் காணலாம்.

இலக்கியத்தை இயக்கங்களோடும் அணுகுமுறைகளோடும் ஒப்பிடுதலைப் பேராசிரியரிடம் காணலாம். இவர் உங்கள் நூலகம் இதழில் ஜனவரி - 2008 இல் 'பெண்ணிய வெளியும் இனவரைவியல் எழுத்தும் (சு.தமிழ்ச்செல்வியின் 'மாணிக்கம்' நாவலை முன்வைத்துச் சில குறிப்புகள்)' என்ற தலைப்பில் ஒப்பிட்டு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளார். இதில் சு.தமிழ்ச்செல்வியின் மாணிக்கம் புதினத்தில் இடம்பெற்றுள்ள பெண் வெளியை இனவரைவியற் எழுத்துக்களோடு தொடர்புபடுத்தி விளக்கியுள்ளார். சுகிர்தராணியின் கவிதைகளில் பெண் உடலரசியல் பற்றியும் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாட்டார் வழிபாட்டு மரபில் குலக்குறி வழிபாடு இன்றியமையாத மற்றும் தவிர்க்கவியலாத ஒன்று. இதைச் சங்க இலக்கியத்தில் பொருத்திப் பார்த்து ஆராய்ந்து 'சங்க இலக்கியத்தில் குலக்குறிப் பண்பாட்டு மரபு' (2011) எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை உங்கள் நூலகம் இதழில் வெளியிட்டுள்ளார் பேராசிரியர் பா.ஆனந்தகுமார். இக்கட்டுரையில், கடையெழு வள்ளல்கள் பொதுவுடைமை சார்ந்த இனக்குழு வாழ்வின் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர் என்பதையும் பாரி முல்லைக்குத் தேர் தந்ததும் பேகன் மயிலுக்குப் போர்வை தந்ததும் அவர்களது கொடைச் செயல்களைக் காட்டுவனவாக இருந்தாலும் இவை குலக்குறி அடையாளத்தினைக் காக்க வேண்டும் என்ற முனைப்பினால் ஏற்பட்டதாகும் என்பதையும் காவல் மரங்கள் பண்டைய காலத்தில் புனிதமாகப் பார்க்கப்பட்டன என்பதையும் மூவேந்தர்களின் அடையாளப் பூக்களும் கொடிகளும் இனக்குழு வாழ்வின் குலக்குறித் தன்மையில் இருந்து வளர்ந்த அடையாளச் சின்னங்கள் என்பதையும் சான்றுகள் வழி சுட்டிக் காட்டியுள்ளார் (உங்கள் நூலகம், ஜூன், 2011).

பக்தினும் தொல்காப்பியரும் எனும் கட்டுரையில் ருஷ்ய உருவவியலாளரான மிகையில் பக்தினையும் தமிழ் இலக்கணியான தொல்காப்பியரையும் உரையாடலியம் கோட்பாட்டு அடிப்படையில் ஒப்பு நோக்கியுள்ளார். பக்தினின் உரையாடலியம் (Dialogism) சசூருக்கும் பக்தினுக்கும் இடையேயுள்ள வேறுபாடு (மொழிக் கிடங்கு x பேச்சு வழக்கு – சசூர், கேட்போன் x கூறுவோன் - பக்தின்), உரையாடலில் உள்ள அதிகார மையம், பேச்சின் வகைகள், பல்குரல் தன்மை (Polyphony) ஆகியவற்றைப் பக்தினை முன்னிறுத்தி விளக்கியுள்ளார். அதன் பிறகு பக்தினின் பார்வையில் தொல்காப்பியம் பற்றி ஒப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் கிளவியாக்கத்தில் கூறும் செப்பு, வினா பற்றிய நூற்பாக்கள் பக்தினின் உரையாடலியத்தோடு தொடர்புடையனவாக உள்ளன என்பதைச் சான்றுகளுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், வணிக மரபு (நூற்.518) பற்றிக் கூறும்போது, பொருளின் சமூகத் தன்மையைச் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்து பக்தினின் உரையாடலியம் பற்றிய கருத்துரு தொல்காப்பியக் கூற்றுக் கோட்பாட்டில் உள்ளமையை விளக்கியுள்ளார். தொல்காப்பியர் மொழியில் நிலவும் சமூகப் படிநிலை பற்றியும் அதிகார விளையாட்டு பற்றியும் குறிப்பிட்டுள்ளதைக் காட்டியுள்ளார். தொல்காப்பியத்தில் வரும் களவு, கற்பு ஆகியவற்றில் கூற்று நிகழ்த்துவோர், கேட்போர் பற்றிய நூற்பாக்கள் பக்தினின் கேட்போர் - கூறுவோர் ஆகியவற்றோடு தொடர்புடையனவாக இருக்கும் நிலையை நிறுவியுள்ளார் (உங்கள் நூலகம், செப்டம்பர், 2014).

