1945 - 52 காலகட்டத்தில் மகாராஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள தலசேரி மற்றும் தஹானு தாலுகாக்களில் வசித்து வரும் வார்லி பழங்குடியினர்களால் முதன்முதலில் ஒர் ஒடுக்குமுறை அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்கள் வெற்றியடைந்தது. வார்லிக்களால் முன்னெடுக்கப்பட்ட இத்தகைய புகழ்பெற்ற போராட்டங்களுக்கு பின்பற்றப்பட்ட வழிமுறைகளைப் பற்றிய வாய்மொழி வரலாற்றினை, மூத்த, தற்போதைய விவசாயத்தொண்டர்களிடமிருந்து எடுக்கப்பட்ட பேட்டிகளைத் தொகுத்து இந்நூலானது எழுதப்பட்டுள்ளது.

சீனாவில் விவசாயிகள் தலைமையினாலான புரட்சியால் ஊக்கம் பெற்றிருந்த ஷாம்ராவ் பாருலேகரும், அவரது மனைவி கோதாவரி பாருலேகரும் கட்சியின் அனுமதி பெற்று மும்பையிலிருந்து கல்யாணுக்கு குடிபெயர்ந்தனர். வார்லி பழங்குடியினர்களின் போராட்டமானது, அப்போதைய மகாராஷ்ட்ரா மாநில விவசாயிகள் சங்கத்தின் செயலாளரான ஷாம்ராவ் பாருலேகர் மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முதல் பெண் தலைவரான கோதாவரி பாருலேகரும் பொறுப்பேற்றிருந்தபோது 1944 இல் தானே மாவட்டத்தின் தஹானு, தலசேரி தாலுக்காக்களில் நடந்ததாகும்.

sengodi pathaiyil varlikkal1940- 50 காலகட்டமானது இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சில புகழ்பெற்ற விவசாயப் போராட்டங்களின் காலமாக இருந்தது. தெலுங்கானா, தெபாகா, புன்னபுரா - வயலார், கணமுக்தி பரிஷத், சுர்மா பள்ளத்தாக்கு, வார்லி பழங்குடியினர் இயக்கம் நடத்திய போராட்டங்களானது கம்யூனிச இயக்கத்தில், செல்வாக்கு செலுத்தியது மட்டுமல்ல, தத்துவார்த்த ஆதிக்கத்துக்கும், கட்சியின் விரிவாக்கத்துக்கும் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தன.

தானே மாவட்டமானது, பிரிட்டிஷார் வருவதற்கு முன்னால், போர்த்துகீசியர்கள், முகலாயர்கள், மராத்தாக்கள் என, பல்வகை நிலவருவாய்க் கட்டமைப்புகள் மூலம் மாவட்டத்தை ஆண்டு வந்திருக்கின்றனர். இம்மாவட்டமானது, குன்பிகளும், விவசாயிகளும் இருக்கும் கடற்கரைப் பகுதி மற்றும் வார்லிக்களும், பிற பழங்குடி மக்களும் வசிக்கும் மலைப் பிரதேசங்கள் என இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. விவசாய உற்பத்திச் சந்தையில் வியாபாரிகள் தவறாக எடை போடுவதற்கு எதிராக 1944ல் முதன்முதலாக விவசாயிகள் போராட்டம் தொடங்கியது. பின்னர், அப்போராட்டமே மகாராஷ்ட்ரா விவசாயிகள் சங்கம் அமைப்பதற்கு இட்டுச் சென்றது.

1945, ஜனவரி மாதம் கல்யாணில் விவசாயிகள் சங்கத்தின் முதல் மாநாடு நடைபெற இருந்தது அம்மாநாட்டில் மலைக்கிராமங்களிலுள்ள வார்லிக்கள் கலந்து கொள்ள ஷாம்ராவ் பாருலேகர் அழைப்பு விடுத்தார். அம்மாநாட்டில், தஹானுவிலும், தலசேரி தாலுக்காக்களில் நிலவிய அடிமைத்தனம்; கொத்தடிமைத்தனத்தினை ஒழிக்கக் கோரிய ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நிலப்பிரபுக்களின் சுரண்டலை எதிர்த்து எழுச்சி பெறவும், தம்மை அணிதிரட்டிக் கொள்ளவுமான துணிவை செங்கொடியானது வார்லிக்களுக்கு அளித்தது.

