என்னுடைய நீண்டகால, நெருக்கமான, தோழர் கவிஞர் தணிகைச்செல்வனின் மறைவு (30.10.24) என்னுள் பல நினைவு அலைகளை எழுப்பின. அவருடைய பயணத்தை அவருடைய படைப்புகளின் வழியே திரும்பிப் பார்க்கிறேன். 2001 ஆம் ஆண்டு அவருடைய 7 கவிதைத் தொகுப்புகள் “தணிகைச் செல்வன் கவிதைகள்” என்ற தலைப்பில் ஒரே தொகுப்பாக வெளிவந்தது. முதல் தொகுப்புக்கு அணிந்துரை எழுதிய தோழர் A. பாலசுப்பிரமணியம் “நிகழ்கால நடப்புகளே அவரது கவிதைகளின் கருப்பொருள்” என்று குறிப்பிட்டார். அது முற்றிலும் சரிதான். 1975 ஆம் ஆண்டு முதல் தொகுப்பு வெளிவந்து. 26 ஆண்டுகள் கழித்து எல்லாத் தொகுப்புகளும் இணைந்த தொகுப்பு 2001ஆம் ஆண்டு வெளிவந்தது, அதற்குள் பல மாற்றங்கள் நடந்துவிட்டன. 1985 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்திலிருந்தும் அவர் விலகிப்போனார். தன்னுடைய நிலை மாறிவிட்டது என்பதை 2001 ஆம் ஆண்டு தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் தணிகை ஒப்புக்கொள்கிறார்.

thanigaiselvan 499“என் அரசியல் கோட்பாட்டின் பழைய நிலைக்கும் புதிய நிலைக்கும் உள்ள வேறுபாடு - முரண்பாடல்ல - சில கவிதைகளில் தெரியக்கூடும். என்றாலும் என் வர்க்கக் கண்ணோட்டமும், இனப்பற்றும், மொழிக் கோட்பாடும் அன்றும் இன்றும் நாளையும் ஒன்றே தான். அடிப்படையில் ஒரு கவிஞன் என்பதை விடவும் கவிப் போராளியாகவே என்னை என் கவிதைகளில் காண முடியும்.

தன்னுடைய புதிய நிலை என்ன என்பதை அவர் குறிப்பாக விளக்கவில்லை என்றாலும் நமக்குத் தெரியும்.

“பூபாளம்” என்ற கவிதைத் தொகுதிக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி ஓர் அணிந்துரை எழுதியிருக்கிறார். தமிழ்க் கவிதையின் போக்கு, வளர்ச்சி நிலைகளைக் குறிப்பிட்ட கா.சிவத்தம்பி அந்தப் பின்னணியில் தணிகையின் கவிதைகளை மதிப்பிடுக்கிறார்.

“தணிகைச் செல்வனின் இந்தக் கவிதைத் தொகுதி அந்த இணைப்புச் சேவையின் கணிசமான ஒர் எடுத்துக்காட்டாக அமைகின்றது. இதிலே மரபுக் கவிதையும் உண்டு. புதுக்கவிதைகளும் உண்டு. ஆனால் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசை நோக்கிய மூர்த்தங்களாக நில்லாமல், ஒரு பேருயிர்ப்பின் இணைந்த அம்சங்களாக பல்லியத்தின் ஒரே சுருதியாக இணைகின்ற ஒரு நிலைமையினைக் காண்கின்றோம்”.

“தணிகைச்செல்வனின் இக்கவிதைத் தொகுதி நாம் இதுவரை பார்த்த நவசங்கமமாக விளங்குகின்றது என்பதிலே கருத்து வேற்றுமை யிருக்கவே முடியாது.”

