சங்க இலக்கியங்கள் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆகவே சங்க இலக்கியங்களில் உளவியல் பாங்கு அதிகம் காணப்படுகின்றன. வார்த்தைகளை அதிகம் உபயோகப் படுத்த முடியாத நிலையில் தன்னிரக்க உணர்ச்சியும் அதிகமானவுடன் தலைவி தன்னுடைய நிலையினை எண்ணி வருந்தி சத்திமிட்டு கத்துகின்றாள். சங்க இலக்கியத் தலைவிகள் பேசுவதற்குக் கூட வரைமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன. குழந்தைப் பருவத்தில் மகிழ்ந்து தெருவில் விளையாடும் சிறுமியாக இருந்து, பின்னர் தன்னுடைய விருப்பம் போலவோ அல்லது தன்னுடைய பெற்றோரின் விருப்பத்தின் பேரிலோ திருமணமானது நடைபெறுகின்றது. திருமணத்திற்குப் பிறகு பொறுப்புள்ள குடும்பத் தலைவியாகவே மாறுகின்றாள். தலைவன் குடும்பத்தின் நல்லொழுக்கங்களைப் போற்றி பின்பற்றி நடக்கின்றாள். தீயொழுக்கங்கள் ஏதேனும் இருப்பின் அதனைப் பிறருக்குக் காட்ட விரும்பாதவளாகவும், தன்னுடைய இல்லத்தில் நடப்பவைகளைப் பிறர் அறியா வண்ணமும் இல்லற ஒழுக்கமுடன் திகழ்கின்றாள். பிள்ளைப் பேற்றிற்குப் பின்னர் தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றாள். வயது முதிர்ந்த பின்பும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து மறைகின்றாள். இவ்வாறாகத் தலைவியானவள் தனக்காக மட்டும் வாழாமல் தன்னைச் சார்ந்தவர்களுக்காக வாழ்கின்ற நிலையினைப் பற்றி காணலாம்.சங்க காலப் பெண்களின் இளமைப் பருவம்
பெண் குழந்தையாக இருப்பினும் ஆண் பிள்ளைகளைப் போலவே தைரியத்துடன் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப் படுகின்றாள். அப்பொழுது கட்டுப்பாடுகள் எதுவும் போடப் படுவதில்லை. தன்னுடைய வயதினை ஒத்த சிறுமிகளுடன் இணைந்து அந்தந்த நிலப்பகுதிக்குரிய விளையாட்டுக்களை விளையாடுகின்றாள்.
குறிஞ்சி நிலத் தலைவி தினைப்புனத்தினைக் காவல் காப்பதற்குத் தோழிகளுடன் செல்கின்றாள். அதன் அருகிலுள்ள சுனைகளிலோ அல்லது அருவிகளிலோ விளையாடி மகழ்கின்றாள். பின்னர் அங்குக் கிடைக்கின்ற பூக்களையும், தழைகளையும் எடுத்து ஆடைகளாகக் கட்டிக் கொள்கின்றாள் என்பதனைக் குறிஞ்சிப் பாட்டு என்னும் நூலின் மூலம் கபிலர் விளக்கிக் கூறியுள்ளார்.
முல்லை நிலத்தின் தொழில் ஆநிரைகளைப் பாதுகாப்பது என்பதாகும். அதனால் முல்லை நிலத் தலைவியானாவளுக்கு அவள் பிறக்கின்ற பொழுது இளங்காளையும் கொண்டு வரப்படுகின்றது. அக்காளையினை வளர்த்து அதனை அடக்குபவரைத் திருமணம் செய்வேன் என்று சபதம் மேற்கொள்பவளாகக் ஒருங்கு விளையாட அவ்வழி வந்த” (கலித்தொகை -111), மற்றும் குறுந்தொகை, நற்றிணை, முல்லைப் பாட்டு போன்ற நூல்களில் காட்டப் படுகின்றாள்.
முதன்முதலில் விளையாட்டுக்கள் மருதநிலத்தில் தான் தோன்றின. நிலங்களில் வருகின்ற இலாபத்தில் இன்பமான வாழ்க்கையினை வாழ்ந்தவர்கள் மருத நில மக்கள். தங்களுடைய பொழுதினைப் போக்குவதற்காக சொல் விளையாட்டுக்கள் நடத்தினர். மருத நிலத் தலைவியானவள் கூட்டாஞ் சோறு சமைத்து தெருக்களில் விளையாடுபவளாகவும், சொல் விளையாட்டுக்கள் விளையாடுபவளாகவும் இருக்கின்றாள் என்பதனை அக இலக்கியப் பாடல்கள் பறைசாற்றுகின்றன.
