mahindran book 350ஓர் இனத்தின் வரலாற்றை அறியாமையால் எழுதாமல் விடுவது வேறு; தெரிந்தே எழுதாமல் மறைப்பது வேறு.  மேலை நாட்டினரின் வரவுக்குப் பிறகே தவறாகவோ ஓரளவு உண்மையுடனோ வரலாற்றுப் பதிவு நிகழ்ந்துள்ளது.  இந்திய வரலாற்றில் தொன்மையானது தமிழர் வரலாறே.

தமிழரின் மண்ணிற்கும் மரபிற்கும் ஒரு மாபெரும் வரலாறு இருக்கின்றது.  அது இயற்கைச் சீற்றத்தால் அழிக்கப்பட்டது ஒருபக்கம் என்றால், செயற்கையாகத் திரிக்கப்பட்டதும் மாற்றப்பட்டதும் அதிகம் என்பது மிகையாகாது.

இந்தியா என்னும் கட்டமைப்பு உருவாகியது சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் என்றாலும் அதற்கான தொடக்கம் பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆயத்தம் ஆகிவிட்டது.  தற்போது இந்தியாவில் காணப்படும் நான்கு மொழிக் குடும்பங்களில் தமிழரின் தொன்மையைக் குறிக்க மீட்டுருவாக்கம் செய்யப்படும் மூலதிராவிட மொழி கடல் கொண்ட குமரிக் கண்டம் பகுதிக்கு தெற்கு, பூம்புகார் பகுதிக்குக் கிழக்கு என ஒரு விரிந்த பரப்பில் வழக்கில் இருந்தது.  மேலும் வடக்கே இமயமலைப் பகுதிவரை திராவிட மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்குப் பிராகூயி (Brahui) என்னும் வடதிராவிட மொழியே சான்று.  இன்னும் ஒரு மாபெரும் சான்றும் திராவிடரே இந்தியாவின் தொன்மைக் குடியினர் என்பதற்குக் கிடைத்துள்ளது.

நீருக்குள் காற்றுள்ள பந்தை அமுக்குவதற்கு முயற்சி செய்வதைப் போல அந்தச் சான்றை மறைக்க எவ்வளவோ முயன்றார்கள்; முயல்கின்றார்கள்; பலிக்கவில்லை.  சிந்துவெளி நாகரிகத்தை ஆரிய நாகரிகம் என நிறுவக் காளையின் கொம்பைக் குதிரையின் காதாக்க முயன்றவர்கள் விழி பிதுங்க விழிக்கிறார்கள்.  அறிவியல் ஒளி படப்பட மொகஞ்சதாரோ - ஹரப்பா பகுதிகளில் காணப்படுவது திராவிட நாகரிகம் என்பது தெளிவாகி வருகின்றது.

சிந்து வெளியில் கிடைக்கும் புதைபொருட்களும் குறிப்பாக வரிவடிவங்களும் எளிதில் புரிந்து கொள்ள முடியாமைக்கு அவற்றின் தொன்மையே காரணம்.  எவ்வளவு மூடி மறைக்கப்பார்த்தாலும் மெய்ப் பொருள் வெளிப்பட்டே தீரும்.  தமிழக புதைப்பொருட்கள் உறவை ஒன்றுபடுத்த உதவும்

சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்பதை சிலர் நிறுவ முயன்றபோது பல வரலாற்று ஆய்வாளர்களுக்கு அக்கருத்தில் உடன்பாடில்லை.  இருந்தபோதிலும், சிந்துவெளி நாகரிகம் ஆரியர் அல்லாதவர்கள் நாகரிகம்; ஒரு தொல்குடியினரின் நாகரிகம் என்றார்கள். திராவிட நாகரிகத்தின் எச்சங்கள் மொழி, பேசும் மக்கள், புதைபொருட்கள் போன்ற அடிப்படையில் காணப்பட்டாலும் யாரும் முழுமையாகத் திராவிட நாகரிகம் என்று ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றார்கள்.

இவ்வாறு கூறியதற்கு அவர்களுக்கு உறுதியான தரவு கிடைக்காமை காரணமாக இருக்கலாம்.  எப்படி இருந்தாலும் விரைவில் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என நிறுவப்பட உள்ளது.  அதற்காக முன்னோடியாகச் செயல்பட்டோரை வணங்க வேண்டும்.

தமிழரின் தொன்மையான திராவிட நாகரிகம், பழந்தமிழரின் பரந்துபட்ட அறிவு பற்றி இப்போது கிடைத்துள்ள விளக்கங்களை விட இன்னும் கிடைக்கவேண்டியவை ஏராளம்.  அவை பற்றிய ஆய்வாளர்கள் நிறையவே எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.  புறப்பொருள் வெண்பா மாலை என்னும் இலக்கண நூலில் தமிழரின் தொன்மையைக் குறிப்பிட ஒரு கருத்துக் காணப்படுகின்றது.

பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம் / வையகம் போர்த்த வயங்கொலி நீர் - கையகலக் / கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளடு / முன்தோன்றி மூத்த குடி / (புற.வெ.மா. 34)

கரந்தைப் படல இச்செய்யுளுக்குக் கண்ணபிரான் இரவி சங்கர் என்னும் ஆய்வாளர், அறியப்படாத தமிழ்மொழி என்னும் நூலில் பின்வருமாறு விளக்கம் அளிக்கின்றார்.  கல்=மலை; மண்=வயல்; மலை (குறிஞ்சி) தோன்றி, வயல் தோன்றாத காலத்திலேயே, ஆதி குடிகள், தங்களின் உள்நாட்டு எதிரிகள் முன்பு வாளோடு தோன்றி, ஆநிரை காக்கப் போர் செய்கிறார்கள் (ப. 33).

தொடரின் பொருள் அடிப்படையில் சிறிய அளவில் நெருடல் உள்ளது.  கல் தோன்றியது; மண்தோன்றவில்லை என எழுவாய் பயனிலை அமைப்பிலேயே செய்யுள் காணப்படுகின்றது.  கல்தோன்றி என்னும் தொடரைக் கல்லில் தோன்றி என ஏழாம் வேற்றுமை விரியாக  ஆய்வாளர் பொருள் கொள்கின்றார்.

முழுப் பூசணிக்காயைக் காலங்காலமாகவே சோற்றில் மறைக்கப் பார்க்கின்றார்கள்.  உலக அளவில் தமிழர் - திராவிடர் வரலாறும் மிகத் தொன்மையான ஒன்றாகும்.  அதை மறைக்கப் பார்க்கும் சூழலின் இப்படிப்பட்ட பார்வையும் தேவையான ஒன்றாகும்.

காலங்காலமாகவே தமிழரின் வரலாறும் பண்பாடும் பேசப்பட்டு வருகின்றன.  நெருக்கடியும் தற்காலம் மட்டும் அல்லாமல் எல்லாக்காலத்திலும் இருந்திருப்பதை வரலாற்றில் அறியலாம்.  இப்போது நீர், ஜல்லிக்கட்டு, உழுநிலம் போன்றவற்றுக்கான போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.  நிறையப்பேர் தமிழரின வரலாறு நாகரிகம், பண்பாடு போன்றவற்றை நினைவு கூரும் வகையில் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.  கீழடி அகழாய்வும் தமிழர்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பதோடு உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அண்மையில் ஒரு கட்டுரை எழுதுவதற்காகக் கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை என்னும் நூலைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.  வரலாற்று நிலையில் பல தமிழ்ச் சான்றோர்களைத் தமிழ் மொழியிடம் ஆற்றுப்படுத்தி உள்ளார்.  அடுத்துப் படிக்கக் கிடைத்த நூல் அறிவு பற்றிய தமிழரின் அறிவு.  நூலாசிரியர் தாமரை இதழாசிரியர் சி.மகேந்திரன்.

எழுத்தாளர்களைத் தவிர, இக்கால அரசியல்வாதிகளில் எழுத்தாளர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.  விடுதலைக்கு முன்பும் பின்பும் மகாத்மா தொடங்கிப் பலர் தங்கள் கொள்கைகளை எழுத்தில் பதிய வைத்தார்கள்.  ப.ஜீவானந்தம் எழுதிய பின்வரும் பாடல் அடிகளைப் படிக்கும்போது சினம் பொங்கும்.  பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் கையறுநிலை வெளிப்படும்.

