சமீபத்தில் வாசித்த சிறுகதைத் தொகுப்புகளில் என்னை பாதித்த சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக அழகிய பெரியவனின் "அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்" தொகுப்பு அமைந்திருந்தது. அழகிய பெரியவனின் கவிதைகள் சமூகத்தை அழகியலுடனும், வீரியமிக்க சொல்லோடு செயல்படும் கவிதைத் தன்மையில் அமைந்திருப்பதை கண்டிருக்கிறேன். அவரது சிறுகதைகள் மொழி வழியாக எனக்கு அதிக நெருக்கத்தோடு அமைந்திருந்தது. அகத்திலும், புறத்திலும் கூட என்றும் சொல்லலாம்.

azhakiya periyavan short storiesஇத்தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சிறுகதைகள் தனித்தன்மையோடும், ஒவ்வொரு முறையும் வாசிக்கிற போதும் குத்தீட்டி கொண்டு குத்துவதைப் போல ஏதோவொன்று குத்திக் கொண்டே, யாரோ ஒருவரையோ அல்லது சமகாலத்தில் நாம் சந்தித்து வருகிற சமூகம் குறித்தான நாம் கொண்டிருக்கும் உளவியல் பிரச்சனைகள் குறித்தோ உள்வயமான கேள்வி யொன்றை அடுக்கிக் கொண்டே போவதை உணர முடிந்தது.

ஒரு படைப்பு ஒரு வாசகனை ஏதோ ஒரு காரணத்திற்கு அவனை, அவனுடைய மனத்துடன் போராட்டம் நடத்த தயார் செய்யவதெனின் அப்படைப்பு பிரக்ஞைப் பூர்வமாக தொடர் வினையை ஏற்படுத்துவதில், அதில் வெற்றியடையச் செய்வதில் அப்படைப்பு முனைப்பு காட்டுமெனின் அப்படைப்பானது எழுத்தானின் சமகாலம், நிகழ் காலத்தைத் தாண்டி நிலைநிற்கும் என்பதை நாம் தமிழில் பல சிறுகதைகளை மாறிவரும் காலகட்டத்திற்கு ஏற்ப கட்டுடைத்தோ அல்லது அது குறித்த விமர்சனத்தையோ, குறைந்த பட்சம் உரையாடலையோ ஏற்படுத்துவதை
காண்கிறோம். அழகிய பெரியவனின் கடந்த இருபத்தைந்து ஆண்டு காலத்தில் எழுத்துலகில் இலக்கிய வகைமைகளில் கவிதை கட்டுரை நாவல் என தொடர்ந்து எழுதியும் வருகிறார். அவரது கடந்த காலம், நிகழ்காலம் குறித்த இலக்கிய ஆக்கத்திற்கு நிலையான ஒரு இடத்தைப் பெற்றுத் தருவதாக இத்தொகுப்பு அமைந்திருப்பதையும், தமிழ்ச் சமூகம் கொண்டாட வேண்டிய தருணம் இது என்று வேண்டிக் கொள்ளத்தான் வேண்டும் போலிருக்கிறது.

இத்தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ள பதினேழு சிறுகதைகளில் பெரும்பாலான சிறுகதைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் வாழ்வியலையும், சமூகத்தின் நிலையையும், அம்மக்களின் மீது நடத்தப்படுகின்ற எல்லா வகையிலான சுரண்டல்களையும், அபத்தங்களையும் வெளிக்கொணரவும் செய்கிறது.

அம்மாவின் நினைவுகளை மீட்டல்:

