நிறுவனங்களின் நாயகர் ‘கலைஞர்’ என்று கொண்டாடப்படும் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1970-இல் தொடங்கப்பட்டது. 1993இல் “தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்” என்று பெயர் மாற்றம் கண்டு, 06.09.2013 முதல் “தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்” என்னும் பெயரில் சிறப்புடன் இயங்கி வருகின்றது.stalin and udayanidhi“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்பதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இக்கழகம், இன்று தன் வேர்களைப் பூமிக்கடியிலும் கிளைகளை வானவெளியிலும் பரப்பி, உலகின் அத்தனை உன்னதங்களையும் அறிவியல் தொழில்நுட்பங்களையும் கலைகளையும் இலக்கியங்களையும், தமிழ் கூறும் நல்லுலகுக்குக் கொடையாக வழங்கிவரும் சீரிய பணியைச் செம்மையாய்ச் செய்து வருகின்றது.

அரிய புத்தகங்களை மறுபதிப்புச் செய்தும் ஆவணப் பதிப்பாக வெளியிட்டும் வரும் இந்நிறுவனம், மறைந்த தமிழ்ச் சான்றோர் படைத்த அறிவுப் புதையல்களை, நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களை, மதிப்புக் கூடுதல் (Value Addition) செய்து வெளியிடுகின்றது. தமிழ் இலக்கியங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள், மாணவர்கள் பயன்பெறத்தக்க போட்டித் தேர்வு வினா விடை வங்கி நூல்கள் போன்றவை ஆங்கிலப் பதிப்பகங்களோடு இணைந்து கூட்டு வெளியீடாகக் கொண்டு வரப்படுகின்றன. செல்விலக்கியங்களை இன்றைய மொழியில் உரையுடன் இக்கழகம் வெளியிட்டு சிறப்பு சேர்க்கிறது. குழந்தைகளுக்கான வண்ணமயமான நூல்களை வெளியிடுகிறது.

அகராதி, அரசியல், இலக்கியம், கல்வியியல், இயற்பியல், வேதியியல், கணிதவியல், தாவரவியல், விலங்கியல், உடற்செயலியல், உயிரியல், வேளாண்மை, மருத்துவம், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, நிலவியல், மனையியல், சமூகவியல், உளவியல், தத்துவம், வானியல், சிறார் நூல்கள், தமிழ்ச் செவ்விலக்கிய உரைகள் போன்ற பல்துறை நூல்களையும் மறுபதிப்பு செய்து வருகிறது.

அரிய உயர்கல்வி நூல்கள்

1960களில் இறுதி ஆண்டுகள் மற்றும் 1970களின் தொடக்கத்தில் கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வி தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, பெருமளவு வளர்ச்சி கண்டது. அப்பொழுது தமிழ்வழிக் கல்விக்கு போதுமான கருவி நூல்கள் இல்லை என்ற விமர்சனங்களை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் கல்லூரிப் பாடநூல்கள் மொழிபெயர்ப்பில் முழுமூச்சாக ஈடுபடுத்தப்பட்டது. அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களே, நேரடியாக அந்த முன்னெடுப்புகளை கண்காணித்து வேகமெடுக்கச் செய்தார். அதன் காரணமாக, கல்லூரிக்கல்விக்கான 32 துறை சார்ந்த 875 அரிய உயர்கல்வி நூல்களை தமிழ் வழியில் தமிழ்நாட்டு பாடநூல் கழகம் மிக குறுகிய காலத்தில் வெளியிட்டு சாதனை படைத்தது.

1976-ஆம் ஆண்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் 600வது நூலை வெளியிடும் விழா சிறப்பாக நடத்தப்பட்டது. அந்த விழாவில், அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். அந்த விழாவில், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் தமிழ்வழிப் பாடநூல்கள் ஏராளமாக வெளியிட்டும் அவற்றை வாங்குவதற்கான ஸ்காலர்ஷிப் வழங்கியும் கல்லூரி மாணவர்கள் குறைவானத் தொகைக்கே பாடநூல் கழக நூல்களை வாங்குவதாகக் குறிப்பிட்டதோடு, அச்சமயம் ரூ.2 இலட்சம் மதிப்பிலான நூல்களே விற்பனையாகியுள்ளன என கவலையுடன் தெரிவித்தார். அதுகுறித்து தனது சிறப்புரையில், “கல்லூரி நூல்கள் அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும்“ என்கிற கருத்துக்கு ஏற்ப, இந்தியாவின் வேறு மாநிலங்களை ஒப்பிடும்போது, குஜராத்து மாநிலம் 104 நூல்களை வெளியிட்டிருக்கிறது. கருநாடகம் 160 நூல்களை வெளியிட்டிருக்கிறது. மத்தியப் பிரதேசம் 77 நூல்களை வெளியிட்டிருக்கிறது. ஆந்திரம் 135 நூல்களை வெளியிட்டிருக்கிறது. மற்ற மாநிலங்கள் குறைவான நூல்களைத்தாம் வெளியிட்டிருக்கின்றன. நாம் அறுநூறு நூல்களை வெளியிட்டிருக்கிறோம். இது பெருமைப்படத்தக்க ஒன்று.

ஆனால், இதே புள்ளி விவரத்தை நாம் கொஞ்சம் நீட்டிப் பார்த்தால் ஆந்திராவிலே 135 நூல்கள் வெளியிட்டாலும் சென்ற ஆண்டு மாத்திரம் 76 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இரண்டு இலட்ச ரூபாய்க்குத் தான் விற்பனையாகியிருக்கின்றது என்று இங்கு இயக்குநர் அவர்கள் குறிப்பிட்டு வருத்தப்பட்டார்கள். எனக்குள்ள ஆறுதல் அந்த அளவுக்காவது விற்றதே என்பதுதான். விற்கவில்லை என்று வருந்துகிற நேரத்தில், பலரும் வாங்கவில்லையே என்று வேதனைப்படுகிற அதே நேரத்தில், இதை வாங்கத் தேவையில்லை என்று சொல்கிற ஒரு கூட்டமும் தமிழ்நாட்டிலே இருக்கிறது; அதை யாரும் மறந்து விடக்கூடாது!” என்றும்,

‘மாணவர்கள் தாய்மொழி வழியில் கற்க முடியும் என்ற நம்பிக்கை பெற வேண்டும், தாய்மொழி வழிக்கல்வி சிறந்தது என்ற மானம் பெற வேண்டும் என்று குறிப்பிட்டதோடு’, அதற்கான பாடநூல் கழகத்தின் முன்னெடுப்புகளை பாராட்டிப் பேசியுள்ளார். இந்த தகவல்கள் ‘கல்வி நிலையங்களில் கலைஞர்’ என்ற நூலில் பதிவாகியுள்ளன. அன்றைய முதல்வர் கண்ட கனவு நனவாவது போல, 2021 – 2024 வரை ஆன கல்வி ஆண்டுகளில், 1970களில் வெளியிடப்பட்ட நூல்களின் மறுபதிப்புகளும் கடந்த மூன்றாண்டு காலத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகம் கொண்டு வந்து பள்ளிப் பாடநூல் சாராத பல்வேறு நூல்களும் ரூ.6 கோடிக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது மேனாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு சான்றாய் அமைகிறது என்று ஐயமின்றிக் குறிப்பிடலாம்.

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பாக நூல்கள் வெளியிடும் திட்டத்தில், பல்வேறு அறிவிப்புகளைக் கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. இந்த அறிவிப்புகளின் கீழ் வெளியான, வெளியாகவுள்ள எண்ணிக்கையிலான நூல்கள் விவரம் அட்டவணையில் இடம்பெற்றுள்ளது.

எண்

அறிவிப்புகள்

2022

2023

2024

ஆகஸ்டு 2024

வெளியிடப்பட்ட மொத்த நூல்கள்

வெளியிடத் தயாராக உள்ள நூல்கள்

1

திசைதோறும் திராவிடம்

(2021 - 22)

23

12

20

-

55

13

2

முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் (2021 - 22)

-

45

62

-

107

30

3

இளந்தளிர் இலக்கியத் திட்டம்

(2021 - 22)

23

36

76

-

135

2

4

குழந்தைகள் கலைக்களஞ்சியம்

(2022 - 23)

-

10

10

-

20

-

5

நூற்றாண்டு காணும் ஆளுமைகளின் படைப்புகள்

(2022 - 23)

-

1

3

-

4

2

6

நாளைய தலைமுறைக்கு நாட்டுடமை நூல்கள்

(2022 - 23)

18

6

9

-

33

7

7

நாட்டுடமை & அரிய நூல்கள் (ஆங்கில மொழிபெயர்ப்பு)

(2023 - 24)

-

-

9

-

9

1

8

உலக இலக்கியம், உலக சிறுவர் இலக்கியம்

(தமிழ்) (2023 - 24)

-

-

14

-

14

60

9

திராவிடக் களஞ்சியம் (தொகுப்பு) (2023 - 24)

-

-

1

-

1

3

10

சமூகநீதி மற்றும் இடஒதுக்கீடு நூல் திட்டம்

-

-

1

-

1

-

11

சங்க இலக்கியங்கள்

-

10

3

-

13

-

12

பெரியார் சிந்தனைத் திரட்டு

-

-

10

-

10

8

13

மனதில் உறுதி வேண்டும்

-

-

-

-

0

-

14

வ.உ.சி. நூல் திரட்டு-

(2022 - 2023)

2

2

-

-

4

-

15

Child book on Vaikom Struggle

-

1

-

-

1

-

16

வைக்கம் போராட்டம் – 110 முதலமைச்சர் அறிவிப்பு

-

-

2

-

2

1

17

இந்தோ – ஐரோப்பா அகராதி நூல் திட்டம்

-

-

2

-

2

-

18

மிளிரும் தமிழகம் (2025)

     

1

1

 -

19

பட்டயக் கணக்காளர் தேர்வு நூல்கள் (2025)

-

-

-

-

-

6

 

மொத்த நூல்களின் எண்ணிக்கை

66

123

222

1

412

133

தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்து புத்தகங்களையும் அச்சடித்து இருப்பில் வைக்காமல், தேவையான புத்தகங்களை தேவைக்கேற்ப Print on Demand (PoD) முறையில் அச்சடித்துக்கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளதால், புத்தகங்களை பதிப்பிப்பதில் தேவையற்ற பொருட்செலவை குறைக்கவும் குறைந்த இடவசதியில் ஏராளமான தலைப்புகளிலான புத்தகங்களைக் கொண்டு வரவும் ஏதுவாகியுள்ளது.

திசைதோறும் திராவிடம்

தமிழ் இலக்கியம், தமிழ்நாட்டு வரலாறு மற்றும் பண்பாட்டை எடுத்துக்காட்டும் நூல்களை ஆங்கிலம் மற்றும் தென்னிந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதற்குச் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமான ‘திசைதோறும் திராவிடம்’ என்ற திட்டம், இக்கழகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில், கூட்டு வெளியீடுகளாக பென்குயின், விடாஸ்டா, ரத்னா புக்ஸ், நியோகி, ரூபா பப்ளிகேஷன்ஸ், ஆலீவ் பப்ளிகேஷன்ஸ், DC புக்ஸ், மாத்ருபூமி புக்ஸ், ஹைதராபாத் புக் ட்ரஸ்ட், யூனிவர்சிட்டி பிரஸ், ஓரியன்ட் பிளாக்ஸ்வான் ஹார்ப்பர் கொலின்ஸ் மற்றும் பெர்மனென்ட் பிளாக் உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு மற்றும் பன்னாட்டுப் பதிப்பகங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

