tha.pandiyan21961இல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பேராசான் ஜீவாவால் தோற்றுவிக்கப்பட்டது. மாநிலத் தலைவராக ஜீவா. பொதுச் செயலாளராகத் தோழர் தா.பாண்டியன் ஜீவாவால் முன்மொழியப்பட்டார். காரைக்குடிக்கு ஜீவா வரும் பொழுதெல்லாம் அவரைச் சந்திப்பது, உரையாடல் நிகழ்த்துவது என்றிருந்த தோழர் தா.பா.வை மிகச் சரியாக ஜீவா அடையாளம் கண்டு கொண்டார்.

துணிச்சல் மிக்க பேச்சாளர், தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்ந்த புலமை, சிறந்த மொழிபெயர்ப்பாளர், தமிழுணர்வு, கடினமான சிந்தனைகளை விவாதித்துப் புரிந்துகொள்ளுதல், போராட்ட உணர்வு, தமிழ் மரபில் நின்று கொண்டு தத்துவங்களை உள் வாங்குதல், அரசியலையும் இலக்கியத்தையும் இரு கண்களாகப் போற்றுதல், வரலாற்றிலும் பண்பாட்டிலும் தெளிந்த ஞானம், தொழிற்சங்கவாதி, களப் போராளி, எழுத்தாளர், பேச்சாளர், இதழாளர், தலைமைப் பண்பு போன்ற பல திறன்களை ஒருங்கே பெற்றவர் தோழர் தா.பா. இதனால் பொதுவுடைமைச் சிந்தனையாளர்களிடமும் தொழிலாளிகளிடமும் மட்டுமல்லாமல் தமிழர்கள் எல்லாரிடமும் மதிப்பு மிக்க தலைவராக விளங்கினார்.

தோழர் தா.பா. சிறந்த பேச்சாளர் என்பதை நாம் அறிவோம். தெளிவான சிந்தனை, பரந்துபட்ட இலக்கிய அறிவு, எல்லாரும் புரிந்து கொள்ளும் மொழி நடை, கடினமான தத்துவங்களை உள்வாங்கி வெளிப்படுத்தும் திறன், விவாதத்திறமை, குரல் வளம், புலப்பாட்டுத் திறன் ஆகியவற்றை அவருடைய உரைகளில் நாம் காணலாம் அவருடைய உரைகளில் சிலவற்றை நேரடியாகக் கேட்டிருப்போம்.

தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாகப் பல உரைகள் ஊடகங்கள் வழிக்கேட்டிருப்போம். அவருடைய ஒவ்வொரு உரையும் நம்மிடம் பல்வேறு தாக்கங்களை விளைவிப்பதை நம்மால் உணரமுடியும். கேட்போர் மனதில் குறுகுறுப்பை ஏற்படுத்தும்.

நம்மைச் சிந்திக்க வைக்கும். அவருடைய அரசியல் உரையாகட்டும், இலக்கிய உரையாகட்டும், பண்பாடு சார்ந்த உரையாகட்டும், தொழிற்சங்க உரையாகட்டும், கட்சிக்கல்வி வகுப்பாகட்டும் - எல்லாமே அவ்வாறு தாம்.

‘கல்லும் கதை சொல்லும்' என்ற தலைப்பில் 2011 ஆம் ஆண்டு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெற்ற ஈரோடு புத்தகத் திருவிழாவில் தோழர் தா.பா. ஆற்றிய உரை மிகவும் சிறப்பானது. தோழர் ஸ்டாலின் குணசேகரன் முயற்சியில் ஒலி - ஒளி வடிவில் அந்த உரை வெளியிடப்பட்டுள்ளது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் அதனை நூலாக வெளியிட்டுள்ளது.

மீண்டும் மீண்டும் கேட்கத்தக்கது, ஏராளமான தகவல்கள். அத்தகவல்கள் நம்மை மீண்டும் மீண்டும் சிந்திக்க வைப்பவை; தமிழரின் சிறப்பைப் புலப்படுத்தி நிற்பவை. அதில் சிலவற்றைப் பார்ப்போம்.

“இந்தக் கதை நம்முடைய முன்னோர்கள் சொன்ன கதை. ஆனால் வருங்காலச் சந்ததியினர் மறக்காமல் மனதில் பதித்துக் கொள்ள வேண்டிய கதை. பல காலம் அதனுடைய சிறப்பே தெரியாமல் தமிழ்நாட்டில் வாழ்கிறோம்" என்று ‘கல்லும் கதை சொல்லும்’ என்ற தலைப்புக்குள் வருகிறார்.

