இலக்கியப் படைப்பில் ‘வாய்மொழி’, ‘எழுத்து’ என இருவகையான மரபுகள் உண்டு. வாய்மொழி மரபு என்பது ஏட்டில் எழுதப்படாமல் வெவ்வேறு சமூகச் சூழல்களால் தூண்டப்பட்டு மக்கள், தங்கள் கூட்டுப் பங்கேற்பின் வாயிலாக வெளிப்படுத்துவது. வழக்கம் தழுவிய நிலையில், அறிவும் உணர்ச்சியும் பரவசமும் கொண்டவர்களாகப் பேசுதல், பாடுதல், ஆடுதல் போன்றவற்றின் மூலம், வெளிப்படுத்தப்படும் வாய்மொழி, நிகழ்த்துகைப் படைப்புகள் யாவும் செவி வழியாகவும், செயல் மற்றும் நடத்தை முறைகள் வாயிலாகவும் பரவக் கூடியவை. இம்மரபினை வெளிப்படுத்துவற்குரிய வடிவம், உள்ளடக்கம், உத்தி என்பவை தனி வகையாக உள்ளன. ஆனால் இவற்றிற்கு மாறாகப் புலவர் உள்ளிட்டோரால் சில நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் படைப்பினை ஆக்கம் செய்வதால் உருவாகும் விளைவே எழுத்து மரபாகும்.
எழுத்தாக்கம் செய்யப்பட்டவையான பாடல், உரைநடை உள்ளிட்டவற்றை வாசகன் படித்து இன்பமுறுவதற்காக அந்நூலில் யதார்த்த நிலையையும் நம்பகத் தன்மையையும் கொண்ட சில உத்திகளைக் கையாளுகின்றான் படைப்பாளன். அவன் பயன்படுத்தக்கூடிய உத்திகளுள் ஒன்றாக மக்களிடம் வழங்கும் வாய்மொழி மரபுகளைத் தனது எழுத்துப் படைப்பில் கையாளுவதும் அமையும்.
வாய்மொழி மரபுகள் எழுத்துப் படைப்பில் இடம்பெறுவதால் அதற்கெனத் தனி ஒரு வடிவம் அல்லது பாணி அமைகிறது. இங்கு, வாய்மொழி மரபும் எழுத்து மரபும் வெவ்வேறானவை என்பதை நுட்பமாகப் புரிந்து கொண்டதுடன் அதற்கு விளக்கம் தந்து கோட்பாட்டினையும் உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர்கள் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த நாட்டார் வழக்காற்றியலாளர்கள் ஆய்வாளர்கள் ஆவர்.
அத்தகைய ஆய்வினைத் தமிழகத்தில் மேற்கொள்பவர்களில் ஒருவராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய ஆ. தனஞ்செயன் ஆவார். இவர் சிலப்பதிகாரத்தில் நாட்டார் அழகியல் என்னும் பொருண்மையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் வழியாக நூல் ஒன்றினைக் கொண்டு வந்துள்ளார்.
