விடியாத நேற்று முன்தின அதிகாலைப் பொழுதில் என்னுடைய கைப்பேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. தெரிந்த நபரிடம் இருந்து வந்த அழைப்பு. என்னை நலம் விசாரித்தார். அதன் பின் நானும் பதிலுக்கு நலம் விசாரித்த போது, "நலமாக இல்லையே ஐயா!" என்று பேசத் தொடங்கினார்.

"அரசாங்கத்தோடு உதவியே கிடைக்காமல், அரை வயிறும் கால் வயிறுமாய், இருப்பதை கட்டியாய் குடிக்க வழியில்லாமல் கரைச்சுக் குடிச்சு, இருபத்தோரு நாளை குடும்பம் குட்டிகளோடு உசுரோடு கடந்து விட்டோம். இனியும் இந்த சமூகத்தில் யாரும் எங்களுக்கு உதவல! பிரதமர் அறிவிச்ச மீதமுள்ள பத்தொன்பது நாளையும், நாங்க கடப்பதற்குள் எங்க சமூகத்தை கொரோனா கொல்லுதோ இல்லையோ, பட்டினியே கொன்னுடுமே!" என்று விசும்பத் துவங்கினார், அலை குடிகள் சங்கத்தின் பொறுப்பாளரான அவர்.

அலை குடிகள் யார்?

இந்தியாவில் பிரிட்டிஸ் ஆட்சிக் காலத்தில் போர்க் குணங்களோடு திரண்ட பழங்குடி மக்களை அடக்குவதற்காக 1871 ஆம் ஆண்டு குற்றப் பழங்குடிகள் சட்டம் கொண்டு வரப்பட்டது. இக்கொடிய சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பழங்குடிகள் தங்களின் வாழ்வாதாரத் தேவைக்காக நாடு முழுவதும் துரத்தப் பட்டும், ஓடிக் கொண்டும் இருந்த பழங்குடிகள் தான், பின்னாளில் நாடோடிகள் மற்றும் அரை நாடோடிகள் என அழைக்கப்பட்டார்கள். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வாழ்ந்து வரும் இவர்கள் கல் ஒட்டர், தொம்பர், குறவர் என பல்வேறு சாதிப் பிரிவுகளில் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.

தொடரும் காவல் சித்திரவதைகள்

தமிழகத்தில் மதுரை, தேனி, கோவை, விருதுநகர், தூத்துக்குடி திருநெல்வேலி, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் சுமார் 2000 குடும்பங்களைச் சார்ந்த அலை குடி மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சிலர் மட்டுமே கல்லூரி படிப்பைத் தொட்டுள்ளார்கள். அதே போல் பள்ளிப் படிப்பையும் சம காலத் தலைமுறையில் சிலரே தொடத் துவங்கி உள்ளார்கள்.

சுதந்திர இந்தியா 73 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் அலை குடி சமூக மக்களுக்கு கல்வி எட்டாத நிலையில் தான் உள்ளது. இதற்குக் காரணம் இச்சமூகத்தை சார்ந்த ஆண்களின் மீது பல தலைமுறைகளைக் கடந்தும், தொடர்ந்து பல வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்து வருவதாகும். மேலும் இம்மக்களின் மறுவாழ்விற்காக அரசு எவ்வித சிறப்புத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த முன் வருவதில்லை.

சுதந்திர இந்தியாவில் குற்றப் பழங்குடிகள் சட்டத்தினை 1947 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மாநிலங்கள் தடை செய்து வந்த நிலையில், இக்கொடிய சட்டம் நாடு முழுவதும் 1952 ஆம் ஆண்டு நடுவண் அரசால் தடை செய்யப்பட்டது. குற்றப் பழங்குடிகள் சட்டத்தை அரசு தடை செய்த பின்பும், அலை குடி மக்களின் மீது தொடுக்கப்படும் பொய் வழக்கும், சித்திரவதைகளும் இன்று வரை குறையவில்லை. குறிப்பாக தமிழக காவல் துறையினர் சட்ட வரைமுறைகளை ஏதும் பின்பற்றாமல் அலை குடி சமூகம் என்றாலே குற்றவாளிகள் தான் என்ற பொதுப்புத்தியிலே இம் மக்கள் மீது தொடர்ந்து வழக்குகளையும் வன்முறையையும் பிரயோகித்து வருகின்றார்கள்.