நமது முன்னோர்களுக்கு வரலாற்று உணர்வு இல்லை என்பது அவருடைய ஆதங்கம். கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டயங்களிலும் இலக்கியங்களிலும் நாட்டார் வழக்காறுகளிலும் வரலாற்றுச் செய்திகளை மக்கள் பாதுகாத்து வருகின்றனர் என்பதை அவர் அறியாதவரல்லர்.

நம்மைப்போல மிகப் பழமையான பண்பாட்டையும் வரலாற்றையும் கொண்ட நாடுகளில் வரலாற்றை மட்டுமே பதிந்து வைப்பது போன்று நம் முன்னோர்கள் செய்யவில்லை என்று கருதுகிறார்.

அவர் பின்வருமாறு கூறுகிறார்: “ஓர் உதாரணம் சொல்லுகிறேன்... யூதர்களுக்கு ஒரு பழக்கம் இருந்தது. இருக்கிறது. ஒவ்வொரு யூதன் குடும்பத்திலும் அந்தக்குடும்பத் தலைவனிடம் 9 அடி நீளமுள்ள தடி இருக்கும். கருநிறத்தில் நல்ல வைரம் பாய்ந்த தடி. அந்தத் தடியில் குடும்பத்தலைவரின் பெயர் எழுதப்பட்டிருக்கும். அவர் அதை யாருக்கும் கொடுக்க மாட்டார். அந்த வீட்டில் எல்லாராலும் அது மதிக்கப்படும்.

அவர் அதைப் பத்திரமாக வைத்திருப்பார்.அவர் இறப்பதற்கு முன்பு அவருடைய முதல் மகனிடம் அதைக் கொடுப்பார். அவன் அதிலுள்ள தனது தந்தையின் பெயருக்கு அடுத்துத் தன் பெயரை எழுதி வைப்பான். அந்தக் கோலை அவன் விடாது பாதுகாத்திருந்து அவன் வாழ்நாள் முடியும் போது தனது மகன் கையில் கொடுப்பான். இப்படியே ஒரு கோல் முழுவதும் எழுதப்பட்ட பிறகு அடுத்த கோல் வந்துவிடும். இந்தக் கோல் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்படும் அந்தப் பெட்டியும் பூசிக்கப்படும். இந்தக் கோலும் பூசிக்கப்படும்... தமிழ்நாட்டில் யாருமே நான்கு சந்ததிகளுக்குப் பெயரை எழுதிவைப்பதில்லை” என்று விவரிக்கிறார். அதனால் தான் விவிலியம் ஆதி ஆகமத்தில் வரிசையாக ஆபிரகாம் தொடங்கி 7000 பேர்களுக்கு மேல் வரிசையாகச் சொல்லப்பட்டுள்ளன.

தமிழர்கள் வரலாற்றை ஏன் எழுதி வைக்கவில்லை? தோழர் தா.பா. சிந்திக்கிறார்: ‘அது ஒரு வேளை இந்த உயரிய தமிழர் பண்பாட்டின் காரணமாக மறைந்ததா அல்லது அது அவசியமே இல்லை, வரலாறு என்பது ஒரு மனிதனுடையது அல்ல; தொடர்ச்சி. மனித குலம் என்பது நேற்று இருந்தவன் இன்று இருக்கிறான் என்பது வரை அது தொடரும். எனவே அதை நாம் வரலாற்றில் எழுதி வைக்க வேண்டாம் என நினைத்தார்களா? தெரியவில்லை’ என்று சமாதானப்படுத்திக்கொள்கிறார்.

ஆனால், கல்லும் கதை சொல்லும் என்பதன் மூலம் நம்முடைய சிற்பக்கலையும் கட்டடக்கலையும் வரலாற்றைச் சொல்கின்றன என்பதை நிறுவுகிறார்.

கிரேக்கச் சிற்பங்களையும் தமிழ்நாட்டுச் சிற்பங்களையும் ஒப்பிட்டுக் காட்டுவதன் மூலம் நமது சிற்பங்களின் உயிர்த்துடிப்பைத் தமது உயிர்த்துடிப்பு மிக்க பேச்சின் மூலம் காட்டுகிறார். “கிரேக்க உரோமாபுரி நாடுகளுக்குச் சென்று அங்கே இருக்கும் சிலைகளைப் பார்த்தால் எலும்பே இல்லாமல் வழுவழு என்று மொழமொழவென்று இருக்கும். எந்தச் சிலையுமே உணர்வுகள் தெரிகிறாற் போல் கண் கருவிழி தீட்டப்பட்டு, நம்மைப் பார்ப்பதுபோல் இருக்காது. அதன் கண்கள் பார்ப்பதுபோல, இதழ்கள் சிரிப்பது போல உணர்வைக் காட்டுவது போல இருக்காது.