கடல் சார்ந்த பகுதியாகிய நெய்தல் நிலத் தலைவி மீன்களைப் பிடித்தும், உப்பினை விற்றும் தங்களுக்குத் தேவையான வருமானத்தை ஈட்டிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், கடறகரையோரப் பகுதிகளில் உள்ள நிலப்பரப்புகளில் புன்னைக் காய்களை வைத்து விளையாடி மறந்த விதையொன்று மரமாகி நிற்கின்றது. அம்மரத்தின் கீழிருந்து தங்களுடைய பொழுதினைப் போக்கியுள்ளனர். அதனைக் கண்ட தலைவியின் தாய், அது உன்னுடைய தமக்கை என்று கூறுவதாகப் பாடல் அமைக்கப் பட்டுள்ளது.
பாலை நிலத் தெய்வமாக் கொற்றவை திகழ்கின்றாள். வெப்பமும், குளிரும் அதிகமாகத் தாக்கும் பகுதியாக விளங்கும் பாலை நிலத்தில் மனிதர்களின் நடமாட்டம் குறைவாகவே காணப் படும். அப்பகுதி மக்கள் வாழக் கூடிய தன்மையற்றதாக விளங்குகின்றது. கொடிய விலங்குகளும், பறவைகளும் மட்டும் திரிகின்ற இடமாக விளங்குவதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. பாலைத்திணை பற்றிய பாடல்கள் மட்டும் பிரிவினை உணர்த்திக் காட்டப் படுகின்றன. அங்குள்ள தலைவி பற்றி குறிப்புகள் காட்டப் படுவதில்லை.
பருவமடைந்த தலைவி
தலைவியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய பருவம் பருவமடைந்த பருவமாகும். எந்த இடத்திற்கும் தனியாகச் சென்று வருகின்ற நிலையானது மாறி துணையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் நிரம்பியதாகக் காணப்படுகின்றது. தோழிகளுடன் இணைந்து சென்று வருகின்றாள் என்பதனை மணிமேகலையின் மூலமாக அறிந்துக் கொள்ள முடிகின்றது. காவல் காப்பற்காகவோ அல்லது வேலையின் காரணமாகவோ, விளையாடுவதற்கோ, ஆநிரைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லும் பொழுதோ தலைவனைக் காண்கின்றாள். தன் மனமொத்த காரணத்தினால் தலைவனின் மேல் அன்பு செலுத்துகின்றாள். தோழியே, அவர்களுக்குத் துணை இருந்து உதவுகின்றாள். தலைவியின் நடவடிக்கைகளில் மாற்றத்தினைக் கண்ட செவிலித்தாயானவள். அதிகமான கட்டுப்பாடுகளைத் தலைவிக்கு விதிக்கின்றாள்.
அத்தகைய சூழலில் தலைவனைக் காணாத தலைவியின் உள்ளமானது கூக்குரலிட்டு அழுகின்றது. உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக உடலிலும் மாற்றம் ஏற்படுகின்றது. உடல் மெலிந்து, நெற்றியில் பசலையுடன் காணப்படுகின்றாள். அவளுக்கு ஏற்பட்டுள்ளது உள்ளநோய் என்பதனை அறியாத நற்றாயும், செவிலித்தாயும் வெறியாட்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்கின்றனர். மேலும், குறி கேட்டல் போன்றவையும் செய்கின்றனர். அந்நிகழ்வுகளின் பொழுது தலைவியின் துன்பத்தைக் கண்ட தோழி தலைவியின் எண்ணத்தினை இலைமறைக் காயாக வெளிப்படுத்துகின்றாள். தலைவியின் குடும்பத்திற்கு ஏற்றவனாகத் தலைவன் விளங்கினால் அவனை ஏற்றுக் கொள்கின்றனர். தங்களின் குடும்பத்திற்கு உகந்தவனாக இல்லாத போது அவனை மறுக்கின்றனர். அந்நிலையில் தலைவி ஏதேனுமொரு முடிவினை ஏற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றாள். தலைவனையும் விட்டுக் கொடுக்க முடியாமல், தன்னுடைய தாய், தந்தையையும் எண்ணிக் கலங்குகின்றாள். உடன்போக்கு செல்வது குறித்து முடிவாகின்றது. இரவில் தன்னுடைய இல்லத்திலிருந்து செல்ல எண்ணுகின்ற போது தன்னுடைய சலங்கையினைக் கழட்டி வைத்து விட்டு கிளம்புகின்றாள். ஏனெனில் சலங்கை சத்தம் யாரையும் எழுப்பி விடக் கூடாது என்றெண்ணத்தினாலும், சத்தம் கேட்டு எழுந்தால் தன்னுடைய உடன்போக்கு தடைபடக் கூடும் என்றும் எண்ணுகின்றாள். சலங்கை கழட்டுதல் என்னும் விழா நடைபெறாமல் தன்னுடைய பெற்றோர் அணிவித்த சலங்கையைக் கழட்டுவதனை எண்ணி கலங்கித் தன்னுடைய பெற்றோர் தன்னைப் புரிந்து கொள்வார்கள் என்ற எண்ணத்துடன் தலைவனுடன் செல்கின்றாள். இவ்வாறு செல்வது மட்டுமல்லாமல் தந்தையின் எண்ணத்தினை நிறைவேற்றுபவளாகவும் திகழ்கின்றாள்.