‘திசைதோறும் திராவிடம்’ எனும் திட்டத்தின் கீழ் மொழிபெயர்த்து கூட்டு வெளியீடுகளாக கி.ராஜநாராயணனின் ‘கரிசல் கதைகள்’, தாமஸ் ஹிட்டோஷி ப்ருக்க்ஷிமா மொழிபெயர்த்த திருவள்ளுவரின் ‘திருக்குறள்’, ராஜம் கிருஷ்ணனின் ‘சுழலில் மிதக்கும் தீபங்கள்’ (Lamps in the Whirlpool), நீல பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ (Generations), சிலப்பதிகாரம் (பெங்குயின் ராண்டம் ஹவுஸ்), ‘கதா விலாசம்’ (ரௌட்லஜ் இந்தியா), ‘புத்தம் வீடு’ (ரூபா பப்ளிகேஷன்ஸ்), ‘மீரான் சிறுகதைகள்’ (ரத்னா புக்ஸ்), ‘தலித் சிறுகதைகள்’ (விடாஸ்டா), ‘உ.வே.சா கட்டுரைகள்’, அறிஞர் அண்ணா குறித்த ‘மாபெரும் தமிழ்க் கனவு’, கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, சுப்பிரமணிய பாரதியாரின் ‘ஞானரதம்’, M.V.வெங்கட்ராமனின் ‘வேள்வித் தீ’, பழ.அதியமானின் ‘வைக்கம் போராட்டம்’, அசோகமித்ரன் எழுதிய ‘A Chennai Kaleidoscope’, இந்திரா பார்த்தசாரதியின் ‘ஔரங்கசீப்’, புதுமைப்பித்தன் எழுதிய ‘புதுமைப்பித்தன் சிறுகதைகள்’ உள்ளிட்ட பல நூல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் ஆங்கிலத்திலுள்ள மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பதோடு, தமிழ்நாட்டு பேராசிரியர்களைக் கொண்டு மொழியாக்க முறையில் (Trans Creation) புதிய நூல்களும் உருவாக்கப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புகழ்பெற்ற 5 மருத்துவ நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கினார்.

தமிழ்நாட்டு பேராசிரியர்களைக் கொண்டு பன்னாட்டு நிறுவனமான Elsevier நிறுவனத்துடன் Guyton & Hall’ இன் மருத்துவ உடற்செயலியல் நூல் கொண்டுவரப்பட்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பல மருத்துவ நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 107 நூல்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.

இளந்தளிர் இலக்கியத் திட்டம்

பள்ளி மாணவர்களுக்கான கதைகள் புனைவிலி நூல்கள் இத்திட்டத்தின் கீழ் வெளியிடப்படுகின்றன.

இத்திட்டத்தின்கீழ் பூமிக்குக் காய்ச்சல், விதைப்பதே முளைக்கும், எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம், நோய்நாடி, ஓலைச்சுவடி, என்னைத் தொடதே, இடஒதுக்கீடு என்றால் என்ன, பலூனிக்கா, பேருதவி, சுத்தம் சுகாதாரம், ஆழிப்பேரலை, முட்டையும் புவியும், திருவிழா, நூலகம், கீரை, பழங்கள், காய்கள் உணவு அறிமுகம், நாம் வாழ உதவுபவர்கள், நேர மேலாண்மை, வரைதல் பயிற்சி, ஆற்றின் கதை, போன்ற சிறார் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உலக இலக்கியம், உலகச் சிறுவர் இலக்கியம் (தமிழ்)

அறிவிப்பினைச் செயல்படுத்த ஏதுவாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமானது, உலக இலக்கியங்களின் எளிமைப்படுத்தப்பட்ட, குழந்தைகளுக்கான நூல் வரிசையில் மலையாள பதிப்பகமான DC Books (Mango Classics), கனடா நாட்டு நிறுவனமான Wonder House, இந்திய நிறுவனமான Xact Group of Companies போன்ற நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து, 14 நூல்கள் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களால் 2ஆவது சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் 18.01.2024 அன்று வெளியிடப்பட்டன. 2024 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற பொலோனியா புத்தகத் திருவிழாவில் 160-க்கும் மேற்பட்ட குழந்தை நூல்களின் பதிப்புரிமையை 12 நாட்டைச் சேர்ந்த பதிப்பாளர்களிடமிருந்து பாடநூல் கழகம் வாங்கி அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளது. இவைமட்டுமின்றி சென்னையில் பன்னாட்டுப் புத்தகத்திருவிழாவிலும் கடந்த 2 ஆண்டு தமிழ்நாடு பாடநூல் கழகம் தீவிரமாக பங்களிப்பு செய்து வருகிறது.