“மரபுக் கவிதையும், புதுக்கவிதையும், நாட்டார் பாடல் மரபு ஆக்கங்களும் ஒரு புறமாகவும், பாரதியின் குரலும், பாரதிதாசன் குரலும், பட்டுக்கோட்டையின் பண்பும், வானம்பாடிகளின் தொழிற் பாடும் மறுபுறமாகவும் தணிகைச்செல்வனிடத்தே ஏன் இணைகின்றன. எவ்வாறு இணைகின்றன என்பதற்கான விடை பற்றிச் சிந்திக்கும் பொழுதுதான் தணிகைச்செல்வனின் ஆளுமையும் அவரது கவிதைகளின் முக்கியத்துவமும் புலனாகின்றன”.

கா. சிவத்தம்பி தன்னுடைய அணிந்துரையை இவ்வாறு முடிக்கிறார்.

“தணிகைச்செல்வன் அவர்கள் குறிப்பிடுவது போன்று மரபு அவருக்கு எருவாகின்றது. அந்த மண் வளத்தின் அடிப்படையில் தான் அவரது முற்போக்குப் பயணம் தொடங்குகின்றது. பாரம்பரிய தமிழ்ச் செய்யுள் மரபின் சொல் அலங்காரச் சிறப்பும் ஓசையமைதியும் புதிய இலக்கிய பரிமாணங்களைக் கோடிட்டுக் காட்டுவதற்கு “ஞான ரதமே” என்ற கவிதையின் தலைப்பும், அதன் ஓசைச் செம்மையும், பொருள் தெளிவும் நல்ல உதாரணமாகும்”.

“உடனடியான விஷயங்களைப் பற்றிக் கூறும் அதே வேளையில் கவிதைக்குரிய உயர்நிலை விழுப்பத்தையும் சுட்டி நிற்பனவாகவும் அவர் கவிதைகள் அமைவதே இவரது கவிதைகளில் கவர்ச்சிக்கான காண காரணம் என்று கூறலாம்”.

இதற்கு ஒரு அடிப்படையான காரணம் உண்டு. தணிகைச் செல்வனின் கவிதையின் கருத்துக்கள் ஏட்டுச் சுரைக்காய்கள் அல்ல. அவை இயக்கத்தின் அடியாகப் பிறந்துள்ளவை. இயக்கத்தாற் புடம் போடப் பெற்றவை”.

“தணிகைச் செல்வனின் வளர்ச்சி ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியது. அந்த வளர்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் கவிதை வரலாறும் தொக்கி நிற்கின்றது”.

கோஷலிச எதார்த்த வாதம் தான் தன் கவிதைகளின் கோட்பாடு என்கிறார் தணிகைச் செல்வன். அவர் அக்கோட்பாட்டின் எல்லைகளைத் தான் விரிவாக்கி அப்படியே எழுதுகிறேன் என்கிறார்.

“மகிழ்வூட்டுவதும் - அறிவூட்டுவதும் - நம்பிக்கையூட்டுவதும் - என்ற மூன்று சக்கரங்களோடு தான் சோஷலிசயதார்த்த வாதக்கோட்பாடு துவங்குகிறது. இன்றைய சகாப்தத்தில் அது மேலும் விரிந்து “எழுச்சியூட்டுவது” என்ற போர்ப்பண்பையும் தன் கலைப் பண்பாக ஏற்றுக்கொண்டு நான்கு சக்கரங்களோடு நடை பயில வேண்டும் என்பது இதற்குப் பொருளல்ல. ஆனால் என்னைப் பொறுத்தவரை எனக்கு நாலாவது சக்கரம் தேவைப்படுகிறது. அந்தப் பின்னணியில் என் கவிதைகளைப் பரிசீலிக்க வேண்டுகிறேன். அவைகளின் பலவீனம் என்று கருதப்படுவது எதுவோ, அதுதான் அவற்றின் பலமாகவும் இருப்பதைக் காண்பீர்கள்”. (முன்னுரை - சிவப்பதிகாரம்)

கவிதை என்பது ஏதாவது ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதும் அவருடைய கவிதைக் கோட்பாடு. அது பற்றிய விவாதம் பற்றி அவர் குறிப்பிடுகிறார்.