செவ்வியல் பண்புகளை மிகுதியாகக் கொண்டு தனித்துவமுடைய காப்பியமாகத் திகழ்வது சிலப்பதிகாரம். இந்நூலில் கதையை நகர்த்திச் செல்வதற்கு பல்வேறு உத்திகளைக் கையாண்ட இளங்கோவடிகள் நாட்டார் மரபுகளை மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளார். இந்நாட்டார் மரபுகளைக் கண்டறிந்த பேராசிரியர் ஆ.தனஞ்செயன் அதற்கு நாட்டார் வழக்காற்றியம் (Folklorism) என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறார். இச்சொல்லாடலை இந்நூலில் அறிமுகம் செய்கிறார். அதற்கான ஆய்வின் அணுகுமுறை மற்றும் கோட்பாட்டினை விளக்குகிறார். சிலப்பதிகாரச் செய்யுள்களில் இடம்பெற்றுள்ள வாய்மொழி மரபுகளான பாடல்கள், கதைகள், சடங்குகள், நம்பிக்கைகள், கலைகள் ஆகியவற்றோடு நாட்டார் வழக்காற்றியம் கோட்பாட்டினைப் பொருத்தி ஆய்வு செய்கிறார். நாட்டார் அழகியல் என்பது, மக்களின் கூட்டுப் பங்கேற்பின் வாயிலாகப் படைக்கப்படும் பலவகை வழக்காற்று வடிவங்கள் அனைத்தின் மூலமாக வெளிப்படும் கலைநயம் பற்றிய மக்களின் ரசனை, அனுபவம் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு கருத்துருவமாகும். அத்தகைய நாட்டார் அழகியலை எவ்வாறு தமது காப்பியப் படைப்பில் இளங்கோவடிகள் நகலாக்க வழக்காறுகளைப் படைத்துக் கையாளுவதன் ஊடாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதையே இந்நூல் முதன்மையாக ஆராய்கிறது. ஆய்வின் முடிவாக, நகலாக்க வாய்மொழி மரபுகள் செய்யுள்களில் இடம்பெற்றிருப்பதன் காரணமாக அவை எவ்வாறு வாசகனைப் படிக்கத் தூண்டி அவனுக்கு நாட்டார் பண்பாட்டுக்குரிய ரசனை என்னும் அழகியல் அனுபவத்தைத் தருகிறது என்பதை நிறுவுகிறார். இந்நூல் சிலப்பதிகாரம் குறித்து வந்த ஆய்வுகளில் வேறுபட்டுப் புதிய ஆய்வு அணுகுமுறையில் ஆராயப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.
இந்நூல் இரண்டு பகுதிகளாக அமைகிறது. முதல் பகுதியானது, தே.லூர்து அறக்கட்டளைச் சொற்பொழிவின் வாயிலாக உருவான ‘சிலப்பதிகாரம்: நாட்டார் வழக்காற்றியமும் அழகியலும்’ என்னும் பொருண்மையில் அமைந்தது. இரண்டாம் பகுதியில் ‘சிலப்பதிகாரத்தில் ஏழு பத்தினிப் பெண்கள்: புராணமும் குழுத்தெய்வ உருவாக்கமும்’ என்னும் கட்டுரையும், ‘சிலப்பதிகாரம் வெளிப்படுத்தும் கொற்றவை வழிபாட்டில் பரவசநிலைச் சமயமும் தெய்வமேறுதலும்’ என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.
இளங்கோவடிகள் கண்ணகியின் கதையைக் காப்பியமாக எழுதுவதற்கு முந்தைய காலத்திலிருந்து பாடல்கள், புராணங்கள் போன்ற நாட்டார் பண்பாட்டுக் கூறுகளை வழக்கத்தில் கொண்டிருந்த திணைக்குடிச் சமூகங்கள் ஆதாரமாக இருந்திருக்கின்றன. இச்சமூகங்களில் வழங்கிய பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் காப்பியத்தில் இணைத்துக் கையாண்ட உத்தியின் வாயிலாக வாசகனிடம் கதை உண்மையானதுதான் என்ற கருத்தைப் பதியச் செய்யும் வகையில் காப்பிய விவரணையில் ஓர் உயிரோட்டத்தை ஊட்டுகிறார் இளங்கோவடிகள் என்கிறார் நூலாசிரியர்.
படைப்பு என்பது அழகியல் அனுபவத்தைத் தரும். அழகியலுக்கு எவையெல்லாம் மூலப்பொருளாக இருக்கிறதோ அவற்றைக் கொண்டே படைப்பும் உருவாக்கப்படும். மூலப்பொருளாக விளங்குவது உடல், கண், காது முதலியவற்றின் வழியாகத் தோன்றக்கூடிய உணர்வுகளாகும். இளங்கோவடிகள், உணர்வுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நாட்டார் மரபிலிருந்த கண்ணகி கதையைக் கருவாக எடுத்துக் கொண்டார். அக்கதையைப் படைப்பு நெறிக்கு ஏற்றவாறு உருமாற்றம் செய்து பயன்படுத்திக் கொண்டதுடன் ஆங்காங்கே நாட்டார் வழக்காற்றுக் கூறுகளையும் எடுத்தாண்டுள்ளார். இதனைப் போன்மையாக்கம் செய்தல் அல்லது மீள்படைப்பாக்கம் செய்தல் என்கிறார் நூலாசிரியர். இச்சொல்லாடல்கள் இலக்கியங்களில் நாட்டார் வழக்காறுகள் இடம்பெறுவதாலேயே அவற்றிற்கு இலக்கிய வடிவம் கிடைத்துவிட்டது என்று கூறுவோர் சிந்திக்கும் வகையில் அமைகின்றன.