பிற வெளியீடுகள் (Box News)

கலைக்களஞ்சியங்கள் 10 தொகுதிகளும், சிறார் களஞ்சியங்கள் 10 தொகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொது வாசகர்களிடையே தமிழ், கலை மற்றும் பண்பாட்டு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பல்வேறு அறிஞர்களின் படைப்புகளை நாளைய தலைமுறைக்கு நாட்டுடைமை நூல்கள் எனும் திட்டத்தின் கீழ் 30க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அவர் எழுதிய நூல்களை பதிப்பித்து 4 திரட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.

‘நூற்றாண்டு காணும் ஆளுமைகள்’ திட்டத்தின் கீழ் பேரா.க.அன்பழகன், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, தி. ஜானகிராமன், கி. ராஜநாராயணன் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 9 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

வைக்கம் போராட்டம் குறித்த நூல் 3 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு நூல்கள், பட்டயக் கணக்காயர் தேர்வு நூல்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

இரட்டைக் காப்பியமான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய இரு நூல்களை 25 மொழிகளில் வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

தமிழ்நாட்டின் பண்பாடு, கட்டடக்கலை, சிற்பக்கலை, நாட்டுப்புறக் கலைகள், தனித்துவமான உணவு வகைகள், புவிசார் குறியீடுகள் போன்றவற்றை புகைப்பட மற்றும் ஓவிய நூலாக ‘மிளிரும் தமிழ்நாடு’ என்ற திட்டத்தின் கீழும் சென்னை டு மெட்ராஸ் என்ற புகைப்பட நூல் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் பிற துறை அறிவிப்புகளான ‘திராவிடக் களஞ்சியம்’ எனும் திட்டத்தின் கீழ் தந்தை பெரியார் சிந்தனைத் திரட்டு, அறிஞர் அண்ணா சிந்தனைத் திரட்டு, திராவிட இயக்க சிறுகதைகள், திராவிட இயக்க நீதிக்கட்சி வரலாறு ஆகிய 4 திரட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.

‘பெரியார் சிந்தனைத் திரட்டு’ எனும் திட்டத்தின் கீழ் பெரியார் சிந்தனை 5 குறு நூல்களில் முதல் தொகுதியினை 10 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

‘தமிழ், இந்தோ- ஐரோப்பிய வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின்’ கீழ் தமிழ் இந்தோ ஐரோப்பிய வேர்ச்சொல் ஒப்பீட்டுச் சுருக்க அகராதி 2 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

‘பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்காக’ சமூகநீதி மற்றும் இட ஒதுக்கீடு நூல் திட்டத்தின் கீழ் இடஒதுக்கீட்டுக் கொள்கை மற்றும் சமூகநீதிக் கோட்பாடு குறித்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்காக ‘கல்லூரிக் கனவு’ என்ற கையேடு தயாரித்து ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 2 இலட்சம் பிரதிகளுக்கு மேல் அச்சடித்து வழங்கப்பட்டு வருகிறது.

சமூகநீதி மற்றும் பெண்கள் உரிமைத் துறைக்காக ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின்’ கீழ் பெண்களுக்கான தொழில் வழிகாட்டி மற்றும் நிதி விழிப்புணர்வு குறித்த கையேடு என இரண்டு நூல்கள் ‘புதுமைப் பெண்’ எனும் புத்தகம் 1 இலட்சம் பிரதிகளுக்கு மேல் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது.

- டாக்டர் சங்கர சரவணன், இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.