“இலக்கியச் சர்ச்சைகளில் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி கேள்வி ஒன்று அடிக்கடி தலை தூக்குவதுண்டு."

“ஒரு கவிதை ஏதோ ஒரு செய்தியைச் சொல்லித்தான் ஆக வேண்டுமா?”

"எந்தச் செய்தியையும் சொல்லாமல் ஒரு படைப்பு இருக்க முடியுமா?

முடியாது என்பதல்ல -

கூடாது - என்பதே என் பணிவான பதில்.

அசையாமல் காற்று இருக்கக் கூடாது.

அலையாமல் கடல் இருக்கக் கூடாது.

ஓடாமல் நதி இருக்கக்கூடாது.

பூவாமல் மலர் இருக்கக் கூடாது.

இவையெல்லாம் இயற்கை செயல்பாட்டுகள். கலைப் படைப்பின் இயற்கையே அதனுள் பொதிந்த செய்தி தான். செய்திதான் இலக்கியத்தின் செயல்பாடு, செய்தி இழந்த இலக்கியம் செயலிழந்து போகும்; அல்லது உயிரிழந்து போகும்”. (தணிகையின் முன்னுரை - உலக்கையிலும் பூமலரும்)

1985 ஆம் ஆண்டுக்குப் பிறகு தணிகைச் செல்வனின் குரல் மாறுகிறது. தமிழ்த் தேசியமும், தலித்தியமும் முன்னுக்கு வருகின்றன. மார்க்சியத்திற்கு “புதிய புரிதலை” “கொடையாக” வழங்குகிறார் தணிகைச் செல்வன்.

“சாதியத்தைக் களையாத

மார்க்சியமும்

தேசியத்தைப் பேசாத

சிவப்பியமும்

இந்தியாவின்

எழுபதாண்டு அதிசயங்கள்”!

இன்னொரு கவிதையில் இப்படி பிரகடனம் செய்கிறார்.

ஒதுக்கப்பட்ட

இழிவினத்துக்கும்

ஒதுக்கப்பட்ட

மொழியினத்துக்கும்

சுரண்டப்பட்ட உழைப்பினத்துக்கும்

கிட்டும்

முப்பரிமாண

விடுதலை தான்

தமிழ்த் தலித்தின்

விடுதலை!

தமிழ்க்குலத்தின்

விடுதலை!

தமிழ்ப்பாட்டாளியின்

விடுதலை!

தணிகைச் செல்வனின் சிந்தனை மாற்றம் கவிதைகளில் தெரிவதை விடத் அவருடைய உரைநடை நூல்களில் துல்லியமாகத் தெரிகிறது. இன்னும் சொல்லப் போனால், தன்னுடைய சிந்தனை மாற்றத்திற்குப் பிறகு அவர் கவிதைகளைவிட, அதிகமாகக் கட்டுரைகளே எழுதியிருக்கிறார். கட்டுரைகளில் தான் அவர் புத்தர் கூறியதைத் தான் மார்க்ஸ் கூறியிருக்கிறார் என்றும், பவுத்தத்தை நிலை நாட்டும் தலைமை நாட்டிற்கு வேண்டும் என்றும் திருமாவளவனை மதிப்பீடு செய்ய வைக்கிறார்.

ஜனநாயகப் புரட்சியை முன் வைக்கும் கவிஞர் அது மும்முனைப் போராக இருக்கும் என்கிறார்.

“தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மக்கள் ஜனநாயகப் புரட்சி ஒரு முனைப் போராகவோ இருமுனைப் போராகவோ அமையாது. அது மும்முனைப் போர்”.

“ஆளும் வர்க்கங்களை முறியடிக்கப் பாட்டாளி வர்க்கம் நடத்தவுள்ள வர்க்கப் போர்; இந்திய தேசியத்தை வீழ்த்தக் கிளர்ந்தெழும் தமிழ்த் தேசியப் போர்";

“பார்ப்பனியத்தையும் அதன் வேதிய வேர்களையும் சாதிய வேர்களையும் வெட்டி எறியும் சமூக நீதிப் போர்;

என்ற மூன்று போர்கள் மூன்று முனைகளில் நடக்கும் என்பதால் அவை மும்முனைப் போர்”. (தத்துவத் தலைமை - பக்கம் 252)..