மனித மனத்தின் அடியாழங்களில் ஒளிந்து கொண்டிருக்கின்ற உணர்ச்சிகள் எப்போதும் ஒரு மனிதனால் சர்வசாதாரணமாய் யாராலும் பயன்படுத்த முடிவதில்லை. அவ்வுணர்ச்சிகள் ஏதோவொரு திடுக்கிடும் தன்மையிலான சம்பவங்களின் மூலம் தன்னை அறியாமலே தன்னுள்ளிருந்து எவ்வித தடங்களின்றி வெளிப்படும். அது அம்மனிதனின் உடல், உளவியல் சார்ந்து தொடர்ந்து உறுப்போடப்பட்டு மீண்டும் அதீத மனவெளிப்பாட்டுக்காக காத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் வெடித்துவிடும். அது பெரும்பாலும் இழப்புகளைச் சந்திக்கிற போது உடைந்த பானையைப் போல மனத்துள் இருக்கும் உணர்ச்சிகள் பொலவென கொட்டித் தீர்க்கப்பட்டுவிடும். பின் அவ்விழப்பின் ஞாபகம் பிரதி பிம்பமாய் அவ்வப்போது நிழலாடும் போது மீண்டும் மனத்தின் அவலம் சோகம் வெளிப்பாட்டுடன் நடந்தேறும். இது உளவியல் ரீதியில் எல்லோருக்கும் ஏற்படுகிற சாதாரண நிகழ்வு என உளவியல் ஆய்வில் தெரிவிக்கின்றனர்.

அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார் கதை அத்தகை தன்மையை யாவருக்கும் அடியாழத்தில் இருந்து வீறிட்டெழச் செய்யும் தன்மையில் அமைந்திருக்கிறது. இக்கதை தாய்க்கும் அவளது குழந்தைக்கும் இடையிலான பாசம் பற்றிய கதையாக இருந்தாலும், இக்கதையின் போக்கு வைரம் அம்மாளின் தனித்த வாழக்கையை மட்டும் குறிப்பதாக அமைந்திருக்க வில்லை. தன் தாயின் இறுதிச் சடங்கு நடப்பதற்கு முன்னதாக அவளைக் குறித்தான பிரக்ஞைப் பூர்வமான நினைவுளை மீட்டு அதன் மூலம் வைரம் அம்மாளின் வாழ்க்கை, தனது குழந்தைகளை ஆளாக்கும் முயற்சியில் சந்திக்கும் கொடுமைகள் பற்றிய நினைவுகள் ஒரு புறம் கதையோட்டமாக அமைந்திருக்கிறது.

எனினும், அதன் இறுதிப் பகுதிகள் காலங்காலமாக நடுத்தர, கீழ் நடுத்தர மக்கள் எதிர்கொள்கிற சமூக உரிமையை பெற வைரம் அம்மாளின் மரணமும் ஒரு வகைக காரணமாகவும் அமைகிறது. இடையிடையே தன் தாயின் மரணச் செய்தியறிந்து வரும் துக்கம் விசாரிப்பாளர்கள் அருகு சென்று தனது துயரையும், இரண்டொரு வார்த்தையில் தாய் குறித்த ஞாபகங்களோடும் கதை நகர்ந்து கொண்டேயிருக்கிறது. இச்சொல் முறை புதிது இல்லை என்றாலும் தடையற்று நீர்ச்சலனமாய் கதை நடக்கிறது.

அம்மாவைப் பற்றிய குறிப்புகள் இடையிடையே சொல்லப்படுவதும், அதற்கு அவள் செய்த தியாகங்களும், தந்தையால் புறக்கணிக்கப்பட்டும், உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டும் கூட தன்னுடைய வாழும் உரிமையை தனது சகோதர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு குழந்தைகளை வளர்க்க படும் துயரங்களும் மீண்டும் நினைவுகளாக சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது. இறுதியில் தன் தாயின் இறுதிச் சடங்குள் குறித்த செயல்கள் ஒரு சமூகப் பார்வையோடும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக சமத்துவத்துக்கான படியை நோக்கிச் செலுத்தும் பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

தனது அம்மாவினுடைய மரணத்திற்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்பதற்காக, காலம் காலமாக ஊர் விதித்திருக்கும் பழமையை மீறி மேலத் தெருவழியாகக் கொண்டுசெல்ல வேண்டும் என்று மகன் ஆசைப்படுவதும் அதனை அரசாங்க வழிமுறைகள் கொண்டு நிறைவேற்றச் செய்வதும் நடக்கிறது. இறுதியில் தனது அம்மாவைப் பற்றிய பிம்பத்தை உருவாக்கிக் கொள்கிறார் " தோழர் மார்க்சின் சவக்குழி முன்பு நின்று கொண்டு தோழர் எங்கல்ஸ் 'மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்தக் கொண்டார்' என்று கூறுவது போல, தன் தாயின் மரணத்தை, தனக்காக வாழ்நாளெல்லாம் உழைத்த அத்தாயை போற்றுகிறார் "அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்" என்று.