காலுக்குச் செருப்புமில்லை / கால் வயிற்றுக்குக் கூழுமில்லை / பாழுக்கு உழைத்தோமடா - என் தோழனே /  பசையற்றுப் போனோமடா

இந்த அடிகளை மறுபடியும் படித்துவிட்டு மனச்சாட்சியுடன் நினைத்துப் பார்த்தால் நாம் பேசிக் கொண்டிருக்கும் புனிதங்கள் எல்லாம் கேள்விக் குறியாகும்.  இளைஞர்கள் நிறைந்த இந்தியாவில்  வடக்கு, தெற்கு என்னும் வேறுபாடில்லாமல் இளைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடித் தெருவில் நிற்கிறார்கள்; அண்டை மாநிலங்களுக்குப் போகிறார்கள்.  உரிய கல்வி இல்லாமல் வெளி நாடுகளுக்குக் கிளம்புகிறார்கள்.  இருப்பவற்றை விற்று ஏமாந்து போகிறார்கள்.  போன பலரின் நிலை மகாகவி வருந்தியபடிதான்.

நாட்டை நினைப்பாரோ - எந்த / நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை / வீட்டை நினைப்பாரோ - அவர் / விம்மி விம்மி விம்மி விம்மி அழுங்குரல் / கேட்டிருப்பாய் காற்றே / (பார.பாட.2313)

பாரதியார் மகளிருக்காகப் பாடியது இன்று ஆடவருக்கும் என எல்லோருக்குமாக எல்லா நாட்டு உழைக்கும் மக்களுக்குமாகப் பொருந்தும் நிலையில் இருப்பதைக் காணலாம்.  விம்மி என்னும் வினையெச்சத்தை மகாகவி நான்கு முறை ஒலித்துத் தம் சினத்தையும் சோகத்தையும் வெளிப்படுத்துகின்றார்.

அறிவு பற்றிய தமிழரின் அறிவு என்னும் நூலை எழுதிய சி.மகேந்திரன்.  மார்க்சியச் சிந்தனையாளர்.  பொருள்முதல்வாதச் சிந்தனை மிக்கவராக இருப்பதால் அவருடைய எழுத்துகளில் மண், அதனில் வாழும் உயிரினங்கள், மானுட நேயம் போன்றவை மிகுந்து காணப்படும்.  அவர் எழுதிய எல்லா நூல்களும் அவையாகவே இருக்கும் என்று சுருக்கமாகக் கூறிவிடலாம்.

தமிழரின் அறிவு தொடர்பான கருத்துகள் பழந்தமிழில் நிறைந்துள்ளன.  எந்த நாட்டினரையும் விடத் தமிழர் அறிவில் குறைந்தவர்கள் எனக் கூறி விடமுடியாது.  மேலும் கூற வேண்டும் என்றால் மற்றவர்களை விட ஒருபடி மேலான சிந்தனையையே பழந்தமிழர் கொண்டிருந்தார்கள்.

தாய்வழிச் சமுதாயம், இனக்குழு வாழ்க்கை என்னும் தொடக்க நிலையில் இடி, மின்னல் போன்றவற்றுக்கு அஞ்சி வழிபடத் தொடங்கிய நிலை உலக ஆதிகாலச் சமூதாயத்தின் வழிபாட்டுத் தொடக்கமாகும்.  பிறகு கடவுளையும், இல்லாத உலகங்களையும் படைத்துப் பெரும்பான்மையான நாட்டினர் வாழ்ந்தபோது பழந்தமிழரின் வழிபாட்டு நிலை வேறு வகையில் இருந்தது.

ஏதாவது ஒரு வகையில், குறிப்பாகப் போரில் உயிர்த் தியாகம் செய்த முன்னோர்களை வழிபட்டார்கள்.  நடுகல்லை வழிபட்டார்கள்.  தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் ஆங்காங்கே கடவுள் தொடர்பான செய்திகள் காணப்படுகின்றன.  பழந்தமிழர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்கள் என்பதைப் பழந்தமிழ் நூல்களை மேலோட்டமாகப் படித்தாலே அறிந்து கொள்ளலாம். தற்போது கீழடியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்படும் தொல்பொருள்கள் - பழந்தமிழரின் வாழ்வியல் எச்சங்கள் உலக மக்களை மட்டும் அல்லாமல் தமிழரையும் வியப்பில் ஆழ்த்துகின்றன.  இந்திய வரலாற்றையே மாற்றி எழுதத் தூண்டுகின்றன.  தமிழகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.

ஏற்கெனவே கோயில்களுக்குக் குறைவில்லை; தற்போது வானளாவிய ஆலயங்கள் நகரங்கள் பட்டிதொட்டி என்னும் வேறுபாடில்லாமல் தோன்றிக் கொண்டிருக்கின்றன.  ஆனால் கீழடியில் வழிபாடு தொடர்பான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகின்றது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வழிபாட்டுத் தலங்கள் இல்லை.  இப்போது அப்படியே தலைகீழாக மாறிக் கிடக்கின்றது.  மந்திரித்த கயிறு கட்டாத மக்களையும் மருந்து, மாத்திரை சாப்பிடாத மக்களையும் பார்க்க முடியவில்லை.  அறிவியல் எவ்வளவு வளர்ந்துள்ளதோ அதற்கு மேலாக மூடநம்பிக்கையும் உச்சம் தொட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் அனைவரும் தங்கள் சுயத்தை அறிந்து கொள்ள ஏதுவாக நூலாசிரியர் சி.மகேந்திரன் அறிவு பற்றிய தமிழரின் அறிவு என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கூறுவதுபோலக் காலம் அறிந்து கூவும் சேவலாக இந்நூலைக் கொள்ளலாம்.

தமிழரின் தெளிந்த அறிவின் முதிர்ச்சியைத் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் காணலாம்.  தமிழ் அறிஞர்களும் மேலைநாட்டு அறிஞர்களும் ஆங்காங்கே குறிப்பிடுகின்றார்கள்.  தத்துவம், வானியல், மருத்துவம், சூழலியல் போன்ற பல்துறைச் சிந்தனை மரபுகளைத் தனித்தனியாக எழுதியுள்ளார்கள்.  தமிழர் அறிவின் திரட்சி ஒட்டுமொத்தமாக ஒரு நூலில் விளக்கப்படவில்லை என நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.  உணர்ச்சிக் கொந்தளிப்பில் அலை மோதிக் கொண்டிருக்கும் தமிழக அரசியலில் அறிவுக்கான ஆழ் கட்டமைப்பு இல்லையே என்ற வருத்தமும் காரணமாக இருக்கலாம்... எனக்குள் இருந்த தமிழரின் அறிவு பற்றிய தேடல் தீவிரம் அடைந்து விட்டது.  இதன் பின்னர்தான் என் ஆழ்மனத்தில் வரையப்பட்ட கோலத்திற்கான முதல் புள்ளி வைக்க முயன்றேன் (அறி.தமிழர்.அறி.ப. 10).

நூலாசிரியர் சி.மகேந்திரன், அறிவு பற்றிய தமிழரின் அறிவு என்னும் நூலில் இருபத்தொரு தலைப்புகளில் தம் அறிவைக் கொண்டு தமிழரின் அறிவைப் பதிவு செய்துள்ளார். என்னுரை என்னும் பகுதியில் நூலாசிரியரின் கருதுகோள் தெளிவாகத் தெரிகின்றது.

இந்தியாவெங்கும் சமஸ்கிருதம் வழியாகவே அறிவு உருவாக்கப்பட்டது, பகிரப்பட்டது என்பதை மறுதலித்துத் தமிழ் மரபிலிருந்து, அதன் இலக்கியங்களின் வழியாக அறிவுத் தோற்றவியலை மகேந்திரன் விளக்க முற்படுகிறார்.  இது தனித்துவ மிக்க வழிகாட்டுதல் என்பேன் (அறி.தமிழர்.அறி.ப.6), என முத்தாய்ப்பாக நூலின் ஆணி வேரைத் தேடிக் கண்டுபிடித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஓர் அறிமுக உரை எழுதியுள்ளார்.

நூலாசிரியர் சி.மகேந்திரன் முதலில் உள்ள நான்கு இயல்களில் பொதுவாக அறிவை அறிந்து கொள்வதற்கான வரையறை, தமிழரின் அறிவியற் கோட்பாடு, மொழி, அறம் சார்ந்த போர் முறை போன்றவை விளக்கப்படுகின்றன.  ஒப்பீட்டு அளவில் விளக்கப்படும் கருத்துகள் தமிழரின் அறிவுத் திறம் மற்றைய எந்த நாட்டவரை விடவும் மேம்பட்டே இருந்துள்ளது என்பதை நூலாசிரியர் தெளிவாக விளக்குகின்றார்.