தன் கட்டுரையை இவ்வாறு முடிக்கிறார்.

“இந்தியா என்ற பொய்யியலையும், பார்ப்பனம் என்ற மெய்யியலையும், காங்கிரஸ் என்ற கை இயலையும் தாமரையின் காவி இயலையும் சேர்த்து எதிர்க்கும் சிந்தனையில் உரமேறிய செந்தமிழ்ச் சேனையே தமிழ்த் தேச விடுதலையை வென்றெடுக்கும்”.

“அதற்கான கருத்தியல் வல்லமையும் துருப்பியல் வல்லாண்மையும் பெற்ற தமிழ்த்தலைமையே தேசியப் போரை முன்னெடுக்கும். அந்தத் தலைமையைக் கண்டறிந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் நாளைய வரலாறு".

தணிகை என்னதான் சொல்ல வருகிறார்? அவர் சொற்களிலேயே அவரைச் சந்திப்போம்.

“பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் தாம் பாட்டாளி வர்க்கக் கட்சிக்கும், இயக்கங்களுக்கும் தலைமை தர வேண்டும் என்பதில் எந்தச் சமரசத்துக்கும் இடமில்லை."

“தத்துவத் தலைமை” என்ற நூலை இவ்வாறு முடிக்கிறார் கவிஞர் தணிகைச் செல்வன்.

“சமூக விடுதலைக்கு தலித்துகள் தலைமை ஏற்பதில் ஞாயமுண்டு. ஆனால், வர்க்க விடுதலை, தேச விடுதலை ஆகியவற்றிற்குக் கூடத் தலித் தலைமை தேவையா? எனக் கேட்கப்படலாம். நமது விடை: ஆம், தேவையே! வர்க்கத்தளத்தில்.

“தலித்தல்லாதாரிடம் சமூகப் புரட்சியின் சிந்தனைகளைப் பாய்ச்சவும், தேசியத் தளத்தில் தலித்தல்லாத் தமிழரிடம் சமூக நீதியைப் பரப்பவும், அந்தத் தளங்களின் புரட்சிப் போரில் தலித் தலைமை கொள்வதன் மூலம் ஒருங்கிணைந்த சனநாயகப் புரட்சியில் உருவாக்கக்கூடிய உளவியல் தடைகளை எழாமல் தகர்த்துச் சமன் செய்யும் இயந்திரமாக தலித்தியம் செயல்படும். மேல் நோக்கில் இது தவறாகத் தோன்றலாம். ஆனால், தொலை நோக்கில் தான் இந்த ஏற்பாட்டின் அருமை புலப்படும். இதுவே முடிவன்று; ஒரு முன்மொழிவு. அவ்வளவே. முடிக்கும் முன், நூலின் தத்துவத்திரட்சியை இரண்டே வரிகளில் கொடுக்க விழைகிறேன். இந்த இரு வரியே, நூலின் முகவரி”:

“வழிந்தது போதும் நம் ரத்தம் -

இனி வாளேந்த வேண்டும் பவுத்தம்”.

“ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுக்கப்பட்ட
காலத்தின் கட்டளை இது’.

கவிஞர் தணிகைச்செல்வன் எழுச்சியூட்டும் கவிஞர் மட்டும் அல்ல; வாதம் புரிவதிலும் சட்டம் பயிலாத வழக்கறிஞர். மார்க்சியம் பேசும் போது அதன் சிறந்த வழக்கறிஞர், தலித்தியம் பேசும் போதும் அதன் சிறந்த வழக்கறிஞர். ஆனால் நீதிபதியாக இல்லையே! எல்லாம் அவர் போட்ட கோலம். ஆனால் அழியாத கோலங்கள்.

- சிகரம் ச.செந்தில்நாதன்