இளங்கோவடிகள் செய்யுள்களில் ஆசிரியப்பா உள்ளிட்ட யாப்பு வடிவங்களைப் பயன்படுத்திய போதிலும் நாட்டார் மரபில் வழங்கிய பாடல்களை ஒத்த யாப்பு வடிவங்களை மிகுதியாகக் கையாண்டிருக்கிறார். இதனால் ஏனைய இலக்கியங்களை விடச் சிலப்பதிகாரத்தில் நாட்டார் அழகியல் மிகுதியாகக் காணப்படுகிறது என்கிறார் நூலாசிரியர்.
படைப்பாளன் எப்பொழுதும் அந்தந்தச் சமுதாயத்தால் உருவாக்கப்படுகிறான். ஏற்றப்பாட்டின் ஓசையில் கம்பன் தனது மனதைப் பறி கொடுத்தான். அதுபோல இளங்கோவடிகளுக்கும் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த இனக்குழு உள்ளிட்ட ஏனைய திணைசார் சமுதாயங்களில் வழங்கிய வாய்மொழி மரபுகளின்மீது ஈர்ப்பு இருந்ததைப் படைப்பில் அவர் மிகுதியாகக் கையாண்டிருக்கும் பாங்கின் மூலம் புரிந்து கொள்ளமுடியும். இதனால் சிலப்பதிகாரத்தை ‘நாட்டார் பண்பு தழுவிய காப்பியம்’ (Folkish epic) என்று அழைக்கலாம் என்று நூலாசிரியர் கருதுகிறார்.
பொதுவாக நாட்டார் வழக்காறுகள் இலக்கியங்களில் பயின்றுள்ளதைக் கண்டறிந்து மேலோட்டமாகச் சொல்வதோடு நமது ஆய்வுகள் நின்றுவிடுவதே வழமையாகும். அதனைக் கொண்டு மேற்சென்று திறனாய்வு செய்யும் அணுகுமுறை நம்மிடையே இல்லை என்று கூறுகிறார் நூலாசிரியர். ஆனால் ஆங்கில இலக்கியங்கள் பற்றிய ஆய்வுலகில், இந்தத் திறனாய்வு அணுகுமுறை நிலவுவதையும் அதிலும் கூட, சில பலவீனங்கள் காணப்படுகின்றன என்பதையும் ஆலன் டண்டிஸ் போன்ற நாட்டார் வழக்காற்றியலாளர்களின் எழுத்துக்களை ஆதாரம் காட்டி விளக்குகிறார். மார்க் டிவைன் (Mark Twain) இயற்றிய இலக்கியங்களில் நாட்டார் வழக்காறுகளைக் கண்டறிந்து அவ்வழக்காறுகள் எவ்வாறு படைப்புக்கு அடித்தளமாக இருந்தது என்பதைக் குறிப்பிடுகிறார். ரிச்சர்ட் எம். டார்சன் (Richard M. Dorson) எழுதிய கட்டுரையின் வழியாக நாட்டார் வழக்காறுகளை இலக்கியங்களில் இனம் காணும் வழிமுறைகள் என்னும் ஆய்வு அணுகுமுறைக்கு வித்திட்டது. இதனால் இலக்கியம், நாட்டார் வழக்காறுகள் என இணைத்து நோக்கி ஆய்வதை ஓர் இடைப்புல ஆய்வு நடவடிக்கை (Inter disciplinary activity) என்ற கருத்துருவம் ஏற்பட்டது என்கிறார். தொடர்ந்து ஆலன் டண்டிஸ் (Alan Dundes) என்பவர் நாட்டார் வழக்காறுகளை ஆராய்வதற்கான முறையை அறிமுகப்படுத்தியதையும் நாட்டார் வழக்காற்றியலார் மீது நாட்டார் வழக்காறுகளை அடையாளம் காணும் தொடக்க நிலையில் ஆராய்வதோடு நின்றுவிடுகின்றனர் என்று விமர்சனம் செய்வதையும் குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து தமிழ் இலக்கியங்களில் நாட்டார் வழக்காறுகள் எந்த வகையில் இடம்பெற்றுள்ளன என்பதை எடுத்துரைக்கிறார். குறிப்பாகப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் நாட்டார் பண்பாடு தழுவிய ஒழுகலாறுகள், மரபுகளை மறுப்பது, கண்டிப்பது என்ற நோக்கங்களை முன்னிறுத்துபவை. திணைக்குடிப் பண்பாட்டிற்கு நேரெதிரான புதிய அறங்களையும் விழுமியங்களையும் புகுத்தின. மறுபுறம் அவற்றில் விதி விலக்காகப் பழமொழிநானூறு என்னும் நூல் குறிப்பிட்ட வழக்காற்று வடிவத்தைக் கையாண்டு, தன்னியல்பான நாட்டார் வழக்காற்றியத்தை நிறுவியுள்ளதையும் நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