உலகம் தோன்றி நீண்ட காலத்திற்குப் பிறகு உயிரினங்கள் தோன்றி வாழ ஆரம்பித்தன.  தொல்காப்பியர் (தொல்.பொருள்.) குறிப்பதுபோல உயிரினங்களின் அறிவியல் ஒரு படிநிலை இருந்தாலும் ஓர் அடிப்படையான செயலால்-அறிவுத் திறத்தால் விலங்கு மானுடமாக மாறுகின்றது.  இதனை சி.மகேந்திரன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். முன்னங்கால்கள் கைகள் என்னும் அற்புதங்களைப் படைத் தளிக்கும் அதிசயக் கருவியாக, அனைத்தையும் அனைவருக்கும் வழங்கும் அட்சயப் பாத்திரமாக மாற்றம் அடைகிறது (அறி.தமிழர்.அறி.ப.22).

முன்னங்கால்கள் கைகளாக வளர்ச்சிபெற்ற நிலையும், கருத்தை வெளிப்படுத்தப் பயன்பட்ட மொழியும் மானுடத்தின் உச்சக்கட்ட அறிவின் வெளிப்பாடு என்பதை நூலாசிரியர் சி.மகேந்திரன் தெளிவாகத் தக்க சான்றுகளுடன் விளக்குகின்றார்.

அண்டம், அதன் இயக்கம் என அனைத்துமே மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் பார்க்கும்போது பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்னும் இரண்டு கோட்பாட்டு அடிப்படையிலேயே விளக்கப்படுகின்றன.  இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பழந்தமிழரின் அறிவு பொருளை அடிப்படையாகக் கொண்டது.  தொல்காப்பியர் குறிப்பிடும் முதற்பொருள், கருப்பொருள் இயற்கை சார்ந்தவை.  அடிப்படையான உண்மையைப் பழந்தமிழர் சிக்கெனப் பற்றிக் கொண்டதால்தான் அவர்களின் அறிவு, உலகம் ஏற்கும் பொதுமைப் பண்பைப் பெற்றுள்ளது. 

மனிதரின் உண்மையறிவு பூமியிலிருந்து தான் தொடங்கியிருக்க முடியும்.  பருவ காலங்கள், இரவு, பகல் என்பவற்றை எல்லாம் யோசிக்கத் தொடங்கிய மனிதக்கூட்டம் எல்லா மாற்றங்களுக்கும் பூமியின் சுழற்சிதான் காரணம் என்பதைக் கண்டறிந்தது.  பூமியின் இயக்கத்திற்கான சக்தி எங்கிருந்து கிடைக்கிறது என்ற கேள்விக்கு வெளியிலிருந்து வரும் சக்தியால் பூமி இயங்கவில்லை, அதன் சுய ஆற்றலால்தான் இயங்குகிறது என்பதைத் தமிழர்கள் தொடக்க காலத்திலேயே அறிந்து கொண்டனர் (அறி.தமிழர்.அறி.ப.15).

இவ்வகையான அடிப்படையால்தான் பூமியின் தோற்றம், இயக்கம் பற்றிய தமிழரின் கோட்பாடு உலக மதங்களிடம் இருந்து மட்டுமல்லாமல் இந்திய ஆத்திகச் சமயக் கோட்பாடுகளில் இருந்தும் வேறுபடுகின்றது.  உலகத்தை இறைவன்தான் படைத்தான் என்று கூறிக்கொண்டு  உலகிலுள்ள பொருட்களை எல்லாம் மிக அதிகமாக நுகர்ந்து கொண்டு உலகமே மாயை என்று கூறும்  பெரும்பான்மையான சமயத்திடமிருந்து பழந்தமிழரின் அறிவு மாறுபட்டுச் சிந்தித்ததை நூலாசிரியர் சி.மகேந்திரன் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

பழந்தமிழரின் வீரமும் போர்முறையும் அறம் சார்ந்தவை; இவ்வாறு அவர்கள் சிந்தித்ததற்கு அவர்கள் முதிர்ச்சி அடைந்த அறிவே காரணம் என்பதை நூலாசிரியர் விரிவாக ஆராய்கின்றார்.  காதல், வீரம், கொடை போன்ற வாழ்க்கையின் நடைமுறைகளுக்கு இலக்கணம் வகுத்த பெருமை தமிழருக்கே உரியது எனத் தமிழாராய்ந்த மேலை நாட்டு அறிஞர்களும் வியந்து பார்க்கின்றார்கள்.

தாய்வழிச் சமுதாயம், இனக்குழு வாழ்க்கை, முடியாட்சி எனப் படிப்படியாகப் பழந்தமிழரின் வாழ்க்கையும் உலகத்தோடு ஒட்டியே வளர்ந்துள்ளது.  க.கைலாசபதி கிரேக்க ஆய்வுமுறையைப் பின்பற்றிச் சங்கப் பாடல்களை, குறிப்பாகப் புறப்பாடல்களை வீரயுகப் பாடல்கள் என நிறுவியுள்ளார்.  நூலாசிரியர் சி.மகேந்திரன் ஆய்வாளரின் கருத்தை மீள்பார்வைக்கு உள்ளாக்குகின்றார்.

மருதநாயகம் போன்ற சில ஆய்வாளர்கள் கிரேக்க வீரயுகப் பாடல்கள் வாய்மொழித் தன்மை உடையவை என்றும், சங்கப் பாடல்கள் செவ்வியல் தன்மையுடன் அறம் சார்ந்த அறிவுத் திறனோடு எழுதப்பட்டவை என்றும் கூறுவதைப் பல சான்றுகளுடன் நூலாசிரியர் நிறுவுகின்றார்.  வீரயுகப் பாடல்கள் எதிரியின் அழிவைப் பற்றியே அதிகமாக விவரிக்கும்.  அறம் சார்ந்த போர்முறை சங்க காலங்களில் வழிவழியாகத் தொடர்ந்து வந்தன (அறி.தமிழர்.அறி.ப.61) என நூலாசிரியர் சி.மகேந்திரன் உறுதிபடக் கூறுகின்றார்.

பழந்தமிழரின் அறிவு, அறம் தொடர்பான பொதுத்தன்மைகளை விளக்கிய நூலாசிரியர், பல பக்க அளவில் ஒரு நூலாக எழுத வேண்டிய வரலாற்று நிகழ்வுகளை ஆறு பக்க அளவில் தமிழுக்கு அநீதி என்னும் தலைப்பில் குறுக்கியுள்ளார்.

மூவேந்தர்களும் குறுநில மன்னர்களும் தங்களுக்குள் பூசலிட்டுக் கொண்டாலும் வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகில் அந்நியருக்கு இடம் கொடுக்காமல் ஆட்சி செய்தார்கள்.  போரால் வெல்ல முடியாத பூமியைக் கருத்துமுதல்வாதத்தைப் பரப்பி பறவைக் கூட்டைக் கலைப்பது போல் கலைத்து விட்டார்கள்.  தமிழ் மன்னர்கள் ஆட்சி வீழ்ந்து பல்லவர், விஜயநகரர், முகமதியர், நாயக்கர், மராட்டியர், அந்நியர் ஆட்சிகள் மாறிமாறி வந்தபோது தமிழரின் அறிவு சார்ந்த கருத்துகள் மழுங்கத் தொடங்கின.  வழிபாடு, வட மொழிக்கு முதன்மை போன்றவற்றால் தமிழரின் வாழ்க்கை முறையே திசைமாறிவிட்டது.  வாழ்க்கையே திசைமாறும்போது மொழி எம்மாத்திரம்?

இவ்வளவு சிக்கல், இடைஞ்சல்களையும் தாங்கிக்கொண்டு தமிழ் நிலைபெற்றுள்ளது என்றால் மக்களின் புழங்கு மொழியாக இருந்ததே காரணமாகும்.  அதிகார வர்க்கத்தால் புறக்கணிக்கப்பட்டது.  வழிபாட்டில் புறக்கணிக்கப்பட்டது.  முறையான பாடசாலைகள் இல்லை.  காலங் காலமாக வழக்கில் இருக்கும் மொழியைத் தமிழகத்தில் கற்க வழியில்லை.  ஆங்காங்கே வடமொழிக்கு வேதபாடசாலைகள் முளைத்தன.