ஆனால் தமிழ்நாட்டுச் சிலைகளை நின்று நிதானமாகக் கவனித்தால் பல ஆச்சரியங்கள் நமக்குத் தோன்றும். கோபுரங்களில் வடிக்கப்பட்டிருக்கின்ற சிற்பங்களாகட்டும், ஆலயங்களில் வைக்கப்பட்டுள்ள தெய்வச் சிலைகளாகட்டும் - எல்லாரும் ஏதாவது ஓர் ஆயுதம் வைத்திருக்கிறார்கள், பல வகை ஆபரணங்களை அணிந்திருக்கிறார்கள்.

பல ஆடல் முறைகளிலும் உருவங்களிலுமாக தெய்வச் சிலைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன... இந்தச் சிலைகளில் இவ்வளவு அழகான ஆடையை வர்ணித்து அந்தச் சிலையை வடித்திருக்கிறான் என்றால் அதற்கு எத்தனை காலத்திற்கு முன்பு இந்த நெசவுத் தொழில் இந்தத் தமிழ் நாட்டில் உச்சநிலை எட்டியிருக்கவேண்டும்?... மண்ணை அகழ்ந்து அதை எடுத்துப் பொன்னாக உருக்கி, உருக்கிய பொன்னை நகையாக வடித்து ஆபரணமாக மாட்டக் கூடிய ஒரு கலையைக் கற்றிருக்கவேண்டுமானால் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலோகத்தைக் கையாள ஆபரணமாகச் செய்ய இந்தத் தமிழகம் கற்றிருக்க வேண்டும்.

இது கல்சொல்லும் கதைதானே! வரலாற்றை யல்லவா அச்சிலைகள் சொல்லுகின்றன!

தில்லை நடராசர் நடனமாடும் சிலையில் கால் தசைகள் என்ன வகையில் நெளிந்து இருக்குமோ அதனை அவ்வாறாகவே சிற்பி செய்திருக்கிறான் என்பதைத் தமது நண்பர் உதவியுடன் தெரிந்து விதந்து போற்றுகிறார்.

ஆவுடையார்கோவிலில் காணப்படும் சிலைகள் கதை சொல்கின்றன. வரலாற்றைச் சொல்கின்றன. சிவபெருமானும் பார்வதியும் பக்தன் ஒருவனுக்கு உதவி செய்ய குறவன் குறத்தி வேடத்தில் வருகிறார்கள். இந்தக் காட்சி சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. அச்சிலையை வருணிக்கிறார் தா.பா.அவருடைய மொழியிலேயே அதனைச் சொன்னால் தான் சிறப்பாக இருக்கும்.

“பார்வதியைக் குறத்தியா காட்டணும். குறத்தின்னா வாயில வெற்றிலையைப் போட்டிருக்கணும். குறத்தி வெற்றிலையைச் சுவைக்கிற உணர்வு நிலைக்கேற்ப நாக்கைச் சுழற்றி பற்களை ரிதத்தோடு அசைத்து, வெற்றிலையையும் இதர பொருட்களையும் ஒருசேரக் கடித்து அப்படியே வைத்துக் குதப்பினால் அந்த வெற்றிலையின் சிவப்பு உதட்டிலே கொஞ்சம் போல வழியணும்.

கையிலே ஒரு குச்சியை வச்சிகிட்டு ஒரு கூடையை வச்சிகிட்டு ஸ்டைலா அப்படி ஒரு ஆட்டு ஆட்டணும். மனசை மயக்குற மாதிரி, ஆசையும் நாணமும் கலந்து குறும்புத்தனமா ஒரு சிரிப்பு சிரிக்கணும். அப்போ அதெல்லாம் சரியாகச் செய்கிறாளான்னு சிவபெருமான் பார்க்கணும். இத்தனையும் அதற்குள்ளே சிலையா வரணும். இதுக்கு மேல நான் வர்ணிக்க மாட்டேன். நீங்க போய்ப் பாருங்க”.