சங்கக் கவிதைகள் - காளிதாசன் காவியங்கள் - ஊடிழை இலக்கியத் தன்மை என்ற கட்டுரை உங்கள் நூலகம் இதழில் 2017 இல் வெளிவந்துள்ளது. இக்கட்டுரையில், பேராசிரியரின் ஒப்பியல் சிந்தனை வெளிப்படுவதைக் காணலாம். சுலோவாக்கியா நாட்டு ஒப்பிலக்கிய அறிஞரான மரியான் காலிக் பேசிய ஊடிழை இலக்கியத் தன்மை (Inter Literary) அடிப்படையில் காளிதாசரின் காவியங்களில் காணப்பெறும் சங்க இலக்கியத்தின் ஊடிழை தன்மையை ஆய்ந்துள்ளார். ரெனிவெல்லக், டயோனிஸ் ட்யூரிஸின், பியாஜெட் ஆகியோர் தரும் விளக்கங்களைத் தம் கட்டுரைக்கு உறுதுணையாகக் கொண்டு, சங்கக் கவிதைகளையும் காளிதாசரின் படைப்புகளையும் ஒப்பிட்டுக் காண்கின்றார் பேராசிரியர் பா.ஆனந்தகுமார். சங்க நூல்களில் இடம்பெற்றுள்ள உவமை, படிமம் முதலான புனைவுக் கூறுகள் காளிதாசரின் படைப்புகளில் காணப்பெறுகின்ற தன்மையைச் சான்றுகள் வழி விளக்கியுள்ளார். காளிதாசரின் ரகுவம்சம், ருதுசம்காரம், மேக சந்தேசம் உள்ளிட்ட படைப்புகளில் வரும் உவமை, உருவகம், காதலர்கள் சந்திக்கும் அகவெளி மற்றும் புறவெளி, கருத்துப் பொருள் மற்றும் காட்சிப் பொருள் ஆகியவை சங்கப் பாடல்களோடு ஒன்றுபட்டுள்ள நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளார் (உங்கள் நூலகம், மே, 2017).