கல்வி சிறந்த தமிழ்நாடு (பார.பாட. 1766) என்று மகாகவி பாடியது கூட அவர் காலத்தைக் கருத்தில் கொண்டதாகக் கொள்ள முடியாது; பழந் தமிழகத்திற்கே பொருந்தி வரும்.  எப்படியோ வளமான இலக்கிய இலக்கணங்களைப் பெற்றிருந்ததும் இவ்வளவு இக்கட்டிலும் தமிழ் தப்பிப்பிழைத்து வாழ்ந்து வருகின்றது.

எப்படி எல்லாம் தமிழின் உண்மையான வரலாற்றை மறைக்க முயன்றுள்ளார்கள்.  இந்திய மொழிகள் அனைத்துக்கும் தாயாக இருந்து, அறிவுக் கோட்பாட்டை வளர்த்துக் கொடுத்தது வடமொழி என்னும் சமஸ்கிருதம்தான் என்ற கருத்து உருவாக்கப் பட்டது.  ஆங்கிலேயர் காலத்தில் மேற்குலகில் திட்டமிட்டு இந்தக் கருத்து நிலையைப் பெரும் முயற்சி செய்து பரப்பிவிட்டார்கள் (அறி.தமிழர்.அறி.ப. 65).

இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி வடமொழியே என்னும் கருத்து மேலை நாட்டினரிடம் உருவாவதற்கு நம்மவர்களே காரணமாக இருந்துள்ளார்கள்.  முதலில் வந்தவர்கள் இவர்கள் சொல்லியதை நம்பினார்கள்; பிறகு வந்தவர்கள் அக்கருத்துத் தவறானது என்று மாற்றிக் கொண்டார்கள்.  தமிழும் வடமொழியும் வேறுவேறு குடும்பங்களைச் சார்ந்தவை என்பதை நிறுவினார்கள்.  பிரான்ஸிஸ் ஒயிட் எல்லீஸ் (1816), இராபர்ட் கால்டுவெல் (1856) என்னும் அறிஞர்கள் வடமொழியே இந்திய மொழிகளுக்குத் தாய்மொழி என்னும் கருத்தை வலுவிழக்கச் செய்தார்கள்.

மேலை நாட்டினர் கூறுவதற்கு முன்னரே வடமொழியே தமிழ் மொழிக்குத் தாய்மொழி எனத் தமிழகத்தில் வாழ்ந்தவர்களே கூறத் தொடங்கி விட்டார்கள்.  வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார் (கி.பி.11, வீரசோ. 60) தொல்காப்பிய உரையாசிரியர் சேனாவரையர் (கி.பி.13, தொல்.சொல். 401) இலக்கணக் கொத்து என்னும் நூலை எழுதிய சாமிநாத தேசிகர் (கி.பி.17, இல.கொத். 7: 27-28) எனப் பலர் இப்பட்டியலில் இடம் பெறுகின்றார்கள்.

மக்கள் நெருங்கி வாழும்போது சிற்சில மொழிக் கலப்பு ஏற்படுவது இயற்கை.  சொற்களைக் கொடுத்து எடுத்துக்கொள்ளும்.  ஒலிப் பரிமாற்றம் நிகழும்.  தமிழ் மற்றுமுள்ள திராவிட மொழிகளில் நிறைய இந்தோ - ஆரிய மொழிச் சொற்கள் கலந்துள்ளன.  வேதங்கள் தொடங்கிப் பல தொன்மையான வடமொழி நூல்களில் நூற்றுக்கணக்கான திராவிடச் சொற்கள் கலந்துள்ளன.  மொழியியல் அறிஞர்கள் தொகுத்துக் கொடுத்துள்ளார்கள்.

இந்தோ - ஆரிய மொழிகள் இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை.  இந்தோ - ஐரோப்பிய மொழிகளில் சொற்களின் எழுத்தமைப்பு மெய் - உயிர் – மெய் (CVC) என்றிருக்கும்.  ஆனால் திராவிட மொழிகளில் உயிர், மெய், உயிர்மெய் (அம்மா) என்றிருக்கும். வடமொழியில் இருக்கும் இந்த முறை திராவிடத்தில் இருந்து பெற்றது.  வடமொழியில் காணப்படும் நாவளை ஒலிகள் ட், ண், ள் ((t n l) என்பவை திராவிடத்தில் இருந்து கடன் பெற்றவை என மொழியியல் அறிஞர்கள் குறிப்பர்.  இவை இந்தோ - ஆரியத்தின் மூலமொழியாகிய இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் இல்லை.

திராவிட மொழிகளுக்கு வடமொழியே தாய் மொழி என்னும் செத்துப்போன கருத்தை முற்காலம் மட்டும் இல்லை; தற்காலத்திலும் சிலர் எழுதிக் கொண்டும் நினைத்துக் கொண்டும்தான் இருக்கிறார்கள்.   கல்வெட்டு ஆய்வாளர் இரா.நாகசாமி கூறும் கருத்தைத் தி.சுப்பிரமணியன் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்.

1) தமிழர்களுக்கு எழுத்து வரிவடிவம் கிடையாது.  பிராமி எழுத்துக்கள் பிராமணர்களால் உருவாக்கப்பட்டவை.

2) தமிழ் இலக்கியங்கள் சமஸ்கிருத நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை.

3) வர்ணாசிரமக் கோட்பாடு என்ற சாதி அமைப்பு முறை சங்க இலக்கியங்களில் உள்ளது.  அது பிராமணர்களால் கொண்டு வரப்பட்டது இல்லை.

4) அகத்தியர், இந்திரன் போன்ற வேதக் கடவுள்களைத் தமிழர்கள் வணங்கினார்கள்.

இவருடைய முழுமையான கருத்து தமிழர்களுக்கு நாகரிகம் என்பது இல்லை. இதைக் கற்றுக் கொடுத்தவர்கள் பிராமணர்கள், அவர்கள் இல்லை என்றால் தமிழர்கள் இனக்குழு மக்களாகவே இருந்திருப்பார்கள் என்று இரா.நாகசாமி வாதிடுகிறார் (சமூக விஞ்ஞானம் 16:61, ப. 24).

இக்கருத்துக்களைப் படிக்கும்போது, குதிரை கொள் என்றால் வாயைத் திறக்கும். கடிவாளம் என்றால் வாயை மூடிக்கொள்ளும் என்னும் பழமொழிதான் நினைவுக்கு வந்தது.  இவ்வாறு கூறுவது புதுமை இல்லை.  இடம் பெயர்ந்து வந்தவர்கள் தொன்மைக் குடிகளின் முகவரியை அழித்தொழிக்க முயல்வது உலகின் பொதுத்தன்மை.  இந்தோ - ஆரியரால் திராவிடர், சிங்களர்களால் தமிழர், ஐரோப்பியர்களால் அமெரிக்காவின் செவ்விந்தியர், ஆப்பிரிக்காவின் நீக்ரோ இனமக்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

கி.மு.மூன்றில் கிடைத்த அசோகரின் கல்வெட்டே தொன்மையான கல்வெட்டு என்றார்கள்.  பிராமி என்று பெயர் வைத்தார்கள்.  தமிழகத்தில் கிடைத்த தொன்மையான குகைக் கல்வெட்டுகளைத் தமிழ்-பிராமி என்றார்கள்.  தமிழகத்தில் கிடைத்த வரி வடிவத்திற்கு மூலம் புத்தர் கல்வெட்டு என்றார்கள்.  அண்மையில் கீழடியில் கிடைத்துள்ள பானைகளில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்று அறிவியல் கணிப்பு குறிப்பிடுகின்றது.  தமிழ் பிராமி எனக் கூறக்கூடாது.  தமிழி என்றுதான் கூறவேண்டும் என அறிஞர்கள் கூறுகின்றனர்.  கடல் மீனுக்கு செம்படவர் வைத்தது பெயராக இருக்கலாம்.  ஆய்வுக்கு அப்படி இருக்கக் கூடாது.  இருந்தால், வரும் தலைமுறைகளின் அறிவியல் ஆய்வு புரட்டிப் போட்டுவிடும்.  காலங்காலமாக மதங்கள், தத்துவ நூல்கள் கூறிய கருத்துகள் மறுக்கப்படுகின்றன அல்லது மீள் பார்வைக்கு உட்படும். யாகாவாராயினும் நா காக்க வேண்டும் என்றார் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர்.  கண்டபடி எழுதாமல் கையையும் காக்க வேண்டும்.

