தஞ்சை மாவட்டம் இடையிருப்பு கிராமத்தில் வசிக்கும் நாவலாசிரியர் திரு.சி.எம்.முத்து அவர்கள் பத்து நாவல்களும், 300 சிறுகதைகளும் எழுதி தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளார். காவிரிப் படுகையின் வாழ்ந்து கொண்டிருந்த ஏராளமான மிராசுதார்களைப் பற்றி சிறு பிராயத்திலிருந்தே ஏராளமாக அறிந்து வைத்திருந்த நாவலாசிரியர் இதுவரை எழுதப்படாது இருந்த அவர்களின் வாழ்க்கை முறையை சொல்லியே தீரவேண்டும் என்ற தீராத முனைப்புடன்தான் இந்த நாவலைப் படைத்துள்ளார். நீர்வளமும், நிலவளமுமிக்க தஞ்சை மாவட்டத்தின் பாபநாசம் அருகில் உள்ள இந்தளூர் என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்த சேது காளிங்கராயர் மற்றும் அவரது குடும்பத்தை மையமாக வைத்து “மிராசு” எனும் 800 பக்க பெரும் நாவலை மிகவும் அழகாக வட்டாரப்பேச்சு மொழியில் எழுதியுள்ளார். தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப் பெயர்பெற்ற ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் உயிர்நாடியான விவசாயம் மற்றும் அதனுடன் இணைந்த பண்பாட்டு அம்சங்களின் பொதுவான தன்மைகளை இந்தளூர் கிராமத்தின் நடைமுறைகள் மூலம் விளக்கியுள்ளார். இந்த நாவல் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் தனித்துவமிக்கப் பண்பாட்டின் வரலாற்று நாவல் என்றால் மிகையாகாது. இதனை படிக்கும் தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒவ்வொரு வாசகனும் தனது மனதில் கிராமத்தின் நினைவுகள் நிழலாடுவதை மறுக்க முடியாது. அவரே கூறுவது போல் ஜமீன், சுபேதார், மிட்டா மிராசு எல்லாமும் ஒழிந்துவிட்ட இக்காலக்கட்டத்தில் இந்நாவல் வெளிவந்திருப்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

விவசாயம், கலச்சார விழாக்கள், கோவில்கள், திருவிழாக்கள், கூத்து கொண்டாட்டங்கள், குடும்பங்களின் வாழ்க்கை மற்றும் உறவுகள் அதிலிருந்து தோன்றும் சிக்கல்கள், மனவலிகள், வாழ்வு, சாவு மற்றும் புற உலகின் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்கள் அதன் தாக்கங்கள் பற்றி எழுதியுள்ளார். வயிற்றுப் பசியைப் போல் காமம் ஒரு பசி அதுவும் ஓர் உணர்வு என்பதை நமது கலாச்சாரம் ஏற்பதில்லை. உலகமும் மனிதர்களும் எல்லா நேரங்களிலும் ஒரே நிலையில் இருந்து விடவில்லை. சபலங்களும் சஞ்சலங்களும் நிறைந்தவர்களாகத்தானே மனிதர்கள் இருக்கிறார்கள், என்று உணர்வுகளை அழகாகத் கூறியிருக்கிறார்.

இயற்கையை எழுதுவது போல் பெண்களின் கட்டமைவையும் உடல் வளமையையும் ஆண்களின் வனப்பையும் எழுதுவதில் தவறில்லை என்ற கருத்தும் உள்ளது. இயற்கையின் வெளியோடும் செடிகளோடும் கொடிகளோடும் மரங்களோடும் பறவைகளோடும் விலங்குகளோடும் இணைந்தே வாழ்க்கை என்ற உணர்வோடு இந்த நாவல் அமைந்துள்ளது.

cm muthu novelசாம்பல் வெளி, வெண்மை படியாத புலர், காலைப்பொழுதின் குயில் ஓசை, சேவல்கள் கூவல், காகங்கள் கரையும் இயற்கை எழிலோடு ஒவ்வொரு வீடுகளில் முன்பும் பெண்கள் தோன்றி சாணம் தெளித்து கோலமிடுதலையும் விவரித்து நாவல் தொடங்குகிறது. ஆம்பிளைகளில் முக்கால் வாசிக்கும் அதிகமானோர் தங்களது காலை கடன்களை முடித்துக் கொள்வதற்கு சாலையின் ஓரங்கள்தான் ஒரேவழி.

பொங்கலை முன்னிட்டு வீடுகளை சுத்தம் செய்வதும், மண்சுவர்களைப் பூசுவதும், தரைகளை மொழுகுவதும், சுவர்களுக்கு வர்ணங்கள் பூசுவதும் கிராமங்களின் தனி மகத்துவம். பொங்கல் அன்று காலை பொழுதும் எப்போதும் போல் புலர்ந்தது. சுற்றியுள்ள பதினெட்டு கிராமங்களுக்கும் ‘பெரிய மெராசு' என்று அறியப்படும் சேது காளிங்கராயர் காலையிலேயே குளித்து முடித்து புத்தாடைகள் அணிந்து கொண்டு விபூதி, சந்தனம், குங்குமம் மணக்க ஆலோடியில் வந்து உட்கார்ந்து விட்டார். விரல் மொத்தத்தில் வயிற்றுப் பகுதி வரை புரளும் தங்கச்செயின் கைகளில் தங்கக்காப்பு, நத்தை அளவிற்கு விரல்களில் மோதிரங்கள். அவருக்கு அருகில் மரப்பலகையில் கவுளி கவுளியாக வெற்றிலையும், பாக்கும் இருந்தது. பேலாவில் சந்தனமும் ஒரு மரக்கால் நிறைய சில்லறைக் காசுகளும் வைத்திருந்தார். பொங்கல் வந்துவிட்டால் வேலை செய்கிற ஆட்கள் பணங்காசு கேட்டுக்கொண்டு வரிசைகட்டி நிற்பார்கள். யாருக்குமில்லையென்று சொல்ல முடியாது. தன்னை அண்டி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிற ஆட்களுக்கு நிறைவாய்தான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

பள்ளத்தெருவில் இருந்து வந்த ஆட்களுக்கு கார்வாரி சந்தனத்தைக் கொடுத்துவிட்டு ஒருவருக்கு இரண்டு கழி கரும்பு, ஒரு சீப்பு வாழைப்பழம், ஒரு தேங்காய், ஒருபடி பச்சரிசி, அச்சுவெல்லம் என்று கொடுத்ததும் காளிங்கராயர் வெற்றிலை பாக்கில் எட்டணாவை வைத்துக் கொடுக்கிறார். தீபாவளியானால் ஆளுக்கொரு வேஷ்டியும் துண்டும் கிடைக்கும் உள்ளூர் ஆட்கள் தவிர்த்து அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்தும் தெரிந்த ஆட்கள் சிலர் வந்துபோனார்கள் அவர்களுக்கும் விநியோகம் நடந்தது. அதிகாலையிலேயே தச்சர், கொல்லர், வண்ணார், அம்பட்டர், குயவர், தேசிகர் போன்றோர்கள் வந்து பொங்கல் படி வாங்கிக் கொண்டு சென்று விட்டார்கள்.

கதையில் வரும் இந்தளூர் கிராமம் வளர்ச்சிப் பெறாத மற்ற கிராமங்களின் பொதுவான தன்மைகளுடன் ஒத்திருந்தது. அறுபது அறுப்பத்தைந்து குடியானவர் வீடுகளையும் கொண்டது. அதில் பெருமிராசு குடும்பம் சேது காளிங்கராயர் குடும்பம். மூதாதையர் விட்டுச் சென்ற 20 வேலி நிலத்தோடு 30 வேலி நிலத்தை தன் சம்பாத்தியமென்று வாங்கி, 50 வேலி நிலம் (1 வேலி: 6.17 ஏக்கர்) மற்றும் தோப்பு தொரவு, ஐஸ்வர்யங்கள் கொண்ட குடும்பம். நஞ்சை மட்டுமின்றி தோப்பு தொரவுகள் வண்டி வசதி என ஏராளமான ஆஸ்திகள் சேர்த்து வைத்துள்ளார். ஈட்டலும் வகுத்தலும் காத்தலும் என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க வாழ்க்கை நடத்துபவர். தான் போய் வயலைப் பார்க்க வேண்டும் வாய்க்காலைப் பார்க்க வேண்டும் என்ற காரியம் இல்லை. ஆஸ்திபாஸ்திகளை கவனிக்க கார்வாரி கணக்குப்பிள்ளை மற்றும் போதுமான வேலை ஆட்கள் இருக்கிறார்கள். ரெண்டு முதல் ஐந்து வேலி நிலங்கள் கொண்ட நடுத்தர விவசாயிகளும், அதற்கும் குறைவான நிலங்களையுடைய சிறுநில விவசாயிகளும், சொந்த நிலம் ஏதுமில்லாத குத்தகை விவசாய குடும்பமும், ஆடு மாடுகளை வைத்து பிழைக்கும் குடும்பங்களும் கொண்டது குடியானவர் குடும்பங்களின் வகைப்பாடு. பெரும்பான்மையாக ஒரு சாதியும் மற்றும் இதர சாதிகளும் உண்டு. வண்ணார், அம்பட்டர், தச்சர், கொல்லர் சாதிய வேலைகளும் கொண்டது. மற்றொரு புறம் நிலம், நீச்சு, குத்தகை என்று எதுவும் இல்லாதவர்கள். கைகளை ஊன்றி தான் பிழைக்கவேண்டிய சுமார் அறுபத்தைந்து தாழ்த்தப்பட்டோர் குடும்பங்களையும் கொண்டிருந்தது. வறுமையும் பசியும், பட்டினியும், நோயும் மரணமும் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது.

மின்சாரம், பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம், தார்சாலைகள், போக்குவரத்து வசதி என எந்த அருவமும் இல்லாத இருண்ட கிராமம். சுதந்திரம் பெற்றப் பிறகு காங்கிரஸ் ஆட்சியிடமிருந்து ஏராளமான எதிர்பார்ப்புகளையும் விழைவுகளையும் கொண்டிருந்தது. சிதிலமடைந்த அம்மன் கோவில், கோவில் பூசாரி, நோய் தீர்க்க மருத்துவச்சி மற்றும் ஆண்டவன் மட்டும்தான் வழி. கிராமத்தின் பண்பான நிலவுடைமையில் ஏற்றத்தாழ்வுகளையும், சாதீய தீண்டாமையும் கொண்ட கிராமம்.

பெரிய மெராசு காளிங்கராயர் வெளியே நடந்து போனாலும் வண்டியில் போனாலும் அவரை எதிரில் பார்த்தவர்கள் எல்லாம் போட்டிருக்கும் கால் செருப்பை கழற்றிக் கொள்வதும், மேல் துண்டை சுருட்டி மடித்து கமுகட்டியில் வைத்துக்கொள்வதும், கைகட்டி வாய் பொத்தி கூனி குறுகி நிற்பதும் விவசாயக்கூலிகள் மட்டுமில்லை தன் சாதிக்காரர்களும் தன் ஜாதிக்கும் அடுத்தபடியாக இருக்கிற ஜாதிக்காரர்களும் இன்னும் வண்ணார் அம்பட்டர் கொல்லர் தட்டார் அனைவரும் அத்தனை குடிபடைகளும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆயினும் காலத்தின் மாற்றத்தை மெராசு உணர்ந்தேயுள்ளார். தாத்தா காலத்தில் மற்றும் அப்பா காலத்தில் நடந்ததெல்லாம் என் காலத்தில் நடக்கிறதா என்ற சிந்தனையும் எழாமலில்லை. பின்னாடி நம்ம பிள்ளைங்க அம்புட்டு சொத்தையும் காவந்து பண்ணுமான்னு என நெனைச்சி நெல நீச்சு வாங்குறதை கட்டுப்படுத்திகிட்டார். இன்னும் போகப்போக மாற்றங்கள் தோன்றி தன் வாழ்க்கையை சீரழித்துப் போட்டு விடுமோ என்ற அச்சமும் தோன்றுகிறது. இந்த நினைப்பு அவருக்குள் வந்து போனதுமே ஒரு சிறு நடுக்கமும் வரத்தான் செய்கிறது.

பெரும் மாளிகை போன்ற வீட்டில் சேது காளிங்கராயர் தனது மனைவி ராஜாமணி மற்றும் மகன்கள் அசோகன், வெங்கிடேசு மற்றும் மகள் கிருஷ்ணவேணி ஆகியோருடன் வசித்து வருகிறார். சதாநேரமும் வீட்டு வேலைக்காரி மற்றும் ஆட்கள் என நிறைந்த வீடு. ருசியான உணவு வகைகளுக்குப் பஞ்சமில்லை. பிடித்தமான கோழிக்கறி விரால் மீன் வகையறாக்கள் என விருந்து படைக்கும் சமையல் வழக்கமானது.

பெண்களுக்கு வழக்கமாகிப் போன சமையலறைதான் ராஜாமணியின் வாசஸ்தலம். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பிள்ளைகள். அவர்களைச் சொல்லி பலன் இல்லை. இந்த ஊருக்குள்ள பள்ளிக்கூடம் இல்லாதது பெரிய குறை. அதனால் தான் பிள்ளைகள் படிக்க வைக்க முடியவில்லை. இது காளிங்கராயரின் அடிமனதின் ஆழமான குறை. ஏழேழு தலைமுறைகளுக்கான சொத்து பத்து தன் வசமிருக்கிறபோது இதெல்லாம் அனாவசியம் என்றுதான் அப்போது நினைத்திருந்தார். தலைமுறை தலைமுறையாய் யாரும் படிக்கவில்லை என்பதை நாவலாசிரியர் குறிப்பிடுகிறார். பள்ளிக்கூடம் இல்லை என்பது அவருக்கு மட்டுமல்ல, ஊருக்குள்ளும் அனைவரின் தீராத மனக்குறை.

சித்திரை பிறந்துவிட்டாலே விவசாய வேலைகள் ஆரம்பித்துவிடும். வயலுக்கு எரு அடிப்பதில் தொடங்கி ‘நல்லேர் கட்டுவது’ ‘விதை முகூர்த்தம்’, தண்ணீர் பாய்ச்சுதல், நாற்றங்கால், ஏர்உழவு, நடவு, களை பறிப்பு, அடைமழை, அறுவடை, போரடி, பட்டரை, வைக்கல்போர், விதைநெல் கோட்டை, கூலி என அனைத்து விவசாய நிகழ்வுகளையும் விரிவாக விளக்கியுள்ளார்.

நீர் நிறைந்த ஏரியின் கரைகளும் வெள்ளை கொக்குகளும், வக்கா மடையான்களும் நாரை, செம்போத்து, காணாங்கோழி, வாத்து போன்ற ஏராளமான பறவைகளின் சரணாலயம் போல் இருக்கும். இரையைத் தேடி கிருஷ்ணப் பருந்துகளும் வட்டமடித்துக் கொண்டிருக்கும். கண்ணுக்கெட்டிய வரைக்கும் நெல் வயல்கள் பச்சைப்பசேல் என்று பசுமையாய்த் தெரியும். வயல்களில் குரவை, ஆரால், கெளுத்தி, கெண்டைப்பொடி, உளுவை, விலாங்குமீன், சிலேபி மீன்கள் விளையாடிக் கொண்டிருக்கும். அறுத்துப் போட்ட அரிகளில் காக்காய், குருவி, நார்த்தாம்பிள்ளை, தவிட்டுக் குருவி, அரிக்காடை, உள்ளான், சூத்தாட்டிக்குருவி என்று விதவிதமாய் வந்து நெல்லை ஆனந்தமாய் தின்று கொண்டிருந்தது. அவைகளை விரட்டியடிக்க யாருக்கும் மனசு போகாது. இயற்கையின் எழில் உயிரினங்களின் வாழ்வில் உள்ளது.

இட்லி கூடை விற்கும் சூரியகாந்தம் மற்றும் டீ கடைகாரருக்கு அறுவடைக் காலம் வந்துவிட்டால் குஷிதான். மற்ற நாட்களில் இவர்களுக்கு வியாபாரம் கிடையாது. தச்சர், கொல்லர், நாவிதர், வண்ணார், வெட்டியான் உட்பட காணிக்கு ஒரு கோட்டு வீதம் கதிர் கொடுத்தனுப்ப வேண்டும். பூம் பூம் மாட்டுக்காரர் ஒரு மரக்கால் நெல் வாங்கிச் சென்றார். சாட்டையால் தன்னை அடித்துக் கொள்கிறவன் வருவான், உடுக்கை அடிப்பவன், குடுகுடுப்பைக்காரன், கை ஜோசியம், கிளி ஜோசியம், கம்பங்கட்டிக்காரன், நரிக்குறத்தி, நரிக்குறவர்கள், வக்கா, மடையான் , கொக்கு , குயில், மணிப்புறா இன்னும் என்னென்ன பறவைகளோ கவுண்டியால் அடித்துக் கொண்டு விற்பவன், வளையல், பொம்மை, ஐஸ் விற்பவன், பம்பாய் மிட்டாய்க்காரன், பேரிச்சம் பழம் , தோல் பொம்மை நாடகம் போடுகிறவன், இரவு பகலாய் சைக்கிள் ஓட்டுபவன், காஷ்மீர் போர்வை ஏலம் போடுபவன் வருவார்கள், பங்குனி கடைசி வரைக்கும் வருவார்கள். இவர்கள் அனைவரின் வயிற்றுப்பிழைப்பும் விவசாயத்தை நம்பித்தான் இருக்கிறது

ஒரு ‘மா’ நிலத்திற்கு (3:5மா: 1 ஏக்கர்) 15 கலம் (1 கலம்: 48 படி) மூக்கு மேல் விரல் வைக்கிர வெள்ளாமை. இதுக்கெல்லாம் காரணம் எரு, ஆட்டுக்கெட மாட்டுக்கெட அதுதான் காரணம்னாலும் வத்தாம கெடைக்கிற தண்ணியும் முறையா பேஞ்சி முடியிற மழையும் தான் என்பதை நாவலாசிரியர் பதிவிடுகிறார். அறுவடைக் காலத்தில் யாரும் அசந்து மசந்து உட்காரக்கூட நேரங்கிடைக்காது. இந்த நேரத்தில் நாலு காசை சம்பாரித்து வைத்துக் கொண்டால்தான் வருடத்தில் கால் பங்கு காலத்தையாவது ஓட்ட முடியும் என்பதுதான். கிட்டங்கியில் நெல்லை விற்பது, குத்தகை நெல் கொண்டு போவது, விதை நெல் காய வைப்பது, காயவைத்த நெல்லை கோட்டை கட்டுவது, இப்படித்தான் விதை நெல்லை பராமரித்துக் கொள்வார்கள். இன்றைய காலத்தில் விதை நெல் வாங்கிதான் விதைக்க வேண்டும்.

இந்தளூரில் பொது இடம் ஏதுமில்லை. வெயில் நேரத்தில் வருகிற வழிப்போக்கர்கள் சத்திரம் சாவடிகளில் தங்கி தான் இளைப்பாறிச் செல்வதற்கு ராஜகிரி அப்துல்கலாம் ராவுத்தர் கட்டிய சாவடிதான் பொதுஇடம். ராவுத்தருக்கு இந்தளூரில் பத்துவேலிக்கும் அதிகமான நிலபுலன் இருந்தது. வயது முதிர்ந்ததும் நிலபுலங்களை குத்தகைக்குக் கொடுத்துவிட்டு நேரடி விவசாயத்திற்கு முழுக்கு போட்டுவிட்டார். ராஜகிரியில் தனது அந்திம காலத்தை கழித்துக் கொண்டிருந்தவர் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் இறந்து போனார். இஸ்லாமியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதை எடுத்துரைக்கிறார்.

தலைமுறை தலைமுறையாக படிப்பு வாசனை அறியாத கிராமத்தில் பிள்ளைகளின் எதிர்காலம் கல்வியில் தான் இருக்கிறது என்று ஒவ்வொருவரும் உணர ஆரம்பித்து விட்டனர். அதனை நிறைவேற்றிட காங்கிரஸ்கட்சியின் முக்கியஸ்தர்களை காளிங்கராயர் மூலம் சந்திக்கலாம் என்று முடிவு செய்து அவரை அணுகினார்கள். இருக்கிற ஆஸ்திக்கும் பாஸ்திக்கும் தன் சொந்தப் பிள்ளைகளை படிக்க வைக்காதவர் ஊர் பிள்ளைகள் படிப்பதற்கு விரும்புவாரா என்ற சந்தேகமும் கூடவே இருந்தது. அவர்கள் அனைவரையும் கண்ட காளிங்கராயர் வரவேற்றாலும் ஆலோடியில் உள்ள நாற்காலிகளில் உட்காராமல் பார்த்துக் கொண்டார். பெரிய மெராசை சந்தித்துப் பேசியதில் அவர் நடத்திய விதம் குறித்து மிகுந்த கசப்புணர்வுடன் வீட்டிற்கு செல்லாமல் சாவடிக்குத் தான் சென்றார்கள். சுயமரியதை உணர்வு எழுந்தது. அக்ராரத்துல நாராயணசாமி சோழகர் இருக்காருல்லியா? அவுரு நல்லா படிச்ச மனுசன். வாத்தியாராவும் இருந்தாரு. அவுருக்கிட்டப் பேசி அவுரோட திண்ணையிலேயே ஒரு பள்ளிக் கொடத்த ஏற்பாடு பண்ணச் சொல்லி நம்ப ஊரு புள்ளைங்களுக்கு பாடத்த சொல்லிக்குடுக்கச் சொல்வோமே என்று முடிவு செய்து, சோழகரை சந்தித்தனர். சோழகரிடம் வந்து காரியத்தைச் சொன்னார்கள். அவருக்கும் ஏற்புடையதாய் இருந்தது. வாத்தியார் வீட்டு திண்ணையில் காலை முதல் மதியம் வரை வகுப்பு முடிவானது. வாத்தியாருக்கு சம்பளமாக ஒரு புள்ளைக்கு ஒரு வருசத்துக்கு ஒரு மூட்டை நெல்லு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. “கடைசி காலத்தில் கடவுள் கண்ணைத் திறந்து இருப்பார் போல” என்று வாத்தியார் நினைத்துக் கொண்டார்.

ஊருக்குள் இருபது முப்பது சைக்கிள்களில் சிகப்புக் கொடி கட்டி கூலியை உயர்த்திக்கொடு, உழுபவனுக்கே நிலம் சொந்தமாக்கு என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் எழுப்பிய கோஷங்கள் ஊரையே கலங்கடித்தது. குத்தகை விவசாயிக்கு உழுபவனுக்கே நிலத்தை சொந்தமாக்கு என்ற கோஷம் பிடித்துப்போனது. பெரிய மெராசு காளிங்கராயருக்கு அதிர்ச்சி அளித்தது. எதிரும் புதிருமான இருவரின் மனநிலையைக் குறிப்பிடுகிறார்.

ஊர்விசயங்கள் மற்றும் அரசியல் பேசுவதற்கும் சுவாமிநாத மல்லிக்கொண்டார் டீ கடை தான் மையமானது. சுறுசுறுப்பாகி காலை ஐந்து ஐந்தரை மணிக்கெல்லாம் டீயடிக்கத் தயாராகிவிடுவார். ஐந்து மணிக்கெல்லாம் டீ குடிக்க ஆட்கள் வந்து காத்துக் கொண்டிருப்பார்கள். குடியானவர்கள் வசதியாய் உட்கார்ந்து டீ குடிப்பதற்காக ஐந்தாறு பலகைகளும் வைத்திருந்தார். சேரி ஆட்கள் கடைக்குள் வரமுடியாத கடுங்கட்டுப்பாடு. அவர்கள் தாழ்வாரத்தில் நின்றபடி குரல் கொடுத்தால் மல்லிக்கொண்டார் ஓட்டை வழியாய் டீயை கொடுப்பார். அவர்கள் டீயைக் குடித்துவிட்டு கிளாசைக் கழுவி காசோடு திரும்பவும் ஓட்டையில் வைத்தால் மல்லிக்கொண்டார் எடுத்துக் கொள்வார். சேரி ஆட்களுக்கு தனிக் குவளைதான். இக்கொடுமையை எதிர்த்துக் கேட்க அவர்களுக்கு எப்போதுதான் திராணி வரப்போகிறதோ தெரியவில்லை.

விவசாய கூலிகளான தாழ்த்தப்பட்ட மக்களின் ஏழ்மையையும், வேலையின்மையும், பசி பட்டினியையும், தீண்டாமையும் நாவலாசிரியர் விளக்குகிறார்.

ஔச்சி போட்டுபுட்டுதான ஓட்டாண்டியா குந்திருக்கம் எங்கள எந்த மொதலாளி கண்ணு தொறந்து பாக்கப் போவுது? கண்ணு தொறந்து பாக்குற சாமிய வெய்யில்லயும் மழையிலயும் போட்டுட்டு ஒரு வௌக்குக் கொளுத்தி வைக்ககூட நாதியத்துக் கெடக்கம். வேலையிருந்தால் அவர்களை நசுக்கிப் பிழிகிறார். ஓரணாவை கூட்டிக் கொடுக்க மனசு வரவில்லையே. மிராசு என்று பேர் இருக்கிறது. சுற்றுப்பட்ட வட்டாரத்தில் பெரிய மிராசு என்று பெத்த பேர் இருக்கிறது என்று நாவலாசிரியர் அழுத்தமாகப் பதிவிடுகிறார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் பசியைப் போக்கிட வழியை கண்டு பிடிக்கும் தேவையை விவரிக்கிறார் நாவலாசிரியர். “ யாசிச்சா சோறு கெடைக்கும். பசியாறிக்கலாம். நம்பல்லாம் அப்படிப்பட்ட ஈன செம்மாடா? அதுக்கு செத்து போயிரலாம். செத்துப் போறதுக்கா சாமி உசுர கொடுத்தாருஞ் நாலு பேரு கூடி பேசினாதானடா நல்லது பொறக்கும். வயல்ல இருக்க நண்டையும் நத்தையையும் அவிச்சி தின்னுபுட்டா பசியடங்கிப் போயிடுமாடா? நாலு பருக்கையை வயித்துக்குள்ள போட்டாத்தான பசியடங்கும்.”

ஊருக்குள்ள காத்திய மாத்தையிலிருந்து வேல வெட்டி எதுவும் இல்லாம எந்த வருமானமும் இல்லாம எல்லாரும் பசிபட்டினியா கெடந்து செத்துக்கிட்டிருக்கங்கய்யா பெரிய மனுசன்ங்க நாங்க பசி பட்டினிய தாங்கிகிட்டாக் கூட புள்ளக்குட்டியோ என்னங்கய்யா பண்ணும்? இந்த நெலம இன்னும் ரெண்டு நாளைக்கி நீடிச்சாக்கூட பள்ளத்தெருவுல பாதி செத்துப் போயிருவம்ங்கய்யா. பள்ளத்தெருவுல அறுபது குடி இருக்கமுங்கய்யா இந்த அறுபது குடிக்கும் குடிக்கு ஒரு மூட்ட நெல்லுன்னு வீதம் பண்ணி அறுவது மூட்ட நெல்ல குடுத்துவுட்டிங்கன்னா காத்தியமாத்தையும் மார்ளியையும் ஓட்டிப்புடுவம்ங்கய்யா

காளிங்கராயர் மனதில் அவர்களுடைய பேச்சும் இருப்பும் ஈரத்தைக் கொண்டுவந்து சேர்த்துக் கொண்டிருந்தது. இந்த அறுபது மூட்டை நெல்லும் அவர் வீட்டு காணியில் ஒரு மூலையில் விளையக்கூடிய நெல்தான். தன்னை அண்டி வாழ்கிற குடிபடைகள் நன்றாக இருந்தால்தானே மிராசு நான் நன்றாக வாழ முடியும் என்ற சிந்தனைகள் அவருக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ஊருக்குள்ள பசியால செத்தான்னு சேதி வந்தா நாமெல்லாம் இந்த உசுர வச்சிகிட்டு இருக்கலாமா? எலே தருமா செவத்த வச்சித்தான் சித்திரத்த எளுதணும்னு சொல்லுவாங்க. ஒங்களக் கொண்டுதான நாங்களும் சாவடிய பண்ணி காலத்த தள்ளணும். இந்த நெல்ல ஆரும் திருப்பித் தரவாணாம். இந்த ஒதவி இந்த வருசத்துக்கு மட்டுமல்லடா தருமா எங்காலம் முடியிற வரைக்கும் நடந்துக்கிட்டே இருக்கும்.

வாழ்க்கை அனைவருக்கும் ஒன்றாக இல்லை. காளிங்கராயர் வீட்டில் சகல வசதிகளும் விதவிதமான உணவுவகைகளுக்கு பஞ்சமில்லாத போது பள்ளத்தெருவில் கடும் பசியும் பட்டினியும் குடியானவர் வாழ்க்கை செழிப்பாக இல்லை. அதனை விளக்கும் விதமாக “அடுக்கடுக்கா நான்கு பெண்களை பெத்து வச்சுருக்கன். ரெண்டு பொண்ணுங்க வயசுக்கு வந்து வூட்டுல குந்திருக்குது. ரெண்டு பொண்ணுங்க சின்னப்புள்ளைங்களா இருக்கு. ஏ வூட்டுக்கார பொம்பள கொஞ்சம் கட்டுசட்டா இருக்கும். நல்லது கெட்டது பண்ணி சாப்புடணும்னு ஆசவய்க்காது. மாத்தைக்கி ஒரு தடவையோ ரெண்டு தடவையோ தான் கவிச்சி. ஒரு நாளக்கி கொளம்பு வச்சா மய்த்தா நாளு மொட்ட ரசம்தான். நாங்களும் வயல்ல எறங்கி வேல பாக்குறதால கொஞ்சத்துக்கு கொஞ்சம் தன்னக்கட்டிக்கும். பொண்ணுங்களுக்கு இதுநாள் வரைக்கும் வூட்டுக்குள்ள ஒரு குந்துமணி நக வாங்கி வைக்கல. அதுங்களா ஒருத்தன் கையில புடுச்சி கொடுக்குற வரைக்கும் எனக்கு நித்திய கண்டம் பூர்ண ஆயுசுதான். எது எப்படியிருந்தாலும் மனத்தெம்ப மட்டும் வுட்றமாட்டேன்.”

காமராசர் முதலமைச்சராகப் பதவியேற்றபின் மக்களின் எதிர்பார்ப்பு மிகவும் தீவிரமாக இருந்தது. அவருக்கு முன்னாடி குமாரசாமிராஜா, ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் ராசாசி ஆச்சியில ஒருபெரேசனமும் இல்ல. ராசாசி குலக்கல்வித்திட்டம் கொண்டு வந்தாரு. காமராசர் தஞ்சாவூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கப்பி ரஸ்தாக்களை தார் சாலையாக மாற்றுவதும் மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதும் ஐநூறு மக்கள் தொகை கொண்ட பஞ்சாயத்திற்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டித் தருவோம் என்ற பேச்சு செயலுக்கு வந்தது.

பள்ளிக்கூடம் இரண்டு வாத்தியார்களைக் கொண்டிருந்தது. ஐந்தாம் வகுப்புவரை பாடம் நடத்த வேண்டும். இந்தளூரில் காளிங்கராயர் வீட்டைத் தவிர்த்து மற்ற எல்லா வீடுகளிலும் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டார்கள். சேரியிலிருந்தும் நிறைய பிள்ளைகள் வருகின்றனர். மதிய உணவு பள்ளிக்கூடத்தில் தருகின்றனர். பாலும் கொடுக்கிறார்கள். காளிங்கராயருக்கு தன் வீட்டு பிள்ளைகள் படிக்கிற வயதை தாண்டியதால் அனுப்ப முடியவில்லை. ஏதோ கையெழுத்துப் போடவும் கணக்குப் போடவும் தெரிந்து கொண்டாலாவது அவர்களின் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் எங்கிற மனத்தாங்கல் இல்லாமல் இல்லை.

காளிங்கராயர் குடும்பத்தில் எந்தத் கஷ்டமும் குறைபாடும் இல்லாமல் இருந்தது. கணவருக்கு விதவிதமான வாய்க்கு ருசியான உணவை தயாரித்துப் போடுவதில் ராஜாமணி மகிழ்ச்சி கொண்டிருந்தார். வீட்டிற்கு வரும் மாமன் மச்சினன் தங்கை உறவுகளுக்கு விமரிசையாக ஆடு கோழி விரால் மீன் என விருந்து படைப்பதும் மச்சினனுடன் கள் சாராயம் என மது அருந்தி களிப்பதும் என மகிழ்ச்சியாக காலம் கழிந்து கொண்டிருந்தது. இருவீடுகளிலும் வயது வந்த பெண்களும் வயது வந்த பையன்களும் வளர்ந்துவிட்ட பிறகு குடும்ப சூழ்நிலை மாறத் தொடங்கியது. அகமணமுறைதான் அன்றைய வழக்கு. தன் பெண்ணைக் கட்டிக் கொள்ளவேண்டும் என்று தங்கையும் தன் பெண்ணைக் கட்டிக் கொள்ளவேண்டும் என்றும் மனைவியின் சகோதரனும் மாறி மாறி வற்புறுத்தியது குடும்பத்தில் சில மனக்குறைகளைக் கொண்டு வந்தது. பெரிய மகன் சொந்தத்தில் வேண்டாம் என்றவன் பின்னர் தானாக முன்வந்து அத்தை மகளை கட்டிக் கொள்ள சம்மதித்தது ஒரு வழியாக பிரச்னை முடிந்தது. பெண்ணுக்கான பரிசம் தொடங்கி கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது. திருமண வைபவம் பற்றி சிலாகித்து எழுதியுள்ளார்.

தேவைகள் அதிகரித்துக் கொண்டேயிருப்பதால் விவசாயத்தில் இயந்திரங்களும், அயல்நாட்டு உரங்களும், பூச்சி மருந்துகளும் நுழைந்தன. விவசாய உறவுகளில் மாற்றம் ஏற்பட்டது. “ பசுமைப் புரட்சி” என்ற மந்திரச் சொல் மக்கள் மனங்களில் வியாபித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டன. மாவுக்கு பத்து மேனி விளைச்சல் என்றவர்கள் தற்போது இருபது மேனி என்று சொல்ல கற்றுக் கொண்டு விட்டார்கள்.

நெல் மூட்டை விலையும் பத்திலிருந்து முந்நூறு ரூபாய் வரை உயர்ந்தது. சீமை உரங்களின் வருகையால் குப்பை உரம், ஆடுமாட்டு உரம் போடுவது வெகுவாய்க் குறைந்து போனது. கால்நடைகளும் அருகிப் போனது.

இப்போது கிராமங்களில் கூட கொஞ்சம் கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகள் ஓட ஆரம்பித்திருக்கின்றன. சிறு நகரங்களிலும் குட்டி நகரங்களிலும் அதிக எண்ணிக்கையில் வியாபார ஸ்தலங்களும் பெருக ஆரம்பித்திருக்கின்றன. நீராவியில் ஓடிக்கொண்டிருந்த ரயில் எஞ்சின்கள் டீசல் போட்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. நாணயங்கள் மதிப்பு காலணா, அரையணா என்பது பைசாக்கள், ரூபாய் என மாறியது. அது போலவே வீசை, சேர், படி எல்லாம் மாறி லிட்டர், கிலோ, மில்லி கணக்கு முறைக்கு வந்துவிட்டது.

திருமணம் முடிந்த கையோடு பெட்டிச்சாவியை மகனிடம் ஒப்படைத்துவிட்டு காளிங்கராயர் ஒதுங்கிக் கொண்டார். அதுமுதல் அவரது வாழ்வில் இறக்கங்களை சந்திக்கலானார். மகனின் போக்கு சரியாகயில்லை ஆள் குடிபடையிடம் அவனது போக்கு சரியாயில்லை, காலங்காலமாக வேலை பார்த்துவந்த கணக்கப்பிள்ளை, கார்வாரி மற்றும் கூலியாட்கள் அனைவரையும் வெளியேற்றி விட்டான். சேது காளிங்கராயர் அக்கடா என்று சாய்வு நாற்காலியில் தலை சாய்த்து வெகு காலங்களாகிவிட்டது. அவரது மனைவி ராஜாமணியால்கூட முன்பைப் போல் சுறு சுறுப்பாக இருக்க முடியலை. மற்ற பிள்ளைகளுக்கும் கல்யாணத்தை நடத்திப் பார்த்துவிட்டார்கள். இரண்டு மூன்று ஆண்டுகளாக பேரப்பிள்ளைகளின் சப்தத்தைக் கேட்டு வந்த வீடு இப்போது கேட்பது அரிதாகிவிட்டது. மகன் அசோகன் பழைய காலத்து வீடு என்று நிலத்தை அடமானம் வைத்து வங்கியில் கடன் பெற்று பக்கத்தில் பெரிய பங்களா ஒன்று கட்டிக்கொண்டு அதில் குடியேறிப் போய்விட்டான். அவரது இளையமகன் வெங்கடேசனும் தோட்டத்தில் வீடு கட்டிக்கொண்டு குடி போய்விட்டார். சமையக்காரி, வேலைக்காரி போயிட்டா ஆளு தேளு அம்புட்டு பேரும் போய்ட்டன். இம்புட்டு பெரிய வூட்டுக்குள்ள நீங்களும் நானும்தான் முட்டி மோதிக்கிட்டு கெடக்கம். ஏதோ வெந்தத தின்னுபுட்டு விதி வந்து சாவோம்னு நம்பக்காலமும் ஓடிக்கிட்டிருக்கு. காசுருந்து என்னா பண்றது தள்ளாத வயசு காலத்துல ஒடுங்கிப் போயி குந்திருன்னு

வச்சுப்புட்டானே பகவான். ஒடம்புல ரத்த ஓட்டம் இருக்குற வரைக்கும்தான ஆட்டபாட்டமெல்லாம். அது கொறஞ்சதும் எல்லாமேல்ல கொறஞ்சி போயிருது. பெரிய பிள்ளையை நினைத்தாலே அவருக்கு குறு குறுவென்று குடைந்து கொண்டிருக்கிறது. போதாதற்கு மகளும் வாழா வெட்டியாக சின்ன மகனிடம் தஞ்சம் அடைந்துவிட்டாள். கடவுளே எத்தனையோ முறை வந்த சாவு அப்போதே போய் தொலைந்திருக்கக் கூடாதா? எதற்காக விட்டு வைத்திருக்கிறது? இந்தக் கண்றாவியெல்லாம் கண் குளிரப் பார்த்துவிட்டு போய்ச்சேரு என்பதற்காகவா? ஓட்டிலிருந்து ஒழுகிய நீர் தலையில் சொட்டுகிறது. ஓரிரு இடங்களில் காரை பெயர்ந்து தரையில் பொத்து பொத்தென்று விழுகிறது. அடிக்கிற மழையில் மாடியே சரிந்து விழுந்தாலும் என்னமோ தெரியவில்லை. இருவருக்குமே நடுக்கம் கொடுத்துவிட்டது. தாத்தா காலத்தில் கட்டிய வீடு எத்தனை காலத்துக்கு தான் தாக்குப் பிடிக்கும்? தந்தை தாயின் அவல நிலையைக் கண்டு மகளும் மகளின் அவலத்தையும் பெரிய மகனின் சீரளிஞ்சி சிக்குப்பட்டு நிற்குற நிலைகண்டு தந்தை தாயின் துயரமும் எழுத்தில் விவரிக்க முடியாதது. நிர்கதியான நிலையில் பெற்ற மகள் அண்ணன் தயவில் நீண்ட காலம் வாழ முடியாது என்பதை உணர்ந்த பெற்றோர்கள் மகள் கிருஷ்ணவேணிக்கு தாங்கள் வாழ்ந்த வீட்டையும், வீட்டின் மராமத்துக்கும் குழந்தைகளின் ஜீவனத்துக்காக பணம் ஒரு லட்சத்தையும் தங்களின் ஜீவனத்திற்காக குடும்ப சொத்தில் ஒதுக்கி வத்திருந்த நான்கு ஏக்கரா நஞ்சை நிலத்தை சாகுபடி செய்து குடும்பத்தையும் குழந்தைகளையும் படிப்பு செலவுகளையும் பார்த்து வர எழுதிவைத்தார்கள்.

1971 சட்டமன்ற தேர்தலில் திமுக பெற்ற வெற்றியை மெராசுவினால் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை. ஒன்பது ஆண்டு காலம் முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்ட காமராசருக்கு இப்படி இழிவு வரலாமா என்று கலங்கி துடித்தார். உளுதவனுக்கு நாலு பங்கும் நெலத்தோட உரிமைக்காரனுக்கு ஆறு பங்குமான்னு இருந்த எளுதாத சட்டத்தை மாற்றி உளுதவனுக்கு ஆறு பங்கும் நெலத்தோட உரிமைக்காரனுக்கு நாலு பங்கு என சட்டம் போட்டாரே. காமராஜர் மட்டும் அந்த சட்டத்தக் கொண்டு வரலைன்னா லட்சோப லட்ச விவசாயிங்க வெவசாயிங்க வெள்ள வேட்டி கட்டிக் கிட்டு வெளில தலகாட்டி வந்துருக்க முடியுமா? கம்யூனிஸ்ட் காரங்க உழுதவனுக்கே நெலம் சொந்தம் என்ற கூப்பாடு போடவில்லை என்றால் இந்தச் சட்டமே நடமுறைக்கு வந்திருக்குமா? இதப் புரிஞ்சிகூட எப்புடிய்யா வெவசாயிங்க மாத்தி ஓட்டப் போட்டுருப்பாங்க?

பத்துப் பதினைந்து வருசத்துக்கு முன்னாடி நம்ப ஊருக்குள்ளே திமுககாரன்னு ஒரே ஒருத்தன் தான் இருந்தான். மித்த அம்புட்டு பேரும் காங்கிரஸ் கச்சில இருந்தாங்களே இப்ப அப்படியா இருக்கு ஊருக்குள்ள இருக்குறவுங்கள்ள முக்கால்வாசி பேர் திமுகவிலும் காவாசிப் பேர் காங்கிரஸ்லயும் இருக்காங்க. அடி வாரிசு பூரா திமுகாவுல இருக்குறாங்க. எப்படி இந்த மாத்தம் வந்துச்சி? திராவிடக் கட்சிகளின் ஆட்சியினால் கிராமங்கள் தன் நிறைவு பெற்றுக்கொண்டு இருப்பதை அவ்வளவு சுலபத்தில் மறுத்துவிட முடியாது. கிராமங்கள் தீப்பிடிக்காத வீடுகளாக நிரம்பிக்கொண்டிருப்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். இருபது முப்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் மச்சுவீடுகளும் மாடி வீடுகளும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருந்தது. எங்கு பார்த்தாலும் குடிசைவீடுகளும், கூரைவீடுகளும் தான் இருக்கும். ஆனால் இன்றோ குடிசைவீடுகளும், கூரைவீடுகளும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றன. அவ்வளவு வீடுகளும் ஓடுபோட்ட வீடுகளாய் உருமாறிப் போய்விட்டன.

ரியல் எஸ்டேட் அதிபர்கள் காளிங்கராயர் மகன் வீட்டையும் விட்டு வைக்கவில்லை. நிலங்களை விலை பேச வந்துவிட்டனர். வீடு கட்ட வங்கியில் வாங்கிய பத்து லட்சம் ரூபாய் கடனுக்கு ஆறு ஏழு வருசங்களாக வட்டியும் கட்டவில்லை. பத்து லட்சம் எத்தனை லட்சமாக பெருகிக் கிடக்கிறதோ தெரியவில்லை. விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதும், தண்ணீரும் அரிதாகிப்போனது. இந்த நிலையில் அம்பது அறுபது வேலி நிலங்களை சாவடி பண்ணுவதும் கடினமாகவுள்ளது. போதாதற்கு கடன் தொல்லை வேற. கொஞ்ச நிலத்தை வெல பேசி விற்றுவிட்டு கடன்களை எல்லாம் ஒழுங்கு பண்ணிவிட்டு நிம்மதியா மூச்சு விட்டு உட்காரலாம் என்ற முடிவெடுத்துவிட்டார்.

தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க நகரப் பேருந்துகளின் எல்லைகள் விரிவாக்கப்பட்டு எண்ணிக்கையும் அதிகமானது. இந்த இருபது முப்பது வருச காலத்திற்குள்ளாக எத்தனை எத்தனை வியத்தகு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. எத்தனை எத்தனை அசுரத்தனமான வளர்ச்சிகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. மனிதர்களின் பெருக்கத்தோடு தேவைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறதே. இந்தளூரிலும் எத்தனையோ மாற்றங்கள் வந்து விட்டது. மின்சாரம் இல்லாத வீடுகளோ தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத வீடுகளோ இல்லவே இல்லை. செல்ஃபோன் வைத்திருக்காத மனிதரும் இல்லை. ஒருகாலத்தில் சாலையில் சைக்கிளைக்கூட கண்ணாறக் காணமாட்டோமோ என்றிருந்த நிலைமை மாறி இன்றைக்கு சாலை அகலப்படுத்தப்பட்டு அவ்வளவு மோட்டார் சைக்கிள்கள், கார்கள், லாரிகள், பேருந்துகள் என்று வினாடி நேரமும் ஓச்சல் ஓழிச்சல் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒருபக்கம் இத்தகைய வளர்ச்சிகள் இருந்தபோதிலும் காலம் அசுரத்தனமாய் ஒரு தலைமுறை மனிதர்களையே உருத்தெரியாமல் சாப்பிட்டு முடித்து விட்டது. இதில் சேது காளிங்கராயரும், ராஜாமணியும் தப்பவில்லை. சாப்பிட்டுவிட்டு இரவு படுத்தவர் காலையில் எந்திரிக்கவில்லை. கணவர் இறந்ததை அறிந்ததும் ராஜாமணியும் உயிரைத்துறந்து விட்டார். மணமுடித்தவர்கள் மரணத்திலும் பிரியவில்லை.

முதுமை, அம்மை, காலரா பசியில் பட்டினியில் வறுமையில் மரணங்கள் என மரணத்தைப் பற்றி நிறையவே எழுதியுள்ளார். புள்ளக்குட்டிகள பெத்து வளர்த்து வாழ்ந்து சலிச்ச மனுசன் செத்துருக்காரு ஆட்டப்பாட்டத்தோட போய் சேரனும்ல. இறுதி சடங்குகள் குறித்து தயாரிப்புகள், பாடை கட்டுவது முதல் பிணங்கள் மயானக்குழியில் இறக்கப்பட்டு எரிக்கப்படும் வரை அந்தச் சடங்குகள் நடைபெறும் விதம் குறித்து சலிக்காமல் எழுதியிருக்கிறார்.

காலங்கள் கடக்கக் கடக்க அரசியலில், பொருளாதாரத்தில் சமூகத்தில் பற்பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது போலவே வாழ்க்கை முறையிலும் பலவித மாற்றங்கள் நிகழ ஆரம்பித்து விட்டன. மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து வாழ்வதும் பழகுவதும் அவர்களின் கோட்பாடுகளில் ஒன்றாகவே ஆகிப்போய்விட்டன. அதற்காக எவ்வளவு தூரத்திற்கு ஓடவும் உழைக்கவும் தயாராய் இருக்கின்றார்கள். நவீன நாகரீகத்தின் சாளரங்கள் வெகுவாய் திறந்து வைக்கப்பட்டு அதன் சாயத்தை பூசிக்கொள்ள அக்கறை காட்டுகின்றனர். வயசுக்கு வந்த பெண்கள் வீட்டின் இருட்டறையில் மறைந்து கிடந்த காலம் மாறிவிட்டது. பெண்கள் வேலைக்கிப் போறாங்க காலேஜூக்கு போறாங்க கடைத்தெருவுக்குப் போறாங்க சினிமாவுக்குப் போறாங்க. படித்த இளைஞனும் சரி இளைஞியும் சரி அவர்களின் பேச்சுக்களில் கூட அதன் படிமம் படிந்து கிடப்பதை நாம் சுலபத்தில் அனுமானித்துக் கொள்ள முடியும். காதல் காததூரம் என்பது போய் கைக்குள்ளேயே வந்துவிட்டது. பெரியோர்கள் பார்த்து திருமணம் என்பது போய் பிள்ளைகள் பார்த்து திருமணம் என்ற காலங்கள் வந்து ரொம்பக் காலமாகிவிட்டது.

பெண்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த வீடு அந்நியமா? கிருஷ்ணவேணிக்கும் ஒர் அந்நியத்தன்மையை உண்டாக்கிக்கொண்டிருந்தது. இக்கணமே பிறந்தகத்தை விட்டு புக்ககத்திற்கு சென்றுவிட மாட்டோமா வென்று துடிதுடித்துக்கொண்டு இருக்கிறார். கைவிட்டுச் சென்ற கணவன் எக்கணமாவது அவன் தன்னைத் தேடி வரத்தான் வருவான் என்றுதான் பேதலித்துப் போகிறது. வேண்டாத ஒன்றை வேண்டும் வேண்டுமென்று தவிக்கிறதே அது அவர்களுக்காகவா அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்காகவா?

பெற்ற பெண் வயதுக்கு வந்து வருஷங்கள் ஆகிவிட்டது. பிள்ளைகளுக்கும் அப்படித்தான். அவர்களுக்கான துணை அண்ணன்கள் வீட்டில் இருக்கிறது. அண்ணன் பிள்ளைகளுக்கான துணையும் கிருஷ்ணவேணியிடத்தில் இருக்கிறது. மனமிருந்தால் மார்க்கம் உண்டு. அண்ணன் தம்பிகளை நெருக்குதல் படுத்தி பிள்ளைகளின் மனசை நொறுக்க கொஞ்சமும் அவருக்கு இஷ்டமில்லை.

நாளை இந்த வீட்டை ஆளப்போகிறவர்கள் யாரோ எவரோ நிச்சயமாய்த் தெரியாது. காலம் இந்த வீட்டை வ்ண்ணம் குலுங்காமல் வடிவம் சிதையாமல் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுமோ என்னவோ அதுவும் தெரியாது. ஆனாலும் வீடு மட்டும் இருக்கும். அது இருக்கின்ற இடத்தில் இருக்கத்தான் இருக்கும்.

நதிநீர் தன்போக்குக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. மழை தன் போக்குக்கு பெய்து கொண்டிருக்கிறது. காற்றும் தன் போக்குக்கு வீசிக்கொண்டிருக்கிறது. அதனதன் போக்கு அதன் சூழலைப் பொறுத்த விஷயமாயிருக்கிறது. சூழலைப் பொறுத்தே அதன் போக்குகளும் இருக்கின்றன. அப்படித்தான் கிருஷ்ணவேணியும் தன் சூழலைப் பொறுத்தே தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு தன்னை மாற்றிக் கொள்ள முனைந்துவிட்டார்கள். பிள்ளைகளின் போக்கே தன் போக்கு என்று தன்னை மாற்றிக் கொண்டுவிட்டார். இனி இந்தளூரில் வாழ்க்கை இல்லை என்பதையும் முடிவு செய்து விட்டார். புகுந்த ஊரில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கப் போகிறார்கள். விடியும் முன்பே கட்டிய துணிமணிகளோடும் காய்ந்த வயிறுகளோடும் வீட்டைவிட்டு வெளியே வந்தவர்கள் இருள் பிரியாமலும் சாம்பல் பூக்காமலும் இருந்த வெளியில் மங்கலாய் தெரிந்த வீட்டை அண்ணாந்து பார்த்தார்கள். அப்பா அம்மா நினைவுக்கு வந்தார்கள். அண்ணன்கள் நினைவுக்கு வந்தார்கள். இந்தளூரை நினைத்து தெருவை வெறித்துப் பார்த்தார்கள். சாலைப் பக்கம் வந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் பாதையைப் பார்த்தார்கள். பாதை வெகு தூரமாய்.

கிராமத்தின் இயற்கைச் சூழல், உற்பத்தி முறைப்பாடு, சமூகச் சூழல, வர்க்க ஜாதிக் கட்டுமானங்கள் ஆகியவற்றை மிகத் துல்லியமாகச் சித்திரப்படுத்தியுள்ளார். காவிரியின் நீரோட்டம் போல் கால ஓட்டத்தையும் நம்மை முழுமையாக உணர வைக்கும் விதத்தில் எழுதியுள்ளார். மாற்றங்களின் ஊடாக நாம் வாழ்ந்து முடிந்தது போல் தோன்றுமளவிற்கு எதார்த்தமான எழுத்து. குறைபாடுகள் இல்லாமல் இல்லை.

அரசியல் நிகழ்வுகளை மேம்போக்காக விவரித்துள்ளார் என்றுதான் கூறவேண்டியுள்ளது. தஞ்சையில் சாணிப்பால் சவுக்கடிக்கெதிராக மற்றும் கூலிக்காக கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து அவர் பேசவே இல்லை என்பது பெருங்குறை. கூலிப் போராட்டத்தில் 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்ட வெண்மணி சம்பவம் அவரது நினைவில் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

தஞ்சையில் தீண்டாமை மற்றும் சாதிய சுரண்டலுக்கு எதிராக பெரியார் நடத்திய போராட்டங்கள் அவரது சிந்தனைக்கு எட்டவில்லை. சனாதனத்திற்கு எதிராகவும் சமூக நீதிக்காகவும் பெரியார் கண்ட திராவிட சித்தாந்தம் ஏற்படுத்திய சமூக மற்றும் பொருளாதார மாற்றம் குறித்து மவுனமாகக் கடக்கிறார்.

கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களும், திராவிட ஆட்சியும் நிலவுடைமைகளிலும் உற்பத்தி உறவுகளிலும் தஞ்சையில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்தும் பேசவில்லை.

சமூக ரீதியாகவும் கல்விரீதியாகவும் பின்தங்கிய மக்களுக்கு மண்டல் கமிசன் அமுல்படுத்திய விபிசிங் ஆட்சியின் தாக்கம் குறித்தும் மவுனமாகக் கடந்து விடுகிறார்.

கலைஞன் அரசியல் பிரச்சாரம் செய்ய வேண்டியதில்லை. எந்தவொரு தத்துவத்திற்கும் சித்தாந்தத்திற்கும் சேவை செய்ய வேண்டியதில்லை. உண்மை என்பது மட்டும் போதுமானதே. ஆனால், எதார்த்தம் என்பது மேலே கூறியவற்றையும் உள்ளடக்கியதுதானே? அதனை விடுவது தீட்டும் சித்திரத்தின் ஒரு அம்சத்தை மூளியாய் விடுவதுதானே. ஆனாலும் குறைபாடுகள் குறைவு. நிறைவு உயிர்த்துடிப்பும் மிக்க அசலான தமிழ் படைப்பு எனக் கூற அப்படியில்லை.

- கே.பாலச்சந்திரன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவப் பருவத்திலிருந்து அரசியல், சமூகச் செயல்பாட்டாளர்.

Pin It