பேராசிரியர் பா.ஆனந்தகுமார் அவர்கள் மார்க்சியச் சிந்தனையில் ஆர்வம் கொண்டவர். மார்க்சிய இயக்கத்தோடு இயங்குபவர். எனவே, அவரது கட்டுரைகளில் மார்க்சியக் கருத்துருவாக்கம் இடம்பெற்றுள்ளதைக் காணலாம். குறிப்பாக, மார்க்சியத் திறனாய்வும் தமிழ் இலக்கியமும் என்ற கட்டுரையைச் சுட்டிக் காட்டலாம். இலக்கியத்தை இயக்கங்களோடு ஒப்பிடுதலும் ஒப்பிலக்கியத்தின் பாற்படும் என்பர். மனித சமுதாயத்தின் இயங்கியலை விளக்குவது மார்க்சியம் ஆகும். வர்க்க உறவுகள், வர்க்க முரண்கள், வரலாற்றுப் பொருள்முதல்வாதம், இயக்கவியல் பொருள்முதல்வாதம் முதலான சிந்தனைகள் மார்க்சியக் கோட்பாட்டில் இன்றியமையாதன. மார்க்சியத் தத்துவத்தினைக் காரல் மார்க்சும் ஏங்கெல்சும் தோற்றுவித்தனர். இவர்களைத் தொடர்ந்து, லெனின் மார்க்சியத் தத்துவத்தினை உலகறியச் செய்து, ருஷ்யாவில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார். தமிழ்ச் சூழலில் சோஷலிச எதார்த்தவாதத்தை மார்க்சியத்தின் படைப்பாக - இலக்கிய முறையாக முன் வைத்தவர்களுள் தொ.மு.சி.ரகுநாதனும் (பஞ்சும் பசியும்), டி.செல்வராஜூம் (மலரும் சருகும், தேநீர்) ஆவர். இலக்கியம் பேசும் உருவம், உள்ளடக்கம் என்பனவற்றில் உள்ளடக்கத்திற்கு முதன்மை தரும் மார்க்சியவாதி நா.வா. ஆவார். தமிழ்ச் சூழலில் பாரதியார் சோஷலிசத்தை (பொதுவுடைமை) ஏற்றுக் கொண்டார். தமது இந்தியா இதழில் லெனினின் கொள்கையை இடம்பெறச் செய்தார். ப.ஜீவானந்தம், ஆர்.கே.கண்ணன், தொ.மு.சி. ஆகியோர் பாரதியாரை மையப்படுத்தி மார்க்சியத்தை வேரூன்றச் செய்தனர். இவர்களைத் தொடர்ந்து பேரா.ஆ.சிவசுப்பிரமணியன், கா.சுப்பிரமணியம், பேரா.தி.சு.நடராசன், அ.மார்க்ஸ், தோத்தாத்ரி, ந.முத்துமோகன், வெ.கிருஷ்ண மூர்த்தி முதலானோர் மார்க்சியத்தை தமிழகத்தில் வளர்த்தெடுத்தனர். ஈழத்தில் க.கைலாசபதியும் கா.சிவத்தம்பியும் கல்விப் புலம் சார்ந்து மார்க்சியத்தை அணுகினர். இவ்வாறாகத் தமிழ்ச் சூழலில் மார்க்சியத் திறனாய்வு தோன்றி வளர்ந்த சூழலை விளக்கியுள்ளார் (உங்கள் நூலகம், மார்ச் மற்றும் எப்ரல், 2018).

இலக்கியத்தைப் பிற துறைகளோடு ஒப்பிடுதல் ஒப்பிலக்கிய ஆய்வில் இன்றியமையாத ஒன்று. அந்த வகையில் பேரா.பா.ஆனந்தகுமார் அவர்களின் மணிமேகலையில் அளவையியல் என்ற கட்டுரை குறிப்பிடத்தக்கது. இதில் பௌத்த சமயத்தின் அளவைவாதத்தை மணிமேகலை காப்பியத்தோடு ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார். அளவையியல் என்பது சரியானவற்றைச் சரியில்லாதனவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கான காரண – காரிய முறைகளையும் சித்தாந்தங்களையும் தன்னுள் கொண்டு உள்ளது. எனவே, உண்மை மற்றும் தவறு குறித்த அடிப்படைத் தத்துவமாக இருக்கின்றது என அளவையியலை விளக்குவார் பேராசிரியர் பா.ஆனந்தகுமார். இந்தியத் தத்துவ மரபில் உலகாயதம், பௌத்தம், சாங்கியம், நையாமிகம், வைசேடிகம், மீமாம்சம் ஆகிய அறுசமயத்தவர் அளவையியலைப் பயன்படுத்தியுள்ள காப்பியமாக மணிமேகலை திகழ்கின்றது. குறிப்பாக, சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில் வெளிப்படுவதைக் காணலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். மணிமேகலை காப்பியம் மகாயான பௌத்தம் சார்ந்த நூல் அன்று என்பதை இக்கட்டுரையின் முடிபாக ஆசிரியர் நிறுவியுள்ளார் (உங்கள் நூலகம், பிப்ரவரி, 2019).