நூலாசிரியர் சி.மகேந்திரன் இந்திய வரலாறு, நாகரிகத்தில் இந்தோ-ஆரியத்தின் கூறு சிறிய அளவிலேயே உள்ளது என்பதைப் பல அறிஞர்களின் கருத்துகளைக் கொண்டு நிறுவுகின்றார்.  ஆரிய மயம் (Sanskritization)  ஆக்கப்பட்டாலும் பரந்துபட்ட இன்னும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் தமிழரின் அறிவைத் தமிழருக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் நினைவு கூர்கின்றார்.  நால் வருணம் கடவுள் படைத்த புனிதப் பாகுபாடு என்று கூறும் இந்நாட்டில்  யாதும் ஊரே யாவரும் கேளிர் (புறம். 192), பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (திருக். 972) என்னும் பாடல் அடிகள் தமிழனை நெஞ்சம் நிமிர்த்தி நடக்க வைக்கக் கூடியவை.  நாடு, மொழி, இனம் போன்றவற்றால் வேற்றுமை -  பாராட்டும் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்குச் சாட்டை அடி கொடுக்கக் கூடியவை அல்ல.  மனித நேயத்தின் மாண்பைக் கற்றுத் தரும் அடிகள்!

திரைகடல் ஓடித் திரவியம் தேடுவதும், மாட மாளிகைகளைக் கட்டிக் கொண்டு வாழ்வதும் அரசியலில் மனம்போனபடி செயல்படுவதும் மட்டும் வாழ்க்கை அன்று. காலங் காலமாக நெருக்கடிக்கு உள்ளாகும் தமிழரின் அறிவு சார்ந்த கோட்பாடுகளை மீட்டெடுக்க வேண்டும் என்பது நூலாசிரியரின் அக்கறையாக உள்ளது.  எதிர்காலத்தில் தமிழனின் தனித்துவமான பிறப்பை உலக அளவில் ஒப்பிட்டு அதன் தொன்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு இருக்கின்றது. அப்பொழுதுதான் தாய்த் தமிழின் தொல் சிறப்பை மேலும் நாம் உணர்வதையும், அதை உலகிற்கு உணர்த்துவதையும் சாத்தியப்படுத்த முடியும் (அறி.தமிழர்.அறி.ப.71).

நூலாசிரியர் சி.மகேந்திரனின் சினம் அக்கினிப் பிழம்பாக வளர்ந்து கொண்டிருப்பதை நூலைத் தொடர்ந்து படிப்பவர்கள் உணர்ந்து கொள்ளலாம்.  காலங்காலமாகத் தமிழரின் அறிவுக்கோட்பாட்டை மறைக்க முயன்றவர்களைத் தோலுரித்துக் காட்டுகின்றார்.

இன்றைய அறிவியல் உலகம் அண்டத்தில் உள்ள பூமியை மட்டுமல்லாமல் எல்லாக் கோளங்களையும் அலசி ஆராய்ந்து பார்க்கிறது.  பெரும்பாலும் பாறை அமைப்பிலேயே உள்ளன.  பெரும்பாலானவை உயிரினங்கள் வாழத் தகுதி அற்றவையாகவே உள்ளன.  உலகம் பற்றிய கோட்பாட்டில் பெரும்பாலான மதங்கள் ஒன்றை ஒன்று விஞ்சும் வகையிலேயே கதைகளைக் கூறுகின்றன.  எல்லா மதங்களுமே அவற்றின் இறைவன் படைத்ததாகவே கூறுகின்றன.

எந்த மதத்தையும் குறை கூறுவதற்காக இக்கருத்தைக் கூறவில்லை.  தொன்மையான மதங்கள் மானுடம் ஓரளவு சிந்திக்கத் தொடங்கிய காலத்திற்கு நீண்ட நாள் கழித்துத் தோன்றியவை.  அவற்றில் பல இக்காலத்திற்குப் பொருந்தாதவையாக இருக்கும்; ஏற்றுக் கொள்ள வேண்டும். பூமியின் தோற்றம் பற்றிக் கூறும் கிரேக்க அறிவு, பூமியைக் கடவுளிடம் பெற்ற ஒருவன் தாங்கிப் பிடித்தான் என்று கூறுகிறது  (அறி.தமிழர்.அறி.ப. 16) என்று நூலாசிரியர் கூறும் செய்தி பலவற்றைச் சிந்திக்க வைக்கிறது.

உலகத்தை ஆதிசேடன் தாங்கிப் பிடித்திருப்பதாக வடமொழியில் குறிக்கப்பட்டுள்ளது.  பைபிள் உலகம் தட்டையாக இருப்பதாகக் குறிப்பிடுகின்றது.  ஆனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய ஒல்காப்பெரும் புகழ்த் தொல்காப்பியர் உலகம் பற்றிய கருத்து அனைவரையும் சிந்திக்க வைக்கக் கூடிய ஒன்றாகும்.

நிலம் தீநீர் வளி விசும்போடு ஐந்தும் / கலந்த மயக்கம் உலகம் ஆதலின் / இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்/திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும் (தொல்.பொருள். 639).  இந்நூற்பாவில் இரண்டு கருத்துகள் பழந்தமிழரின் உச்சம் தொடும் அறிவை வெளிப்படுத்துகின்றன.  நூலாசிரியர் கொடுக்கும் விளக்கமும் இவண் நோக்கத்தக்கது. இன்றைய அறிவியல் வளர்ச்சியோடு ஒப்பிட்டால், தமிழரின் அறிவு, அனுபவ அறிவு என்றாலும் முதிர்ந்த அறிவு என்பதாகத்தான் கூறத் தோன்றுகிறது.  இயற்கையோடு நுட்பமான உறவு இல்லாத சமூகத்தால் இத்தகைய அறிவைப் பெற்றிருக்க முடியாது (அறி.தமிழர்.அறி. ப. 135).

முதலாவது உலகம் பற்றிய கருத்தாகும்.  நிலம், தீ, நீர், காற்று ஆகாயம் என்னும் ஐம்பெரும் ஆற்றல்களால் இவ்வுலகம் தோன்றியுள்ளது என்னும் தொல்காப்பியரின் கருத்து உலகம் உள்ள அளவும் பொருந்தக்கூடிய கருத்தாகும்.

இன்னொன்று திணை - பால் - இடம் - எண் பாகுபாடாகும்.  தொல்காப்பியரின் திணைப் பாகுபாடு தமிழருக்கு இயல்பாகத் தெரியலாம்.  ஆனால் உலக மொழிகளின் பால்பாகுபாட்டை அறிந்த அறிஞர்கள் - குறிப்பாக, மொழியியல் அறிஞர்கள் தமிழரின் என்றும் அறிவியல் முறைப்படி ஏற்றுக் கொள்ளத்தக்க பால்பாகுபாட்டு அறிவை உற்று நோக்குகின்றார்கள்.  காரணம் பல மொழிகளில் ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் எனப் பாலியல், உடலியல் அடிப்படையில் அமைந்த உயிரினங்கள், உயிரற்றவற்றை மாறிமாறிக் குறிப்பிடும் முறையைக் காணலாம்.  அஃதாவது ஆண்பாலைப் பெண்பாலாகவும் பெண்பாலாகவும் இவற்றை ஒன்றன் பாலாகவும் ஒன்றன்பாலை ஆண், பெண் பாலாகவும் இயற்கைக்கு முரணாகப் பால் மாறாட்டத்துடன் குறிப்பதைக் காணலாம்.

சான்றுக்கு வடமொழியில் பெண்ணைக் குறிக்கும் பார்யா பெண் பால், தாரம் ஆண்பால், களத்திரம் அலிப்பால். தமிழில் பெண், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண், மனைவி, கிழத்தி சிறுமி, இல்லாள் என எத்தனை சொற்கள் இருந்தாலும் பெண்பால் என்றே கொள்ளப்படும்.

மக்கள் உயர்திணை, அவரல்லாத அனைத்து உயிருள்ளவையும் உயிரற்றவையும் அஃறிணை எனத் திட்ட வட்டமாக வரையறை செய்து தொல்காப்பியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே / அஃறிணை என்மனார் அவரல பிறவே / ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே (தொல்.சொல். 1).