2016 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிழைப்பிற்காக சென்ற மதுரை மாவட்ட மொட்ட மலை பகுதியைச் சார்ந்த அலை குடிகளான, ஐந்து குழந்தைகள் உட்பட பெண்கள், ஆண்கள் என பதினேழு நபர்களை தக்கலை நகர் காவல் நிலையத்தில் 63 நாட்கள் சட்ட விரோதமாக சிறையில் வைத்து கொடும் சித்திரவதை செய்தார்கள். மனித உரிமை நிறுவனமான மக்கள் கண்காணிப்பகம் மதுரை உயர் நீதிமன்றத்தில் தலையீடு செய்த பின்புதான் பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்பட்டார்கள். இதன் பின் 2019 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் (NHRC) பொது விசாரணையில் பாதிக்கப்பட்ட அலை குடி மக்களுக்கு தலா ஒரு லட்ச ௹பாய் இழப்பீடும், சட்ட விரோதமாக செயல்பட்ட காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் அரசிற்குப் பரிந்துரை செய்யப்பட்டது. இது தான் நமது சமூகத்தில் வாழும் அலை குடிகளின் நிலையாகும்.

வாழ்வாதரமும், அரசு நலத் திட்டங்களும்

கல் உடைத்தல், அம்மி கொத்துதல் என்று பல்வேறு வேலைகளை செய்து வந்த அலை குடிமக்கள் இன்று கால மாற்றத்திற்கேற்ப ஸ்டவ் ரிப்பேர் செய்வது போன்ற கூலித் தொழில்கள் மூலமாகக் கிடைக்கும் சிறு வருவாயில் தங்களது அன்றாடப் பிழைப்பை நடத்தி வருகின்றார்கள்.

மேலும் அலைகுடிகள் தங்களது வாழ்வாதரத்திற்கு பல்வேறு மாவட்டங்களுக்குப் புலம் பெயர்ந்து கூலி வேலை செய்து வாழ்ந்து வருகின்றார்கள். இதனால் இவர்களுக்கென்று சொந்தமாக வீடு இருப்பதில்லை. மேலும் அலை குடிகளுக்கு பொது சமூகம் வீடு வாடகைக்குத் தருவதில்லை. இதனால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாடகைக்கு கிடைக்கும் வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் சேர்ந்து வாழ வேண்டிய நெருக்கடியில் இருக்கின்றார்கள்.

இடப்பெயற்சி மூலமாகவே தொடர்ந்து வாழ்க்கையை நகர்த்தி வரும் அலை குடிமக்களில் பெரும்பான்மையினருக்கு அரசு நலத்திட்டங்களை பெறக் கூடிய ரேசன் கார்டு கூட கிடைப்பது இல்லை. மேலும் ஜன்தன் வங்கிக் கணக்கு, உஜ்வாலா சமையல் எரிவாயு, கிசான் சம்மான் நிதித் திட்டம் போன்ற நடுவண் அரசின் எந்தத் திட்டமும் இம் மக்களை எட்டுவதில்லை. அலை குடிகள் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவதில்லை என்பதால் அரசின் 100 நாள் வேலைத் திட்டமும் கிடைப்பதில்லை. இதனால் இம் மக்கள் தங்களுக்குக் கிடைக்கும் சிறு வருவாயின் மூலம் தான் தங்களது அன்றாட பிழைப்பை நடத்தி வருகின்றார்கள்.