பண்டைய இலக்கியங்கள் தோன்றுவதற்கு அடிப்படையாக வாய்மொழி இலக்கியங்கள் இருந்தன என்னும் கருத்தை முன் வைக்கும் மு. வரதராசனார், க.கைலாசபதி, தமிழண்ணல், துளசி. இராமசுவாமி போன்றோருடைய ஆய்வுகளின் பலம் மற்றும் பலவீனங்களும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. வாய்மொழி இலக்கியங்கள் மனித இனம் வேட்டையாடுதல், மீன் பிடித்தல் உள்ளிட்ட தொழிலில் கூட்டமாக ஈடுபட்ட காலத்தில் ஆடுதல், பாடுதல் ஆகியவற்றினால் தோற்றம் பெற்றன என்பர். இப்பாடல்கள் என்பது செவிகளுக்கு கேள்வியாக அமைந்து அவை செவி வழியாகப் பரவிய அடிப்படையைக் கூறுவார். அத்தகைய பெயர் தெரியாமல் செவி வழியாக இருந்துவரும் நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கம் புலவர்களால் இயற்றப்படும் அகப்பாடலில் தலைமை மாந்தர்களின் பெயர் இடம்பெறாததை, 'சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார்’ (தொல்.அகம்.54) என்று கூறியுள்ளதை எடுத்துரைக்கிறார்.
நாட்டார் மரபுகளை இயற்கையான சூழலிலிருந்து வேறு நோக்கத்திற்காகச் செயற்கையாகப் புலவர் உள்ளிட்டோரால் மறுபடைப்பாக்கம் செய்வதை நாட்டார் வழக்காற்றியம் என்கிறார். இது புராதனவியம் (Primitivism) என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இச்சொல்லாட்சி ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகியது. இதற்குப் பயன்பாட்டு வழக்காறு (Applied Folklore), போலி வழக்காறு (Spurious / Folklore) உள்ளிட்ட சொல்லாடல்கள் பயன்படுத்துவதையும் பேராசிரியர் விளக்குகிறார்.
நாட்டார் வழக்காறுகள் என்பது ஒரு குழுவில் ஒருங்கிணைத்து வெளிப்படுத்தக்கூடிய கருத்துப் புலப்படுத்தத்தைக் குறிக்கும். அந்நாட்டார் வழக்காறுகள் படைப்புகளில் வெளிப்படும்பொழுது அதனை நாட்டார் வழக்காற்றின் கருத்துப் புலப்படுத்தம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் என்கிறார். இது கலைப் படைப்பில் அழகியலைக் காட்டுவதற்காக முன்னிலைப் படுத்தப்படுவதுடன் தன் நிலையிலிருந்து பொருள், ஒலி, அசைவியக்கம் ஆகியவற்றால் உருமாற்றம் என்னும் படிமுறையைப் பெற்றுவிடுகிறது. இவ்வுருமாற்றத்தை நடை, கலைநயம், மரபு பிணைப்பு, புத்துருவாக்கம் ஆகியவற்றால் அணுகமுடியும். இதனைப் படைத்துக் காட்டுவோர் வாசகர் முன்னர்ச் சிறப்புடைய நேரத்தில் இடம்பெறச் செய்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர்.