இவ்வகையான பால்பாகுபாட்டை இராபர்ட் கால்டுவெல் (1856: 222) முற்போக்குச் சிந்தனையின் உச்சக்கட்டம் என்கிறார்.  இடது சாரிச் சிந்தனை மிக்க, பொருள்முதல்வாதத்தின் உண்மையை உணர்ந்த நூலாசிரியர் சி.மகேந்திரன் தொல்காப்பியரைத் தெளிவாகப் புரிந்து கொண்டு பழந்தமிழரின் அறிவுக் கோட்பாட்டின் ஆணிவேர் தொல்காப்பியத்தில் இருப்பதை வெளிப்படுத்துகின்றார். தொல் காப்பியம் மொழிக்கான இலக்கணத்தையும் வாழ்க்கைக்கான இலக்கணத்தையும் மிக விரிவாகக் கூறியபோதிலும் நூல் செய்யுள் களில் சுருக்கமாகவே அமைந்து தனித்துவமான கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது.  இத்தகைய செய்யுள் கட்டமைப்பு வேறு எந்த மொழிப் பாடல்களிலும் இல்லை (அறி.தமிழர்.அறி.ப. 92).

நிலப்பாகுபாடு, காலப்பாகுபாடு, நிலத்திற்குரிய தெய்வம், உணவு, உரிப்பொருள் என அனைத்தையும் உணர்ந்த நூலாசிரியர் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி இருப்பது பாராட்டத்தக்கது.

கிரேக்கம், இலத்தீன், வடமொழி போன்ற தொன்மையான மொழிகளில் அந்தந்த மொழிபேசும் மக்களின் அறிவு சார்ந்த பண்பை மெய்ப்பிக்கத் தனித்தனியான தத்துவ நூல்கள் இருக்கின்றன.  ஆனால் தமிழில் தனியான நூல் இல்லை என்றாலும் மொழியையும் வாழ்வியலையும் விளக்கும் தொல்காப்பியமும் பழந்தமிழ் நூல்களுமே தமிழர்தம் அறிவார்ந்த தத்துவக் கோட்பாடுகளை உள்ளார்ந்தவையாக இருப்பதை நூலாசிரியர் சான்றுகளுடன் விளக்குகின்றார்.

ஜகதீஸ் சந்திரபோஸ் உயர்திணையைப் போன்றே அஃறிணைக்கும் எல்லா உணர்வுகளும் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து நோபல் பரிசு பெற்றார். வெப்பம், குளிர், ஒலி, ஒளி ஆகிய புறத்தூண்டுதல்கள் மனிதர்களையும் விலங்குகளையும் எவ்வாறு பாதிக்கின்றனவோ அவ்வாறே தாவரங்களையும் பாதிக்கின்றன என்பதை நிரூபித்தார் (அறி.தமிழர்.அறி.ப. 108).

இருபதாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட ஆய்வை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியரின் அறிவு பற்றிய சிந்தனையோடு நூலாசிரியர் ஒப்பிடுவது பாராட்டத்தக்கது.  மக்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததால்தான் ஒன்று முதல் ஆறறிவுடைய உயிரினங்களைப் பிரித்துப் பட்டியலிட முடியும்.  தொல்காப்பியர் பின்வரும் நூற்பாவில் அனைவருமே வியந்து நோக்குமாறு அறிவு அடிப்படையில் உயிரினங்களைக் குறிப்பிடுகின்றார்

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே / இரண்டு அறிவதுவே அதனொடு நாவே / மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே / நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே / ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே / ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே / நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே/(தொல்.பொருள். 573)

இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் போன்றோர் எழுதும் உரைகள் வழிவழியாகப் பழந்தமிழர் இயற்கையோடு ஒன்றிவாழ்ந்ததன் விளைவாக விளைந்த பட்டறிவைப் பறைசாற்றும் வகையில் உள்ளன.

தமிழரின் இயல்பான வாழ்க்கையில் அறிவு தொடர்பான மெய்யியல் பொதிந்துள்ளது.  கடவுளை விளக்கவும் மேல், கீழ் உலகங்களை விளக்கவும் தமிழர்கள் தத்துவங்களை விளக்கவில்லை.  வையத்துள் வாழும் வாழ்க்கைக்கு ஏற்பச் சொர்க்கமும் நரகமும் பூமியிலேயே தெரியும் என்னும் கோட்பாட்டைக் கொண்டிருந்தனர்.

பிற உயிரினங்களுக்கும் மானுடத்திற்குமான இயைபை நூலாசிரியர் விளக்குவதைப் படித்துக் கொண்டிருந்தபோது சங்கப்பாடல் ஒன்று (நற். 172) நினைவுக்கு வந்தது.  அதன் பொருள் பின்வருமாறு அமையும்.

தலைவன் தலைவியைக் காண்பதற்காகப் பகலில் வருகின்றான்.  பகற் குறியில் தலைவியைச் சந்திக்கத் தோழி விரும்பவில்லை.  அது அலருக்கு வித்தாகி விடும்.  சந்திப்பதைத் தவிர்க்க ஒரு நிகழ்ச்சியைத் தோழி தலைவனிடம் கூறுகின்றாள்.

தலைவியும் தோழியரும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தில் விளையாடுகின்றனர்.  ஒரு புன்னை வித்தை விளையாடும்போது பூமியில் பதித்துள்ளனர்.  அவ்வாறு பதித்ததை மறந்தும் போயினர்.  ஒருநாள் புன்னை விதை முளைத்துத் துளிர் விட்டிருப்பதைக் கண்டனர்.  பாலையும் நெய்யையும் நீராக ஊற்றி வளர்க்கின்றார்கள்.

மகளும் அவள் தோழியரும் புன்னை வளர்ப்பதை அறிந்த தாய் அது உங்களுக்குத் தங்கை ஆகும் என்கின்றாள். இதனைத் தோழி தலைவனிடம் கூறி, இப்புன்னை அருகில் நின்று நின்னோடு சிரித்துப் பேசி மகிழ்ச்சியாக இருக்க முடியாது.  நாணம் மிகும்.  இன்னொன்றைக் குறிப்பிட ஒன்றன் வழி விளக்குவது உத்தி முறைகளில் ஒன்று.  நூலாசிரியர் நற்றிணைப் பாடல் கருத்தைத் தெளிவாக விளக்குகின்றார்.

இதனை இங்கே இங்கே குறிப்பதற்குக் காரணம் பழந்தமிழரின் மரபு சார்ந்த அறிவைக் குறிப்பிடுவதற்காகத்தான்.  தேவைக்காகக் காடு கொன்று நாடாக்கினார்கள்;  நீர் நிலை அமைத்து வளத்தைப் பெருக்கினார்கள்.  இப்போது நீர்நிலைகள் இருந்த இடமே தெரியவில்லை.  மலை, காடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன.  சுற்றுச் சூழல் கெட்டுக் கேடு விளைய ஆரம்பித்தால் ஏழை - பணக்காரன் என்றெல்லாம் பார்க்காது.  150 ஆண்டுகளுக்கு முன்னரே மார்க்ஸ் - எங்கல்ஸ் வனங்களை அழிப்பதனால் ஏற்படும் அபாயத்தை விரிவாக எழுதி உள்ளார்கள்.  இயற்கையை அழித்ததன் எதிர் விளைவை உலகம் இப்போது நுகரத் தொடங்கி உள்ளது.

வலதுசாரிச் சிந்தனையாளர்கள் நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்கி உலக வளங்களை எல்லாம் ஏறக்குறைய அழித்து விட்டார்கள்.  பிறகோள்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.  நூலாசிரியர் மகேந்திரன் திடீரென்று இந்த நூலை எழுதி விடவில்லை.  இயற்கையின்பால் ஈடுபாடு கொண்டவர்.  மனித நேயத்தின் மகத்துவம் அறிந்தவர்; தமிழகத்தைப் பாலைவனம் ஆக்காதே, ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் தீக்குள் விரலை வைத்தேன் (2011), வீழ்வேன் என்று நினைத்தாயோ (2011) போன்ற நூல்களைப் படித்தாலே அறிந்து கொள்ளலாம்.

பழந்தமிழரின் அறிவை உரசிப் பார்க்க நூலாசிரியர் தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொள்கின்றார். உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரை நூலாசிரியர் உச்சி மேல் வைத்துப் போற்றுகின்றார். மானுட விழுமியங்கள் பற்றித் திருவள்ளுவர் பல உள்ளடக்கங்களில் பேசினாலும் நூலாசிரியர் தம் நூல் தலைப்பிற்கு ஏற்ப அறிவுடைமை என்னும் பகுப்பில் உள்ள குறட்பாக்களை விலா வாரியாக எழுதுகின்றார்; பிறநாட்டு அறிவுக்கோட்பாட்டோடு ஒப்பிடுகின்றார்.