தாய், தந்தையின் நிழலில் தவச்செல்வியாக இருந்து தன்னைக் காத்து நிற்கிற்வளாகவும் திகழ்கின்றாள். தன்னைப் பெண் கேட்டு வருகின்றவர்களைத் ஐயன் (தந்தை) மறுக்கின்ற போது தந்தைக்கு உடன்பட்டவளாகவும் இருக்கின்றாள் என்பதனை,
“வேட்ட வேந்தனும் வெஞ் சினத்தனே” (புறநானூறு – 336) என்ற புறநானூற்றுப் பாடல் மகட்பாற் காஞ்சி திணையினைப் பற்றி கூறுகின்றது. இதற்கு முன்னோடியாகத் தொல்காப்பியமும் மகட்பாற் காஞ்சி பற்றி எடுத்துரைத்துள்ளது. இவ்வாறாகப் பெண்களின் பருவமடைந்த தலைவியின் வாழ்க்கை செல்கின்றது.
இல்லறத் தலைவியின் கடமைகள்
சிறுவயதிலும், இளமைப்பருவத்திலும் மகிழ்ச்சி மட்டும் தனக்குரியதாகத் தலைவி வாழ்ந்தவள். தலைவனுடன் இணைந்து இல்லற வாழ்க்கை மேற்கொள்கின்ற பொழுது எதிர்க் கொள்கின்ற சிக்கல்களும், இன்பத்துன்பங்களும் அவளைப் பக்குவப்படுத்துகின்றன. தன்னுடைய தந்தை இல்லத்தில் வறுமை என்பதனை அறியாதவளாக விளங்குகின்றாள். கணவனின் இல்லம் வறுமையில் இருக்கின்ற பொழுது தன்னுடைய தந்தையிடம் சென்று பொருள் கேட்பதனை விரும்பாமல் இருக்கின்றாள். தந்தையாக அவளுடைய நிலை அறிந்து உதவுவதற்கு முன் வருகின்ற போது அதனை மறுத்தும் விடுகின்றாள். இல்லறக் கடமையில் சிறந்தவொன்று விருந்தோம்பலாகும். தன் இல்லத்திற்குப் புதிதாக வருகின்றவர்களை உபசரித்து அவர்கள் உணவு உண்ட பின்னர் தான் உண்டு வாழ்கின்ற முறையினைக் கடைப்பிடிக்கின்றாள்.
“அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும்” (சிலப்பதிகாரம் – கொலைக்களக் காதை – 73-75)
இவை இல்லறப் பெண்களின் தலையாயக் கடமையாகும் என்பதனைச் சிலப்பதிகாரம் விளக்கி உரைத்துள்ளது.
