இந்தியாவில் இடதுசாரிகள் முன்னெடுத்த ஏகாதிபத்திய எதிர்ப்பில் பல குறைபாடுகள் உள்ளன. அதில் ஒன்று, அது ஏகாதிபத்தியத்துடன் முரண்படக் கூடிய அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி ஏகாதிபத்திய எதிர்ப்பை ஊட்டாதது முக்கிய குறைபாடாகும். ஏகாதிபத்திய எதிர்ப்பில் அவர்களுடன் இணைந்து நிற்கக்கூடிய பெருந்திரளான மக்களை அது ஒதுக்கி விட்டது. இது அந்த இயக்கத்தை தரத்தின் அளவிலும், எண்ணிக்கை அளவிலும் பாதித்துள்ளது. இந்த நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்காக இருக்கக்கூடிய தலித் மக்கள், ஒதுக்கப்பட்ட மக்களில் பெரும்பங்கு வகிக்கின்றனர்.
ஒரு சமூகக் குழு என்ற அளவில், அவர்கள்தான் மிகச் சரியான பாட்டாளி வர்க்கமாக இருக்க முடியும். மேலும், உலகளவில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இருக்கக்கூடிய விவசாயிகளாகவும், தொழிலாளர்களாகவும் அவர்கள் அங்கம் வகிக்கின்றனர். தலித்துகள் ஒதுக்கப்பட்டது ஒருபுறம் இருக்க, பிற பகுதி மக்களிடம் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு பொதுவாகக் குறைந்தளவே காணப்படுகிறது. இந்த எதிர்ப்புணர்வு, இப்படிக் குறைந்தளவில் இருப்பதற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளின் குறைபாடுதான் காரணமா என்பது ஆய்வுக்குரியது. பொதுவாக, காடுகளிலும் அதைச் சுற்றிலும் வாழும் பழங்குடியினர், நாகரிகத்திற்கு (என்று சொல்லப்படுகின்ற) தொலைவில் இருந்தாலும், அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பில் முனைப்புடன் போராடி வருவதைக் காணமுடிகிறது. ஆனால், சமவெளியில் வாழக்கூடிய தலித்துகள் அல்லது பிற மக்களிடமிருந்து இத்தகைய குணத்தைக் காண முடிவதில்லை.
உலகெங்கும் உள்ள மக்களின் மிகப்பெரிய எதிரி ஏகாதிபத்தியமே என்பதில் எந்த சந்தேகம் இல்லை. ஒவ்வொரு தனிமனிதரும், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் வாழ்க்கையின் வழிமுறைகளிலும் ஏகாதிபத்தியத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். இது, நாம் சுவாசிக்கும் காற்றைப் போல எங்கும் பரவியுள்ளது. வாழ்க்கையின் முக்கிய அங்கமான பண்பாடு மூலம் நுழைந்து, நமது வாழ்க்கையையே அது கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. நாம் வாழும் முறை, நாம் நுகரும் பொருட்கள், நமது உறவு முறை, நமது மொழி, நாம் அனைத்தையும் எதிர்கொள்ளும் றை என எல்லாமே ஏகாதிபத்தியத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த காலத்தில் ஏகாதிபத்தியம், கண்ணுக்குப் புலப்படக்கூடிய சக்திகளுடன் தேசங்களைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது போல் அல்லாமல், இன்று நம் கண்ணுக்குப் புலப்படா வண்ணம் முழுவதுமாக மறைந்து நிற்கிறது. இன்று, தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மூலம் ஏகாதிபத்தியம் இயங்கி வருகிறது. ஏழை நாடுகளின் மீது பரிவு காட்டுவது போல அவை நடித்துக் கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதுபோல பாசாங்கு செய்து, தன்னுடைய சுரண்டலுக்கான தளமாக அது மாற்றிக் கொள்கிறது. ஏகாதிபத்தியம் உலகத்தை ஆளுமை செய்யும் தொழில் நுட்பத்தோடும், நிதி, கல்வி, மத, மனிதாபிமான நிறுவனங்களை உருவாக்குவது போலவும் படர்ந்துள்ளது. மக்கள் இயக்கங்களை நடத்துவது போலப் பாசாங்கு செய்து, அவற்றைக் காயடிக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பற்றி இங்கு குறிப்பிட வேண்டியதில்லை.
தரகு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் இன்னும் சிலர் தேசப்பற்று என்ற பெயரிலும், தொழில்நுட்பம் மற்றும் அறிவார்ந்ததளம் என்ற பெயரிலும் ஏகாதிபத்தியத்திற்கு தொண்டூழியம் செய்து வருகின்றனர். ஏகாதிபத்தியங்கள் என்று நாம் முன்பு பன்மையில் குறிப்பிட்டது போல இன்று பேச முடியாது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியின் தொடக்கத்திலிருந்து ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையில் வளர்ந்து வந்த போட்டி, இருபதாம் நூற்றாண்டின் தல் ஆண்டுகளில் இரண்டு உலகப் போர்களாக வெடித்தன. ஏகாதிபத்திய நாடுகளிடையே இருந்த போட்டி என்பது, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் மூல உத்திகளில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய இன்றியமையாத அம்சமாக இருந்தது.
ஆனந்த் தெல்தும்டே எழுதி அண்மையில் வெளிவந்துள்ள - 'ஏகாதிபத்திய எதிர்ப்பும், சாதிகளை ஒழிப்பதும்' என்ற சிறப்பான ஆங்கில நூலின் முதல் இரண்டு அத்தியாயங்களின் சுருக்கம் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.
பெர்லின் சுவர் வீழ்ச்சிக்குப் பிறகும், சோவியத் அரசு வீழ்ந்த பிறகும், உலகமே ஒற்றை ஆட்சியின்கீழ் வருவது என்பது தவிர்க்க முடியாத உண்மையாகிவிட்டது. அமெரிக்கா உச்சியில் அமர்ந்து கொண்டு, தனது ராணுவ எந்திரத்தின் ஈடிணையற்ற ஏவுகணை பலத்தைக் கொண்டு அச்சுறுத்தி மற்ற நாடுகளை இரண்டாவது, மூன்றாவது நிலைகளில் வைத்து அவற்றைத் தனது போலிஸ்காரர்களாகச் செயல்பட வைக்கிறது. இந்தியாவின் சாதி அமைப்பைப் போலவே மய்யத்தில் உள்ள வாஷிங்டன், தனது ராணுவத்தின் பின்னல் அமைப்பு மூலம் தன்னகத்தே ஒருங்கிணைக்கப்பட்ட குணங்களுடன் இயங்குகிறது.
உண்மையில் இன்று ஏகாதிபத்திய நிறுவனத்தின் பல அம்சங்கள், சாதி அமைப்பைப் போன்றே இயங்குகின்றன. ஏனெனில், சாதி அமைப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்த ஏகாதிபத்திய சுரண்டல் தன்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் வேறெங்கும் இத்தகையதொரு அமைப்பு இல்லை. இந்த வகையில், இரண்டு ஏகாதிபத்திய அமைப்புகள் உள்ளன:
- வாஷிங்டன் 2. சாதி அமைப்பு. இவை இரண்டும் மிகவும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளன. எனவே, இந்தியாவில் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகள் தங்களது போராட்டத்தின் மூல உத்தியை வகுக்க, இந்த உண்மையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு ஜனநாயகப் போராட்டத்திற்கு, நிலப் பிரபுத்துவ, ஏகாதிபத்திய எதிர்ப்பு மிகவும் தேவையான ஒன்று என்பதில் எந்த சந்தேகம் இல்லை. இந்தியா போன்ற பல நாடுகளில், இந்தப் போராட்டம்தான் தற்பொழுது நடந்து வருகிறது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் தேசியத்துடன் தொடர்புடையது; நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டம் ஜனநாயகத்துடன் தொடர்புடையது. இன்றைய யுகத்தில், ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது. நம் நாட்டைப் போன்று அரை நிலப்பிரபுத்துவ அரை காலனிய நாடுகள், ஏகாதிபத்தியத்தாலும், நிலப்பிரபுத்துவத்தாலும் சுரண்டலுக்கும் ஒடுக்குறைக்கும் உள்ளாக்கப்படுகின்றன. எனவே, இதற்கெதிரான ஜனநிõயகத்திற்கான தேசியப் போராட்டம், தேசியத்திற்கான ஜனநாயகப் போராட்டமே இன்றியமையாததாகிறது.
மேற்கூறிய ஆய்வு பொதுவாகப் பார்த்தால் சரியானதுதான் என்றாலும், ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒரே அச்சுவார்ப்பில் பார்ப்பதை இது தவிர்ப்பதில்லை. எடுத்துக்காட்டாக, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம், சாதிகளுக்கு எதிராகப் போராடாமல் பாராகமாகியிருப்பது ஏன்? வெளியில் உள்ள ஏகாதிபத்தியம் எதிரியாக அடையாளம் காணப்படுகின்றபோது, உள்நாட்டில் வளர்த்தெடுக்கப்பட்டு, மக்களை வெளிப் படையாக ஒடுக்கும் ஏகாதிபத்திய நிறுவனம் (சாதி) மிகவும் வசதியாக அலட்சியப்படுத்தப்படுகிறது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம், வெளியில் இருந்து வரும் ஏகாதிபத்தியத்தைத் தான் கருத்தில் கொள்ள வேண்டுமா? இது உண்மையெனில், உள்நாட்டு மக்களால் தாங்கள் ஒடுக்கப்படுவதாக நனைக்கும் மக்கள், இப்போராட்டங்களில் ஏன் பங்கேற்க வேண்டும்?
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம், தேசியத்தை அடிப்படையாகக் கொண்டது. இது உண்மையெனில், இப்போராட்டம் இந்தியாவை ஒரு தேசமாகக் கருத வேண்டும். ஆனால், இடதுசாரிகளின் பகுத்தாய்வுகள் இக்கருத்தை ஏற்கத் தடையாக உள்ளன. உண்மை என்ன? இந்தியா ஒரு தேசமல்ல; அது பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு. இந்தியர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு பலகீனமானதாக இருப்பதே இந்தக் கருத்துக்குச் சான்றாக விளங்குகிறது. இதைவிட வலுவான மற்றொரு காரணம் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக உள்நாட்டு ஏகாதிபத்திய அமைப்புடன் சேர்ந்து வாழப் பழகிக் கொண்டு, ஏகாதிபத்தியக் கருத்து நிலையையும் ஏகாதிபத்தியப் பண்புகளையும் தங்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டுள்ள மக்கள், எந்த வகையான ஏகாதிபத்தியம் தங்களைப் பாதிப்பதாகக் கருதுவதில்லை.
கருத்துநிலை அளவில் ஏகாதிபத்தியம் பார்ப்பனியம் ஒன்றே. உண்மையில், ஏகாதிபத்தியம் என்பதற்கான எல்லா அர்த்தங்களும் பார்ப்பனியத்திற்கும் பொருந்தும். "சமூதாயத்தின் ஒரு பிரிவு மற்றொரு பிரிவால் தொடர்ந்து ஒடுக்கப்படுவதுதான் ஏகாதிபத்தியமாகும்' என்னும் லெனினின் வரையறை, பார்ப்பனியத்திற்கு ழுமையாகப் பொருந்துகிறது. மேலும், தேசியம் என்பதை வரையறுப்பதற்கும் பார்ப்பனியத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். தேசியம் என்பது அரசு எல்லையுடன் தொடர்புடையதாகவோ அல்லது புவிப்பரப்பு சார்ந்ததாகவோ இருந்தாக வேண்டும் என்பதில்லை. "இந்தியாவில் ஒவ்வொரு சாதியும் ஒரு தேசம்தான்'' என்று பாபாசாகேப் அம்பேத்கர் கூறியதை நாம் நனைவு கூர்தல் வேண்டும்.
பல நூற்றாண்டுகளாகத் தனியாக ஒதுக்கப்பட்ட, மனிதத் தன்மை நீக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் தலித்துகளை ஒடுக்கப்படும் தேசமாகக் கருதுவதற்கு எல்லா நியாயங்களும் உள்ளன. அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அனுபவிக்கும் ஒடுக்குமுறைக்கு மூலாதாரமாக விளங்கும் பார்ப்பனியக் கருத்துலைதான் மிக மோசமான சுரண்டல் அமைப்பாகும். அவர்களைப் பொறுத்தவரை, பார்ப்பனியம்தான் ஏகாதிபத்திய தேசம். மநுவின் ஆட்சியைத் தேர்வு செய்வீர்களா அல்லது அன்னியர் ஆட்சியைத் தேர்வு செய்வீர்களா என்று தலித், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் மய்யக்கூறாக அமையக் கூடியவர்கள், இந்த உள்நாட்டு ஏகாதிபத்தியத்திற்குப் பலியாகியுள்ள தலித்துகளாவர். உள்நாட்டு, வெளிநாட்டு மக்களைக் கேட்டால், அவர்கள் அன்னியர் ஆட்சியைத்தான் தேர்வு செய்வர். ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் இதைப் பிற்போக்கானது என்று கூறுவர். ஆனால், எதார்த்த நிலை இதுதான்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், தனது மூல உத்தி நிலைப்பாட்டிலிருந்தும்கூட, உயர்சாதியினர் எனப்படுவோரின் உள்நாட்டு ஏகாதிபத்தியத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில்ஏகாதிபத்தியங்களால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள அவர்கள், இயல்பாகவே எந்த வகையான ஏகாதிபத்தியத்திற்கும் எதிரானவர்கள். வர்க்க அடிப்படையில் பார்த்தாலும், இந்த நாட்டின் அடிப்படையான பாட்டாளி வர்க்கமாக அவர்கள்தான் இருக்க முடியும்.
ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கம், இத்தகைய வாய்ப்பை சரியான றையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தலித்துகளுடைய சாதிய எதிர்ப்புப் போராட்டம், அடிப்படையில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமே. ஏகாதிபத்திய எதிர்ப்புவாதிகளின் நடவடிக்கைகளால்தான் தலித்துகள், ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ள மறுக்கிறார்கள். சாதி ஒடுக்குறையை அலட்சியப்படுத்தும் எந்த இயக்கத்தையும் சந்தேகத்துடனேயே பார்க்கிறார்கள். ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் ஓர் ஒருங்கிணைந்த அங்கமே சாதி ஒழிப்புப் போராட்டம் என்பதை ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள் உணர வேண்டும். தலித் இயக்கங்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களும் ஒன்றிணைந்து போராட உறுதி எடுக்கவில்லை எனில், முழு வெற்றியை ஈட்ட முடியாது.
II
இடதுசாரி வட்டங்களில் முன்பு, சாதி ஒரு பிரச்சினையாகவே புரிந்து கொள்ளப்படாமல் இருந்தது. தற்பொழுது "சாதியும் ஒரு பிரச்சினைதான்' என்ற அளவுக்கு அது புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது பாலியல், தேசியம், சிறுபான்மையினர், மதவாதம் என்பது போல சாதியும் ஒருவகைப் பிரச்சனை என்ற அளவில் அது புரிந்து கொள்ளப்படுகிறது. எல்லா நாடுகளிலும், சமூகங்களிலும் இருக்கும் பிரச்சினையைப் போலவே, சிற்சில மாறுதல்களுடன் சாதியும் இங்கு நலவுகிறது என்று புந்து கொள்வது, சாதியின் தனித்தன்மையையும் அதன் கொடூரத்தையும் குறைத்து மதிப்பிடுவதற்கு ஒப்பானதாகும்.
ஒவ்வொரு சமூகத்திலும் பல்வேறு முரண்பாடுகள் நிலவுகின்றன. ஆனால், இந்த முரண்பாடுகள் நிலவுகின்றன என்பதாலேயே, அவற்றின் வளர்ச்சிக் கட்டங்களைக் கருத்தில் கொள்ளாமல், அவற்றைத் தீர்க்க முடியாது; தீர்க்க வேண்டிய தேவையும் இராது. முரண்பாடுகள் சமரசத்திற்கு இடமில்லாத ஓர் உச்ச கட்டத்திற்குச் செல்லும்போதுதான் அவற்றை வெற்றிகரமாகத் தீர்க்க முடியும் என்பதை இயங்கியல் நமக்குக் கற்பிக்கிறது. எனவே, எந்த ஒரு வளர்ச்சிக் கட்டத்திலும் புரட்சியின் மூலம் தீர்வு காண விழையும் ஒரு தன்மை முரண்பாடு இருக்கவே செய்யும். இடதுசாரிகளின் புரிதலில், சாதி என்பது சமுதாயத்தில் உள்ள பல்வேறு முரண்பாடுகளில் ஒன்றேயொழிய, அடிப்படையான அல்லது தன்மையான முரண்பாடு அல்ல. அவர்களைப் பொறுத்தவரை, அது வர்க்கப் போராட்டத்தின்போது தீர்க்கப்படும் முரண்பாடு அல்லது புரட்சிக்குப் பிந்தைய சமூதாயத்தில் கையாளப்பட வேண்டிய ஒன்று.
வரலாற்று ரீதியாக சாதியை ஒரு பிரச்சினையாகவே அங்கீகரிக்கத் தயாராக இல்லாத சூழல் நலவுகிறது. இடதுசாரிகள் 80 ஆண்டுகளுக்கும் மேலாகப் புரிந்து கொள்ளாமல், தற்பொழுது மேலோட்டமாக மட்டுமே சாதிப் பிரச்சினையை விளங்கிக் கொள்கின்றனர். இது, சாதி அமைப்பால் கடும் பாதிப்புக்குள்ளாகி தவிக்கும் மக்களால் ஏற்க முடியாததாக இருக்கிறது. சாதி குறித்து இடதுசாரிகள் முன்வைத்த கீழ்க்காணும் வாதங்கள் அனைத்தும் காலாவதியாகிவிட்டன: சாதி என்பது நிலப்பிரபுத்துவத்தின் எச்சம்; முதலாளித்துவம் பரவும்போது இது இயல்பாகவே மறைந்து விடும்; சாதி என்பது பல்வேறு சமூகங்களிலும் நலவுகிறது. எனவே, அதைப் பற்றி தனித்துச் சொல்ல ஏதும் இல்லை. இத்தகைய அறிவற்ற வாதங்கள் இன்று அம்பலமாகியுள்ளன.
சாதிதான் பிரச்சனை என்பதை ஒப்புக்கொள்வதில் இடதுசாரிகள் காட்டி வந்த தயக்கம் என்னும் வரலாற்றுப் பின்னணியில் பார்க்கையில், கடந்த எண்பது ஆண்டுகளில் அவர்களது புரிதலில் ஏற்பட்டுள்ள சிறிய மாற்றம், சாதி அமைப்பால் கடும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு எந்த விளைவையும் ஏற்படுத்துவதாக இல்லை என்பதைக் கூறியாக வேண்டும்.
இந்தியத் துணைக் கண்டத்தின் எல்லா இடங்களிலும் அச்சுறுத்தும் சக்தியாக விளங்கும் சாதி அமைப்பின் தன்மையைப் புரிந்து கொள்ள, சமுதாயத்தில் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவர விரும்புபவர்கள் தனி முயற்சி எடுத்திருக்க வேண்டும். ஆனால், இடதுசாரிகளின் புரிதல் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குத் தாவுவதாகவே இருக்கிறது. ஒன்று, மேற்கு நாடுகளிலிருந்து கடன் வாங்கிய கருத்துகளூடாக சாதி அமைப்பைப் பார்ப்பது; அல்லது சாதி என்பது தீமையல்ல என்று கருதும் பார்ப்பனியக் கண்ணாடியை அணிந்து கொண்டு, சாதி அமைப்பிற்கு ஒரு "சுதேசி' விளக்கம் கொடுப்பது. இரு புரிதல்களும் தலித்துகளின் விடுதலை உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் செய்துவிட்டன.
சாதி சமுதாயத்தின் அடித்தளம், மேலடுக்கு ஆகிய இரண்டையும் உள்ளடக்கி, அதனை ஒட்டுமொத்தமாக ஒழுங்கமைக்கும் அமைப்பாகும். மேலும் சாதி, உற்பத்தி றையின் ஓர் தவிர்க்க முடியாத அங்கமாகும். சமூகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் மறுஉற்பத்தி முறையைக் கட்டுப்படுத்தும் தன்மையைக் கொண்டதாக சாதி இருக்கிறது. இன்றளவும்கூட, கிராமப் புறங்களில் சாதிகள்தான் உற்பத்தி முறையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கின்றன. கிராமப்புறங்களுக்கு அப்பாலும், இச்சமூகத்தின் பொருளாதார நிறுவனங்கள், இன்றளவும் சாதியை ஒட்டியே அமைந்துள்ளன.
பெருக்குவது முதற்கொண்டு மலம் அள்ளுவதுவரை அனைத்து துப்புரவுத் தொழில்களையும், பண்டைய சாதிய சமூகத்தில் செய்தவர்களே இன்றும் செய்து வருகின்றனர். அதிக வருமானம் ஈட்டும் தொழில்கள், மரபு வழியாக உயர்த்தப்பட்ட சாதியினராலேயே செய்யப்படுகின்றன. பார்ப்பனர்களும் பிற மேல்தட்டு சாதியினரும், தலித்துகள் செய்து கொண்டிருந்த சில தொழில்களை நோக்கிப் போயிருந்தாலும், அது சாதியை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. மாறாக, பணம் சம்பாதிக்கவே அந்த வேலையைத் தேர்வு செய்துள்ளனர் எ.கா. செருப்புத் தைக்கும் வியாபாரம். ஆனால், இது தலைகீழாக மாறவில்லை. இந்த மாற்றம்கூட, ஏற்கனவே இந்தத் தொழில்களில் இருந்த தலித்துகளுக்கு வேலையில்லாமல் செய்திருக்கிறது. தலித் மக்கள் இன்னம்கூட, பெருமளவுக்குப் பொருளாதாரப் பாகுபாட்டுக்கும், வெறுத்து ஒதுக்கப்படுதலுக்கும் ஆளாகி வருகின்றனர் என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
தலித் மக்களின் நிலையை மற்ற மக்களின் நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் அவர்களது அவலத்தைப் புரிந்த கொள்ள முடியும். தலித்துகளில் மூன்றில் இரண்டு பங்கு நிலமற்றவர்கள். ஆனால், மற்ற சாதியினரில் மூன்றில் ஒரு பங்கே நிலமற்றவர்கள். தலித்துகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானவர்களே உழவுக் கருவிகள், பம்புசெட்டுகள் போன்றவற்றை வைத்திருக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால், மற்ற சாதியினரில் 60 சதவிகிதம் பேர் இந்த வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். தலித்துகளில் 60 சதவிகிதத்தினர் தினக்கூலியை நம்பிக் கொண்டிருப்பவர்கள். மற்ற சாதியினரில் இத்தகையோர் நான்கில் ஒரு பகுதியினர்தான்.