படிப்பறிவு, பட்டறிவு என இருவகையில் அறிவு பகுக்கப் பட்டாலும் இரண்டு வகையையும் பெற்றிருக்க வேண்டும்.  குறிப்பாகக் கல்வியால் பெறும் அறிவு மேலும் மேலும் சிந்திக்கத் தூண்டும்.  இதனால்தான் உழைக்கும் மக்களிடம் கல்வி சென்று விடக்கூடாது என்று இடைக் காலத்தில் இருந்து கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள்.  புத்தர் தொடங்கித் திருவள்ளுவர், சித்தர்கள், மகாகவி, பெரியார், பாரதிதாசன், காமராசர் எனப் பல சான்றோர்கள், சாதி, மதம் பாராமல் அறிவை விருத்தி செய்வதற்கான வழிமுறைகளை எல்லாம் கூறி உள்ளார்கள்.

சமுதாயத்தில் விழிப்புணர்வு இருந்தால், சாதி, மத அடிப்படையில் வேற்றுமையை வளர்க்க முடியாது.  எல்லோரும் வாய்ப்புகளைச் சமமாகப் பெற்று வாழ வேண்டும் எனப் பாடுபட்டோரின் சிலைகள் சிதைக்கப்படுகின்றன. காலணி மாலை அணிவிக்கின்றார்கள்; சேறு, கருப்பு மை பூசுகின்றார்கள்.  அம்பேத்கார், பெரியாருக்குச் செய்த மரியாதையைத் தஞ்சாவூரில் திருவள்ளுவருக்கும் செய்துள்ளார்கள்.

அவர்களை அவமரியாதை செய்வதாக நினைத்துக்கொண்டு செய்பவர்கள், அவர்களே அதை அணிந்து கொள்கின்றார்கள்; பூசிக் கொள்கின்றார்கள் என்றுதான் நயத்தக்க நாகரிகத்தோடு சொல்ல வேண்டும்.  மானுடம் போற்றிய மாமேதைகள் எல்லோரும் சுரண்டல் வர்க்கத்தால் ஏதாவது ஒரு வகையில் இழிவு படுத்தப்படுகிறார்கள்.  திருவள்ளுவரின் ஆழமான அறிவையும் அகலமான பார்வையையும் நூலாசிரியர் சி.மகேந்திரன் பின்வருமாறு கூறுகின்றார்.  அறிவுக் கோட்பாட்டில் மேலை நாட்டாரிடம் காணப்படும் குழப்பமும் சொல்லாடலும் திருக்குறளில் இல்லை. அறிவுக் கோட்பாட்டில் ஒரு குறுகிய எல்லை கொண்ட பார்வைதான் மேலை நாட்டாரிடம் இருக்கின்றது.  திருக்குறளில் காணப்படும் உலகு போன்ற விரிந்த பார்வை அவர்களிடம் இல்லை. அறிவின் அடிப்படைப் பிரச்சனைகளில் சரியான தெளிவைத் திருக்குறளில் பார்க்க முடிகிறது (அறி.தமிழர்.அறி.பக். 118-119).

அறிவு, அதுவழிச் சிந்தனை, தத்துவம் போன்ற கோட்பாடுகளின் அடிப்படை சுரண்டல்தான் என்பது ஓர் உலகப் பொதுமை.  வேண்டுமானால் கூடவும் குறைவாகவும் இருக்கலாம்.  இறைவனும் ஆன்மாவும் ஒன்றா?  வேறுவேறா என்பன போன்ற தத்துவங்கள் மிகவும் போற்றப்படுபவை.  இவற்றை எல்லாம் சிந்திப்பவர்கள், எழுதுபவர்கள் ஒரு கட்டுமானத்தின் மீது அமர்ந்து கொண்டுதான் செய்கின்றார்கள்.

இந்தியா என்று ஒட்டு மொத்தமாக எடுத்துக்கொண்டால் கருத்து முதல்வாதம் பேசும் மதங்களிடமும் மடங்களிடமும் ஆலயங்களிடமும் தான் மண், பொன் என்னும் அடிப்படைப் பொருளாதாரங்கள் குவிந்து கிடக்கின்றன.  கதிரோன் தோன்றினான் / கவலை கொண்டு ஏங்கினோம் / உடையோ கோவணம் / உணவோ நீராகாரம் (வாட்.இர. ப. 41) வேளாண் தொழில் செய்வோர் மட்டுமில்லை. ஆடை நெய்வோர், கடல் சார்ந்த தொழில் செய்வோர் என அனைத்துத் தொழில் செய்யும் அனைத்துத் தொழிலாளர் நிலையும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

மன்னராட்சிக் காலம் முதல் நிலங்களை இறைவன் பெயரில் ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.  கோயில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் எனக் கூறி எங்கும் ஆலயங்களைக் கட்டச் செய்தார்கள்.  மதம், சாதி உணர்வுகளைத் தூண்டுபவர்களால் மக்கள் மனத்திற்குள் புகமுடியவில்லை என்பதை மட்டும் வரலாறு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.  அவர்களும் இவர்களோடு ஒன்றி வாழவில்லை என்று இன்னொரு வரலாறு.

இந்தியா மட்டுமில்லை, உலகெங்கிலும் மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் தங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்த அறிவுக் கோட்பாடுகள், தத்துவங்கள் வளர்ந்துள்ளனவா? மானுடத்தை மட்டுமே சிந்தித்த புத்தரின் கோட்பாடுகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன.  படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்றொரு பழமொழி உண்டு.  இலங்கையில் சிங்களவர் தமிழரின் குருதியில்தான் குளிக்கிறார்கள்.  சீனா, மியான்மர் என்று எங்குப் பார்த்தாலும் புத்தர் பேசிய அகிம்சைக் கோட்பாடே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் கிடக்கின்றது.  கோட்பாட்டில் பிசகு இல்லை.

எங்கோ பிறந்த காரல் மார்க்ஸ் - எங்கல்சின் பொதுவுடைமைக் கோட்பாடு குளத்தில் வீசப்பட்ட கல்லின் அதிர்வால் தோன்றும் அலை, அலை அலையாய்ப் பூமியின் உருண்டைபோல வட்ட வட்டமாகப் பரவுகின்றது.  அதற்குக் காரணம் மனிதநேயம்தான்.  பட்டறிவை மட்டுமே கொண்ட பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மண்ணில் வாழ மக்களுக்கு வழிகூறாமல் சொர்க்கத்தில் சுகமாக வாழ வழி கூறிய மாமேதைகளின் தத்துவங்களுக்கு மரண அடி கொடுக்கின்றார்.  கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் / கவைக்கு உதவாத வெறும்பேச்சு / கஞ்சிக்கு இல்லாதோர் கவலை நீங்கவே / கருத வேண்டியதை மறந்தாச்சு ( பட்.பாட. பக். 203 -204).

நூலாசிரியர் மகேந்திரன் செம்பாதி அளவிலான தம்நூலில் தமிழரின் குறிப்பாகப் பழந்தமிழரின் பொதுவான அறிவுக் கோட்பாட்டை நுட்பமாக ஆராய்ந்து விளக்குகின்றார்.  தமிழரின் அறிவியல் கோட்பாடு இயற்கையை நேசித்தது; மானுடத்தை நேசித்தது.  குணத்தைக் காட்டியது.  குற்றத்தையும் சுட்டிக் காட்டியது.  மொழிகளையும் இலக்கியங்களையும் ஒப்பிட்டு ஆராய்வதைப் போன்று ஒவ்வோர் இனமக்களின் அறிவுக் கோட்பாட்டையும் ஒப்பிட்டு ஆராய வேண்டும்.  அப்போதுதான் நிறை குறை தெரியும்.  உலகத்திற்கே நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் நாங்கள்தான் என்று ஐரோப்பியரும் ஆரியரும் கூறும் கருத்துகளின் வன்மை மென்மை தெரியும்.  எந்த நிலையில் பார்த்தாலும் பழந்தமிழரின் அறிவுக் கோட்பாடு மனிதனை அடிமைப்படுத்த நினைத்ததில்லை. பிற இனத்தை அழிக்க இறைவனை வேண்டியதில்லை.  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (திருக். 972) என்று கூறியதைவிட இன்னொரு கருத்து தமிழரின் அறிவை அறிய வேண்டுமோ?