எடுத்துரைப்பியல் திறனாய்வு இன்று வளர்ந்து வரும் திறனாய்வு வகைகளுள் ஒன்று. இதில் க.பஞ்சாங்கம், கே.பழனிவேலு, ப.மருதநாயகம், த.சரவணன், கி.சிவா ஆகியோர் சுட்டிக்காட்டத் தகுந்தவர்கள். இவ்வரிசையில் பேரா.பா.ஆனந்தகுமார் அவர்களுக்கு முக்கிய இடமுண்டு. இவரது முல்லைப்பாட்டின் எடுத்துரைப்பியல் (சான்லக்ஸ், 2016), மணிமேகலைக் காப்பியத்தில் எடுத்துரைப்பின் அரசியல் (உங்கள் நூலகம், ஏப்ரல், 2024) ஆகிய இரு கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கன. எடுத்துரைப்பியலில் நிகழ்வுகள், கதைமாந்தர்கள், பின்னணி ஆகிய முக்கூறுகள் இன்றியமையாதவை. இக்கூறுகள் மணிமேகலையில் இடம்பெறும் பாங்கினை இக்கட்டுரையில் ஆராய்ந்துள்ளார்.

நூல்கள் வழிப் பேரா.பா.ஆனந்தகுமாரின் ஒப்பியல் திறன்

பேராசிரியர் பா.ஆனந்தகுமாரின் ஒப்பியல் திறனுக்கு அவரது பாரதியார் - ஆசான் - அப்பாராவு கவிதைகளில் புனைவியல் (2000), இந்திய ஒப்பிலக்கியம் சூசன் பாசுனெட்டை முன்வைத்து (2003), இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும் (2007), தமிழ் ஆராய்ச்சி வரலாற்றில் மார்க்சியப் பேரொளி (2012), தனிநாயக அடிகளாரின் ஒப்பிலக்கியச் சிந்தனைகள் (2021), தமிழ்ச் செவ்விலக்கியங்கள் மீள் வாசிப்பு (2021) ஆகிய நூற்கள் குறிப்பிடத்தக்கன.

பாரதியார் - ஆசான் - அப்பாராவு கவிதைகளில் புனைவியல் என்ற நூல் (2000) பேராசிரியர் பா.ஆனந்தகுமாரின் முனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவமாகும்;. இந்நூலை முத்துமீனா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலுக்குப் பேரா.தி.சு.நடராசன் முன்னுரையும் பேரா.கா. செல்லப்பன் அணிந்துரையும் வழங்கியுள்ளனர் என்பது இந்நூலின் சிறப்பிற்குச் சான்று. இந்நூல் பாரதி, ஆசான், அப்பாராவு: வாழ்வும் இலக்கியமும், புனைவியல்: கொள்கையும் விளக்கமும், இந்தியச் சூழலில் பாரதி, ஆசான், அப்பாராவு வரவு, புதுச்செவ்வியல் நெறி எதிர்ப்பும் புதிய அழகியல் மதிப்புகளும், மனித மையவாதம், தேசிய வாதம், புனைவியல் உணர்வு நலன், மேலைப் புனைவியலும் தென்னிந்தியப் புனைவியலும் : பொதுத் தன்மைகளும் சில தனித் தன்மைகளும் உள்ளிட்ட இயல்களைக் கொண்டது. இந்நூல் இவரது ஒப்பிலக்கியச் சிந்தனையை வெளிப்படுத்துகின்றது. பாரதியின் கவிதைகளில் தேசியமும் ஆசானின் கவிதைகளில் தேசிய உணர்வும் அப்பாராவு கவிதைகளில் தேச பக்தியும் தென்படுகின்றன என்பதைச் சான்றுகள் வழி ஒப்பு நோக்கியுள்ளார். ஆசிரியரே நூலின் என்னுரைப் பகுதியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

'பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்படும் ஆய்வுகள் அது சார்ந்த அறிவுத்துறைக்கும் சமூகத்திற்கும் ஏதேனும் ஒரு வகையில் பயன்படுதல் வேண்டும். இந்த ஆய்வேடு இந்திய இலக்கியம் என்ற கருத்தாக்கத்திற்கும் மேலைப் புனைவியலில் இருந்து சற்று வேறுபட்ட தனித்தன்மைகளை உடைய தென்னிந்தியப் புனைவியல் என்கிற இலக்கியக் கொள்கைக்கும் ஆதாரமாக நிற்கிறது. ஒப்பிலக்கிய ஆய்வு நூல் என்கிற எல்லையைத் தாண்டி இருபதாம் நூற்றாண்டுத் தென்னிந்திய சமூக, அரசியல், பண்பாட்டு, கலை இலக்கிய வரலாற்றுப் பெட்டகமாய் உருவாகியிருக்கிறது.' இதிலிருந்து பேராசிரியரின் தென்னிந்தியப் புனைவியலை உருவாக்கும் எண்ணத்தை ஒருவாறு ஊகிக்க இடமுள்ளது.

பாரதியின் குருகோவிந்தர், வ.வே.சு. ஐயரின் குருகோவிந்தசிங், வாஞ்சிநாதனின் குருகோவிந்தர் வணக்கம் ஆகிய பகுதிகளில் பேராசிரியரின் ஒப்பியல் பார்வை வெளிப்படுவதைக் காணலாம். ஹாலியின் வால்நட்சத்திரத்தைப் பற்றி பாரதியாரும் தெலுங்குக் கவிஞரான குரஜாட அப்பாராவும் சித்திரித்துள்ள பாங்கினை இரு மகாகவிகளின் பார்வையில் 'ஹாலி வால்நட்சத்திரம்' என்ற கட்டுரையில் ஆராய்ந்துள்ளார். மேலும், காதலையும் இயற்கையையும் மனிதனையும் மையப்படுத்திப் பாடிய புனைவியல் கவிஞர்களான பாரதிதாசனையும் தெலுங்குக் கவிஞரான கிருஷ்ண சாஸ்திரியையும் இயற்கை அடிப்படையில் ஒப்பிட்டு, பாரதிதாசன் - கிருஷ்ண சாஸ்திரி கவிதைகளில் இயற்கை என்ற கட்டுரையை எழுதியுள்ளார். இவை தவிர, மொழிபெயர்ப்புக்களினூடே தமிழ் - மலையாள இலக்கியப் பரிமாற்றங்கள், குறளும் குஞ்ஞுண்ணி கவிதைகளும், தமிழ் - மலையாளக் காப்பியங்களில் விழாவும் வானவர் வருகையும், பாரதிதாசன் குமாரன் ஆசான் கவிதைகளில் வருண தரும எதிர்ப்பு, நாமக்கல்லார், வள்ளத்தோள் கவிதைகளில் காந்தியம், தோப்பில் முஹம்மது மீரான், வைக்கம் முஹம்மது பஷீர் நாவல்கள் ஆகிய கட்டுரைகள் பேரா.பா.ஆனந்தகுமாரின் மலையாளப் புலமையையும் ஒப்பிலக்கியப் புலமையையும் பறைசாற்றுகின்றன.