கடந்த பத்தாண்டு காலத்தில் எழுதப்பட்ட சிறந்த கதை என்ற பட்டியலில் இக்கதை இடம்பெற வேண்டிய கதையாகவும், அழகிய பெரியவனின் எழுத்துலகில் குறிப்பிடத் தகுந்த சிறந்த கதையாகவும் அமைந்துவிட்டது.

தன்னுள்ளே சஞ்சரிப்பவள்:

மற்றொரு கதையாக "தன்னுள்ளே சஞ்சரிப்பவள்" கதை. இதுவரை நாம் தீப்பெட்டித் தொழிற்சாலை என்றாலே பெரும்பாலும் அது கரிசல் பகுதியைச் சார்ந்த கதையாகத்தான் இருந்து வந்துள்ளது. இக்கதையும் தீப்பெட்டித் தொழிற்சாலை ஊழியர்கள், அங்கு நடக்கும் எதார்த்தங்களோடும் கதையின் போக்கு அமைந்திருக்கிறது.

கிழக்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்களில் தீப்பெட்டித் தொழில் பிரபலம். அங்கு இயங்கும் தொழிற்சாலையொன்றில் நடைபெறும் சம்பவங்கள் கதையாக உருவெடுத்துள்ளது. இக்கதையில் பதிவு செய்யப்பட்டுள்ள பாத்திரங்களான லோகு, சண்முகம் ஆகியோரின் காதலும் சொல்லப்படுகிறது. மற்றொரு பாத்திரமான ஏகவள்ளியும் அவள் ஏன் மதமாற்றம் செய்யப்பட்டாள் என்ற காரணமும் பின்னால் தெரியவருகிறது.

இக்கதையில் கீழ்நடுத்தர மக்களின், தொழிலாளர்களின் மீது முதலாளிகள் நடத்தும் உழைப்புச் சுரண்டல்கள் அவ்வளவாக பதிவு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. எனினும் கதை வேறொரு தளத்தில் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. எதிர்பாரத தருணமொன்றில் ஏற்படும் விபத்தும் அதனால் விளையும் சம்பவங்களின் மூலம் அவைகள் பதிவு செய்பட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இன்றும் பட்டாசுத் தொழிற்சாலைகளில் நடக்கும் விபத்துகளுக்கு உரிய இழப்பீடுகள்
தரப்படுகின்றனவா என்ற கேள்வி இக்கதை மூலமாக எழுகிறது.

பெண்ணின் உணர்வும் உளச் சிக்கலும்:

சமூகத்தின் பொதுப் புத்தியில் ஆழமாக தோண்டி புதைக்கப்பட்ட வேர் ஒவ்வொரு காலகட்டத்திலும் முளைத்துக் கொண்டு வெளியே வருகிறது. பெண் உரிமை குறித்த கதைகள் பல எழுதப்பட்டும் இருக்கின்றன. இதுவும் பெண்ணைப் பற்றி அவளது வாழ்வை குறித்த கதைதான். என்றாலும் அவளின் குற்றவுணர்ச்சியை, அல்லது குற்றவுணர்ச்சிக்கு காரணமானவள் என எண்ணிப் புழுகிப் போகிற பெண்ணின் மன அவஸ்தையை, அவளது திருமண வாழ்க்கை குறித்த கதையாக இருக்கிறது.

மலர்க்கொடியும், அவளது மாமியார் நாகராணி இருவரிடமும் நிகழும் உரையாடல்கள் கவனிக்கும்படி அமைந்திருக்கிறது. தனது இரண்டாவது கணவனான தண்டபானியுடன் சுமூகமான வாழ்க்கை நடத்துவதும், தன்னுடைய முதல் கணவன் உயிருடன் இருக்க ஏன் இரண்டாவதாக வேறொருவனை மணம் செய்து கொள்கிறாள். அதை அவள் ஏன் உறுதியோடு பண்பாட்டை மீறி இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறாள் என்பதற்கான விடையாக கதை முழுதும் மலர்க்கொடியின் உளத்தோடும், போராட்ட சூழ்நிலையையும் கொண்டு பயணிக்கிறது.

முதல் கணவனை கொண்டிருக்கும் ஒரு மனைவிக்கு, தனக்கு ஏன் மற்றொரு கணவன் இருக்கக் கூடாது என்று சிந்திக்கும் உரிமை அவர்களுக்கு மறுத்த சமூகம் தானே இது. பிறகு எப்படி முதல் கணவன் உயிருடன் இருக்கும் பொழுது இரண்டாம் கணவனுடன் வாழ்வதை எச்சமூகம் ஏற்றுக் கொள்ளும். அதை தீர்மாணிக்கும் உரிமைய ஏன் இச்சமூகம் வழங்க மறுக்கிறது? என்ற கேள்வி ஆழ விதைக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

முதல் கணவன் இறந்த பின்னால் அவனுடைய இறுதிச் சடங்கில் பங்கேற்க ஏன் அப்பெண்ணுக்கு உரிமை இல்லையா? "இப்ப என்னா செய்யணும்ற? இப்ப இவ எனக்கு தாலியறுக்கணுமா? இல்ல செத்தவனுக்கு தாலியறுக்கணுமா? அதான் எல்லாம் அப்பவே முடிவுபண்ணிட்சில?" இரண்டாவது கணவன் கேள்வி மலர்க்கொடியின் மீது பிரயோகம் செய்ய வேண்டிய தேவை என்பது, அவளுடைய சுய முடிவை எதிர்க்கும் கருவியாக பயன்படுத்தப் படுகிறது.

பெண்கள் குறித்த சிறுகதைகள் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. ஆயினும் அவைகள் இலக்கியத்தில் மட்டுமேதான் தாக்கம் செலுத்து முடியுமோ என்னவோ? என்று எண்ணம் கூட எழுகிறது. இத்தொகுப்பில் சிறப்பாக வெளிப்பாட்டுடன் எழுதப்பட்ட கதைகளில் ஒன்றாக இருக்கிறது.

இளம் வெயிலாய் ஒரு கதை:

"காட்டுக் கிழங்கு" கதையில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் அழகு எழுத்துகளால் வசீகரம் கொள்கின்றன. மலைத் தேன், காட்டுக் கிழங்கு, பழங்கள், தாணியங்கள், மஞ்சப் புற்கள், மேயும் கௌதாரிகள், துரிஞ்சி மிளார்கள் என கதை முழுக்க மலைப் பகுதி காட்சிபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இக்கதையில் துறுதுறுவென இளம்வெயிலைப் போல துள்ளும் வயதில் முனிரத்தினத்தின் குழந்தைகளான செல்லம்மாள், சபரிவாசன் இருவரும் காட்டில் காடோடியாக அவ்வப்போது தந்தையுடனும், தனித்தும் வருவதாகவும், அவர்கள் அங்கு கிடைக்கும் காட்டுப் பொருட்களை பொறுக்கிக் கொண்டு தங்களது காடுமீதான காதலை பயணமாக மேற்கொண்டு வாழ்கின்றனர். இடையில் தோப்பில் விளைந்த பழங்களைப் பறித்ததில் ஏற்பட்ட மோதலை சொல்லும் கதை.

அதிக சினத்தால் ஏற்பட்டதின் விளைவை சிறுவனான சபரிவாசன் உணர்ந்து கொள்ளாமல் இருப்பது தான் கதையின் போக்கில் அடியாக இருக்கிறது. சபரிவாசனுக்கும், செல்லம்மாளுக்கும் ஏற்பட்ட மோதலில் சபரிவாசன் அதீத சினத்தால் கீழிருக்கும் கல்லை எடுத்து செல்லம்மாள் மீது வீசுகிறான். அவனுடைய கோபம் முழுவதும் அத்துடன் முடிந்து போகிறது. பிறகு அதைப் பற்றி அவன் கவலை கொள்ளவே இல்லை. அன்று மாலை வீட்டிற்கு வரும் செல்லம்மாள் மயங்கி விழுந்து இறந்துவிடுகிறாள்.

பிறகு ஒருநாள் செல்லம்மாள் இறந்ததர்கான காரணம் முனிரத்தினத்திற்கு தெரிய வருகிறது. அப்போது முனிரத்தினத்தின் மனைவி வள்ளிக்கண்ணு குறுக்கிட்டு மகனை காப்பாற்றும் விதமாக தனக்கு எல்லாம் தெரியும் என்று கூறுவதுடன் கதை முடிகிறது.

மிஞ்சின கதை:

இத்தொகுப்பில் வாசிக்க வேண்டிய கதையாக சில உள்ளன. அவற்றில் சாதிய சமூகத்தின் அவலத்தை இரு நண்பர்களின் நட்பின் மூலம் அறைந்தது போல "பிணச்சுற்று" கதை அமைந்துள்ளது. இக்கதை குறித்து தமிழில் விவாதம் நடத்தப்பட வேண்டியது தனி. ஒரு படைப்பு சமூகத்தை பாதிக்கவும் செய்ய வேண்டும் என்பதை இக்கதை மீண்டும் வலியுறுத்துகிறது.

"பின் தொடரும் பெண்" கதையில் கூத்துக் கலைஞர்கள் அன்றாட சோகமயமான வாழ்க்கை குறித்த கதை. இக்கதையில் உத்தியாக பயன்படுத்தப்பட்டுள்ள கேலிகள் கூட மிக கவனமாக பயன்படுத்தப்பட்டுள்ளது போலத் தெரிகிறது. இக்கதை மட்டுமில்லாது இத்தொகுப்பில் உள்ள எல்லாக் கதையிலும் கூத்துக் கலைஞர் குறித்த வாழ்வு அவ்வப்போது பதிவு செய்யப்பட்டுக் கொண்டே வருவதை அவதானிக்கலாம்.

"சாகசத் தாத்தா" கதையும் குறிப்பிடத் தக்க கதையே. தற்காலத்தில் யாரும் வளர்ந்துவிட்ட கிரமாங்களில் குழந்தைகளுக்கு கதை சொல்வதாகத் தெரியவில்லை. அது காலப்போக்கில் ஒவ்வொரு நாளும் மறக்கப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு ஏறக்குறைய இரண்டு தலைமுறைகயையே கடந்து விட்டது போலத் தோன்றுகிறது. இக்கதை குழந்தைகளுக்கு பெரியவர்கள் கதை வழியாக தங்களின், தங்கள் முன்னோர்களின் வாழ்வியலை பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தத் தவறவில்லை.

அழகிய பெரியவனின் இச்சிறுகதைத் தொகுப்பு அவருடைய முந்தைய தொகுப்புகளைக் காட்டிலும் ஆழப் பொருளில், மொழி, சமூகம் பண்பாடு தொடர்பாக பல கோணங்களில் வாசித்தறிய முடிகிறது. குறிப்பிட்டுச் சொல்வதெனில் எல்லாச் சிறுகதைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ள வட்டார வழக்கு மொழிகள், அவற்றின் பொருள்கள், யாவும் வெறும் பதிவுகளாக இல்லாது, இதுவரை தமிழில் கிழக்குத் தொடர்ச்சி மலை மக்களின் வாழ்வை, பதிவு செய்யப்படாத கதைகளை இத்தொகுப்பு கொண்டிருக்கிறது. அதற்கு அழகிய பெரியவனுக்கு நன்றி தெரிவிக்காமல் இருந்தால் உண்மையான வாழ்வியலை பதிவு செய்யும் ஒருவரின் வாழ்வை அர்த்தமற்றது என்று இச்சமூகம் ஆக்கிவிடுமோ என்ற பயமும் வரமாலில்லை.

- இல.பிரகாசம்

Pin It