ஊரடங்கு உத்திரவினால் ஏற்பட்ட நெருக்கடிகள்

தினந்தோறும் கிடைக்கும் வருமானத்தில் தங்களது வாழ்க்கையை நகர்த்தி வந்த அலை குடி மக்கள், அரசின் திடீர் ஊரடங்கு அறிவிப்பால் அன்றாட உணவுத் தேவைக்காக என்ன செய்வதென்று தெரியாமல் திக்குத் தடுமாறி, நிலை தடுமாறி, தவிக்கின்றார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களாய் சேர்ந்து வாழும் அலை குடிகள் தங்களிடம் சேமிப்பு இல்லாத நிலையில் சமூகத் தடையினால் பெரும்பான்மையான நாட்களில் ஒருவேளை உணவோடு தங்களது பொழுதைக் கடத்தி வருகின்றார்கள். அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணமும் ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்த நிலையில் சிறு குழந்தைகளுக்கு பால் கூட வாங்க முடியாத அவல நிலையில், யாராவது உணவு கொடுத்து தங்களைக் காப்பாற்ற வீடுகளுக்கு வருவார்களா என்று ஜன நடமாட்டமே இல்லாத வெறும் வீதிகளைப் பார்த்துக் கொண்டே உள்ளார்கள்.

தொண்டு நிறுவனங்கள் உதவ அரசு தடை

கொரோனா தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்க சமூகத் தடை விதித்த தமிழக அரசு, சமூகத் தடையால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிவாரண பொருட்களையே தடை அறிவிக்கப்பட்டு பல நாட்கள் கடந்தும் முழுமையாக வழங்கவில்லை. இந்நிலையில் தன்னார்வத்தோடு மக்களைப் பாதுகாக்க முன் வரும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சுயமாக மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கூடாது என அரசு தடை விதிக்கின்றது.

ஏற்கனவே சமூகத் தடையால் பாதிக்கப்பட்ட பொது சமூகம் அரசின் அறிவிப்பால் மேலும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் அலை குடிகளின் நிலை மேலும் கவலைக்குள்ளதாக உள்ளது. இத்தருணத்தில் தான் மக்கள் கண்காணிப்பகம் என்ற மனித உரிமை நிறுவனம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் செயல்படும் ஆரோக்கியகம் என்ற தொண்டு நிறுவனம் மூலம் தேனி மாவட்டத்தில் வாழும் சுமார் 110 அலை குடி குடும்பங்களுக்கு அரிசி வழங்க ஏற்பாடு செய்தது. இத்தருணத்தில் தமிழக அரசு, தொண்டு நிறுவனங்கள் நேரிடையாக மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கூடாது என அறிவித்தது. இதனால் அலை குடிகளுக்கு வழங்க இருந்த நிவாரணப் பொருட்கள் தேனி மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆரோக்கியகம் என்ற தொண்டு நிறுவனம் வழங்கிய அரிசியில் குடும்பத்திற்கு 10. கிலோ வீதம் தேனி நகர், அரண்மனைப் புதூர் பகுதியில் வாழும் 25 குடும்பங்களுக்கு 14.4.2020 அன்று எவ்வித சமூகத் தனிமையையும் பின்பற்றாமல் தேனி தாலுகா வட்டாட்சியர் வழங்கியுள்ளார்.

மேலும் தேனி மாவட்டத்தில் காமாட்சிபுரம், சிந்தலைச்சேரி கம்பம், போடி போன்ற பிற பகுதிகளில் வாழும் அலை குடி குடும்பங்களுக்கும் நிவாரணமாக வழங்க, தொண்டு நிறுவனங்கள் கொடுத்த அரிசியை, அலை குடிகளுக்கு வழங்க நேரமில்லாமல் சென்று விட்டாரா வட்டாட்சியர் என்றும் தெரியவில்லை.

உண்ண உணவில்லாமல் பல மாவட்டங்களில் வாழும் அலை குடி குடும்பங்களுக்கு எப்போது யார் நிவாரணம் வழங்குவார்கள்? இதன் பின் நமது சமூகத்தில் துரத்தப்படும் கடைசி மனிதர்களான அலை குடி குடும்பங்களின் அடுப்புகள் எப்போது புகைந்து பட்டினித் துயரத்தை துரத்தும்?

- இ.ஆசிர், மக்கள் கண்காணிப்பகம்

Pin It