இத்தகைய ஆய்வு அணுகுமுறையிலிருந்து சிலப்பதிகாரத்தை நோக்கினால் அதனுடைய கதையின் மூலக்கருவைப் பழமரபுக் கதையான, ‘ஒருமுலை அறுத்த திருமா வுண்ணி’ (நற்றிணை, 216), மலைவாழ் மக்கள் கண்ணகியை நேரில் கண்டு வியப்படைந்த காட்சி ஆகியவற்றின் வழியாக எடுத்து இருப்பதில் இருந்தே நாட்டார் மரபு தொடங்கிவிடுகிறது. இக்கதையை இளங்கோவடிகள் படைப்பாக்கம் செய்தபொழுது வாய்மொழி மரபாக வழங்கிய கதையில் போன்மையான வடிவத்தைப் பெறுகிறது என்கிறார் நூலாசிரியர்.
இது போன்று நாட்டார் மக்களிடம் வழங்கும் கதையை இளங்கோவடிகள், கம்பர், பாரதி போன்ற ஆற்றல்மிக்க கவிஞர்களால் மட்டுமே படைப்புகளாகக் கொடுக்கமுடியும். அவற்றில் இளங்கோவடிகள் கண்ணகிக்குத் தெய்வப் பண்புருவைப் புகட்டுவதற்காகவே இக்கதையை எடுத்துக் கொண்டார். கதையில் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த ஆங்காங்கே வேடர்களின் பாடல்கள், ஆயர்களின் பாடல்கள், ஊஞ்சல் ஆடி பாடும் பாடல், பந்து விளையாடும் பாடல், தெய்வத்தைப் போற்றிப் பாடும் பாடல் ஆகிய நாட்டார் வழக்காற்றில் வழங்கிய பாடல்களைப் போன்மையாக்கம் செய்து இயற்றியுள்ளார் என்று நூலாசிரியர் குறிப்பிடுவார். இதற்கு ஆசிரியர் கூற்றாக வருமிடங்களில் ஆசிரியப்பா உள்ளிட்ட இலக்கண யாப்பு வடிவங்களைப் பயன்படுத்துவதையும் நாட்டார் மரபுகளைக் கூறுமிடத்தில் இசைப் பாடல்களைப் பயன்படுத்துவதையும் சான்றாகக் காட்டியுள்ளார்.
கூட்டுப் படைப்பில் உருவாகும் நாட்டார் பாடல்களில் உயிரோட்டமுடைய இசையோடு கூடிய இட்டுக்கட்டுகள் (Improvisation) இருக்கும். இட்டுக்கட்டு என்பது பாடகரோ கதை சொல்லியோ பொருள் பொதிந்த அடிகளைப் புதிது புதிதாகப் புனைந்து படைப்பதைக் குறிக்கும். இப்பாடல்களுக்கு அப்படியே வரி வடிவம் கொடுக்க முடியாது. அதற்கு வரி வடிவம் கொடுக்கும்போது சில மாறுதலுக்கு உட்படும். அத்தகைய நாட்டார் பாடல்களைக் கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை ஆகிய காதைகளில் இளங்கோவடிகள் போன்மையாக்கம் செய்து பெருக்கு நிலை மறுபகர்ப்பு முறை (Incremental repetition) என்னும் உத்தியைக் கையாண்டு கதையை முன்னோக்கி எடுத்துச் செல்வதைச் சான்றுகளுடன் எடுத்துக்காட்டி விளக்குகிறார்.