பேராசிரியர் பா.ஆனந்தகுமாரின் ஒப்பியல் பார்வைக்கு பிறிதொரு சான்றாக அமையும் நூல்தான் இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும் (2004). இந்நூலில் இடம்பெற்றுள்ள கேரளத்தில் சங்க இலக்கிய மரபு என்ற கட்டுரை, சங்க இலக்கியத்தில் காணப்பட்ட சமூக மரபுகளின் எச்சங்கள் இன்றும் கேரள நாட்டுப்புற இலக்கியத்திலும் வாழ்க்கையிலும் நிலவும் நிலையை வீரர் வழிபாடு, பாணர் மரபு, வேலன் மரபு ஆகிய தலைப்புகளில் ஆராய்ந்துள்ளது. இஃது அவரின் ஒப்பியல் நோக்குக்கு நல்விருந்தாக அமைந்துள்ளது.

பேராசிரியரின் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் மீள்வாசிப்பு என்ற நூல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2021இல் வெளியிட்டுள்ளது. இந்நூலில் அமைந்துள்ள ஒப்பியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் உங்கள் நூலகம் இதழிலும் சான்லக்ஸ் இதழிலும் வெளிவந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூல் உருவாக்கத்தின் முக்கியத்துவத்தைப் பேரா.பா.ஆனந்தகுமார் நூலின் முன்னுரையிலேயே சுட்டிக்காட்டியுள்ளார்.

'இந்நூலில் இடம்பெறும் ஒன்பது கட்டுரைகளும் தொல்காப்பியம், சங்கக் கவிதைகள், மணிமேகலை ஆகியவற்றைப் புதிய கோட்பாடுகளின் வழி மறுவாசிப்புச் செய்கின்றன. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் யாவும் பல்வேறு தேசிய – சர்வதேசியக் கருத்தரங்குகளில் வாசிக்கப்பெற்றுப் பின்னர் உங்கள் நூலகம், சமூக விஞ்ஞானம், தாமரை, புதிய ஆராய்ச்சி, சான்லக்ஸ் ஆய்விதழ் ஆகிய இதழ்களில் வெளியிடப்பட்டன. பரந்த வாசகத் தளத்தை நோக்கிக் கொண்டு செல்வதற்கு இப்போது இவை தொகுக்கப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டுள்ளன' (பா.ஆனந்தகுமார், 2021:2-3).

தனிநாயக அடிகளாரின் ஒப்பிலக்கியச் சிந்தனைகள் (2021) எனும் தலைப்பில் ஒரு சிறு நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. இந்நூலில் பேரா.பா.ஆனந்தகுமார் தனிநாயக அடிகளாரின் வாழ்க்கையையும் தமிழ்ப் பணிகளையும் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு அடிகளாரின் ஒப்பிலக்கியப் பணியை விரிவாக எடுத்துரைத்துள்ளார். தமிழ் கல்சர் - இதழ், தமிழ்த் தூது, நில அமைப்பும் தமிழ்க் கவிதையும், தமிழ்க் கவிதையில் இயற்கை – செவ்வியல் காலம், தமிழர் பண்பாடும் அதன் சிறப்பியல்புகளும், பழந்தமிழ் இலக்கியங்களில் கல்விச் சிந்தனைகள் ஆகிய நூல்களில் அவரது ஒப்பிலக்கியச் சிந்தனையைக் காணலாம் என்பது பேராசிரியரின் கருத்து.