கருணாமிர்த சாகரம் என்ற புத்தகத்தில் இராவ் சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் ஆவுடையார்கோவில் பற்றிக் கூறுவது இங்குக் குறிப்பிடத்தக்கது. கோவில் சிறியதாக இருந்தாலும் தமிழர் வரலாற்றைச் சொல்லும் கோவில் இது என்பது அவர் கருத்து.

தமிழனின் சிற்பக்கலை பேசும் செய்தியைத் தோழர் தா.பா. நெல்லை கிருஷ்ணாபுரத்தில் காணப்படும் சிலை ஒன்றைக் கொண்டு மேலும் விளக்குகிறார். “தமிழ்நாட்டு இளவரசியை இலங்கை நாட்டு இளவரசன் ஒருவன் தூக்கிக் கொண்டு ஓடுகிறான். குதிரையில் அவனைத் துரத்திக் கொண்டு போய்த் தமிழ்நாட்டு இளைஞன் வேலால் குத்துகிறான். இதனைச் சிற்பி வருணிக்கிறான். இவன் வேலால் குத்துகிற இடத்திலிருந்து, அந்தச் சிலையிலிருந்து ரத்தம் வடிகின்றது. செந்நிற ரத்தம் வடிகிறது. குத்துப் பட்டதால் அந்தச் சதை காயப்பட்டுக்காயம் தனித்துத் தெரியுமல்லவா? அதுவும் இருக்கிறது. நான் போய் விரலால் தொட்டுப் பார்த்தேன். இதில் ஏதாவது பெயின்ட் அடித்திருக்கிறார்களா? நம்ம ஆளுங்க ஏதாவது சாயம் பூசியிருக்காங்களா? இயற்கையாக அப்படி ஒரு கல்லைத் தேடிக் கண்டுபிடித்து வடித்திருக்கலாம்".

தற்போது கிருஷ்ணாபுரத்தில் சிலைகளுக்கெல்லாம் கறுப்புச் சாயம் பூசிவிட்டார்கள். தோழர் தா.பா. வியந்த சிலையின் நுணுக்கத்தை நாம் இப்போது பார்க்க இயலாது.

கல் சொல்லும் கதை இதுதான்

கம்பூச்சிய நாட்டில் புதைந்து போன நகரம் ஒன்றை மீட்டெடுத்திருக்கிறார்கள். அங்கோர் வாட் என்பது அந்நகரம். அகன்ற தெருக்கள். 20 கிலோ மீட்டர் சுற்றளவு. நடுவிலே ஒரு பெரிய கோவில். கோவில் முழுதும் சிற்பங்கள். பெரிய பாலம். இந்நகரை உருவாக்கியவர்கள் தமிழர்கள்.

இந்தச் செய்தியைத் தோழர் தா.பா. விரிவாக விவரித்துவிட்டுக் கடல் கோள் பற்றியும் கடலில் மூழ்கிய நகரங்கள் குறித்தும் விவரிக்கிறார். தமிழகத்தின் கட்டடக் கலைக்கு அவை சான்று பகர்கின்றன என்பதை ஆதாரங்களோடு நிறுவுகிறார். மாக்கடல் மர்மங்கள் என்ற நூலிலிருந்து அச் செய்திகளை அவர் எடுத்துக் கூறுகிறார்.

கடல்கோள் குறித்தும் கடலில் புதையுண்ட நமது நகரங்கள் குறித்தும் விவரிக்கும் பல நூல்கள் வந்திருக்கின்றன. தோழர் தா.பா.வின் உரையைக் கேட்ட போது ஆபிரகாம் பண்டிதர்‘கருணாமிர்த சாகரம்’ நூலில் ஜலப்பிரளயம் பற்றி விரிவாகக் கூறுகிறார்.

அவருடைய பேச்சைக் கேட்கும்போது பரந்துபட்ட புத்தக அறிவும் விவாதக் கூர்மையும் ஒருசேர மிளிரக் காணலாம். தோழர் தா.பாண்டியனின் பேச்சுக்களில் ஒன்று மட்டுமே இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய எல்லா உரைகளும் எழுத்துக்களும் தமிழகத்தில் பெரும் தாக்கங்களை விளைவித்தவை. அவருடைய நாக்கு ஓய்ந்து விட்டது. ஆனாலும் அவருடைய பணிகள் காலத்தால் அழியாதவை. நம் நெஞ்சங்களில் என்றும் அவர் வாழ்வார். அவருக்குப் புகழஞ்சலி.

- நா.இராமச்சந்திரன்