பிறவித் துன்பத்தைக் கொடுப்பது ஊழ்வினையே என்ற கொள்கை கொண்டவராக விளங்கியவர் இளங்கோவடிகள். இவர் எடுத்துக்கொண்ட கதை கண்ணகி குறித்து நடந்த சம்பவத்தைப் பற்றியதாகும். இக்கதையைக் காரண காரியமான கொள்கையோடு தொடர்புபடுத்த கதை மாந்தரின் முன்னோர் வரலாறு, கதை மாந்தர்களின் சிறப்பு இயல்புகளைக் கூறுதல் உள்ளிட்டவற்றிற்கு மூலக் கதையிலிருந்து சற்று விலகிச் சில கிளைக் கதைகளை இணைத்துக் கொண்டுள்ளார் இளங்கோவடிகள். குறிப்பாக நீதி தவறாத மனுநீதி சோழன், ஏழு பத்தினியர் கதை, கோவலன் முன் பிறவி குறித்த கதை முதலிய கிளைக் கதைகள் சிலப்பதிகாரத்தில் இடம் பெறுகின்றன. இவற்றில் ஏழு பத்தினியர் கதை சோழ நாட்டில் வெவ்வேறு இடங்களில் நடந்ததாகும். இக்கதையை ஒன்றாக இணைத்துக் கண்ணகியுடன் தொடர்புபடுத்துவதும் பின்னர், அக்கதையானது, பெரியபுராணம், பட்டினத்துப்பிள்ளையார் புராணம் ஆகிய இலக்கியங்களில் உருமாற்றம் பெறுவதையும் நுணுகி ஆராய்ந்து அக்கதை மரபுத் தொடர்ச்சியாக இன்றளவும் ஏழு கன்னிமார் கதையாக மக்களிடம் வழங்கி வருவதையும் பேராசிரியர் ஒப்பு நோக்கியிருப்பது நாட்டார் வழக்காற்றியம் ஆய்வினைக் கூர்மைப்படுத்துகிறது.
தீக்கடவுள் முதலியவை மனிதனைப் போல பேசுவதாகக் குறிப்பிடுகிறது சிலப்பதிகாரம். இவை யதார்த்த உலக நிகழ்விற்கு நேர் மாறான புராணத் தன்மையுடையதாகும். இப்புராணக் கதைகளின் வழியாகப் படைப்பில் திருப்புக் கட்டத்தை உருவாக்கவும், கதை மாந்தர்களின் பண்பு இயல்புகளைச் சித்திரிக்கவும், நெருக்கடிகள், முடிவுகள் போன்ற காரணங்களால் இடம் பெறுகிறது என்னும் கருத்துகளை முன் வைக்கிறார் நூலாசிரியர்.
வழிபாட்டு நிகழ்வுகளில் வெறியாட்டு உள்ளிட்ட சடங்கு நிகழ்த்துகையில் தெய்வீக ஆற்றலைப் பெறக்கூடிய தெய்வமுறுதல், எதிர் காலத்தைக் கணித்துரைக்கக் கூடிய குறி கூறுதல் போன்றவை இடம்பெறுவதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடும். இவை நாட்டார் மரபிலிருந்து தழுவிய படைப்பாக இளங்கோவடிகள் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை நூலாசிரியர் விவரிக்கிறார்.
நூலின் பயனாக ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்திய நாட்டார் வழக்காற்றியம் என்ற ஆய்வின் அணுகுமுறையைப் பேராசிரியர் ஆ. தனஞ்செயன் சிலப்பதிகாரத்தில் பொருத்தி ஆய்வு செய்து நூலாக வெளியிட்டிருப்பது தமிழகத்தில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமையும். இலக்கியங்கள் காலந்தோறும் நாட்டார் மரபுகளை மிகுதியாகக் கொண்டு இருப்பதால் அதனை நாட்டார் வழக்காற்றியம் என்ற அணுகுமுறையில் ஆராய வேண்டும். இதனால் நாட்டார் மரபுகளான பாடல்கள், கதைகள், சடங்குகள் உள்ளிட்டவை இலக்கியத்திற்கு எந்த அளவில் அழகியலைத் தந்துள்ளன என்பதை அறியமுடியும். அத்தகைய ஆய்விற்குத் தொடக்கமாகவும் வழிகாட்டவும் இந்நூலை அமைத்துத் தந்த நூலாசிரியர் முன்னோடிகளில் ஒருவராக உள்ளார் என்று கூறுவதில் மிகையில்லை.
சிலப்பதிகாரத்தில் நாட்டார் அழகியல் | ஆ.தனஞ்செயன் | வெளியீடு : என்சிபிஎச் சென்னை, விலை: 185/-
- முனைவர் சே. கரும்பாயிரம், இளநிலை ஆராய்ச்சி அலுவலர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை