என் மனைவி பானுமதி அவர்கள் இறந்த (03.01.2025) மறுவாரம் துக்கம் விசாரிக்க வந்த என் ப்ரிய ஸஹிருதயர் புலியூர் முருகேசன் அவர்கள் விசாரித்துவிட்டுச் செல்லும் முன் ‘வட்டாரத்துக் கோடி’ என அவர்கள் எழுதிய புதிய நாவலை என் கையில் கொடுத்துவிட்டு, வாசிக்கும்படி சொல்லிப் போனார். அட்டையைத் திருப்பக் கூட மனமில்லை. என் மனைவி இறந்த துக்கம் அப்படி என்னை எதிலும் இயங்க விடாதபடி கட்டிப் போட்டிருந்தது. நாவலைக் கையில் வைத்துக்கொண்டு பரிதாபமாகப் பார்த்தேன். அப்படிப் பார்க்கவும் ஒரு காரணமிருந்தது. ஏற்கெனவே அவருடைய ‘பாக்களத்தம்மா’வைப் படித்துவிட்டுக் கிறங்கிப் போயிருந்தது நினைவுக்கு வந்தது. நான் படித்த அநேக நாவல்களில் என்னை வசீகரித்த நாவல் ‘பாக்களத்தம்மா.

puliyoor murugesan novelசு. சண்முகசுந்தரத்தின் ‘நாகம்மா’வைப் படித்துவிட்டு எப்படிக் கிறங்கினேனோ, அப்படியொரு கிறக்கம் ‘பாக்களத்தம்மா’விலும். ‘பாக்களத்தமா’வை அப்படி எழுதியவர் ‘வட்டாரத்துக் கோடி’யை எப்படியெல்லாம் எழுதியிருப்பார் என்பதை என்னால் படிக்காமலேயே அனுமானித்துக் கொள்ள முடிந்தது. என்ன செய்வது, எனக்கு நேர்ந்துவிட்ட துக்கம் கண்களை நாவலில் பதிய விடாமல் பண்ணுகிறதே!

‘ஸரஸ்வதி பூஜையும் அதுவுமாய்க் கையில் கிடைத்தால் அது சாமான் மடித்த பேப்பராயிருந்தாலும் படித்துத் தீர்த்துவிட வேண்டுமென்று மனசு பரபரக்கிறது. இன்றைக்கென்று எதுவும் அகப்பட மாட்டேன்கிறதே! இருந்த அவ்வளவு புஸ்தகங்களையும் பூஜையில் வைத்தாயிற்று. படித்த மனம் படிப்பதற்குப் பரபரக்கிறது’. தி. ஜானகிராமன் தன்னுடைய ‘அம்மா வந்தாள்’ நாவலின் முதல் அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே இப்படி, படிப்பதற்கு ஆதங்கப்படும் பாத்திரம் ஒன்றைச் சிருஷ்டித்திருப்பார். அந்தப் பாத்திரம் மாதிரிதான் என் சுபாவமும். படிப்பதில் வெறிகொண்டவன் நான். அது சாமான்கள் எழுதின ரோக்காவாக இருந்தாலும் படித்தால்தான் ஆயாசம் தீரும்.

துக்கம் என்பதும் ஆற்றாமையென்பதும் நமக்கு மட்டும்தானா? உலகத்திலுள்ள அத்தனை பேருக்குமிருக்கிறதே; என்று என்னையே நான் தேற்றிக்கொண்டு ‘வட்டாரத்துக் கோடி’ நாவலுக்கு உதயசங்கர் எழுதியிருக்கும் முன்னுரையை வாசித்ததுமே அளவற்ற மகிழ்ச்சியாயிருந்தது. தேவலாமே! நம் புலியூரார் தமிழுக்கு இந்நாவலின் வழியாக முக்கியப் பங்களிப்பைச் செய்திருக்கின்றாரே என மனதிலிருந்த துக்க ஸாகரங்களையெல்லாம் தூர அகற்றிவிட்டு நாவலை வாசிக்கத் தொடங்கினேன்.

நாவலின் பக்கங்களில் என் மனம் பாயப்பாய அந்தப் பாய்ச்சல் அதிவேகமெடுத்து விட்டது. சும்மா சொல்லக் கூடாது உதயசங்கரை! நாவலுக்குள் தன்னுடைய முழுக்கவனத்தையும் செலுத்தித்தான் அப்படியொரு அற்புதமான முன்னுரையைக் கொடுத்திருக்கிறார் என்று தோன்றியது. இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சொல்லப் போனால் முற்றிலுமாக நாவலில் இயைந்து போய்த்தான் அப்படியொரு முன்னுரையை அவரால் தர முடிந்திருக்கிறது என்று கூடச் சொல்வேன். உதயசங்கர் சொல்வதுபோல் இது சாதனையான நாவல் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. என் பாய்ச்சலைச் சொன்னேனல்லவா! அந்தப் பாய்ச்சலில் நான் கண்ட ஆனந்தங்களும், ஆச்சரியங்களும் இவ்வளவு அவ்வளவென்று சொல்ல முடியாது. என் துக்க ஸாகரங்களெல்லாம் எந்தப் பக்கம் ஓட்டமெடுத்து ஓடிப்போயிற்றென்றே தெரியவில்லை. அவ்வளவுக்குக் கொள்ளை மகிழ்ச்சியாயிருந்தது. முற்றிலுமொரு, நான் காணாத அனுபவித்தறியாத சூழலையும் காட்சிகளையும் தரிசிக்கத் தரிசிக்க ஏற்பட்ட பரமானந்தம் என்று கூடச் சொல்லலாம்.

‘வட்டாரத்துக் கோடி’ என்பது நாவலின் தலைப்பு. இதில் நாம் ‘கோடி’ என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்தோமானால் அது அநேகம் பொருள் தரக் காணலாம். ‘நுனி, புத்தாடை, வளைவு, நூறு நூறாயிரம் அல்லது நூறு லட்சம், கடலுள் செல்லும் தரை முனை, எல்லை, சேனையின் பிற்பகுதி, மூலை எனப் பல அர்த்தங்களாகின்றன. உதாரணமாக, தெருவின் கடைசி எல்லையை ‘தெருக்கோடி’ என்போம். இச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சொல். பொதுவாக நாம் புத்தாடைகளைக் ‘கோடி’ எனச் சொல்வது கிடையாது. அது வழக்கத்திலுமில்லை. அது எப்பொழுது கோடியாகிறதென்றால் இறந்தோர்க்கு அணிவிக்கும்போது மட்டுமே. அது இறந்தவர்க்குக் கடைசியாய்க் கிடைக்கப் பெறுகிற மிகப்பெரிய கௌரவமாகக் கொள்ளப்படுகிறது. இந்தப் புள்ளியைச் சாரமாக வைத்துக்கொண்டு மட்டுமே ஐநூறு ஆண்டுகள் வரலாற்றை ஆவணங்கள் அடிப்படையிலும், கருத்தாக்க ரீதியிலும் எவ்வித பகடிகளுமற்றுப் பிணைத்து ‘வட்டாரத்துக் கோடி’யை உருவாக்கித் தந்திருக்கின்றார் புலியூர் முருகேசன்.

தமிழ்நாடெங்கும் வாழ்கின்ற பெரும்பகுதியான மக்களிடையே இதை ஒரு பண்பாட்டு விழுமியங்களை வைத்துக்கொண்டு அந்த மரபைக் காப்பாற்றுகின்ற விதத்திலும், இன்றளவுக்கு மட்டுமல்ல, என்றென்றும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற ஆவேச உணர்ச்சி மிகக்கொண்டு தாக்கங்களிலுண்டான பிரதியாகக் கருத அனேக இடங்களுண்டு. இறந்தோர்க்கு நடக்கும் சடங்குகளில் சாதிகளுக்கும் அப்பாற்பட்டு அதிமுக்கியத்துவம் வாய்ந்த சடங்காக இது நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறதென்பது மெய்மையல்லாது வேறில்லை. அதனாலேயே நாவல் நெடுகிலும் இவ்வைபவம் ஆசிரியரால் நிகழ்த்திக் காட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இவ்விடத்தில் இரு ஜாதிகளின் உறவை இதன் வழியாய் வலுப்படுத்துகின்ற விதத்திலும், மேம்படுத்துகின்ற விதத்திலும் மனிதம் சமன் பெற வேண்டுமென்ற தவிப்போடும் உயரிய நோக்கத்தோடும் இதைக் கட்டமைத்திருக்கிற இடத்தில்தான் புலியூரார் நம்மை நெகிழ வைத்து விடுகின்றார். அப்பப்பா! இரு ஜாதி மக்களிடையே ஏற்பட்டிருக்கும் இணக்கமான இப்படியொரு ஒரு உறவு எங்கெங்கும் நிகழுமானால் வன்மங்கள் தொடரவும் பெருகவும் வாய்ப்பில்லாமல் போய்விடுமென்பதில் ஐயமேயில்லை.

மதுரை மாநகரில் அதி படாடோபமாக வாழ்ந்த திருவனம் செட்டி, நாயக்கர் ஆட்சியின் கொடுமைகளைச் சகித்துக்கொள்ள முடியாமல், மதுரை மாநகரைவிட்டுத் தன் குடும்பத்தார்களை அழைத்துக்கொண்டு விட்டேற்றியாய்ப் புறப்படுவதும், சாலிக்கரையில் அவருக்குப் பெரிய மல்லரின் உறவு கிட்டுவதும்தான் இந்த ஒப்பற்ற நாவலின் அஸ்திவாரமே. பெரிய மல்லர் சாதாரணப்பட்டவரா! திருவனம் செட்டி படாடோபமாய் வாழ்ந்த மதுரை வாழ்வைப் போல் பதின்மடங்கு வாழ வகை செய்த மூலாதாரராயிற்றே! அவர்களுக்குள் உள்ள உறவை மட்டுமே இங்க வண்டி வண்டியாக எழுதலாம். அப்பேர்க்கொத்த ஆழமான நட்பு அது. அவர்களுக்குப் பின் அவர்கள் மகன்கள் பேரன்களென்று வழிவழியாய் அதே இணக்கத்தோடே வாழ்கின்றார்கள். திருவனம் செட்டியின் வகையறாவும், பெரிய மல்லரின் வகையறாவும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் பாசத்திற்கும் பிரியத்திற்கும் மதிப்புக்கும் ஈடேது இணையேது? ‘நான் இந்த ஊரில் காலூன்றிக் கொள்ள கொஞ்சம் நிலபுலம் வாங்கிக் கொடுங்கள்’ என்று திருவனம் செட்டி பெரியமல்லரிடம் சொல்லிவிட்டு, ‘என்னிடம் கடைசியாக உள்ளது இந்த நகைகள் மட்டும்தான்’ என்று நகைகளைப் பொதித்து வைத்துள்ள மூட்டையைக் கொடுப்பதும், பெரிய மல்லர் அதை வாங்கிக் கொள்ள மறுப்பதும் மனிதத்தின் உச்சமென்றால் அது மிகையாகாது.

‘மனிதம்’ இந்தக் காலங்கள் உள்ளவரை உயிர்ப்புடன்தானிருக்கும் என்பதற்குச் சான்றாக புலியூராரின் ‘வட்டாரத்துக் கோடி’யைத்தான் நான் வலிந்து சொல்வேன். திருவனம் செட்டி சீர் செய்யும் அமர்க்களத்தை பெரிய மல்லரின் மகள் பெரியக்காவை, சின்னாண்டிபட்டி பட்டனுக்குத் திருமணம் செய்து வைக்கும் வைபவத்தை வாசித்தபோது, உடம்பிலுள்ள அத்தனை மயிர்க்கால்களும் சிலிர்த்து விட்டன. அப்பப்பா! எத்தனை நெகிழ்வு அந்நிகழ்வு! சிலிர்த்த மயிர்க்கால்கள் அடங்க வெகுநேரமாயிற்று. பயிர்கள் மரம் செடிகொடிகள் அவ்வளவும் விதைக்கப்பட்டு வளர்கின்றன. ஜீவாத்மாக்கள் அவ்வளவும் விந்துவால் உயிராகி வெளிவருகின்றன. ‘மனிதம்’ விதைக்கப்படுமா? அன்பு விதைக்கப்படுவதால் உண்டாவதா? இப்படியெல்லாம் நம்மிடையே கேள்வி எழுமானால் அவைகளும் விதைக்கப்படுவதுதான் என்று துணிந்து சொல்லலாம். புலியூராரால் நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் பகுதியிலும் விதைக்கப்பட்டு விதைக்கப்பட்டுத்தான் பல நெகிழ்வான உணர்ச்சிகளை நமக்குத் தருகின்றன. அந்த அற்புதத்தை வாசிப்பவர் எவரும் உணர்வர்.

மஞ்சுவெளி தங்கசாமி நாடாரின் மகனுக்குத் திருவனம் செட்டியின் மகள் காத்தம்மா நிச்சயிக்கப்படுகிறாள். திருமணத்தை தன்னுடைய தோட்டத்தில் நடத்தி விடலாமென்று தங்கசாமி நாடார் கூறவும், திருவனம் செட்டி ஆமோதிக்கின்றார். திருப்பூட்டுக்கும் முதல்நாளே காத்தம்மாளுக்கு மாலையணிவித்து பெரிய மல்லர் சகிதமாக வண்டி கட்டிக்கொண்டு மஞ்சுவெளிக்கு புறப்படுகின்றனர். பேய் மழை கொட்டுகிறது. காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மழை நிற்கும், காட்டாற்று வெள்ளம் வடியுமென்று இரவு முழுவதும் மழைக்கொடுமையை சகித்துக்கொண்டும், சொல்லொணா துன்பத்தை அனுபவித்துக்கொண்டும் காத்திருக்கின்றார்கள். மழைச்சனியனும் விடவில்லை; காட்டாற்று வெள்ளமும் வடியவில்லை. மாலையும் கழுத்துமாய் அழுத கண்ணீர் ஆறாய்ப் பெருக, காத்தம்மாளைத் தேற்ற வழியின்றிப் புலம்புகின்றனர். மஞ்சுவெளிக்குச் செல்ல சூழல் தடுக்கின்றது. திரும்பவும் சாலிக்கரைக்கே வண்டியைத் திருப்புகிறார்கள். திருவனம் செட்டிக்கோ, பெரிய மல்லருக்கோ காத்தம்மாளுக்கு அணிவித்த கழுத்து மாலையைக் கழற்ற கிஞ்சித்தும் மனம் இடம் தரவில்லை. அவளுக்கு மாலை அணிவித்தது அணிவித்ததுதான். வேறு ஒருவனைக் கொண்டுவந்து திருப்பூட்டு வைபவத்தை நிகழ்த்தி விட வேண்டியதுதான் என முடிவுக்கு வருகின்றனர்.

மழை ஓய்கிறது. வழியிலிருந்த முனியாண்டவர் கோயில் ஒத்தகமான சூழலைத் தருகிறது. திருவனம் செட்டி தன்னிடம் பண்ணையம் பார்த்துக்கொண்டிருந்த தூங்காச் செட்டியை மருமகனாக்கிக் கொள்ள முடிவெடுக்கின்றார். அவன் சம்மதத்தை அறியக்கூட நேரமில்லாமல் திருப்பூட்டை நிகழ்த்தி விடுகின்றனர். பெண்களின் குலவைச் சத்தம் வானைப் பிளக்கிறது. இந்தச் செய்தி தங்கசாமி நாடாருக்குத் தெரிய வரவும், அவர் சும்மாயிருப்பாரா? ஆளோ பெரிய சண்டியரெனப் பேர் பெற்றவர். திருவனம் செட்டியைத் தாக்க அடியாட்கள் படையோடு சாலிக்கரைக்கு வருகின்றார். இச்செய்தி பெரிய மல்லருக்குத் தெரிய வரவும், வெட்டரிவாளையும் வேல்கம்பையும் எடுத்துக் கொள்கின்றார். வெட்டரிவாள் பெரிய மல்லரிடத்தும் வேல்கம்பு அவர் மகன் சங்கரிடத்திலும் இருக்கிறது. தங்கசாமி நாடார் வண்டியிலிருந்து இறங்கி வந்தவர், திருவனம் செட்டியைக் கூப்பிட்டு “யோவ் திருவனம்! வாய்யா வெளிய. ஓம் மவளுக்குப் பரிசம் போட்டது நாங்க. புள்ளைய இப்ப வேற ஆளுக்குக் கலியாணம் பண்ணி வச்சிருக்கியே! வெக்கமாயில்லியா? ஓம் புள்ளயத் தூக்கிட்டுப் போயி எம் மவனுக்குக் கட்டி வைக்கப் போறேன் பாக்கறியா?” என்ற அந்தக் கணத்தில், சங்கர் வீசிய வேல்க்கம்பு தங்கசாமி நாடாரின் வலது தொடையில் பாய்கிறது. ரத்தம் குபுகுபுவென வருகிறது. திருவனம் செட்டி பதறுகின்றார். வேட்டியை எடுத்துக்கொண்டு போய் ரத்தம் வழியாமல் இறுக்கிக் கட்டுகிறார்.

தோட்டத்து வீட்டுக்குக் கொண்டு வந்து கட்டிலைப் போட்டுப் படுக்க வைக்கிறார். வைத்தியர் வரவழைக்கப்படுகிறார். அவர் வந்து பச்சிலை வைத்தியம் பார்த்துத் தங்கசாமி நாடாரை நடக்க வைக்கிறார். “எல்லா சேதியும் தெரிஞ்ச நீங்களே இப்பிடி அடிபிடிக்கு வரலாங்களா? காட்டாத்தத் தாண்ட முடியாம பொண்டு புள்ளைகளோட விடிய விடிய ஒக்காந்திருந்தோம். ம்... என்னன்னமோ நடந்து போச்சு. எல்லாத்துக்கும் சேத்து நா ஒங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்கறேன்”. இங்கேதான் புலியூரார் மனிதத்தை விதைக்கின்றவர் என நான் சொல்கின்றேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இப்படிப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவங்கள் நாவல் நெடுகிலும் காணக் காண இப்படியொரு முடிவுக்கு நான் வரவேண்டியதாயிற்று.

ஆனைப்பட்டிக்கு கருங்கல் கவுண்டரைப் பார்க்க, சங்கப் பள்ளரின் வற்புறுத்தலின் பேரில் தூங்காச் செட்டி தயங்கித் தயங்கிக் கிளம்ப முற்படுகிறார். எதற்கு? அசலூரில் இப்படியொரு பெரிய காரியம் நடந்து விடுமாவென்று அச்சம் தொக்கி நிற்கிறதே! என் செய்வார்? அதனாலேயே இந்தத் தயக்கம். அசலூரில் இடம் பார்த்து நிலைகொள்வதற்கு சங்கப்பள்ளர் தீர்மானமாய் முடிவெடுத்து வண்டியைத் தயார்படுத்திவிட்டார். அவர் வண்டியை மட்டும்தானா தயார்படுத்தினார்? காடு திருத்தி நிலமாக்குவதற்கான ஆயுதங்களையும் தயார்படுத்தி முன்னேற்பாடாகவே வண்டிக்குள்ளும் வைத்துவிட்டார். நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. கருங்கல் கவுண்டரை பார்க்கவில்லை. அவரிடம் முன்னேற்பாடாக நிலம் பேசி எதுவும் திகைந்தபாடில்லை. இதற்குள்ளாகவே ஆயுதங்கள் எதற்கு? திகையாத இடத்தைச் செப்பனிட்டு விட முடியுமா? சங்கப்பள்ளர் தன் வாழ்வின் மீது வைத்திருக்கின்ற அசைக்க முடியாத உறுதியே இச்செயல் என்று நாம் புரிந்து கொள்கிறோம். வாழ்வோடு கலையின் ஓட்டமும் கைகோர்த்துக்கொண்டு நாமறியா உலகத்திற்குக் கூட்டி செல்கின்ற வினோதம் ‘வட்டாரத்துக் கோடி’ யில் பார்க்க முடிகிறது. அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட நடை ஒரு சித்திரம் போல் ஒளிர்ந்து இடர்ப்பட வழியேதும் வைக்காமல் கடைமடைவரை பாயும் விந்தையையும் அழகையும் என்னவென்று கூற?

இந்நாவலில் வருகின்ற ஒவ்வொரு பாத்திரங்களும் உயிருள்ளதாய் இன்றைக்கும் நம் நெஞ்சுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றவர்களாகவே நான் கருதுகிறேன். அவர்களின் இறப்பெல்லாமே ஓர் மாயை போல்தான் எனக்குத் தோன்றுகிறது. திருவனம் செட்டி, பெரிய மல்லர், தூங்காச்செட்டி, சங்கர்ப் பள்ளர், ஐயாவு, முத்துச்சாமி நாடார், மாரிமுத்து, ஆண்டிப் பள்ளர் இவர்களோடு பெண்பாத்திரங்களும் யாவரையும் மறந்து விடாதபடிக்கு மறக்கவே முடியாதபடிக்கு, அவ்வளவு ஆழமாகவும் அதிநுட்பமாகவும் செதுக்கியெடுத்துச் சிற்பமாக்கியிருக்கின்றார் நம் புலியூரார்.

பாத்திரங்கள் பேசும் உரையாடல்கள் ஒவ்வொன்றும் எங்கும் காணாதபடி காணமுடியாதபடி அவ்வளவு சொற்சிக்கனங்களோடும், கட்டுக்குலைந்து விடாமலும் யதார்த்தத்தில் எப்படி நிகழுமோ அப்படி எவ்விதத்திலும் ஒழுங்கமைதி சிதைந்து போய்விடாதபடிக்கு, தன்னையொரு பூதாகரமான பிம்பமாய், உணர்ச்சி மிகுதி கொண்டவராகக் காட்டிக் கொள்ளாமல் வெகு அடக்கத்துடனும், நிதானத்துடனும் உரையாடல்களை உருவாக்கியதற்காகவே புலியூராரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இலக்கிய விமர்சகர் மாண்பமை வெங்கட் சாமிநாதன் சொல்வார். நாவல்களிலோ சிறுகதைகளிலோ அமைக்கப்படுகின்ற பாத்திரங்கள் தன்னுடைய உரையாடல்களை பிரதானமாகக் கொண்டு, அதன் மூலமாக பிரசங்கம் பண்ணிவிடக் கூடாது. யதார்த்த வாழ்வில் ஒருவர் பேச மற்றவர் பேசவென்று எப்படி விட்டுவிட்டு அதன் தொடர்ச்சி அறுபடாமல் நிகழ்கின்றதோ, அப்படி நாம் படைக்கின்ற படைப்பிலும் நிகழ வேண்டும். ஏனெனில் நாம் படைக்கிறதென்பது படைப்பென்பதை எழுத்துக் கலைஞன் புரிந்து கொண்டு எழுத வேண்டும். நீண்ட வசனங்களெல்லாம் நிகழுமிடம் உபன்யாசக் கூடங்களோ சினிமாவிலோ நடக்கட்டும். படைப்பில் வேண்டாமென அழுத்தந்திருத்தமாகக் கூறிவிட்டுப் போயிருக்கிறார். புலியூரார் இவ்விஷயத்தை அறிந்தோ அறியாமலோ, அவருடைய கூற்றை மெய்ப்பிக்கின்ற விதத்தில் அவ்வளவு நேர்த்தியாக இந்நாவலுள் உரையாடல்களை அமைத்துத் தந்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.

இறுதியாக ஒன்றைச் சொல்லி விட்டு ஓய்கிறேன். அமளி நிறைந்த உலகத்தில் இரு ஜாதி மக்கள் இவ்வளவு இணக்கத்தோடும் உறுதியோடும் வாழ முடியுமா? என்ற கேள்வி எழும். அதற்கு படைப்பாளனின் ஒரே பதில் ‘வாழ முடியும். வாழ வேண்டும்’ என்பதுதான். அதனால்தானே அவன் படைப்புக் கலைஞனாக இச்சமூகத்தில் பரிணமிக்க முடிகின்றது! இந்த ஒப்பற்ற நாவலின் மூலம் புலியூர் முருகேசன் தமிழுக்கு புதியதொரு வரவையும் ஆவணத்தையும் கொடுத்திருப்பதோடு தான் பிறந்த மண்ணான தூங்கஞ் செட்டியூருக்கு மிகப்பெரிய பெருமையை மட்டுமல்ல, மகுடத்தையே பதித்து மகிழ்ந்துகொண்டிருக்கிறார் எனத் துணிந்து சொல்வேன்.

- சி.எம்.முத்து