1945-46 காலகட்டத்தில், வார்லி பழங்குடியின மக்கள் நிலப்பிரபுக்களுக்களின் நிலத்தில் உழைக்கக் கட்டாயப்படுத்தும் ‘கண்ட்’ மற்றும், ’வெத்பிகார்’ என்கிற கட்டாய உழைப்பு முறைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர். கட்டாய உழைப்பிற்கு ஆளான ஒரு வார்லி பழங்குடியினர் நிலத்தை உழுவதற்கும், பிற வேலைகளுக்கும் விலங்குகளுக்குப் பதிலாக ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். அதுமட்டுமல்லாது, அவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒருமுறைதான் உணவு வழங்கப்பட்டிருக்கிறது. லேவாதேவிக்காரர்களும் தன் பங்கிற்கு வேலை செய்ய மறுக்கும் வார்லி மக்களை தலைகீழாகத் தொங்க விட்டிருக்கின்றனர். வார்லிகள் இத்தண்டனையை அனுபவித்தது மட்டுமல்லாது, தங்களது உற்பத்தியில் ஒரு பங்கையும் இவர்களுக்குச் செலுத்த வேண்டியிருந்தது. இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக வார்லிக்களுடன் இணைந்து விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தி வெற்றி கண்டனர்.

1945ல் புல் அறுப்பதற்கு குறைந்தபட்சக் கூலியை உறுதி செய்வதற்காக நிலப்பிரபுக்களுக்கும் லேவாதேவிக்காரர்களுக்கும் எதிராக தஹானு, தலசேரி பகுதியில் வார்லி மக்களால் ஒற்றுமையுடன் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதனையொட்டி, இரவு நேரத்தில் தாளவாடாவில் திரண்டிருந்த வார்லி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாகிச் சூட்டினால் அம்மக்களில் ஐவர் உயிரிழந்தனர்.

இதற்கடுத்து, நிலப்பிரபுக்களின் ஆணாதிக்க அதிகாரத்திற்கும், பாலியல் ஒடுக்குமுறைக்கும் எதிராக வார்லிப்பெண்கள், திருமண அடிமைக்கு எதிராக, விடுதலைப் (லக்னகாடி இயக்கம்) போராட்டம் நடத்தினர். அதாவது, ஒரு வார்லி தன் திருமணத்திற்காக தனது நிலப்பிரபுவிடம் கடன் பெற்றிருந்தால் அவரும், அவரது மனைவியும் அக்கடனை அடைக்க நிலப்பிரபுவிடம் வேலை செய்ய வேண்டும். மேலும் அப்பெண் தனது கணவனுடன் வாழச் செல்வதற்கு முன், சில நாட்கள் நிலப்பிரபுவிடம் வாழ வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. விவசாயச் சங்கத்தின் இக்கொடுமைக்கெதிரானப் போராட்டங்கள் மூலம் 15,000 க்கும் மேலான அடிமைகள் விடுவிக்கப்பட்டனர். இப்போராட்டங்கள் யாவும் வார்லி எழுச்சியின் ஒரு பகுதியாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

1946 -1953 கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில், ஷாம்ராவும், கோதாவரி பாருலேகரும் தலைமறைவில் இருந்தபோதும் அல்லது சிறையிலிருந்த காலத்திலும், வார்லிக்கள் விவசாயச் சங்கத்துடன் ரகசியமாகத் தொடர்பு கொண்டு அச்சங்கத்தின் ஆலோசனையின் பெயரில் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு பல்வேறுப் போராட்டங்களைத் திறம்பட நடத்தினர். ஏற்கனவே, புகழ்மிக்க வார்லி போராட்டங்கள் அம்மக்களுக்கு அமைத்துக் கொடுத்த அடித்தளமானது அம்மக்கள் தாமே முன்னின்று பல தீவிரமான போராட்டங்களை நடத்துவதற்கு ஏதுவான தளத்தை அமைத்துக் கொடுத்தது.

தலைமறைவு உத்தியென்பது, எங்கும் எதிலும் சமரசம் செய்து கொள்ளாதபடி ஸ்தாபனத்தில் கடுமையான ஒழுங்கு பேணப்பட வேண்டும். அதற்கு அனைத்து கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் உறுப்பினர்களும் ரகசியத்தைப் பேணுவதுடன், ஸ்தாபனத்தை விரிவுபடுத்தவும் செய்தனர். இதேபோல், நெருக்கடிநிலை காலத்தின்போதும் கட்சியின் முக்கியஸ்தர்கள் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு, அப்பகுதியிலுள்ள தலைமைக்கு வழிகாட்டவோ அல்லது போராட்டத்தினை எப்படி நடத்த வேண்டும் என்றும் கூறி வந்தனர். வார்லிக்களின் தொடர்ச்சியான போராட்டங்களின் ஒரு முக்கியமான தாக்கம் என்னவென்றால் அப்பிரதேசத்தில் அரசியல் தலைமையில் பெண்களின் வளர்ச்சியேயாகும். பெண் தொழிலாளர்கள் அனைத்து வேலை நிறுத்தங்களிலும் முன்னணியில் நின்றதுடன், அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் எதிர்த்து நின்றனர்.

1955 மே மாதத்தில் அகில இந்திய விவசா­யிகள் சங்கத்தின் 13 வது மாநாடு தஹானுவில் நடைபெற்றது. அம்மாநாட்டில் ’உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ மற்றும் ’உழுபவர்களே ஆட்சி செய்ய வேண்டும்’ என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தினை முன்வைத்து, 1960 களில் வார்லிக்கள் தம்மைத் திரட்டிக் கொண்டு குத்தகைச் சட்டத்தை அமல்படுத்துவதற்காகப் போராடினர். இப்போராட்டத்தின் விளைவாக 1957 ஆம் ஆண்டு குத்தகைதாரர் சட்டம் (குல் கய்தா) அரசால் இயற்றப்பட்டது. அதன் பின்னர் 1975 இல் நில உச்சவரம்புச் சட்டமும் அமல்படுத்தப்பட்டது. இவ்விரு சட்டங்களும் நிறைவேற்றப்பட்டாலுங்கூட, சமகாலத்தில் கூட நில உரிமையைப் பாதுகாப்பதும், நில உரிமைக்காகப் போராடுவதென்பதும் வார்லி விவசாயிகளுக்கு பெரிய விஷயமாக மாறியுள்ளது.

1971 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 1 -31 வரை தலசேரி, தஹானு, பால்கர் பகுதியிலுள்ள வார்லி தொண்டர்கள் வன நிலத்துக்கான சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் காரணமாக, 1973-74 வாக்கில் அரசானது பழங்குடியினர்களுக்கு 17,000 ஏக்கர் நிலத்தை வினியோகித்தது. அதன்பின், 1970 களின் இறுதியிலும், 1980 களிலும் வாடி (தேயிலை மற்றும் பழத்தோட்டங்கள்) தொழிலாளர்களின் நியாயமான தொடர்போராட்டம் நடைபெற்றது. விவசாயச்சங்கத்தின் உதவியுடன் நடைபெற்ற வாடித்தொழிலாளர்களின் போராட்டம் என்பது தமது ஒற்றுமையையும், தலைமைப்பண்பையும் வெளிப்படுத்திய ஒரு வீரமிக்கப் போராட்டமாகும்.

வார்லி போராட்டங்களினால், தொடர்ந்துவரும் அம்சங்களில் ஒன்று, ”மக்கள் வர்க்க ஒடுக்குமுறையைத் தமது சொந்த அனுபவங்களிலிருந்து உணர்ந்து கொண்டு, அதனைப் பல்வகையான, ஆக்கப்பூர்வமான வழிகளில் எதிர்த்தனர்” என்பதாகும். பல வார்லி தோழர்கள் வர்க்கப்போராட்டம் என்ற கோட்பாட்டுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டதுடன், அந்த நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல பல்வேறு உத்திகளை வகுத்துச் செயல்பட்டனர்.

கடந்த இருபது ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கத்தின் அடித்தளத்தை, தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்களிடையே பரவலாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதானது பலனளித்துள்ளது. மேலே கூறப்பட்டுள்ள உரையாடல்கள் யாவும் வர்க்கப்போராட்டம், என்ற இலக்கை நோக்கி வார்லி தலைமையையும், விவசாயிகள் சங்கமும் பயன்படுத்திய பல்வகை வழிமுறைகளை கோடிட்டுக் காட்டுகின்றன. வார்லிக்கள் காட்டிய எதிர்ப்பு, அணிதிரட்டல் முறைகள், வர்க்கப் போராட்டம் யாவும் வெவ்வேறு உள்ளூர் பின்னணிகளில் வெவ்வேறு வகையாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியும் என்பதைக் காட்டின.

வார்லிக்களின் தத்துவார்த்தப் பயிற்சியானது 1950 களின் முற்பகுதியில் தஹானு தாலுகாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு முகாமில் தொடங்கியது. வார்லிக்களுக்கு மார்க்சிய வரலாற்று அணுகுமுறையின் அடிப்படையாக இருக்கும் பகுத்தறிவு, அறிவியல் பார்வையிலிருந்து ஆய்வு செய்யும் சில நோக்குநிலைகள் பயிற்சியாக அளிக்கப்பட்டன. இதுதவிர, பரிணாம வளர்ச்சியின் அடிப்படைக்கூறுகள் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும், உலகெங்கிலுமுள்ள சோசலிசம், சோசலிச இயக்கங்கள் பற்றியும் கற்பிக்கப்பட்டது. இதிலிருந்து, வார்லிக்களுக்கு தமது சொந்த ஒடுக்குமுறை பற்றிய விழிப்புணர்விலிருந்து, மார்க்சியம் ஒரு சமத்துவமான கோட்பாடு என்பதை உணர வைத்தது.

விவசாயிகள் சங்கத்தின் தொடர்ச்சியான பணி அதன் தொண்டர்கள் பலருக்கு தேர்தல் வெற்றியினையும் பெற்றுத் தந்தது. 1952, 1957,1962, பொதுத்தேர்தல்கள், மற்றும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சியினால் நிறுத்தப்பட்டவர்கள் அப்பகுதியில் கணிசமான வெற்றியை பெற்று வந்திருக்கின்றனர். தேர்தல் வெற்றியின் வழியாக வார்லி மக்கள் அரசியல் தலைமையை வளர்த்தெடுத்துக் கொண்டனர். விவசாயிகள் சங்கம் தஹானுவிலும், தலசேரியிலும் 70 ஆண்டுகளுக்கு மேலாக உயிர்ப்புடன் இருப்பதற்கு, ஒன்று, செங்கொடியின் பங்கு மற்றும் தனித்தன்மை குறித்த விழிப்புணர்வு. இரண்டு, அமைப்பைக் கட்டுவதில் தேர்தல் மற்றும் தேர்தலல்லாத போராட்டங்களின் மூலமாக அரசியல் வெளியை உருவாக்கும் நடைமுறை. மூன்று, வார்லி தலைமையின் துல்லியமான விழிப்புணர்வும், தத்துவார்த்தப் பயிற்சியுமே காரணமாகும்.

பொருளாதார சீர்திருத்தக் காலத்திற்குப் பிறகு, வார்லிக்கள் தங்களது நில உரிமையை இழந்து வருகிறார்கள். அவர்களிடையே கல்வியறிவு குறைந்தும் வேலையின்மை பெருகியும் வருகிறது. இதனால் இடம் பெயர்வுக்கு ஆளாவதால் அரசியல் பணிக்கு போதுமான நேரமில்லாமலாகி விடுகிறது. இதனிடையே, மதவாதம் வேறூன்றி, அம்மக்களை தினசரிப் பிரச்சினைகளில் கவனத்தை குவிக்கச் செய்து, விவசாய சங்கத்திடமிருந்து பிரித்து விடுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புக்கள் பழங்குடி பகுதிக்குள் ஊடுருவி வகுப்புவாத குவிப்பை மேற்கொள்ளுகின்றனர்.

அமைப்புரீதியாக புதிய சவால்களை எதிர்கொள்ளுவதற்குத் தகவமைத்துக் கொள்வதன் மூலந்தான் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள முடியும் என்பது நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. உலகளவிலும் தஹானுவிலும் மார்க்சியம் வலுவாகவே உள்ளது. ஆனால், அதனை உயிர்ப்புடன் வைத்திருக்க நாம் போராடவேண்டிய தேவையுள்ளது..

செங்கொடிப் பாதையில் வார்லிக்கள்

அர்ச்சனா பிரசாத் | கி. ரமேஷ்

வெளியீடு | பாரதி புத்தகாலயம்,

பக்: 184 | விலை: ரூ 180/-

- நிகழ் அய்க்கண்

Pin It