தாயின் பொறுப்பும் வளர்ப்பும்
தன்னுடைய குழந்தையை எண்ணி தன்னுடைய வாழ்வினை அக்குழந்தைக்காக அர்ப்பணிப்பவளாக விளங்குகின்றாள். குழந்தைக்குப் பாலூட்டி, சோறூட்டி மகிழ்கின்றாள். விளையாடுகின்ற அழகினைக் கண்டு தானும் ஆனந்தமடைகின்றாள். வீரமான ஆண்மகனாகத் திகழ வேண்டுமென எண்ணுகின்றாள். தன்னுடைய மகன் வெளியில் சென்றிருப்பதனைக் கூடப் பெருமையுடன் பேசுகின்றாள். “புலி சேர்ந்து போகிய கல்அளைப் போல” (புறநானூறு – 86), புறநானூறு 277, 278, 279,295, 310 போன்ற பாடல்களும்,
“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகளைச்
சான்றோன் எனக்கேட்டத் தாய்” (திருக்குறள் – 69)
பாடல்களும் வீரமாகப் பிள்ளையினைத் தாய் வளர்ப்பதற்குச் சான்றாகத் திகழ்கின்றன. வீரத்தில் மட்டுமல்லாமல், சான்றோனாக வளர்க்கவும் விரும்புகின்றாள். சிறுகுழந்தையாக இருக்கும் போது தாய் சிறு கோலைக் கொண்டு மிரட்டி தன் குழந்தைக்குப் பாலூட்டியதை எண்ணியும், பின் தன்னுடைய மகன் களிறினை வேல் கொண்டு எதிர்த்து நின்றதை எண்ணிப் பெருமிதம் கொள்கின்றாள். தன் தலைவனின் மேலுள்ள கோபத்தினைக் கூட தன் குழந்தைக்காக மறந்து ஏற்றுக் கொண்டு வாழ்கின்றாள். இவ்வாறு குழந்தை வளர்ப்பில் சிறந்தவளாகப் போற்றப்படுகின்றாள்.
பெண்ணின் கடமையினை நிறைவேற்றி சிறந்த வாழ்வினை வாழுகின்ற பெண்ணே அனைத்திலும் உயர்ந்தவள் என்பது உளவியலும் கூறுகின்ற கருத்தாகும்.
முதுமையில் காக்கப்படும் பண்பு
தலைவியின் பெருமை முதுமையிலும் போற்றுதலுக்குரியதாக விளங்குகின்றது. திருமணம் முடிந்த தன்னுடைய பிள்ளைகள் இல்லறம் நடத்துகின்ற அழகினைக் கண்டு மகிழ்கின்றாள். தனக்கான வாழ்வினை விட மற்றவர்களுக்காக வாழ்கின்ற வாழ்க்கை முறையினை வாழ்ந்து காட்டுகின்றாள். தன் வீட்டிற்கு வந்த பெண்ணிற்குக் குடும்பத்தைவழிநடத்தும் முறையினை எடுத்துரைக்கின்றாள். தன் இல்லத்தின் பெருமையினைக் கூறி அதன் வழி நடப்பதற்குத் துணையாக நிற்கின்றாள். அவர்கள் இல்லறம் நடத்துகின்ற பாங்கினைத் தூர இருந்து கண்டு களிக்கின்றாள். வாழ்வின் நிலையில் தன் வாழ்வின் பங்கினை விட பிறருடைய வாழ்வைப் பெரிதாக எண்ணி வாழ்கின்ற வாழ்வாகப் பெண்ணின் வாழ்வானது திகழ்கின்றது. பெண்ணின் பெருமையைப் பறைசாற்றி நிற்கின்ற தன்மை இனிவரும் காலத்திலும் பெண்கள் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டியதாகும். நம் பண்பாட்டின் பெருமையினைப் பெண்கள் தான் வழிநடத்துகின்றாள். உளவியலின் மூலமாகவும், தங்களுடைய செயல்பாட்டின் மூலமாகவும் என்பதனைப் பற்றி அறிய உதவுகின்றது.
முடிவுரை
பிறப்பு முதல் இறப்பு வரை தன்னுடைய சுகதுக்கங்களை விட பிறரின் வாழ்வினை எண்ணுகின்றவளாகப் பெண் திகழ்கின்றாள். தன்னுடைய உள்ளத்தில் எழுகின்ற கருத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதை விட மற்றவர்களின் வாழ்வினை முன்னேற்றுவதே வாழ்வின் இலட்சியம் என்பதாக எண்ணங் கொண்டு விளங்குகின்றாள். அறிவில் சிறந்து விளங்கி தன்னுடைய இல்லத்தினையும், விருந்தினர்களைப் போற்றுகின்றாள். இதுவே பெண்ணின் வாழ்வாகச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
சான்றாதாரங்கள்
1. சங்க இலக்கியம் மூலமும் உரையும் (2012), ஆசிரியர் குழு, சாரதா பதிப்பகம், (ஐந்து தொகுதிகள்) எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.
2. சிலப்பதிகாரம் (2005), புலியூர் கேசிகன், கௌரா பதிப்பகம், சென்னை.
3. தொல்காப்பியம், பொருளதிகாரம் (2014), மின்னூலகம், மாணவர் பதிப்பகம், சென்னை.
- பொ. அபிராமி, பகுதி முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, காவேரி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி.
& முனைவர் ச. இராமலட்சுமி, துணை முதல்வர் மற்றும் துறைத்தலைவர், தமிழாய்வுத்துறை, காவேரி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி.