இன்றைக்கு அல்ல தந்தை பெரியார் காலத்தில் இருந்தே திராவிட சித்தாந்தங்களை ஒப்புக்கொள்ளாத போக்கு ம.பொ.சி வகையறாக்களிடம் உண்டு. இவர்கள் திராவிடத்தை அது ஏற்படுத்திய மறுமலர்ச்சியை மறுப்பார்கள். எனினும் மறுபுறத்தில் இந்தியத்திடம் மண்டியிட்டுக் கிடப்பார்கள். இந்தி எழுத்துகளை அழிக்க வேண்டும் என தந்தை பெரியார் தனி ஆளாகத் தொடர் வண்டி நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துகளை அழித்துக்கொண்டு வரும்போது, மண்ணெண்ணெய் கொண்டு அந்த தாரை அழித்த வரலாறு ம.பொ.சி மற்றும் தமிழ்த்தேசியத்திற்கு உண்டு. இன்று பல்வேறு அணிகளாக அவர்கள் பிரிந்து இருந்தாலும் திராவிட எதிர்ப்புக்கொள்கையில், பெரியார் எதிர்ப்பில் அவர்கள் இணைந்து கொள்வதைப் பார்க்க முடியும். இதில் முக்கியமாக ஒரு செய்தியைப் பார்க்க வேண்டும்; இந்த தமிழ்த்தேசியத்திற்கு சற்றும் குறைவில்லாத அளவிற்கு இன்று தலித்தியம் பேசுகின்றவர்கள் தந்தை பெரியாரை எதிர் நிலையில் வைத்து பேசும் போக்கு பல ஆண்டுகளாகவே அதிகரித்து உள்ளது என்பதை நாம் அறிவோம்.

ஆரம்ப காலங்களில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் கொள்கைகளை முன்னெடுத்தவர்கள், இன்று தந்தை பெரியாரை ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரி என்பது போல் சித்தரித்து, அவர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தலைவர் என்பதை வலியுறுத்தி பொய் பரப்புரை செய்வதை நாம் பார்க்கின்றோம். அந்த இடத்தில் பண்டிதர் அயோத்திதாசரை கொண்டு வந்து நிறுத்துகின்றனர்; அதற்கு அவர்கள் கூறும் காரணம், தந்தை பெரியார் பண்டிதரின் புகழை மறைத்துவிட்டார் என்றும் திராவிடர்கள் எனும் பதத்தை முதன் முதலில் அவர்தான் பயன்படுத்தினார் என்றும் காரணம் கூறுகின்றனர். தந்தை பெரியார் திராவிடர் எனும் சொல்லைக் கொண்டு புது அரசியல் மாற்றத்தை சமூகப் புரட்சியாக இங்கு நடாத்திக்காட்டினார். அதனை ஒரு சமூக இயக்கமாக மக்களிடம் கட்டமைத்து கொண்டு சேர்த்தார் எனும் உண்மையை அவர்கள் ஆராயவும் ஏற்றுக் கொள்ளவும் தயாராக இல்லை. பெரியார் அயோத்திதாசரை மறைக்கவில்லை எனும் உண்மையை அவர் வரலாற்றைப் படித்தாலே உணர்ந்துக்கொள்ள முடியும். திராவிடர் இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு அவர்கள், திராவிட இயக்கம் தலித்துகளுக்கு எதிரானதா எனும் நூலில் பின்வருமாறு வினா எழுப்புகின்றார்.

அயோத்திதாசரது நூல்களான பூர்வத் தமிழொளி எனும் புத்தரது ஆதிவேதம், விபூதி ஆராய்ச்சி, யதார்த்த பிராமண, வேஷ பிராமண வேதாந்த விவரம் போன்ற பல நூல்கள் நமக்கு 1980ஆம் ஆண்டின் கடைசியில்தான் கிடைத்தன. 1960களில் திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகளைப் படித்த நமக்கு - பெ.சு. மணி எழுதியதற்குப் பிறகு - நம் தோழர்

எஸ்.வி. இராஜதுரை நீலகிரியிலிருந்து படியெடுத்து அனுப்பினார். இதற்கு இடையில் எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்துள்ளன. இப்படி நூல்கள் இருப்பதாகவே எவர்க்கும் தெரியாமல் போனதேன்? இவற்றை யார் மறைத்தது?

             1938 வரை வாழ்ந்த ஆர். வீரையன் அயோத்திதாசர்க்கு என்ன செய்தார்?

             1941 வரை வாழ்ந்த ம. பழனி சாமி அயோத்திதாசரது சிந்தனைகளைப் பிரச்சாரம் செய்தாரா?

             1945 வரை வாழ்ந்த இரட்டை மலை சீனிவாசன் அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனைகளை - நூல்களை முன்னெடுத்துச் செல்லாமல் பதிப்பிக்காமல் போனதேன்?

             1947 வரை வாழ்ந்த எம்.சி. ராஜா அயோத்திதாசரை நினைவுபடுத்த என்ன செய்தார்?

             1958 வரை வாழ்ந்த சுவாமி சகஜானந்தாவுக்கு அயோத்திதாசர் பற்றிய மதிப்பீடு என்ன? அவர் அயோத்தி தாசரது சிந்தனைகளுக்குச் செய்தது என்ன?

             1964 வரை வாழ்ந்த மேயர் சிவராஜ் அயோத்திதாசரது சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல உதவினாரா?

             1966 வரை வாழ்ந்த எல்.சி. குருசாமி அயோத்திதாசரது சிந்தனைகளை வெளிப்படுத்தாதது ஏன்?

இப்படித் தாழ்த்தப்பட்ட தலைவர்களை வரிசைப்படுத்திக் காட்டிக் கேட்க முடியும்? ஆனால் குழப்பம் விளைவிப்பவர்களின் செயல் அது என்பதால் நாம் அறிவார்ந்த விவாதத்தை மட்டுமே விரும்புகின்றோம்.

மேலும் வள்ளலார் அவர்கள் அயோத்திதாசர் அவர்களுக்கு முன் வாழ்ந்து மறைந்தவர். அவர் சைவ மதத் துறவி என்றபோதும் ஆரிய எதிர்ப்பு, வேத மத எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு அவர் பாடல்களில் மிளிரும். அவருக்குப் பின் தோன்றிய அயோத்திதாசர் இராமலிங்க அடிகள் பற்றி கூறவே இல்லை என்று அடம் பிடிப்பது அறிவிற்கு ஏற்ற செயலா? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, தமிழ்த்தேசியம் பேசிடும் நபர்கள் பெரியாரை மறுத்து அயோத்திதாசரை ஏற்றுக்கொள்வதை நாம் பார்க்க முடியும். அவர்களைப் பொறுத்தவரையில் அண்ணல் அம்பேத்கர் வேற்று மாநிலத்தவர் அயோத்திதாசர் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்ற காரணம் மட்டுமல்லாமல் தமிழ்த்தேசியம் வலியுறுத்தும் ஜாதியை எந்த இடத்திலும் ஒழிக்க வேண்டும் என கருதாதவர் பண்டிதர் என்பதே அவரை ஏற்றுக் கொள்ள உண்மை காரணம்; ஏனெனில் தமிழ்த்தேசியத்தின் படி ஜாதி நல்லது படிநிலைகள் தான் கூடாது எனும் அரிய தத்துவத்தைக் கொண்டவர்கள்.

அயோத்திதாசரின் ஜாதிய மனநிலையை அவரின் பல்வேறு நூல்களில் பார்க்க முடியும். அவரின் பார்ப்பனிய சிந்தனை நமக்கு விளங்கும்; அவரின் கட்டுரை ஒன்றில், ‘இந்தியாவில் தாழ்த்தப்பட்ட ஜாதியோருக்கு நியமிக்கப்பட்ட சங்கம்’ என்ற தலைப்பிட்ட கட்டுரையில் அயோத்திதாசர் இவ்வாறு எழுதுகிறார்.

இந்த டிசம்பர் மாதம் விடுமுறைக் காலத்தில் சில பெரியோர்கள் கூடி இந்தியாவில் தாழ்த்தப்பட்டுள்ள சாதியோரைச் சீர்திருத்த வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

இவற்றுள் இயல்பாகவே அறிவின்றித் தாழ்ந்துள்ள சில வகுப்பாரும் உண்டு. சாதித் தலைவர்களின் விரோதத்தால் தாழ்த்தப்பட்டுள்ளவர்களும் நாளது வரையில் தாழ்த்தி வருகிறவற்றுள் தாழ்ந்தவர்களுமாகிய ஓர் வகுப்பாரும் உண்டு.

அவர்கள் யாரென்பீரேல் குறவர், வில்லியர், சக்கிலியர், மலமெடுக்கும் தோட்டிகள் இயல்பாகவே தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள்.

சாதித் தலைவர்களாகும் வேஷ பிராமணர்களால் பறையரென்றும், சாம்பாரென்றும் வலங்கையரென்றும் கூறி அவர்களைச் சுத்த ஜலங்களை மொண்டு குடிக்க விடாமலும், வண்ணார்களை வஸ்திரமெடுக்க விடாமலும், அம்மட்டர்களை சவரஞ்செய்ய விடாமலும், அந்தஸ்தான உத்தியோகங்களில் பிரவேசிக்க விடாமலும், ஏதோ துரை மக்கள் கருணையால் ஓர் உத்தியோகத்தை பெற்றுக்கொண்ட போதிலும் அதனினின்று முன்னுக்கு ஏறவிடாமலும் பலவகை இடுக்கங்களைச் செய்து தாழ்த்திக் கொண்டே வருகிறார்கள். இவர்களைத் தாழ்ந்த வகுப்பார் என்று கூறலாகாது. சாதிபேதமுள்ள மற்றவர்களால் தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்று கூறல் வேண்டும்.

இவற்றுள் கூளங் குப்பைகளுடன் குணப்பெரும் பொருட்களையும் சேர குவித்து குப்பைக் குழியென்பது போல கல்வியிலும், நாகரீகத்திலும், விவேகத்திலும், ஒற்றுமையிலும் மிகுந்து வேஷ பிராமணர்கள் கற்பனா கதைகளுக்கிணங்காமல் விரோதிகளாய் நின்ற திராவிட பெளத்தர்கள் யாவரையும் பறையர், சாம்பார், வலங்கையரென்று தாழ்த்திக் கொண்டதுமின்றி சக்கிலி, தோட்டி, குறவர், வில்லியர் இவர்கள் யாவரையும் ஐந்தாவது சாதியென்றும், பஞ்சம சாதியென நூதன பெயரிட்டு மேன்மக்களாம் பெளத்தர்களையும் அக்குப்பையில் சேர்த்து பஞ்சம சாதியென்று வகுத்திருக்கின்றார்கள்.” (அயோத்தி தாசர் தொகுதி 1, ப.97)

அறிவின்றி தாழ்ந்த வகுப்பார் என்பது ஜாதி ஒழிப்புச் சிந்தனையா? மேன்மக்களாம் பௌத்தர்களை பஞ்சம ஜாதி என்று சக்கிலி, தோட்டி, வில்லியர் இவர்களோடு சேர்த்துவிட்டது மிகத் தவறு என்று எழுதுகின்றார். பல இடங்களில் ஜாதி பேதமற்ற பௌத்தர்கள் எனக் கூறுவது பறையர்களில் உள்ள உட்ஜாதிகளை குறிப்பிட்டே என்பதை அவர் சிந்தனைகளை படிக்கின்றபோது உணர முடியும்! இது ஒரு துளி தான்; அவர் சிந்தனை தொகுப்பை படித்தால் அவர் பறையர்களைத் தவிர மற்றவர்களைக் குறிப்பாகச் சக்கிலிய மக்களை எந்த அளவுக்கு இழிவாக கருதி உள்ளார் என்பது விளங்கும்; இந்த பறையர் குல உழைப்பாளரைத் தான் தந்தை பெரியார் எனும் ஜாதி ஒழிப்பு போராளி மறைத்துவிட்டதாக தலித்திய தோழர்கள் பலர் கதைக்கின்றனர்.

சரி இதில் தமிழ்த்தேசியர்கள் என்ன செய்கின்றார்கள் என்றால், அயோத்திதாசரை ஏற்றுக்கொண்டு பறையர்களை சாம்பவ குல வேளாளர், வீர சோழ பறையர் என அழைத்துக்கொண்டால் அவர்கள் மேன்மை பெற்று விடுவார்கள் எனக் கூறித் திரிகின்றனர். அண்ணலை, தந்தை பெரியாரை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தமிழ்த்தேசியவாதிகள் அயோத்திதாசரை ஏற்றுக் கொள்ளும் காரணம் இரண்டு; ஒன்று இனத் தூய்மை அடிப்படையில் தமிழர் மற்றொன்று அவர் ஜாதி ஒழிப்பு போராளி அல்ல; அவர் பறையர் ஜாதி உயர்ந்தது என நிறுவ முயன்றவர் என்பதால் தான்; ஏனெனில் தமிழ்த்தேசியத்திற்கு ஜாதி நல்லது ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்பது தானே அடிப்படை? சாக்கடை இருக்கலாம் ஆனால் கொசு மட்டும் உற்பத்தி ஆகக் கூடாது என்பதில் என்ன தெளிவு இருக்க முடியும்?

தமிழ் நாட்டு வரலாற்றில் தந்தை பெரியாரைப் புறக்கணிக்கும் எவருக்கும் அது தமிழ்த் தேசியமாக இருந்தாலும் தலித்தியமாக இருந்தாலும் இறுதியில் தோல்வியே என்பது தான் வரலாறு.

Pin It