இதற்கு இணையாகவே படிப்பறிவு, கல்வித் தகுதி மற்றும் சுகாதாரத் தரம் அமைந்துள்ளன. இதன் விளைவு அதிகளவு வறுமை. மற்றவர்களுக்கு 21 சதவிகித வறுமை எனில், தலித்துகளுக்கு அது 36 சதவிகிதமாக இருக்கிறது. தினக்கூலியைப் பொருத்தவரை, கிராமங்களில் இது 60 சதவிகிதமாகவும், நகர்ப்புறங்களில் இது 70 சதவிகிதமாகவும் இருக்கிறது. இடஒதுக்கீட்டு முறை ஓரளவுக்கு நன்மை அளித்திருப்பதால், தலித்துகளின் பிரதிநிதித்துவம் இன்று ஒவ்வொரு துறையிலும் ஓரளவுக்கு இருக்கிறது. ஆனாலும், இங்கு சாதி அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடை போடுகிறது. இடஒதுக்கீட்டு முறை, அதிகாரப் பங்கீட்டை உறுதிப்படுத்துவதாக இல்லை.
தலித்துகளை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கு எவ்விதத் திட்டங்களும் இல்லை என்பது மட்டுமல்ல; பண்பாட்டு ரீதியாக அவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதைத் தடுப்பதற்கும் எந்த வழிமுறையும் இல்லை. அதிகார வர்க்கத்தின் மிக உயர்ந்த பதவிகளில் இருக்கக்கூடிய தலித்துகளுக்கும் கிராமத்தில் வாழும் தலித்துகளுக்கும் சில வேறுபாடுகள் இருப்பினும், சாதி இழிவிலிருந்து அவர்களும் தப்பவில்லை. இவர்கள் வர்க்க ரீதியில் ஏற்றம் பெற்றிருந்தாலும், தலித் மக்களுக்கு அவர்கள் பயன்படவில்லை.
கல்வியைப் பரப்புவதன் மூலம் சாதிப் பண்பாட்டை ஒழித்துவிடலாம் என்ற நம்பிக்கையை சாதி அமைப்பு பொய்யாக்கி விட்டது. இந்நாட்டிலிருந்து வெளிவரும் எந்தவொரு செய்தித்தாளின் திருமணப் பகுதியை மேலோட்டமாகப் பார்த்தாலே போதும்; மெத்தப் படித்தவர்களும், பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வசிப்பவர்களும் தங்கள் சாதியை தன்மைப்படுத்தி விளம்பரங்கள் கொடுப்பதையும், தங்கள் சொந்த சாதிகளிலேயே வரன் தேடுவதையும் காணமுடியும். இத்தகைய விளம்பரங்கள், உலகமயமாக்கலால் பணக்காரர்களானவர்களிடையே மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
அண்மைக் காலங்களில் இந்துத்துவத்தின் வளர்ச்சியால், மத அடிப்படைவாதம், சடங்குகள், கோயிலுக்குச் செல்வது, சாமியார்களைப் பின்பற்றுவது அதிகரித்து வருகிறது. இதுவும் சாதி உணர்வைத் தூண்டி விடுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். படித்த வர்க்கம்தான் இத்தகைய நவீன மத மறுமலர்ச்சிக்கு ஆட்பட்டுக் கிடக்கிறது. இது, பண்பாட்டு ரீதியாக தலித்துகளை வெறுத்தொதுக்கும் தன்மைக்குத் தூண்டுகோலாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நாம் கடைப்பிடிக்கும் நாடாளுமன்ற அரசியலும், பல்வேறு முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது. சாதி மற்றும் சமூக அடையாளங்கள் அரசியலில் மிகப் பெரும் பங்கு வகிக்கின்றன. சாதியை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் அரசியல் மிக முக்கிய கருவியாக விளங்குகிறது.
ஆனந்த் தெல்தும்டே எழுதி அண்மையில் வெளிவந்துள்ள - 'ஏகாதிபத்திய எதிர்ப்பும், சாதிகளை ஒழிப்பதும்' என்ற சிறப்பான ஆங்கில நூலின் முதல் இரண்டு அத்தியாயங்களின் சுருக்கம் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.
ANTI-IMPERIALISM AND ANNIHILATION OF CASTES
By: Anand Teltumbde
Pages: 288
Rs.165
Published by:
Ramai Prakashan,
Ramai Ambedkar Pratishthan,
C/o. Vaishali Sudhir Chaudhari,
'Ram Rahi', Prasad Society,
Mahatma Phule Road,
Dombivali (west),
Thane - 421202