ஒப்பிலக்கியத்தில் இருந்து மொழிபெயர்ப்பியலை நோக்கிய பயணம்

இன்றைய தமிழியல் ஆய்வு மொழியியல், வரலாறு, மானிடவியல், உளவியல், சமூகவியல் ஆகிய துறைகளோடு பொருத்திப் பார்க்கும் நோக்கில் பயணம் செய்வதைக் காணலாம். இவற்றுள் மொழிபெயர்ப்பும் அடங்கும். அதனால்தான் சூசன்பாசுனெட், 'ஒப்பிலக்கியத்தின் எதிர்காலமே மொழிபெயர்ப்பியல் ஆய்வுகள் தாம்' என்கின்றார். இந்த அடிப்படையில் பார்த்தோமேயானால் பேராசிரியர் பா.ஆனந்தகுமார் மலையாள மொழியில் புலமையுடையவராகத் திகழ்கின்றார். ஒப்பிலக்கிய ஆய்வைப் பொறுத்தவரையில் இருமொழிப் புலமை மிக அவசியம் என்பர். இருமொழிப் புலமை இன்றேல் ஒப்பிலக்கியப் பணி நிறைவுறாது போகும். இக்குறையைப் போக்குவதுதான் மொழிபெயர்ப்பு. எனவேதான், பேராசிரியர் மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றார். இவரது இயந்திரம் மொழிபெயர்ப்புப் புதினம் (சாகித்திய அகாடமி விருது - 2008), மலையாளக் கவிஞர் சங்ஙம்புழவின் வாழைக் குலை (2012), குமாரனாசானின் வீழ்ந்த மலர் - கவிதை (2022), குஞ்ஞுண்ணிக் கவிதைகள் (2023), கடற்கரையில் - மலையாளச் சிறுகதைகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

பாரதி சார்ந்த ஆய்வுகளில் ஒப்பியல் பார்வை

பேராசிரியர் பா.ஆனந்தகுமார் பாரதியியல் சார்ந்த ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். காந்தி கிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பாரதியார் ஆய்வகம் செயல்பட உறுதுணையாக நின்றவர். பேராசிரியர் அ.பிச்சை ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்ட காலத்தில் அவருக்குத் துணை நின்றவர். கருத்தரங்கம், சிறப்புப் பொழிவு ஆகியன நடைபெற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர். பாரதியின் பாஞ்சாலி சபதம் இந்திய இலக்கியத்தில் மகாபாரதக் கிளைக்கதைகள் (2002), பாரதியும் குழந்தை இலக்கியமும் (2002), ஒப்பியல் நோக்கில் பாரதியும் பக்தி இலக்கியமும் (2004), இலக்கியக் கோட்பாடுகள் நோக்கில் பாரதி படைப்புகள் (2013) ஆகிய நூல்களின் பதிப்பாசிரியர்களுள் ஒருவராக இருந்தவர். இவையெல்லாம் ஒப்பியல் ஆய்வுகளோடு தொடர்புடையன. பேராசிரியர் தமது முனைவர் பட்டத்திற்குப் பாரதியாரை எடுத்துள்ளார் என்பதும் இவண் நினைத்தற்குரியது.

2020இல் பாரதி ஆய்வாளரான இளசை மணியன் இறந்தபோழ்து 'பாரதி ஆய்வுச் சுடர் அணைந்தது' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை உங்கள் நூலகம் இதழில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேசம் - தேசியம் குறித்த சொல்லாடல்களைப் பேசும்போழ்து பாரதியாரைத் தொடாமல் பேராசிரியர் பேசியதே இல்லை எனலாம். 'பாரதியார் கவிதைகளில் தேசியம் - ஒரு பின்னைக் காலனிய வாசிப்பு' (2008), பாரதியாரும் இந்திய விடுதலை இயக்கமும் (2021), 'தமிழில் தேசிய இலக்கியங்கள் புதிய வரைசட்டகத்தை நோக்கி...' (2023) ஆகிய கட்டுரைகளிலும் பாரதியும் இந்தியக் கவிஞர்களும் (2024) என்ற நூலிலும் பார்க்கலாம்.

காட்சிக்கு எளியவராகவும் பழகுவதற்கு அன்பானவராகவும் பொதுவுடைமை வாதியாகவும் திகழும் பேராசிரியர் பா.ஆனந்தகுமார் ஒப்பிலக்கிய ஆய்வில் காத்திரமான பங்களிப்பினைச் செய்து கொண்டு வருகின்றார். இவரது கட்டுரைகளும் நூல்களும் ஒப்பிலக்கியம் என்ற மையப்புள்ளியை நோக்கியே பயணித்துள்ளன என்பதை உணர்ந்து கொள்ளலாம். புதிய கோட்பாடுகளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து, அதில் ஆய்வுகள் மேற்கொள்ளத் தூண்டுகோலாகத் திகழ்கின்றார். குறிப்பாக, மார்க்சியம், பெண்ணியம், புனைவியல், பௌத்தத் தத்துவம், எடுத்துரைப்பியல், பின்னைக் காலனியம் முதலான கோட்பாடுகளைத் தமிழ் இலக்கியத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒப்பிலக்கியக் கல்விக்கு விளக்கேற்றியுள்ளார் எனலாம்.

துணை நின்ற நூல்கள்

1.      ஆனந்தகுமார், பா. பாரதியார் - ஆசான் - அப்பாராவு கவிதைகளில் புனைவியல், முத்துமீனா பதிப்பகம், மதுரை, 2000 (முதற்பதிப்பு).

2.      ஆனந்தகுமார், பா.இந்திய ஒப்பிலக்கியம் சூசன்பாசுனெட்டை முன்வைத்து, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2003 (முதற்பதிப்பு).

3.      ஆனந்தகுமார், பா. இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை, 2007 (மூன்றாம் அச்சு).

4.      ஆனந்தகுமார், பா. தமிழ் ஆராய்ச்சி வரலாற்றில் மார்க்சியப் பேரொளி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை, 2012 (முதற்பதிப்பு).

5.      ஆனந்தகுமார், பா. வாழைக்குலை (மொ.பெ), பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2012 (முதற்பதிப்பு).

6.      ஆனந்தகுமார், பா. தமிழ்ச் செவ்விலக்கியங்கள் மீள்வாசிப்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை, 2021 (முதற்பதிப்பு).

7. ஆனந்தகுமார், பா. பாரதியும் இந்தியக் கவிஞர்களும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை, 2024 (முதற்பதிப்பு).

8.      சுந்தரமூர்த்தி, இ. (ப.ஆ) பாரதியார் கவிதைகள், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2007 (எட்டாம் பதிப்பு).

9. பிச்சை, அ மற்றும் ஆனந்தகுமார், பா. (தொ.ஆ), பாரதியின் பாஞ்சாலி சபதம் இந்திய இலக்கியத்தில் மகாபாரதக் கிளைக்கதைகள் (கருத்தரங்கக் கட்டுரைகள்), பாரதியார் ஆய்வகம், தமிழ், இந்திய மொழிகள் மற்றும் கலைகள் புலம், கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், 2002 (முதற்பதிப்பு).

10. பிச்சை, அ. மற்றும் ஆனந்தகுமார், பா. (தொ.ஆ), பாரதியும் குழந்தை இலக்கியமும் (கருத்தரங்கக் கட்டுரைகள்), பாரதியார் ஆய்வகம், தமிழ், இந்திய மொழிகள் மற்றும் கலைகள் புலம், கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், 2002 (முதற்பதிப்பு).

11. பிச்சை, அ மற்றும் ஆனந்தகுமார், பா. (தொ.ஆ), ஒப்பியல் நோக்கில் பாரதியும் பக்தி இலக்கியமும் (கருத்தரங்கக் கட்டுரைகள்), பாரதியார் ஆய்வகம் - பதிப்புத்துறை, கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், 2004 (முதற்பதிப்பு).

12. பிச்சை, அ மற்றும் ஆனந்தகுமார், பா. (ப.ஆ), இலக்கியக் கோட்பாடுகள் நோக்கில் பாரதி படைப்புக்கள், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2013 (முதற்பதிப்பு).

13. முத்துமோகன், ந. (மற்றும் பிறர்), பின்னைக் காலனியம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், குமரி மாவட்டம், 2007 (முதற்பதிப்பு).

- முனைவர் மு.சங்கர், உதவிப் பேராசிரியர், தமிழியல் துறை, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.