அகத்திணை, புறத்திணைப் பாகுபாட்டை அலசி ஆராயும் நூலாசிரியர் வியப்புடன் தமிழரின் அறிவாற்றலை நோக்குகின்றார்.  பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்த இப்படிப்பட்ட பகுப்பாய்வை அறிந்து உலக அறிஞர்கள் புகழ்ந்து பாராட்டுகின்றார்கள்.

காட்சி என்பது அறிவோடு தொடர்புடையது என நூலாசிரியர் தொல்காப்பியத்தின் வழி நின்று புதுமையாகச் சிந்திக்கின்றார்.  இலக்கிய உத்திகளை ஆராய்கிறார்.  எப்பொருளை எடுத்துக் கொண்டாலும் அதனுள் ஆழ்ந்து கிடக்கும் தமிழரின் அறிவு நுட்பத்தை வெளிப்படுத்துவதே நூலாசிரியரின் நோக்கமாக உள்ளது.

பழந்தமிழரின் உண்மையான வாழ்க்கை நிலையையும் அறிவு மேம்பாட்டையும் எடுத்துக்காட்டச் சங்க இலக்கியங்களை எடுத்துக் காட்டினால் உதட்டைப் பிதுக்குவார்கள்.  அவை கற்பனை என்பார்கள். பெரும்பாலான இன மக்களின் வாழ்க்கைக்கும் அவர்களிடம் உள்ள நூல்களுக்கும் தொடர்பு இருக்காது.  அவை விவரிப்பவை எல்லாம் இந்திரலோகம், சொர்க்க லோகம் அல்லது நரகலோகமாக இருக்கும்.

தமிழரின் அறிவின் மேம்பாட்டை உணர்த்துபவை எல்லாம் கடல் கோளால் அழிந்து விட்டன.  மண்ணில் புதைந்து கிடக்கின்றன.  அவற்றைத் தோண்டிப் பார்க்கப் பெரும் நந்திகள் தடையாக உள்ளன. ஆதிச்ச நல்லூர், பூம்புகார், அரிக்கமேடு, கொடுமணல் போன்ற இடங்களில் செய்ய வேண்டிய ஆய்வுகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் கீழடியில் கிடைத்துள்ள அகழாய்வுப் பொருட்கள் சங்க இலக்கியங்களில் விவரிக்கப்பட்டவையாகவே உள்ளன.  வாழ்விற்கும் படைத்த இலக்கியங்களுக்கும் இம்மி அளவு கூட இடைவெளி இல்லாமல் பழந்தமிழர் வாழ்ந்துள்ளனர்.

தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் இறைக் கோட்பாடு, மேல்-கீழ் என்னும் சாதிப்பாகுபாடு போன்ற பல இடைச் செருகல்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.  தொல்லியல் ஆய்வுகள் ஆழமாகவும் அகலமாகவும் செய்யப்படும் போது மெய்ப்பொருள் வெளிப்படும்.  தமிழகமே ஒரு தொல்லியல் களஞ்சியமாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.  ஆதிகாலம் தொட்டே இந்தியாவின் தெற்கில் இருந்து வடக்குவரை இப்போதும் திராவிட மொழிகள் பேசப்படுகின்றன.  ஊர்ப் பெயர்கள் ஒன்று போலவே எங்கும் இருப்பதாக இரா.பாலகிருட்டிணன் போன்ற ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.  அகழாய்வில் கிடைக்கும் தொல்பொருட்களிலும் ஒற்றுமை இருக்கின்றது.

நூலாசிரியர் கூறும் பின்வரும் கருத்து, தமிழரை நெஞ்சம் நிமிர வைக்கத்தக்கது.  தமிழர் நதிகளின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துதல், பாசன முறை நெருப்பை உண்டாக்கிக் கட்டுப்படுத்திப் பயன் படுத்தும் திறன், விலங்குகளை அடக்கியாண்டு அவற்றைப் பணிகளுக்குப் பயன்படுத்தும் நுட்பம், உலோகங்களைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்துதல், உழவு, உழவுக் கருவிகள், பயணங்களுக்குச் சக்கரங்கள் கொண்ட வண்டிகளை உருவாக்குதல், நெசவு, மண்பாண்டம் வனைதல், போர்த்துறை நுட்பங்கள், தற்காப்புக் கலைகள், நகரமைப்பு, ஆட்சிமுறை, நாவாய் அமைத்தல், செலுத்துதல், மொழியியல், மருத்துவம், கால நிலை அறிதல், வானவியல் போன்ற துறைகளிலும் இன்னபிற துறைகளிலும் ஆளுமை செலுத்தி வந்துள்ளனர்.  இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாதவர்கள், இவை எல்லாம் கடந்த காலங்களில் கட்டுக் கதைகள் என்று பேசப்பட்டு வந்தன.  இன்று அனைவரும் இவை உண்மைதான் என்று உணரத் தொடங்கியுள்ளனர்.  இதற்கு இன்று நமக்குக் கிடைத்துள்ள அகழாய்வுகளே முக்கிய காரணமாக அமைந்துள்ளன (அறி.தமிழர்.அறி.ப. 177).

ஐயம் கொண்டு அதன்வழி எழும் அறிவுக்கோட்பாடு, வெளிவந்துள்ள நூல்கள், அவற்றின் பொருள், நூல் தொடர்பான இலக்கண கோட்பாடு என அறிவு தொடர்பான எதனையும் விட்டு வைக்காமல் நூலாசிரியர் சி.மகேந்திரன் அலசி ஆராய்கின்றார்.

நூலாசிரியர்கள் எவ்வளவு சிறந்த அறிவாளிகளாக இருந்தாலும் நூல்களை அவைகளில் அரங்கேற்றும்போதுதான் பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஒளிரும்.  அறிவு தொடர்பான கருத்துகள் அறிவு பற்றிய தமிழரின் அறிவு என்னும் நூலில் விளக்கப்பட்டுள்ளன.

தமிழன் என்றோர் இனம் உண்டு / தனியே அவற்கொரு குணமுண்டு / அமிழ்தம் அவனுடை வழியாகும் / அன்பே அவனுடை மொழியாகும். / அறிவின் கடலைக் கடைந்தவனாம் / அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம் / பொறியின் ஆசையைக் குறைதிடவே / பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்

(நாம.பாட. 19).

வடக்கே உள்ளவர்க்கு மட்டுமில்லை; தெற்கே உள்ள சிலருக்கும் இப்பாடலை அடிக்கடி கூறி நினைவுபடுத்த வேண்டி உள்ளது.

ஒட்டு மொத்த நூலிலும் அறிவு அறிவு என்று பொது அறிவு பற்றியும் தமிழரின் பரந்துபட்ட தனித்தன்மையான அறிவு பற்றியும் விளக்கப்பட்டுள்ளதை அறியலாம்.

அரசியலுக்கு எல்லோரும் வரலாம்; வரவேண்டும்.  இதனால்தான் மகாகவி, எல்லாரும் இந்நாட்டு மன்னர் (பார.பாட. 1831) என்றார்.  பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்குப் பட்டறிவும் படிப்பறிவும் தேவை.  நல்ல நூல்களை எழுதும் அரசியல்வாதிகள் குறைந்து கொண்டே வருகின்றார்கள்.  பலருக்குத் தங்கள் கட்சியின் முழுமையான வரலாறு கூடத் தெரிவதில்லை.

நூலாசிரியர் சி.மகேந்திரன் பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபட்ட இளமைக் காலம் தொட்டுப் பேசி வருவதோடு நல்ல நூல்களையும் எழுதி வெளியிட்டு வருகின்றார்.  எல்லா நூல்களுமே சமுதாய முன்னேற்றம் பற்றிப் பேசக் கூடியவை.  இந்த நூல் பழந்தமிழரின் அறிவு சார்ந்தது.  பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்று நீட்சியுடைய தமிழகத்தில் அறிவு சார்ந்த கருத்துகளை அரிதின் முயன்று திரட்டி இந்நூலை சி.மகேந்திரன் எழுதியுள்ளார்.  பழந்தமிழரின் அறிவை அறிய விரும்புகின்றவர்கள் உடனடியாகப் படிக்க வேண்டிய நூல் அறிவு பற்றிய தமிழரின் அறிவு.  நூலாசிரியர் மேலும் பல நூல்களைப் படைத்திட வாழ்த்துவோம்.  நூலை வெளியிட்ட டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் வேடியப்பனும் வாழ்த்துக்கு உரியவர்.

அறிவு பற்றிய தமிழரின் அறிவு
சி.மகேந்திரன்
டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: ரூ.250/-